Search This Blog

வெள்ளி, 24 மார்ச், 2017

எழுத்தாளர் அசோகமித்திரனுக்கு கண்ணீர் அஞ்சலி


நூலக உபயத்தில் அசோகமித்திரன் எழுதிய 18வது அட்சக்கோடு, மானசரோவர், தண்ணீர் ஆகிய நாவல்களையும், அப்பாவின் சினேகிதர், புலிக்கலைஞன் ஆகிய சிறுகதை தொகுப்புகள் உட்பட இன்னும் சில நூல்களை படித்திருக்கிறேன். துப்பறியும் நாவல்கள், அமானுஷ்ய நாவல்கள் போன்றவற்றை அதிகம் (மின்னல் வேகத்தில்) படிக்கும் வாசகனாகிய (!?) நான், அசோகமித்திரனின் நூல்களை மிகவும் பொறுமையாகத்தான் படித்திருக்கிறேன். அது வேறொரு அனுபவம்.



பள்ளியில் என்னுடன் படித்த நண்பன் ஒருவன் சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு அசோகமித்திரனுக்கு அவரது புகைப்படமும், கையொப்பமும் கேட்டு கடிதம் எழுதியிருந்தான். 20களில் இருக்கும் இளைஞராகிய தாங்கள் நடிகர், நடிகைகளை விடுத்து என்னைப்போன்ற ஒரு எழுத்தாளரிடம் புகைப்படம் கேட்டிருப்பது குறித்து மகிழ்ச்சி என்றும் இன்னும் ஓரிரு வரிகளில் ஏதோ லேசான அறிவுரை என்ற அளவில் சில வரிகளில் ஒரு பதில் கடிதத்தை அவரது பாஸ்போர்ட் சைஸ் ஓளிப்படத்துடன் அனுப்பியிருந்தார்.



ஏதோ ஒரு டாக்டர் தமிழில் ப்ரிஸ்கிரிப்ஷன் எழுதியது போல் ஆனால் கோடு போட்டு எழுதியது போல் பொடி எழுத்துக்களில் அவரது கையெழுத்து இருந்தது. சரிதான், எழுத்தாளர் அவர்கள் உருவம் போலவே கையெழுத்தும் மிக மெலிந்துதான் இருக்கிறது என்று நினைத்துக்கொண்டேன்.



இணையத்தில் அவரது புகைப்படங்கள் நிறைய கிடைத்தாலும் என்னுடைய நண்பனுக்கு அவர் கைப்பட கடிதம் எழுதி அதனுடன் சேர்த்து அனுப்பிய புகைப்படம் மதிப்பு மிக்கது என்பது என் எண்ணம்.



அசோகமித்திரன் காலமான செய்தி அறிந்ததும் அவர் அனுப்பிய அந்த புகைப்படமும், கடிதமும் நினைவுக்கு வந்து விட்டது. ஆனால் அதை வைத்திருந்த என்னுடைய நண்பன் அவற்றை பாதுகாத்து வைத்திருக்கிறானா என்று தெரியவில்லை. (அந்த நண்பனும் பணி நிமித்தமாக வெளியூரில் இருப்பதால் பல ஆண்டுகளாக தகவல் தொடர்பு இல்லை. இனி முக நூலில் அவனை தேட வேண்டும்.)