Search This Blog

பயண அனுபவம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பயண அனுபவம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 26 அக்டோபர், 2017

கண்ணா... சிங்கம் சிங்கிளாத்தான் வரும்...


கண்ணா... சிங்கம் சிங்கிளாத்தான் வரும்... இந்த மாதிரி டயலாக் எல்லாம் சினிமாவுக்கு ஓ.கே... ஆனா சிங்கிளா டிராவல் பண்ணினா எவ்வளவு அக்கப்போர் என்று இப்போதும் தனியாக பயணம் செய்து அவதிப்படுபவர்களுக்கு தெரியும். தனியா போனா யாரும் அடிக்க மாட்டாங்க... உதைக்க மாட்டாங்க... ஆனா "எக்ஸ்க்யூஸ்மீ... சாரி ஃபார்த டிஸ்டபன்ஸ்... கொஞ்சம் மாறி உட்காருரீங்களா?" இப்படி சிலர் கேட்பாங்க. இது முதல் ரகம்.



இன்னும் சிலர் "எல்லாரும் இப்படி தனித்தனியா உட்கார்ந்துகிட்டா நாங்க எங்கதான் உட்காருறது... மாறி உட்காருங்க" என்று அதிகார தோரணையுடன் சொல்வார்கள்... லக்கேஜ் அதிகமா இருக்கும்போது பரவாயில்லை. கையில ஒரு சின்ன பை தவிர வேற எதுவும் இல்லாதப்ப கூட இப்படித்தான் நடந்துக்குவாங்க. (நானெல்லாம் லக்கேஜ் அதிகமா இல்லாத நேரத்துல இப்படி சேர்ந்துதான் உட்காரணும்னு அடம் பிடிக்கிறதில்லை.)



நாம் அப்படியே பார்வையை ஓட்டினோம் என்றால் இரண்டு மூன்று இடங்களில் பெண்கள் பக்கத்தில் ஒரு இருக்கை காலியாக இருக்கும். அங்க அவர் மனைவியை உட்கார சொல்லிட்டு, இவர் நம்ம பக்கத்துல உட்காரலாம். ஆனா செய்ய மாட்டாங்க. திருமணம் செய்யும்போது எந்த சூழ்நிலையிலும் ஒருத்தருக்கொருத்தர் துணையா இருப்போம்னு புரியாத பாஷையில புரோகிதர் சொல்லிக்கொடுத்த சங்கல்பத்தை பிரிக்க வந்த ஆளாவே நம்மள பார்ப்பாங்க. இது ரெண்டாவது ரகம்.





இன்னும் சிலர் இருப்பாங்க. நேரே கண்டக்டர்கிட்ட போய், "சார்... நான் நாகர்கோவில் போறேன்... கோயம்புத்தூர் போறேன்... அவ்வளவுதூரமெல்லாம் தனித்தனியா உட்கார்ந்து போக முடியாது என்று முறைப்பார்கள். உடனே கண்டக்டர் வந்து பார்த்து தனியாக இருக்கும் பாச்சுலர்சைதான் நகர்த்த பார்ப்பார்.





2010ஆம் ஆண்டில் சீசன் இல்லாத நேரத்தில் குற்றாலம் சென்றபோது வழியில் எனக்கு ஏற்பட்ட பயண அனுபவங்களை அப்போது வலைப்பூவில் பதிவிட்டிருந்தேன். இப்போது அவற்றை நான் பேசி வீடியோவாக பதிவிட்டிருக்கிறேன்...

வெள்ளி, 16 நவம்பர், 2012

சிங்கிளாக பயணம் செய்வதில் சில சிக்கல்கள்



சென்னை உள்ளிட்ட பெரிய நகரங்களில் பணிபுரிவதற்காக வந்து தங்கியிருப்பவர்கள் தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை நாட்களில் பிறந்து வளர்ந்த ஊர்களுக்கு சென்று மறுபடியும் திரும்புவதை வாழ் நாள் சாதனையாகவே கல்வெட்டில் செதுக்கி வைக்கலாம். இந்த ஆண்டு தீபாவளிக்கு மறுநாள் சென்னையில் இருந்து திருவாரூருக்கு வந்திருந்த ஐ.டி.கம்பெனி ஆபீசராக (?!) வேலை பார்க்கும் நண்பன் செல்போனில் "அய்யய்யோ...டிக்கட்டை கேன்சல் செஞ்சுடு"ன்னு அலறினான்.

"இது மாதிரி பண்டிகைக்கு மறு நாள் பஸ், ரயில் எதுலேயுமே டிக்கட் கிடைக்குறது ரொம்ப கஷ்டம். நீ ஏன் டிக்கட்டை கேன்சல் செய்ய சொல்ற?" என்றேன்.

"பஸ்சுல டபுள் பர்த்துல புக் பண்ணியிருக்குற விஷயத்தை இப்பதான் சொன்னான். பக்கத்துல ஜோடி சேர்றவன் ஒழுங்கான ஆளா இருந்தா பரவாயில்லை. அவன் குடிச்சுட்டு புரள்ற ஆளா இருந்தா நான் செத்தேன். அதுக்கு நான் மயிலாடுதுறை, சிதம்பரம், புதுச்சேரியில பஸ் மாறி மாறி தூக்கம் கெட்டு ஊருக்கு போயிடுவேன்.

இன்னொரு பிரச்சனை ரயில்ல பர்த்துன்னா பக்கவாட்டுல மட்டும்தான் ஆடும். ஆனா பஸ் எட்டு திசையிலயும் அலசிதான் நம்மளை ஊருக்கு கொண்டு போய் சேர்க்கும்.'' என்று அரைமணி நேரம் லெக்சர் அடித்தான்.

தனியா பயணம் பண்ணினா ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு பிரச்சனை. அதுல முக்கால்வாசி எல்லாருக்கும் ஒரே மாதிரி பிரச்சனைதான் வரும் போலிருக்கேன்னு என் மனசுல தோணுச்சு. சிங்கம் சிங்கிளா போனா எவ்வளவு அக்கப்போர் அப்படின்னு 2010ல வலையேத்துன பதிவை தூசிதட்டி இங்க கொடுத்துட்டேன்.
**********************************
சிங்கம் தனியா போய்தான் அதிரவைக்கும்னு சொல்றாங்க. ஆனா நிஜ வாழ்க்கையில சிங்கிளா இருந்தா பல இம்சைதான் வரும். எல்லாத்தையும் சொல்ல நேரம் இல்லை.அதனால சில வில்லங்கம் மட்டும் உங்கள் பார்வைக்கு.

ஜூன் முதல்வாரம் குற்றாலத்துல நெருங்கிய உறவினர் கிரஹப்பிரவேச விழா வெச்சிருந்தார். பாட்டி காலமானதும் ஏப்ரல் இறுதியில இருந்து மே மாசம் முழுவதும் திருவாரூர்-பரமக்குடி பயணமாவே இருந்ததால அம்மாவை விட்டுட்டு நான் மட்டும் தனியே குற்றாலத்துக்கு பயணம்.

விசேஷகாலமா இருந்ததால இரவு நேரத்துல தஞ்சாவூர்ல இருந்து மதுரை போறவரை இடம் கிடைக்கிறது கஷ்டம். அங்கிருந்து செங்கோட்டை போற பஸ்சுலயும் சூழ்நிலை எப்படி இருக்குன்னு தெரியாம ரிஸ்க் எடுக்க விரும்பலை.

S.E.T.C பஸ்ல டிக்கட் ரிசர்வ் பண்ண போனேன். ஆறாம் நம்பர் இருக்கையே கிடைச்சது. பதினோரு மணி நேர டிராவல்ல குறைஞ்சது ரெண்டு மணி நேரமாச்சும் தூங்கலாம்னு நம்பி பஸ்சுல ஏறுனேன்.

நைட் டின்னருக்காக(?!) தஞ்சாவூர்லயே கிட்டத்தட்ட ஒருமணி நேரம் வெயிட்டிங்.


தஞ்சை நகரைக் கடந்ததும் ஓரமா வண்டி நின்னுச்சு. என்னன்னு பார்த்தா கண்டக்டர், டிரைவர் சீட்டுல உட்கார்ந்து ஓட்ட ஆரம்பிச்சுட்டார். சிக்கன நடவடிக்கையால ஹெவி டிரைவிங் தெரிஞ்ச ஆளைத்தான் கண்டக்டரா போட்டுருக்காங்கன்னு அறிவுக்கு தெரிஞ்சாலும் மனசு அந்த இளைஞரை கண்டக்டராவே பார்த்துச்சு. மனசுல நினைவுக்கு வந்த கடவுளை எல்லாம் வேண்டிகிட்டு தைரியத்தை கொண்டுவர முயற்சி செய்தேன்.

அப்புறம் எங்க தூங்குறது?

எக்ஸ்பீரியன்ஸ் ஆட்கள்ல பலர், கியர் பாக்ஸ் எக்கேடு கெட்டுப்போனா என்னன்னு கிளட்சை ஒழுங்கா பயன்படுத்தாமயே கியர் மாத்துவாங்க. ஆனா இந்த கண்டக்டர் ரொம்ப சரியா கிளட்சை யூஸ் பண்ணி கியர் மாத்தி பஸ்சை இயக்குனார்."சரி...இவர், வேலைக்கு சேர்ந்து ரொம்ப நாள் ஆகலை போலிருக்கு."அப்படின்னு ஒரு எண்ணம்.

மதுரை வரைக்கும் எனக்கு தூக்கமே வரலை. மாட்டுத்தாவணி பஸ்ஸ்டாண்டுலேருந்து கிளம்பினதுமே தூங்கலாம்னு பார்த்தா பஸ் ரிங் ரோடு போகாம யானைக்கல், வடக்குமாரட்வீதி வழியா பழ மார்க்கெட்டுக்கு போனது. கண்டக்டர் கீழே இறங்கிப் போய் பழங்கள் வாங்கிட்டு வந்தார்.(அவங்களுக்குதான்.)

அப்படியே பெரியார் பேருந்து நிலைய பகுதி, பழங்காநத்தம், திருப்பரங்குன்றம் சாலை வழியா போய் திருமங்கலத்தை நெருங்குனுச்சு. சரி...இனிமே வேடிக்கை பார்க்க எதுவும் இல்லைன்னு நினைச்சு கண்களை மூடி தூங்க முயற்சி செஞ்சேன்.

சில நிமிஷங்கள்தான்.ஒரு அவலக்குரல். நான் அப்படியே ஷாக் ஆயிட்டேன்.(இதை மட்டும் வடிவேலு மாடுலேஷனில் படிக்கவும்.) வேற ஒண்ணுமில்லைங்க. அஞ்சு வரிசைக்குப் பின்னால உட்கார்ந்துருந்த ஒருத்தர் மூணு வரிசை ஆளுங்க மேல வாந்தி எடுத்துட்டார். சாதாரணமாவே எனக்கு பேருந்துப் பயணத்தின்போது வாந்தி வர முயற்சிக்கும். நான் வாயை வயித்தைக் காயப்போட்டு சமாளிச்சுடுவேன்.(இதனாலேயே உடம்புல தெம்பு இல்லாம பர்சனாலிட்டி கொஞ்சம் குறையும்.வேற வழி?)

ஆனா அந்த ஆள் ஃபுல் மப்புல சைடு டிஷ்ஷா என்ன எழவைத்தின்னாரோ? அது எதுக்குமே அவரோட வயித்தைப் புடிக்கலை.(பஸ் மேல என்ன பாசமோ) எல்லாம் வெளியில வந்துடுச்சு.

ஆறு பேர் சட்டையை கழட்டிட்டாங்க. வாந்தி எடுத்தவரை அடிக்க இல்லைங்க...இந்த நாத்தம் தாங்காமதான். அப்புறம் சாலையோர டீக்கடையில பஸ்சை நிறுத்தி காசு கொடுத்து நாலு குடம் தண்ணி வாங்கி பஸ்சை அலசி விட்டார் கண்டக்டர். நடக்குறது,பறக்குறது,நீந்துறதுன்னு என்னென்ன அவரு வயித்துக்குள்ள இருந்துச்சோ?அவ்வளவு சீக்கிரம் நாத்தம் போயிடுமா?

கண்டக்டரோட கைக்காசுல சாய்பஜன் ஊதுபத்தி, கம்ப்யூட்டர் சாம்பிராணி எல்லாம் வாங்கி கொளுத்தி வெச்சார். அப்புறம் கொஞ்சம் பரவாயில்லை. ஒரு முக்கால் மணி நேரம் அவுட்.

பஸ் கிளம்புனதும் அப்பாடா, இனி இல்லை தொல்லைன்னு நினைச்சா மறுபடி ஒரு நாத்தம்.

எனக்கு பக்கத்துல உட்கார்ந்துருந்தவர், செண்ட் அடிச்சார். அய்யய்யோ..இதுக்கு அந்த வாந்தி நாத்தமே பரவாயில்லையேன்னு மனசுக்குள்ளயே புலம்புனேன். வேற என்ன பண்றது?

நானூறு கிலோமீட்டர் தொலைவா இருந்தாலும் இரவு நேரப் பயணத்துல சில சவுகர்யங்கள் இருக்கு. வெயில் தெரியாது. சராசரியா பகல் நேரத்தை விட இரவு நேரத்துல பத்து கிலோ மீட்டர் வேகம் அதிகமாவே இருக்கும்.தென்காசி பகுதியில ரயில்வே மேம்பாலம் கட்டுறதால செங்கோட்டை போற பஸ் எல்லாமே இலஞ்சி சந்திப்போட வேற வழியா போயிடுச்சு.


அதனால குற்றாலம் போக வேண்டிய நான் இலஞ்சியிலேயே இறங்கினேன். நிறைய தமிழ் சினிமாவுல வர்ற மாதிரியே நான் இறங்கின இடத்துலயும் ஒரே ஒரு டீக்கடை மட்டும் இருந்துச்சு.

அதிகாலை நாலு மணியா இருந்தாலும் பங்காளி ஒருத்தர் டூவீலரை எடுத்துகிட்டு வந்துட்டார்.அவரோட போய் கிரஹப்பிரவேச வீட்டுக்குப்போய் குளிச்சி(நம்புங்கப்பா) மேக்கப் போட்டு, விழாவுல கலந்துகிட்டு, வயித்தை நிரப்பின பிறகு பார்த்தா மணி ஆறே முக்கால்தான் ஆனது.

அண்ணே...அப்படியே எல்லா அருவிக்கும் போய் ஒரு குளியல் போட்டுட்டு வந்துடுறேன்னு சொன்னேன். இன்னொரு பங்காளியும் வண்டியில என்னைய அழைச்சுட்டு போனார்.

பிரதான அருவி தெரியுற தூரத்துலயே நிறுத்திட்டு,"தம்பி...அதான் அருவி...பார்த்து நல்லா கும்பிட்டுக்க..."அப்படின்னு சொன்னார்.

எனக்கு ஷாக். (இதெல்லாம் ரெண்டரை வருஷத்துக்கு முன்னால எழுதிய பதிவு. அப்போ அடிக்கடி ஷாக் அடிக்கும்.)

"ஏண்டா டேய்...சீசன் ஆரம்பிக்கிறதுக்கு முன்னால வந்தா இப்படி நின்னு கும்பிட்டுட்டுதான் போகணும். அடுத்து ஐந்தருவிக்குப்போவோம்...இப்ப வீட்டுல குருக்கள், கோமியம் தெளிச்சாரே...அந்த மாதிரி ஏதாச்சும் செஞ்சுக்க முடியுதான்னு பார்க்கலாம்னு சொன்னார்.

நீங்க தண்ணியே தெளிக்க வேணாம்னு வீட்டுக்கு வண்டியை திருப்ப சொல்லிட்டேன்.


குற்றாலம் வரைக்கும் போயிட்டு அருவியிலயே குளிக்க முடியலையேன்னு நொந்து போய் வந்தா பாபநாசம் அணைக்குள்ள இருக்குற பாணதீர்த்த அருவியில எக்கச்சக்கமா தண்ணீர் கொட்டுறதைப் பார்த்து என் வயித்து ஹீட் அதிகமானதுதான் மிச்சம்.
*****
சிங்கம் சிங்கிளாத்தான் வரும்...ஓங்கி அடிச்சா ஒண்ணரை டன் வெயிட்...இப்படி எல்லாம் டயலாக்கை ஹீரோ பேசும்போது கேட்க நல்லாத்தான் இருக்கு.

ஆனா தனியா பஸ்சுல பயணம் பண்ணும் போது எவ்வளவு இம்சையா இருக்கு தெரியுமா? நாற்பது ஐம்பது கிலோமீட்டர் தூரம் பயணம் செய்யும்போது கஷ்டம் தெரியாது.

இப்ப நான் போன மாதிரி நானூறு கிலோமீட்டர் வேணாம், நம்ம நாட்டுல பல சாலைகளில் இருநூறு கிலோ மீட்டர் தூரம் பயணம் போறதுக்குள்ளயே நாக்கு வெளியில வந்துடுது.(திருவாரூர் - தஞ்சாவூர் தூரம் 65 கிலோ மீட்டர்தான். ஆனா இந்த தூரம் போறதுக்குள்ளயே ஸ் ஸ் சப்பா...இப்பவே கண்ணைக்கட்டுதேன்னு புலம்ப வேண்டியதுதான்.)

காத்தோட்டமா ஜன்னல் ஓரமா அப்படான்னு போய் உட்கார்ந்துருப்போம்.ரெண்டு லேடீஸ் வந்து,"சார் அங்க மாறி உட்காருங்களேன்."அப்படின்னு ஆரம்பிப்பாங்க.ரெண்டு பேரா போனா இந்த இம்சை இல்லை.

இப்படித்தான் ஒரு தடவை நான் தஞ்சாவூர்லேருந்து திருவாரூர் வரும்போது மாறி உட்கார சொன்ன ஒரு பொண்ணுகிட்ட கோபப்பட்டேன்.

"இப்ப மாறி உட்கார சொன்னீங்கன்னா பின் பக்க கண்ணாடியை உடைச்சுகிட்டு கீழே குதிக்க வேண்டியதுதான்.மாறி உட்கார சொல்லியே டிரைவருக்கு எதிர்ல இருந்த என்னைய பின்பக்க வாசல் வரைக்கும் கொண்டுவந்துட்டீங்க. இப்படியே அடுத்த பஸ்சுக்கு அனுப்பிடலாம்னு பார்க்குறீங்களா?"ன்னு விட்ட சவுண்டுல அந்தப் பொண்ணோட சேர்ந்து கண்டக்டரும் சிரிக்கிறாரு.

இந்தப் பிரச்சனைக்கு தீர்வு, நண்பர்கள் யாரையாவது கூட அழைச்சுட்டுப்போனாத்தான் கிடைக்கும். இன்னும் பெட்டர் ஐடியான்னா அது மனைவியோட பயணம் பண்றதுதான்னு நான் சொல்லுவேன்.(சீக்கிரம் அம்மாகிட்ட சொல்லி பொண்ணு பார்க்க சொல்லணும்.)
******
சிங்கிளா இருந்து சாதிக்கிறது எல்லாம் சினிமா வசனத்துக்குதான் சரியா வரும். குறைந்த பட்சம் இன்னொருத்தர் உதவி இல்லாம பெரும்பாலான காரியங்கள் பெரிய வெற்றி அடையுறது இல்லை.

வில்லன் நடிகர் சொதப்பியிருந்தா கில்லியின் அபார வெற்றியும், சிங்கம் படம் இப்படி பேசப்படுறதும் அவ்வளவா சாத்தியம் இல்லை.
 ******

இப்ப நாங்க திருப்பணியில ஈடுபட்டிருக்குற கோவில் கர்ப்பக்கிரஹ விமான உயரம் சுமாரா இருபத்திரெண்டரை அடி. இதை கட்டி முடிக்கிறதுக்குள்ளேயே எங்களுக்கு நாக்கு தள்ளிகிட்டு இருக்கு. வரும்போது ஸ்ரீவில்லிபுத்தூர் கோபுரதரிசனம் கிடைத்தது. அதைப் பார்த்ததும் நம்ம முன்னோர்களோட திறமையை நினைச்சு ரொம்ப பெருமையா இருந்துச்சு.

பெரியவங்களை மதிக்க மாட்டெங்குறாங்கன்னுங்குறது என்னை மாதிரி யூத்து மேல இருக்குற புகார். நாங்களா ஸ்ரீவில்லிபுத்தூர் கோபுரம் தமிழக அரசின் சின்னமா இருக்குறதை எதிர்க்குறோம்?
***********************

வெள்ளி, 25 டிசம்பர், 2009

இரண்டடிக்கும் குறைவான இடைவெளியில் இளம்பெண் - நிம்மதியான பயணம்...


வெளிநாடு, வெளிமாநிலம் போறவங்க மட்டும்தான் பயணக்கட்டுரை எழுதணுமான்னு ரொம்ப நாளா யோசிச்சுகிட்டே இருந்தேன். ஏற்கனவே ரொம்ப அதிகமா யோசிச்சு முன் தலையில ஒளி பிரதிபலிக்கிறதெல்லாம் வேற விஷயம்.

வெளியூர் போயிருந்த அம்மாவை மதுரைக்கு வர சொல்லிட்டு 24 டிசம்பர் 2009 காலை 5 மணிக்கு நானும் திருவாரூர்ல பஸ்சுக்குள்ள ஏறிட்டேன். ஏற்கனவே இரண்டரை ஆண்டு, ஒன்னரை ஆண்டு இடைவெளியில அவங்களுக்கு கண்புரை அறுவை சிகிச்சை செய்து ரெண்டு கண்ணுக்கும் ஃபோல்டிங் லென்ஸ் வெச்சாச்சு.

இப்ப ஒரு கண்ணுல சின்ன பிராப்ளம். அதுக்காகதான் இந்த மதுரை பயணம். திருவாரூர்ல இருந்து போகும்போது தஞ்சை ரயில் நிலையத்து முகப்புல வெச்சிருந்த ஒரு விளம்பரப் பலகை "கரெக்ட்...விளம்பரம்னா இப்படித்தான் இருக்கணும்." அப்படின்னு வாய்விட்டு சொல்ல வெச்சுதுங்க.

நொடிக்கணக்குல செல்போன் கட்டணப் போட்டி ஆரம்பமானதும் ஒரு நிறுவனம்

"இப்ப எங்க இருக்க?"

"கிளாஸ்ல"

இப்படி சின்ன சின்ன விஷயத்துல சந்தோஷமா பேசுங்கன்னு தொலைக்காட்சிகள்ல கூவுனுச்சு. படிக்கிற புள்ளைங்க வகுப்புல இப்படி பேசுறதை ஊக்குவிக்கும் விதமா இந்த விளம்பரம் இருந்ததால எனக்குப் புடிக்கலை.(உனக்கு பிடிக்கணும்னு எவன் சொன்னான்.)

அதே நிறுவனம்,
***********

"எங்க வரணும்.?"

"ரெண்டாவது பிளாட்பாரத்துக்கு."

**********


"எங்க நிக்கிற?"

"புக் ஸ்டால்ல."

***********

"டிக்கட் கன்ஃபர்ம் ஆயிடுச்சா?"

"இல்ல...வெயிட்டிங் லிஸ்ட்டுதான்."

**********

"எந்த கோச்?"

"S 10"

**********

இப்படி சின்ன சின்ன விஷயத்தை கட்டணம் பற்றி  கவலைப்படாம பேசுங்க...ஏன்னா, இப்ப நீங்க பேசுற நொடிகளுக்கு மட்டுமே கட்டணம். அப்படின்னு விளம்பரம் விளம்பரம் வெச்சிருந்தாங்க.

ஒரு நிறுவனத்தை வளர்க்க விளம்பரங்கள் அவசியமே. அந்த விளம்பரங்கள் மக்களுக்கும் நல்ல திசையைக் காட்டுறதா இருக்கணும்.

நிறுவனத்தோட பேர் என்னன்னுதானே கேட்டீங்க?...நான் எழுதுற பிளாக்குல காசு வாங்காம ஏன் அவங்க விளம்பரத்தைப் போடணும்?

******************

அடுத்து என் கவனத்துல அதிகமா பதிஞ்ச விஷயம் மேலூர் புறவழிச்சாலை. மதுரை - திருச்சி சாலை நான்கு வழிப்பாதையாக்குற வேலை முடியுற நிலையில இருக்கு. ஆனா அதுக்குள்ள சுங்கம் வசூலிக்கிற டோல்கேட் அமைக்கும் பணி நிறைவடைஞ்சு கல்லாப்பெட்டியைத் திறந்து வெச்சுடுவாங்க போலிருக்கு.

அது சரி...இது எந்த நாடு...இந்தியா. ஒருத்தர் பணம் கட்டலைன்னா அடுத்த நாளே ஒரு சேவையை நிறுத்திடுவாங்க. ஆனா நீங்க அதன் பிறகு பணம் கட்டினா கூட ஒரு வாரமோ, ஒரு மாசமோ ஏன் ஒரு வருஷம் கழிச்சு...இல்லன்னா அந்த சேவை கிடைக்காமலேயே கூட போகலாம்.

விட்டது தொல்லை. அந்த நாட்களுக்கு செலவாவது மிச்சம் அப்படின்னு உங்களை நிம்மதியா இருக்க விட்டுடுவோமா?... பணம் கட்ட சொல்லி மாசம் மாசம் ரொம்ப சரியான தேதிக்கு பில்லை மட்டும் அனுப்பிகிட்டே இருப்போம். நாங்க சுறுசுறுப்பா வேலை செய்யலைன்னு நீங்க சொல்லிடக்கூடாதுல்ல.

இந்த சேவை எனக்கு வழங்கப்படுறதை நிறுத்தி நாற்பது வருஷமாச்சே...அப்படின்னு நீங்க பாட்டுக்கு நம்ம முதல்வர் மாதிரி கடிதம் எழுதிகிட்டே இருக்க வேண்டியதுதான். அதுக்கு மட்டும் எங்களை பதில் போட வெச்சிடுங்க...சவாலுக்கு சவால்...இதுதான் இன்றைக்கு பல அரசு, தனியார் சேவை நிறுவன குளறுபடிகள் செய்வதன் உச்ச கட்டம்.

அநியாயமா பணம் கட்ட சொல்லி பில் வந்தா அதைக் கட்டாம இருக்க முடியாதா?

ஏன் முடியாது... அநியாயத் தொகையை மட்டுமில்லை. நியாயமான தொகையையும் முழுசாவே ஏப்பம் விட்டுடலாம். எல்லாம் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்துதான்.

விலை வாசி ஏறிப்போச்சே...நீங்க கொடுக்குற ஐநூறு  ஆயிரத்தை வெச்சு அதிகாரிகள் எல்லாம் கோடிக்கணக்குல சொத்து வாங்குறதுக்கு எத்தனை பிறவி எடுக்குறது...

அவங்களுக்கே நீங்க லட்சக்கணக்குல லஞ்சம் கொடுக்கணும்னா, குறைந்தபட்சம் கோடிக்கணக்குல ஏமாத்துனாதான் முடியும். வியாபாரம் கட்டுபடியாகனுமில்ல?...

ஆயிரம் கட்டாதவனுக்கு ஆப்பு வெக்கிறதும், ஆயிரக்கணக்கான கோடி கட்டாதவனுக்கு மாலை மரியாதை பண்ணி அடுத்த கடன் அல்லது சேவைக்கு ஏற்பாடு செய்யுறது ஏன்னு இப்பவாச்சும் புரியுதா?...ஊழலுக்கும் வரி ஏய்ப்புக்கும் ஒரு மரியாதை இருக்கு. அதை புரிஞ்சுக்குங்கப்பா...

ஆமா... நான் எங்க இருக்கேன்...(மதுரை போற பஸ்சுலதான்...பத்து ரூபா அரசாங்கத்தை ஏமாத்த தெரியலை... உன்னை எல்லாம் மதுகோடா மாதிரி

ஆஸ்பத்திரியிலயா வெக்க முடியும்?)

எதுக்கு சொல்ல வந்தேன்னா...இன்னும் கொஞ்ச நாள்ல உங்க வீட்டை விட்டு வெளில வந்தாலே இது தனியார் காண்ட்ராக்ட் மூலமா போட்டது. நடக்கணும்னா அம்பது ரூபா கொடுன்னு கேட்கதான் போறாங்க.

அதுக்கு முன்னோட்டம்தான் ரோட்டுக்கு ரோடு இந்த சுங்கம் வசூல். முப்பதாயிரம் டன் நாற்பதாயிரம் டன் வரை லாரியில சுமை ஏற்றிகிட்டுப் போய் சாலையை வீணடிச்சுட்டா பிறகு மறுபடி முதல்லேர்ந்து ஆரம்பிக்க எங்க போறதுன்னு நீங்க கேட்குறது புரியுது.

இதுல அமைச்சர்லேர்ந்து வட்டம் மாவட்டம் வரை பெரிய ஆளுங்க கோடீஸ்வரனாயிட்டே இருக்காங்க.

அப்ப என்ற கதி? இப்படியெல்லாம் கேள்வி கேட்கப் பிடாது...திருவோடுதான்...அதையும் அவங்க புடுங்கிட்டா ஏன்னு கேட்க கூடாது. இதை எல்லாம் பார்த்துட்டு அங்க எதாவது நான் வாயைத் திறந்தேனா?...நான் பாட்டுக்கு வீட்டுல வந்து உட்கார்ந்து பிளாக்ல எண்ட்ரி போட்டுகிட்டு இருக்கேன்ல...இப்படித்தான் பொழைக்கிற வழியைக் கத்துக்கணும்.

அரசுப் பணத்துல போட்ட சாலையில கூட சுங்கம் வசூல் செய்ய தனியார் குத்தகைக்கு விட்டுடுறாங்க. இதுல எவ்வளவு வசூல், எவ்வளவு ஒப்பந்தத் தொகை அப்படின்னு எதுவுமே வெளிப்படை இல்லை.

இது தவிர, இரவு நேரங்கள்ல கார், வேன் இது மாதிரி வாகனங்கள்ல பயணம் செய்யுற பெண்கள் கிட்ட டோல்கேட் ஆளுங்க பாலியல் தொந்தரவு கொடுக்குறதாவும் புகார் இருக்கு.

நான் என்ன சொல்றேன்னா...எவ்வளவு பணம் வசூலாகுதுன்னு வெளிப்படையா எல்லாரும் தெரிஞ்சுக்குறபடி செய்துட்டாலே பாதி பிரச்சனை தீர்ந்துடும்.

 உனக்கு ஏன் இவ்வளவு அக்கறை?ன்னு யாருப்பா சவுண்ட் விடுறது?

ஒரு நாடு நல்லா இருக்கணும்னா ஒரு ஊர் மட்டும் துன்பம் அனுபவிக்கிறதோ, அழியிறதோ தப்பில்லைன்னு ஒரு பழமொழி சொல்லுவாங்க. நம்ம அரசியல் வியாதிங்க அதுல சின்ன திருத்தம் பண்ணிட்டாங்க. நாலு குடும்பம் நல்லா இருக்கணும்னா நாடு அழிஞ்சா தப்பே இல்லை...- இதைக் கேட்கும்போதே எவ்வளவு கொடூரமா இருக்கு?

இப்ப இந்தியாவோட பயணம் இந்தப் பாதையிலதான் போய்கிட்டு இருக்கு.

நீங்க உடனே சாதனைகளோட பட்டியலைப் படிக்காதீங்க. பால்ல தண்ணீரைக் கலக்கலாம். பெரிய  பாதிப்பு வெளியில தெரியாது. ஆனா சிலர் தண்ணியில பாலைக் கலந்தாக் கூட பரவாயில்லைங்க...விஷத்தல்ல கலக்குறாங்க. நினைச்சுப் பார்க்கும்போதே பகீர்னுங்குது.

@@@@@@@@@@@@

தெலுங்கானா கோரிக்கையால ஆந்திராவே அவதிப்பட்டுகிட்டு இருக்கு. நாணயம் மாதிரி இந்தப் பிரச்சனைக்கும் ரெண்டு பக்கம் உண்டு. அதாவது நன்மை - தீமை. அதனால அவங்க கோரிக்கை நியாயமா இல்லையான்னு இப்ப நான் கருத்து சொல்லப் போறது இல்லை.

ஆனா வன்முறை நிரந்தரத் தீர்வு இல்லைன்னு மட்டும் புரியுது.

எதாவது ஒரு பிரச்சனைன்னா பொது சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கிற போக்கு இப்ப மறுபடி அதிகமாயிருக்கு. இதுக்கு முக்கிய காரணம், கூட்டம்தான். ஒருத்தனோட அடிமனசுல இருக்குற வன்முறை எண்ணம் இந்த மாதிரி கலவரங்களின் போது ரொம்ப சுலபமா வெளிவந்துடுது.


நேற்றும் திருப்பத்தூர் பேருந்து நிலையத்தில் நாங்க வந்துகிட்டிருந்த பேருந்துக்கு பக்கத்துல வந்த மற்றொரு பேருந்தை பெரிய கும்பலே சூழ்ந்துடுச்சு. பஸ்சுக்குள்ள ஏறி டிரைவர், கண்டக்டரை அடிச்சா கேஸ் ஸ்ட்ராங்கா ஆயிடும்னு பயந்த கும்பல், யடேய்... கீழ இறங்குடான்னு கத்தினாங்க. ஆனா அவங்க ரெண்டு பேரும் இறங்கவே இல்லை.

அந்த அரசுப்பேருந்து எந்த வண்டியிலயாவது மோதிட்டுதா இல்ல வேற எதுவும் பிரச்சனையான்னு  எனக்கு தெரியலை. ஆனா இந்தப் போக்கு மிகவும் தவறானதுன்னு மட்டும் புரியுது.


அவங்க செய்தது மட்டும் சரியான்னு நீங்க கேட்கலாம். எந்த ஓட்டுநரும் அலட்சியமாக இருந்திருக்கலாமே தவிர விபத்தை ஏற்படுத்தி உயிர்களைப் பலியாக்க வேண்டும் என்று நினைக்க மாட்டார்கள் என்பது பொதுவான கருத்து.

அந்த அலட்சியத்தைப் போக்கும் விதமாகத்தான் தண்டனை இருக்க வேண்டுமே தவிர மேலும் சில உயிர்களை பலியாக்கும் வகையில் நாம் நடந்து கொள்ளக் கூடாது.

சட்டத்தின் கையிலிருந்து எப்படியும் தப்பிவிடலாம். ஆனால் இந்த மக்களின் கையில் சிக்கினால் மரணம்தான் என்ற அச்சமே அவர்கள் இருவரையும் அங்கிருந்து ஓடச் செய்திருக்கிறது. இல்லை என்றால் மேலும் நாலு குழந்தைகளையாவது காப்பாற்றி இருக்கலாம் என்பது நடுநிலையாளர்கள் ஒப்புக்கொள்ளும் உண்மை.

திருப்பத்தூர் பேருந்து நிலையத்திலும் பேருந்தையும், அந்த ஓட்டுநர், நடத்துனரையும் அடித்து நொறுக்கும் ஆவேசத்துடன் நெருங்கினார்கள். அப்போது அங்கே வந்த போலீசார் கூட்டத்தை வீடியோ, புகைப்படம் எடுக்கத் தொடங்கியதும் பாதிப்பேர் அங்கிருந்து நகர்ந்தார்கள்.

நாங்கள் பயணம் செய்த பேருந்து கிளம்பி விட்டதால்  என்ன பிரச்சனை, என்ன ஆனது என்ற விவரம் எனக்குத் தெரியவில்லை.

ஆனால் ஒரு விஷயம் மட்டும் புரிந்தது. துணிச்சலாக குற்றத்தை ஒப்புக்கொண்ட வரலாறெல்லாம் சுதந்திரப்போராட்டத்தில்தான். ஏனென்றால் அந்த நோக்கத்தில் ஒரு நியாயம் இருந்தது. அப்படியும் வன்முறையை யாரும் விரும்பவில்லை. ஆனால் இப்போது நிகழும் கலவரங்களில் ஈடுபடுபவரெல்லாம்  நானும் தப்பு செஞ்சேன்னு யாருக்கு தெரியப்போகுது...என்ற தப்பித்தல் மனோபாவத்தில் மட்டுமே இப்படி குற்றங்களில் ஈடுபடுகிறார்கள். கூகிள் எர்த் மூலமா கலவரத்துல ஈடுபடுற ஆளுங்களை அடையாளம் கண்டு கடுமையா தண்டிக்கிற தொழில்நுட்பம் இருந்தா ரொம்பவே நல்லதுன்னுதான் தோணுது.

மக்களின் பிரச்சனைக்கு காரணமான சில  அரசியல் வியாதிங்களோட  சொத்துக்களை சேதப்படுத்துறவங்களைப் பற்றிய விவரங்களை மறைக்கிற அறிவு அந்த தொழில் நுட்பத்துக்கு இருந்தா அதுதாங்க எனக்கு கடவுள். அரசியல்வாதிகளோட ஊழல் சொத்துக்கள் நொறுங்கி நாசமாயிடும்னா யாருங்க வன்முறையைத் தூண்டுவாங்க?
********************

ரொம்பவே சீரியசா பேசிட்டேனா...பயணத்தை எனக்கு இனிமையாக்குன விஷயம் பற்றி சொல்லிடுறேன்.

நான் இன்னும் சின்ன புள்ளைதாங்க. (ஆரம்பிச்சுட்டான்யா...)காலை நேரத்துல பேருந்துப் பயணம் எனக்கு வாந்தியை வரவழைச்சுடும். திருவாரூர்ல இருந்து தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையம் 65 கி.மீ. தூரம். ஆனா முப்பது கிலோ மீட்டர் தூரம் போறதுக்குள்ள வாந்தி கியாரண்டியாத்தான் இருந்துச்சு. இப்ப நிலைமை கொஞ்சம் தேவலாம். ஆனா ரொம்ப அசதியா இருக்கும்.

இரவு நேரப் பயணம் இந்த மாதிரி தொந்தரவு தந்ததில்லை. அது ஏங்க? அது மட்டுமில்லை. சில சமயம், பரமக்குடியிலேர்ந்து அதிகாலை நாலுமணிக்கு திருச்சி போற பஸ்சுல ஏறி சிவகங்கை, திருப்பத்தூர், புதுக்கோட்டை (புதுக்கோட்டையிலிருந்து சரவணன்) தஞ்சாவூர் வழியா திருவாரூர் ஆறே மணி நேரத்துல வந்துடுவேன். அப்பவும் வாந்தி தொந்தரவு இருந்ததில்லை.

இதுக்கு என்ன காரணம்னுதானே கேட்டீங்க?...

தெரியலையேப்பா...தெரியலையே....

எதுக்கு இந்த விஷயங்களை சொல்றேன்னா, பேருந்துப் பயணம் ஒத்துக்கொள்ளாத ஆசாமிங்களுக்கு ஒரு இருக்கையில இருந்து இன்னொரு இருக்கைக்கு மாறுற விஷயம் இருக்கே...அது கூட இமயமலையில இருந்து தலைகீழா(?!) இறங்குற மாதிரி.

யோவ்... நீ என்ன .................................................கட்சித் தலைவரா.ஒரு ஊர்ல இருந்து இன்னொரு இடத்துக்குப் போறதுக்குள்ள நாலு இருக்கைக்கு மாறினாதான் மரியாதைன்னு நினைப்பு அப்படின்னு  திட்டாதீங்க.

உடம்பு இந்த கண்டிஷன்ல இருக்கும்போது பஸ்சுல இருக்குற ஐம்பத்தேழு இருக்கையிலயும் மாறி உட்காரணும்னு வேண்டுதலா என்ன? நம்ம நாட்டுக் கலாச்சாரம் செய்யுற அக்கப்போர்தான் இது. "சார்...கொஞ்சம் மாறி உட்காருங்களேன்..." அப்படின்னு ஒரு அழகான பொண்ணோ மரியாதைக்குரிய தாய்க்குலமோ யார் சொன்னாலும் மாறி உட்கார்ந்துக்க வேண்டியதுதான். இல்லன்னா நடத்துனர் வந்து சாவுகிராக்கின்னு ஒரு புது விருது கொடுத்து நம்மளை இருக்கையை விட்டு (முரண்டு பிடிச்சா பேருந்தை விட்டே) நகர்த்திட்டுதான் மறுவேலை பார்ப்பார். ஏன் இந்த வம்பு...( சுனாமி இந்தோனேஷியாவுல பஸ்...ச்சை..கப்பல் ஏறின உடனேயே சென்னை எல்.ஐ.சி பில்டிங் மொட்டை மாடிக்கு போயிடுற அளவுக்கு நாங்க எல்லாம் அப்பாவி.)

திருமலை படத்துல விஜய் கூட இண்டர்வியூவுக்கு கிளம்புற விவேக்கை, டேக் டைவர்ஷன் அப்படின்னு சொல்லியே திருப்பதியில கொண்டுபோய் விட்டுடுவாங்க. ஆறு மாசத்துக்கு முன்னால இப்படித்தான் தஞ்சாவூர்ல இருந்து திருவாரூர் வர்றதுக்குள்ள (65 கி.மீ தூரம்தான்) டிரைவருக்கு பின் சீட்டுல உட்கார்ந்து இருந்த நான் இப்படி இடம் மாறி மாறி கடைசி வரிசைக்கு வந்துட்டேன். ஏற்கனவே நான்கு மணி நேரம் பயணம் பண்ணி வந்த எனக்கு இந்த அனுபவம் எப்படி இருந்திருக்கும்?(இதுல லக்கேஜ் வேற)

கடைசி வரிசைக்கு போகும்போது "இனிமேலும் பின்னால போகச் சொன்னா கண்ணாடியை உடைச்சுட்டு கீழ குதிக்க வேண்டியதுதான்" அப்படின்னு சொன்னேன். அதுக்கு அந்த யுவதி (சரித்திர நாவல்கள் அதிகமா படிச்சதோட பாதிப்பு) லேசா சிரிச்சதோட சரி...

ஆறு மாசத்துக்கு முன்னால நடந்தது இருக்கட்டும்... நேத்து என்ன ஆச்சுன்னுதானே உங்க கேள்வி?

போகும்போது ரெண்டு பேர் உட்காருற இருக்கையில மதுரை வரை ஒரு பொறியியல் கல்லூரி மாணவன் உட்கார்ந்து வந்ததால பிரச்சனை இல்லை.

திரும்பி வரும்போது அம்மா வெளியூர்ல இருந்து எடுத்துவந்த பைகள் இருந்ததால மூணு பேர் சீட்டுல உட்காரவேண்டியதாயிடுச்சு. என்ன ஆகப் போகுதோன்னு பயந்தேன். (காலை நாலு மணியிலேர்ந்து தூக்கம் இல்லை. மருத்துவமனை பகுதியில சரியான சாப்பாடும் இல்லை. வயிறை நிறைக்க நினைச்சு சாப்பாடு ஒத்துக்காம வயிறு காலியாக ஆரம்பிச்சுட்டா என்ன பண்றதுன்னு ஒரு குழப்பம். அதனால வயிறு காலி. டெஸ்ட் கிரிக்கெட்ல நாலு நாளா தொடர்ந்து பீல்டிங் பண்ணின மாதிரி ஆயிட்டேன்.

ஜன்னல் ஓரத்துல வாந்தி எடுக்க வசதியா(?!) நான் உட்கார்ந்துட்டேன். பக்கத்துல அம்மா. அடுத்ததா ஒரு இளம்பெண் (கல்லூரி மாணவியாத்தான் இருக்கும்.) ரெண்டு பெரிய பைகளோட வந்து உட்கார்ந்து புதுக்கோட்டைக்கு பயணச்சீட்டு வாங்கியதும் அப்பாடா...மூணு மணி நேரத்துக்கு கவலை இல்லைன்னு நிம்மதியாச்சு.

அந்தப் பொண்ணோட புண்ணியத்தால சீட் டைவர்ஷன் அப்படின்னு யாரும் அக்கப்போர் பண்ணலை. நானும் நிம்மதியா தூங்கினேங்க.(அம்மா பக்கத்துல இருக்கும்போது வேற என்ன பண்றது.)

அந்தப் பொண்ணு புதுக்கோட்டையில இறங்கினதும் சுப்பிரமணியபுரம் சுவாதி மாதிரியெல்லாம் திரும்பிப் பார்க்கலைங்க. (உன்னைய மூணு மணி நேரம் ஒரே இடத்துல உட்காரவிட்டதே பெரிசு. இதுல என்ன லுக்கு?)

நான் அடுத்த ஷெட்யூல் தூக்கத்தைக் கண்டினியூ பண்ண ஆரம்பிச்சேன்.

கல்லூரியில படிச்சப்ப முதல் சில வாரங்கள்தான் நான் மாணவிகள் யார்கிட்டயும் பேசலை. அப்புறம் சக மாணவிகள்கிட்ட பேச தயக்கமே இல்லைங்க. ஆனா பஸ்சுல பழக்கமில்லாத ஒரு பொண்ணு ஒரு ஆள் இடைவெளியில வந்து உட்கார்ந்ததும் நம்ம இதயத்துடிப்போட வேகம் கொஞ்சம் அதிகமாத்தான் இருந்துது. இந்த லட்சணத்துல  வெளிநாடு மாதிரி ஆணும் பெண்ணும் பக்கத்துல உட்கார்ந்து போற அளவுக்கு பக்குவப்பட நாளாகும்னுதான் தோணுது. (நன்கு பழகியவர்களையும் சில நகரங்களின் பழக்கத்தையும்  சொல்லவில்லை. அறிமுகம் இல்லாத ஆணும் பெண்ணும் அருகருகே அமர்ந்து பயணம் செய்யும் விஷயத்தில் எல்லாருடைய மனதிலும் ஒரு குறுகிய வட்டம் இருந்து கொண்டு தடை செய்வதைத் தவிர்க்க முடியாது.

அப்போ என்னை மாதிரி மயக்கம் வர்ற பார்ட்டிங்களுக்கு என்னதான் வழி?

ரெண்டு பேரா போனா, இடப்பக்க இருக்கையில யாரும் இடம் மாற சொல்ல மாட்டாங்க.

தனியா போனா?

வேற வழி...சீட் டைவர்ஷன்தான்.