Search This Blog

திரையரங்க அனுபவங்கள்... லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
திரையரங்க அனுபவங்கள்... லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 10 ஜனவரி, 2010

ஆர்வக்கோளாறில் ஒரு ரசிகனின் கடிதம்...


ஷங்கருக்கு சரண் எழுதுவது...

திரையரங்க ஆப்ரேட்டராக சில காலம் வேலை செய்த எனக்கு பிரமிப்பை ஏற்படுத்திய படங்கள் மிகவும் குறைவு. அந்தக் குறைவானவற்றில் நிறைவான திருப்தியை ஏற்படுத்தியவை என்றால் உங்களின் படங்கள் அனைத்தையும் சொல்லலாம்.இதை வெறும் புகழ்ச்சி என்று நினைக்கவேண்டாம்.

பிலிம் சுருள் மறைந்து டிஜிட்டல் ஆதிக்கம் நிறைந்து வரும் இந்த நாட்களில் பிலிம் சுருள் மூலம் புரொஜக்டரில் படம் திரையிட்ட அந்த நாட்கள் எனக்கு மறக்க முடியாதவை.

போட்டோபோன், வெஸ்ட்ரெக்ஸ் ஆகிய இரண்டு மெஷின்களையும் நான் இயக்கியிருக்கிறேன்.

அவை புழக்கத்தில் இருந்து ஒதுக்கப்படுவது என் மனதில் ஒரு மவுன வலியை ஏற்படுத்திவிட்டது. ஆனாலும் தொழில்நுட்ப வளர்ச்சியில் சில விஷயங்கள் கணாமல் போவது தவிர்க்கமுடியாது என்பதை நான் உணர்ந்துதான் இருக்கிறேன்.சினிமா கண்டுபிடித்து  சுமார் நூறு ஆண்டுகளாக சினி புரொஜக்டரின் அடிப்படைக் கட்டமைப்பில் பெரியதாக எந்த மாறுதலும் இல்லை.இதுவே அந்த தொழில்நுட்பத்துக்கு மாபெரும் பெருமைதான்.

பல ஆண்டுகளாக ரசிகர்களை மகிழ்வித்த ஒரு கருவியை நானும் சில காலம் இயக்கியதே மனதுக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கிறது.


இனி உங்கள் படங்கள் தொடர்பான என்னுடைய அனுபவங்கள்

ஜென்டில்மேன் அறிமுகம்

அப்போது நான் ஏழாம் வகுப்பு படித்துக்கொண்டிருக்கிறேன். 1993 தீபாவளி அன்று பக்கத்து வீட்டு சிறுவன் அவன் தாத்தாவுக்கு மதிய உணவு எடுத்துச்செல்லும்போது என்னையும் துணைக்கு அனுப்புகிறார்கள்.

தாத்தா இருந்த இடம் ஒரு திரையரங்கம். சாப்பாட்டை வாங்கிய தாத்தா உடனே எங்களை வெளியில் அனுப்பவில்லை. இரண்டு டிக்கட்டுகளைக் கிழித்துக் கொடுத்து அடுத்த காட்சி மூன்று மணிக்கு. இருந்து பார்த்துட்டு போங்க என்கிறார். ஏதோ ஒரு

அர்ஜூன் படம் பார்க்கப்போகிறோம் என்ற மனநிலைதான் எனக்கு.

படம் தொடங்கிய பிறகு ஹீரோவைத்தாண்டி இயக்குநர்தான் என்மனதில் நிற்கிறார். என் வயதுடைய சிறுவர்கள் ரஜினி, கமல் என்று திரையில் முகம் காட்டுபவர்களை சிலாகித்து பேசிக்கொண்டிருக்கும்போது நான் ஷங்கர் என்ற பெயரை சொன்னதும் என்னை ஒரு அன்னியனாகத்தான் முதலில் பார்த்தார்கள்.மேஜையுடன் கூடிய என்னுடைய புத்தகங்கள் வைக்கும் பீரோவின் உள்பக்கம் எதோ ஒரு வார இதழில் இருந்த ஷங்கரின் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படத்தையும் கபில்தேவின் புகைப்படத்தையும்தான் ஒட்டி வைத்தேன். அதன் பிறகு வேறு எதையும் வெட்டி ஒட்டவில்லை.

*******

காதலன் பெற்ற கவனம்

காதலன் படம் வெளியான அன்றே பார்த்துவிட்டு மறுநாள் பள்ளிக்குச் சென்றபோது சக நண்பர்களிடம் நான் பேசிக் காட்டிய வசனம் எது தெரியுமா?

"என்னய்யா...புதுசா ஒரு குண்ட தூக்கிப் போடுற?"

"என் தொழிலே அதுதான..."

ஞானபீட விருது பெற்ற கன்னட எழுத்தாளர் கிரீஷ்கர்னாட் மற்றும் ரகுவரன் ஆகியோரிடையே நடைபெற்ற உரையாடலை அவர்கள் இருவருடைய மாடுலேஷனிலேயே அடிக்கடி பேசிக்காட்டுவேன்.

சக மாணவர்கள் எல்லாம் கிரீஷ்கர்னாட் பெயரையே உச்சரிக்க முடியாமல் தடுமாறுவார்கள்.அதை மிகச்சரியாக உச்சரிப்பதாலேயே என் மனதில் சிறு கர்வம் உண்டு.

******

இந்தியன் தந்த கம்பீரம்

ஒன்பதாம் வகுப்பு ஆண்டுத்தேர்வு விடுமுறையில் இருந்தபோதுதான் இந்தியன் வெளியானது. அப்போது நான் மற்றொரு திரையரங்கத்தில் வேலை செய்துவந்தேன்.

படம் பார்க்கச்சென்ற போது சுகன்யாவின் பிளாஷ்பேக்கில் வரும் கருப்புவெள்ளைக்

காட்சிகள் அனைத்தும் இல்லை. கப்பலேறிப்போயாச்சு பாடல் மட்டுமே இருந்தது. அந்தக் காட்சிகளை வெட்டினார்களா என்பது தெரியவில்லை.

நான்காவது கேனின் பிற்பகுதி, ஐந்தாவது கேனின் முற்பகுதி ஆகியவை கருப்புவெள்ளைக் காட்சிகளைக் கொண்டிருந்ததால் புரொஜக்டரில் ஓடும்போதே இந்தக் காட்சிகளைத் தவிர்த்திருப்பார்கள் என்று நினைக்கிறேன்.

பிறகு படம் வந்து அறுபது நாட்களுக்குப் பிறகு மீண்டும் பார்க்கச் சென்றேன். அப்போது அந்தக் காட்சிகள் திரையிடப்பட்டன. சில ஆண்டுகள் கழித்து மற்றொரு திரையரங்கில் நான் வேலை செய்தபோது ஒரு வாரம் இந்தியன் படத்தை ஆசை தீர பார்த்து மகிழ்ந்தேன். படத்தின் இறுதியில் வரும் டைட்டில் முடியும் வரை கார்பன் ஒளியை நிறுத்தாமல் இருப்பதில் எனக்கு ஒரு சந்தோஷம்.

******

ஜீன்ஸ் தந்த பிரமிப்பு

அந்தப் படம் திருவாரூரில் ரிலீஸ் ஆகவில்லை என்பதால் நாகப்பட்டணத்தில் போய் பார்க்கலாம் என்று நானும் என் நண்பனும் திட்டமிட்டிருந்தோம். ஆனால் ஒரு கட்டிடத்தில் அன்று மேற்கூரையில் கான்கிரீட் போடும் முன்பு மின்சார வயர்களுக்காக குழாய்களைப் பொருத்தும் பணி இருந்தது. அதனால் சில வாரங்கள் கழித்து திருவாரூருக்கு அந்தப் படம் வந்தபோதுதான் பார்த்தேன். ஜாலியான கதையம்சம் கொண்ட அந்தப் படத்தில் பல காட்சிகளைப் பார்த்து நான் பிரமித்தாலும் ஏமாற்றம் தந்த காட்சி என்றால் கண்ணோடு காண்பதெல்லாம் பாடல்தான்.

பாடலும் காட்சிகளும் பிரமாதம்தான். ஆனால் இரண்டையும் பொருத்திப் பார்க்க என் மனம் விரும்பவில்லை.

******

என் மனதில் மட்டுமின்றி சைக்கிளிலும் இடம் பிடித்த முதல்வன்

முதல்வன் படம் துவங்கும்போது நாளிதழ் விளம்பரத்தில் A MAN OF DESTINY என்று சப்

டைட்டில் கொடுத்திருந்தீர்கள். அதை என்  சைக்கிளில்  எழுதி ஆறு ஆண்டுகளுக்கும் மேல் வைத்திருந்தேன். பிறகு சைக்கிள் செயின் கவர் மாற்றும்போதுதான் அதுவும் மாறியது. அனைத்துக் காட்சிகளையும் ரசித்தேன்.ஆனால் நேர்காணல் காட்சியில் தொலைக்காட்சி நிறுவன எம்.டி எதோ கேட்டதும், "ம்...அரங்கநாதனை கொரங்கநாதனா ஆக்கிட்டான்." என்று மணிவண்ணன் சொல்லும் உரையாடல்தான் அதிகமாக நினைவில் நின்றது.

******

பக்கத்து வீட்டுப் பசங்களை நினைவூட்டிய பாய்ஸ்

முதல்வனுக்குப் பிறகு நான் கல்லூரியில் படித்து முடிக்கும் காலத்தில் உங்கள் இயக்கத்தில் எந்த தமிழ்ப்படமும் வரவில்லை. 2003 ன் பிற்பகுதியில் பாய்ஸ் வெளியானபோது பலத்த விமர்சனம். தினமலர் குழுமத்தில் ஒரு தொலைக்காட்சி சேனல் பணிக்கு விண்ணப்பம் செய்திருந்தேன். அந்த நேர்காணலுக்காக நானும் என் நண்பனும் திருச்சி வந்திருந்தோம். வந்த வேலை முடிந்ததும் திருச்சி சோனா தியேட்டரில் படம் பார்க்க முடிந்தது.

உங்கள் படங்கள் ஒவ்வொன்றிலும் பாடல்கள் ரசிகர்களைத் தாளம் போட வைத்தாலும் ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது பாய்ஸ் பாடல்கள் போல் எதுவும் என் மனதைக்

கவரவில்லை.மெலோடியைப் பொறுத்தவரை ஜென்டில்மேனின் என்வீட்டுத்தோட்டத்தில், இந்தியனின் பச்சைக்கிளிகள் இரண்டும்தான் என் சாய்சில் முன்னிலை.

புதுமுகங்கள்தானே என்றில்லாமல் மிகவும் சிரத்தையுடன்தான் பாய்ஸ் படத்தை உருவாக்கியிருந்தீர்கள்.படத்தில் பொய்களும் இல்லை. பிறகு ஏன் நிறைய பேருக்கு இந்தப் படத்தின் மீது இவ்வளவு வெறுப்பு?

இயக்குநர் மகேந்திரன் ஒரு நூலில் எழுதியிருந்ததை இங்கே மேற்கோள் காட்டவேண்டிய

சூழலில் இருக்கிறேன். கணவன் மனைக்கும் அந்தரங்க உறவு உண்டுதான். ஆனால் பெரும்பாலான குடும்பங்களில் மனைவி உடை மாற்றும் நேரத்தில் கணவனுக்குத் தடாதான். இந்த நாகரிகம் நம் கலாச்சாரத்துடன் பின்னிப் பிணைந்த ஒன்று. இப்போது நிறைய மாற்றங்கள் வந்திருக்கலாம். ஆனால் வெளிப்படையாக எதையும் ஏற்கும் மக்கள் இன்னும் தமிழ்நாட்டில் மிக அதிக எண்ணிக்கையில் இல்லை.

மேலே உள்ள கருத்தை உணர்த்தும் வாக்கியத்தை இயக்குநர் மகேந்திரன் அவரது நூலில் எழுதியிருந்தார். இந்த உண்மை உங்களுக்கும் எப்பவோ புரிந்திருக்கும்.

எழுத்தாளர் சுஜாதாவைப் பற்றி, இவர் இன்னும் இருபத்தைந்து ஆண்டுகளுக்குப் பின்

எழுத வேண்டியதை இப்பவே சொல்லிட்டார் என்பார்கள். பாய்ஸ் படமும் அப்படித்தான் என்று கூறலாம்.

ஆனால் இந்த மாதிரி படங்களில் வரும் நல்ல கருத்தை மக்கள் ஏற்றுக்கொண்டு, தவறானதை ஒதுக்கியிருக்கலாமே என்று நீங்கள் ஆதங்கப்படுவது புரிகிறது. நம் நாட்டு டீன்ஏஜ் குழந்தைகளுக்கு மட்டுமல்ல, பெரியவர்களுக்கும் இன்னும் அந்தப் பக்குவம் வரவில்லை.அதுதான் படத்தை விட்டே சற்று விலகிவிட்டார்கள். எதிலும் தெளிந்து இருப்பவர்கள் பிடிக்கவில்லை என்றதும் அவர்கள் பாட்டுக்கு எதுவும் செய்யாமல் புறக்கணித்துவிட்டு போய்க்கொண்டே இருப்பார்கள். அதிகமாக கண்டனம் செய்தவர்களைக் கவனித்தால் ஒரு தடுமாற்றம் இருப்பது தெரியும்.


சுருங்கச் சொன்னால் வெறுமனே கண்டனம் செய்பவர்களிடம் உருப்படியான செய்ல்திட்டம் இருப்பது குறைவுதான்.

******

ரொம்பவும் நெருக்கமான அந்நியன்

யானை போவது தெரியாது. பூனையைதான் ஆராய்ச்சி செய்யத்தெரியும்.- என்று ஒரு பழமொழி சொல்வார்கள். இந்தப் படத்தைப் பார்த்தபிறகுதான் பூனை என்று அலட்சியமாக விடுவது எவ்வளவு பெரிய அழிவுகளை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறது என்று புரிந்தது.

******

சிவாஜி பற்றி...

யானை படுத்தாலும் குதிரை உயரம்  என்று சூப்பர்ஸ்டார் பாபா படம் பற்றி சொன்னார். அதை சறுக்கலுக்கு வேண்டுமானால் உதாரணமாக சொல்லலாமே தவிர வெற்றிக்கான விளக்கமாக சொல்ல முடியாது. இதை தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம். இமயத்தின் உயரத்தை நாங்கள் எதிர்பார்க்கும்போது தொட்டபெட்டா சிகரம் போதும் என்பது போல் சிவாஜி அமைந்துவிட்டது. அடிவாரத்தில் நின்று பார்க்கும் போது எங்களுக்கு வேண்டுமானால் அது பிரமாண்டமான உயரமாகத் தெரியலாம். ஆனால் நீங்கள் தொடவேண்டிய உயரம் வேறு.


காதல் படத்தில் சரவணகுமார் சொல்வது போல்,"இன்னும் உங்ககிட்ட நிறைய எதிர்ப்பார்க்கிறோம்."

எந்திரன் நிச்சயமாக ஒரு மைல்கல்லாக அமையும். ஏனெனில் ஒரு படைப்பாளிக்கு எப்போதுமே சிறந்த படைப்பு அடுத்ததாக உருவாக்கப்போவதாகத்தான் இருக்கவேண்டும்.

எஸ். பிக்சர்ஸ் தயாரிப்புகள் பற்றி...

உங்களுடைய தயாரிப்பில் காதல் படத்தைப் பார்த்து விட்டு உள்ளூர் பத்திரிகை ஒன்றில்

சிறு கட்டுரை எழுதினேன்.யானை படுத்தால் குதிரை உயரம் என்ற தலைப்பில்தான். நீங்கள் புதியவர்களின் புதிய முயற்சிக்கு ஆதரவு தந்து(பாலாஜி சக்திவேலுக்கு இரண்டாவது படமாக இருந்தாலும்) காதல் படம் தயாரித்தது போல் தமிழ்த்திரையுலகின் ஜாம்பவான்கள் பலரும் செய்தால் திரைத்துறை ஆரோக்கியமான பாதையில் தொடர்ந்து பயணம் செய்யும் என்பதுதான் கட்டுரையின் மையக்கரு.

நீங்கள் கல்லூரி, இம்சைஅரசன்,ஈரம், என்று தொடர்ந்து கலைப்பணி செய்வதைக்கண்டு மகிழ்பவர்களில் நானும் ஒருவன்.


உங்களிடம் உதவியாளராக இருப்பவர்களுக்கு சம்பளம் வேலை நேரம் உள்ளிட்ட விஷயங்களில் பிரச்சனை இல்லாமல் பார்த்துக்கொள்வதாக சொன்னார்கள். அதற்கே உங்களுக்கு பாராட்டுடன் நன்றி சொல்ல வேண்டும்.

தங்கர்பச்சானிடம் உதவியாளராகப் பணியாற்றியவரின் குறும்படத்தில் நான் உதவியாளராக இருந்தேன். எனக்கு இந்த வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தது தமிழ்நாடு அரசு குழந்தைத்தொழிலாளர் மறுவாழ்வு மையத்திடம் முதல்பரிசு பெற்ற என்னுடைய சிறுகதைதான்.

என் மனதுக்குள்ளும் ஒரு படைப்பாளி உருவாகக் காரணம் ஏழாம் வகுப்பு படிக்கும் வயதில் ஜென்டில்மேனாக வந்த ஷங்கர்தான்.

ஷங்கர் மற்றும் ஷங்கர் குடும்பத்தாருக்கு என்னுடைய பொங்கல் நல்வாழ்த்துகள்.
******
இந்தக் கடிதம் முழுவதும் புகழ்பாடு புராணமாகவே இருக்கிறதே என்று நீங்கள் யோசிக்கலாம். ஒருவர் செய்த தவறுகளை அழுத்தமாக சுட்டிக்காண்பித்து அவர்கள் மீண்டும் அப்படி செய்யத்தூண்டுவது ஒரு வகை என்றால் அவர்களிடம் உள்ள நல்ல விஷயங்களை மட்டும் சொல்லி அவர்களுக்கு உற்சாகத்தை தர நினைப்பது இன்னொரு வகை. நானூறு நல்ல விஷயத்தை விட்டுவிட்டு ஒரு தவறை மட்டும் விமர்சித்தால் அதை விடப் பெரிய தவறு எதுவும் இருக்க முடியாது. முதலில் சில முறை நல்லதை மட்டும் எடுத்து சொல்லலாம். அப்போதும் மாறவில்லை என்றால் விமர்சனத்தை

அழுத்தமாகவே செய்யலாம்.

சிறு குழந்தைகளாக இருந்தாலும் பெரியவர்களாக இருந்தாலும் ஒரே ஒரு தவறு மட்டும் பூதாகரமாக்கிப் பார்க்கப்படும்போது நான் அப்படித்தான் செய்வேன் என்ற எண்ணம் எழுவதை தவிர்க்கமுடியாது.

இயகுநர் ஷங்கரின் இணையதளத்துக்கு இந்த கடிதத்தை அனுப்பியிருக்கிறேன்.பகுதியாகவோ முழுவதுமாகவோ வெளிவருகிறதா இல்லையா என்று பார்க்கலாம்.