Search This Blog

காதல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
காதல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 14 பிப்ரவரி, 2011

காதல் என்பது...

தமிழ் சினிமாவில் காதலை எவ்வளவு முடியுமோ அவ்வளவு மோசமாக அடித்து துவைத்து பிழிந்து விட்டார்கள் என்று நினைக்கிறேன். அதனால் தான் இப்போது வரும் படங்களில் வரும் காதல் காட்சிகள் பெரும்பாலும் அபத்தமாகவே இருக்கின்றன.

2000வது ஆண்டுக்கு முன்பு வரை படங்களில் வரும் காதல் காட்சிகள் அவ்வளவு சுவாரஸ்யமாக இருக்கும். ஆனால் இப்போது வித்தியாசம் என்ற பெயரில் அபத்தமாகத்தான் எதையாவது செய்கிறார்கள் என்று தோன்றுகிறது. என் வயது முப்பதை தொடப்போவது கூட  இதற்கு காரணமாக இருக்கலாம்.

அது போகட்டும். சென்ற ஆண்டு யூத்ஃபுல் விகடனில் நான் கண்ட நிஜக்காதல் என்ற தலைப்பில் ஒரு கட்டுரை வெளியானது. நான் கல்லூரியில் படிக்கும்போது சக மாணவர்கள் எல்லாம் ஏதாவது ஒரு கனவு தேவதையை மனதில் நினைத்து டூயட் பாடிக்கொண்டிருந்த நேரம், சக மாணவி ஒருத்தி என்னிடம் வந்தாள். "நான் பதினோராம் வகுப்பு படிக்கும்போதில் இருந்தே ஒருவரை நேசிக்கிறேன். இது சரியா, நான் அவரை நம்பி கல்யாணம் பண்ணிக்கலாமா என்று அவள் கேட்கும் அளவுக்கு நான் பொறுப்பான ஆளாக தெரிந்திருக்கிறேன்.(நான் ரொம்ப நல்லவனாக்கும் அப்படின்னு பில்டப் கொடுக்க விரும்பலை. டீனேஜ் வயதில் எல்லோரையும் போல் இளம் பெண்களைப் பார்க்கும்போது மனதில் ஈர்ப்பு ஏற்பட்டது உண்மைதான். ஆனால் குடும்ப சூழ்நிலை காரணமாக வேலை முழு நேரம் படிப்பு பகுதி நேரம் என்ற அளவில் ஆகிவிட்டது.வருமானத்தை தேடி ஓடினேன்...ஓடினேன் என்ற அளவில்தான் இன்னமும் இருக்கிறேன்.)

அந்த மாணவி என்னிடம் ஆலோசனை கேட்பதற்கு முக்கிய காரணம், அப்போது என்னுடன் படித்துக்கொண்டிருந்தவர்களில் நான்தான் நன்றாக படிப்பவன் (செய்தி, கதை, கட்டுரை என்று கையில் சிக்கும் எல்லாவற்றையும்) என்பதால்தான்.

அந்த மாணவி வீட்டின் எதிர்ப்பை மீறி உறுதியாக நின்று காதலித்தவனையே திருமணமும் செய்து கொண்டாள். இப்போது ஒரு குழந்தை இருக்கிறது.


இதே போல் வேறு சில காதலர்களையும் நான் சந்தித்திருக்கிறேன்.

தனியார் நிறுவனத்தில் வேலை செய்த இருவர் காதலித்தார்கள். அந்தப் பெண் தன் காதலனின் ஜாதகத்திற்கு பொருந்தும் வகையில் தனக்கும் ஜாதகம் தயார் செய்து இரு  வீட்டாரின் சம்மதத்தோடு திருமணம் செய்து கொண்டாள். இருவரும் வேறு வேறு ஜாதி. ஆனால் இருவரின் வீட்டிலும் ஜாதி நம்பிக்கையை காட்டிலும் ஜாதக நம்பிக்கை அதிகமாக இருந்தது இவர்களின் அதிர்ஷ்டம்தான் என்று சொல்ல வேண்டும்.

இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால், அந்தப் பெண் தன் காதலனின் சகோதரன் மனைவி கொண்டுவந்ததைக் காட்டிலும் அதிகமான வரதட்சணைதான் வேண்டும் என்று பிறந்த வீட்டிடம்  அடம் பிடித்ததுதான்.


அடுத்த சில காதல் விவகாரங்கள் உறவினர் வீடுகளில் நடந்தது. முன்பெல்லாம் மிக அதிகமாக எதிர்ப்பு தெரிவித்து சாகும் வரை ஒதுக்கி வைத்திருந்த சம்பவங்கள் எல்லாம் என் கண் எதிரே நடந்திருக்கிறது. ஆனால் இப்போது எல்லாம் அந்த அளவுக்கு எதிர்ப்புகள் இல்லை. அதற்கு முக்கிய காரணம், கணிணிப்புரட்சிதான். இப்போது தாராளமயமாக்கல் கொள்கைக்குப் பின்பு ஒரு காலத்தில் பலரும் கற்பனை செய்து பார்க்க முடியாத அளவுக்கு மிக இளம் வயதில் மிக அதிகமாக சம்பாதிக்கத் தொடங்கி விடுகிறார்கள்.

அந்த பணம்தான் பல பெற்றோர்களின் காதல் ஏற்பு கொள்கைக்கு காரணமாக இருக்கிறது.

நான் சிறுவனாக இருக்கும்போது, இளம்பெண்கள் பின்னாலேயே சைக்கிளில் செல்லும் இளைஞர்களை மோசமாக திட்டிய ஒருவர் சமீபத்தில் தனது மகளுக்கு அவள் காதலனையே திருமணம் செய்து வைத்திருக்கிறார்.

அதற்கு அவர் சொல்லும் காரணம், வளர்ந்த புள்ளை, அவளுக்கு நல்லது கெட்டது தெரியாதா என்ன...இப்படி அவர் பேசக் காரணம் காதலித்த அந்த பெண் சென்னையில் ஒரு கணிணி நிறுவனத்தில் மாத சம்பளமாக அரை லகரத்துக்கு மேல் வாங்குகிறாள்.

பல பெற்றோர்களுக்கு தங்கள் மகனோ, மகளோ தேர்ந்தெடுத்திருப்பது நல்ல வாழ்க்கைத்துணைதானா என்ற அக்கறை அவ்வளவாக கிடையாது. நாம் சொல்பவரை திருமணம் செய்து கொண்டார்கள் என்றால் வெளியில் இருப்பவர்களிடம் தன் மகன், மகள் தன்னுடைய பேச்சை மீற மாட்டார்கள் (அடிமைகள்) என்பதை சொல்லிக்கொள்ளும் ஆசை மட்டுமே. இப்போது இந்த மனோபாவம் மாறியிருக்கிறது என்று நீங்கள் சொல்லலாம். ஆனால் பொருளாதாரக்காரணங்கள் பல பெற்றோர்களை வேறு வழியின்றி மாற வைத்திருக்கிறது என்பதே என்னுடைய தனிப்பட்ட கருத்து.

கிட்டத்தட்ட முப்பது வயதாகும் பெண் தனியார் நிறுவனத்தில் வேலை செய்துகொண்டிருக்கிறார். அவரது வருமானத்தை முக்கியமாக கருதும் அவரது பெற்றோர் மகளின் திருமணப்பேச்சை எடுப்பதே இல்லை என்பதை விட கவனமாக தவிர்த்துவருகிறார்கள் என்று சொல்லாம். இப்படிப்பட்டவர்களை நான் இது நாள் வரை கதைகளிலும் சினிமாக்களிலும் மட்டும்தான் அறிந்திருந்தேன். கல்லூரியில் என்னுடன் படித்த மாணவியையே இந்த நிலையில் பார்க்கும்போது எனக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை. பல சூழ்நிலைகளில் ஒரு சாமானியனாக வெறும் பார்வையாளனாகவே கடந்து செல்லவேண்டியிருக்கிறது.

இந்த இருபத்து ஒன்பது வயது பெண்ணின் கதை இப்படி என்றால் மூன்று தினங்களுக்கு முன்பு 20வயது நிரம்பாத பத்தாம் வகுப்பு கூட படிக்காத பெண் காதலனுடன் தலைமறைவாகிவிட்டாள். தந்தை இறந்து விட்ட நிலையில் அந்தப் பெண்ணின் தாய் மிகக்கடுமையாக உழைத்து மகளின் திருமணத்தை நல்லபடியாக நடத்த வேண்டும் என்று போராடிக்கொண்டிருக்கும் நேரத்தில் காதலுக்கு எதிர்ப்பு வருமோ என்று அஞ்சி இவள் அவனுடன் தலைமறைவாகி விட்டாள்.

தினம் தினம் இப்படி பல சம்பவங்களைப் பார்க்கிறேன். பத்திரிகை, தொலைக்காட்சி நிருபர்கள் பலரும் எனக்கு நண்பர்களாக இருப்பதால் இது போன்ற பல செய்திகள் என் கவனத்துக்கு வந்து விடுகின்றன.

இதையெல்லாம் பார்க்கும்போது இதெல்லாம் காதலா...அடச்சே...என்று துப்பத் தோன்றுகிறது. அப்படி சொன்னால் கார் ஓட்டத்தெரியாதவன் காரைக் கொண்டு போய் மோதிவிட்டு காரைக் குற்றம் சொன்ன கதையாகிவிடும்.

காதல் என்பது காதலர்களுக்கும் சரி, அவர்களது குடும்பத்துக்கும் சரி மன வேதனையை, இழப்பை கொடுக்காமல் இருக்க வேண்டும். பல நேரங்களில் பையனோ/பெண்ணோ சரியான துணையை தேர்வு செய்திருந்தாலும் ஈகோ காரணமாக பகைமை பாராட்டுவது இதில் சேராது.

மொத்தத்தில் காதல் என்பது சரியா தவறா என்று வரையறுத்துக்கூறிவிட என்னால் முடியவில்லை.

இருவரது மனம் ஒத்துப்போவதில் தொடங்கி படிப்பு, வேலை, குடும்ப நிலை என்று பல புறக்காரணிகள்தான் காதலை சரி, தவறு என்று எண்ண வைக்கின்றன.

வியாழன், 21 அக்டோபர், 2010

தினமலர்-வாரமலர் டி.வி.ஆர் நினைவு சிறுகதைப்போட்டி 2010ல் இரண்டாம் பரிசு பெற்ற சிறுகதை - காதல்

கடவுள் எல்லா இடங்களிலும் இருக்க முடியாது என்பதால்தான் தாயைப் படைத்தான் என்று சொல்வார்கள். ஆனால் பெருகி வரும் முதியோர் இல்லங்களுக்கும் சிதைந்து வரும் குடும்ப உறவுகளுக்கும் முக்கிய காரணமாக இருப்பது ஒரு பெண்தான்...இல்லை...தாய்தான்.(மாமியாரோ மருமகளோ...அவளும் ஒரு தாய்தானே.)

நம் நாட்டில் உள்ள வளங்கள் உலக மக்கள் எவ்வளவு பேர் என்றாலும் அனைவரின் தேவைகளையும் பூர்த்தி செய்யும். ஆனால் ஒரே ஒரு மனிதனி ஆசைகளைக்கூட நிறைவேற்ற போதாது என்று காந்தி சொல்லியிருக்கிறார். ஒரு மனிதனின் ஆசையையே நம் நாட்டில் உள்ள மொத்த வளங்களால் பூர்த்தி செய்ய முடியாது என்றால் பேராசையை சாதாரண வருமானம் உள்ள ஆணால் எப்படி நிறைவேற்ற முடியும்?... இந்தச் சிக்கலின் காரணமாக ஏற்பட்டதுதான் பல குடும்பங்களில் வயதானவர்களைக் கழித்துக் கட்டும் அவலம்.

பழங்காலத்தில் அடிப்படை தேவைகளை மட்டும் பூர்த்தி செய்துகொண்டு கொஞ்சம் ஓவராகவே சகித்துக்கொண்டு கூட்டுக்குடும்பமாக வாழ்ந்து வந்தார்கள். ஆனால் இப்போது பல ஆடம்பரத் தேவைகள் அத்தியாவசிய தேவைகளாக நாம் விரும்பியோ நம் மீது திணிக்கப்பட்டோ விட்டன. இதனால்தான் வீட்டில் உள்ள வயதானவர்களை கூடுதல் சுமையாக பலரையும் நினைக்க வைத்திருக்கிறது.

சுருக்கமாக சொன்னால் சுயநலம் - நம்மால் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு எல்லை மீறிச் சென்று கொண்டிருக்கிறது. பரிசுபெற்ற கதையின் கரு எனக்குத் தோன்றக்காரணமான சிந்தனைகள்தான் இவை.
கதையின் நடை எனக்கே முழு திருப்தியளிக்கவில்லை. ஆனால் நான் கதைக்காக தேர்வு செய்திருக்கும் கருவின் வலிமைதான் எனக்கு இந்தப் பரிசைப்பெற்றுத் தந்திருக்கிறது என்பது என் கருத்து.

வெள்ளி, 15 ஜனவரி, 2010

பூ பூக்கும் ஓசை

"கல்யாணப்பொண்ணைக் காணலியாமே..."என்று இருவர் தங்களுக்கே கேட்காத குரலில்தான் பேசிக்கொண்டிருந்தார்கள். ஆனால் எப்போதும் அலாரத்தை ஆறுமுறை தலையிலடித்து நிறுத்திவிட்டு திரும்பவும் தூங்கும் சுப்புலட்சுமி இதைக்காதில் வாங்கியதும் சட்டென்று எழுந்து அமர்ந்தாள்.

காலை ஆறு மணி முகூர்த்தத்துக்கு அதிகாலை மூன்று மணிக்கே அந்த மண்டபம் பரபரப்பானதுக்கு காரணம்...மணமகளைக் காணவில்லை.

"அந்தப்புள்ளை முரளி, பள்ளிக்கூடத்துல படிக்கும்போதே தன் வேலைகளை அம்மாவை செய்ய சொல்லாம தானே பார்த்துக்கும்.வீட்டு வேலைகள்ல அம்மாவுக்கும் உதவி செய்யும். படிச்சு முடிச்சு வேலைக்குப்போனதுக்கு அப்புறமும் அதோட குணம் மாறலை.ரெண்டு வருஷத்துக்கு முன்னால கூட அகிலாண்டேஸ்வரிக்கு உடம்பு சரியில்லாம இருந்தப்ப முரளிதான் வீட்டுல சமையல், துணி துவைக்கிறது, வீட்டை சுத்தம் செய்யுறதுன்னு அவ்வளவு வேலையையும் செய்து வெச்சுட்டு ஆபீஸ் போகும். முரளியோட அப்பா, டெல்லியில  வேலை பார்க்குறதால எல்லாப் பொறுப்பும் முரளி தலையிலதான்.

இவ்வளவு தங்கமான புள்ளையை வேண்டாம்னு தூக்கி எறிஞ்சுட்டு ஓட அவளுக்கு எப்படித்தான் மனசுவந்ததோ..."என்று சுப்புலட்சுமி, மணமகன் முரளிக்காக கவலைப்பட ஆரம்பித்தாள்.

மண்டபத்தில் இரவு, மிக நெருங்கிய உறவினர்கள் மட்டும்தான் தங்கியிருந்தார்கள்.அனைவரிடமிருந்தும் இப்போது தூக்கம் விடைபெற்றிருந்தது.சமையல்கலைஞர்கள், நாதஸ்வரக்குழுவினர் ஆகியோரும் முகங்களில் கவலை தெரிய கூடி நின்றார்கள். திருமணம் நின்று விட்டால் தொகை ஒழுங்காக கிடைக்காதே என்ற அச்சம் அவர்களுக்கு.

மணமகள் தேவிரஞ்சனியின் உறவினர்களில் சிலர் அவளைத்தேடி கும்பகோணம் பேருந்துநிலையம், ரயில்நிலையம் ஆகிய பகுதிகளில் அலைந்துவிட்டு சோர்ந்துபோய் திரும்பினார்கள்.

முரளியின் தந்தை சந்திரசேகரின் முன்னால் மணிராஜூம் காஞ்சனாவும் தலைகுனிந்து நின்றிருந்தார்கள்.

முரளி,"அப்பா...அந்தப்பொண்ணு தனக்கு நல்ல வாழ்க்கை அமையும்னு நம்பி, அவங்களோட பாதையில கிளம்பி போயிட்டாங்க. அதுக்காக இவங்க மேல மட்டும் குற்றம் சொல்லித்தலைகுனிய வைக்கிறது என்ன நியாயம்?...இதோட..."என்று பேசிக்கொண்டிருக்கும்போதே சந்திரசேகர் இடையில் புகுந்தார்.

"டேய்...நீ கொஞ்சம் வாயை மூடு. ஊரு உலகத்துல இல்லாத அதிசயமா என்னென்னவோ நிபந்தனையோடதான் கல்யாணம் முடிப்பேன்னு அடம்புடிச்ச. நாங்களும் உன் போக்குலேயே பின்தொடர்ந்தோம். அதுக்கு கிடைத்த பரிசுதான் இந்த அவமானம். எவ்வளவு விஷயங்களைத்தான் நாங்களும் தாங்கிக்குறது..."என்று சந்திரசேகர் தரைக்கும், டெக்கரேஷன் பந்தலுக்குமாக குதித்துக்கொண்டிருக்கிறார்.

தன் அக்கா இப்படி செய்ததை இன்னும் நம்பமுடியாமல் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தாள் தமிழ்ச்செல்வி. பி.எஸ்.சி இறுதியாண்டு படிக்கும் அவள், இந்தியக்குடிமைப்பணித்தேர்வெழுதி அரசு அதிகாரியாக வேண்டும் என்ற இலக்கில் பயணிப்பவள்.

தேவிரஞ்சனியை விட தமிழ்ச்செல்வி மூன்று வயது சின்னவள் என்றாலும் அவர்கள் குடும்பத்தைப் பற்றி அறியாதவர்கள் பார்த்தால் இவர்கள் இருவரையும் இரட்டையர்கள் என்றுதான் கூறுவார்கள்.

எலுமிச்சை பழநிற தேகம், எதுவும் உறுத்தாத அளவில் முகம், பெண்களையும் பொறாமைப்படவைக்கும் உடல்வாகு என்று சரிசமமான அழகுதான் இருவருக்கும்.

ஆனால் குணத்தில்தான் எவ்வளவு வேறுபாடுகள்!

படிப்பை முடித்துவிட்டு குடும்பத்தலைவியாகிவிட்டால் போதும் என்பது தேவிரஞ்சனியின் லட்சியம். யு.பி.எஸ்.சி தேர்வெழுதி மாவட்ட ஆட்சித்தலைவியாக வேண்டும் என்பது தமிழ்ச்செல்வியின் நோக்கம்.

இதுபோல இருவருக்கும் எண்ணற்ற வித்தியாசம்.

ஆனால் காதல் அனுபவம் மட்டும் இருவருக்குமே இல்லை என்றுதான் தமிழ்ச்செல்வி இதுவரை நம்பியிருந்தாள்.வயதுக்கே உரிய உணர்வுகள் தவிர வேறு எந்த எண்ணங்களும் அக்காவுக்கும் இருக்காது என்று நினைத்திருந்தது பொய்யாகிவிட்டதே என்ற அதிர்ச்சியில் இருந்து தமிழ்ச்செல்வியால் இன்னும் வெளியே வரமுடியவில்லை.

முரளியின் வீட்டில் இருந்து தேவிரஞ்சனியைப் பெண் கேட்டு வந்தபோது வரதட்சணை வாங்கக்கூடாது என்பதில் முரளி உறுதியாக இருப்பதாக சொன்னார்கள்.

உடனே மணிராஜ், இந்த மாப்பிள்ளையைப் பற்றி விசாரித்துவிட்டு சம்மதம் சொல்லிவிட்டார். அதற்கு முக்கியக்காரணம், மணிராஜ் குடும்பத்தின் பொருளாதார சூழ்நிலை.

மகள்களின் திருமணத்துக்கு என்று மணிராஜ் சேமித்து வைத்திருந்த தொகை அவர் மனைவி காஞ்சனாவின் சிறுநீரக மாற்று அறுவைசிகிச்சைக்கு செலவாகிவிட்டது.

இந்த நேரத்தில் வரதட்சணை வாங்கமாட்டேன் என்ற கொள்கையுடன் நல்ல குணங்களுடன் முரளி வந்ததும் சம்மதம் கொடுப்பதில் மணிராஜூக்கு தயக்கமே இல்லை.

இதுவே அந்தப் பணம் இருந்திருந்தால் என் பொண்ணுக்கு நான் நகை, சீர் எதுவும் செய்யலைன்னா என் கவுரவம் என்னாகுறது என்று பேசி இந்த திருமணத்துக்கே சம்மதித்து இருக்க மாட்டாரோ என்னவோ.

பொழுது விடிந்தால் திருமணம். ஆனால் தேவிரஞ்சனியைக் காணவில்லை.

காதலனுடன்தான் ஓடிவிட்டாளா...இல்லை, வேறு எதுவும் பிரச்சனையா என்று யாராலும் ஒரு முடிவுக்கு வரமுடியவில்லை. மீண்டும் மணமகள் அறையில் இருந்த பொருட்களைப் புரட்டியபோது அந்தக் கடிதம் கிடைத்தது.

யாரும் பயப்படாதீர்கள். நான் விரும்பியவருடன் செல்கிறேன். முரளி மிகவும் நல்லவர்தான். தமிழ்ச்செல்வியை வேண்டுமானால் அவருக்குத் திருமணம் செய்துகொடுங்கள்.

இப்படிக்கு,
தேவிரஞ்சனி

என்று மிகவும் சுருக்கமாக முடிந்திருந்தது அந்தக்கடிதம்.

"ஓடிப்போனவளே தெளிவா சொல்லிட்டாளே...அப்புறம் என்ன...சின்னவளை அலங்காரம் பண்ணி அனுப்புங்க..." என்று சந்திரசேகர் சட்டென்று சமாதானமாகிவிட்டார்.

"உங்ககிட்ட எப்படி மன்னிப்பு கேட்டு பரிகாரம் தேடுறதுன்னு புரியாம தவிச்சுகிட்டு இருந்தேன். நீங்களே அதுக்கு ஒரு வழி சொல்லிட்டீங்க. இதுவரை நடந்ததை மறந்துட்டு ஆகவேண்டிய வேலையைப் பார்ப்போம்."என்று மணிராஜ், சந்திரசேகரின் கைகளைப் பிடித்துக்கொண்டு கலங்கினார்.

தமிழ்ச்செல்விக்கு பகீர் என்றது. இன்னும் ஒரு ஆண்டு கல்லூரிப்படிப்பு, ஐ.ஏ,எஸ் பதவி ஆகியவை மீதம் இருப்பதெல்லாம் கனவாவே போயிடும் போலிருக்கே...என்று அதிர்ந்தாள்.

"அப்பா...ஒருதடவை செஞ்ச தப்புக்குதான் இப்படி தலை குனிஞ்சு நிக்கிறோம்.இன்னும் உணரலியா நீங்க?..."-பட்டென்று முரளி கேட்டுவிட்டான்.

உடனே அகிலாண்டேஸ்வரி,"நாம என்னடா தப்பு பண்ணினோம்?...உன் சம்பளத்துல கால்வாசி கூட வாங்காதவனெல்லாம் வரதட்சணையா எவ்வளவு பணம், நகை,வண்டி கேக்குறாங்கன்னு தெரியுமா?

எந்த கெட்டபழக்கமும் இல்லாம உன்ன மாதிரி ஒரு தங்கமான பையன் கிடைக்க அவங்க எவ்வளவு புண்ணியம் பண்ணியிருக்கணும்...அது புரியாம ஓடிட்டா அவ.அவளுக்கு இந்த தமிழ்ச்செல்வி, உருவத்துலயும் படிப்புலயும் எந்த வகையில குறைச்சல்?...இவ்வளவு அவமானத்துக்கு பிறகும் இவங்க வீட்டுலேயே அடுத்த பொண்ணை எடுத்துக்குறோம்னு சொன்னதே பெரிய விஷயம்...நீ என்னடான்னா நாங்க தப்பு செஞ்ச மாதிரி பேசுற?..."என்றாள்.

"அம்மா...உங்களைவிட நான்தான் பெரிய தப்பு பண்ணிட்டேன். நம்மள மாதிரி வரதட்சணை வாங்காம கல்யாணம் பண்ணிக்குற பெருந்தன்மை எத்தனைபேருக்கு இருக்கும்னு ஒரு கர்வம் எனக்குள்ள இருந்ததை இப்பதான் புரிஞ்சுகிட்டேன்.

தேவிரஞ்சனிகிட்ட சம்மதமான்னு கேட்டேன். அவங்க யோசிக்க அவகாசமே கொடுக்கலை. நான் நல்ல பிள்ளைன்னா அது அம்மா அப்பாவுக்கு பெருமையா இருக்கலாம்.தேவிரஞ்சனிக்கும் அந்த ஒரு தகுதி மட்டும் திருப்தியா இருக்கும்னு நாம எப்படி சொல்ல முடியும்?

தேவிகிட்ட, உங்களுக்கு விருப்பம் இல்லன்னா இப்பவே சொல்லிடுங்க...காரணம் என் சம்மந்தப்பட்ட விஷயம்னா விளக்கம் சொல்லுங்க. வேற விஷயம்னா எதுவும் சொல்லவேண்டாம். நான் பெரியவங்ககிட்ட ஏதாவது சொல்லி சமாளிச்சுக்குறேன்னு கேட்டுருந்தா இப்ப நாம எல்லாருமே தலைகுனிஞ்சு நிற்க வேண்டிய அவசியம் இருந்திருக்காது.

என்னுடைய கர்வத்துக்கும், மற்றவங்களோட உணர்வுகளை மதிக்காம நடந்துகிட்ட உங்களுக்கும் இந்த தண்டனை தேவைதான்.

இவ்வளவு நடந்தும் தமிழ்ச்செல்வியோட சம்மதம் கேட்காம நீங்க இஷ்டத்துக்குப் பேசினா என்ன அர்த்தம்?..."என்றான்.

சந்திரசேகர்,"அம்மா தமிழ்ச்செல்வி...மண்டபத்துல ஏற்கனவே நிறைய சொந்தக்காரங்க இருக்காங்க...இப்பவும் வந்துகிட்டு இருக்காங்க. ரெண்டு குடும்பத்து மானம், மரியாதை எல்லாம் உன் கையிலதான் இருக்கு...என்னம்மா சொல்லப்போற?..."என்றார்.

"அப்பா...நீங்க இன்னமும் திருந்தவே இல்லையா...அக்கா, தன் வாழ்க்கையை தானே தீர்மானிச்ச அதிர்ச்சி குறையுறதுக்குள்ளயே ரெண்டு குடும்ப மானம் அது இதுன்னு சொல்லி தமிழ்ச்செல்வியை சிந்திக்க கூட விடாம செய்யுறது கொஞ்சம் கூட நல்லா இல்லை.

அவங்க படிச்சுட்டு வேலைக்குப்போக விரும்பலாம்...அல்லது ஏதாவது ஒரு துறையில சாதிக்க விரும்பலாம்.ஏன் என்னையக் கூட ஏதாவது ஒரு காரணத்தால புடிக்காம இருக்கலாம். இது புரியாம இவங்களைக் கட்டாயப்படுத்தக்கூடாது. தயவு பண்ணி எல்லாரும் வீட்டுக்குப் போற வழியைப்பாருங்க..."என்று முரளி கிளம்பிவிட்டான்.


"மிஸ்டர் முரளி..."

அழைத்தது தமிழ்ச்செல்விதான்.

"திடீர்னு அப்பா என்னை உங்களுக்கு மனைவியாக்க சம்மதம் சொன்னதும் என்னோட ஐ.ஏ.எஸ் இலக்கு அவ்வளவுதானோன்னு பயந்தது உண்மைதான்.

ஆனா இவ்வளவு நேரம் நீங்க பேசுன விஷயத்துலேர்ந்து மற்றவங்களோட சின்ன சின்ன உணர்வுகளுக்கு கூட பெரிய மதிப்பு குடுப்பீங்கன்னு புரிஞ்சுடுச்சு. எல்லாரும் என் அக்கா ஓடிப்போயிட்டான்னு ஏளனமா பேசுனப்ப, நீங்க மட்டும்தான் அவ வாழ்க்கையை அவளே தீர்மானிச்சுட்டான்னு கண்ணியமா சொன்னீங்க.பிரச்சனைகளை எதிராளியின் மனநிலையில் இருந்தும் அணுகுற உங்க குணம் இதுவரை நான் வேற யார்கிட்டயும் நேர்ல பார்த்து கவனிச்சது இல்லை.

இப்படிப்பட்ட உங்களோட வாழ்க்கைத்துணையாக யாரோட வற்புறுத்தலும் இல்லாம நானே சம்மதிக்கிறேன்.உங்களுக்கு விருப்பம் இருக்கா?..."என்று தமிழ்ச்செல்வி கேட்டதும் முரளி முகத்தில் ஒரு வெட்கப்புன்னகை.

கதையைப் பற்றிய குறிப்பு: அவ்வப்போது நாளிதழ்களில் மணப்பெண் மாயமானதால் அந்தப் பெண்ணின் தங்கையோ வேறு யாருமோ திடீர் மணமகளாகும் செய்தி வெளிவரும். அப்போது அந்த பெண்களின் மனநிலை எப்படி இருக்கும் என்ற கோணத்தில் யோசித்தபோது உருவானதுதான் இந்தக் கதை.

தங்கஊசிதான்...அதுக்காக கண்ணுல குத்திக்க முடியுமா என்ற பழமொழி பொருந்தும் வகையில்தான் இந்தக் கதையின் முடிவை ஏற்கனவே அமைத்திருந்தேன். நான்கு ஆண்டுகளுக்கு முன்பு எழுதி, மூன்றாண்டுகளுக்கு முன்பு தினத்தந்தி குடும்பமலரில் பிரசுரமான கதை இது.

சமீபத்தில் காதல் உருவாகும் கணம் எப்போது என்ற கேள்விக்கு விடை காண முற்பட்டேன்.பூ பூக்கும் ஓசை யாருக்கும் கேட்பதில்லை. அதுபோல் காதல் உருவான அந்த கண நேரத்தை அறுதியிட்டு யாராலும் சொல்லமுடியாது.

அந்த சூழ் நிலையை வேண்டுமானால் பதிவுசெய்யலாம் என்று நினைத்தபோது மீண்டும் இந்தக் கதையைக் கையில் எடுத்தேன்.

முடித்துப்பார்த்தபோது கதாபாத்திரங்களின் பெயரும் கதைக்களமும் தவிர மற்ற எல்லாமுமே மாற்றம் பெற்றிருந்தன.தலைப்பு உட்பட.