Search This Blog

விமர்சனங்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
விமர்சனங்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 21 டிசம்பர், 2009

என்னது?...மூணு மணி நேரத்துல அறுபதாயிரமா...



நிறைய பெண்கள் கொடூரமான நெடுந்தொடர்களால குடும்பத்துல நிம்மதியை இழந்து தவிக்கிறாங்க. இது தெரிஞ்சும் அந்த போதையை விட முடியாம பலர் அவதிப்படுறதை யாரும் மறுக்க முடியாது.

அது எப்படி தொலைக்காட்சி பார்க்காம இருக்க முடியும்? எங்களுக்கு ஒரே பொழுதுபோக்கு இந்த தொடர்கள்தானே.அப்படின்னு சில பெண்கள் சொல்லுவாங்க. இவ்வளவு தொடர்களைப் பார்த்தா என்ன ஆகும்...அவங்களை அறியாமலே ஆழ்மனசுல ஒரு அச்சத்தை விதைச்சுடும். இது புரியாம குடும்ப உறுப்பினர்கள் கிட்ட வார்த்தை வன்முறையைப் பயன்படுத்தி தனித்தீவாகிடுவாங்க.

நிறைய குடும்பங்கள்ல என்ன பிரச்சனை தெரியுமா? இன்றைய பெண்களுக்கு அன்றாட குடும்ப வேலைகளே மிகப் பெரிய பணிச்சுமையா தெரியுது. உண்மையில் அவ்வளவு வேலை இல்லை.

பின்ன ஏன் அந்த உணர்வு?

வேலைக்குப் போகும் பெண்களுக்கு மற்றவங்க சின்ன சின்ன வேலைகளைக் கூட செய்யாம இருக்குறாங்களேன்னு ஆத்திரம் வரும். வீட்டுலேயே இருக்குறவங்களுக்கு பகல் நேரத்துல மட்டும் குறைந்தது ஐந்து தொடர்களைப் பார்க்க முடியாத நிலை வரும்போது கட்டுப்படுத்தமுடியாத அளவுக்கு கோபம் வரும்.

போதைப் பழக்கத்துக்கு அடிமையானவங்க அது கிடைக்கலைன்னா எப்படி வெறிபிடிச்சு அலையுவாங்களோ...அதுக்கு கொஞ்சமும் கொடுந்தொடர் போதை குறைஞ்சது இல்லை.

என்ன...இவங்க கோபம் குடும்பத்துக்குள்ள கொஞ்சமும் நியாயமே இல்லாத வழியிலதான் வெடிக்கும். அதை எதிர்கொள்ளும் மற்ற குடும்ப உறுப்பினர்களுக்கு இவ என்ன இந்த அநியாயம் பண்றா...அப்படின்னு புரியாமயே விரோதத்தை அதிகமாக்கிடுவாங்க.

இதன் ஒரு பகுதிதான் தன் பிறந்த வீட்டு சொந்தம் தவிர கணவரோட அப்பா அம்மாவுக்கு கூட எதுவும் செய்யக்கூடாதுன்னுங்குற பிடிவாதம்.

அப்ப வீட்டுக்குள்ள இருக்குற அந்தப் பொட்டியை என்னதான் செய்யுறது? அதனால நல்லதே இல்லையா? அப்படின்னு நீங்க கேட்குறது புரியுது.

இந்த கிரீமைப் பூசிகிட்டா நீங்க சிரிச்சுகிட்டே போய் அந்தக் கிணத்துல விழுந்து சாவீங்க. ஆனா உலகம் முழுவதும் பிரபலமாயிடுவீங்கன்னு சொன்னா நாம செய்வோமா?

நிச்சயம் மாட்டோம். ஆனா பல விளம்பரங்கள், தொலைக்காட்சித் தொடர்கள் சில விஷயங்களை - நமக்கு தீமை தரக்கூடியதுன்னு தெரிஞ்சும் விட முடியாத அளவுக்கு நம்ம மனசை கட்டிப்போட்டு வைக்கிற வேலைகளை செய்துகிட்டு இருக்கு.

நேரடியா எந்த பாதிப்பும் இல்லை. அதாவது நான் உங்க குடும்பத்துக்குள்ள வந்து நெரடியா சண்டை போட்டா அது குற்றம். அப்படி பண்ணாம நான் உங்க மனசை என்னவோ பண்ணி நீங்களே உங்க குடும்பத்துக்குள்ள அடிச்சுக்குங்கன்னு விட்டுட்டா...அதுக்குப் பேர் என்ன?...

என்ன?...

இதுதாங்க எனக்கும் புரியலை.

இப்ப விஷயத்துக்கு வர்றேன்...(அடப்பாவி அப்ப இது வரைக்கும் வெட்டியாத்தான் பேசிகிட்டு இருந்தியா?)

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கு உதாரணம் சொல்லணும்னா வாகனத்தை ஒப்பிடலாங்க.

வண்டியில ஆளையும் ஏத்தலாம்...ஆள் மேல வண்டியையும் ஏத்தலாம்.(எப்படி நம்ம பஞ்ச் டயலாக்கு?...

இது புரிஞ்சா நீங்க சூப்பரு...புரியலைன்னா...எப்படியாச்சும் போங்க.

சாக்லெட் படத்து ஸ்டில் இருக்கு. அந்த மேட்டருக்கு இன்னும் வரலியேன்னு நீங்க எல்லாம் பொறுமை இழக்குறது தெரியுது. வர்றேன்...வர்றேன்...


16 - 31 டிசம்பர் 2009ந் தேதியிட்ட தேவதை மாதமிருமுறை இதழ்ல (ஆங்...நம்ம ராமலக்ஷ்மி அக்காவோட வலைப்பக்கம், ரம்யா அக்காவோட தன்னம்பிக்கை பத்தி எழுதியிருந்தாங்களே...அதேதான்.) ஒரு சகோதரி, மூணுமணி நேர வேலையில 60,000.00 ரூபாய் லாபம் சம்பாதிக்கிறது பத்தி சொல்லியிருந்தாங்க.

ஒரு கிலோ சாக்லெட் தயாரிச்சு விற்பனை செய்தா 200 ரூபா லாபம் கிடைக்குதுன்னு சொன்னதோட மூலப்பொருள் எங்க வாங்கலாம், செய்முறை என்ன அப்படின்னு எல்லாம் ஓரளவு விபரம் இருக்கு. சாக்லெட் கலர்லேயே மூணு பக்கம் இந்தக் கட்டுரை வந்திருக்கு.

அறுபதாயிரம் ரூபாய் வருமானம்னுங்குறதை விட இன்னொரு விஷயம்தான் இந்தக் கட்டுரையை எழுத தூண்டுகோலா இருந்துச்சு.

அவங்க சாக்லெட் செய்ய ஆரம்பிச்சது ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியைப் பார்த்துதானாம்.

தொலைக்காட்சித் தொடர்களால் குடும்பத்தையே பாதாளத்துக்கு கொண்டு செல்லும் பெண்கள் சிகரம் நோக்கி முன்னேறும் இந்த சகோதரியையும் கவனிப்பது நல்லது.

ஊதுற விசிலை ஊதிட்டேன். இனிமே உங்க விருப்பம்.

நன்றி: தேவதை 16-31 டிசம்பர் 2009 இதழ்

ஞாயிறு, 20 டிசம்பர், 2009

ஜெமினியும் - சிறைச்சாலையும்


அரசியல்ல இருக்குற சிலர் மைக் கிடைச்சாலே எதிர்ல ஆள் இருக்காங்களா இல்லையான்னு பார்க்காம பேசுற மாதிரி நீயும் எதாவது சினிமா ஸ்டில்ல பார்த்த உடனே கட்டுரை எழுத ஆரம்பிச்சுடுறியான்னு கோபப்படாதீங்க.

ஓ போட்ட ஜெமினி படம் சாதாரண மசாலாதான். அந்தப் படத்துலயும் நல்ல மெசேஜ் நிறையவே இருக்குங்க. வெறும் பாடல்களால மட்டும் அந்தப்படம் நல்லா ஓடலை. கலாபவன்மணியோட மிருகக்குரல் மிமிக்ரியும் படத்தோட அதிரடி வெற்றிக்கு முக்கியக் காரணம்னு விக்ரமே ஒத்துக்குவார். இந்தப் படத்தின் இயக்குநர் பெயரும் "சரண்" (அவரோட முழுப்பெயர் சரவணன்னு சொல்றாங்க.) - தயாரிப்பாளர் ஏ.வி.எம் சரவணன்  அப்படிங்குறதுல சின்ன சந்தோஷம்.

அவங்க பேரை நீ கெடுத்துடாதன்னு உங்க அலறல் எனக்கும் கேட்குதுங்க.

முதலில் சில நகைச்சுவைக் காட்சிகளைப் பற்றி சொல்லிவிடுகிறேன்.

ஜெமினியில் தேஜாவின் கையாள் ஒருவர், "இந்த சரக்கை மட்டும் அப்படியே கை மாத்தி விட்டா கோடி ரூபாய் ஓடி வரும்." என்பார்.

உடனே தேஜா அந்த ஆளிடம்,"நீ எவ்வளவு படிச்சிருக்க?" என்று கேட்பார்.


"ரெண்டாங்கிளாஸ்" என்று சொல்லும் ஆளின் முகத்தில் தெரியும் பூரிப்பை பார்க்க வேண்டுமே.அடா...அடா... வில்லன் சம்மந்தப்பட்ட காட்சி என்பதை மறந்து காமெடிக்காட்சியைப் போல் படமாக்கியிருப்பார்கள்.

அதற்கு தேஜா கொஞ்சம் கூட சிரிக்காமல், "நம்ம கேங்லயே அதிகமா படிச்சுட்டோம்னு திமிர்ல பேசுறியா"ன்னும்பார். பெரிய நகைச்சுவை நடிகர்களின் காட்சிக்கு சவால் விடும் வகையில் சிரிப்பை ஏற்படுத்தும்.

கமிஷனர், ஜெமினி, தேஜா இருவரையும் ஒரு செல்லில் அடைத்து வைத்திருப்பார்கள். ரொம்பவும் வெறுத்துப் போன ஜெமினி,"திருந்தித் தொலையேண்டா"என்று தேஜாவைப் பார்த்து சொல்வார்.

அதற்கு தேஜா,அவர் இடுப்பின் இரு புறமும் கைகளை ஊன்றிக் கொண்டு,"நான் என்ன தப்பு பண்ணினேன்...இப்ப திருந்த சொல்ற..."என்று கேட்கும்போது ஒரு அப்பாவித் தனம் தெரியும்.

இது மாதிரி வில்லன் வரும் காட்சிகள் அனைத்தையும் நகைச்சுவையுடனேயே படமாக்கியதற்கு சேர்த்து ஒரு ஆப்பு வெச்சாங்க பாருங்க...வெறுத்துப் போயிட்டேன். எதை சொல்றேன்னு புரியலை?

படத்துல காமெடி நடிகர்கள் நடிச்ச காட்சிகள்தான். அந்த மாதிரி மொக்கையை நான் எதிர்பார்க்கவே இல்லை.

அது கிடக்கட்டும்.

நான் சொல்ல வந்த விஷயம் வேற. நல்ல கமிஷனரா வர்ற மலையாள நடிகர் முரளி,"குற்றவாளிகளைத் திருத்துறதுக்குதான்  சிறைச்சாலைன்னா தண்டனை முடிஞ்சு வர்ற நபர்கள் தவறு செய்யக்கூடாது...

ஆனா நிஜத்துல அப்படி நடக்குறது இல்லையே. ஏன் அப்படி?

சட்டம்னுங்குறது ஃப்ரிட்ஜ் மாதிரி ஆயிடுச்சு. தண்டனை அனுபவிக்க உள்ள போறவங்க
வெளியில வரும்போது entha மாற்றமும் இல்லாம அப்படியே  ஃப்ரெஷ்ஷா வந்து கிரைம் பண்றாங்க.சமூகமும் சில அதிகாரப் பொறுப்புகளும் அவங்க திருந்தி வாழ்றதை அனுமதிக்கிறது இல்லை.  இந்த நிலைமையை மாற்ற எதோ என்னாலான முயற்சி. அவங்க திருந்த வாய்ப்பு ஏற்படுத்தி தர்றேன்."அப்படின்னு சொல்வார்.

எல்லாரும் ரொம்ப யோசிக்க வேண்டிய விஷயங்க இது.


நான் இந்தப் படத்தைப் பார்க்கும்போது கிரணைப் பார்த்து ஜொள் விடாம சமர்த்துப்பிள்ளையா இருக்கேன்னு இப்பவாச்சும் நம்புறீங்கிளா?

வேலூர் சிறைச்சாலையும் குற்றவாளிகளை மாற்ற, தொழிற்சாலையாக மாறி வரும் விஷயம் தினமலரில் வெளிவந்துள்ளது.

அந்த செய்தி கீழே...

வேலூர்: வேலூர் ஆண்கள் சிறையில் குற்றவாளிகளுக்கு தொழில் பயிற்சி அளிக்கப்பட்டு, தொழிற்சாலையாக மாறி வருகிறது.வேலூர் தொரப்பாடியில் பிரிட்டிஷ்காரர்கள் காலத்தில் 1867ம் ஆண்டு அமைக்கப்பட்ட மத்திய சிறை, தமிழகத்தில் முதல் சிறை என்ற பெருமை உடையது. இந்த சிறையில் 2,130 கைதிகள் நிரப்பும் வசதிகள் உள்ளன.


சென்னையில் புழல் சிறை துவங்கப்பட்டதால், தற்போது, இங்கு 935 கைதிகள் உள்ளனர். ஆயுள் தண்டனை கைதிகள் 215 பேரும், ஐந்து முதல் பத்து ஆண்டு தண்டனை பெற்ற கைதிகள் 230 பேரும் உள்ளனர்.தண்டனை அனுபவிக்கும் இடமாக இருந்த சிறைச்சாலை தற்போது, தொழிற்சாலையாக மாறி வருகிறது. இங்கு ஷூ, அட்டை ஃபைல், மெழுகுவர்த்தி, பாண்டேஜ் துணி, டெய்லரிங் போன்ற தொழிற்பயிற்சிகள் ஆயுள் தண்டனை கைதிகளுக்கு அளிக்கப்பட்டு வருகிறது.தொழிற்பயிற்ச்சி பெற்ற கைதிகள் மூலம் ஷூ, அட்டை ஃபைல், மெழுகுவர்த்தி, பாண்டேஜ் துணி ஆகியவை தயார் செய்யப்படுகிறது. கைதிகள் தயாரிக்கும் பொருட்களுக்கு ஏற்ப சம்பளம் வழங்கப்படுகிறது.


* ஷூ தொழிற்சாலை: தமிழகத்தில் வேறு எந்த சிறையிலும் ஷூதயாரிக்கும் தொழிற்சாலை இல்லை. பிரிட்டிஷ்காரர்கள் காலத்தில் துவங்கப்பட்ட ஷூ தயாரிக்கும் தொழிற்சாலையில் இது வரை 10 லட்சம் ஷூக்கள் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்தாண்டு 50 லட்சம் மதிப்புள்ள 20 ஆயிரம் ஜோடி ஷூக்கள் தயாரிக்க ஆர்டர் பெறப்பட்டு அனைத்தும் மூன்று மாதத்தில் செய்து முடிக்கப்பட்டது.இந்த ஷூக்கள் போலீஸ், தீயணைப்பு துறை, சிறைத்துறையில் மூலம் ஆர்டர் பெறப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. ஷூ தயாரிப்பு பணியில் 100 கைதிகள் வேலை பார்க்கின்றனர். ஒரு நாளைக்கு 300 ஷூக்கள் தயாரிக்கப்படுகிறது.இதற்காக 60 லட்ச ரூபாய் மதிப்பில் வெளி நாட்டில் இருந்து இரு இயந்திரங்கள் வாங்கப்பட்டுள்ளது. மூன்று நிலைகளில் ( நன்றாக வேலை செய்பவர், கொஞ்சம் வேலை செய்பவர், புதியதாக வேலை செய்பவர் ) என்று தரம் பிரிக்கப்பட்டு மாதம் 600 ரூபாய், 800 ரூபாய், 1,500 ரூபாய் வரை கூலி வழங்கப்படுகின்றது.இதில், 40 சதம் இயந்திரத்தின் மூலமும், 60 சதம் கையாலும் தயாரிக்கின்றனர். காலை 7.30 மணி முதல் பகல் 11.30 வரை, மதியம் 1.30 முதல் மாலை 4. 30 வரையில் பணி நடக்கிறது.பணி நேரத்தில் இரு முறை சிறைத்துறை நிர்வாகம் சார்பில் கைதிகளுக்கு டீ கொடுக்கின்றனர்.


* டெய்லரிங் யூனிட்: இங்கு 26 தையல் மிஷின்கள் உள்ளது. 33 பேர் வேலை செய்கின்றனர். ஜாக்கெட், சுடிதார் தைக்கின்றனர். நல்ல லாபம் தரும் இந்த தொழிலை செய்து வந்த பத்து பேர் விடுதலையாகியதும் சொந்தமாக கடை வைத்துள்ளனர்.


* ஃபைலிங் பேட் யூனிட்: இங்கு 75 பேர் வேலை செய்கின்றனர். ஒரு நாளைக்கு 3,000 வீதம் ஒரு மாதத்திற்கு ஒரு லட்சம் ஃபைல் பேடு செய்கின்றனர். அரசு அலுவலகங்களுக்கு மட்டும் விற்பனை செய்யப்படுகிறது.இந்தாண்டு 5 லட்சம் ஃபைல் பேடுகள் சப்ளை செய்ய ஆர்டர் பெற்றுள்ளனர். மாதம் 750 ரூபாய் வரை சம்பாதிக்கின்றனர்.


* மெழுகு வர்த்தி யூனிட்: மூன்று பேர் வேலை செய்கின்றனர். இங்கு தயார் செய்யப்படும் மெழுகு வர்த்திகள் வேலூர் ரோட்டரி சங்கம் மூலம் விற்பனை செய்யப்படுகிறது.


* பவர் லூம்: நான்கு பவர் லூம்கள் உள்ளன. பத்து பேர் வேலை செய்கின்றனர். அரசு மருத்துவமனைகளுக்கு பாண்டேஜ் துணி தயாரித்து சப்ளை செய்கின்றனர். மாதம் 8,000 மீட்டர் பாண்டேஜ் துணி தயாரிக்கின்றனர். ஒரு மீட்டர் விலை 12 ரூபாய். இங்கு பணிபுரியும் கைதிகள் மாதம் 1,500 வரை சம்பளம் பெறுகின்றனர்.


வேலூர் மத்திய ஆண்கள் சிறை கண்காணிப்பாளர் சேகர் கூறியதாவது:இங்குள்ள மினி தொழிற்சாலையில் வேலை பார்ப்பவர்கள் பெரும் பாலும் ஆயுள் தண்டனை மற்றும் நீண்ட காலகைதிகள். ஒரு கமிட்டி மூலம் தேர்வு செய்து பயிற்சிகள் கொடுத்து வேலைக்கு அனுப்புகின்றோம்.நிறைய ஆர்டர்கள் வருகிறது. இவர்கள் சம்பாதிக்கும் பணம் இவர்கள் கணக்கில் வரவு வைக்கப்படும், இவர்கள் குடும்பத்தினருக்கும், குழந்தை படிப்பு செலவுக்கும் மாதா, மாதம் அனுப்பப்படுகிறது. ஆர்வத்துடன் கைதிகள் வேலை பார்க்கின்றனர்.வேலூர் மத்திய சிறையில் அமைக்கப்பட்டுள்ள தொழிற்சாலைகள் மூலம் வேலை வாய்ப்பு, கல்வி, தோட்டம் பராமரிப்பு போன்றவை அளிக்கப்படுகிறது. விடுலையாகி வெளியே செல்லும் கைதிகள், இந்த பயிற்சி மூலம் யாரையும் எதிர் பார்க்காமல் சுய தொழில் செய்ய அவர்களுக்கு வசதியாக அமையும்.இவ்வாறு அவர் கூறினார்.


நன்றி: தினமலர்

ஒருநாள் போலீஸ் - தேர்தல் அனுபவ ரீமேக்

மினி குவார்ட்டருக்கும் உள்ளாட்சித் தேர்தலுக்கும் சம்மந்தமே இல்லைன்னு சொன்னா நீங்க நம்பவா போறீங்க?

வாழ்க்கைக்கும் வீடியோ பிளேயர் மாதிரி ஒரு ரீவைண்ட் பட்டன் இருந்தா எவ்வளவு நல்லா இருக்கும்? - இப்படி ஒரு வசனம் முதல்வன் படத்துல வரும். வாழ்க்கையில இல்லன்னா என்னங்க...நம்ம மனசுக்கு ரீவைண்ட், ஃபார்வேர்ட் மட்டுமில்லாம எவ்வளவோ இருக்கு. நாமதான் பயன்படுத்துறது இல்லை.

விடுங்க கழுதைய...(உன்னைய யாருய்யா இப்ப புடிச்சுகிட்டு நிக்கிறதுன்னு ஒரு குரல் வருதே...யாருப்பா இப்படி மானத்தை வாங்குறது.) நாம இப்ப அப்படியே ஒரு யு டர்ன் அடிச்சு நூறு மாசத்துக்கு மேல பின்னால போவோம்.

வெட்டுனா...ச்சீ...கட் பண்ணினா உள்ளாட்சி தேர்தல் நடக்குற சமயம். கல்லூரிகளில் இருக்கும் நாட்டுநலப்பணித்திட்ட மாணவர்களை பாதுகாப்பு (?!) பணியில ஈடுபடுத்துறதா சொன்னதும் நானும் போய் வரிசையில நின்னுட்டேன்.

ராணுவத்துக்கு கூட ஆள் எடுக்கும்போது இவ்வளவு நேரம் செலவழிச்சிருப்பாங்களான்னு தெரியல. முக்கா நாள் (காலை, மதியம் ரெண்டு வேளை சாப்பாடு கிடைக்கலைன்னா முக்கா நாள் பட்டினின்னுதானே அர்த்தம்.?) வயிறு காஞ்சு, சில போலீசாரோட ஒரு லாரியில ஏறிப் போனோம்.( கவனிக்க: நாங்களாதான் "ஏறிப்" போனோம். ஒரு 'ற்' நடுவுல சேர்ந்தா வேற அர்த்தம்.)

முப்பது கிலோ மீட்டர் தூரத்துல உள்ள ஒரு தாலுக்கா தலை நகரத்துல ராத்திரி பதினோரு மணிக்குப் போய் இறங்குனா, கடைத்தெருவுல எந்தக் கடையிலயும் லைட் எரியலை. அட, பவர் கட் எல்லாம் இல்லைங்க. முப்பத்து ஆறு மணி நேரத்துல உள்ளாட்சித் தேர்தல் நடக்கப்போறதால சீக்கிரமே கடையை சாத்த சொல்லிட்டாங்களாம்.

இப்பவே...இல்ல...இல்ல...ரொம்ப நேரமாவே பசி கண்ணைக் கட்டுதேன்னு நிக்கிறோம். அப்ப என் நம்ம தோஸ்த் ஒருத்தன், கடைக்காரரிடம்"இங்க பாருப்பா...நாங்களும் தேர்தல் பாதுகாப்பு பணிக்குதான் வந்திருக்கோம். ஸ்பெஷல் அப்பாயின்மெண்ட்.

லோக்கல் ஸ்டேஷன்லேர்ந்து வந்தா நாங்க பேசிக்குறோம். இப்ப பசிக்கு எதாவது இருக்குறத தயார் பண்ணிக் கொடு." அப்படின்னு கம்பீரமா பேசிட்டான். வாயுள்ள பிள்ளை பிழைச்சுக்கும்னு சரியாத்தான் சொல்லியிருக்காங்க.

அவன் பிழைச்சதோட எங்க அம்பது பேருக்குல்ல சாப்பாடு கிடைக்க வழி செஞ்சான். ஆனா கடைக்காரரும் பாவங்க. இத்தனை பேருக்கு தோசை இட்லின்னு ஊத்திக் கொடுக்க மாவு இருந்தாலும் சைடு டிஷ் (சட்னி சாம்பாருதான்) ரெடி பண்ண அவருகிட்ட போதுமான பொருள் இல்ல... பாதிப்பேர் வெறும் டிபனைத் தின்னும்போது தொண்டையை அடைச்சு தண்ணீர் குடிச்ச வேகத்தைப் பார்த்து கடைக்காரர், "சார்...நீங்க இட்லி, தோசைக்கு குடுக்குறத விட நாலுமடங்கு தண்ணீருக்காக தர்ற மாதிரி இருக்கும்"னு சொன்னார்.

இதை எல்லாம் காதுல வாங்குற கண்டிஷன்ல நாங்க இல்ல...பசிக்கொடுமைதாங்க...நீங்க வேற எதுவும் நினைச்சுக்காதீங்க. இதுல களேபரத்துலயும் எங்க சகா ஒருத்தனைப் பார்த்து "காவிரியில ஏன் தண்ணி விட மாட்டெங்குறாங்கன்னு இப்பதான் புரியுது. எவ்வளவு திறந்து விட்டாலும் இவன் ஒருத்தனுக்கே போதாது...அதனால நாம போதும்னு சொல்லவே மாட்டோம். - இப்படியெல்லாம் ஜாலி கமெண்ட்.

அரை வயிறுதான் நிறைஞ்சுது. ஆனாலும் ரொம்பச் சரியா காசு கொடுத்துட்டுதாங்க கிளம்புனோம். (அப்ப கடைசி வரைக்கும் பதவி உயர்வே கிடையாதுன்னு சவுண்டு விடுறது  யாருப்பா)

எங்களுக்குத் தலைமையா இருந்த சில போலீசார் எங்கேயோ போய் திருப்தியா சாப்பிட்டுட்டு முகாம் அலுவலகத்துல உட்கார்ந்திருந்தாங்க. கொசுக்கடியில அவதிப்பட்டு பொழுதை ஓட்டிட்டு மறுநாள் எல்லாரும் ஆத்துல போய் குளிச்சோம்.(உண்மையாதாங்க...)

அன்னைக்கு சாயந்திரம் எல்லாரையும் வாக்குச்சாவடிக்கு அனுப்பி வெச்சாங்க. ஒரு ஏட்டு கூட எனக்கு பணியிடம் ஒதுக்கியிருந்தாங்க. மத்த பசங்க எல்லாம் லாரியில போய் இறங்க, நானும் அந்த ஏட்டும் வாக்குச்சாவடி அலுவலர்களோட ஜீப்புல போனோம். ஆமாங்க...லாரி போக முடியாத அளவுக்கு குறுகிய பாலம் நடுவுல இருந்து என் கவுரவத்தைக் காப்பாத்துனுச்சு.

காசிக்குப் போனாலும் சிலருக்கு கர்மா விடாதுன்னு சொல்லுவாங்க. நாங்க அந்த கிராமத்துக்குப் போனாலும் கொசு எங்களைத் தூங்க விடலைங்க. தொடர்ந்து ரெண்டாவது நாளா சிவராத்திரி (உங்களுக்குப் பிடிக்கலைன்னா ஏகாதசி, ஆங்கிலப் புத்தாண்டுன்னு எப்படி வேணுன்னாலும் முடிவு பண்ணிக்குங்க.)

மறுநாள் காலைக்கடமை எல்லாம் திறந்தவெளி புல்வெளிக் கழகம்தான்.

காலை ஏழு மணியிலேர்ந்து நல்ல கூட்டம். வரிசையை ஒழுங்குபடுத்தி உள்ள அனுப்பிகிட்டு இருந்தேன். வாக்குச் சாவடி அலுவலர்கள் கூட்டத்துக்கு நடுவுல சிக்கி அவதிப்படுற தொல்லை இல்லாம வேலையைக் கவனிச்சாங்க. 'ஸ்பெஷல் போலீஸ் ஆபிசர்' அப்படின்னு ஒரு ஒரு பேட்ஜ் குத்தியிருந்ததால வாக்காளர்கள் எல்லாம் மரியாதையோடதான் பார்த்தாங்க.

என்னுடன் இருந்த ஏட்டு,"தம்பி...இப்ப நீங்களும் ஒரு போலீஸ்தான். அந்த கம்பீரத்தோட நடந்துக்குங்க...பார்வையில ஒரு அலட்சியம் இருக்கணும். இல்லன்னா நம்மளை அலட்சியமா நினைச்சுடுவாங்க"ன்னு சொன்னார்.

அந்த வாக்குச் சாவடியை ஆண்கள், பெண்கள்னு பிரிக்கலை. பொதுச்சாவடியா இருந்ததால பந்தா பந்தான்னு சொல்லுவாங்களே... அப்படிதான் இருந்தேன். இப்பதான் டிரெய்னிங் முடிச்சுட்டு வந்திருப்பாங்க போலிருக்கு...ஆரம்பத்துல இல்லாத தொப்பை சில வருஷங்கள்ல எங்கேருந்துதான் வருதோன்னு பெண்கள் பேசிகிட்டு இருந்தாங்க.

இதுல என்ன கொடுமைன்னா அப்படி பேசின பெண்கள் யாருக்கும் சிம்ரன் இடுப்பு மாதிரி ஒண்ணும் இல்லை. (அந்த வருஷங்கள்ல சிம்ரன் ஜூரம்தான்) அவங்களே அவ்வளவு பெரிய தொப்பையை வெச்சுகிட்டு பேசினா கோபம் வருமா வராதா? அந்தப் பக்கம் பார்த்து முறைச்சேன்.
சில நொடிகள்தான். அப்புறம்  கோபம் மலையிறங்கிடுச்சு. ஏன்னுதானே கேட்குறீங்க... ஸ்லிம்மா இருந்த சில இளசுங்க "அய்யய்யோ... சார்(?!) முறைக்கிறாங்க...கொஞ்ச நேரம் பேசாம இருக்கீங்கிளா" அப்படின்னு பதறிடுச்சுங்க. அதுக்கப்புறமும் முறைக்குற அளவுக்கு நாம என்ன உண்மையான ......................காரங்களா?

தேர்தலின் போது ஒரு வாக்குச் சாவடியிலேயே முதல் நாளிலேயே தொடங்கி, வாக்குப்பதிவு செய்யப்பட்ட சீட்டுக்கள் அடங்கிய பெட்டியை உரிய இடத்தில் ஒப்படைப்பது வரை இவ்வளவு வேலைகள் இருந்தால் தேர்தல் ஆணையத்துக்கு எவ்வளவு பணிச்சுமை இருக்கும் என்று நான் வியப்படைந்தது உண்மை. நான் கல்லூரியில் படிக்கவில்லை என்றால் இந்த அனுபவம் கிடைத்திருக்கப் போவதே இல்லை.

இப்போது கணிணித் துறை மாணவர்கள் தேர்தல் பணியில் ஈடுபடுவதற்கான வாய்ப்புகள் அதிகரித்துவிட்டன. ஆனால் எனக்கு இது ஒரு மறக்க முடியாத அனுபவம் என்பதில் மாற்றுக்கருத்துக்கே இடமில்லை.

அந்த ஊரில் அக்காவும், தங்கையும்தான் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி வேட்பாளர்கள். இருவரின் கணவர்களும் அப்போது பிரபலமாக இருந்த மினி குவார்ட்டர்களை பதினைந்துநாளைக்கு முன்பே வாங்கி ஸ்டாக் வைத்துவிட்டார்கள். அதற்கும் இந்த உள்ளாட்சித் தேர்தலுக்கும் எந்த சம்மந்தமும் இல்லைன்னு நான் நீங்க சொன்னா நீங்க நம்பவாப் போறீங்க?

என்னுடன் இருந்த ஏட்டுகிட்ட "சார்...நீங்க நேர்மையானவரா...இல்ல..."அப்படின்னு கேள்வியை பாதியிலேயே நிறுத்திட்டேன்.

அவர் கோபப்படலை. " தம்பி...கூடுதல் தகுதி இருந்தும் இருபது வருஷமா ஏட்டாத்தான் இருக்கேன். நீயே முடிவு பண்ணிக்க."ன்னு சொன்னார்.

ஒரே ஒரு நாள் தேர்தல் பாதுகாப்பு பணியில (?!) ஈடுபட்டாலும், நல்ல மனுஷனோட இருந்தேன்னு ஒரு திருப்தி இருக்குங்க.



































பல வருஷத்துக்கு முன்னால நடந்த உள்ளாட்சித் தேர்தல் பற்றிய கட்டுரைக்கு 2009ல நடந்த வந்தவாசி, திருச்செந்தூர் தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தல் தொடர்பான போட்டோக்களை ஏன் பதிவு பண்ணியிருக்கன்னுதானே கேட்குறீங்க?

வாடிப்பட்டியில நடக்குற கதையிலயே பாட்டுக்காக வாஷிங்டன் போய் பாடலுக்கு நடனமாடுவோம். இதுதான் தமிழ்நாட்டோட கலாச்சாரம். இப்ப சொல்லுங்க. நான் இந்தப் படங்களை வெச்சது தப்பா?

மச்சான் நீ சொல்லேன்...ண்ணா நீங்க சொல்லுங்களேன்...ம்மா...நீங்க சொல்லுங்களேன்.

நன்றி: ஓளிப்படங்கள் - தினமலர்

வியாழன், 17 டிசம்பர், 2009

வேன் ஓடும்போது இடம் மாறிய ஓட்டுநரும் உதவியாளரும்...அலற வைத்த அரைவேக்காடுகள்

சில ஆண்டுகளுக்கு முன்பு வீடியோ கேமராமேனாக இருந்தேன். ஒரு திருமணவிழாவை படம் பிடிக்க வழக்கம்போல் முதல் நாளே சென்றுவிட்டேன். திருவாரூரிலிருந்து கும்பகோணத்தில் மணமகளை அழைக்க மாப்பிள்ளை வீட்டாருடன் வழக்கம்போல்(?) இணைந்துகொள்ள வேண்டியதாயிற்று.

இது வரைக்கும் மட்டுமில்ல...பெண்ணை அழைத்துக் கொண்டு திரும்பி பாதி தூரம் வர்ற வரை எல்லாம் சரியாத்தாங்க இருந்துச்சு. பஞ்சு மூட்டை போல பிதுங்கிக்கொண்டிருந்த வேனில் பாதி பேருக்குமேல் இளம்பெண்கள்தான். வாகன ஓட்டுநரும் உதவியாளரும் இருபத்தைந்து வயதை எட்டியிருப்பது சந்தேகமே. அவனுங்க மனசுக்குள்ள கொசு பறக்குறதுக்கு கேட்கவா வேணும்? (பட்டாம் பூச்சி பறந்ததுன்னு சொல்லலாம்...அந்த ரெண்டு பேரும் பண்ணின வேலைக்கு கொசுன்னு சொல்றதே அதிகம்)

வேனுக்குள்ள இருந்த நீயும் யூத்துதானே... உன் நெஞ்சுக்குள்ள எதுவும் பறக்கலையான்னு நீங்க கேட்குறது புரியுது. நான் அப்ப கேமரா மேல மட்டும்தாங்க கவனம் வெச்சேன்.(நம்புங்கப்பா)

அந்த ஓட்டுநரும் உதவியாளரும் வேன் ஓடிக்கொண்டிருக்கும்போதே இருவரும் இடம் மாறி அமர்ந்து வாகனத்தை இயக்கினார்கள். அதைக் கண்டதும் எனக்கு ஆத்திரமாக வந்தது.(உண்மையை சொல்லப்போனால் உதறல்னுதான் சொல்லணும்.)

ஆனால் மணமகளின் தோழிகளில் சிலர்,"சூப்பர், சூப்பர்" என்று கத்தி ஓட்டுநரையும் உதவியாளரையும் போற்றிப் புகழ்ந்தார்கள். இதைக் கண்டித்த ஒன்றிரண்டு வயதான பெண்களின் குரல் இளம்பெண்களின் இரைச்சலில் காணாமல் போய் விட்டது.

உடனே அந்த உதவியாளர்," இது சாதாரண சாலையாக இருந்ததால்தான் முப்பது கி.மீ. வேகத்தில் மாறி உட்கார்ந்தோம். அதே சமயம் இது மட்டும் தேசிய நெடுஞ்சாலையாக இருந்தால், எண்பது கி.மீ. வேகத்தில் கூட இடம் மாறி உட்கார்ந்து ஓட்டுவோம்." என்று பெருமை பொங்க பேசினான்.

என்னுடைய கோபத்தை மிகவும் சிரமப்பட்டு அடக்கிக்கொண்டிருந்தேன்.உன் கோபம் அவங்க செய்த தப்பை நினைச்சா இல்லன்னா அந்தப் பொண்ணுங்க அவங்களை புகழ்ந்ததுக்கான்னு சந்தேகப்படாதீங்க. மெய்யாலுமே வண்டி

ஓடும்போதே இடம் மாறின அவங்க முட்டாள்தனத்துக்காகதாங்க கோபப்பட்டேன்.

இது போல பல சம்பவங்கள் உண்டு. பஸ்சில் பயணிக்கிறபோது மற்ற பேருந்துகளை முந்திச் செல்ல ஓட்டுநரை ஊக்கப்படுத்தும் பயணிகளைப் பார்த்திருக்கிறேன். சிறிது கவனம் தவறினாலும் மரணம் என்பதையும், வேகம் விவேகமல்ல என்பதையும் உணராமல் ஓட்டுநர்களை ஊக்கப்படுத்துவது எவ்வளவு பெரிய விபரீதத்தை விளைவிக்கும் என்பதை ஆர்வக்கோளாறான சிலர் புரிந்துகொள்வது எப்போது?

இதெல்லாம் சரிதான். அந்த அரைவேக்காட்டுக்காரங்களை நீ கண்டிக்க வேண்டியதுதானேன்னுதானே கேட்டீங்க?...வேன்ல நான் ஒரு ஆள் சொன்னா யாருங்க கேட்பா? அதனால மண்டபத்துக்கு வந்ததும் மாப்பிள்ளையோட அப்பாகிட்ட சொல்லி வேன் உரிமையாளரை வேறு ஓட்டுநரை வரவழைத்தோம். அந்த வேன் உரிமையாளர் என்னை விட அதிகமாகவே கொதிப்படைந்து விட்டார்.

ஆனால் எல்லா உரிமையாளர்களும் இப்படி நடந்துகொள்வது சிரமம்தான். பல நடைமுறை சிக்கல்களும் இருக்கின்றன. ஆனால் அந்த சிக்கல்களை எதிர்கொள்ள இரண்டு விஷயங்கள் முக்கியமாக தேவை. முதலாவதாக ஆள் உயிருடன் இருக்க வேண்டும். இரண்டாவதாக வாகனம் முழுதாக இருக்க வேண்டும்.

நாம் புரிந்து கொண்டால் சரி.

இதெல்லாம் நடந்தது 2005ல்

புதன், 16 டிசம்பர், 2009

பயணிகள் கவனிக்கவும்!


நன்றி : சூரிய கதிர் 16-31 டிசம்பர் 2009
சூரிய கதிர் இதழில் வெளிவந்த கட்டுரை  அப்படியே உங்கள் பார்வைக்கு.


நீங்கள் விமானத்தில் பறந்திருக்கிறீர்களா?

'ஆம்' எனில், நிஜமாகவே நீங்கள் அதிர்ஷ்டசாலிதான். இந்தியாவின் ஜனத்தொகையில் நூற்றுக்கு ஒன்றிரண்டு பேர்கூட விமானம் ஏறுவதில்லை. பெரும்பான்மை மக்கள் மேலே பறக்கும் விமானத்தை அண்ணாந்து பார்த்துப் பெருமூச்சு விடுவதோடு சரி!

இந்த 'மெஜாரிட்டி' பொதுஜனத்துக்கு விமான அனுபவத்தை சாம்பிள் காட்டுவதற்காக, ஒரு நிஜ ஏரோப்ளேனையே கட்டி இழுத்துவந்திருக்கிறார் ஒருவர். பெயர் பகதூர் சந்த் குப்தா.

ஒரு சிறிய குக்கிராமத்தில் பிறந்த குப்தா, இன்ஜினீயரிங் படித்தார். இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் அவருக்கு வேலை கிடைத்தது.

அவ்வளவுதான், குப்தாவின் கிராமம் மொத்தமும் சந்தோஷத்தில் குதித்தது, 'எங்களையும் ஃப்ளைட் பார்க்கக் கூட்டிக்கிட்டுப் போ' என்று உரிமையோடு கெஞ்சியது.

பரிதாபப்பட்ட குப்தா, அவர்களில் சிலரைமட்டும் விமான நிலையத்துக்கு அழைத்துச் சென்றார், 'இவங்கல்லாம் என் கிராமத்திலிருந்து வந்திருக்காங்க, ஏரோப்ளேனைப் பார்க்கணும்ன்னு ஆசைப்படறாங்க' என்றார்.

ம்ஹூம், சான்ஸே இல்லை. வெளியிலிருந்த பாதுகாப்பு அதிகாரிகள் அந்தக் கிராமவாசிகளை விரட்டிவிட்டார்கள். ஏக்கத்தோடு திரும்பிச் சென்ற அவர்களுடைய முகங்களைப் பார்க்கப் பார்க்க, குப்தாவுக்கு மிகவும் ஆதங்கமாக இருந்தது, 'என்னோடசிநேகிதங்க, உறவுக்காரங்க, இந்தியாவோட இதயமான கிராமவாசிங்கல்லாம் வாழ்க்கையில எப்பவும் விமானத்தைப் பார்க்கமுடியாதா? என்ன கொடுமை சரவணன்!'

பல வருடங்கள் கழித்து, டெல்லியில் ஒரு பழைய விமானம் விற்பனைக்கு வந்தது. சட்டென்று அதை ஏலம் கேட்டுச் சகாய விலையில் வாங்கிப் போட்டுவிட்டார்.

உடனடியாக, அந்த விமானம் பார்ட்-பார்ட்டாகப் பிரிக்கப்பட்டது, மொத்தத்தையும் தனித்தனியே பொட்டலம் கட்டித் தன்னுடைய வீட்டுக்குக் கொண்டுவந்துவிட்டார் குப்தா.


நம்மாள்தான் இன்ஜினீயராச்சே, அந்த விமானத்தை மீண்டும் பழையபடி பூட்டினார், சில மாற்றங்கள் செய்தார், பத்திரமாகக் காங்க்ரீட் தூணெல்லாம் அமைத்துத் தன் வீட்டின் பின்பகுதியில் கம்பீரமாக நிறுத்திவிட்டார்.

'குப்தா ஏர்லைன்ஸ்' விமானத்தைக் கிராமவாசிகள் பிரமிப்புடன் பார்த்தார்கள். அதில் ஏறி உட்கார்ந்து வாயைப் பிளந்தார்கள்.

இதில் வேடிக்கையான விஷயம் என்னவென்றால், அந்த விமானம் எங்கேயும் பறக்காது. எப்போதும் ஒரே இடத்தில்தான் நின்றுகொண்டிருக்கும். ஆனாலும், அன்றாடங்காய்ச்சிகளும் மிடில் க்ளாஸ் மாதவன்களும் ஒரு நிஜ விமானத்துக்குள் நுழைந்து பார்ப்பது சாதாரண விஷயமா? குப்தாவின் நண்பர்கள், உறவினர்கள், பொதுமக்கள் தங்களுடைய வாழ்நாள் கனவு நிறைவேறிவிட்டதுபோல் மகிழ்ந்து போனார்கள்.

இன்றைக்கும், டெல்லி அருகில் உள்ள துவாரகாவில் அந்தப் பறக்காத விமானத்தை நீங்கள் பார்க்கலாம். இருநூறு ரூபாய் டிக்கெட் வாங்கிக்கொண்டு உள்ளே போய் சில மணி நேரங்களுக்கு 'விமானப் பயண'த்தை அனுபவிக்கலாம். ஏழை, எளியவர்களிடம் காசு வாங்குவதில்லை குப்தா.

நிஜ விமானம் போலவே, இங்கேயும் 'போர்டிங் பாஸ்' வாங்கவேண்டும், இரும்புப் படிகளில் ஏறி மேலே சென்றால், சீருடை அணிந்த விமானப் பணிப்பெண்கள் 'நமஸ்தே' சொல்லி வரவேற்பார்கள். உங்களைக் குஷன் இருக்கையில் உட்காரவைத்து சாக்லெட் கொடுப்பார்கள்.

அதன்பிறகு, விமானத்தில் பின்பற்றவேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகளை மைக்கில் அறிவிக்கிறார்கள். சீட் பெல்ட் அணிவது, ஆபத்து நேரத்தில் ஆக்ஸிஜன் முகமூடிகளைப் பொருத்திக்கொள்வது, தண்ணீரில் மிதப்பதற்கான பாதுகாப்பு உடைகளை அணிவது என்று சகலமும் அக்கறையாகச் சொல்லித்தரப்படுகின்றன.

இதையெல்லாம் அறிவிக்கும் நேரத்தில், உடல் ஆரோக்கியம், குடும்பக் கட்டுப்பாடு, எயிட்ஸைத் தடுப்பது போன்ற பொதுநலச் செய்திகளையும் கலந்து பரிமாறுகிறார் குப்தா. மக்களும் ஆர்வமாகக் கேட்கிறார்கள்.

அடுத்து, சாப்பாட்டு நேரம். நிஜ விமானத்தில் வருவதுபோலவே அட்டைப்பெட்டிச் சாப்பாடு, கூல் டிரிங்ஸ். ஒவ்வொருவரும் தங்களுடைய இருக்கையிலேயே தாற்காலிக மேஜை அமைத்துக்கொண்டு ஜாலியாகச் சாப்பிடுகிறார்கள்.

கடைசியாக, விமானத்திலிருந்து கீழே இறங்குவதற்கு ஒரு சூப்பர் சறுக்குமரம் அமைத்திருக்கிறார்கள். அதில் எல்லோரும் சின்னக் குழந்தைகளைப்போல் ஜம்மென்று சறுக்கிக் கீழே வரவேண்டியதுதான்.

குப்தாவின் விமானம் தரையிலிருந்து கால் இஞ்ச்கூட மேலே எழும்பப்போவதில்லை. ஆனால், அதில் ஏறி, இறங்குகிற மக்களின் முகங்களைப் பார்க்கவேண்டுமே, அப்படி ஒரு சந்தோஷம், த்ரில்!

இந்த கட்டுரையை படித்து முடித்தபோது எனக்கே விமானத்தில் ஏறி இறங்கிய பரவசமான அனுபவம் ஏற்பட்டது. அப்படி என்றால் இதை அனுபவித்த ஏழை எளிய மக்களுக்கு எவ்வளவு மகிழ்ச்சி ஏற்பட்டிருக்கும்?

ஆபத்தை நோக்கி அழைத்துச் செல்வதா? (பிப்ரவரி 2007)


மிகவும் திறமை வாய்ந்த நமது நிதியமைச்சர், புதிது புதிதாக உட்கார்ந்து யோசித்து நடுத்தர, ஏழை மக்களிடம்  சாமர்த்தியமாக மறைமுக வரியாகவே பெருமளவு வசூலித்துவிடுகிறார். ஆனால் பணக்காரர்களிடம் இது செல்லுபடியாவதில்லை. உதாரணத்திற்கு, கடந்த 2003 - 2004 ம் ஆண்டுவரை 1.19 லட்சம் கோடி ரூபாய் வருமான வரி பாக்கி இருந்தது. இதில் வசூலானது போக, மீதி 85 ஆயிரம் கோடி ரூபாய் வருமான வரித்துறையால் வசூலிக்க முடியாது என்று கருதப்படுவதால், தள்ளுபடி செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளதாகச் செய்திகள் வருகின்றன. அது போக, அடுத்தடுத்து வரும் மூன்றாண்டுகளுக்கும் இந்த நிலை தொடர்ந்தால் பலனடையப் போவது யார்?

ஏழை மக்களை வெயிலில் வாட்டி பணக்காரர்கள் மீது தூசு படியாமல் ஏசி அறையில் பாதுகாப்பது போன்ற இந்த நிலை, இந்தியாவின் பொருளாதாரத்தை ஆபத்துக்குதான்

அழைத்துச் செல்லும். ஒரு பக்கம் ஏகப்பட்ட வரிச் சலுகைகள், இன்னொரு பக்கம் தள்ளுபடி அறிவிப்புகள். நாம் எங்கே போகிறோம்?

என்னப்பா, மூணு வருஷத்துக்கு முன்னால யோசிச்சதை எல்லாம் இப்ப எழுதுறன்னு கேட்காதீங்க. இதெல்லாம் நிரந்தரமான படிவம். வருஷத்தையும் தொகையையும் மாற்றிட்டா இந்த வருஷ ஸ்டேட்மெண்ட் தயார்.

வங்கிகளில் வராக்கடன் பயங்கரங்கள் வேறொரு பதிவில்...

மருத்துவர்களில் இரண்டு வகை - கருணை & வெறி


 உயிர் காக்கும் புனிதப் பணியில் இருப்பவர்களிடம் உள்ள குறைகளை எழுதியே தீர வேண்டும் என்ற கட்டாயத்துக்கு நான் வந்திருக்கிறேன்.சமீபத்தில் பத்திரிகைகள் வாயிலாக தெரிந்து கொண்ட செய்தி ஒன்றும்  சற்றுப் பெரிய நகரம் ஒன்றில் நேரடியாகப் பார்த்து அதிர்ச்சியும் கோபமும் கொள்ளச் செய்த சம்பவமும் இதற்கு முக்கியக் காரணம்.


முதலில் நேரில் பார்த்த சம்பவம்:

வேலை விஷயமாக தமிழகத்தின் மையப் பகுதியில் உள்ள சற்று பெரிய நகரத்திற்குச் சென்றிருந்தேன். உறவினர் வீட்டில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணமான தம்பதி வாடகைக்கு குடியிருந்தனர். ஒரு சில தினங்களுக்கு முன்பு அரசு மருத்துவமனையில் அறுவைசிகிச்சையால் குழந்தை பிறந்துள்ளது.  என்னுடைய கோபத்திற்குக் காரணம், அந்த மருத்துவமனையில் அன்று பணியில் இருந்த மருத்துவர், "என்னோட சொந்த கிளினிக்கிற்கு வரமாட்டேன்னு சொல்லிட்டீல்ல...இங்க உனக்கு சுகப்பிரசவம் ஆக விட்டேனா பார்" என்று சவால் விட்டிருக்கிறார். 

சொன்னபடியே, அதிகாலை மூன்று மணிக்கே வலி எடுத்த பிறகு காலை பதினோரு மணிவரை வலி நிற்கவே இல்லையாம். மருத்துவமைக்குச் சென்ற அந்தப் பெண்ணிற்கு எனிமா கொடுக்காமல், ஊசி போடாமல் ஆப்பரேஷன் தியேட்டருக்கு அழைத்துச் செல்ல வலுக்கட்டாயமாக தயார் செய்து விட்டாராம். மயக்க மருந்தும் போதிய அளவில் கொடுக்காமல் கர்ப்பிணியை வேதனைப் படுத்தியிருக்கிறார்.   இதுவே அவரது தனியார் மருத்துவமனைக்குச் சென்றிருந்தால் பண வலியைத் தவிர வேறு எந்த வலியும் இல்லாமல் செய்திருப்பார் என்று மருத்துவமனை ஊழியர்களே கிண்டலாக சொல்லியிருக்கிறார்கள். 

எத்தனை லட்சம் கொடுத்து படிச்சுட்டு வந்துச்சோ தெரியலை. பணம் பணம்னு வெறி பிடிச்சுதான் அலையுது என்று சிலர் தங்களால் எதுவும் செய்ய முடியாத ஆதங்கத்துடன் பேசினார்கள். அவ்வளவுதான்.  அந்தப் பெண் சராசரிக்கும் சற்று கூடுதலான உயரத்துடன் நல்ல ஆரோக்கியமாகவேதான் இருந்திருக்கிறார். சுகப் பிரசவம் என்றால் சில தினங்கள் மட்டுமே தாய்மார்களுக்கு சிரமம். அறுவை சிகிச்சை என்றால் ஆயுளுக்கும் சில சிரமங்களை அனுபவிக்கவேண்டும் என்பது தெரிந்தும் சுகப்பிரசவமாக வேண்டியதை வலுக்கட்டாயமாக அறுவைசிகிச்சை அரங்கத்திற்கு கொண்டு செல்லும் இந்த மாதிரி மருத்துவர்களை நாம் வேடிக்கை பார்க்க வேண்டிய அவல நிலையில் இருக்கிறோம். 

இதை சரி செய்ய ஒரு வழியும் தெரியலை.இந்த அழகில் 2020 ல் வல்லரசு என்று பேசுவதைக் கேட்கவே வெட்கமாக உள்ளது. 

 அடுத்து ஊடகங்கள் வாயிலாக அறிந்துகொண்ட செய்தி:  ஒரு புலனாய்வு இதழில் திருச்சி மருத்துவக்கல்லூரி (?!) மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகள் போதுமான ஆக்சிஜன் கிடைக்காமல் அதிக எண்ணிக்கையில் இறப்பதாக கட்டுரை வெளிவந்திருந்தது. ஒரே ஆண்டில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் இறப்பதாக வெளியான செய்தி வேதாரண்யம் பள்ளிக்குழந்தைகள் ஒன்பது பேரின் மரணம் அளவுக்கு கூட யாரையும் உலுக்கவில்லை.  இவையெல்லாம் மனிதனால் தடுக்க முடியாத சாவாக இருந்தாலும் பரவாயில்லை. ஆனால் முற்றிலும் மனித அலட்சியத்தால் இந்த உயிரிழப்புகள் நடைபெற்றுக்கொண்டே இருப்பதுதான் மனதை பதற வைக்கிறது.


இந்த விஷயம் அமைச்சர் கவனத்திற்கு சென்றதும் என்ன நடந்ததோ தெரியாது.  மருத்துவர்களின் கூட்டம் உடனே நடந்திருக்கிறது. இனிமேல் இப்படி தவறு நடப்பதற்கு விடக்கூடாது என்று ஆலோசித்திருப்பதாக நீங்கள் நினைத்தால் 2020 வரை மிகப் பெரிய ஏமாளி என்ற பட்டம் உங்க்ளுக்கே உங்களுக்குதான். வேற யாருக்கும் கிடையாது.  இந்த விஷயம் எப்படி வெளியே தெரிந்தது என்றுதான் சீனியர் ஆபீசர்கள் மற்றவர்களை வறுத்து எடுத்திருக்கிறார்கள். 

இலங்கையில் தமிழர்களுக்கு நேர்ந்த கதி இங்கே ஏழைகளுக்கு அரங்கேறிக்கொண்டிருக்கிறது.

என்ன ஒரே புலம்பலா இருக்கே என்று கேட்பவர்களுக்கு மட்டுமல்ல...எனக்கும் ஒரே ஆறுதல் அளித்த ஒரு மருத்துவரை நான் சந்தித்தேன். 


உறவினரின் குழந்தைக்கு உடல்நலக் குறைபாடு காரணமாக ஓராண்டு காலம் பலவித சிகிச்சை அளித்தும் பலன் இல்லாமல் அந்த சிறு குழந்தை அவதிப்பட்டுக்கொண்டிருந்தது. பிறகு திருச்சியில் உள்ள மருத்துவர் பரிந்துரை செய்ததன்படி சென்னையில் ஒரு பிரபல மருத்துவரை சந்தித்தோம்.  சிறு நகரங்களில் உள்ள மோசமான மருத்துவர்களிடம் எங்களுக்கு கிடைத்த அனுபவங்கள் காரணமாக உறவினருக்கு நம்பிக்கையே இல்லாமல்தான் வந்தார். எனக்கும் நம்பிக்கை சிறிதளவே இருந்தது. ஆனால் எங்கள் எதிர்ப்பார்ப்பு பொய்யானதில் இனம்புரியாத சந்தோஷம். 

ஏற்கனவே சிகிச்சை அளித்த மருத்துவரின் அறிக்கைகளை எல்லாம் படித்த அவர், "உங்க டாக்டர் இந்த நோய் பற்றி எதுவும் தெரியாமதான் சென்னைக்கு அனுப்பிட்டார் போலிருக்கு... பெரிய வியாதியா இருக்குமோன்னு பயந்துடாதீங்க. அவரும் பிரமாதமா சிகிச்சை அளிக்கக்கூடியவர்தான். ரெண்டு சிறந்த மாணவர்கள் தங்களுக்குள் ஆலோசனை செய்து படிக்கிற மாதிரிதான் எனக்கு ரெஃபர் பண்ணியிருக்கார்.   நீங்க இந்த பரிசோதனைகளை செய்துகிட்டு வந்துடுங்க. சீக்கிரம் குணமாயிடும். சாயந்திரம் பேசுவோம். என்று அந்த மருத்துவர் சொன்னதிலேயே எங்களுக்கு முழு அளவில் நம்பிக்கை வந்தது.  சென்னையில் அந்தக் குழந்தைக்கு பரிசோதனை செய்த செலவும் மிகக் குறைவான தொகைதான். இது எதுவுமே நாங்கள் எதிர்பார்க்காத ஒன்று. 

பரிசோதனை முடிவுகளைப் பார்த்த அவர், "இந்த குழந்தைக்கு புரதம் அதிகமா வெளியேறுது. இந்த குறைபாடு பற்றி இன்னும் ஆராய்ச்சிதான் பண்ணிகிட்டு இருக்காங்க. இதுதான் மருந்து. இதைக்கொடுத்தா குணமாயிடும்னு எதையும் சொல்ல முடியாது.   ஆனா கோளாறை ஓரளவு கட்டுப்பாடா வெச்சிருக்குற மருந்துகளைத்

தர்றேன். மூணு மாசம் கொடுத்தா போதும். மருந்தை விட உணவுப் பழக்கவழக்கம் தான் முக்கியம்."என்று சொன்ன அவர் மிக எளிமையான வழிவகைகளைக் கூறினார்.

"வேறு எதுவும் பிரச்சனைன்னா உடனே நீங்க என்னைத் தேடி வர வேண்டாம். திருச்சியில அந்த மருத்துவரையே பாருங்க. அவரும் கெட்டிக்காரர்தான். கடவுள் அனுக்கிரஹத்தாலயும் நீங்க குழந்தைக்கு கொடுக்கும் உணவுகள்ல காட்டப்போற கவனத்தாலயும் இனிமே இந்தப் பிரச்சனை வராதுன்னு நம்புவோம்." - இப்படி பேசினது ஒரு மருத்துவர்தானான்னு எங்களுக்கே சில தினங்கள் வரை பிரமிப்பு விலகலைங்க.   என்ன பண்றது....அது ஒரு கனாக் காலம்.

ராஜீவ் கொலை தொடர்பான குற்றவாளிகளில் இருவர் தப்பித்த கதை ...(நானும் ரவுடிதான் -வடிவேலு பாணியில் பேசி எஸ்கேப் ஆனவர்கள்)

நன்றி:சூரிய கதிர் டிசம்பர் 16-31, 2009

ஒரு சினிமா படத்தில் காமெடி நடிகர் வடிவேலு, 'நானும் ரவுடிதான். என்னையும் அரெஸ்ட் பண்ணுங்க'ன்னு வலுக்கட்டாயமாக போலீஸ் ஜீப்ல ஏறப்போக, போலீஸ்காரர் வடிவேலுவை வெளியே பிடித்துத் தள்ளும் காட்சியைப் பார்க்கும்போது எனக்கு சிவராசன் நினைவுதான் வரும்.

சிவராசன், சுபா படங்களை நோட்டீஸ் அடித்தும், பத்திரிகைகளில் விளம்பரம் செய்தும் தேடிக்கொண்டிருந்த நேரம் அது. பாண்டிபஜார் போலீஸ் ஸ்டேஷன் அருகேயே சிவராசனும், சின்ன சாந்தனும் பேசிக்கொண்டிருந்திருக்கிறார்கள். ஒரு போலீஸ்காரர் கையில் பத்திரிகை ஒன்றை வைத்து சிவராசன், சுபா படங்களைப் பார்த்துக் கொண்டிருக்க, சிவராசன் சின்னசாந்தனிடம் 'இப்ப நான் இந்த போலீஸ்கிட்ட போய் காமெடி பண்றேன் பாரு'ன்னு சொல்ல சின்னசாந்தன் எதுக்கு வம்பு என சிவராசனை தடுத்தும் கேட்காமல், போலீசிடம் போய் பேப்பரில் வந்த தன் படத்தைக் காட்டி 'இந்த ஆளை பிடிச்சு கொடுத்தா ஏழு லட்சம் பரிசுன்னு போட்டிருக்குல்ல. நான்தான் அது. என்னை பிடிச்சுக் கொண்டு போய் அந்த பரிசுப் பணத்தை வாங்கிக்குங்க'ன்னு சிவராசன் சொல்ல, 'யோவ்...போய்யா, என்ன கிண்டல் பண்றியா?' என போலீஸ்காரர் திட்டி அனுப்பியிருக்கிறார். அந்த அளவிற்கு பேச்சு,முக பாவனைகள், உடல் அசைவுகளை அவ்வப்போது மாற்றிக்கொள்வானாம் சிவராசன். எங்களிடம் விசாரணையில் இருந்த சின்னசாந்தன் இந்த சம்பவத்தைச் சொன்னதும் அப்படியே திகைத்துப் போய் விட்டோம்" என்கிறார் ரகோத்தமன்.

ராஜீவ்காந்தி கொலை வழக்கு பற்றி முன்னாள் சி.பி.ஐ இயக்குநர் புத்தகம் வெளியிட்டது தெரிந்ததுதான். தற்போது அந்த வழக்கு பற்றி விசாரணை அதிகாரியாக இருந்த சி.பி.ஐ சூப்பரின்டென்டெண்ட் கே. ரகோத்தமன் தன் பங்கிற்கு தானும் ஒரு புத்தகம் எழுதி இன்னும் ஒரு மாதத்தில் வெளியிட இருக்கிறார்.

இது பற்றி இரண்டு பக்க கட்டுரை சூரிய கதிர் டிசம்பர் 16-31, 2009 இதழில் வெளிவந்துள்ளது.

ஞாயிறு, 13 டிசம்பர், 2009

மறைந்து வருகிறதா மனித நேயம் - புதிய தலைமுறை (17.12.2009)


புதிய தலைமுறை 17.12.2009 தேதியிட்ட இதழின் ஆசிரியர் பக்கத்தில் மறைந்து வரும் மனித நேயம் பற்றி எழுதியிருந்தார்கள். விபத்துக்குள்ளானவரைக் காப்பாற்ற பெரும்பாலானவர்கள் முன்வருவதில்லை. அதிலும் மருத்துவம் படிக்கும் மாணவர்கள் கூட சிகிச்சை அளிக்க முன்வராமல் ஆம்புலன்ஸ் சேவைக்கு சொல்லியனுப்பிவிட்டு பேசாமல் இருந்து விட்டார்கள் என்றெல்லாம் குறிப்பிடப்பட்டிருந்தது மிகவும் கவலை தரும் விஷயம்.

விபத்தில் சிக்கியவர் நமது உறவினராகவோ நண்பராகவோ இருந்தால் இப்படி செய்வோமா என்று பலரும் கேட்கிறார்கள். போட்டி மிகுந்த இன்றைய உலகில் இன்னும் தொண்ணூறு சதவீதம் பேர் தினக்கூலிகளாகவும் தனியார் அலுவலகப் பணியாளராகவும்தான் இருப்பார்கள். அரசுத்துறை ஊழியராக இருந்தாலும் பலர் மேலதிகாரி என்னும் சர்வாதிகாரியிடம் சிக்கி தினம் தினம் சிதைபவராகத்தான் இருக்கிறார்கள்.

இவர்கள் குடும்ப விஷயங்களுக்காக (நல்லதோ - கெட்டதோ) விடுப்பு அல்லது பர்மிஷன் போடுவதே பல நேரங்களில் சாத்தியப்படாத ஒன்றாக இருக்கும். இது போன்ற ஊழியர்கள் சமையல் எரிவாயு சிலிண்டரை ஏஜன்சியிடமிருந்து பெறவோ அல்லது பதிவு செய்யப் போகவோ மேலதிகாரி அல்லது முதலாளியிடம் கெஞ்சி அனுமதி பெற்று செல்வதை நான் பலமுறை பார்த்திருக்கிறேன். இது சிறிய உதாரணம்தான்.


விபத்தில் சிக்கியவரை மருத்துவமனையில் கொண்டு போய் சேர்ப்பதனால் ஏற்படும் தாமதத்தால் பணியிடத்தில் சில இடையூறுகளைக்கூட தாங்கிக்கொள்வார்கள்.

நாம்தான் குற்றவாளியோ என்ற சந்தேகம் உதவி செய்தவருக்கே தோன்றிவிடும் அளவுக்கு சில சமயம் சாட்சி அது இது என்று அலைக்கழிக்கப்படுவதற்கு அஞ்சியே பலரும் நமக்கு எதுக்கு வம்பு என்ற எண்ணத்தில் தெறித்து ஓடிவிடுகிறார்கள். இது பற்றி ஒரு வாசகர் கடிதம் புதிய தலைமுறை இதழுக்கு அனுப்பியிருக்கிறேன். அது உங்கள் பார்வைக்கு...

சனி, 12 டிசம்பர், 2009

அன்புள்ள ரஜினிகாந்த்



பிறந்த நாள் கொண்டாடும் ரஜினிகாந்த்துக்கு வாழ்த்துக்கள்.
உன் வயசு என்ன? அவர நீ வாழ்த்துறியான்னு திட்டாதீங்க... வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்னு சொல்றதெல்லாம் அரசியல் பாணி. நமக்கு இப்ப அது தேவையில்லை...

தனிப்பட்ட ஒரு நபர் இவ்வளவு மக்களை வசியம் செய்திருப்பது சாதனை. இது என்னை மாதிரி ஆளுங்களுக்கு ஊக்கம் கொடுக்குது. ஆனா பல பேருக்கு பொறாமையைத் தர்றதாலதான் அவர் மீதான விமர்சனங்கள்.

ரஜினிகாந்த் மட்டுமில்லைங்க. யார் நல்லா இருந்தாலும் அவங்களைச் சுற்றி நாலு பேருக்காவது எரியத்தாங்க செய்யும். இது உலக நியதி. இப்ப நாம நல்லா வளர்றது சீனா, அமெரிக்கா, பாகிஸ்தான் இன்னும் சில நாடுகளுக்கெல்லாம் பிடிக்கலைன்னுதான் உங்களுக்கும் தெரியுமே. அந்த மாதிரிதான் இதுவும். (மற்றவங்களைக் கொதிக்க விட்டு பிழைப்பு நடத்துறவங்க இந்தப் பட்டியல்ல சேர மாட்டாங்க.)


அவர் படங்கள்ல நாம பின்பற்றவேண்டாத விஷயங்களைப் பற்றி பேச வேண்டாம். அவரே சில காட்சிகளை தன்னோட படங்கள்ல தவிர்க்க ஆரம்பிச்சுட்டார். அந்த விஷயங்களை 'கதம் கதம் - முடிந்தது முடிந்துபோச்சு' அப்படின்னு அவர் வழியிலேயே விட்டுடுவோம்.

என்னுடைய சிறு வயதில் அவருடைய படங்கள் அவ்வளவாக எனக்கு அறிமுகம் இல்லை. சக மாணவர்களால் மிகவும் சிலாகிக்கப்பட்டதால் ரொம்ப ஆர்வமா பார்க்கணும்னு நினைச்ச படம் - தளபதி

அந்தப் படத்து ஸ்டில்சோட மாதக் காலண்டர் வேற ரொம்ப எதிர்பார்ப்பை தூண்டிவிட்டுச்சு. ஆனா வீட்டுல என்ன காரணத்தாலோ அழைச்சுட்டுப் போக மாட்டேன்னு சொல்லிட்டாங்க.(அப்ப எல்லாம் என் அம்மாவோடதான் படத்துக்குப் போவேன்...நிசமாத்தாங்க... நம்புங்க.)

பிறகு 1994ம் வருஷம்தான் எங்க ஊர்ல ரொம்பப் பழைய தியேட்டர்ல... ச்சை... நாடகக் கொட்டகையா இருந்து திரையரங்கமா (?!) மாறின இடத்துல பார்த்தேன்.

இது வரை நான் பார்த்த படங்களிலேயே மிகச் சில காட்சிகள்தான் எத்தனை தடவை பார்த்தாலும் புத்துணர்ச்சியை ஏற்படுத்தக்கூடியவை. பாட்ஷா படத்துல ஆனந்தராஜை ரஜினி அடிக்கிற காட்சி எத்தனை தடவை பார்த்தாலும் ரோமங்களை சிலிர்க்கச் செய்யும்.

யுவராணி ரத்தக்காயத்துடன் ரஜினி மீது வந்து விழுவார். அப்போது கத்திக்கொண்டே ஓடிவரும் அடியாளை ஒரே அடியில் வீழ்த்தியதும் சில நொடிகள் எங்கோ தூரத்தில் ரயில் செல்லும் ஓசையத்தவிர வேறு பின்னணி இசை எதுவும் இருக்காது.

படம் பார்க்கும்போது திரையரங்கத்திலும் நிசப்தம்தான்.

அண்ணாமலை படத்தில் சரத்பாபுவிடம் சவால்விடும் காட்சி சிறப்பாகத்தான் இருக்கும். ஆனால் பாட்ஷா படத்தில் வரும் இந்தக் காட்சியைப் போல் அவரது வேறு எந்தப் படத்திலும் (நான் பார்த்தவரை) ஆக்க்ஷன் ப்ளாக் எந்தப் படத்திலும் அமைய வில்லை என்று நினைக்கிறேன்.

ரஜினி என்ற தனி மனிதரிடம் கற்றுக் கொள்ள வேண்டிய நல்ல விஷயங்கள் எவ்வளவோ இருக்கின்றன. அதை மட்டும் எடுத்துக் கொள்வோம். பிறந்தநாளில் வாழ்த்துவோம்.

பொதுவாழ்விற்கு வந்துவிட்டால் விமர்சனத்தை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். யாருமே விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர்கள் இல்லை. பிறந்தநாள் வாழ்த்து சொல்லும் நேரத்தில் விமர்சனம் வேண்டாமே.

இன்னொரு நாள் பேசுவோம்.

வெள்ளி, 11 டிசம்பர், 2009

தேர்வை நிறுத்த வெடிகுண்டு புரளி


கும்பகோணத்தில் தேர்வு எழுத பயந்த மாணவன் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்திருக்கிறான். இந்த விஷயத்தில் குற்றவாளி அந்த மாணவன் இல்லை. பெற்றோர்கள் என்று நீங்கள் சொல்லாதீர்கள். அவர்கள் இந்த விஷயத்தில் எதுவும் செய்ய முடியாத நிலையில் இருக்கிறார்கள். முழுக் காரணமும் ஆட்சியாளர்கள்தான்.

அரதப்பழசான கல்விமுறையை வைத்து இளைய சமுதாயத்தின் திறன் முழுவதையும் மனப்பாடம் செய்வதில் மட்டுமே வீணடித்து வரும் தவறு அதிகாரத்தில் இருப்பவர்களால்தானே    நீடிக்கிறது?.  கல்வி என்பது ஒருவனை பண்படுத்துவதாகவே அமைய வேண்டும்.ஆனால் நம் நாட்டில் அதை வெறும் வேலை வாங்கித் தரும் கருவியாக மட்டுமே பார்ப்பதால்தான் இந்த நிலை.

இப்போதைய கல்விமுறையில் என்ன குறைச்சல் என்று சிலர் வாதாடுகிறார்கள். இது அதி புத்திசாலியான மாணவர்கள் மிகப் பெரிய உச்சம் தொட்டு லட்சக்கணக்கில் சம்பாதிக்க உதவுகிறது.  வேறு சிலர், தன் மனதுக்கு ஒவ்வாத வேலையில் ஒட்டிக்கொண்டு வாழ்க்கையை ஓட்ட வைக்கிறது. இன்னும் பலர் சக மனிதனுக்கு துன்பம் தரும் பாதையில் பயணிக்க விடுகிறது.

எல்லாரும் மருத்துவர் ஆகிவிட்டால் அவருக்கு வாகனம் ஓட்டுவது யார்...அறுவை சிகிச்சை செய்யும்போது உதவுவதற்கும் அந்த உபகரணங்களை செய்வதற்கும் ஆட்கள் வேண்டாமா?


இந்த அடிப்படை உண்மை புரிந்தால் உலகத்தில் கொட்டிக் கிடக்கும் வாய்ப்புகளை புரிந்துகொண்டிருப்போம். தேர்வுகளில் மதிப்பெண் அதிகமாக பெற முடியாத மாணவர்கள் வேறு வழிகளில் பயணிக்க வழிகாட்டக்கூடிய கல்வி முறையை உருவாக்கியிருப்போம்.
இது போல் பல கேள்விகளுக்கு விடை தேடினால் சமச்சீர் கல்வி எப்படி அமைய வேண்டும் என்பது புரிந்திருக்கும். பள்ளி மாணவன் தேர்வுக்கு பயந்து வெடிகுண்டு மிரட்டல் விடும் அவல நிலை ஏற்பட்டிருக்காது.

ஞாயிறு, 6 டிசம்பர், 2009

மாத்தி யோசி - ச ரீ க மே...


பக்குவப்பட்ட மனிதன் தீயவற்றிலும் நல்ல பலன் தரும் விஷயங்களையே பார்கிறான் என்ற கூற்றில் எனக்கு நம்பிக்கை உண்டு. அதனால்தான் வசனங்களால் பல சர்ச்சையை ஏற்படுத்திய "பாய்ஸ்" திரைப்படத்தில் "மாத்தியோசி" என்று தொடங்கிய பாடல்வரிகள் என் கவனத்தை சட்டென்று ஈர்த்தன.

போட்டி மிகுந்த உலகத்தில் வேலைவாய்ப்பு என்பது பெரிய போராட்டத்திற்குப் பிறகே பெறக்கூடிய விலை உயர்ந்த பொருளாகிவிட்டது. ஒவ்வொருவரும் ஏதாவது தனித்திறமை இருந்தால் மட்டுமே இந்த உலகின் ஓட்டப்பந்தயத்தில் சற்று முன்னே செல்லலாம் என்ற நிலை.


சாதனையாளர்கள் யாரும் செய்யாத செயல்களை செய்வதில்லை. எல்லாரும் செய்வதையே வித்தியாசமாக செய்வார்கள் - இந்த வாக்கியம் வெற்றி பெற்ற பலரும் சொன்னதுதான்.

ஆனால் இப்போது உள்ள சூழ்நிலையில் சாதனை செய்வதற்கு அல்ல...வாழ்வதற்கே வித்தியாசமாக எதையாவது செய்ய வேண்டியுள்ளது. சுருக்கமாக சொன்னால் "மாத்தி யோசி"

அதற்காக ரொம்பவும் மாத்தி யோசிப்பதாக நினைத்துக்கொண்டு கிடைக்க வேண்டிய வேலைக்கும் சொந்த முயற்சியால் வேட்டு வைத்துக்கொள்ளக்கூடாது.

உதாரணத்திற்கு, உங்களின் லட்சியம் என்ன என்ற கேள்விக்கு உங்க நாற்காலிதான் சார்... என்றால் உடனே யு ஆர் அப்பாயிண்டட் என்ற வசனமெல்லாம் திரைப்படத்தில்தான் சாத்தியம். நிஜ வாழ்வில் யாருக்கு ஆப்பு வைப்பது யாரோ என்றே தெரியாத நிலையில் இந்த பதில் வேலையை வாங்கித் தரும் என்று நினைப்பது பெரிய அளவில் பலன் தரும் என்று சொல்ல இயலாது.

அப்போ மாத்தி யோசிக்கும் பதில் எப்படி இருக்க வேண்டும்?

(பெண்ணிடம்) காலையில் எழுந்தது நீங்கள் கர்ப்பம் என்பது தெரிந்தால் என்ன செய்வீர்கள்?

உடனே என் கணவரிடம் விஷயத்தை சொல்லி ரெண்டு பேரும் கொண்டாடுவோம்.(திருமணமாகாமலே கர்ப்பம் என்று ஏன் நெகட்டிவாக யோசிக்க வேண்டும்)

இப்படி நேர்மறையான சிந்தனையுடன் சிந்திக்க நாலு விஷயங்களை  சேர்த்து கட்டுரையாக்கி இருக்கிறார்கள்.


(அதற்காக நேர்மறையாகவே சிந்திக்கிறேன் என்று ஆபத்துக்களை தவிர்க்கும் தயாரிப்பில் நீங்கள் இல்லை என்றால் உங்களை குழியில் தள்ள பலரும் ரூம் போடாமல் யோசித்தாலே போதும் என்ற அளவுக்கு ஏமாளி என்று அர்த்தம்.)

புதிய தலைமுறை இதழ் முழுவதும் தன்னம்பிக்கை விஷயங்கள் இருந்தாலும்
அவை வெறும் எழுத்து என்ற அளவில் இல்லாமல் இப்போது வாழ்ந்து கொண்டிருக்கும் சக மனிதர்களிலேயே நடைமுறை உதாரணங்களைக் காட்டுவதால் கட்டுரைகள் மீது மட்டுமல்ல...நம் மீதே நம்பிக்கை மேலும் அதிகரிக்கிறது.

சினிமாத்துறையில் நடிக்க வந்த விபத்து(?!) பற்றியே பலரும் கேள்வி கேட்டுக் கொண்டிருந்த காலத்தில் சினிமா பிரபலங்களின் கல்லூரி வாழ்க்கை பற்றி எழுதிய ஒரு விஷயம் போதும்...அவர்களுக்கும் வருங்கால இந்தியா மீது அக்கறை இருக்கிறது என்பதை நாம் புரிந்து கொள்ள.

நன்றி : புதிய தலைமுறை (10.12.2009)