Search This Blog

சரண் எழுதி பத்திரிகைகளில் பிரசுரமானவை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சரண் எழுதி பத்திரிகைகளில் பிரசுரமானவை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 4 மார்ச், 2010

வராக்கடன் திடீரென திரும்பக் கிடைத்தால்...

வராது என்று முடிவு செய்து நஷ்டக்கணக்கில் எழுதிய பணம் திரும்ப வசூலானால் அதை லாபம் என்று குறிப்பிட்டுதான் வரவு வைப்பார்கள்.எனக்கும் அவ்வப்போது அந்த நிலை வருவதுண்டு.

சில ஆண்டுகளுக்கு முன்னால் பதினைந்து கோயில்களுக்கு சென்று ஓரளவு தலபுராணங்களை சேகரித்தேன்.அவை அவ்வப்போது சில பத்திரிகைகளில் பிரசுரமானதும் உண்டு.அப்படி நான் மொத்தமாக தினகரன் ஆன்மீக மலருக்கு அனுப்பியவைகளில் ஐந்து மட்டும் 2008ல் மூன்று மாதங்கள் பிரசுரமாயின.

பிறகு அவ்வளவுதான் என்று நான் நினைத்திருந்தபோது தினகரன் குழுமத்தில் இருந்து வெளிவரும் ஆன்மிக மாத இதழில் இதுவரை மூன்று தல வரலாறுகள் பிரசுரமாயிருப்பது வராக்கடன் வசூலான கதைதானே.

இங்கே இருப்பது மார்ச் 2010 இதழில் பிரசுரமான கட்டுரை.

ஆனந்தவிகடன் மாணவர் பத்திரிகையாளர் திட்டத்தில் கலந்து கொள்வதற்காக யாஷிகா கேமராவை வைத்து புகைப்படங்கள் எடுத்தேன்.அப்போதுதான் அந்த பதினைந்து கோயில்களையும் பதிவு செய்யும் வாய்ப்பு கிடைத்தது.
(படத்தின் மீது க்ளிக் செய்தால் தெளிவாகப் படிக்கலாம்.)இதே கட்டுரை பிறகு காலைக்கதிர் நாளிதழின் இணைப்பாக வெளிவரும் ஆன்மிககதிர் இதழிலும் வேறு வடிவில் பிரசுரமாகியிருந்தது.தினமலர் இணையதளத்திலும் நான் அனுப்பிய தகவல்கள்தான் இடம்பெற்றிருக்கின்றன.(மூலவருடைய புகைப்படத்தைப் பார்த்தால் தெரியும்.)  ஆனால்  copyright தினமலருக்காம்.அது சரி...பொது வாழ்வில் இதெல்லாம் சாதாரணமப்பா...

அமுதசுரபியில் முத்திரைக்கதை, தமிழ்நாடு அரசு குழந்தைத்தொழிலாளர் மறுவாழ்வு மையத்தின் சிறுகதைப்போட்டியில் முதல்பரிசு,தினமலர் டி.வி.ஆர் நினைவுச் சிறுகதைப்போட்டியில் இரண்டு முறை ஆறுதல்பரிசு - இவை உட்பட பத்திரிகைகளில் பிரசுரமான சில படப்புக்களை திருவாரூர் டாக்கீஸ் வலைப்பூவில் வைத்திருக்கிறேன்.

செவ்வாய், 5 ஜனவரி, 2010

கேஸ் விநியோகம் முறைப்படுத்தப்படுமா?

கிராமப்புறங்களில் கேஸ் பயன்பாட்டை அதிகரிக்கும் வகையில் புதிய திட்டத்தை செயல்படுத்தப்போவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இது வரவேற்கக்கூடிய திட்டம்தான் என்பதில் சந்தேகமே இல்லை. ஆனால் ஏற்கனவே கேஸ் இணைப்புப் பெற்ற ஏழை மற்றும் நடுத்தர மக்கள் ஒவ்வொரு முறையும் சிலிண்டர் பெறுவதற்குள் மிகவும் அவதிப்படுகிறார்கள்.


வசதி படைத்தவர்கள் அதிக பணம் செலவழித்து கள்ள மார்க்கெட்டில் சிலிண்டர்களைப் பெற்று விடுகிறார்கள். வாகனங்கள், உணவு விடுதிகள் ஆகியவற்றின் பயன்பாட்டுக்கும் வீடுகளுக்குச் செல்ல வேண்டிய சிலிண்டர்கள்தான் அதிகமாக முறைகேடாக பயன்படுகின்றன என்பது ஊரறிந்த ரகசியம்.

ஒவ்வொரு கேஸ் ஏஜென்சிக்கும் தினசரி எவ்வளவு லோடு வருகிறது. அவை முன்பதிவு செய்யப்பட்ட வரிசைப்படிதான் வழங்கப்படுகிறதா என்ற விவரங்கள் வெளிப்படையாக இல்லாததுதான் இந்த மாதிரியான முறைகேடுகளுக்கு முக்கியக் காரணம்.

எவ்வளவோ விஷயங்களுக்கு கோடிக்கணக்கில் செலவழிக்கும் அரசு, இணையதளம் மூலம் எவ்வளவு சிலிண்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளது என்ற விவரங்களை வெளிப்படையாக்கும் வசதியை ஏற்படுத்தினால் இந்த முறைகேடுகள் இருக்கும் இடம் தெரியாமல் போய்விடும்.

ஒவ்வொரு ஏஜென்சியிலும் அன்றைய ஒதுக்கீடு யார் யாருக்கு என்ற விவரத்தை அறிவிப்புப் பலகையில் ஒட்டிவைக்கும்படி செய்தாலும் நல்ல பலன் தரும். இது மிகவும் எளிமையான, அதிகம் செலவு வைக்காத நடைமுறை. சம்மந்தப்பட்ட அதிகாரிகள் இதைச் செய்வார்களா?

வெள்ளி, 1 ஜனவரி, 2010

புதிய தலைமுறை 07.01.2010 தேதியிட்டு இன்று 01.01.2010 வெளிவந்த இதழில் என்னுடைய வாசகர் கடிதம்.

வெறும் உணர்ச்சிவசப்பட்ட வாதமாக, நடைமுறைச் சிக்கல்களை மூடிமறைக்கும்விதமாக இல்லாமல், உண்மை பேசியது ஓட்டுநர்கள் வேலைநிறுத்தம் விவாதம். விதிகள் நிர்ணயித்த அளவில் மட்டுமே பிள்ளைகளை ஏற்றிச்செல்ல வேண்டும் என்றால் ஒரு குழந்தைக்கு குறைந்தபட்சமே எழுநூற்று ஐம்பது ரூபாய் ஆகும் என்ற நிஜம் வெற்று வாதத்தில் ஈடுபட்டவர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும்விதமாகத்தான் இருக்கும்.


இந்தக் கருத்து இருதரப்பு வாதங்களிலும் இடம்பெற்றதை வைத்தே பிரச்சினையின் ஆணிவேரை நேருக்கு நேர் சந்திக்க அனைவரும் அஞ்சுவதை உணரமுடிகிறது. இந்தச் சிக்கல்களைத் தீர்க்க, நகரங்களில் பத்து நிமிடங்களுக்குள் நடந்து செல்லும் தொலைவிலும், கிராமங்களில் அதிகபட்சம் இரண்டு கிலோமீட்டர்  தொலைவிலும் பள்ளிகளில் தரமான கல்வி கிடைக்கவேண்டும். இதன்மூலம் குழந்தைகளுக்கு பயண நேரம் மீதமானால் அவர்கள் திறன் கூடுதலாகும்.விளையாட நேரம் கிடைத்தால் ஆரோக்கியம் அதிகரிக்கும்.

******

மேலே உள்ள கடிதம்தான் பிரசுரமானது. பதிவில் இடம்பெற்றுள்ள இதழிலும் நான் எழுதிய விமர்சனக்கடிதம் பிரசுரமானது. ஆயிரம் ரூபாய் பரிசையும் பெற்றுத்தந்தது.

வீட்டு வேலை செய்பவர்களும் மனிதர்களே!


என் நண்பரின் வீட்டுக்குச் சென்றிருந்தேன். அவர்கள் குடும்பத்துடன் உணவருந்திவிட்டு எழுந்த நேரம் அது.

அனைவரும், தட்டில் ஒதுக்கப்பட்டிருந்ததை எல்லாம், தனியே ஒரு குப்பைத் தொட்டியில் போட்டுவிட்டு, தட்டை லேசாக கழுவி, பாத்திரம் தேய்க்கும் இடத்திலேயே போட்டுவிட்டு வந்தனர்.

நான் காரணம் கேட்டேன்.

பாத்திரம் தேய்க்க ஆள் வெச்சிருக்கோம். அப்படி இருந்தாலும், நாம் தட்டுல மிச்ச மீதியை அப்படியே வெச்சு காயவிட்டுட்டா, தேய்க்கும்போது சிரமமாகவும், கழுவி ஊற்றும்போது, குழாயில் அடைப்பும் ஏற்பட்டு, நாற்றம் அடிச்சு, நமக்கே அதிக வேலை வைக்கலாம்.

அது மட்டுமில்லாம அவங்க என்ன சூழ்நிலையால வீட்டு வேலைக்கு வர்றாங்கன்னு சொல்ல முடியாது. நம்ம எச்சிலை வழிச்சு எடுத்துப் போடும் போது, அவங்க மனசு வேதனைப் படலாம்.

எல்லாத்துக்கும் மேல், வீட்டு வேலை செய்யறவங்க வராவிட்டாலும், அநாவசியமான டென்ஷன் இருக்காது...என்று விளக்கம் கொடுத்து என்னை வியக்க வைத்துவிட்டார். உங்களுக்கு ஆச்சர்யம் வரலையா?

வாழ்வு கொடுத்த உண்மை! - வரலாறு ரொம்ப முக்கியம் நண்பர்களே...


சில தரகர்கள் தங்களின் கமிஷனுக்காக வாயில் வந்த பொய்களை எல்லாம் அள்ளி விடுவது வழக்கம். சில ஆண்டுகளுக்காக நான் வேலை விஷயமாக மதுரையில் தங்கியிருந்த போது அந்தப் பகுதி இளைஞனுக்கு பெண் பார்த்தனர்.

சொந்தமாக லோடு வேன் இருக்கிறது, பிளஸ்டூ வரை படித்திருக்கிறான்...என்றெல்லாம் பெண் வீட்டாரிடம் பொய் சொல்லியிருக்கிறார் தரகர்.

இந்தப் பொய்களை அப்படியே, மெயின்டெயின்  செய்ய மாப்பிள்ளையின் பெற்றோரும் முடிவு செய்து விட்டார்கள். ஏற்பாடுகளும் நிச்சயதார்த்தம் வரை போய் விட்டது.

தரகர் சொன்ன பொய்கள் மாப்பிள்ளைக்குத் தெரிந்ததும் நேராக பெண்ணின் வீட்டிற்கே போய், நான் பத்தாவது பெயில். சம்பளத்திற்குதான் லோடு வேன் ஓட்டுகிறேன். என் உழைப்பின் மேல் நம்பிக்கை இருக்கிறது. சில ஆண்டுகளில் சொந்தமாக வண்டி வாங்கிவிடுவேன். உங்களுக்கு விருப்பம் இருந்தால் திருமணம் செய்து கொடுங்கள்!...என்று சொல்லிவிட்டு வந்திருக்கிறான்.

மாப்பிள்ளை உண்மையை சொன்னதால் பெண் வீட்டில் அனைவருக்கும் மனப்பூர்வ சம்மதம். திருமணம் நல்லபடியாக நடந்தது. சமீபத்தில்தான் அந்த இளைஞர் பழைய சின்னயானை ஒன்றை சிறிது தொகை கடனுடன் வாங்கியிருக்கிறார்.

ஆனால் உலக வரலாறு மிகவும் முக்கியம்.பெண் வீட்டார் சம்மதமும் சரி, மாப்பிள்ளை மினி லோடு வேன் வாங்கியதும் சரி.இது விதிவிலக்குதான் நண்பர்களே...

உண்மையில் பொருளாதார பாதுகாப்பை மிகப் பெரிய அளவில் எதிர்பார்க்கிறார்கள். இதை முழுவதும் தவறு என்று சொல்ல முடியாது.

ஆனால் ஒரு குடும்பத்தின் பொருளாதார நிலை என்பது பிறந்த குழந்தையிலிருந்து இருபத்தைந்து வயது வாலிபன் என்ற அளவில் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். குடும்ப சொத்து, பார்க்கும் பணி என்ற பல காரணங்கள் இருக்கும்.

பொருளாதார நிலை எப்படி இருந்தாலும் அந்த அளவில் இருந்து படிப்படியான வளர்ச்சிதான் பெரும்பாலும் சாத்தியமாகும். இதைப் புரிந்து கொள்ளாமல் மிகப்பெரிய ஆடம்பரத்துக்கு உடனடியாக ஆசைப்படுவதால்தான் தொண்ணூறு சதவீதப் பிரச்சனை.

ஒரு வயதுக் குழந்தை திடீரென இருபத்தைந்து வயது வாலிபனாவது சாத்தியமா. முடியாது. ஆனால் உரிய காலகட்டத்தில் அது சாத்தியம்.

இந்த உண்மையைப் புரிந்து கொண்டால் குடும்பம் மகிழ்ச்சியாக இருக்கும்.

பொருளாதார சிக்கல் காரணமாகத்தான் குடும்பத்தில் 95 சதவீத பிரச்சனைகள் ஏற்படுகின்றன. - இதை நான் சொல்லவில்லை. முருக பக்தரான கிருபானந்த வாரியார் அவர்கள் கூறிய பொன்மொழி.

சாலைப்பாதுகாப்பு வாரம் (01.01.2010 - 07.01.2010) ஒவ்வொரு ஆண்டும் இதே கதைதான்...

ஆனால் சாலையில் பாதுகாப்பு மட்டும் இன்னும் இல்லை.மது, புகை இது போன்ற தீய பழக்கங்களால் அந்த நபரும், அவர் குடும்பத்தாரும் மட்டுமே அதிகமாக பாதிக்கப்படுவார்கள். வீடு இல்லாத கொடுமையால் சாலை ஓரத்தில் படுத்து தூங்கும் மக்கள் மீது குடித்துவிட்டு கார் ஏற்றிக் கொல்லும் பணம் படைத்தவர்கள் எவ்வளவோ பேர் இருக்கிறார்கள்.

ஏன்? ஒவ்வொரு மனிதர்களுமே சாலைவிதியைக் கடைப்பிடிக்காவிட்டால் அவருக்கு மட்டுமின்றி அவருக்கு சம்மந்தமே இல்லாத, சாலை விதியை முறையாக கடைப்பிடிப்பவர்களும் பலியாகும் கொடுமையும் உண்டு.

இந்த அவலங்களை ஒரே பதிவில் சொன்னால் எழுதும் எனக்கும் சோர்வாகிவிடும். படிக்கும் உங்களுக்கும் தூக்கம் வந்து விடும். எனவே அவ்வப்போது ஒவ்வொரு தகவல்களை சொல்கிறேன்.

இன்று, சாலைப் பாதுகாப்பு வாரத்தில் வாகன முகப்பு விளக்குகளின் மையத்தில் ஸ்டிக்கர் ஒட்டும் பண்டிகையைப் பற்றி ஒரு சிந்தனை.

நம் நாட்டில் ஒவ்வொரு ஆண்டும், சாலை பாதுகாப்பு வாரவிழா கொண்டாடுவார்கள். அப்போது காவல்துறையினர், போக்குவரத்து அதிகாரிகள், சில வாகனங்களின் முகப்பு விளக்கின் மையத்தில் கருப்பு ஸ்டிக்கர் ஒட்டுவர்.

சில நாட்களிலேயே அந்த வாகனங்களின் விளக்குகளில் ஸ்டிக்கர்கள் காணாமல் போய், எதிரில் வரும் வாகன ஓட்டிகளின் கண்களைக் கூசச் செய்து, விபத்துக்களை வரவேற்கத் துவங்கி விடும்.

ஒவ்வொரு வாகனத்தையும் அவ்வப்போது கண்காணித்து அபராதம் விதிப்பது நடக்காத காரியம். ஏனென்றால் காவல் துறையினருக்கு உரிய பணிச் சுமை அப்படி.

முகப்பு விளக்குகளுக்கு கண்ணாடியைத் தயார் செய்யும் போதே, உரிய இடத்தில் கருப்பு வண்ணம் இடம் பெறும் வகையில் தயாரிக்கும்படி சட்டத் திருத்தம் செய்யலாம்.

சாலையில் புதியதாக ஓடத் துவங்கும் எல்லா வாகனங்களின் முகப்பு விளக்குகளிலும், கருப்பு ஸ்டிக்கர் தானாகவே இடம் பெற்றுவிடும்.

சாலை விபத்துக்களைத் தடுக்க இதுவும் ஒரு வழிமுறைதான். இதை நடைமுறைப்படுத்தி, விலைமதிப்பற்ற மனித உயிர்களைக் காக்க அரசு முன் வருமா?

வர்றமாதிரி தெரியலையே.

ஒரு சவரன் தங்க நகையின் விலை நாலாயிரம் ரூபாய் அளவில் இருந்து பத்தாயிரம் வரை திடீரென விலை உயர்ந்த காலகட்ட அனுபவம்


நீங்கள் அடகு வைத்த நகையை மீட்காததுடன், நகைக்கான வட்டியையும் ஒழுங்காக கட்டவில்லை. அதனால் உங்கள் நகையை ஏலத்தில் விட்டுவிட்டோம். எங்களுக்கு உரிய தொகை போக மீதிப்பணம் நூற்றி அறுபது ரூபாயை வந்து பெற்றுச்செல்லவும்...என்று என் நண்பருக்கு அடகுக் கடையில் இருந்து நோட்டீஸ் வந்தது.

தங்கத்தின் விலை சவரனுக்கு நாலாயிரம் ரூபாயிலிருந்து பத்தாயிரம் வரை கிடுகிடுவென உயர்ந்த காலகட்டம்.

அடகு கடைக்கு நேரே சென்ற நண்பர், எனக்கு தெரியாம நகையை எப்படி ஏலத்தில் விடலாம்.? என்று கேட்டிருக்கிறார்.

அதற்கு, அடகு கடைக்காரர், ஏலம் விடப்போறோம்னு உங்களுக்கு இரண்டு முறை கடிதம் போட்டோம். அது உங்களுக்கு கிடைக்கலைன்னா, நாங்க பொறுப்பாக முடியாது. வேணும்னா, நூற்றி அறுபது ரூபாயை வாங்கிட்டுப் போங்க. இல்லன்னா, அதுவும் கிடையாது...என்று அலட்சியமாக பேசியிருக்கிறார்.

உடனே நண்பர், சரி...இந்தப் பணத்தையும் நீங்களே வெச்சுக்குங்க. எனக்கும் சட்டம் தெரியும். நகையை எப்படி வாங்கணுமோ, அப்படி வாங்கிக்குறேன். கலெக்டர்கிட்ட நேரே போய் புகார் செய்துட்டு, போலீசோட வர்றேன்...என்று சொன்னதோடு, விறுவிறுவென கடையை விட்டு வெளியே வந்திருக்கிறார்.

அவ்வளவுதான்...அடகுக்கடைக்காரருக்கு முகம் பேயறைந்ததுபோல் ஆகிவிட்டதாம்.

சார்...அங்கெல்லாம் போகாதீங்க. உங்க நகையை இன்னும் ஏலத்துல விடலை. அசலையும், வட்டியையும் கொடுத்து மீட்டுட்டு போங்க!. என்று சொல்லியிருக்கிறார்.

நண்பர் வேறு வகையில் பணம் ஏற்பாடு செய்து, உடனடியாக நகையை மீட்டு விட்டார்.

அவரது நகை, அடகு வைத்தபோது இருந்த மதிப்பை விட ஆறாயிரம் ரூபாய் அதிகரித்து இருந்ததை மறைத்து, பழைய மதிப்புக்கே ஏலம் விட்டதாக பொய் சொல்லி ஏமாற்றப்பார்த்திருக்கிறார்.

நண்பர் தைரியசாலியாக இருந்ததால், அவரது நகை திரும்பவும் கிடைத்தது. விவரம் புரியாத ஆசாமி என்றால் ஆகாத காரியத்துக்கு கொடுத்த லஞ்சம்தான்.

இது போன்ற நிறைய சம்பவங்கள் கேள்விப்பட்டேன். பல இடங்களில் மகளிரும் துணிச்சலாக தங்கள் நகையை மீட்டிருக்கிறார்கள்.

இப்படி ஏமாற்ற நினைப்பவர்கள் எந்த அசட்டு தைரியத்தில் இப்படி எல்லாம் செய்கிறார்கள் என்று யோசித்துப் பார்த்தேன்.

மரத்தின் மீது கல்லை விட்டெறிவோம். பழம் கிடைத்தால் எடுத்துக்கலாம். கல்லு வந்தா எஸ்கேப். இதுதான் அவங்க கொள்கையா இருக்குமோ?