Search This Blog

செவ்வாய், 20 டிசம்பர், 2016

யானையை சாப்பிடும் முறை...



நூல் விமர்சனம்


நல்லதாக நாலு வார்த்தை-தன்னம்பிக்கை கட்டுரைகள்


சோம.வள்ளியப்பன்








சோம.வள்ளியப்பனின் கட்டுரைகள் அவ்வப்போது தினமணி உள்ளிட்ட இதழ்களில் வெளிவரும்போதே படித்திருக்கிறேன். அப்படி நான் பெரும்பாலும் படித்த கட்டுரைகளின் தொகுப்புதான் இந்த நூலிலும் இருந்தன.





வேலையை நேசிப்பது, அடுத்தவரை குற்றம் சொல்லிக்கொண்டே இருப்பதால் நம் நிம்மதி பறிபோவது, இனிமையான அணுகுமுறையால் எளிமையாக காரியங்களை நிறைவேற்றிக்கொள்வது என்று நம் வாழ்வுக்கு பயன்படும் பல்வேறு விஷயங்களை உள்ளடக்கிய புத்தகம்தான் அது.





மொத்தம் 27 கட்டுரைகள் இருந்தாலும் பெரும்பாலான கட்டுரைகளில் சொல்லப்பட்டிருந்த விஷயங்கள் பல ஆண்டு வாசிப்பு பழக்கம் காரணமாக என்னுடைய இயல்பான குணங்களாகவே ஆகி விட்டன.





ஆனால் "நேரம் போதவில்லை - உண்மையா?" என்ற கட்டுரை என்னை மிகவும் கவர்ந்தது. இந்த கட்டுரையை ஏதோ ஒரு இதழில் பிரசுரமான போதே படித்திருக்கிறேன். ஆனால் அதை முயன்று பார்க்காமல் கண்ணால் பார்த்து படித்ததை உள்வாங்காமல் காற்றிலேயே விட்டுவிட்டேன் போலிருக்கிறது. இந்த கட்டுரையில்தான் யானையை சாப்பிடும் முறையை பயன்படுத்தி ஒரு வேலையை முடித்ததை குறிப்பிட்டிருந்தார்.







"எத்தனை பெரிய வேலையையும், சிறு சிறு பகுதிகளாகப் பிரித்துக் கொண்டு, தொடர்ச்சியாக விடாது செய்து வந்தால் நிச்சயம் முடித்து விடலாம்."







இதுதான் அவர் ஒரு நபரிடம் பேசிக்கொண்டிருந்தபோது அறிந்து கொண்டதாக சொன்ன யானையை சாப்பிடும் முறை.





நானும் யோசித்துப் பார்த்தேன். 15 ஆண்டுகளுக்கு முன்பு கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலின் 5 பாகங்களை பத்து நாட்களுக்குள் படித்து முடித்தேன். (கல்லூரி செல்வது தவிர பகுதி நேரப்பணியில் மட்டும் இருந்ததால் நிறைய நேரம் கிடைத்தது வேறு விஷயம்). ஆனால் இப்போது நூலகத்தில் இருந்து எடுத்து வரும் புத்தகத்தை இரண்டு முறை புதுப்பித்து வைத்துக்கொண்டாலும் ஒன்றரை மாதமாகியும் படிக்க முடியாமல் இருந்தேன்.





நமது நேரம் எங்கே "ஸ்வாஹா" ஆகிறது என்று யோசித்ததில், வீட்டில் உள்ள இட நெருக்கடி காரணமாக தொ(ல்)லைக்காட்சியில் கணிசமாக நேரத்தை நான் வீணடிப்பதை உணர்ந்ததும் ரொம்ப சுலபமாக ஒரு நாளைக்கு 4 மணி நேரம் எக்ஸ்ட்ரா போனஸ் என்பதாக கிடைத்தது.





அப்படி ஒரு மதியம் கிடைத்த 3 மணி நேரத்தில் இந்த புத்தகத்தை படித்தேன். உண்மையில் 152 பக்கம் கொண்ட புத்தகத்தை ஒரே நாளில் படிக்க நினைக்க வில்லை. ஒரு நாளைக்கு 40 பக்கம் வீதம் நாலு நாளில் படித்து விட நினைத்து, அது ஒரே நாளில் முடிந்தது.





தேர்வில் பதில் எழுத வேண்டும் என்ற நெருக்கடியில் இது போன்ற புத்தகத்தை ஒரே மூச்சில் படித்து முடிப்பது ஓ.கே.





ஆனால் தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் மட்டுமின்றி எந்த ஒரு வேலையை முடிக்க வேண்டும் என்ற கட்டாயம் இருப்பவர்களும் ஒரு நாளைக்கு இந்த அளவு என்று சிறுக சிறுக முடிக்க பழகிக்கொண்டால் எந்த வேலையும் பூதாகரமாக தெரிந்து நம்மை மிரட்டாது என்ற எளிய உத்தி இந்த கட்டுரையை படித்ததும் எனக்கு புரிந்தது.





சிறு துளி பெருவெள்ளம் என்ற வாக்கியம் சேமிப்புக்காக மட்டுமல்ல, பல்வேறு விஷயங்களுக்காகவும் சொன்னதாக நாம் நினைத்துக்கொண்டால் நன்மை நமக்கே.





இரவில் 50 கி.மீ பயணம் செல்ல நமது இரு சக்கர வாகனத்தில் கிளம்பும்போது வண்டியின் ஹெட்லைட் வெளிச்சம் அடுத்த 50 மீட்டருக்குதான் தெரிகிரது. இப்படி இருந்தால் 50 கி.மீ தூரம் இருட்டில் நான் எப்படி செல்வேன் என்று யாரும் மலைத்துப் போய் நிற்பதில்லை. முதல் 50 மீட்டரை கடக்கும்போது அடுத்த 50 மீட்டருக்கு வெளிச்சம் கியாரண்டி என்ற விஷயம் நம்மை அறியாமல் நம் மனதில் பதிந்திருக்கும். இது பயணத்துக்கு மட்டுமல்ல.... நாம் செய்யும் வேலைக்கும் பொருந்தும். - இது நூலில் இல்லை. கட்டுரையை படித்து முடித்த போது என் மனதில் தோன்றிய விஷயம்.





யானையை திண்ணும் முறையை வைத்து நான் ஒரு சின்ன விஷயத்தை பிளான் செய்திருக்கிறேன். அதை செய்து முடித்த உடன் அது குறித்து பதிவிடுகிறேன்.





*****************************


சினிமா பார்த்து விமர்சனம் எழுதுபவர்கள் வலைப்பூவிலும், முக நூலிலும் அதிகமாகவே இருக்கிறார்கள். ஆனால் புதிதாக நூல் வெளியாகும்போது அதை படித்துப்பார்த்து நூல் விமர்சனம் எழுதுபவர்கள் மிக மிக குறைவு என்று தி இந்து தமிழ் நாளிதழில் சில வாரங்களுக்கு முன்பு ஒரு கட்டுரை வெளியானது.





அதில் ஆதங்கப்பட்டிருந்தது போல் புதிய நூலை படித்து விமர்சனம் எழுத தற்போது என் சூழ்நிலை இல்லை. நூலகத்தில் இருந்து எடுத்து வந்த புத்தகத்தை பற்றி முதலில் எழுத முயற்சிப்போம் என்ற எண்ணத்தின் வெளிப்பாடுதான் இந்த பதிவு.





நூல் முழுவதும் உள்ள எல்லா கட்டுரைகளையும் அலசி ஆராய்ந்து எழுதும் அளவுக்கு எனக்கு இப்போது நேரமில்லை (ஹி..ஹி..) புத்தகத்தை படித்துப்பாருங்களேன்... அதில் எவ்வளவு கட்டுரைகள் உங்களுக்கு உபயோகம் என்று உணர்வீர்கள்...