Search This Blog

நூலகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நூலகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 3 நவம்பர், 2013

காவலர்களுக்கு நூலகம் உருவாக்கிய திருவாரூர் எஸ்.பி.

தொலைக்காட்சி ஆதிக்கத்தினால் புத்தகம் வாசிக்கும் பழக்கமே மிகவும் அரிதாகிக்கொண்டிருப்பதை பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம்.

திருவாரூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திரு.காளிராஜ் மகேஷ்குமார் ஐ.பி.எஸ் இங்குள்ள காவலர்கள் படிப்பதற்காக நீண்ட தூரம் செல்வதை பார்த்து நூலகத்தை உருவாக்கியுள்ளார்.

இது தொடர்பான கட்டுரை தினமலர் - வாரமலரில் இன்று வெளியாகியுள்ளது.

அது அப்படியே உங்கள் பார்வைக்கு.

ஒரு மாவட்டத்திற்கு, கண்காணிப்பாளராக இருந்தோமா, சட்டம் ஒழுங்கு, குற்றங்களை பார்த்தோமா என்றுதான், பெரும்பாலான, ஐ.பி.எஸ்., அதிகாரிகள் இருக்கின்றனர். இதில், சிலர் விதிவிலக்கு. அவர்களில் ஒருவர்தான், காளிராஜ் மகேஷ்குமார் ஐ.பி.எஸ்., திருவாரூர் மாவட்ட, காவல் துறை கண்காணிப்பாளர்.

இவர், வாரமலர் இதழில், இடம் பெற காரணம், கான்ஸ்டபிள்களும், தன்னைப் போல, ஐ.பி.எஸ்., அதிகாரிகளாக வர வேண்டும் என்பதற்காக, இவர் எடுத்துள்ள முயற்சிகள்தான். உயர் அதிகாரிகள் முதல் கான்ஸ்டபிள்கள் உட்பட, அனைத்து பிரிவு போலீசாரையும், இதில், ஸ்பான்சர்களாக சேர்த்து, போலீசாருக்கென்றே ஒரு நூலகத்தை ஆரம்பித்துள்ளார்.

இந்நூலகத் திற்கு, எஸ்.பி., முதல் கான்ஸ்டபிள் வரை, புத்தகங்களை வழங்கியுள்ளனர். தவிர, ஒவ்வொரு போலீசாரும், சுழற்சி முறையில், மாதந்தோறும், ஒரு நாளிதழ், வார இதழை, தங்கள் சொந்த செலவில், வழங்கி வருகின்றனர். எதிர்காலத்தில், அரசு நூலகம் போன்று, அனைத்து வசதிகளையும் ஏற்படுத்த திட்டமிட்டுள்ளனர்.

ஆயுதப்படை டி.எஸ்.பி., திருமலைகுமார் கூறியதாவது:
அரசு நூலகம் அமைக்க, சொந்தக் கட்டடம் இருக்க வேண்டும். திருவாரூர் மாவட்ட ஆயுதப்படையில், கடந்த, 2000ம் ஆண்டிலிருந்து, நூலகத்திற்கான, கட்டடங்கள் கட்டப்பட்டு வருகின்றன. 
 
 தற்போது, போலீஸ் குடியிருப்பு ஒன்றை, தற்காலிக நூலகமாக, மாற்றியுள்ளோம். டேபிள், சேர்களை சொந்த செலவில், எஸ்.பி., வழங்கியுள்ளார். நூலகம், தற்போது, தினமும் காலை, 8:00 மணி முதல், மதியம், 12:00 மணி வரையிலும், மாலை, 4:00 மணி முதல், இரவு, 9:00 மணி வரையிலும் இயங்குகிறது. விடுமுறை கிடையாது. கர்ப்பிணி பெண் போலீஸ் ஒருவரை, நூலகராக நியமித்துள்ளோம்.

தற்போது, ஐ.பி.எஸ்., - ஐ.ஏ.எஸ்., மற்றும் போலீஸ் தேர்வுக்கான, நூல்களை வைத்துள்ளோம். போலீஸ் குடும்பங்கள் மட்டுமே, தற்போது, உறுப்பினர்களாக உள்ளனர். விரைவில், அரசு நூலகத்துடன் இணைந்து, இன்னும், புதுவித திட்டங்களை உருவாக்க உள்ளோம்.


Image Credit : dinamalar.com

 இதற்கு வித்திட்ட, மாவட்ட எஸ்.பி., காளிராஜ் மகேஷ்குமார் கூறுகையில், 'நான், எந்த மாவட்டத்திற்கு சென்றாலும், அங்குள்ள போலீசாருக்கும், அவர்களது குடும்பத்தினருக்கும், ஏதாச்சும் செய்யணும்ன்னு நினைப்பேன்.

ராமநாதபுரத்தில் வேலை செஞ்சப்போ, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் திட்டத்தை கொண்டு வந்தேன். திருவாரூக்கு வந்த பின், படிப்பதற்காக, போலீசார், நீண்டதூரம் சென்றனர். அதை பார்த்த பின் தான், நூலகம் அமைக்கும் எண்ணம் உருவானது.

'முக்கியமாக, ஐ.பி.எஸ்., தேர்வுக்கு தயார் செய்வது குறித்து, கூடுதல் எஸ்.பி., ஒருவர் மூலம், பயிற்சி அளித்தோம். பயிற்சிக்கு பின், அந்த கூடுதல் எஸ்.பி., தன் நூல்களை எல்லாம், இங்கே கொடுத்து விட்டார். அதேபோல், நான் உட்பட, மாவட்ட போலீஸ் அதிகாரிகள், ஏதாவது விழாக்கள், நிகழ்ச்சிகளில் பங்கேற்கும்போது, நூல்களை மட்டுமே பெற்று, நூலகத்திற்கு வழங்குமாறு கூறியுள்ளேன். இது நல்ல மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கு...' என்றார்.

இவர், விவசாய பட்டப்படிப்பு படித்தவர் என்பதால், தற்போது ஆயுதபடை மைதானத்தை சுற்றி, பலவகை பழ மரங்களை நட்டு, பராமரித்து வருகிறார். தவிர, ஆலமரத்தின், கிளைகளை வெட்டி, மைதானத்தில் நட்டு, நிழல்தரும் வகையில், வளர ஏற்பாடு செய்துள்ளார்.

தொடர்புக்கு இமெயில் முகவரி: skmaheships@gmail.com

-----------
இந்த கட்டுரையை தினமலர் இணையதளத்தில் படிக்க...

புதன், 17 ஏப்ரல், 2013

பொதுமக்கள் நூலகம் வருவதை நூலக ஊழியர்கள் தடுக்கிறார்களா?



திருவாரூர் மாவட்ட மைய நூலகம் அனைத்து வசதிகளுடன் இருந்தாலும் தினசரி வாசகர்களின் எண்ணிக்கை 300 முதல் 600 என்ற சராசரி  அளவில்தான் இருக்கிறது. திருவாரூர் நகரின் மையப்பகுதியான தெற்குவீதியில் இருக்கும் கல்யாணசுந்தரம் நூலகத்திற்கே  20 ஆண்டுகளுக்கு முன்பு தினசரி 400 முதல் 500 வாசகர்கள் வந்துகொண்டிருந்தார்கள். இத்தனை ஆண்டுகளில் கல்வித்தரம் கூடியிருக்கிறது, மக்கள் தொகை கூடியிருக்கிறது என்று புள்ளி விபரங்கள்தான் சொல்கின்றனவே தவிர பாடப்புத்தகம் தவிர்த்த படிப்பு கேவலமான சூழ்நிலையில்தான் இருக்கிறது. தொலைக்காட்சியை முக்கிய காரணியாக சுட்டிக்காட்டினாலும் ஒரு மாவட்ட மைய நூலகத்திற்கு தினசரி 2ஆயிரம் வாசகர்களாவது பயன்படுத்தவில்லை என்றால் எங்கே பிரச்சனை என்று யோசிக்க வேண்டியிருக்கிறது.

போட்டித்தேர்வு எழுதும் பலருக்கு திருவாரூர் மாவட்ட மைய நூலகத்தில் இயங்கும் தனிப்பிரிவு மிகவும் உதவியாக இருக்கிறது. ஒத்துக்கொள்கிறோம். ஆனால் சாதாரண பொழுதுபோக்கு என்ற அளவில் தொலைக்காட்சியை தவிர்த்து எதாவது படிப்போம் என்று நூலகத்திற்கு வரும் வாசகர்கள் நொந்து போய் வருகையை நிறுத்திக்கொள்ளும் அளவுக்குதான் வெகுஜன இதழ்கள் இங்கே வாசிக்க கிடைக்கின்றன.

திருவாரூர் மாவட்ட மைய நூலகம் ஊருக்கு ஒதுக்குப்புறத்தில் நாகைபுறவழிச்சாலையில் அபாயகரமான கனரகப் போக்குவரத்தைக் கடந்து செல்லும் வகையில் இருக்கிறது. இது வயதானவர்கள், பள்ளி மாணவ மாணவியர்கள் இந்த நூலகத்தை அதிக அளவில் பயன்படுத்த தடையாக இருக்கும் முதல் காரணியாகும்.

அடுத்து நூலகத்தின் தினக்கூலி பணியாளர்கள் நிறுத்தப்பட்டுவிட்டதால் திருவாரூர் கடைத்தெருவில் சென்று வார இதழ்களை வாங்கி வர ஆள் இல்லை என்று உயர் அலுவலர்கள் சாக்குப்போக்கு சொல்லிவிடுகிறார்கள். நகரிலிருந்து 2 கிலோமீட்டர் தூரம் பயணம் செய்து ஒரு மேம்பாலத்தில் ஏறி இறங்கி சிரமப்பட்டு சென்று பார்த்தால் முதல் வாரம் வரவேண்டிய வார இதழ்கள் கூட இருக்காது.

11-4-2013 முதல் 14-4-2013 வரை நான்கு நாட்கள் தொடர்ந்து நூலகம் விடுமுறை. அடுத்து வந்த திங்கள், செவ்வாய் இரண்டு வேலை நாட்களில் கூட 10-4-2013 வரை வரவேண்டிய வார இதழ்களைக்கூட வாங்கி வைக்கவில்லை. கேட்டால் ஆள் இல்லை என்று சால்சாப்பு.

மாதம் 20 ஆயிரம் முதல் 30 ஆயிரம் வரை சம்பளம் வாங்கிக்கொள்வோம். வாசகர்கள் கணிணியில் பிரெளசிங் செய்ய இருக்கும் அறையிலிருந்து கணிணியை வெளியே எடுத்துவைத்துவிட்டு அந்த அறையில் ஏசியில் தூங்குவோம். ஆனால் யாரும் எதையும் கேட்டுவிடக்கூடாது. வாசகர்கள் வந்தால் இருப்பதை படித்துவிட்டு பேசாமல் போக வேண்டியதுதானே. நிர்வாகத்தில் தலையிட இவர்கள் யார் என்று கூட சிலரை திட்டுவதாக கேள்வி. உண்மை என்னவென்று தெரியவில்லை.

நூலகத்தில் வாங்கச்செய்வதற்காக சில வார இதழ்களும், மாத இதழ்களும் நூலக அலுவலர்களுக்கு பணம் கொடுத்திருக்க கூட வாய்ப்பு உண்டு. அந்த பணம் மட்டும் வேண்டும். ஆனால் நூலகத்திற்கு வர வேண்டிய புத்தகங்களை ஒழுங்காக வாங்கி வர மாட்டோம். மேலும் தினசரி 10 முறை டீ, காபி, சாப்பாடு வாங்கி வர ஆட்களை எப்படியாவது தயார் செய்து பேருந்துநிலையம், கடைத்தெரு பகுதிக்கு அனுப்புவோம். அது எங்கள் உரிமை என்று கூட நூலக ஊழியர்கள் கேட்க வாய்ப்பு இருக்கிறது.

மக்கள் குடித்து சீரழிந்து பிறரையும் சாகடிக்கும் வகையில் வாகனம் ஓட்டுகிறார்கள். அந்த மது வியாபாரம் செய்யும் இடங்கள் ஆண்டுக்கு 4நாள் அல்லது 5 நாட்கள்தான் விடுமுறை. ஆனால் மக்கள் அறிவை விருத்தி செய்துகொள்ள வேண்டிய நூலகத்தை எல்லா அரசு விடுமுறை நாட்களிலும் சாத்திவிடுகிறார்கள். வேலை வெட்டி இல்லாதவனும் போட்டித்தேர்வுக்கு படிப்பதற்காக எந்த வேலைக்கும் செல்லாமல் இருப்பவனும் மட்டும்தான் நூலகத்தை பயன்படுத்திக்கொள்ளலாம் என்ற அளவில்தான் இப்போதைய வேலை நாட்களும் வேலை நேரமும் இருக்கிறது.

தாலுக்கா நூலகம் மற்றும் மாவட்ட மைய நூலகத்தின் வேலை நேரம் 12 மணி நேரம். நிரந்தர ஊழியர்களுக்கு ஆறு மணி நேர வேலை வீதம் 2 பிரிவாக இருக்கிறார்கள். நாட்டில் எந்த துறையில் ஆறு மணி நேர வேலை இருக்கிறது. அந்த நேரத்தில் கூட இவர்கள் வேலை செய்யமாட்டார்கள் போலிருக்கிறதே என்று நினைக்கத் தோன்றுகிறது.

மூன்று புகைப்படத்தையும் பார்த்தால் காட்டு பங்களா போல் இருக்கும் நூலகத்தின் நிலையும், மேம்பாலத்துக்கு செல்லும் அபாயகரமான சாலையின் அமைப்பும் புரியும்.

இது திருவாரூர் மாவட்ட மைய நூலகத்தின் நிலை. இன்னும் தமிழ்நாடு பூராவும் சுற்றி வந்தால் என்ன கதியாக இருக்குமோ தெரியவில்லை.

வேறு சில வாசகர்கள் இந்த நூலகத்தின் செயல்பாடு குறித்து புகார் கொடுத்ததாகவும் அந்த புகார்கள் இந்த நூலக உயரதிகாரிக்கே உரிய விசாரணை மேற்கொள்ளும்படி வந்ததாகவும், காழ்ப்புணர்ச்சி காரணமாக சிலர் பொய்ப்புகார் கொடுத்துவிட்டதாக பைல்கள் மூடப்படுவதாகவும் சிலர் கூறுகின்றனர். இதுவும் எந்த அளவுக்கு உண்மை என்றே தெரியவில்லை.

நூலக ஊழியர்களின் போக்கு மறைமுகமாக நூலகத்திற்கு வருபவர்கள் தாமாகவே வராமல் இருந்துவிடச்செய்யும் நோக்கத்துடன் செய்வதாக கூட இருக்கலாம்.

உண்மை அவரவர் மனசாட்சிக்குதான் தெரியும்.
---------------------------------

பெரும்பாலும் அரசு ஊழியர்களின் அராஜகம் எப்படி இருக்கிறது என்ற சாம்பிளுக்கு பின்வரும் தகவல் கூடுதல் இணைப்பு.
***************
சேலம் அரசு மருத்துவமனையில் லஞ்சம் தரமுடியாத பெண்ணை ஆஸ்பத்திரி ஊழியர் விரட்டி அடித்து அந்த பெண்ணுக்கு பேருந்து நிலையத்தில் குழந்தை பிறந்த செய்தி பரபரப்பாக இருக்கிறது. பிரச்சனையை விசாரிக்கும் அதிகாரி, கடந்த சில மாதங்களில் 600 பிரசவம் ஆன இந்த ஆஸ்பத்திரியில் இது ஒன்றுதான் இப்படியாகிவிட்டது என்று சொல்கிறார்.

ஆமாம் அது உண்மைதான் ஐயா...எல்லாரிடமும் காசு கேட்டதும் கொடுத்திருப்பார்கள். இந்த பெண்ணிடம் அதற்கு பணம் இல்லாததால் விஷயம் வீதிக்கு வந்துவிட்டது.