Search This Blog

சனி, 13 நவம்பர், 2010

பார்றா!... (ஓயாம எல்லாம் இந்த மூஞ்சியை பார்க்க முடியாது.)

இந்தக் கதையை நான் செந்தமிழ் எழுத்துருவில் தட்டச்சு செய்து வைத்திருந்தேன். வலைப்பூவில் பதிவேற்ற யுனிகோடு எழுத்துருவுக்கு மறுபடியும் தட்டச்ச வேண்டுமே...மறுபடியும் முதல்லேருந்தா என்ற மலைப்பு எனக்கு. அதனால்தான் பல மாதங்களாக இந்த கதை கணிணிக்குள்ளேயே தூங்கிக்கொண்டிருந்தது.

நான் இப்போது ஒரு தமிழ் நாளிதழில் பக்க வடிவமைப்பாளராக இருப்பதால் சக ஊழியர் மூலம் நேற்றுதான் செந்தமிழ் எழுத்துருவில் இருந்து (வேறு சில வடிவங்களிலிலிருந்தும்) யுனிகோடு வடிவத்துக்கு எளிதாக மாற்றும் முறை தெரிந்தது. உடனே வந்துட்டோம்ல... ஒரு சிறுகதையோட.

நான் சிறுவனாக இருக்கும்போது பார்த்த உலகம் வேறு. இப்போது குழந்தைகளுக்கு நாம் காட்டும் உலகம் வேறு. தொழில்நுட்பத்தில், பல வித வசதிகளில் உலகம் மேம்பட்டிருந்தாலும் உறவுகளைப் பேணுவதில் நாம் மிக மிக பின்தங்கிய நிலைக்கு சென்றுகொண்டிருப்பதாக தோன்றுகிறது. சுருங்கச் சொன்னால் சகிப்புத்தன்மை குறைந்து விட்டதே எல்லா பிரச்சனைக்கும் முழு முதல் காரணம்.

சகிப்புத்தன்மை என்பது பிறர் மீது அன்பு செலுத்துவதால் வருவது. ஆனால் மற்றவர் தான் என்னிடம் அன்பு செலுத்த வேண்டும், என்னை சகித்துக்கொள்ள வேண்டும் என்ற சர்வாதிகார மனோபாவம் நம்மில் பலருக்கு உண்டு.

இதாவது பரவாயில்லை. சகிப்புத்தன்மையுடன் இருக்கும் ஒருவர் நம்மிடம் சிக்கினால் ஆஹா...ஒரு அடிமை சிக்கிட்டாண்டா என்று அவனை மேலும் கசக்கிப் பிழிந்து படுத்தி வைப்பார்கள். ஒரு கட்டத்தில் அவனே வெறுத்துப்போய் மிக மோசமான கோபக்காரனாகி விடுவதும் உண்டு. மூன்று முறை அடித்தால் புத்தருக்கும் கோபம் வரும் என்ற வரி இதனால்தான் உருவாகி இருக்குமோ.

நான் வேற வளவளன்னு எழுதிகிட்டே இருக்கேன். இப்ப நான் சொன்னதை எல்லாம் கொஞ்ச நேரம் ஓரமா வெச்சுட்டு கதைக்குள்ள போங்க.

******

தனக்கென தனி இடம் பிடித்துக்கொண்டு இந்தியா முழுவதும் விற்பனையாகும் பிஸ்கட் கம்பெனி பொன்விழா கண்ட பிறகும் திருவாரூரில் வெற்றிகரமாக இயங்கி வருகிறது.

அந்த நிறுவனத்தை உருவாக்கிய முதலாளியின் பேரன் பழனியப்பன்தான் தற்போது நிர்வாக இயக்குநராக இருக்கிறார். அவர்களுக்கு பிஸ்கட் தயாரிக்கும் நிறுவனம்தான் பிரதான தொழில் என்றாலும் போக்குவரத்து, திரையரங்கம், திருமணஅரங்கம், மருத்துவமனை, உணவுவிடுதி என்று பல துணைத் தொழில்களையும் லாபகரமாக நடத்தி வந்தார்கள். இந்த ஆண்டு அவர்கள் புதியதாக பள்ளிக்கூடத்தை துவங்கியுள்ளார்கள்.மற்றொரு வியாபாரம்(?!)

பழனியப்பனின் மனைவி சொர்ணாம்பிகாதான் பள்ளி முதல்வர்.
அந்தப்பள்ளிக்கூடம் ஆரம்பிக்கப்பட்ட முதல் கல்வி ஆண்டிலேயே இருநூற்று பதினான்கு பேர் சேர்ந்த சந்தோ­த்தில் இருந்தார் பள்ளி முதல்வர் சொர்ணாம்பிகா. ஆனால் பதினைந்தே நாட்களில் இப்படி ஒரு சிக்கல் வரும் என்று அவர் மட்டுமின்றி அந்தப் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியைகளும் எதிர்பார்க்கவில்லை. சொர்ணாம்பிகா சட்டென்று டெலிபோன் மூலம் கணவரிடம் விவரத்தை தெரிவித்துவிட்டார்.

அவர் பேசி முடித்ததும் ஐந்தாம் வகுப்பு ஆசிரியை விஷ்ணுப்ரியா, “சார் என்ன சொன்னாங்க மேடம்?  ” என்றார்.

“முரளியை அனுப்புறேன்... வி­யத்தை அவரோட பொறுப்புல விட்டுடுங்கன்னு சொல்லிட்டார்.”

“மேடம்... முரளி அக்கவுண்ட்ஸ்ல பெரிய ஆள்தான் ஒத்துக்குறோம். இது பசங்க சம்மந்தப்பட்டது. ரொம்பவும் சென்சிட்டிவான வி­யம். இந்த மாதிரி சூழ்நிலையில அதிரடியாத்தான் முடிவெடுக்கணும். அலட்சியமா ஹேண்டில் பண்ணினா இதுவே தொடர்கதையாக வாய்ப்பு இருக்கு. நான் சொல்றதுதான் சரியான வழி. ஸ்ருதியோட பேரண்ட்ஸ் சமாதானமாகுற விதமா நாம ஏதாவது செய்யலைன்னா நம்ம ஸ்கூலுக்குதான் கெட்டபேர். அப்புறம் உங்க இஷ்டம்.” என்றார் சசிகலா என்ற ஆசிரியை.

இந்த வி­யத்தைக் கையாளும் பொறுப்பு முரளியிடம் போவதை சசிகலா விரும்பாததை இந்தப் பேச்சிலிருந்தே அனைவரும் தெரிந்து கொண்டனர். அதற்கு காரணம் இல்லாமல் இல்லை. பள்ளி அலுவலகப் பணிகளுக்கு  இன்னும் ஆட்கள் நியமிக்கப்படவில்லை. பள்ளிக்கூடத்தில் மாணவர் சேர்க்கை நடந்தபோது ரசீது போட்டுக் கொடுக்கும் பணியை சசிகலாவே ஆர்வமாக ஏற்றுக் கொண்டார்.

இப்போது கணக்குகளை முறையாகப் பராமரிக்கும் பணியை பகுதிநேரமாக செய்யும் பொறுப்பு பிஸ்கட்தொழிற்சாலையில் வேலை செய்யும் கணக்காளரான முரளியிடமே பழனியப்பன் ஒப்படைத்ததும்தான் சிக்கலே.
பள்ளிக்கூடத்திற்கு வந்த கணக்காளரைப் பார்த்த சொர்ணாம்பிகாவுக்கு மட்டுமின்றி மற்ற ஆசிரியைகளுக்குமே நம்பிக்கை இல்லை.

காரணம் முரளியின் வயதுதான். திருவாரூர் கல்லூரியில் பி.காம் முடித்ததுமே, தான் கணிணி பயிற்சி பெற்ற நிறுவனத்தின் மூலமாக இந்த பிஸ்கட் தொழிற்சாலையில் வேலைக்கு சேர்ந்தவன்.

அவனை வரவேற்பறையில் அமரவைத்துவிட்டு சொர்ணாம்பிகா செய்த முதல் காரியம், பழனியப்பனுக்கு போன் செய்து, “என்னங்க இது... ஒரு சின்னப் பையனை நம்பி இவ்வளவு பொறுப்பைக் குடுத்துருக்கீங்க...”என்று கேட்டதுதான்.

“என்னைய என்ன முட்டாளுன்னு நினைச்சியா... சேல்ஸ்டாக்ஸ், இன்கம்டாக்ஸ்ல எல்லாம் சின்ன மிஸ்டேக்கை கண்டுபிடிக்காததால பல வரு­மா இழுத்துகிட்டு இருந்த கணக்கு வழக்கை எல்லாம் வேலைக்கு சேர்ந்த ரெண்டு மாசத்துக்குள்ள சரிசெஞ்சுட்டார்.  முரளி இப்ப பிஸ்கட் பாக்டரிக்கு மட்டும் அக்கவுண்டன்ட் கிடையாது. நம்மளோட எல்லா தொழில்லயும் சிக்கலான கணக்குகளை சரிபண்ணி பராமரிக்கிறதுதான் அவரோட முக்கிய வேலை. ஆளைப் பார்த்து எடை போடாம ஒழுங்கா அவருக்கு உதவி பண்ணுங்க.”என்று கோபமாகப் பேசிய பழனியப்பன் சட்டென்று டெலிபோன் தொடர்பைத் துண்டித்தார்.

ரசீதுப் புத்தகங்கள், ஓர் எண்ணுக்கு மூன்று பிரதிகள் வீதம் தயாரிக்கப்பட்டிருந்தன. மாணவருக்கு முதல் பிரதியும், அலுவலகத்தின் கோப்புகளில் வைப்பதற்கு இரண்டாவது பிரதியும், பணம் வசூலிப்பவர்களின் வசதிக்காக அடிக்கட்டாகப் பயன்படும் வகையில் மூன்றாவது பிரதியும் இருந்தன. ஆனால் சசிகலாவுக்கு இந்த விவரம் புரியமலோ தெரியாமலோ ஒன்றாம் எண் ரசீதின் மூன்று பிரதிகளிலும் மூன்று மாணவர்களுக்கு பில் போட்டுக் கொடுத்துவிட்டார். மாணவரின் பெயர், வகுப்பு, தொகை ஆகிய விவரங்களை தனியே ஒரு வெள்ளைத்தாளில் மிக அழகாக எழுதி வைத்திருந்தார்.

“என்ன மேடம் இப்படி பண்ணிட்டீங்க...”என்று முரளி சாதாரணமாகத்தான் கேட்டான். ஆனால் சசிகலாவுக்கு தவறை ஒப்புக்கொள்ள மனமில்லை.

“நாங்க எல்லாம் டீச்சர்ஸ். பாடம் நடத்துறதுதான் எங்க வேலை. ஆள் இல்லையேன்னு ஏதோ யஹல்ப் பண்ணினேன். பழக்கமில்லாத வேலையில இப்படி சின்ன சின்ன தப்பு வரத்தான் செய்யும்... ”என்று சமாளித்தார்.

“வரிசையா மூணு ரசீதும் வேறவேற கலர்ல ஆனா ஒரே சீரியல் நம்பரா இருக்கே...கார்பன் வெச்சுதான எழுதணும்னு புரிஞ்சுக்க இதுல பி.ஹெச்.டி பண்ணிட்டு வரணுமாக்கும்.என்னமோ போங்க... பிரின்சிபால் மேடமும் அவங்க ரசீது போட்ட அழகைப் பார்க்கவே இல்லை போலிருக்கு...” என்று சொர்ணாம்பிகாவையும் சேர்த்து வாரினான்.

அவனுடைய பேச்சு இப்படி இருந்தாலும் அக்கவுண்ட் வி­யத்தில் பழனியப்பன் சொன்னபடியே மிகவும் திறமைசாலிதான். மூன்று மணிநேரத்திலேயே கணிணியில் எல்லா விவரங்களையும் பதிவேற்றம் செய்துவிட்டான். மறுநாள் வந்து  ஒவ்வொரு பிள்ளையின் பெயர், முகவரி, பெற்ற கட்டணம், பெற வேண்டிய கட்டணம் உட்பட எல்லா விவரங்களையும் ஒரே ஒரு தாளைப் பார்த்து தெரிந்து கொள்ளும் வகையில் ஆவணம் தயாரித்து அதை ஒரு ஃபைலிலும் போட்டுக் கொடுத்துவிட்டான். அதே போல் இப்போது ஏற்பட்டிருக்கும் பிரச்சனைக்கு முரளியால் நல்ல முறையில் தீர்வு காணமுடியும் என்று பழனியப்பன் நம்பி அனுப்புகிறார். ஆனால் சசிகலாவுக்கு முரளிமேல் உள்ள கோபத்தால் இது பிடிக்கவில்லை. நிறைய இடங்களில் இப்படித்தான் உண்மையான திறமையை காழ்ப்புணர்ச்சி கீழே தள்ளிவிட முயற்சி செய்கிறது.

முரளி வந்ததும் சொர்ணாம்பிகா சொன்ன விவரங்களை எந்தக் குறுக்கீடும் இல்லாமல் கேட்டுக் கொண்டான். பிறகு அவன் கேட்ட முதல் கேள்வி, “மேடம்...மற்ற டீச்சர்ஸ் எல்லாம் என்ன செய்யலாம்னு சொல்றாங்க?...அந்த விவரம் தெரிஞ்சா எனக்கு உதவியா இருக்கும்...ஒருவேளை, அதுவே சரியான யோசனையா கூட இருக்கலாம். என்பதுதான்.

சொர்ணாம்பிகாவுக்கு தன் கணவர் ஏன் முரளிமேல் இவ்வளவு நம்பிக்கை வைத்திருக்கிறார் என்று புரிந்து விட்டது.
“விஷ்ணுப்ரியா...நீங்க சொல்லுங்க...”என்று முதல்வர் சொன்னார்.

“சார்...சசிகலா மேடம் எல்லாரையும் சந்தேகப்படுறதுக்கு பதிலா குறிப்பிட்ட மூணுபேரை மட்டும் சோதனை போட்டாலே உண்மை தெரிஞ்சுடும்னு சொல்றாங்க. ஆனா எனக்கு இப்ப என்ன பண்றதுன்னே புரியலை. அந்தப் பசங்களை நினைச்சா பரிதாபமா இருக்கு.”

“எந்த மூணு பேர் மேல சந்தேகம்? ”

விஷ்ணுப்ரியா விவரம் சொன்னார்.

“மேடம்...உங்களை நினைச்சு நான் பெருமைப்படுறேன். உறுதியான முடிவு எடுக்க முடியலைன்னாலும் பசங்க மனசு வீண்பழியை சுமக்கக் கூடாதுன்னு நினைக்குறீங்க. ஆசிரியர் பணிக்கு முக்கிய தகுதிகள்ல இதுவும் ஒண்ணு.
கல்வியை முழுஅளவுல வியாபாரமாக்குறவங்க பெருகிட்ட இந்தக் காலத்துல ஒவ்வொரு வகுப்புலேயும் மூணு ஏழை மாணவர்களுக்கு இலவசக் கல்வி அளிக்க இந்தப் பள்ளி நிர்வாகம் முடிவு பண்ணியிருக்குறதே பெரிய விஷ­யம்.நம்ம இஷ்டத்துக்கு ஏழைங்கதான் காசை எடுத்துருப்பாங்கன்னு கண்மூடித்தனமா நம்பி அவங்களை சோதனை போட்டா என்ன ஆகும் தெரியுமா?... அவங்களே இந்த பணக்கார பள்ளிக்கூட சகவாசம் நமக்கு வேண்டாம்னு ஒதுங்கி ஓடிடுவாங்க.இல்ல...வேற ஏதாவது தப்பான முடிவை எடுத்துடுவாங்க.”என்று முரளி சொன்னபோது, சசிகலா குறுக்கிட்டார்.

“அவங்க எடுத்துருந்தாங்கன்னா? ”

“அதைப் பத்தி அப்புறம் யோசிப்போம்.” என்ற முரளி, மற்ற ஆசிரியைகளை அவரவர் வகுப்புக்கு போகச் சொல்லிவிட்டு சொர்ணாம்பிகா, விஷ்ணுப்ரியாவுடன் ஐந்தாம் வகுப்புக்குச் சென்றான்.

விஷ்ணுப்ரியாவிடம் “மேடம்... அந்தப் பொண்ணைக் கூப்பிடுங்க.” என்றதும், ஸ்ருதி வகுப்பாசிரியையின் உத்தரவை எதிர்பார்க்காமலேயே எழுந்து அருகில் வந்தாள். அழுததில் கண்கள் சிவந்திருந்தன. கன்னங்களில் கண்ணீர்க் கோடுகள்.

“ஸ்ருதி அழுததுக்கு என்ன காரணம்னு உங்களுக்கு தெரியுமா? ”என்று அமர்ந்திருந்த மாணவர்கள், மாணவிகளைப் பார்த்து முரளி கேட்டதும், “இருநூறு ரூபா பணம் காணாமப் போயிடுச்சு சார்...”என்று அவர்கள் போட்ட சத்தத்தால் முரளி, விஷ்ணுப்ரியா ஆகியோர் காதுகளைப் பொத்திக்கொண்டனர்.

“நீங்க பதில் சொன்னாலே ச்சும்மா அதிருதுல்ல...”என்று ரஜினிகாந்த் ஸ்டைலில் முரளி பேசிக் காண்பித்ததும் மீண்டும் குழந்தைகளின் உற்சாகக் கூச்சல்.

“சரி...போதும். இத்தோட நிறுத்திக்குவோம்.”

உடனே  ஒருவன்,  “இன்னும் ஆரம்பிக்கவே இல்லையே சார்...என்றான்.

“அது சரி... உங்களுக்கு பாடத்தெரியுமா...”

“ஓஹோ...”மீண்டும் கோரசாக பதில்.

“சரி...நான் அலுவலக அறைக்கு போறேன். நீங்க ஒவ்வொருத்தரா வந்து எனக்கு பாட்டு பாடிக் காட்டுங்க. பாடத் தெரியாதவங்க கதை சொல்லலாம். ஏன்னா எனக்கு கதை ரொம்ப பிடிக்கும். ஓ.கேவா...”

“ஓஓஓஓஓக்கே...”என்று மீண்டும் வகுப்பறை அதிர்ந்தது.

“நல்லா பாட்டு பாடுனவங்கள்ல ஒருத்தருக்கும், பிரமாதமா கதை சொன்னவங்கள்ல ஒருத்தருக்கும் நாளைக்கு காலையில  பிரேயரின்போது பேனா பரிசா தருவேன். ”என்று முரளி சொன்னதும் பாதி மாணவ மாணவிகள் அப்போதே எழுந்து தயாராகிவிட்டார்கள்.

“முதல்ல எல்லாரும் உட்காருங்க... வருகைப்பதிவேட்டுல உள்ள வரிசைப்படிதான் வரணும். ஆனா ஒரு வி­ஷயம். இருநூறு ரூபாயை எடுத்தது யாருன்னு நான் கண்டுபிடிச்சுட்டேன். ”என்று சொன்ன அதே நொடியில் எல்லாரையும் நோட்டம் விட்டுக்கொண்டான்.

“என்கிட்ட பாட்டுப்பாடிக் காண்பிக்க அறைக்குள்ள வரும்போது அவங்களாவே கொடுத்துட்டா நான் அடிக்க மாட்டேன். வேற யாரும் அடிக்கவும் விட மாட்டேன். அவ்வளவு ஏன், பணத்தை தொலைச்ச ஸ்ருதிக்கே வி­ஷயத்தை தெரியாம பண்ணிடுவேன்.

ஆனா என்னைய ஏமாத்தணும்னு நினைச்சா அவ்வளவுதான். எல்லார் முன்னாடியும் உண்மையை சொல்லிடுவேன். அப்புறம் யாருமே பணத்தை எடுத்தவங்க கூட சேர மாட்டாங்க.”

முரளியின் முயற்சிக்கு பலன் கிடைத்தது. அவனுடைய கணிப்பும் சரியாக இருந்தது. மீண்டும் சசிகலாவுக்கு ஒரு சறுக்கல். பணத்தை எடுத்த மாணவனின் தந்தையும் தாயும் அரசுப்பணியில் இருப்பவர்கள். சசிகலாவின் யோசனைப்படி அந்த ஏழை மாணவர்களை சோதனைப் போட்டிருந்தால் அவர்கள் மனதளவில் நொறுங்கியிருப்பார்கள்.

மறுநாள்.

“என்ன முரளிசார்...இன்னைக்கு காலையிலேயே வந்துருக்கீங்க... ”என்றாள் விஷ்ணுப்ரியா.

“பிரேயர்ல கலந்துக்கதான். ”

இதைக்கேட்ட விஷ்ணுப்ரியா தலையை லேசாக சாய்த்து  “பார்றா...”என்றதை முரளி கண்டுகொள்ளாமல் தொடர்ந்து,

“நேத்து ரெண்டு பசங்களுக்கு பேனா பரிசா தர்றதா சொல்லியிருந்தேனே. அதான். கொடுத்த வாக்கைக் காப்பாத்தணும்ல.” என்றான்.

“மறுபடியும் பார்றா... ”என்ற விஷ்ணுப்ரியாவுக்கு

“ஓயாம எல்லாம் இந்த மூஞ்சியைப் பார்க்க முடியாது. ”என்ற பதிலடி முரளியிடமிருந்து வந்ததும் அவளுடைய முகத்தில் இருந்த புன்னகை மறைந்தது.

“முறைக்காதீங்க மேடம். சும்மா ஜாலிக்கு...” என்று அவன் சொல்லிவிட்டாலும் விஷ்ணுப்ரியாவின் மனம் சமாதானமாகவில்லை.

‘பள்ளிக்கூடத்துல படிச்ச காலத்துல இருந்து இப்ப வரைக்கும் எவ்வளவு பேர் நான் பார்க்க மாட்டேனான்னு ஏங்கிகிட்டு இருக்காங்க... இவன் ரொம்ப சாதாரணமா இந்த மூஞ்சியை அடிக்கடி பார்க்க முடியாதுன்னு சொல்றானே...இனி நாமளும் இவனைப் பார்க்கவே கூடாது.’என்று நினைத்துக்கொண்டாள்.

ஆனால் அவள் மனம், கடிவாளம் போட நினைத்தபின்புதான் அதிகமாக தறிகெட்டு ஓடும்...ஒருநாள்கூட அவனைப் பார்க்காமல் இருக்க அனுமதிக்காது என்று அவளுக்கு அப்போது புரியவில்லை.

பிரேயரின்போது முரளி,  “ஸ்ருதியோட பணத்தை எடுத்தவங்க என்கிட்ட கொடுத்துட்டாங்க. ஆனா அது யாருன்னு உங்க யாருக்கும் நான் சொல்ல மாட்டேன். இனிமே யாரும் இப்படி தப்பு பண்ணக்கூடாது. எப்படியும் எனக்கு தெரிஞ்சுடும். மறுபடியும் இந்த மாதிரி தப்பு செஞ்சா என்னோட  தண்டனை   முறைகள்  கடுமையா     இருக்கும். ”  என்று சொல்லிவிட்டு, கதை மற்றும் பாட்டுக்காக இரண்டுபேருக்கு பேனா பரிசாக வழங்கினான்.

முரளியின் ஆலோசனைப்படி ஒரு விடுமுறைதினத்தன்று ஸ்ருதியின் பெற்றோரை பள்ளிக்கு அழைத்திருந்தனர்.

“சார்...உங்க வசதியைக் காண்பிக்க நிறைய வாய்ப்புகள் இருக்கு. அதுக்காக ஐந்தாம் வகுப்பு படிக்கிற குழந்தைக்கு எதுக்கு சார் இருநூறு ரூபா...எங்க பள்ளி வேன் மூலமா உங்க வீட்டுலயே கொண்டுவந்து விட்டுடுறோம். இல்லன்னா நீங்களே வந்துதான் அழைச்சுட்டு போகணும். அப்புறம் பணத்துக்கு தேவை எங்க இருக்கு?...

உங்கமேலயும் எங்க மேலயும் நம்பிக்கை வைங்க சார்... மிதமிஞ்சிய செல்லம், அளவுக்கு அதிகமான பணம் பிள்ளைகளை திசை மாத்திடும் ”என்று முரளி பேசிய அனைத்தும் மிகவும் நியாயமான கருத்துக்கள் என்பதால் அவர்களால் ஆட்சேபம் தெரிவிக்க இயலவில்லை.

அதே நாளில் வேறொரு நேரத்தில் இருநூறு ரூபாயை எடுத்த மாணவனின் பெற்றோரும் வந்திருந்தார்கள். அதுவும் முரளியின் கோரிக்கைதான்.

“சார்...உங்க வீட்டுக்குப் பக்கத்து வீட்டுல இருக்குற பையனால எவ்வளவு பிரச்சனை தெரியுமா? இவனை கேம் சென்டருக்கு அழைச்சுட்டுபோய் வீடியோ கேமுக்கு அடிமையாக்கிட்டான்.”

“சார்...இப்ப அவன்கூட சேரக் கூடாதுன்னு இவனைக் கண்டிச்சுட்டேன். அதுக்கு காசு கூட கொடுக்குறது இல்லை. ”என்றவரின் குரலில் பெருமிதம்.

“சரிதான். முதல்ல அவிழ்த்து விட்டுட்டு இப்ப கட்ட முயற்சிக்கிறீங்க. அதோட விளைவு என்னன்னு தெரியுமா... ஒரு பொண்ணோட இருநூறு ரூபா பணத்தை எடுத்துட்...”என்று முரளி முடிக்கும் முன்பே அவர் தன் மகனை அடிக்கப் பாய்ந்தார்.

“சார்...முழுசா கேளுங்க...”என்ற முரளியின் குரல் அதட்டும் தொனியில் இருந்தது.

மற்றவர்களுக்கு தெரியாமல் குற்றத்தை ஒப்புக்கொள்ள வைக்க தான் எடுத்த முயற்சியைப் பற்றிக் கூறியதும், அந்த சிறுவனின் பெற்றோர் கண்களில் மரியாதை தெரிந்தது.

“இப்ப இவனை அடிச்சு உதைக்கிறதால தீர்வு கிடைக்காது.அவன் கவனத்தை நல்ல வழியில திருப்பணும்னா நீங்க தொலைக்காட்சிக்குரிய நேரத்தை குறைச்சுட்டு அவனோட பழகணும்....”என்றதோடு மேலும் சில யோசனைகளை சொன்னான்.

அவர்கள் போனபிறகு சொர்ணாம்பிகா, “மிஸ்டர் முரளி...இந்த சின்ன வயசுலயே இவ்வளவு நிதானமா நடந்துக்க உங்களால எப்படி முடியுது?  ”என்றார்.

“என்னுடைய ஆசிரியர்தாங்க காரணம். அவரோட தண்டனைகளே வித்தியாசமா இருக்கும். பள்ளிக்கூடத்துல இருந்த பூச்செடிகளை ஒருத்தன் சும்மா உடைச்சுப் போட்டான். அடுத்தநாளே விதவிதமா பத்து பூச்செடிகளை நட்டு  அந்தப் பையன்தான் தண்ணி ஊற்றி பராமரிக்கணும்னு சொல்லிட்டாரு. அதுல பூக்குற பூக்களைப் பறிச்சு பூஜையும், திங்கள்கிழமையில தேசியக்கொடி ஏற்றும்போது அதுல வெச்சு கட்டுறதும் அந்தப் பையனோட பொறுப்புதான்.  அதுக்கப்புறம் அவன் பூச்செடிகளை உடைச்சதா எனக்கு நினைவில்லை.

அவ்வளவு ஏன்...நான் கூட எட்டாம்வகுப்பு படிச்சப்ப சார் உட்காருற நாற்காலியை உடைச்சுட்டேன். அவர் என்கிட்ட பணமெல்லாம் கேட்கலை. என் அப்பாகிட்ட சொல்லி ஒரு லீவு நாள்ல பள்ளிக்கூடத்துக்கு அழைச்சுட்டு வந்தாரு. எதுக்குன்னு பார்த்தா, பள்ளிக்கூடத்துல உடைஞ்ச பெஞ்ச், நாற்காலிகளை சரிசெய்ய வந்த கார்பெண்டருக்கு என்னைய ஹெல்ப்பரா ஆக்கிட்டாரு. அவருகிட்ட படிக்க குடுத்து வெச்சிருக்கணுங்க...”என்று முரளி பழைய நினைவுகளில் மூழ்கி விட்டான்.

அதன்பிறகு வந்த நாட்களில் முரளியுடன் பேசக்கூடாது என்றுதான் விஷ்ணுப்ரியா நினைப்பாள். ஆனால் அவனைப் பார்க்காமல் ஒருநாள் கூட இருக்கவே முடியாது என்ற அளவுக்கு அவள் மனம் சண்டித்தனம் செய்யத் தொடங்கியிருந்தது.

சில விடுமுறை நாட்களில் மட்டும் போன் செய்து அவனுடன் பேசிய பழக்கம் வளர்ந்து கொண்டே போனது. சட்டென்று ஒரு நாள் எதைப்பற்றியும் கவலைப்படாமல் முரளியிடம் கேட்டுவிடுவது என்று தீர்மானித்துக்கொண்டு போன் செய்தாள்.

ஆனால் அவனே முந்திக் கொண்டு, “உன்னைய கல்யாணம் பண்ணிக்கலாம்னு ஆசைப்படுறேன்...நீ என்ன சொல்ற...”என்றான்.

மகிழ்ச்சியில் திக்குமுக்காடிப்போன விஷ்ணுப்ரியாவால்  சட்டென்று எதுவுமே பேச முடியவில்லை. “இத்தனை நாளா எந்த ஆசைகளும் இல்லாதமாதிரி நடிச்சு என்னைய தவிக்க விட்டுட்டியேடா திருட்டு ராஸ்கல்.”என்று உற்சாகமாகப் பேசினாள்.

அடுத்த நொடியே அவனிடமிருந்து அவளுடைய மகிழ்ச்சியைக் குலைக்கும் விதமான பேச்சு வந்தது.

“ ஆனால் ஆசிரியரா இருக்குறவங்களுக்குன்னு சில சுயக் கட்டுப்பாடு வேணுமே. ஏன்னா பெத்தவங்களுக்கு அடுத்தபடியா ஒருத்தரோட கேரக்டரை தீர்மானிக்கிறது ஆசிரியரோட நடவடிக்கைகள்தான். ”என்று முரளி பேசியதும் விஷ்ணுப்ரியாவால் தன் மன எண்ணங்களை அடக்கிவைக்க முடியவில்லை.

“டீச்சரா இருக்குறதால ஜடம் மாதிரிதான் வாழணுமா...எனக்குன்னு ஆசைகள், உணர்ச்சிகள் இருந்தா அதையயல்லாம் குழிதோண்டிப் புதைச்சிடணுமா?  ” என்று பேசியவளுக்கு அழுகையே வந்துவிட்டது.

“ஹேய்...ப்ரியாக்குட்டி எதையும் புதைச்சுட சொல்லலை. எதுக்கும் இடம், பொருள், ஏவல் உண்டுன்னு சொல்ல வர்றேன். இப்ப நான் பார்க்குற வேலையில நிறைய விஷயம் கத்துக்கிட்டாலும் சம்பளம் இப்ப மட்டுமில்லாம எதிர்காலத்துக்கும் திருப்தியா இருக்காது. அதனால நான் வேற வேலைக்கு முயற்சி செய்யுறேன். அதுல சேர்ந்ததுக்கு அப்புறம்  ‘என்னடி ப்ரியா  ’  ன்னு உன்கிட்ட பேசுற உரிமையை எடுத்துக்குறேன்.”

“அப்ப அதுவரைக்கும்?...”

“வணக்கம் மேடம்...இன்னைக்கு ஸ்டூடண்ட் யாராவது பணம் குடுத்துருக்காங்களா?...எத்தனை ரசீது போடணும்?  ”என்று முரளி பேசியதும் சந்தோ­த்தில் சிரித்த விஷ்ணுப்ரியாவின் கண்களில் ஆனந்தக்கண்ணீர்.

******

வெள்ளி, 5 நவம்பர், 2010

இந்த ஆண்டு தீபாவளி எப்படி?

நேயர்களே... இது ராசிபலன் அல்ல.

ஒரு காலத்துல சின்ன ஊரா இருந்தாலும் அஞ்சு தியேட்டர் இருக்கும். அதுல ரெண்டு அல்லது மூணுலதான் கொஞ்சம் பெரிய பேனர் படங்களா வெளியிடுவாங்க. மற்ற தியேட்டர்கள்ல சாதாரண நாட்கள்ல அஞ்சரைக்குள்ள வண்டி மாதிரியான படங்களைத் திரையிட்டு சமாளிச்சாலும் தீபாவளின்னு வந்துட்டா தியேட்டர் கிடைக்காம முடங்கிக்கிடந்த எதோ ஒரு தமிழ் படத்தை திரையிட்டுடுவாங்க.

ரஜினி,கமல் மாதிரி பெரிய ஆளுங்க படத்துக்கு டிக்கட் கிடைக்காது. சரி அப்படியே வீட்டுக்கு திரும்பி போனா அக்கம்பக்கத்துல இருக்குறவங்க என்ன நினைப்பாங்கன்னு இவங்களா கவலைப்படுவாங்க.(நகரத்துல பெரும்பாலான மக்கள் அடுத்த வீட்டுக்காரனுக்கு எந்த பிரச்சனை வந்தாலும் நமக்கு என்னன்னுதான் போவாங்க. ஆனா ஒருத்தர் புதுசா வாங்கின பொருள், உடைகள் இது மாதிரியான விஷயங்களை மட்டும் பொறாமையுடன் புறம் பேசுறதை ரொம்ப தெளிவா செய்வாங்க.) இந்த மாதிரி ஆளுங்களுக்களை நினைச்சு ரஜினி படத்துக்குதான் டிக்கட் கிடைக்கலை. எதோ ஒரு படத்தைப் பார்த்துட்டு போவோம்னு எஞ்சியிருக்குற துக்கடா தியேட்டர்ல ஒரு படத்தை பார்த்துட்டு வந்துடுவாங்க. ஆக மொத்தம், சுமாரான தியேட்டர்ல 'பிளாப்' ஆன படத்துக்கும் ஒரு வாரம் நல்ல வசூல் கிடைக்கும்.
 அதெல்லாம் அந்த காலம். இப்போ டிக்கட் கிடைக்கலைன்னா டிவிடியை வாங்கிட்டு வந்துடுறாங்க. இதை நல்லா புரிஞ்சுகிட்ட சன் பிக்சர்ஸ் எந்திரன் படத்தை திரும்பின பக்கமெல்லாம் திரையிட்டு ஒரே வாரத்துல வசூலை மூட்டை கட்டுற மார்க்கெட்டிங் உத்தியை பயன்படுத்திடுச்சு.

நானும் இப்படி தீபாவளி அன்னைக்கே படம் பார்க்கணும்னு ஆசைப்பட்டிருக்கேன். அது அவ்வளவு சீக்கிரம் நிறைவேறலை.

1996-ம் ஆண்டு பாஞ்சாலங்குறிச்சி, 1997-தி லாஸ்ட் வேர்ல்டு, 1998-டைட்டானிக், 1999-முதல்வன், 2000-தெனாலி,2001- , 2002-ரமணா, 2003-பிதாமகன். அதோட நான் தீபாவளி அன்னைக்கு படம் பார்க்குறத விட்டுட்டேன். அதுக்கப்புறம் வேலையில பிசியாயிட்டோம்ல. இப்படியெல்லாம் பொய் பேசாத அப்படின்னு சொல்லாதீங்க.

எனக்கு சினிமா மேல இருந்த ஆர்வம் போனதுக்கு முக்கிய காரணம் ஒண்ணே ஒண்ணுதான். தியேட்டர்ல ஆப்ரேட்டருக்கு உதவியாளரா இருந்த கொஞ்ச நாட்கள்லேயே சினிமா மேல இருந்த பிரமிப்பு போயிடுச்சு. ஒருநாள் ஆப்ரேட்டர் திடீர்னு வேலைக்கு வர முடியாத சூழ்நிலையில என்னையே படத்தை திரையிட சொல்லிட்டாங்க. அப்போ எனக்கு பதினஞ்சு வயசு. (தொண்ணூறு ஆண்டுகளுக்கும் மேல வெற்றி நடை போட்ட அந்த மெஷின் இயக்கம் வழக்கொழிந்து வர்றதால அது பற்றி எனக்குத் தெரிஞ்ச விஷயங்களை ஆவணப்படுத்துற விதமா அப்பப்ப பதிவு எழுதுறதா சொல்லி இருந்தேன். நேரமின்மையால சில வாரங்களா சரியா பதிவு எழுத முடியலை. அந்த விஷயங்களை ஒரே பதிவா சீக்கிரம் வெளியிட முயற்சி பண்ணிகிட்டு இருக்கேன்.)

இப்ப ஒரு நாளிதழ்ல லேஅவுட் டிசைனர் வேலைக்காக புதுசா சேர்ந்துருக்கேன். நான் தனியா பக்கம் வடிவமைக்க எவ்வளவு நாள் ஆகும்னு புரியாம தட்டுத்தடுமாறி பயிற்சி எடுத்துகிட்டு இருந்தேன். திடீர்னு போன வாரம் வழக்கமான கம்ப்யூட்டர் ஆப்ரேட்டர் வாரலீவு போட்டுட்டார். அவருக்கு மாற்று ஆளும் கடைசி நேரத்துல வரலை. உடனே என்னையே 3 பக்கங்கள் வடிவமைக்க சொல்லிட்டாங்க. நெருக்கடியான நேரத்துலதான் நம்மளால என்ன செய்யமுடியும்னு தெரியுது. சந்திரமுகி படத்துல ஒரு பாட்டுல வர்ற வரி...நீருக்குள் அமிழ்த்தப்பட்ட பந்து மேலெழும்பி வந்தே தீரும்.

எல்லா விஷயத்துக்கும் இது பொருந்தும்.

இளைய பாரதத்துக்கு வருகை தர்ற எல்லாருக்கும் தீபத் திருநாள் வாழ்த்துக்கள்.

சனி, 23 அக்டோபர், 2010

......ஒவ்வொருத்தருக்கும் கம்ப்யூட்டர் இலவசம்.

 இதுதான் அடுத்த அறிவிப்பா இருக்கும். தமிழக சட்டமேலவைக்கு தேர்தல் நடத்தியே தீருவதுன்னு பட்டடாரி, ஆசிரியர் தொகுதி வாக்காளர் பட்டியல் தயாரிக்கிறதுக்கான வேலைகள் தொடங்கிடுச்சு. 

கொஞ்ச நாள் வரைக்கும், 'நம்ம ஆளுங்கதான் ஃப்ரீயா கொடுத்தா பினாயிலைக்கூட குடிப்பாங்க'ன்னு ஒரு சினிமாவுல கவுண்டமணி சொல்ற டயலாக்கை நானும் பேசிக்கிட்டுதான் இருந்தேன்.

இந்த மாதிரி ஒரு தொகுதிக்கு வாக்காளர் பட்டியல் தயாரிக்கிறாங்கன்னு தெரிஞ்சதும் சரி பேர் சேர்த்து அடையாள அட்டையை வாங்கித்தான் வெச்சுப்போமே ஒரு ஆசை. ஏற்கனவே எழுத்துப்பிழையோட வாக்காளர் அடையாள அட்டை,அட்ரசுல எழுத்துப்பிழையோட பான் கார்டு, எப்படியோ ஓட்டிக்காட்டி வாங்கின லைசென்ஸ் அப்படின்னு பல கார்டுகளோட இதுவும் இருந்துட்டு போகட்டுமேன்னு முடிவு பண்ணினேன்.

வேலை பார்க்குற இடத்துல ஒரு நண்பர் ஆர்.டி.ஓ அலுவலகத்துக்கு அடிக்கடி போவார். அவர்கிட்ட,' எனக்கு இது பற்றி முழு விவரங்கள் தெரியலை. உங்களுக்கு தெரிஞ்ச ஆளுங்க இருந்தா விவரம் கேட்டு அப்ளிகேஷன் வாங்கிட்டு வாங்களேன். அப்படின்னு சொன்னேன்.

"அடப்போய்யா...ஏற்கனவே சாதாரண வாக்காளர் அடையாள அட்டையை வெச்சு ரொம்ப அதிகமா கிழிச்சுட்டியாக்கும். போய் வேற வேலையைப் பாருப்பா."அப்படின்னு அலுத்துகிட்டார். (நண்பேன்டா) அவரு அந்த அட்டையை வெச்சு எங்கெங்க மூக்குடைபட்டாரோ...பாவம்.

இதுக்கு மேல அடுத்தவங்களை நம்பி சரிவராதுன்னு நெட்டுல விவரங்களை டவுன்லோடு செஞ்சேன்.

முதல் பட்டதாரின்னு ஒரு சான்றிதழ் வாங்குறதுக்காக தாசில்தார் அலுவலகத்துக்கு 2000வது வருஷம் போனது. அதுக்கப்புறம் என் வேலையா அங்கே போனதே இல்லை. வாக்காளர் அடையாள அட்டைக்கு விண்ணப்பம் கொடுத்தது, போட்டோ எடுத்தது எல்லாமே எங்க வீட்டுக்கு அடுத்த தெருவுல இருந்த வாக்குச்சாவடியிலேயே முடிஞ்சுடுச்சு.

இந்த பத்து ஆண்டுகள்ல அடுத்தவங்க வேலைக்காக ஒண்ணு ரெண்டு தடவை போயிருக்கேன். பொதுவாவே இந்த மாதிரி அரசு அலுவலகத்துக்குப் போனா பெரும்பாலான ஊழியர்கள் 'நான் கடவுள்' தோரணையிலேயே நடந்துக்குறது எல்லாருக்கும் தெரிஞ்ச விஷயம்தான்.

இந்த தடவை நமக்கு அப்படி எதாவது இன்சல்ட் நடந்தா அதை அப்படியே சுடச்சுட நியூசாக்கிடலாம்னு ஒரு ஐடியாவோடத்தான் போனேன். (இப்போ ஒரு தமிழ் நாளிதழோட கிளை அலுவலகத்துல வேலை பார்க்குற துணிச்சல்தான். இல்லன்னாலும் இருக்கவே இருக்கு இளைய பாரதம்.)

நிச்சயம் ஒரே நாள்ல வேலை நடக்காது. எத்தனை நாள் அலையணுமோன்னு நினைச்சுகிட்டுதான் 22.10.2010 அன்று ஆர்.டி.ஓ அலுவலகத்துக்கு போனேன். என்ன ஒரேடியா மட்டம் தட்டுறன்னு கேட்காதீங்க. என் ராசி அப்படி. அவசரமா தீப்பெட்டி வாங்கணும்னு பஸ்ஸ்டாண்ட்ல இருக்குற கடைகளுக்கு போனா கூட அங்க ஸ்டாக் இல்லாம பத்து கடைகள்ல அலைஞ்சுதான் வாங்கணும்.

சுருக்கமா சொன்னா எல்லாரும் ஹாயா லிப்ட்டுல ஏறி மாடிக்குப் போவாங்க. எனக்கு அப்படி போக கொடுப்பினை இருக்காது. மாடிப்படியில ஏறித்தான் போகணும். உடம்புக்கு நல்லதுதானேன்னு கேட்பீங்க. ரெண்டு மூணு மாடின்னா பரவாயில்லை. பத்து மாடிக்கு தினம் பத்து தடவை ஏறி இறங்குறதுன்னா...என்ன ஷாக் ஆகிட்டீங்கிளா. இதுதாங்க என் அதிர்ஷ்டம். எனக்கு பழகிடுச்சு.

22.10.2010 அன்று தமிழ்நாடு கிழக்கு மத்தியம் பட்டதாரி தொகுதி வாக்காளர் பட்டியல்ல என் பெயரை சேர்க்க விண்ணப்பம் கொடுக்க போனேனா...அப்படியே ஷாக் ஆயிட்டேன்.(வடிவேலு மாடுலேஷனில் படிக்கவும்.)

நான் எல்லா ஆவணங்கள், ஜெராக்ஸ் அப்படின்னு ரொம்ப தயாராத்தான் போயிருந்தேன். ஒரு ஊழியர்கிட்ட விபரம் கேட்டதும் கோபப்படாம டக்குன்னு விபரம் சொன்னார்.

அது ஏன்னு எனக்கு தெரியலை.

பொதுவான வாக்காளர் பட்டியல்ல பேர் சேர்க்கணும்னு சிறப்பு முகாம் நாட்கள்ல வாக்குச்சாவடிக்கு போனா தப்பிச்சோம். இந்த மாதிரி அலுவலகத்துக்கு போனா சரியான பதில் கிடைக்காது. ஏன்னா அவங்களுக்கே எப்ப விண்ணப்பம் வாங்கணும்னு தெரியாம இருக்கலாம். அது சரி, கதவைப் பூட்டிட்டு இழுத்துப்பார்க்க கூட மேலதிகாரிகிட்ட அனுமதி வாங்கணும்குற மாதிரி பல விதிகள் காலத்துக்கு பொருந்தாம இன்னும் இருக்குதே.

என்கிட்ட அவர் மரியாதையா பேசினதுக்கு காரணம், நான் பட்டதாரின்னுங்குறதுனாலயா,
இல்ல...ஆசிரியர் தொகுதிக்கு ஒருத்தர் கூட விண்ணப்பம் கொடுக்க வரலை. வேற வேலை வெட்டி இல்லாததால பட்டதாரி தொகுதிக்கு பேர் கொடுக்க இந்த மாதிரி வர்ற யூத்துகளையும் பயமுறுத்தி விரட்டி விட்டுட்டா ஆளில்லா கடையில எப்படி டீ ஆத்துறதுன்னு பயமா.

எனக்கு எதுவும் தெரியலையே.

அஞ்சு நிமிஷத்துல என் விண்ணப்பத்தைக் கொடுத்து துணை தாசில்தார்கிட்ட ஒப்புகை ரசீது வாங்கிட்டு வந்துட்டேன். இப்ப தெரியுதா நான் ஏன் ஷாக் ஆனேன்னு.

இந்த மாதிரி அப்ளிகேஷன் போட்டதை வெளியில சொன்னதும் உன் வேலையை ஒழுங்கா பார்த்தா என்ன...அவனுங்க சம்பாதிக்க நீ உன் நேரத்தை வேஸ்ட் பண்ணி இப்படி அலையுறியான்னு கேட்டாங்க.

பட்டதாரி, ஆசிரியர் தொகுதிகள்ல இருக்குற வாக்காளர் எல்லாருக்கும் கம்ப்யூட்டர் இலவசம். அப்படின்னு அறிவிப்பு வந்தாலும் ஆச்சர்யப்பட ஒண்ணும் இல்லை. ஏன்னா தமிழ்நாட்டோட நிலைமை அப்படின்னு நான் சொன்னதும் அவங்களும் யோசிக்கத் தொடங்கிட்டாங்க.

அப்புறம் ஏதாவது ஒரு நிதி 3G அல்லது 4G வயர்லெஸ் இண்டர்நெட் சேவை நிறுவனம் ஆரம்பிப்பார். இலவச கம்ப்யூட்டர் வாங்கின எல்லாரும் சும்மாவா வெச்சிருப்பாங்க...இணைய இணைப்பு வாங்கி வருஷத்துக்கு பத்து பதினஞ்சாயிரமாவது பில் கட்ட மாட்டாங்களா?

இந்தியன் படத்துல ஒரு வசனம். மற்ற நாடுகள்லயும் லஞ்சம் இருக்கு. ஆனா அங்க கடமையை மீறத்தான் லஞ்சம். இங்கதான் கடமையை செய்யவே லஞ்சம்.

பப்ளிக்கே அப்படித்தான் இருக்காங்க. அப்படி இருக்கும்போது அரசியல்வியாதிங்களை எப்படி முதல் குற்றவாளியாக்குறது.

வியாழன், 21 அக்டோபர், 2010

தினமலர்-வாரமலர் டி.வி.ஆர் நினைவு சிறுகதைப்போட்டி 2010ல் இரண்டாம் பரிசு பெற்ற சிறுகதை - காதல்

கடவுள் எல்லா இடங்களிலும் இருக்க முடியாது என்பதால்தான் தாயைப் படைத்தான் என்று சொல்வார்கள். ஆனால் பெருகி வரும் முதியோர் இல்லங்களுக்கும் சிதைந்து வரும் குடும்ப உறவுகளுக்கும் முக்கிய காரணமாக இருப்பது ஒரு பெண்தான்...இல்லை...தாய்தான்.(மாமியாரோ மருமகளோ...அவளும் ஒரு தாய்தானே.)

நம் நாட்டில் உள்ள வளங்கள் உலக மக்கள் எவ்வளவு பேர் என்றாலும் அனைவரின் தேவைகளையும் பூர்த்தி செய்யும். ஆனால் ஒரே ஒரு மனிதனி ஆசைகளைக்கூட நிறைவேற்ற போதாது என்று காந்தி சொல்லியிருக்கிறார். ஒரு மனிதனின் ஆசையையே நம் நாட்டில் உள்ள மொத்த வளங்களால் பூர்த்தி செய்ய முடியாது என்றால் பேராசையை சாதாரண வருமானம் உள்ள ஆணால் எப்படி நிறைவேற்ற முடியும்?... இந்தச் சிக்கலின் காரணமாக ஏற்பட்டதுதான் பல குடும்பங்களில் வயதானவர்களைக் கழித்துக் கட்டும் அவலம்.

பழங்காலத்தில் அடிப்படை தேவைகளை மட்டும் பூர்த்தி செய்துகொண்டு கொஞ்சம் ஓவராகவே சகித்துக்கொண்டு கூட்டுக்குடும்பமாக வாழ்ந்து வந்தார்கள். ஆனால் இப்போது பல ஆடம்பரத் தேவைகள் அத்தியாவசிய தேவைகளாக நாம் விரும்பியோ நம் மீது திணிக்கப்பட்டோ விட்டன. இதனால்தான் வீட்டில் உள்ள வயதானவர்களை கூடுதல் சுமையாக பலரையும் நினைக்க வைத்திருக்கிறது.

சுருக்கமாக சொன்னால் சுயநலம் - நம்மால் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு எல்லை மீறிச் சென்று கொண்டிருக்கிறது. பரிசுபெற்ற கதையின் கரு எனக்குத் தோன்றக்காரணமான சிந்தனைகள்தான் இவை.
கதையின் நடை எனக்கே முழு திருப்தியளிக்கவில்லை. ஆனால் நான் கதைக்காக தேர்வு செய்திருக்கும் கருவின் வலிமைதான் எனக்கு இந்தப் பரிசைப்பெற்றுத் தந்திருக்கிறது என்பது என் கருத்து.

ஞாயிறு, 10 அக்டோபர், 2010

ரூபாய் ஐந்தாயிரம் பரிசு பெற்ற சிறுகதை - காதல்

இப்போது பலரும் தன் பிள்ளைகள் கொடுமைப்படுத்தி சாப்பாடு போட மறுக்கிறார்கள் என்று காவல் நிலையத்தில் புகார் அளிக்கச்செல்கின்றனர். இந்த சூழ்நிலைக்கு சம்பந்தப் பட்ட பெற்றோர்களே பல நேரங்களில் தங்களின் துன்பத்திற்கு காரணமாகின்றனர் என்று என் மனதில் தோன்றிய கருத்தை வைத்து எழுதிய சிறுகதை.



சுயநலமே உலகம் என்று ஆகிவிட்ட நிலையில் தனக்கு மிஞ்சிதான் தான தர்மம் என்ற கொள்கையைக் கடைப்பிடிப்பது அவசியமே என்பது என்னுடைய கருத்து. தன்னுடைய பிள்ளைகளாக
இருந்தாலுமே!

புத்தகத்தில் பிரசுரமான கதையின் பக்கங்களை விரைவில் பதிவேற்றுகிறேன்.

சனி, 2 அக்டோபர், 2010

சிவாஜி படத்தின் வசனமும் எந்திரனும்

சிங்கம் மட்டுமல்ல...பல நேரங்களில் கெட்ட விஷயங்களும் சில காலகட்டத்தில் நல்ல விஷயங்களும் கூட சிங்கிளாக வருவதில்லை.
நான் கடந்த ஏழு ஆண்டுகளாக நல்ல நிலையில் இயங்கிக்கொண்டிருந்த நிறுவனங்களில் வேலைக்கு சேர்ந்தாலும் ஒழுங்காக சம்பளம் வருவதில்லை. மூன்று வாரங்களுக்கு முன்பு வரை இந்த நிலைதான். ஆனால் இப்போது பிரபல தமிழ் நாளிதழ் ஒன்றில் பக்க வடிவமைப்பாளராக பணிபுரிய என்னைத் தேர்ந்தெடுத்து  பயிற்சி அளித்து வருகிறார்கள். பலரும் தங்களுடைய வாழ்நாள் லட்சியத்திற்கு துளியும் சம்பந்தமில்லாத துறையில் பொருளாதார தேவைக்காக வேலை செய்ய நேர்ந்தாலும் கடுமையாக உழைத்து லட்சியத்திலும் வெற்றிக்கொடி நாடிட்டியுள்ளனர்.

ஆனால் எனக்கு குறிக்கோளாக இருந்த துறையிலேயே வேலையும் கிடைத்திருப்பதால் இன்னும் என்னை மெருகேற்றிக்கொண்டு என்னுடைய குறிக்கோளில் அழுத்தமாக சாதிக்க முடியும் என்று நம்புகிறேன்.

என்னைப் பொறுத்த வரை இது ஒரு நல்ல விஷயம் என்றால், சிறுகதைப் போட்டி ஒன்றில் பதிமூன்று வெற்றியாளர்களில் ஒருவராக நான் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறேன். அந்த விவரம் நாளை உங்களுக்கு அறிவிக்கப்படும். இது தவிர சொந்த வாழ்வில் நான் எடுத்த சில முயற்சிகளும் இப்போது வெற்றியடையத் தொடங்கி உள்ளன.

கடந்த மாதம் தளபதி முதல் எந்திரன் வரை என்ற பதிவில் ரஜினிகாந்த் படங்கள் பற்றியும் வழக்கொழிந்து வரும் பிலிம் புரொஜக்ட்டர் பற்றியும் தொடர் பதிவாக எழுத நினைத்திருப்பதாக குறிப்பிட்டிருந்தேன். தொடர் வேலைப்பளு காரணமாக அடுத்த பதிவு எழுத முடியவில்லை. இனி ஓரளவு அதைத் தொடருவேன் என்று நம்புகிறேன்.

ரஜினிகாந்த் நடித்த அண்ணாமலை படம் வெளிவந்த ஆண்டு 1991 என்று நினைக்கிறேன். திருவாரூரில் ஒரு ஏ/சி திரையரங்கில் அந்த படத்திற்குப் பிறகு ரஜினி படங்களே செப்டம்பர் 30, 2010 வரை வரவில்லை.

அதுக்கு இப்போ என்ன என்றுதானே கேட்குறீங்க?...எந்திரன் படம் அந்த தியேட்டரிலும் ரிலீசுங்க. நான் 1996 முதல் 1998 வரையிலான காலகட்டத்தில் அவ்வப்போது படிப்பு மற்றும் ஆபரேட்டர் அசிஸ்டெண்ட்டாக இருந்த அந்த தியேட்டரை தற்போது இயக்குனர் ஷங்கர் வாடகைக்கு எடுத்து இயங்காமல் இருந்த ஏ/சி யை ஏதோ செய்து DTS வசதி செய்து தன் மைத்துனர் மூலமாக நிர்வகித்து வருகிறார். அதனால் இந்த தியேட்டரிலும் எந்திரன் ரிலீஸ்.
(தியேட்டர் படம் மாடலுக்காக மட்டுமே...இது திருவாரூரில் உள்ள தியேட்டர் அல்ல.)

சிறுகதைப் போட்டியில் நான் எந்த பரிசு பெற்றேன் என்ற விபரத்துடன் அடுத்த பதிவில் சந்திக்கிறேன்.

சிவாஜி படத்தின் வசனமும் எந்திரனும்

சிங்கம் மட்டுமல்ல...பல நேரங்களில் கெட்ட விஷயங்களும் சில காலகட்டத்தில் நல்ல விஷயங்களும் கூட சிங்கிளாக வருவதில்லை.
நான் கடந்த ஏழு ஆண்டுகளாக நல்ல நிலையில் இயங்கிக்கொண்டிருந்த நிறுவனங்களில் வேலைக்கு சேர்ந்தாலும் ஒழுங்காக சம்பளம் வருவதில்லை. மூன்று வாரங்களுக்கு முன்பு வரை இந்த நிலைதான். ஆனால் இப்போது பிரபல தமிழ் நாளிதழ் ஒன்றில் பக்க வடிவமைப்பாளராக பணிபுரிய என்னைத் தேர்ந்தெடுத்து  பயிற்சி அளித்து வருகிறார்கள். பலரும் தங்களுடைய வாழ்நாள் லட்சியத்திற்கு துளியும் சம்பந்தமில்லாத துறையில் பொருளாதார தேவைக்காக வேலை செய்ய நேர்ந்தாலும் கடுமையாக உழைத்து லட்சியத்திலும் வெற்றிக்கொடி நாடிட்டியுள்ளனர்.

ஆனால் எனக்கு குறிக்கோளாக இருந்த துறையிலேயே வேலையும் கிடைத்திருப்பதால் இன்னும் என்னை மெருகேற்றிக்கொண்டு என்னுடைய குறிக்கோளில் அழுத்தமாக சாதிக்க முடியும் என்று நம்புகிறேன்.

என்னைப் பொறுத்த வரை இது ஒரு நல்ல விஷயம் என்றால், சிறுகதைப் போட்டி ஒன்றில் பதிமூன்று வெற்றியாளர்களில் ஒருவராக நான் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறேன். அந்த விவரம் நாளை உங்களுக்கு அறிவிக்கப்படும். இது தவிர சொந்த வாழ்வில் நான் எடுத்த சில முயற்சிகளும் இப்போது வெற்றியடையத் தொடங்கி உள்ளன.

கடந்த மாதம் தளபதி முதல் எந்திரன் வரை என்ற பதிவில் ரஜினிகாந்த் படங்கள் பற்றியும் வழக்கொழிந்து வரும் பிலிம் புரொஜக்ட்டர் பற்றியும் தொடர் பதிவாக எழுத நினைத்திருப்பதாக குறிப்பிட்டிருந்தேன். தொடர் வேலைப்பளு காரணமாக அடுத்த பதிவு எழுத முடியவில்லை. இனி ஓரளவு அதைத் தொடருவேன் என்று நம்புகிறேன்.

ரஜினிகாந்த் நடித்த அண்ணாமலை படம் வெளிவந்த ஆண்டு 1991 என்று நினைக்கிறேன். திருவாரூரில் ஒரு ஏ/சி திரையரங்கில் அந்த படத்திற்குப் பிறகு ரஜினி படங்களே செப்டம்பர் 30, 2010 வரை வரவில்லை.

அதுக்கு இப்போ என்ன என்றுதானே கேட்குறீங்க?...எந்திரன் படம் அந்த தியேட்டரிலும் ரிலீசுங்க. நான் 1996 முதல் 1998 வரையிலான காலகட்டத்தில் அவ்வப்போது படிப்பு மற்றும் ஆபரேட்டர் அசிஸ்டெண்ட்டாக இருந்த அந்த தியேட்டரை தற்போது இயக்குனர் ஷங்கர் வாடகைக்கு எடுத்து இயங்காமல் இருந்த ஏ/சி யை ஏதோ செய்து DTS வசதி செய்து தன் மைத்துனர் மூலமாக நிர்வகித்து வருகிறார். அதனால் இந்த தியேட்டரிலும் எந்திரன் ரிலீஸ்.
(தியேட்டர் படம் மாடலுக்காக மட்டுமே...இது திருவாரூரில் உள்ள தியேட்டர் அல்ல.)

சிறுகதைப் போட்டியில் நான் எந்த பரிசு பெற்றேன் என்ற விபரத்துடன் அடுத்த பதிவில் சந்திக்கிறேன்.

செவ்வாய், 14 செப்டம்பர், 2010

வன்முறை ஒருபோதும் தீர்வு ஆகாது

கிருஷ்ணகிரி அருகே உள்ள பள்ளியில் அந்த கல்வி நிறுவனத்தின் பேருந்து மோதி மாணவன் உயிரிழந்த சம்பவம் மிகப்பெரிய எதிர்விளைவை ஏற்படுத்தியுள்ளது.
பேருந்தின் ஓட்டுநருக்கு உரிமம் இல்லை, அதிகவேகம், பிரேக் இல்லை என்று பல வித செய்திகள் பரவி வருகின்றன. இதில் எது உண்மையோ இல்லையோ, அந்த மாணவன் இந்த உலகத்தில் இல்லை என்பது மட்டும் கலங்க வைக்கும் உண்மை.

பணம் கட்டாத மாணவனை வகுப்புக்குள் விடாமல் திருப்பியனுப்பியிருக்கிறார்கள். அவன் பணம் வாங்கி வருவதற்காக வீட்டுக்கு திரும்பிய நேரத்தில்தான் விபத்து நடந்திருக்கிறது என்பது வெளியில் சொல்லப்படும் செய்தி. கல்வி கடை வியாபாரமாக்கிவிட்டதன் மிகச் சிறிய எதிரொலிதான் இது. தன்னால் பணம் கட்ட சிரமமாக இருக்கும் என்று தெரிந்தும், அரசுப்பள்ளிகள் அல்லது வேறு பள்ளிகளை நாடாமல் இந்தப் பள்ளியில் தன் மகனை சேர்த்தது அந்த தந்தையின் தவறா?

பல அரசுப்பள்ளிகளில் தரமான கல்வி கிடைக்க விடாமல் வைத்திருப்பது அரசின் தவறா?

மாணவன் இறந்த சிறிது நேரத்திலேயே பள்ளிக்கூடத்தை சூறையாடியிருக்கிறார்கள். அந்த அளவுக்கு அந்தப் பள்ளியின் மீது கோபம் என்பது மட்டும் தெரிகிறது.

வீட்டில் பிள்ளையை அடித்து அல்லது கண்டித்து வளர்க்கவில்லை என்றால் அதை வெளியில் யாராவது செய்வார்கள். நமக்கு நாமே சுயக்கட்டுப்பாடு செய்துகொள்ளவில்லை என்றால் காவல்துறையினர் அந்தப் பணியை நிறைவேற்றுவார்கள்.

நாட்டில் தொண்ணூறு சதவீத பள்ளிகள் ஏதோ ஒரு விதியை மீறிதான் செயல்பட்டு வருகின்றன.அவற்றை ஒழுங்குபடுத்த வேண்டிய அரசு மவுனமாக இருப்பதால்தான் மக்கள் வாய்ப்புக் கிடைக்கும்போது இம்மாதிரியான வன்முறையில் இறங்கி விடுகிறார்கள்.

இதை நான் நியாயப்படுத்தவே இல்லை. அரசுப்பள்ளிகளை தத்தளிக்கவைத்துவிட்டு தனியார் பள்ளி முதலாளிகளின் வருமானத்துக்கு மறைமுகமாக உடந்தையாக இருப்பது யார் குற்றம்?

தனியார் பள்ளிகள் எப்படி வேண்டுமானாலும் கொள்ளை அடித்துச் செல்லட்டும். நாட்டில் ஏழைகள் கல்வி கற்க அரசுப்பள்ளிகள் உருப்படியாக செயல்பட வைப்பதை அரசு தன் கடமையாக அல்லவா செய்ய வேண்டும்.

ஒரு மாணவனின் உயிர் போனது யாராலும் ஈடு செய்ய முடியாத இழப்புதான். ஆனால் அதற்காக பள்ளியை நாசமாக்கி சான்றிதழ்களை எரித்து மிக அதிகமான நஷ்டத்தை ஏற்படுத்தியதேல்லாம் மன்னிக்கவே முடியாத குற்றம்.

இப்போதெல்லாம் படித்து நல்ல பணியில் இருப்பவர்கள் கூட குடித்துவிட்டு வண்டி ஓட்டுகிறார்கள். முதலில் பாமரன் முதல் படித்தவன் வரை சாலை விதிகளை மதித்து விபத்து இல்லாத உலகத்தை உருவாக்கும் நோக்கத்தோடு பயணத்தை தொடங்குவோம்.இது உடனடியாக சாத்தியம் இல்லை என்று எனக்கும் தெரியும். அப்படி உடனடியாக நடந்து விடுமா என்று நினைத்திருந்தால் நமக்கு சுதந்திரம் கிடைத்திருக்காது. பெற்ற சுதந்திரத்தை பேணிக்காக்க வேண்டும்.

இப்படியா நம்முடைய வசதிக்காக கண்டறிந்த வாகனத்தால் நம் உயிரையே அழித்துக் கொள்வது?

இப்படி எதாவது ஒரு சம்பவம் நடந்தால் பதிவு எழுதத்தான் உனக்கு தெரியும். வேற என்ன செய்யுற அப்படின்னு நீங்க கேட்கலாம்.சைக்கிளோ, மோட்டார் சைக்கிளோ...அவற்றை சாலைவிதிகளை மதித்து இயக்கி வருகிறேன். பார்க் செய்யும்போது அடுத்தவருக்கு இடையூறு இல்லாமல் நிறுத்துவேன். ஏதோ என்னால் முடிந்தது.

சனி, 11 செப்டம்பர், 2010

செப்டம்பர் 11 - ஒரே நாள் - எவ்வளவு சம்பவங்கள்?

இந்த நாள் வந்தாலே இளைய தலைமுறைக்கு அமெரிக்காவின் இரட்டை கோபுரம் தகர்க்கப்பட்ட அந்த பயங்கரம்தான் நினைவுக்கு வரும்.ஒட்டுமொத்தமாக பல ஆயிரம் மனிதர்களைக் காவு வாங்கிய நாள் மட்டுமல்ல இது.
ஒவ்வொரு இந்தியனையும் மன ரீதியாகவும் உடல்ரீதியாகவும் நசுக்கிய ஆங்கிலேய ஆட்சிக்கு எதிரான சுதந்திரப்போராட்டம் தொடர்பான சில சம்பவங்களையும் இந்த நாள் உள்ளே வைத்துக்கொண்டிருக்கிறது.
செப்டம்பர் 11 பயங்கரவாதத்தின் நாள் மட்டுமல்ல. அது வன்முறைக்கு சற்றும் இடமளிக்காத அறப்போரின் நாளும் கூட. 1906ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் வசிக்கும் ஒவ்வொரு இந்தியரும் அரசிடம் தங்களைப் பதிவு செய்துகொண்டு சான்றிதழ் பெற வேண்டும். அப்படிப் பெறாதவர்கள் குடியுரிமையை இழந்து விடுவார்கள் என்று அறிவிக்கப்பட்ட அவசர சட்டத்தை எதிர்த்து நடத்தப்பட்ட கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுதான் சத்தியாகிரகம்.அந்தப் போராட்டத்திற்கு என்ன பெயர் வைப்பது என்று கேட்டு காந்தி தன் 'ஒபீனியன்' பத்திரிகையில் ஒரு போட்டி நடத்தினார்.அந்தப் போட்டியில் பரிசுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட சொல், 'சதாகிரக' என்பது. ஒரு நல்ல விஷயத்தில் உறுதி என்று அந்தச் சொல்லுக்குப் பொருள்.அதை சத்தியாகிரக என்று காந்தி மாற்றினார். சத்தியத்தின் சக்தி என்று பொருள்.அந்த நாள் செப்டம்பர் 11.

விவேகானந்தர் சிகாகோவில் உரையாற்றிய தினமும் செப்டம்பர் 11தான்.
தமிழ் நாட்டில் செப்டம்பர் 11ஆம் தேதி பாரதியார்தினமாக கொண்டாடப்படுகிறது. அது அவரது பிறந்த தினமல்ல. இது பாரதி மறைந்த தினம்.

(நன்றி: புதியதலைமுறை - 16.09.2010  இதழ்)
 சென்னை - திருவல்லிக்கேணியில் உள்ள பாரதி இல்லத்துக்கு நான் ஒரே ஒரு முறை சென்றிருக்கிறேன்.பா.ஜ பிரபலம் இல.கணேசன் நடத்திவரும் பொற்றாமரை இலக்கிய இதழின் முதலாம் ஆண்டு விழாவில் (2006 ஜூலை மூன்றாவது வாரம்) நானும் கலந்து கொண்டேன். சரித்திர நாவலாசிரியர் கவுதமநீலாம்பரன், கவிஞர் வாலி உட்பட இன்னும் சில பிரபலங்கள் கலந்துகொண்டார்கள்.
அந்த விழாவில் கவிஞர் வாலி, தான் பாரதியின் இந்த நினைவு இல்லத்திற்குள் நான் இப்போதுதான் வருகிறேன் என்று சொன்னார். இவ்வளவு பெரிய மனுஷர் சென்னையிலேயே பல ஆண்டுகாலம் இருந்தும் எழுபத்தைந்து வயதில்தான் இந்த நினைவு இல்லத்திற்குள் வந்திருக்கிறார்.

 நான் திருவாரூரில் இருந்தாலும் என்னுடைய இருபத்தைந்தாவது வயதிலேயே வந்துவிட்டேனே என்று சின்னபுள்ளைத்தனமா நினைத்ததுண்டு.

பாரதி திரைப்படம் வெளிவந்தபோது தொலைக்காட்சி டிரெய்லர்களில் படக்காட்சிகளின் பிண்ணனியில் "பாரதி.....ஒரு கவிஞனின் கதை..."என்ற குரல் மிகவும் வசீகரமாகவும் ஒரு கம்பீரத்துடனும் ஒலிக்கும். இந்தக் குரலுக்காகவே அந்த டிரெய்லரை நான் அடிக்கடி பார்த்ததுண்டு. அந்தக் குரல், எழுத்தில் நான் படித்த பாரதியின் கம்பீரமான குரலாகவே கற்பனை செய்ய வைத்தது.
******
இன்று விநாயகர் சதுர்த்தி. எனக்கு இறை நம்பிக்கை உண்டு. எங்கள் பகுதியில் இருந்த ஆலயத்தை புதுப்பித்துக் கட்டி வருகிறோம். இந்த ஆலய உருவாக்கத்தில் என்னுடைய பொருள் ஒன்றும் சொல்லிக்கொள்ளும்படியாக இல்லை. ஆனால் உடலுழைப்பு நிறையவே உண்டு.

சுமார் ஏழு லட்ச ரூபாய் மதிப்பீட்டில் துவங்கிய திருப்பணி வேலைகள் எண்பது சதவீத அளவில் நிறைவடைந்து விட்டன. தரை,இரும்புக்கதவு மற்றும் கிரில்கள்,பெயிண்டிங் வேலைகள் மட்டுமே பாக்கி. சிற்ப வேலைகள் அதிவிரைவில் நிறைவடைந்தது எங்களுக்கு மட்டுமல்ல, அந்த வேலைகளை செய்த சிற்பக்கலைஞர்களுக்குமே வியப்புதான்.

பொதுவாகவே எல்லா ஆலயங்களிலும் இம்மாதிரியான திருப்பணி வேலைகள் நடைபெறும்போது சிற்பவேலைகள்தான் நிறைவடையாமல் ஆண்டுக்கணக்கில் இழுத்துக்கொண்டே செல்லுமாம். ஆனால் பெருநாட்டுப்பிள்ளையார் ஆலயத்தின் விமானத்தில் மூன்று நிலைகளில் இருபத்தியிரண்டு சிற்பங்கள் வேலைகள் பூர்த்தியாகி விட்டன. ஆனால் சிற்பக்கலைஞர்கள் இல்லாமல் கட்டிடக் கலைஞர்களை மட்டும் வைத்து செய்துவிடக்கூடிய சில வேலைகளால் திருப்பணி தாமதமாகிக்கொண்டிருக்கிறது. (பொருளாதாரமும் ஒரு காரணம்.)

தற்காலிகமாக பிள்ளையாரை வில்வ மரத்தடியில் கொண்டு சென்று வைத்துவிட்டோம். அந்த இயற்கையான குளிர்ச்சி அவருக்கு ரொம்பவே பிடித்துவிட்டது என்று நினைக்கிறோம்.

******
விநாயகப் பெருமான் ஆவணி மாதம் சதுர்த்தி திதியன்று அவதரித்தார். இவர் யானை முகத்தை தனக்கு வைத்திருக்கிறார். அநேகமாக, எல்லா தெய்வங்களுக்கும் மனித முகம் இருக்க, இவருக்கு மட்டும் ஏன் யானையின் முகம் வந்தது? எல்லாம், சிவபெருமான் நம் மீது கொண்ட கருணையால் தான்.
கஜமுகாசுரன் என்ற அசுரன், பிரம்மாவிடம் ஒரு வரம் பெற்றான். ஆண், பெண் சம்பந்தமில்லாமல் பிறந்த ஒருவனாலேயே தனக்கு அழிவு வரவேண்டும் என்பது அவன் கேட்ட வரம்; கேட்ட வரம் கிடைத்தது. ஆண், பெண் சம்பந்தமின்றி, உலகில், குழந்தை பிறப்பு சாத்தியம் இல்லை என்பது அவன் போட்ட கணக்கு. அவன் நினைத்தபடியே அப்படி யாருமே உலகில் பிறக்கவில்லை. எனவே, அவன் சர்வலோகங்களையும் வளைத்து, தன் ஆளுகையின் கீழ் கொண்டு வந்தான். தேவர்களை வதைத்தான். அவர்கள், துன்பம் தாளாமல் தவித்தனர்.

அவர்களது துன்பம் தீர்க்க லோகமாதாவான பார்வதிதேவி முடிவு செய்தாள். தன் மேனியில் பூசியிருந்த மஞ்சளை வழித்தெடுத்து உருண்டையாக்கினாள். உறுப்புகளையும், உயிரையும் கொடுத்தாள். அந்தக் குழந்தைக்கு, "பிள்ளையார்' என பெயர் சூட்டினாள். அந்தப்பிள்ளை தன் அன்னையின் அந்தப்புர காவலனாக இருந்தான். சிவபெருமான் அங்கு வந்தார். அவர் மனதில் தேவர்கள் படும் துன்பத்தை நினைத்து கருணை உண்டாயிற்று. இதற்காக ஒரு திருவிளையாடல் செய்தார். "என் அந்தப்புரத்தில் இருக்கும் நீ யாரடா?' எனக் கேட்டு, பிள்ளையாரின் கழுத்தை வெட்டிவிட்டார்.

அதே நேரத்தில், வடக்கு நோக்கி ஒரு யானை படுத்திருந்தது. வடக்கு நோக்கி யார் படுத்தாலும், உலக நலனுக்கு ஆகாது என்பது சாஸ்திரம். அந்த நேரத்தில் பார்வதி வந்தாள். தன் மணாளனைக் கண்டித்தாள். பிள்ளைக்கு மீண்டும் உயிர் வேண்டும் என்றாள். சிவபெருமானும், வடக்கு நோக்கி படுத்து, உலக நலனுக்கு எதிர்விளைவைத் தந்து கொண்டிருந்த யானையின் தலையை வெட்டி, பிள்ளையாருக்கு பொருத்தி, மீண்டும் உயிர் கொடுத்தார். தாய், தந்தை கலப்பின்றி பிறந்த அந்தக் குழந்தை, கஜமுகாசுரனை வென்று தேவர்களைப் பாதுகாத்தான்.

யானைத் தலையை விநாயகருக்கு தேர்ந்தெடுத்ததன் மூலம், பல அறிவுரைகள் மனிதனுக்குத் தரப்படுகின்றன. மனிதனின் வாயும், உதடும் தெளிவாக வெளியே தெரிகிறது. மற்ற மிருகங்களுக்கும் கூட அப்படித்தான். ஆனால், யானையின் வாயை தும்பிக்கை மூடிக் கொண்டிருக்கிறது; அது வெளியே தெரியாது. தேவையின்றி பேசக்கூடாது என்பதும், தேவையற்ற பேச்சு பல பிரச்னைகளை ஏற்படுத்தும் என்பதும் இதனால் விளக்கப்படுகிறது.

விநாயகருக்கு, "சுமுகர்' என்ற பெயருண்டு. "சு' என்றால் மேலான அல்லது "ஆனந்தமான' என்று பொருள்படும். அவர் ஆனந்தமான முகத்தை உடையவர். யானையைப் பார்த்தால் குழந்தைகள் ஆனந்தமாக இருப்பது போல, பக்தர்களுக்கும் ஆனந்தத்தை தரவேண்டும் என்பதற்காக இந்த முகத்தை சிவபெருமான் அவருக்கு அளித்தார்.

(நன்றி:தினமலர்-வாரமலர் 5.09.2010)



புதன், 8 செப்டம்பர், 2010

நடிகர் முரளி - திடீர் மரணம் - என் நினைவிற்கு வந்தவை...

எனக்கு சினிமா மீதும் நடிகர்களின் நடவடிக்கை குறித்தும் பல்வேறு சர்ச்சையான கருத்துக்கள் உண்டு.ஆனால் இந்த பதிவில் அவற்றைப் பற்றி எழுதவில்லை.
ஒரு திரைப்பட விழாவில்,நடிகர் சத்யராஜ் "ரொம்ப வருஷமா முரளி காலேஜ் போய்கிட்டே இருக்கார். தமிழக முதல்வரிடம் சொல்லி பாஸ் போட சொல்லணும்ப்பா."என்று கிண்டலாக சொன்னார். இந்த செய்தியைக் கேட்டதும் அனைவருக்கும் சிரிப்புதான் வரும்.

இவர் பெரும்பாலான படங்களில் காதல் ஹீரோவாகவே அறியப்பட்டார்.அதிரடி சண்டைக்காட்சி உள்ள படங்களில் அதிகமாக நடித்திருக்கிறாரா என்று தெரியவில்லை.

அதர்மம்

அப்படி அவர் நடித்த படங்களில் ஒன்று அதர்மம்.நான் ஏழாம் வகுப்பு படிக்கும்போது (1994 என்று நினைக்கிறேன்.) வந்த படம். வீரப்பன் கதை, படத்தின் பின் பகுதியில் அடர்ந்த காடுகள்தான் கதைக்களம் என்று இருந்ததால் என்னை அந்த வயதில் அதிகமாகவே கவர்ந்த படம்.
சின்ன பசங்க நாங்க

இந்தப் படமும் என்னுடைய மிகச் சிறிய வயதில் பார்த்ததுதான்.ரேவதி வாயசைக்கும் "என்ன மானமுள்ள பொண்ணு என்னு மதுரையில கேட்டாக..."பாடலும் வலிப்பு நோய் வந்த சார்லியின் கையில் கத்தியைக் கொடுத்து அவர் கையாலேயே அவரை வில்லன்கள் சாக வைப்பதும் அந்தப் படத்தைப் பொறுத்த வரை என் நினைவுக்கு வரும் விஷயங்கள்.
அவர் நடித்த பல திரைப்படங்களை சேட்டிலைட் தொலைக்காட்சி ஒளிபரப்பில் பார்த்ததுதான். சமுத்திரம்,ஆனந்தம் ஆகிய படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்திருந்தாலும் உறுத்தாத நடிப்பு என்று சொல்லலாம்.

பொற்காலம்-1997

இந்தப் படம் எங்கள் ஊர் திரையரங்கம் ஒன்றில் தீபாவளிக்கு ரிலீசாகி, பொங்கல் வரை சுமார் எழுபத்தெட்டு நாட்கள் திரையிடப்பட்டது. அப்போது நான் அந்த திரையரங்கில் ஆப்ரேட்டர் அசிஸ்டெண்ட்டாக இருந்தேன்.
படத்திற்கு இசை தேவா.

சேலையின் பெருமை சொல்லும் சிகப்புக் கலரு பாடல்,

சிற்பமாகும் மண்ணின் வளத்தைக் கூறும் தஞ்சாவூரு மண்ணு எடுத்து பாடல்,
பச்சைப் பசேல் என்று காட்சியளிக்கும் வயல்வெளிகளில் பாடல்கள் படமாக்கப்பட்ட காலகட்டத்தில், வறட்சியின் குறியீடான கருவேலங்காட்டை களமாக்கி கதாப்பாத்திரங்களின் சூழ்நிலையை உணர்த்தும் பாடல், உடல் ஊனம் ஒரு குறையே இல்லை என்று நெத்தியடியாய் சொன்ன பாடல் என்று படத்தில் இருந்த நாலு பாடல்களும் (கேசட்டில் ஐந்து) ஆழமான கருத்துள்ளவை.

பொறுப்பில்லாத தந்தையாக மணிவண்ணன். இப்படி ஒரு அண்ணன் நமக்கு கிடைக்கமாட்டானா என்று எல்லா பெண்களையும் ஏங்க வைத்த கதாபாத்திரமாக முரளி நடித்திருந்த பொற்காலம் படம் எனக்கு மிகவும் பிடித்த படங்களில் ஒன்று.

என்னதான் தங்கையின் மீது பாசமழை பொழிந்தாலும் அடி மனதில் அவனும் மற்றவர்களைப் போன்ற மன ஓட்டம் உள்ளவன்தான் என்ற வெளியில் தெரியாத, சாதாரணமாக நாம் ஒப்புக்கொள்ள மறுக்கும் உண்மையை வடிவேலு கதாபாத்திரத்தின் வசனம் மூலமாக சாட்டையடியாய் வெளியே கொண்டு வந்திருந்தார் இயக்குனர் சேரன்.

எனக்குப் பல வாழ்வியல் உண்மைகளை உணர்த்தியதுடன், யதார்த்த உலகத்தையும் மனிதர்களையும் எடைபோட கற்றுக் கொடுத்தது இந்த படம்.

ஒருவன் கஷ்டப்பட்டு உழைத்துச் சேர்க்கும் புகழ், சொத்து ஆகியவற்றை அவனது வாரிசுகளும் அனுபவிப்பது இயற்கை. அந்த வகையில், தனது மகனை ஹீரோவாக்கி அழகு பார்த்துக்கொண்டிருக்கும்போதே மாரடைப்பால் மரணமடைதல் என்பது யாரையும் கலங்கடிக்கும் சம்பவம்தான்.
தினக்கூலித் தொழிலாளியாக அல்லது மிகப்பெரிய அதிகாரி என்று எந்த ஒரு மனிதனாக இருந்தாலும், நாற்பத்தைந்து வயது முதல் ஐம்பது வயதுக்குள் மரணமடையும்போது மிக மோசமான அதிர்ச்சியை அளிக்கும். மற்ற வயதில் மரணமடைந்தால் அதிர்ச்சி வராதா என்று நீங்கள் கேட்கலாம். நான் சொன்ன இந்த வயது,மகன் அல்லது மகளின் கல்வி, திருமணம் தொழில் என்று ஒருவனின் வாரிசுகளுக்கு எதிர்காலத்தை தீர்மானிக்கும் அல்லது அதை செயல்படுத்தும் காலகட்டத்தில் ஒருவன் இருக்கும் வயது என்ற காரணத்தால்தான்.
மற்றபடி யார் சொல்லும் ஆறுதல் வார்த்தைகளும் முரளியின் குடும்பத்தாரை முழுவதுமாக சோகத்தின் பிடியில் இருந்து மீட்டு வந்துவிடாது. காலம்தான் அதை செய்யும்.

ஞாயிறு, 5 செப்டம்பர், 2010

கந்தா - ஆசிரியர் - மாணவன் உறவை மையமாக கொண்ட கதைக்களம்.

நான் எல்.கே.ஜி படிக்கும்போது (அப்படியா என்று ஷாக்காக கூடாது.) என் பெயரை ஆங்கிலத்தில் எழுதித்தந்த ஆசிரியையிடம் ஒரு கேள்வி கேட்டதை நினைத்தால் அப்பவே நமக்கு எவ்வளவு அறிவு இருந்துருக்கு என்று பெருமையாகத்தான் இருக்கிறது(?!)
சரவணன் என்ற பெயரை ஆங்கிலத்தில் எழுதினால் ஒவ்வொரு எழுத்துக்குப்பிறகும் A என்ற எழுத்து இருக்கும். மத்தவங்க பேருல எல்லாம் இப்படி இல்ல. என் பேருல மட்டும் ஏன் இத்தனை A ? என்று ஆசிரியையிடம் கேள்வி கேட்டிருக்கிறேன்.

இந்த அதி புத்திசாலி நாளைக்கு தானே நிறைய படிச்சு விஷயங்களைத் தெரிஞ்சுக்கும். ஆனா இப்ப என்ன சொன்னாலும் ஏத்திக்கிற அளவுக்கு  மண்டையில ஒண்ணும் இல்லைன்னு அந்த  ஆசிரியைக்கு நல்லாவே தெரியும் போலிருக்கு.

"அது அப்படித்தான். நீ பெரியவனானதும் இலக்கணம் சொல்லிக்கொடுப்பாங்க. அப்ப ஏன் இத்தனை A அப்படின்னு புரியும்."னு சொன்னாங்க.

இந்த விஷயம் நடுவுல பல காலம் மறந்துடுச்சு.பின்ன எப்படி நினைவுக்கு வந்துச்சுன்னுதானே கேட்குறீங்க?மதராச பட்டினம் படத்து டிரெய்லர்ல ஆர்யா  அந்த ஆசிரியருக்கே எ...ஏ கத்துக்கொடுக்கும் காட்சியைப் பார்த்ததும்தான்.

******

சிறு குழந்தை ஆர்வத்துடன் வரைந்து காட்டும் இயற்கைக்காட்சி ஓவியத்தை மணியம் செல்வன் போன்ற ஓவிய மேதைகளின் ஓவியம் போல அழகாக இல்லையே என்று ரொம்ப சாதாரணமாக ஒரு சாமானிய மனிதன் சொல்லிவிடுவான்.

குழந்தை வரைந்த அந்த ஓவியத்தில் நேர்த்தியைப் பார்க்காமல் அந்தக் குழந்தையின் ஆர்வத்தையும் முயற்சியையும் காண்பது சாதரண மனிதர்களுக்கு அவ்வளவு எளிதான விஷயமில்லை. அது அதிகமாக ஆசிரியர்களிடம் காணப்படும் உன்னதமான குணம்.

ஓவியம் என்று இல்லை, எந்த ஒரு கலை அல்லது தனித்திறனாகட்டும், அதைக் கண்டுபிடித்து ஊக்கப்படுத்தி புதுப்புது சாதனையாளர்களை உருவாக்கியதில் ஆசிரியர்களின் பங்குதான் மிக அதிகமாக இருக்கும்.
இப்போது நான் மனதில் நினைப்பதை இஷ்டத்துக்கு 'பிளாக்'கில் எழுதி (அது எவ்வளவு குப்பையாக இருந்தாலும் சரி.) உங்கள் பார்வைக்கு கொண்டுவந்துவிட முடிகிறது. ஆனால் நான் அச்சில் பார்க்கவேண்டும் என்று தீவிரமாக எழுதத்துவங்கியது கல்லூரியில் சேர்ந்த ஆண்டான 2000த்தில்.

நான் எழுதிய வாசகர் கடிதம் கூட பிரசுரமாகாத காலகட்டம்.2003 ஜனவரி வரை ஒரு பத்திரிகையிலும் என்னுடைய எழுத்துக்கள் பிரசுரமானதே இல்லை.2003 போகிப்பண்டிகை அன்று மாலைமுரசு பொங்கல் மலரில் முதல் சிறுகதை பிரசுரமானது.அடுத்த நாள் தினபூமி பொங்கல் மலரிலும் ஒரு சிறுகதை. இது அன்றைய காலகட்டத்தில் எனக்கு இரட்டிப்பு சந்தோஷத்தைக் கொடுத்தது. அதன்பிறகு ஆறு மாதங்களுக்கு மாலைமுரசு-வாரமுரசில் தொடர்ச்சியாக என்னுடைய சில சிறுகதைகள் பிரசுரமாயின.

ஆனால் 2000 மற்றும் 2001ம் ஆண்டுகளில் கல்லூரி ஆண்டு மலரில் நான் எழுதிய சிறுகதைகளால் பல மாணவர்களிடையே நான்  பிரபலம். இப்போதும் சில நண்பர்கள் என்னுடைய பெயரை தங்களுடைய செல்போன்களில் 'கதா' என்றுதான் பதிவு செய்து வைத்திருக்கிறார்கள்.

இந்த இரண்டு கதைகள் கல்லூரி ஆண்டு மலரில் பிரசுரமானதுடன் வேறு பத்திரிகைகளில் எதுவுமே வரவில்லை என்ற நிலையில் நான் எழுதுவதையே விட்டிருக்க வேண்டியது.

ஆனால் முதலாம் ஆண்டிலேயே முதல் கதையைப் படித்த தமிழ்ப் பேராசிரியர் முனைவர் அ.ஜான்பீட்டர், "தம்பி...ஆண்டு மலருக்கு நிறைய பேர் எழுதிக்குடுத்தாலும் காப்பி அடிச்சதுதான் அதிகமா இருக்கும்.ஆனா உன் எழுத்துல உண்மையாவே நீ கற்பனை செஞ்சிருக்குறது தெரியுது. தொடர்ந்து எழுதிட்டு வா. எந்த வேலைக்குப் போனாலும் எழுதுறதை விட்டுடாத. எல்லாருக்கும் அது சாத்தியப்படாது."அப்படின்னு சொன்னதை மனசுல நினைச்சுகிட்டேன்.

மாவட்ட மைய நூலகத்துல 1999லேர்ந்து உறுப்பினரா இருந்ததால நிறைய படிக்க ஆரம்பிச்சேன். அப்பதான் ரா.கி.ரங்கராஜனின் எப்படி கதை எழுதுவது? புத்தகத்தைப் பத்தி தெரிஞ்சு அதை மதி நிலையத்துலேர்ந்து வி.பி.பி மூலமா வரவழைச்சு படிச்சேன்.

ஒரு கதைன்னா எப்படி இருக்கும்னுங்குற டெக்னிக்கல் விஷயம் ஓரளவு எனக்குப் பிடிபட்டுச்சு. 2003ல இருந்து வெளி பத்திரிகைகள்ல பிரசுரமான கதைகள் எல்லாமே ரா.கி. ரங்கராஜனோட புத்தகத்தைப் படிச்ச பிறகு நான் எழுதுனதுதான்.
தினமலர்-வாரமலர் சிறுகதைப் போட்டியில இரண்டு முறை ஆறுதல் பரிசு,அமுதசுரபியில முத்திரைக்கதை,இலக்கியச்சிந்தனையின் 2006 ஜனவரி மாத சிறந்த சிறுகதைக்கான பரிசு,(இது தொகுப்பு நூலில் இடம்பெற்றிருக்கிறது.) தமிழ்நாடு அரசு குழந்தைத் தொழிலாளர் மறுவாழ்வு மையமும் ராணி வார இதழும் இணைந்து நடத்திய சிறுகதைப் போட்டியில் முதல்பரிசு. மாலைமுரசு வதீபாவளி மலரில் கவிதைக்கான வெள்ளி குங்குமச்சிமிழ் பரிசு என்று 2007ம் ஆண்டுக்குள் நிறையவே எழுதி வந்த நான் இடையில் சில காலம் சோம்பேறித்தனத்தால் மிகக் குறைவாகவே எழுதி வருகிறேன்.

நாலு பேராவது என்னுடைய எழுத்தைப் படிக்கும் வகையில் எழுதி வருகிறேன் என்றால் இந்த ஆர்வத்துக்கு தூண்டுகோலாக இருந்த தமிழ்ப்பேராசிரியர் முனைவர்.அ.ஜான்பீட்டரும்,புத்தகத்தின் மூலம் ஆசானாக இருந்து கதை என்றால் எப்படி எழுத வேண்டும் என்று எனக்கு சொல்லிக்கொடுத்த ரா.கி.ரங்கராஜனும் என் வாழ்வில் முக்கிய இடம் பிடித்த குருநாதர்கள்.

******

பல பேராசிரியர்கள் மாணவர்கள் பாஸ் மார்க் வாங்கினால் அல்லது முதல் மார்க் வாங்கினால் போதும் என்ற அளவில்தான் பாடம் நடத்துவார்கள். ஆனால் புத்தகத்தில் இருப்பது மட்டும் தெரிந்தால் போதாது, நீ படிக்கும் பாடம் வாழ்விலும் நீ வேலைக்குச் செல்லும் இடத்திலும் உன்னை உயர்த்த வேண்டும் என்று சொல்லிப் பாடம் நடத்திய பேராசிரியர் கோ.இராமநாதன் அவர்கள்.

பி.காம் படிக்கும்போது இவர் கொடுத்த ஆலோசனைகளின் பேரில்தான் நாங்கள் தேர்வுக்குத் தயாராவோம்.படிப்பு முடிந்த சில மாதங்களிலேயே நூறாண்டுகளாக இயங்கி வரும் ஒரு உற்பத்தி சார்ந்த நிறுவனத்தில் அனைத்து வகையான கணக்குகளையும் மிக எளிதாக கையாண்டேன்.

******

நான் பார்த்த ஆசிரியர்களில் சிலரின் சிறப்புக்களைப் பற்றி சொல்லியாயிற்று.வேறு சிலரைப் பற்றி குறை சொல்லவில்லை என்றால் எனக்கும் தூக்கம் வராது. படிப்பவர்களுக்கும் சுவாரஸ்யம் இருக்காது. அதனால் இந்த தகவல்கள்.

ஒரு பிரிண்டிங் பிரஸ் இருந்த தெருவிலேயே கோவில் திருவிழா.அதற்குரிய அழைப்பிதழ்களை அந்த அச்சகத்தில்தான் பிரிண்ட் செய்திருக்கிறார்கள்.அந்த தெருவின் பெயரையே தவறாக அச்சிட்டிருந்தார்கள். தொழிலில் ஒரு கவனம் இல்லாததால்தான் இந்த தவறு என்று நான் சொன்னேன்.

சரியாக திருத்தி வாங்காதது அழைப்பிதழ் அச்சடிக்க கொடுத்தவரின் தவறு. வேலை செய்பவர் இதையெல்லாம் கவனித்துக்கொண்டிருக்க முடியாது என்று ஒருவர் கோபப்பட்டார்.அவர் அரசுப்பள்ளி ஒன்றில் தமிழ் ஆசிரியர்.

அந்த அச்சகம் இருக்கும் தெருவின் பெயரையே தவறாக அச்சடிக்கிறார்கள் என்றால் தொழிலில் கவனம் இல்லை என்பதுதான் என்னுடைய கருத்து.

செப்.15 நாணயம் விகடனில் ஒரு கட்டுரையின் சில வரிகள் என்னுடைய கருத்தை உங்களுக்கு விளக்கும் என்று நினைக்கிறேன்.
எந்த ஒரு தொழிலாக இருந்தாலும் ஒருவருடைய வேலையை மற்றொருவர் மேற்பார்வையிடுவது என்பது கட்டாயமாகிவிட்டால் அவர் ஒரு சிறந்த புரஃபஷனல் இல்லை.பதிலாக அவர் ஒரு பயிற்சி பெறுபவர் என்கிற நிலையில்தான் இருக்கிறார் என்று அர்த்தம்.

தனது வேலையை நன்றாகச் செய்து விட்டோம் என தனக்குத்தானே சர்ட்டிஃபை செய்து கொள்ளக்கூடிய திறமை.(எல்லா தொழிலிலும் இது பொருந்தாமல் போகலாம். ஆனால் இந்த குணம் ஒருவர் வாழ்வின் முன்னேற்றத்தில் முக்கியப் பங்கு வகிக்கிறது என்று சொல்லலாம்.

******

எங்கள் ஊர் இயக்குனர் பாபு K. விஸ்வநாத் இயக்கும் படத்தில் ராஜேஷ் ஆசிரியராகவும் கரண் மாணவனாகவும் நடிக்கிறார்கள். இது ஆசிரியர் மாணவர் உறவு பற்றி எப்படி சொல்கிறது என்று பார்ப்போம்.

ஞாயிறு, 15 ஆகஸ்ட், 2010

தளபதி முதல் எந்திரன் வரை 1

இவரு பெரிய வி.ஐ.பின்னு நினைப்பு...படம் பார்த்த அனுபவங்களை அப்படியே அசைபோட வந்துட்டாருன்னு சொல்லிகிட்டே நிறைய பேரு பல்லைக் கடிக்கிறது எனக்கும் கேட்குதுங்க.ஆனா என்ன பண்றது?...சில விஷயங்களை இப்ப நினைச்சா எனக்கே சின்னப்புள்ளைத்தனமாத்தான் தெரியுது.அதனாலதான் இந்த பதிவு.



ராஜா சின்ன ரோஜா படம் திருவாரூர் சோழா தியேட்டரில் திரையிடப்பட்டபோது அங்கே வாழைமரம் தோரணம் என்று திருவிழாக்கோலம் பூண்டிருந்ததை அம்மாவுடன் கடைத்தெருவுக்குப் போகும்போது பார்த்திருக்கிறேன்.அப்போதெல்லாம் நான் தொலைக்காட்சி பார்த்த அனுபவம் என்றால் கோவில் திருவிழா அல்லது திருமண நிகழ்ச்சியின் போது விசிஆர் பயன்படுத்தி திரையிடப்பட்ட படங்களைப் பார்த்ததாகத்தானிருக்கும்.

நான் ஐந்தாம் வகுப்பு படிக்கும்போது தளபதி படம் வெளிவந்தது.அப்போது அந்தப் படம் பார்க்க எங்கள் வீட்டில் அழைத்துச்செல்லவில்லை. என் தந்தை வைத்திருந்த டீக்கடையில் மாதக்காலண்டர் ஒன்றை அப்பாவின் நண்பர் ஒருவர் கொண்டுவந்து தந்தார். பக்கத்துக்கு ஒரு தளபதி படத்தின் ஸ்டில்ஸ் அச்சாகி இருந்தது.

பானுப்ரியாவின் கணவராக படத்தில் நடித்த தினேஷ் தலையின் பின்புறம் மங்கலாகத் தெரிய,  ரஜினிகாந்த் முகம் மட்டும் ஷோல்டர் ஷாட்டாக இருக்கும் ஸ்டில், போலீசார் ரஜினியை லாக்கப்பில் சித்ரவதை செய்யும் காட்சி, சுந்தரி என்று தொடங்கும் பாடலில் ஷோபனா ரஜினிக்கு மாலையிடும் காட்சி, உட்பட இன்னும் சில புகைப்படங்கள் அந்த காலண்டரில் அச்சாகி இருந்ததன.
சந்தோஷ்சிவன் ஒளிப்பதிவில் உருவான இந்தப் படத்தின் ஸ்டில்களில் இருந்த வித்தியாசமான (இருபது ஆண்டுகளுக்கு முன்பு) லைட்டிங் அந்த வயதிலேயே என்னைக் கவர்ந்தது.ஆனால் அந்தப் படத்தை நான் சன்டிவியில் பார்த்த பிறகுதான் திரையரங்கில் பார்த்தேன்.கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகளுக்குப் பின்பு.

திருவாரூரில் இருந்த பேபி தியேட்டரில் மணிரத்னம் படத்தில் இருக்கும் லைட்டிங் போலவே எல்லாப் படங்களுமே மங்கலாகத்தான் தெரியும். வேறு என்ன செய்வது என்று தளபதியை அந்த திரையரங்கத்தில் பார்த்து ரசித்தேன்.(?!)

இப்போது அந்த தியேட்டர் இடிக்கப்பட்டதால் மரம், செடி, கொடி, புதர்கள்தான் அங்கே இருக்கின்றன. இன்னும் அந்த தியேட்டர் நினைவாக மிச்சமிருப்பது அந்த தியேட்டர் இருந்த சாலைக்கு பேபி டாக்கீஸ் ரோடு என்ற பெயர் மட்டும்தான்.
******
வெயில் படத்தில் பசுபதி சிறுவயது பையனாக தியேட்டர் கேபினில் இருக்கும்போது பிலிமில் நேரடியாக படத்தைப் பார்க்கிறேன் என்று அவ்வளவு பிலிமையும் உருவிக் குவித்துவிடுவார்.

பிலிம் சுருளை புரொஜக்டரில் பொருத்தி திரையிட உதவும் ஸ்பூல் ஒரு சக்கரம் போலத்தான் இருக்கும். இரு பக்கமும் கம்பிகள் இருப்பதால் பிலிம் உருவிக்கொள்ளாமல் பாதுகாப்பாக இருக்கும். ஒரு ஸ்பூலில் நிறைய இருக்கும் பிலிம் இருபத்தைந்து நிமிடம் வரை ஓடும்.அந்த ஸ்பூல் அளவை விட அதிகமாக பிலிம் இருந்தால் அதை ஓவர் லோடு என்று சொல்வோம்.

புரொஜக்டரில் இருந்து கீழே இறங்கும் பிலிம் மிகச் சரியாக சுற்றிக்கொள்ளும்.ஆனால் அதை ரீவைண்ட் செய்யும்போது உருவிக்கொள்ளாமல் சுற்றுவதுதான் ஆப்ரேட்டர்களுக்கும் அசிஸ்டெண்ட்டுகளுக்கும் சவால்.ஓட்டுநர் வேலை போல் இதுவும் முதலில் தயக்கத்தில் ஆரம்பித்து பிறகு பழக்கத்தில் வழக்கமாகிவிடும்.

புரொஜக்டரில் ஓடிமுடிந்த பிலிம் தலைகீழாக இன்னொரு ஸ்பூலில் மெஷின் மூலமாக சுற்றிக்கொள்ளும். அதிலிருந்து காலியாக உள்ள ஸ்பூலில் மீண்டும் பிலிமை கையால் சுற்றி லோட் செய்வதுதான் ரீவைண்ட் செய்வதாகும்.

வலது கையால் லீவரை சுற்றி ரீவைண்ட் செய்யும்போது இடது கையால் பிலிம் இருக்கும் மற்றொரு ஸ்பூலை அழுத்திப் பிடித்துக்கொள்ள வேண்டும். அந்தக் கையை எடுத்தால் பிலிம் இழுக்கப்படும் வேகத்தில் வேகமாக உருவிக்கொண்டு சிக்கிக்கொள்ளும்.

ஒரு கையால் ரீவைண்ட் செய்யும்போது அப்படி இடது கையை எடுத்தாலும் அந்த ஸ்பூல் ஒரே சீராக ஓடினால் பிலிமை பேக் செய்து ஸ்பூலில் இருந்து கழற்றும் பணியைக் கற்றுக்கொள்ளத் தயாராகி விட்டதாக அர்த்தம்.

இப்போது இந்த விளக்கங்கள் ஏன் என்று நீங்கள் கேட்கலாம். இன்னும் சில காலத்தில் பிலிமைப் பயன்படுத்தி திரையிடும் திரையரங்கங்களே இல்லாமல் போகும். சுமார் நூறு ஆண்டுகள் சினிமாவில் நீடித்திருந்த புரொஜக்டர் தொழில்நுட்பத்தை எனக்குத் தெரிந்த தமிழில் ஆவணப்படுத்தும் முயற்சிதான் இது.

எனக்கு ஓய்வு நேரம் கிடைக்கும்போது இந்த பதிவு தொடரும்...