Search This Blog

தொடர்கதை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தொடர்கதை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 6 ஜூலை, 2019

செங்கம் டிராவல்ஸ் - 6



‘‘தம்பி... உனக்கு தட்டி பாஸ் கொடுக்கும்போதே என்ன சொன்னேன்... படம் போட்டு முதல் நாளோ, சனி ஞாயிறு மாதிரி விடுமுறை நாள்லயோ, இந்த மாதிரி கூட்டம் நிறைய இருக்குற நாள்லயோ வராத... சாதாரண நாட்கள், இன்று இப்படம் கடைசின்னு ஸ்லிப் ஒட்டியதும் வான்னுதானே சொன்னேன்... மறந்துட்டியா தம்பி...’’ என்றார் தியேட்டரின் உரிமையாளர் பழனிச்சாமி. 
















‘‘இல்லன்ணே... டிக்கட் கேட்கதான்ணே வந்தேன்...’’


‘‘டிக்கட்டா... யாருக்குடா...’’


‘‘எனக்குதான்ணே...’’


‘‘ஏண்டா தம்பி... படிக்கிறப்பவே காலையில நாலரை மணிக்கு எழுந்திரிச்சு பேப்பர் போட்டு கஷ்டப்பட்டு ஏதோ கொஞ்சம் சம்பாதிக்கிற...


இன்னும் ரெண்டு வாரம் கழிச்சு வந்தா உன்னைய சும்மாவே உள்ள அனுப்பப்போறேன். இப்போ ஏண்டா செலவழிக்கப்போற...’’ என்றார்.


அவரிடம் உண்மையான காரணத்தை சொல்ல முடியாமல், ‘‘இல்லண்ணே... என்ன இருந்தாலும் தலைவர் படம்...’’ என்று இழுக்க, ’’சரிடா... செகண்ட் கிளாஸ் டிக்கட் நாற்பது ரூபா. அதை வாங்கிக்க...’’ என்று கண்ணாடி கதவு வழியாகவே இவனை உள்ளே அழைத்துச் சென்றார்.


டிக்கட்டை வாங்கிக் கொண்ட அவன், ‘‘அண்ணே... சைக்கிளை கொண்டு போய் போட்டுட்டு வந்துடுறேன்...’’ என்றதும், உரிமையாளர்,


‘‘நில்லுடா... இந்த சாவியை எடுத்துட்டுப்போய் எண்ட்ரன்சுக்கு பக்கத்துல நம்ம வண்டிங்க எல்லாம் நிக்கிற இடத்துல சைக்கிளைப் போட்டுட்டு கதவைப் பூட்டி சாவியைக் கொண்டாந்துடு...’’ என்று ஒரு வளையத்தில் மாட்டியிருந்த சாவியைக் கொடுத்தார்.


வரதராஜனுக்கு ஏக குஷி. காரணம், பெண்களுக்கு டிக்கட் கொடுக்கும் பகுதியில்தான் தியேட்டர் ஊழியர்கள், நிர்வாகிகள் வாகனங்கள் நிறுத்தும் இடம் இருந்தது. இவன் அந்த இடத்தின் கதவைத்திறந்து தன்னுடைய சைக்கிளை வைக்கும்போது அர்ச்சனாவும், அந்த காலனியில் இருந்த அத்தனை பேரும் பார்த்தார்கள். இவன் சைக்கிளை நிறுத்தி பூட்டி விட்டு வெளியே வந்து அந்த இடத்தின் கதவைப் பூட்டிக் கொண்டு திரும்பும்போது எதிரில் நின்றது, இவன் பேப்பர் போடும் வீட்டில் உள்ள புவனேஸ்வரி.


‘‘என்ன தம்பி... இங்கயும் வேலைபார்க்குறியா?’’ என்றதும்,


‘‘அய்யய்யோ... இல்லக்கா... நான் ஸ்கூல்ல படிக்கிறேன்... இங்க படம் பார்க்க வந்தேன்... ஓனர் சைக்கிளை இங்க போட்டுக்க சொன்னார்...’’ என்று அவசரமாக பதிலளித்தான்.


‘‘கூட்டம் இருக்குறதைப் பார்த்தா பொம்பளைங்களுக்கு குடுக்குற இருபது ரூபா டிக்கட் கிடைக்காது போலிருக்கு... நீ சொல்லி வாங்கித்தர்றியாப்பா...’’ என்று கேட்டதும் ஒருகணம் யோசித்தான்.


வாங்கித்தர்றேன்னு பந்தாவா சொல்லி, ஓனர் மறுத்துட்டா அசிங்கம்... அதனால போய் கேட்டுட்டு வந்துடுறேன் சொல்லி தப்பிக்கிறதுதான் நல்லது என்ற முடிவுக்கு வந்த வரதராஜன், ‘‘அக்கா... ஓனர் என்ன மூடுல இருக்காருன்னு தெரியலை... எதுக்கும் போய் கேட்டுட்டு வந்துடுறேனே... எத்தனை டிக்கட்?’’ என்று கேட்டான்.


‘‘இருபத்து மூணு...’’ என்று அந்த பெண் சொல்லவும், இதை நான் எதிர்பார்த்ததுதான், ஆனா ஓனருக்கு மயக்கம் வராம இருக்கணும்... என்று தனக்குத்தானே சொல்லிக்கொண்டு கண்ணாடி கதவு நுழைவாயிலுக்கு சென்றான்.


அவர் இவன் பேசிக்கொண்டிருந்ததைப் பார்த்திருப்பார் போலிருக்கிறது.


‘‘அங்க என்னடா லேடீஸ்கிட்ட கதை பேசிகிட்டு இருந்த...’’


‘‘இல்லண்ணே... நான் பேப்பர் போடுற ஏரியாவுல ஒரு காலனியில இருக்காங்க... இருபது ரூபா டிக்கட் கேட்டாங்க... அதான்...’’ என்று இழுத்தான் வரதராஜன்.


‘‘நீ என்ன சொன்ன?...’’ என்று பழனிச்சாமி கேட்டபோது அவர் குரலில் ஏதோ ஒரு எச்சரிக்கை உணர்வு.


‘‘முதலாளிகிட்ட கேட்டுட்டு வர்றேன்னுதான் சொன்னேன் முதலாளி...’’


இதைக் கேட்ட பழனிச்சாமி, அருகில் நின்ற தியேட்டர் ஊழியர்களிடம், ‘‘வியர்க்க விறுவிறுக்க பையன் பணம் கொடுத்து படம் பார்க்குறேன்னு சொன்னப்ப தலைவர் படம்னு ஆவலா இருக்குறதா நினைச்சேன்... அங்க நிக்கிற கூட்டத்தைப் பார்க்கும்போதுதான் விசயம் புரியுது. பையன் தெளிவாத்தான் இருக்கான்... ஆனாலும் திறமைசாலிடா நீ... டிக்கட் வாங்கித் தர்றேன்னு பந்தா பண்ணாம, என் கிட்ட கேட்டு சொல்றேன்னு தெளிவா எஸ்கேப் ஆகுற மாதிரி பதில் சொல்லிட்டு வந்துருக்க... சரி... எத்தனை டிக்கட் வேணும்?’’ என்று கேட்டவாறு அருகில் நின்ற ஊழியரின் கையில் இருந்த மூன்றாம் வகுப்பு டிக்கட் புத்தகத்தை வாங்கி டிக்கட்டுகளை எண்ணுவதற்காக ஒரு டிக்கட்டை இரண்டு விரல்களால் பிடித்தார்.


‘‘இருபத்திமூணு....’’


வரதராஜன் எதிர்பார்த்ததுபோல் உரிமையாளருக்கு மயக்கம் வரவில்லை. ஆனால் ஒரு சில விநாடிகள் ஸ்தம்பித்து நின்றார்.



வெள்ளி, 5 ஜூலை, 2019

செங்கம் டிராவல்ஸ் - 5



அர்ச்சனா பத்து ஆண்டுகளுக்கு பிறகு அவனை சந்தித்த விஷயத்தை மலர்வழியிடம் சொன்னதும் அவள், ’’ஆக, உன் அண்ணன் கல்யாணத்துக்கு வர்றப்பவே உன் கல்யாணத்தையும் பார்த்துடலாம்னு சொல்லு.’’ என்று போனிலேயே அர்ச்சனாவை கிண்டலடித்தாள்.


‘‘விடியற்காலையில அவனைப் பார்த்ததுல இருந்து எனக்கு பழசு மொத்தமும் ஒவ்வொண்ணா நினைவுக்கு வந்துகிட்டு இருக்கு... அப்பதான் அவன் ஒரு வார்த்தை கூட என்கிட்ட பேசுனதே கிடையாது. இப்பவும் என்னையப் பார்த்து அதிர்ச்சி அடைஞ்சதோட சரி... கிட்டக்கயே வரலை. அதனாலதான் அவன் என்ன செய்யப்போறானோன்னு பயமா இருக்கு.






ஏண்டி பேயறைஞ்ச மாதிரி இருக்கன்னு அம்மா கேட்குற கேள்விக்கு பதில் இல்லை. சுத்தி நம்ம சொந்தக்காரங்க இருக்குறாங்களே, அவங்க ஒரு பக்கம் ஏன் இப்படி கனவு கண்டுகிட்டு இருக்கன்னு கிண்டல் பண்றாங்க...


உன் கிட்ட பேசினா தெளிவு கிடைக்கும்னு பார்த்தா நீயும் உன் பங்குக்கு ஓட்டுற...’’ என்றாள் அர்ச்சனா.


‘‘சரி சரி கோபிக்காத... அந்த மாதிரி நடந்து உன் உடம்புல ரத்தத்தை பார்த்ததும் கோபத்துல ரெண்டு வார்த்தை கத்துனேன். அன்னைக்கு ஓடுனவன். இத்தனை வருசம் கழிச்சு அதுவும் எதார்த்தமாத்தான் இந்த பயணத்துக்குள்ள வந்துருக்கான். இவ்வளவு வீரதீர பரமாக்கிரமசாலி உன் கிட்ட வந்து பேசலைன்னு கவலைப்படுற... என் ஒருத்தி பேச்சுக்கே பயந்து ஓடுனவன் உன்னைச் சுத்தி முக்கால்வாசிப்பேர் உன் சொந்தக்காரங்க இருக்கும்போது எப்படி தைரியமா வந்து பேசுவான்?’’ என்று மலர்விழி எதிர்க்கேள்வி எழுப்பினாள்.


‘‘நீதானடி இப்படி அவமானப்பட்டு போற பசங்க ஆசிட் அடிச்சாங்க, கத்தியால குத்துனாங்கன்னு கதை கதையா சொன்ன... இப்ப இப்படி பேசுற?’’


‘‘ஆமா... சொன்னேன். யார் இல்லைன்னு சொன்னா? அந்த மாதிரி தப்பு காரியம் செய்யுறதுக்கு ஒண்ணு துணிச்சல் வேணும்... இல்லன்னா கிறுக்கு புடிச்சவனா இருக்கணும். உன் ஆள் ரெண்டு லிஸ்ட்டுலயுமே இருக்க முடியாது.


ஏன்னா, துணிச்சல் உள்ளவன்னா நான் ஒரு நாள் மிரட்டுனதுக்கே உன் கண்ணுல படாம காணாமப் போயிருக்க மாட்டான். தொடர்ந்து உன்னைய ஆஸ்பத்திரியிலயோ, வேற எங்கேயோ பார்த்து உடம்பு எப்படி இருக்கு... நீ என்ன ஆனன்னு தெரிஞ்சுகிட்டு, நீ தேறி வந்ததுக்கு அப்புறம் உன்னைய தொடர்ந்து பார்த்து காதலை சொல்ல முயற்சி பண்ணியிருப்பான்.


கிறுக்கு புடிச்சவனா இருந்தா அப்பவே உன் மேலயாச்சும் என் மேலயாச்சும் ஏதாவது தாக்குதல் நடத்தியிருப்பான்.


ஆக, இவன் டீன் ஏஜ்ல இருக்குற கோடிக்கணக்கான பசங்க செய்யுற வேலைக்கு மேல எதையும் செய்யாத அல்லது செய்யுறதுக்கு தைரியம் இல்லாத சராசரியான ஒரு ஆள்.


டீன் ஏஜ் வயசுல கிட்டத்தட்ட ஒரு வருசம் அந்த சம்பவம் தவிர வேறு எந்த வகையிலயும் நம்மை டிஸ்டர்ப் பண்ணாம ஃபாலோ பண்ணின ஒருத்தன் ஒரே நாள்ல காணாமப் போனதும் உன் ஆழ் மனசுல அவன் நினைவு பதிஞ்சிருக்கலாம்... உனக்கும் வீட்டுல எத்தனையோ மாப்பிள்ளை பார்த்தும் எதுவும் திருப்தியா தெரியலைன்னு சொல்ற... ஒருவேளை இவன்தான் உனக்குன்னு பிறந்தவனோ என்னவோ... நாங்களும் இங்க கோயம்புத்தூர்ல இருந்து பஸ் ஏறிட்டோம். மதியம் வந்துடுவேனே... வாய்ப்பு இருந்தா அவன்கிட்ட நான் பேச முடியுதான்னு பார்த்து அதுக்கப்புறம் முடிவு செய்வோம்...


இந்த வயசுல நீ எடுக்குற முடிவுக்கு அவ்வளவு சீக்கிரம் பேரண்ட்ஸ்கிட்ட இருந்து எதிர்ப்பு வரும்னு சொல்ல முடியாது... நாம நேர்ல பேசுவோமா...’’ என்று அலைபேசி இணைப்பை மலர்விழி துண்டித்தாள்.



வெள்ளி, 28 ஜூன், 2019

செங்கம் டிராவல்ஸ் - 4



முன்கதை சுருக்கம்:




அர்ச்சனா உறவினர் திருமணத்திற்கு மணமகன் வீட்டாருடன் மதுரைக்கு செல்கிறாள். அவர்கள் ஒப்பந்தம் செய்துள்ள பேருந்தில் ‘அவனை’ பார்த்ததும் அதிர்ச்சியில் பத்து ஆண்டுகளுக்கு முன்பு நடந்த பழைய சம்பவங்கள் தொடர்ந்து கண் முன் தோன்றி அவள் மனதை அலைக்கழிக்கிறது.




பத்து ஆண்டுகளுக்கு முன்பு- அர்ச்சனா பள்ளியில் இறுதி ஆண்டு படிக்கும்போது அவன் சுற்றி வந்த நாட்களில் நடந்த சில சம்பவங்கள் இவள் நினைவுக்கு வருகின்றன. அர்ச்சனாவின் தோழிகள் கூட அவனைப் பற்றிக் குறிப்பிட்டு கிண்டல் செய்கிறார்கள்.


பேருந்தில் அவனைப் பார்த்தது முதல் பழைய நினைவுகளில் அர்ச்சனா மூழ்கிவிடுகிறாள். அதனால்தான் பேருந்து நின்று எல்லோரும் டீ குடிக்க இறங்கிச் சென்றது கூட தெரியாமல் சிந்தனையில் இருப்பவளைப் பார்த்து அவள் தாயார் சித்ரா கடிந்து கொள்கிறாள்.


இந்த எண்ண அலைகளிலிருந்து விடுபட வேண்டும் என்றால் பழைய சம்பவங்களின் போது சாட்சியாக இருந்த மலர்விழியிடமே கேட்டு விடலாம் என்று போன் செய்கிறாள்..


*****




செங்கம் டிராவல்ஸ்


தொடர்கதை


திருவாரூர் சரவணன்


பகுதி 4


05–04–2019


சித்ரா வாசல் தெளித்து விட்டு கோலமாவு டப்பாக்கள் அடங்கிய பிளாஸ்டிக் தட்டை எடுத்துக்கொண்டிருக்கும்போதுதான் சத்தம் கேட்டு அர்ச்சனா விழித்தாள்.


சட்டென்று படுக்கையை விட்டு எழுந்து அமர்ந்தவள், ‘‘அம்மா... என்னை எழுப்பதானே சொன்னேன்... இப்ப நீபாட்டுக்கு என்னைய விட்டுட்டு கோலம் போடப் போனா என்ன அர்த்தம்...’’


‘‘ஏண்டி காலையிலேயே இப்படி கத்துற... நான் தண்ணி தெளிக்க எழுந்திரிச்சப்ப நல்லா அசந்து தூங்கிட்டு இருந்த. பொதுவா நல்ல தூக்கத்துல நீ இருக்கும்போது எழுப்புனா பட்டுன்னு கன்னம், கை, காலுன்னு எது சிக்குதோ அங்க ஒரே அறை விடுவ... அது மட்டுமில்லாம நம்ம காலனியில 12 வீடு இருக்கு. ஒரு வீட்டுக்கு கணக்கு வெச்சா ரெண்டரை நாள்தான் கோலம் போடுற முறை வரும். இன்னைக்கு நாம போட்டா அடுத்து 12 நாள் கழிச்சுதான். இதுக்கு ஏன் உன் தூக்கத்தையும் கெடுத்துகிட்டுன்னு விட்டுட்டேன்... அதுக்கு இவ்வளவு கோபமா?’’


‘‘அப்போ மத்த நாள் எப்பவும் போல காலையில ஆறரை மணிக்கு தண்ணி புடிச்சா போதுமா?’’


‘‘அப்படியே ஒரு டேங்கர் லாரி தண்ணியை புடிச்சு ஊத்தப்போற...ச்சே... மணியாகுது வா கோலம்போட...’’ என்று சொல்லிவிட்டு வீட்டை விட்டு வெளியேறவும், பின்னாலேயே அர்ச்சனாவும் ஓடினாள்.




திடு திடுவென்று அர்ச்சனா ஓடும் சத்தம் கேட்ட அவள் தாய், ’’ஏய்... டி.விக்கு பக்கத்துல ஸ்கார்ப் இருக்கு பாரு. அதை எடுத்து கட்டிகிட்டு வா... பனியில உடம்பு முடியாம விழுந்துட்டன்னா நாலு நாள்ல மிச்சம் இருக்குற அரையாண்டு பரிச்சை கோவிந்தாதான்...’’


சித்ரா சொன்னதிலும் நியாயம் இருக்கவே, வேறு வழியின்றி தலைக்கு ஸ்கார்ப்பை கட்டிக் கொண்டு கோலம் போட வந்தாள் அர்ச்சனா. ஆனாலும் அவள் மனதில் ஒருவேளை அவன் இந்த நேரத்தில் வந்தால், ஸ்கார்ப் கட்டிக் கொண்டிருக்கும் தன்னை அடையாளம் கண்டு கொள்வானா என்ற சந்தேகம் எழுந்தது.


‘‘ம்ச்ஹ... பசங்களுக்கு உடம்பெல்லாம் கண்ணு... அப்படியா நாம அடையாளம் தெரியாம மாறிடப்போறோம்...’’ என்று மைண்ட் வாய்சில் பேசுவதாக நினைத்து வாய்விட்டு உளறினாள் அர்ச்சனா.


‘‘என்னடி ஏதோ புலம்புற... தூங்குறப்ப கண்ட கனவு இன்னும் கலையலையா... இதுக்குத்தான் நீ எழுந்திரிக்க வேணாம்னு சொன்னேன்.’’ என்ற சித்ராவைப் பார்த்து முறைத்து விட்டு, அம்மா போட்ட கோலத்திற்கு வண்ணம் தீட்டுவதில் கவனம் செலுத்தினாள்.


அப்போது யாரோ சைக்கிளை நிறுத்தி ஸ்டாண்ட் போடும் சத்தம். நிமிர்ந்து பார்த்தாள். அவனேதான். சைக்கிள் கேரியரில் நாளிதழ்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.



வியாழன், 27 ஜூன், 2019

செங்கம் டிராவல்ஸ் - 3




பிரேக் போட்டு திடீரென இவர்கள் பேருந்து நின்ற நொடி எதிரில் ஒரு டேங்கர்லாரி இந்த பேருந்தை மோதுவது போல் நெருங்கி வந்து வலது பக்கம் விலகிச் சென்றது பின்னாலேயே வேளாங்கண்ணி செல்லும் மூன்று அரசு விரைவுப்பேருந்துகளும் சர்... சர்... சர்ரென கிராஸ் செய்து சென்றன.


‘‘டிரைவர்... ஹெட்லைட்டைப் போட்டுட்டு போய்கிட்டே இருக்க வேண்டியதுதானே...


ஓவர்டேக் பண்ணி வர்ற லாரிக்கு ஏன் வழி விடுறீங்க... எதிர்ல நாம வர்றதைப் பார்த்ததும் அவன்ல வேகத்தைக் குறைச்சு பஸ்சுங்களுக்கு பின்னால போயிருக்கணும்?’’ என்று முன் சீட்டில் முட்டிக்கொண்ட ஒருவர் கொதித்தார்.


 ‘‘ஒரு பஸ்சா இருந்தா அவனே பின்னால ஒதுங்கியிருப்பான்... இங்க மூணு பஸ்சு. அதோட எவ்வளவு தூரம் முயற்சி பண்ணி டாப் கியருக்கு பிக்கப் ஆயிருந்தானோ... இப்போ நாம வழி மறிச்சிருந்தா அடுத்து அஞ்சு கிலோ மீட்டர் தூரத்துக்கு அவனால வண்டியை நார்மல் ஸ்பீடுக்கு கூட கொண்டு போக முடியாது...


நானும் எழுபது எண்பதுல போய் சடன் பிரேக் போடலியே... இருபத்தஞ்சுல போனப்பதான குத்துனேன்....’’ என்றார் ஓட்டுநர்.


‘‘அது சரி... பள்ளிக்கூட பஸ் ஓட்டுன ஆள்னுங்குறது சரியாத்தான் இருக்கு... அநியாயத்துக்கு நல்லவங்களா இருக்காதீங்கப்பு...’’ என்றவரின் குரலில் கொதிப்பு அடங்கியிருந்தது.


‘‘வெளியில இருக்குற டேங்கர்லாரி டிரைவருக்கு இரக்கப்பட்ட நீங்க, பஸ்சுக்குள்ள எழுந்து நின்னுகிட்டு இருந்த சிங்கத்தைப் பத்தி யோசிக்காம மூக்கை உடைச்சுட்டீங்கிளே...’’ என்று ஒருவன் சொல்லவும்,


‘‘நீ வேற ஏண்டா மானத்தை வாங்குற...’’ என்று வைத்தியலிங்கம் அவனைப் பார்த்து பல்லைக்கடித்தான்.


பேருந்தினுள் இருந்தவர்கள் ஆளாளுக்கு ஏதோ கதை பேசிக் கொண்டு வர, அர்ச்சனாவின் மனதில் இப்போதைக்கு ஒரே ஒரு கேள்விதான்.


‘பஸ்சுல இருக்குறதுல பாதிப்பேருக்கு மேல சொந்தக்காரங்கதான். இவனை எந்த பழக்கத்துல பெரியப்பா உள்ள விட்டிருக்காரு... நமக்கு தெரிஞ்சவரை இவனோட நம்ம பெரியப்பாவுக்கு எந்த பழக்கமும் இல்லையே...’என்ற கேள்வி அர்ச்சனாவின் மனதில் வெகு நேரமாக ஓடிக்கொண்டே இருந்தது.


‘‘நாலு வேன் புடிச்சாகூட நெருக்கியடிச்சு உட்காரணும்... அதோட பயங்கரமா குலுக்கி எடுத்துடும். அக்கம் பக்கம் உட்கார்ந்துருக்குறவங்க கிட்ட நல்லா பேசக்கூட முடியாது. அதுக்காகத்தான் தாராளமா உட்கார்ந்து போகலாம்னு பஸ்சைப் பிடிச்சேன்...


நான் நினைச்ச மாதிரியே எல்லாரும் சகஜமா பேசி அரட்டை அடிச்சுகிட்டு வர்றீங்க... ஆனா அர்ச்சனாவுக்குதான் என்னாச்சுன்னு தெரியலை... நீ வேலைக்கு போறதும் கம்பெனி பஸ்சுலதானே... அதுல வாயைத் திறந்தா மூட மாட்டேன்னு இண்டர்போல் ஆபிசர்ஸ் சொன்னாங்க... இப்ப என்னாச்சு...?’’ என்று சிரிக்காமல் விஜயகுமார் பேசவும் இதைக் காதில் வாங்கியவர்கள் சிரித்தார்கள்.




‘‘அய்யோ... பெரியப்பா... மானத்தை வாங்காதீங்க... ஏதோ கம்பெனி ஞாபகம்... அதான்...’’ என்று சமாளித்தாள்.


‘‘என்னது... கம்பெனி ஞாபகமா?... உன்னை மாதிரி வெளியூர்ல தங்கி வேலை பார்க்குற பொண்ணுங்க வீட்டு நியாபகம்னு சொல்லி கேள்விப்பட்டிருக்கேன்... நீ குடும்ப விசேசத்துக்கு வந்தும் வேலை ஞாபகத்துலயே இருக்க... உன் கம்பெனி ரொம்ப கொடுத்து வெச்சதும்மா...


ஆனா ஒரு சின்ன விண்ணப்பம்... இது நம்ம வீட்டு கல்யாணம்... மாப்பிள்ளைக்கு நீயும் ஒரு தங்கச்சி. அதை மனசுல வெச்சு இந்த சந்தோஷத்துல பங்கெடுத்துக்க... இந்த பயணமும் நினைவுகளும் ரொம்ப நாளைக்கு நம்ம மனசுல இருக்கும்ணு நம்புறேன்...’’ என்று விளையாட்டாக கும்பிட்டார்.


‘‘ஸ்....யப்பா... போதும் பெரியப்பா... தாங்கலை...’’ என்று அவளும் கைகூப்பினாள்.




புதன், 26 ஜூன், 2019

செங்கம் டிராவல்ஸ் - 2


பகுதி 2


முன்கதை சுருக்கம்:


அர்ச்சனா உறவினர் திருமணத்திற்கு மணமகன் வீட்டாருடன் மதுரைக்கு செல்கிறாள். அவர்கள் ஒப்பந்தம் செய்துள்ள பேருந்தில் ‘அவனை’ பார்த்ததும் அதிர்ச்சியில் பத்து ஆண்டுகளுக்கு முன்பு நடந்த பழைய சம்பவங்கள் தொடர்ந்து கண் முன் தோன்றி அவள் மனதை அலைக்கழிக்கிறது.


*****


மணல் நிறத்துக்கு மாறியிருந்த பள்ளிச்சீருடையான வெள்ளை சட்டையை கழற்றி வீசியதும் முகம் கழுவி வந்து, கலர் சட்டையை அணிந்து கொண்டிருந்தான் வரதராஜன்.


‘‘டேய்... வரதுகுட்டி... செத்த ரேசன் கடை வரைக்கும் வந்துட்டுப்போடா... அரிசி வாங்கித்தர்றேன்... அதை எடுத்துட்டுபோய் சுந்தரி வீட்டுல போட்டுட்டு வந்துடு...’’


‘‘ஏம்மா... முன்னாலயே சொல்ல மாட்டியா? அவசரமா வெளியில கிளம்பிகிட்டு இருக்கேன்... இப்ப போயி ஏன் உயிரை வாங்குற?... தெட்சிணாமூர்த்தி இன்னும் வரலையா?...’’


‘‘டேய் நாக்குட்டி... அப்பா பேரை இப்படி தலையில அடிச்ச மாதிரி சொல்றதுக்கு ஒரு நாளைக்கு விளக்கமாறு பிய்யப்போவுது பாரு...’’


‘‘ஆமா... நீ மட்டும் வரதராஜன்னு அழகா ஒரு பேர் வெச்சிட்டு, பொம்பளைப் புள்ளை இல்லைன்னு என்னைய வரதுக்குட்டி, நாய்க்குட்டின்னுல்லாம் கூப்பிடு... நான் மட்டும் அப்பா பேர் சொல்ற புள்ளையா இருக்கறதை குத்தம் சொல்லு...’’


‘‘பேர் சொல்லும் பிள்ளைன்னா ஊர் உலகத்துல நல்ல பேர் எடுத்துக் குடுக்குறதுடா... இப்படி மரியாதை இல்லாம அப்பன் ஆத்தாளை கூப்பிடுறது இல்லை... இப்ப வரப்போறியா இல்லையா...’’ என்று குரலில் கடுமையை கூட்டினாள் வசந்தி.


ஆனால் வரதராஜன் ரேசன் கடைக்கு செல்லும் மன நிலையில் இல்லை. ‘‘நாளைக்கு சனிக்கிழமை எனக்கு லீவுதான். காலையில போலாம்...’’ என்று சட்டை பொத்தான்களை போட்டுக்கொண்டே பேசினான்.


‘‘இல்லடா குட்டி... மனுச உசிருகூட இப்ப இருக்கும் நாளைக்கும் இருக்கும்னு சொல்லலாம்... ஆனா ரேசன் கடையில இந்த நொடி இருக்குறது அடுத்த வினாடி இருக்கும்னு சொல்ல முடியாதுடா... மூணாவது வீட்டு சுசீலா இப்பதான் வாங்கிட்டு வந்தா, பத்து பதினஞ்சு பேர்தான் நிக்கிறாங்களாம்... ஆறு மணி ஆயிடுச்சுன்னா கணக்கு முடிக்கணும்னு தர மாட்டாங்கடா... நாளைக்கு காலையில கொடுத்தாதான் நிச்சயம்... அதனாலதான்டா சொல்றேன்...’’ என்று கெஞ்சலாக பேசினாள் வசந்தி.




‘‘நீ போய் வரிசையில நின்னு வாங்குறதுக்குள்ள நான் வந்துடுறேம்மா... அர்ஜண்டா போகணும்...’’ என்று வீட்டை விட்டு கிளம்பி ஓடுவதிலேயே குறியாக இருந்தான் வரதராஜன்.


இதுவே அவன் நண்பர்கள் அருகில் இருந்திருந்தால், ‘அர்ஜண்டாக போகணும்’ என்று வரதராஜன் சொன்னதுக்கு ‘கொல்லைப்பக்கம் கழிவறை இருக்கு... அதை விட்டுட்டு எங்கடா போற?’ என்று கேட்டிருப்பார்கள்.



செவ்வாய், 25 ஜூன், 2019

செங்கம் டிராவல்ஸ் - 1


பகுதி 1


பத்து வருசத்துக்கு முன்னால பார்த்தப்ப எப்புடி இருந்தியோ... அப்படியேத்தாண்டி இன்னமும் இருக்க... கொஞ்சம் கூட மாறவே இல்லை... ஏதாவது லேகியம் திங்கிறியா?" என்று அர்ச்சனாவின் முகத்தை தடவி ராமாயி பாட்டி திருஷ்டி கழித்தாள். அதை புன்சிரிப்புடன் ஏற்றுக் கொண்ட அர்ச்சனாவின் முகத்தில் லேசான வெட்கப்புன்னகை.







அடுத்த நொடி அவள் இதயத்துடிப்பு தறிகெட்ட வேகத்தில் பயணிக்கத் தொடங்கியது. பத்து ஆண்டுகளாக முகமும், உடலமைப்பும் மாறவில்லை என்று அந்த பாட்டி சொன்னதற்காக வெட்கப்பட்டவள், அவனும் இவளை அடையாளம் கண்டு கொண்டுவிட்டான் என்பதை உணர்ந்ததும், நம்முடைய உருவமும் முகமும் வேற மாதிரி மாறியிருக்கக்கூடாதா என்று தவித்தாள்.









டேய்... சரிகாஷா சாவுக்கப்புறம் ஈவ் டீசிங் புகாருக்கு கடுமையான தண்டனைன்னு எல்லாருக்கும் தெரியும். அப்படி இருந்தும் நீங்க எல்லாம் திருந்தவே மாட்டீங்கிளா? இவ அண்ணன்கிட்ட சொல்லி முதல் வேலையா உன் பேர்ல ஈவ்டீசிங் புகார் கொடுத்து உன்னைய உள்ள தூக்கி வெச்சி மிதிக்க வெக்கிறோம் பார்..." என்று அர்ச்சனாவின் தோழி மலர்விழி கத்தியதும் திரும்பிப்பார்க்காமல் அங்கிருந்து சென்றவன்தான் இல்லை, இல்லை... ஓடிப்போனவன்தான் இவன். அதன் பிறகு இந்த பத்து ஆண்டுகளில் ஒரு நாள் கூட அவனை அர்ச்சனாவோ, அவளுடைய தோழி மலர்விழியோ பார்க்கவே இல்லை. ஆனால் இன்று...






புதன், 13 மார்ச், 2013

அணு குண்டுல இருந்து கர்ணன் கவச குண்டலம் காப்பாத்துமா?

18.03.2013 தேதியிட்ட குங்குமம் வார இதழ்ல கே.என்.சிவராமனின் கர்ணனின் கவசம் தொடர்கதையின் முதல் அத்தியாயத்தை படிச்சதும் என்னை மாதிரி சாதாரணர்களுக்கு இந்த சந்தேகம்தான் வரும். அதாவது அணுகுண்டோட பாதிப்புல இருந்து கர்ணனின் கவச குண்டலம் காப்பாத்துமா என்ற கேள்விதான் இது.

பத்து ஆண்டுகளுக்கு முன்பு இந்திரா செளந்தர்ராஜன் ஒரு நாளிதழின் ஞாயிறு இணைப்பு வாரஇதழ்ல தினம் ஒரு உயிர், சிவம் அப்படின்னு ரெண்டு தொடர்கதை எழுதினாரு. அதை விடாம படிச்சிடுவேன். ஒவ்வொண்ணும் ஒரு வருடம் (சுமார் 50 வாரங்கள்) வெளிவந்தது. நான் இதுமாதிரியான அமானுஷ்ய மர்மத்தொடர்களின் ரசிகன். இப்பவும் இந்த கதைகளை நூலகத்துல இருந்து இரண்டு மூன்று முறை படித்திருக்கிறேன். முப்பது நாற்பது ஆண்டுகளுக்கு முன்னால எல்லாவிதமான தொடர்கதைகளுக்கும் தனி வாசகர் வட்டம் இருந்தது. சென்னை தொலைக்காட்சி வந்ததும் பத்திரிகைகளில் கதை படிக்கிறவங்க எண்ணிக்கையில கேன்சர் மாதிரியான ஒரு பாதிப்பு ஏற்படத்தொடங்கி செயற்கைக்கோள் தொ(ல்)லைக்காட்சிகள் வந்ததும் கிட்டத்தட்ட கோமா ஸ்டேஜுக்கே போயிடுச்சு.

புத்தகம் படிக்கிறதுக்கு நாம செலவழிக்கிற நேரத்தைப்போல குறைந்தது 4 மணி நேரத்தை நமக்கு தெரியாம தொல்லைக்காட்சிகள் எடுத்துக்குது. அதை யாரும் உணர்றது இல்லை. அதை இப்போ பேசி என்ன ஆகப்போகுது.

சாதாரணமான திகில் கதைகளை விட அமானுஷ்யங்கள் கலந்த மர்மக்கதைகள் எப்போதுமே வாசகர்களின் ஆதரவைப் பெறக்கூடிய சூழ்நிலை இன்னும் தொடருதுன்னு நினைக்குறேன். அவர்கள் அதற்கு தேர்ந்தெடுக்கும் கதைக்களனும் கருவும் அழுத்தமானதா இருக்கணும். பத்து ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் இதுமாதிரியான அமானுஷ்ய கதைகளுக்கு கோவில் சிலைகள், அதன் புராணபழமை காரணமாக பலகோடி மதிப்பு, நவபாஷான சிலை மாதிரி சக்தி அது இதுன்னு பல கதைக்கருவை கையாண்டாங்க.

அதெல்லாம் ரொம்ப பழைய பஞ்சாங்கம். அந்த மாதிரி பழைய புராணத்துல உள்ள விசயத்தை கையில் எடுத்துகிட்டு இப்போ உலகையே மிரட்டிகிட்டு இருக்குற அணுஉலை, அணுகுண்டு பிரச்சனையிலிருந்து தப்பிப்பது எப்படின்னு ஒரு டிராக்கை பிடிச்சு இந்த கதையை தொடங்கியிருக்காங்க.

எனக்கு தெரிந்த டாக்டர் நண்பர் ஒருவர் பேசிக்கொண்டிருக்கும்போது அணுகுண்டு கதிர்வீச்சால கரப்பான்பூச்சி சாகாது. அதன் இறக்கையில சுரக்குற ஒரு திரவம் அணுக்கதிர்வீச்சை தடுக்கும் அதை நசுக்கிதான் கொல்லணும்னு சொன்னார். இது உண்மையா, பொய்யான்னு எனக்கு தெரியலை. நான் இந்த கருவை மையமா வெச்சு ஒருத்தர் சயின்ஸ் பிக்சன் கதை எழுதுனா எப்படி இருக்கும்னு நினைச்சேன்.

அதையெல்லாம் தாண்டி கர்ணனின் கவசகுண்டலம் சூரிய வெப்பம் மட்டுமில்ல, அணு வெப்பத்தை கூட எதிர்க்கும்னு ஒரு வரியை யோசிச்சு அந்த கவச குண்டலங்களை தேடி வர்றவங்க மதுரை மீனாட்சி அம்மன் கோயிலை குறிவெச்சு கிளம்புறாங்கன்னு முதல் அத்தியாயத்திலேயே பீதியை கிளப்பியிருக்கார் கே.என்.சிவராமன்.

குங்குமம் சன்குழும பத்திரிகைன்னு எல்லாருக்கும் தெரியும். கர்ணனின் கவசகுண்டலம் தலைப்புலேயே மூணு சூரியன் படம் (தலைப்புள்ளியா). கதையோ அணு வெப்பத்தை தாங்கக்கூடிய கனிமம் குறித்து பேசப்போற மாதிரி தெரியுது. (அது வெப்பத்தை மட்டும் தடுக்குமா, அணுக்கதிர்வீச்சையே தடுக்குமான்னு யாருகிட்ட கேட்டு தெரிஞ்சுக்குறது?) எது எப்படியோ, 25 வாரத்துக்காவது இந்த தொடர் வெளிவந்தா ரொம்ப நாளைக்கப்புறம் நல்ல அமானுஷ்ய தொடர்கதை படிச்ச ஃபீலிங் கிடைக்கும்.

பார்ப்போம்...ஏன்னா, கலைஞர் டிவியில ராஜேஷ்குமார் நாவல் ஒண்ணு உயிரின்நிறம் ஊதா அப்படின்னு சனிக்கிழமை தொடரா வெளிவந்துச்சு. மால்குடி சுபா அழுத்தமான குரல்ல சொல்லவா சொல்லவா உயிரின்நிறம் ஊதா அப்படின்னு சூப்பரா பாடின டைட்டில் பாடல் கூட அனைவரையும் கவரும்படியா இருந்துச்சு. ஆனா 10 வாரம் கூட வெளிவரலைன்னு நினைக்குறேன். (பத்திரிகையில இந்த மாதிரி ஸ்பான்சர் பிரச்சனை இருக்காது)

ஞாயிறு, 18 ஏப்ரல், 2010

குறுகியது வீதி மட்டுமல்ல மனமும்தான்...3



"ஏய்...அந்த பேஷண்ட்ஸ் பணம் கொடுக்காம போயிட்டாங்கன்னா உன் சம்பளத்துல இருந்துதான் புடுங்குவாங்க. போய் வேலையைப் பாருங்கப்பா." என்று அவள் சொன்னதும் ராஜசேகர்"அய்யய்யோ இது வேறயா...ஏங்க...நீங்க சீக்கிரம் வாங்க..."என்றான்.




"நீ சரிப்பட்டு வரமாட்ட போலிருக்கே...டாக்டர்தான் நம்மளை அடிமையா நடத்துறார். வேலை செய்யுற நம்மளுக்குள்ளயாவது கொஞ்சம் ஜாலியா பேசி அந்த வேதனையை மறந்துட்டு இருக்கலாம்னுதான் இவ்வளவு உரிமையோட பேசுறோம். இது கூட புரியலையா...நீ டியூப்லைட் மட்டும் இல்லை...பியூஸ் போன பல்ப்...வா..."என்று சொன்னவாறு சரஸ் நடந்தாள்.





ராஜசேகருக்கு அவள் பேசியது ஒருவித ஆயாசத்தை ஏற்படுத்தியிருந்தது. அவன் ஊரில் இருந்தபோது ஒரு நாளைக்கு ஏழுமணி நேரம் தூங்கியவன். இங்கே அதில் பாதி நேரம் கூட நிம்மதியான தூக்கம் கிடைக்கவில்லை. இது தவிர நின்று கொண்டே நாள் முழுவதும் வேலை செய்வதால் விருந்தாளியாக வந்த முழங்கால் வலி இவன் உடலை நிரந்தரமுகவரியாக்கி ரேஷன் கார்டும் பெற்றுவிட்டது.





இது தவிர இன்னொரு பிரச்சனை. இந்த கிளினிக் அருகில் கையேந்திபவன்கள் இருந்தாலும் அவற்றில் அசைவம்தான். அவை மாட்டுக்கறியா, கோழியா, காக்கையா என்று கூட அங்கே சாப்பிடுபவர்களுக்கு கூட தெரியாது. முதல் நாளே சைவ உணவு கிடைக்கும் இடத்தைப் பற்றி மணிகண்டனிடம் விசாரித்தான்.





"மாப்ள...இப்படியே நேரே போய், வெங்கடநாராயணா ரோட்டுல திரும்பு. கொஞ்ச தூரத்துலயே நடேசன் பார்க் இருக்கும். அது ஓரமா போற பாதியில நுழைஞ்சு பார்க்கோட பின்பக்கம் வந்தீன்னா நீ எதிர்பார்க்குற சைவ சமையல் இருக்கும். ஆனா உனக்கு லஞ்ச் டைம் அரை மணி நேரம்தான். கிளினிக்ல இருக்குற சைக்கிளை எடுத்துகிட்டு போகலாம். அங்க போக பத்து நிமிஷம், வர பத்து நிமிஷம், சாப்பிட பத்து நிமிஷம்னு உன் ஷெட்யூல் இருந்தாதான் தப்பிச்ச. சிக்னல் பிரச்சனையும் இருக்கு. பார்த்துக்க." என்று பயமுறுத்திவிட்டுப் போய்விட்டான்.





ராஜசேகருக்கு அந்தக் கடை உணவு எவ்வளவோ திருப்தியாக இருந்தது. ஆனால் பத்து நிமிடங்களில் சாப்பிட்டு முடிப்பதுதான் இவனுக்கு இருந்த பெரிய சவால். வைட்டமின் குறைபாட்டால் ராஜசேகர் வாய் முழுவதிலும் அல்சர் வந்துவிட, சூடான மதிய சாப்பாட்டை கண்களில் நீர் வடிய மிகவும் அவதியுடன் சாப்பிட்டு முடித்தான். நீர் அருந்துவது மட்டுமின்றி பேசுவது கூட போராட்டமாகிப்போயின.





இந்த லட்சணத்தில் கிளினிக்கில் இருக்கும் டெலிபோன்களுக்கு வரும் அழைப்புகளுக்கும் பதில் சொல்லும் வேலையையும் அவ்வப்போது கொடுத்தார்கள்.





ராஜசேகர் போனில் பேசிவிட்டு அப்படா என்று அமைதியாகிவிட்டாலும் ஷண்முகப்ரியாவும் அவள் தோழிகளும் விடுவதில்லை."என்ன சார்...பேச கூட மாட்டெங்குறீங்க. ஏன், தமன்னா, ஸ்ரேயா எல்லாம் வெயிட்டிங்க்ல இருக்காங்களா? அதுதான் எங்க கூட பேசுறதுக்கு தடை போடுதா?"என்றால்லாம் கேட்டு வெறுப்பேற்றினார்கள்.





அங்கேயே தங்கினால் இன்னும் கொஞ்ச நாட்களில் சென்னைக்கு வந்தபோது இருந்த எடையில் பாதி குறைந்து மருத்துவமனையில் அனுமதிக்கும் அளவுக்கு நிலைமை மோசமாகிவிடும் என்று ராஜசேகர் உணர்ந்தான். அங்கேயே தங்காமல் வெளியில் இருந்து வந்தால் காலை ஒன்பது மணிக்கு வந்து இரவு ஒன்பது மணிக்குச் சென்றுவிடலாம் என்று சொன்னார்கள்.




மிகுந்த போராட்டத்திற்குப் பின் டாக்டரிடம் சம்மதம் வாங்கி நெசப்பாக்கத்தில் உள்ள நண்பன் வீட்டில் இருந்து தினமும் வேலைக்கு வர சம்மதம் வாங்கினான். 17G அல்லது 17A ஆகிய பேருந்துகளில் ஏறி தி.நகர் வரவேண்டும் என்றால் நெரிசலான நேரத்தில் முக்கால்மணிநேரம் கூட ஆனது. இது தவிர, பல பேருந்துகளில் ஜன்னல் கம்பிகளைப் பிடித்து தொங்குவதற்குக் கூட இடம் கிடைக்கவில்லை.





அதனால் காலை ஏழு மணிக்கே பேருந்தைப் பிடித்து பனகல் பார்க் அருகில் இறங்கி விடுவான். ஒன்பது மணி வரை பொழுதைப் போக்க வேண்டுமே...அப்படியே நடேசன் பார்க்கில் வந்து அமர்ந்து விட்டு எட்டே முக்காலுக்கு டிபனை முடித்துவிட்டு ஒன்பது மணிக்கு கிளினிக்குக்கு சென்றான்.





இரவு ஒன்பது மணிக்கு வேலை முடிந்து வெளியேறினால், துரைசாமி பேருந்து நிறுத்தத்திற்கு(அங்காடித்தெருவில் ஆரம்ப காட்சியில் வருமே, அந்த பேருந்து நிறுத்தம்தான்.) நடந்து வரவே பதினைந்து நிமிடம் ஆகிவிடும். பிறகு பேருந்தில் ஏறி நெசப்பாக்கம் வந்து இறங்க பத்தேகால் வரை ஆகும். அடுத்து எதாவது ஒரு கையேந்திபவனில் அரை வயிற்றுக்கு இட்லியை தள்ளிவிட்டு சென்று படுக்க பதினோரு மணி ஆகிவிடும். வயிறு பாதிக்கு மேல் காலியாக இருப்பதால் சரியாக தூக்கம் வராது.மறுபடி காலை ஆறு மணிக்கே எழுந்து...இனி எல்லாம் வழக்கம்போல்தான்.





கிளினிக்கிலேயே தங்கியிருந்ததற்கும் இதற்கும் பெரிய வித்தியாசம் தெரியவில்லை. நடுவில் சட்டமன்ற பொதுத்தேர்தல் வந்தது. ஊருக்குப் போய் ஓட்டு போட்டுட்டு வர்றேன். என்று டாக்டரிடம்  அனுமதி கேட்டான்.





"நீயெல்லாம் ஓட்டு போட்டு என்ன ஆகப்போகுது...ஒழுங்கா லீவு போடாம வேலைக்கு வர்ற வழியைப் பாரு..." என்று கண்டித்து விட்டார்.





சென்னைக்கு வந்து கொத்தடிமையா சிக்கிட்டோமோ என்று ராஜசேகர் யோசித்த நேரத்தில் சொந்த ஊரில் இருந்த பழைய நண்பன் இவனிடம் பேசினான்.அவன் வெளிநாடு செல்வதால் ஏற்கனவே இருந்த இடத்தில் ஒரு ஆள் கேட்குறாங்க...என்றான். இவனுக்கு தப்பிச்சோம்டா சாமி என்றுதான் தோன்றியது.





"சென்னைன்னா சும்மாவா...முதல்ல கொஞ்சம் கஷ்டமாத்தான் இருக்கும். ஒரு வருஷம் ஓட்டியாச்சுன்னா எல்லாம் பழகிடும். வேலைக்குப் போற பொண்ணாப் பார்த்து கல்யாணம் பண்ணிக்க... சென்னையில ஒட்டிக்கலாம்."என்று அறிவுரை சொன்னது ஷண்முகப்ரியாதான்.





"ஆளை விடு ஆத்தா..."என்று பெரிய கும்பிடு போட்டு விட்டு பிறந்த ஊருக்கே வந்துவிட்டான் ராஜசேகர்.





3-முற்றும்.


*****


இதெல்லாம் என்ன கதை அப்படின்னு கேட்காதீங்க. அங்காடித்தெருவுல சென்னையின் மிகச் சின்ன பகுதியில நடக்குற சுரண்டலை லேசான சினிமா கலரோட சொல்லியிருந்தாங்க. படத்துல காட்டின கஷ்டமாச்சும் பார்வையாளர்களால் கவனிக்கப்பட்டு பாவம் என்று சொல்லவைத்தது. ஆனா இந்த கதையில வர்ற ராஜசேகர் மாதிரி ஆளுங்க படுற வெளியில தெரியாத அவதி பெரும்பான்மையான மக்களால கஷ்டமாவே ஒப்புக்கொள்ளப்படுறது இல்லை.





சுருக்கமா சொன்னா நம்ம அரசாங்கத்துகிட்ட மாட்டிகிட்டு திண்டாடுற நடுத்தரவர்க்கம் மாதிரிதான். கோடீஸ்வரர்களுக்கு பட்ஜெட்டுகளாலும் வரியாலும் எந்த பாதிப்பும் இல்லை. ஏன்னா அவங்க கிட்ட வசூலிக்கிற வரியை சுமக்கப்போறது நடுத்தர வர்க்கம்தான்.





பிளாட்பாரவாசிகளும் கிடைக்கிற இலவசங்கள் இன்ன பிற சலுகைகள் போன்றவற்றால் வாழ்க்கையை நடத்த பழகிட்டாங்க.





ஆனா நடுத்தர வர்க்கம்தான் கோடீஸ்வரர் லிஸ்ட்டுலயும் சேரமுடியாம பிளாட்பாரத்துக்கும் வர முடியாம தூக்கு மாட்டிகிட்டும் உயிர் போகாம முழி பிதுங்கி போன நிலையில இருக்குறது.





இந்தக் கதையில வர்ற ராஜசேகரோட நிலையும் இதுதான்.





கடைசியா  ஒரு உண்மை.





இந்தக் கதையில எந்த ஒரு இடத்துலயும் (ராஜசேகர் கதாபாத்திரத்தின் பெயர் தவிர) கற்பனையே இல்லை. இப்படி சென்னைக்குப் போய் முதல் முறை புறமுதுகிட்டது நானேதான்.




வியாழன், 15 ஏப்ரல், 2010

குறுகியது வீதி மட்டுமல்ல மனமும்தான்-2



"பேர் சொல்லிக்கூப்பிட்டா கோவிச்சுக்க மாட்டீங்கிளா?"என்ற ராஜசேகர் தேவையில்லாமல் சிரித்து வைத்தான்.



"ஷண்முகப்ரியா...-இந்தப்பேர் எப்படி இருக்கு?" என்ற அவள், இரண்டு கண்களையும் சிமிட்டினாள்.



"உங்களை மாதிரியே அழகா இருக்குங்க..."என்று சொல்லும்போதே இவன் மனதுக்குள் குதூகலம்.



"அழகான பேரை சொல்லி கூப்பிடாம இருந்தாதான் என்னை மாதிரி பொண்ணுங்களுக்கு கோபம் வரும். இப்படியே வழிஞ்சுகிட்டு நிக்காம போய் சாப்பிட்டுட்டு வாங்க. கையேந்திபவன் காலியாயிடப்போகுது."என்ற ஷண்முகப்ரியா வேலையில் கவனமானாள்.



இவன் வழி கேட்டு ஒரு கையேந்திபவனை அடைந்தபோது அங்கே இட்லி காலியாகியிருந்தது. கடைக்காரர்,காய்ந்துபோயிருந்த பூரியைக் காட்டி,"கெளங்கு இல்லை.சாம்பார்தான் இருக்கு.இன்னா சொல்ற..."என்றார்.



"சரி...திங்கிறேன்." என்று அதை வாங்கிய ராஜசேகர், பூரியுடன் மல்யுத்தம் நடத்தி அவற்றை உள்ளே தள்ளினான்.



இவன் சென்னைக்கு வந்து பசி தீர்க்க எடுத்த முதல் முயற்சியில் வயிற்றுக்குள் ரயில்வண்டி ஓடத்தொடங்கியிருந்தது. கிளினிக்குலதான் டாய்லெட் இருக்கே...சமாளிச்சுக்கலாம். என்று நினைத்தபடியே பணியிடத்துக்கு திரும்பினான் ராஜசேகர்.




கிளினிக்கில் வேலை செய்யும் பெண்களில் நிறையபேர் வந்துவிட்டிருந்தார்கள். ஹாலில் இருந்த இருக்கைகளும் பெருமளவு பேஷண்டுகளால் நிரம்பியிருந்தன.



'அவசரப்பட்டு ஷண்முகப்ரியாவை அழகுன்னு சொல்லிட்டோமோ...இங்க வேலை செய்யுற பொண்ணுங்க எல்லாருமே அழகாத்தான் இருப்பாங்க போலிருக்கே. ராத்திரி பயணத்தால தூக்கமே இல்லை. இவ்வளவு நேரம் கண்ணு எரியுற மாதிரி இருந்துச்சு. இப்ப குளுகுளுன்னு இருக்கே...'என்றெல்லாம் யோசித்துக்கொண்டே ரிஷப்ஷன் டேபிளை நோக்கிச் சென்றான்.



"ராஜசேகர்...இதுல எந்த எந்த டெஸ்ட்டுக்கு எவ்வளவு அமவுண்ட்டுன்னு எழுதியிருக்கேன். டாக்டர் எந்த டெஸ்ட் எல்லாம் எடுக்கணும்னு இந்த ஸ்லிப்புல டிக் அடிச்சு தந்துடுவார். அதுக்கு நேரே தொகையை எழுதி டோட்டல் போட்டு ரெசீப்ட் போட்டுட வேண்டியதுதான்.



நல்லா பழகுற வரைக்கும் என் டேபிளுக்கு வந்துடுங்க...அப்புறம் ஒரு ஓரமா சுவத்துல வெச்சு கூட ரெசீப்ட் போட்டுடுவீங்க. எப்படியோ எனக்கு திட்டு வாங்கி கொடுக்காம இருந்தாசரி...உங்களுக்கு இந்த வேலையை எல்லாம் சொல்லிக்கொடுக்கணும்னு சொல்லி டாக்டரோட மிஸஸ் ஆர்டர் போட்டிருக்காங்க."என்ற ஷண்முகப்ரியா வசூலிக்க வேண்டிய தொகைகள் எழுதப்பட்ட ஸ்லிப் ஒன்றை ராஜசேகரிடம் கொடுத்தாள்.



அதை வாங்கிய ராஜசேகர் பேஷண்ட் அருகில் காலியாக இருந்த இருக்கையில் போய் அமர்ந்தான்.



"அய்யோ...ராஜசேகர், அங்க எல்லாம் உட்காரக்கூடாது. ரொம்ப சிரமமா இருந்தா இங்க ரிஷப்ஷன் டேபிளுக்குப் பின்னால இருக்குற சேர்ஸ்ல கொஞ்ச நேரம் உட்காருங்க. கண்ட இடத்துலயும் உட்கார்ந்தா டாக்டர் ஒண்ணும் சொல்ல மாட்டார். டாக்டரோட வைஃப் ஒருவழியாக்கிடுவாங்க."



சட்டென்று எழுந்து வந்த ராஜசேகர்,"நான் எங்க உட்கார்ந்துருக்கேன்னு பார்க்க சார் வெளியில ஓடி ஓடி வருவாரா...ஏங்க இப்படி பயமுறுத்துறீங்க?" என்றான்.



"அவரு ஏன் எழுந்து வந்து பார்க்கணும்? இந்த குட்டி கிளினிக்குக்குள்ள ஆறு கேமரா இருக்கு. அவரோட ரூமுக்குள்ள இருக்குற டி.வியில எல்லாத்தையும் கவனிச்சுகிட்டே இருப்பாரு...நீங்க இன்னும் தெரிஞ்சுக்க வேண்டியது நிறையவே இருக்கு..."என்று சிரித்தாள் ஷண்முகப்ரியா.



"சின்னப்புள்ளையா இருந்தப்ப, கல்யாண வீட்டுல வீடியோவுல பதிவாகணும்னு வெறியோட அலையுவேன். இனிமே கேமரா என்னைய பார்த்துடுமோன்னு பயந்துதான் வாழணுமா?"என்று ராஜசேகர் புலம்பியதைக் கேட்ட ஷண்முகப்ரியா லேசாக சிரித்துவிட்டு வேலையைத் தொடர்ந்தாள்.



அப்போது அங்கே வந்த மணிகண்டன்,"டேய்...ராஜசேகர்...என்னோட வா..." என்று கிளினிக்கின் பின்புறம் அழைத்துச் சென்றான்.



"எதுக்குடா இங்க கூட்டிட்டு வந்த?"என்ற ராஜசேகரின் குரலில் ஒருவித அலுப்பு தெரிந்தது.



"டேய் பட்டிக்காட்டு வெளக்கெண்ணை...ஷண்முகப்ரியாகிட்ட இப்படி கடலை வறுக்குற?...ஒரேடியா சட்டி தீயுற வாடை. இப்படியே அவகிட்ட பேசிகிட்டே இருந்தீன்னா மத்தவளுங்க எல்லாம் சேர்ந்து உனக்கு ஆப்பு வெச்சுடுவாளுங்க..."என்று மணிகண்டன் சொன்னதும் ராஜசேகரின் முகத்தில் பிரகாசம்.



"தம்பி...நீ பெரிய சினிமா ஷீரோ...அதனால பத்துப்பதினஞ்சு பேர் உனக்காக போட்டி போடுறதா நினைச்சுடாத...நிறைய மனிதர்கள்கிட்ட இருக்குற பொறாமைக்குணம்தான் இதுக்கு காரணம். நம்ம கிட்ட மட்டும்தான் அதிகமா பேசணும். முக்கியமான விஷயங்களை நாமதான் கத்துக்கொடுக்கணும். அடுத்தவங்களோட அவருக்கு அல்லது அவளுக்கு டீப்பான ஃப்ரெண்ட்ஷிப் இருக்கக் கூடாது...இப்படி ஏகப்பட்ட விஷயங்கள் அடங்கின அரசியல் இங்கயும் இருக்கு.



அவ்வளவு ஏன்? ஷண்முகப்ரியாகிட்ட நீ அதிகமா பேசுறது எனக்கே பொசபொசன்னுதான் இருக்கு.சரி...வா...ரொம்ப நேரம் நாம கேமராவுல சிக்கலன்னா டாக்டர் ஓலை அனுப்பிடுவார்."என்று மணிகண்டன் சொல்லிச் சென்றதும் ராஜசேகருக்கு தன் முதுகே தெரிவது போல் இருந்தது.



அரைமணிநேரம் கழித்து முதன்முதலாக ஒரு பேஷண்டுடன் அட்டெண்டராக உள்ளே சென்றான். வெளியில் இருந்த புழுக்கத்துக்கு உள்ளே இருந்த ஏ/சி இவனுக்கு சுகமாகத்தான் தெரிந்தது.



உயரம், எடை போன்றவற்றைக் எப்படி குறிக்க வேண்டும் என்று டாக்டரே ராஜசேகரிடம் சொன்னார்.'இவ்வளவு நல்ல மனுஷனா இருக்காரே...'என்ற எண்ணம் ராஜசேகர் மனதில்.



இவன் வெளியில் கிளம்பும் போது,"ராஜசேகர்...லேப்ல சரஸ்வதின்னு ஒரு பொண்ணு இருக்கும். அதை ரிஷப்ஷன் டேபிளுக்கு வரசொல்லி ரெசீப்ட் போடுங்க. அடுத்த பேஷண்ட்டுக்கு நான் டிக்டேட் பண்ணப்போற ரிப்போர்ட்டை எழுத ஷண்முகப்ரியா இங்க வந்துடுவாங்க."என்று சொல்லி அனுப்பினார் டாக்டர்.



இவன் அமவுண்ட் வாங்க வேண்டிய பேஷண்ட்டை ரிஷப்ஷன் அருகில் அமரசொல்லிவிட்டு, லேப்புக்கு சென்றான்.



"இங்க யாருங்க சரஸ்வதி?...டாக்டர் ரிஷப்ஷன் டேபிளுக்கு வரசொன்னார்."



அங்கு இருந்த ஆறு பெண்களில் ஆரஞ்சு வண்ண சுடிதாரில் இருந்த அவள்,"ஏம்பா சரஸ்வதீன்னு இழுக்குற?...சரஸ் அப்படின்னு சுருக்கு.இப்படி பேர் வெச்ச அப்பா அம்மாவை முதல்ல உதைக்கணும்...இந்த டாக்டரை அடுத்ததா மிதிக்கணும்...சரி...வா..."என்று சொன்ன சரஸ்வதி இவனுக்கு முன்னால் நடந்தாள்.



அவள் பேசியதைக் கேட்டு திகைத்து நின்ற ராஜசேகரைப் பார்த்து, மற்ற பெண்கள் சிரித்தார்கள்.



அப்போது ஒருத்தி சொன்னதைக் கேட்டு பதறிப்போன ராஜசேகர்....



2-தொடரும்

******



அங்காடித்தெரு படம் பற்றி ஒருசிலரால் குறையாக சொல்லப்படும் விஷயம் ஒன்று உண்டு. எந்த முதலாளியும் தங்களின் கொடூர முகத்தை இப்படி பகிரங்கமாக காட்டமாட்டார்கள். படத்துக்காக மிகைப்படுத்திய காட்சிதான் அது என்பது இவர்களின் வாதம்.



இப்படி சொல்பவர்கள் நிச்சயமாக இப்படியும் ஒரு உலகம் இருப்பதைப் பார்க்கும் வாய்ப்பு அமையாதவர்களாகத்தான் இருக்க வேண்டும்.  ஆனால் ஒட்டுமொத்தமாக தொழிலாளியை வஞ்சிக்கும் முதலாளிகளைப் பற்றி கணக்கெடுத்துப் பார்த்தால் வேறொரு உண்மை புலப்படும்.




பேருந்துநிலையம், மதுக்கடை அருகில் உள்ள கடைகள், இரவு நேரக் கடைகள் உட்பட பல இடங்களில் பணியாளர்கள் மீதான வன்முறை இப்படி இருக்க வாய்ப்பு உண்டு. ஆனால் மிக அதிகமான முதலாளிகள் மோசமான அரசியல்வாதிகள் போலவேதான்.



அதாவது, அவர்கள் பேசும்போது பளிங்குத்தரையாகத்தான் தெரியும். ஆனால் திரைமறைவு நடவடிக்கைகள் பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட  சாலையைப் போன்றே மோசம்தான். இந்த மோசமான முகமும் எல்லா இடத்திலும் வெளிப்படாது. தோலில் ஒட்டிக்கொண்டு நமக்கே தெரியாமல் ரத்தம் உறிஞ்சும் அட்டை போலத்தான் எளிய மக்களின் உழைப்பை சுரண்டுவார்கள்.



மதுவுக்கும் பிரியாணிக்கும் சொற்பத் தொகைக்கும் அடிமட்டத்தொண்டன் இவர்களுக்கு அடிமையாக கிடப்பது இந்த வகைதான்.



இப்போது நான் வேலை செய்யும் இடத்தில் இரண்டு கால்களும் முற்றிலும் செயலிழந்த பெண்ணும் வேலை பார்க்கிறாள். இன்று மதியம் அழுதுகொண்டிருந்த அவளை சக ஊழியைகள் சமாதானப் படுத்தினார்கள். காரணம் என்ன தெரியுமா?



காலை ஒன்பது மணி முதல் மாலை ஏழு மணி வரை வேலை செய்யும் அந்தப் பெண்ணிற்கு மாதம் ஆயிரத்து நூறு ரூபாய்தான் ஊதியம். அதையும் இன்று (15ந்தேதி) வரை வழங்கவில்லை. மேலாளரிடம் கேட்டதற்கு, என் வேலை உங்களிடம் வேலை வாங்குவதுதான். சம்பளம் வேணுன்னா முதலாளிகிட்ட பேசிக்குங்க... என்று சொல்லியிருக்கிறார்.



இப்படி வேலை செய்பவர்களுக்கான சொற்பக்கூலியைக் கூட மிக மிக காலதாமதமாக தரும் முதலாளிகளும் என் பார்வையில் மிக மிக ஆபத்தானவர்களே.



தொடரும்...


புதன், 14 ஏப்ரல், 2010

குறுகியது வீதி மட்டுமல்ல மனமும்தான்...1



குட்டித்தொடர்கதை-அத்தியாயம் 1



மாம்பலம் ரயில் நிலையத்தில் இறங்கிய ராஜசேகர் தெருவுக்குள் நுழையும் முன்பு இவனிடம் இருந்த சுமைகளைப்பார்த்துவிட்டு  ஒன்றிரண்டு ஆட்டோ ஓட்டுனர்கள் சற்று முன்னால் வந்தார்கள். ஆனால் இவன், எந்த வித தயக்கமும் இல்லாமல் ரங்கநாதன் தெருவிற்குள் இறங்கி நடந்ததும் அவர்கள் பின்வாங்கிவிட்டார்கள். இதைப்பார்த்த ராஜசேகருக்கு அறிமுகப் போட்டியில் முதல் பந்திலேயே சிக்சர் அடித்தது போல் மகிழ்ச்சி.




வேலை கிடைத்து புறப்பட்ட இவனுக்கு, சென்னை ரிட்டன் நண்பன் (எவ்வளவு நாள்தான் துபாய் ரிட்டன், சிங்கப்பூர் ரிட்டன் இப்படியே சொல்றது?) சில ஆலோசனைகளை சொல்லியிருந்தான். "உனக்கே நேரம் சரியில்லை. ஊருக்குப் புதுசுன்னு தெரிஞ்சா ஆப்படிக்கிற ஆட்டோக்காரங்க கிட்டதான் நீ போய் மாட்டுவ. அதனால, நடந்தே இந்த முகவரிக்குப் போற மாதிரி நான் வழி சொல்றேன்" என்ற அவன், ராஜசேகரிடம் எப்படி நடந்து செல்ல வேண்டும் என்று கூட பாடம் எடுத்தான்.



அதைக்கேட்ட ராஜசேகர், பிறந்து வளர்ந்த ஊரில் நடப்பது போல் எதைப் பற்றியும் கவலைப்படாமல் நடந்து செல்வது சற்று சிரமமாகத்தான் இருந்தது. ஏனெனில் அவன் வைத்திருந்த சுமைகள் அப்படி. ஆனால் ஆட்டோவுக்கு கொடுக்கும் நூறு ரூபாய் இருந்தால் கையேந்தி பவனில் ரெண்டு நாளைக்கு சாப்பிடலாம். அங்க போனா ஒவ்வொன்னுக்கும் காசு. உள்ளூருன்னா சொந்தக்காரங்க வீட்டுக்கு சும்மா பார்க்கப்போற மாதிரி விசிட் விட்டுட்டு வயித்தை நிரப்பிட்டு வந்துடலாம். அங்க அதுக்கெல்லாம் வாய்ப்பே இல்லடி மாப்ளே...என்று நண்பன் சொன்னது நினைவுக்கு வரவும் ராஜசேகர் வைத்திருந்த பேக்கும், ப்ரீஃப் கேசும் கனமாகவே தெரியவில்லை.



பெரிய மருத்துவமனையை எதிர்பார்த்திருந்த ராஜசேகருக்கு பர்கிட் ரோட்டில் அமைந்திருந்த அந்த கிளினிக்குக்கு சென்றதும் சின்ன ஏமாற்றம். அங்கே உள்நோயாளிகள் அனுமதி எல்லாம் கிடையாதாம். பரிசோதனைகள், ஆலோசனைகள் மட்டுமே. இதிலேயே ஒரு நாளைக்கு இரண்டு லட்ச ரூபாய் வசூலிக்கும் கிளினிக் அது. மருத்துவரின் பெரியப்பா ஆள்பிடிக்கும் தேடுதலில் இறங்கியபோது ராஜசேகர் சிக்கியிருந்தான்.



சாப்பாடு மட்டும் வெளியில பார்த்துக்க. ஆஸ்பத்திரியிலேயே தங்கிக்கலாம். வாடகையும் அட்வான்சும் மிச்சம் அப்படின்னு அவர் சொன்னதை நம்பி வந்த ராஜசேகருக்கு காட்டப்பட்ட அறையைப் பார்த்ததும் பகீர் என்றது. பனிரெண்டுக்கு பத்து என்ற அளவுடைய அறையில் ஆறு பேருக்கு அலாட்மெண்ட் என்று சீனியர் சொன்னான்.



"தம்பி...ரொம்ப பயப்படாத...இந்த ரூம்ல ஏசி வெச்சாதான் படுக்கமுடியும். இல்லன்னா லாயக்கில்லை. அதனால பேஷண்ட் வெயிட்டிங் ஹால்லயே படுத்துக்கலாம். என்ன...ராத்திரி பதினோரு மணிக்கு முன்னால படுக்க முடியாது. காலையில ஆறரை மணிக்கப்புறம் தூங்க முடியாது. போகப்போக பழகிடும்.



ஊருல உட்கார்ந்த இடத்துலயே வேலையா...இல்ல...அலைஞ்சு திரிஞ்சு பழக்கமா..." என்றான் மணிகண்டன்.



"ஏன்?"



"இங்க உட்கார வாய்ப்பே இல்லை. அதான் கேட்டேன்."



"என்னது...உட்கார முடியாதா. நான் டிகிரி படிச்சுருக்கேன். லேப்ல எந்த டெஸ்ட்டுக்கு எவ்வளவு ஃபீஸ் அப்படின்னு குறிச்சு கொடுக்குறதுதான் வேலைன்னு சொன்னாங்களே." என்ற ராஜசேகரின் கண்களில் லேசான பதற்றம் தெரிந்தது.



இதைப் பார்த்ததும் சிரித்த மணிகண்டன்,"சரியாத்தான் சொல்லியிருக்காங்க. ஆனா ஒரு பேஷண்ட் டாக்டர் ரூமுக்குள்ள போகும்போது நீயும் கூடவே போகணும். உயரம், எடையை குறிச்சு டாக்டர்கிட்ட சொல்லணும். அவர் குறிச்சு கொடுக்குற டெஸ்ட்டுக்கான ஸ்லிப்பை எடுத்துகிட்டு பேஷண்ட்டோட வெளியில வந்து தொகையைக் குறிச்சு பணம் வாங்கி, கட்டி பெய்டு சீல் வெச்சு லேப்புக்குள்ள அனுப்பணும். அதுக்குள்ள வேற பேஷண்ட்டுகள் சிலரை மற்ற ஸ்டாஃப் கவனிச்சுக்குவாங்க. மறுபடி நீ முதல்ல இருந்து ஆரம்பிக்கணும்."என்றான்.



இப்போது ராஜசேகர் மனம் முழுவதும் வெறுப்பு. இந்த வெறுப்பு மனதில் இருக்கும்போது கலெக்டர் வேலையே கிடைத்தாலும் ஈடுபாடு வராது.



"அட்டெண்டர் வேலைன்னு சுருக்கமா சொல்லக்கூடாதா?" என்றான்.



இதைக் கேட்ட மணிகண்டன்,"அட...நீ டிகிரி படிச்ச ஆளுதாம்பா...இவ்வளவு சரியா புரிஞ்சுகிட்ட...பத்து நாள் வரை நீ இங்க இருக்குற யார்கிட்ட வேணுன்னாலும் வேலை தொடர்பான சந்தேகம் கேட்கலாம். யாரும் திட்ட மாட்டாங்க. அதுலயும் லேபுக்கு வர்ற பொண்ணுங்க எல்லாம் அழகா அம்சமா இருக்கும். அவங்ககிட்ட ஜாலியா கடலை போடுறது ஒண்ணுதான் எனக்கு இப்ப இருக்குற ஒரே ஆறுதல். நீயும் என்ஜாய். இப்ப போய் குளிச்சுட்டு வா. நான் தாங்கிக்குவேன். நம்ம பிரண்ட்ஸ் எல்லாம் என்னைய தப்பா நினைச்சுடுவாங்க."என்று சொல்லிவிட்டு அகன்றான்.



குளித்துவிட்டு உடைமாற்றி மேக்கப்புடன் வந்த ராஜசேகர், ரிஷப்ஷன் டேபிளின் பின்னால் அமர்ந்து எதையோ எழுதிக்கொண்டிருந்த பெண்ணிடம்,"மேடம்...நான் இங்க புதுசா வேலைக்கு சேர்ந்துருக்கேன். இப்ப என்ன செய்யணும்." என்றான்.



அவள் நிமிர்ந்து,"மணிகண்டன் சொன்னார். வேலையைத் தொடங்குறதுக்கு முன்னால போய் சாப்பிட்டுட்டு வந்துடுங்க. அப்புறம் ரெண்டு மணி வரை எங்கயும் போக முடியாது. இன்னொரு விஷயம்...நான் உங்களோட சின்னப்பொண்ணாத்தான் இருப்பேன். அதனால மேடமெல்லாம் வேண்டாம். கால் மீ ஷண்முகப்ரியா..."என்றாள்.



1-தொடரும்



******

இந்தக் கதையை நான் எழுத தூண்டுதலாக இருந்தது அங்காடித்தெரு படம்தான். படத்தில் மூன்றாவது தளத்தின் சூப்பர்வைசராக வரும் இயக்குனர் A.வெங்கடேஷ்,"என்னலே சிரிப்பு..."என்று பல்லைக்கடித்துக்கொண்டு கேட்கும் காட்சியில் பாண்டியும் மகேஷும் அலறுவது காமெடிக்காட்சியாகத்தான் இருந்தது. ஆனால் போகப்போக, அவருடைய அட்டகாசத்தைப் பார்க்கும்போது பிடித்து அடித்து விடலாமா என்று கூட நினைக்க வைத்தது. அதுதான் அவருடைய நடிப்புக்கு கிடைத்த வெற்றி.



இந்தப் படம் தொடர்பாக கலைஞர் தொலைக்காட்சியில் பத்து இயக்குனர்கள் சந்தித்த காட்சியைப் பார்த்தேன். வசந்தபாலன் ஷங்கரிடம் உதவியாளராக இருந்தபோது A.வெங்கடேஷ் அசோசியேட் டைரக்டராம். வசந்தபாலன் படப்பிடிப்பின்போது முக்கியமான ஒரு நோட்டைத் தொலைத்து விட்டபோது ஒரு வெங்கடேஷ் டெரர் அவதாரம் எடுத்திருக்கிறார்.



வசந்தபாலன் அப்போது அவரைப்பார்க்கவே அஞ்சி நடுங்கிய அனுபவம்தான் இந்த கேரக்டரில் வெங்கடேஷை நடிக்கவைக்க காரணம் என்று சொன்னார்.



ஆனால் ஒன்றிரண்டு முறை இயக்குனர் வெங்கடேஷைப் பார்த்தால் அவர் இவ்வளவு டெரர் என்று சொல்லவே முடியாது.




நீ எத்தனை தடவை அவரைப் பார்த்துருக்கன்னுதானே கேட்குறீங்க. ஒரே ஒரு தடவை ஏ.வி.எம் ஸ்டுடியோவுலதான் சந்திச்சிருக்கேன்.



2006ம் வருஷம் தீபாவளி நெருங்கிய சமயம், ஏவிஎம் ஸ்டுடியோவுல வாத்தியார் படத்தோட எடிட்டிங், கே.பாக்யராஜ் ஸ்டுடியோவுல சரத்குமாரின் நூறாவது படமான தலைமகன்  எடிட்டிங் நடந்துகிட்டு இருந்தது. நெகட்டிவை பிராசஸ் பண்ணின பிறகு பிரிண்ட் போட்டுட்டு அதை அப்படியே எடிட்டிங் செய்யப் பயன்படுத்துற சிரமமெல்லாம் இப்ப கிடையாது. டெலிசினி மெஷின் மூலமா வீடியோ டேப்புக்கு கன்வர்ட் பண்ணிடுவாங்க.



அந்த டேப்புல பதிவான படத்தை கணிணிமூலமா அவிட், எஃப் சி பி போன்ற தொழில்நுட்பம் மூலமா  தொகுத்து, கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் எல்லாம் செய்வாங்க. இதெல்லாம் முடிஞ்சு திருப்தி வந்த பிறகுதான் ஒரிஜினல் நெகட்டிவ்ல மாற்றம் செய்யுறதெல்லாம் நடக்கும்.



வீடியோ டேப்புல இருக்குற படத்தை கணிணியில ஏற்ற பீட்டா கேம் பிளேயர் தேவை. பல லட்ச ரூபாய் விலையுள்ள அந்த பிளேயரை நான் இந்த எடிட்டிங் நடக்குற இடத்துக்கெல்லாம் எடுத்துட்டுப் போனேன். இருபது கிலோவுக்கு குறையாத எடை இருக்கும்.



வாத்தியார் பட எடிட்டிங் வேலைக்காக பிளேயரை எடுத்துட்டுப் போகும்போது ஏவிஎம்ல அர்ஜூன், A.வெங்கடேஷ், எடிட்டர் வி.டி.விஜயன்  எல்லாம் இருந்தாங்க. அப்ப வெங்கடேஷ் பேசிகிட்டு இருந்ததை பார்த்துருக்கேன். அவரைப்பார்த்தா கோபப்படுவாரான்னு கேட்குற மாதிரிதான் இருந்துச்சு. ஆனா வசந்தபாலன் வெங்கடேஷ் கோபத்தைப் பத்தி சொன்னதும்,"நம்பமுடியவில்லை..."அப்படின்னு பாடத்தான் தோணுச்சு.



******


ஞாயிறு, 14 பிப்ரவரி, 2010

திருவாரூரில் திருவிழா - தொடர்கதை - 7 - நிறைவுப்பகுதி - ஐம்பதாவது பதிவு

குளிர்பானம் வாங்கிக்கொடுத்தால்தான் மாப்பிள்ளை வெளியே வருவார் என்று சில குறும்புக்கார பெண்கள் சொல்லவும் ஆவேசமாக உள்ளே நுழைந்தது வெற்றிதான்.
"அட அறிவுகெட்ட வெண்ணை...கல்யாண ஏற்பாட்டை நாமதாண்டா செஞ்சுகிட்டு இருக்கோம்.இப்ப பொண்ணு வீட்டுல இருந்து பார்மாலிட்டிக்கு அஞ்சு பேர் வந்திருக்காங்க.அவ்வளவுதான்.இதுக்கு மெனக்கிடுறது எல்லாம் நானும் என் நண்பர்களும்தான்.இப்ப நான் போய் கூல்டிரிங்கஸ் வாங்கிட்டு வரணுமா...பிச்சுபுடுவன் பிச்சு...ஒழுங்கா புள்ளையா அடக்க ஒடுக்கமா ரெடியாகு...இல்லன்னா தூக்கிடுவோம்...எல்லாம் இவங்களால வந்தது.பெரும்பாலும் வில்லங்கம் உங்க கிட்ட இருந்து தான் ஆரம்பமாகுது.இவன் பாட்டுக்கு எதுவும் சொல்லாம கிளம்பியிருப்பான்.அவனை உசுப்பேத்தி எங்கிட்ட திட்டுவாங்க விட்டுட்டீங்கிள்ள..."என்று வெற்றி அந்த பெண்களையும் லேசாக கடிந்துகொண்டான்.

அவர்களில் ஒருத்தி,"அப்ப உன் கல்யாணத்தப்ப ஜமாய்ச்சுடுவோம்."என்றாள்.



"பிசாசுங்களா...நீங்க யாரும் ஆணியே புடுங்க வேணாம்.நான் கல்யாணம் முடிச்சு ஹனிமூனும் கொண்டாடிட்டுதான் உங்களுக்கெல்லாம் விஷயத்தை சொல்லுவேன்.தெண்டமா இவளுங்ககிட்ட பேசிகிட்டு இருக்காதடா.நமக்கு நேரமாச்சு."என்று மாப்பிள்ளை அழைப்புக்காக அன்புச்செல்வனை துரிதப்படுத்தினான்.
மற்றவர்களுக்கு இடையூறு இல்லாத வகையில் வாணவேடிக்கையுடன் மாப்பிள்ளை - பெண் ஊர்வலம் திருமண மண்டபத்தை வந்து அடைந்தது.

ஒரு வயதான அம்மா,"டேய்...வெற்றி...ஊர்வலத்தை நீயும் உன் பிரெண்ட்சும் அமர்க்களப்படுத்திட்டீங்கடா."என்றார்.

"அடப்போங்க பாட்டி...இதுல ஒரு கிக்கே இல்ல...பொண்ணு வீட்டுல இதையெல்லாம் ஏற்பாடு பண்ணியிருந்தா அது ஒரு மாதிரி.ஆனா நாங்களே ஏற்பாடு பண்ணி இப்படி ஆட்டம் போடுறது காசு கொடுத்து ஆளுங்களை கூட்டிட்டு வந்து கட்சி மாநாடு நடத்துற மாதிரி இருக்கு."என்று அலுத்துக்கொண்டான்.

காயத்ரியின் கூந்தலுக்கு சந்தியாவின் தோழி மிக அழகாக ஒருவித அலங்காரம் செய்திருந்தாள். ஒளிப்பட ஆல்பத்தில் வரைகலைக்காக பயன்படுத்த காயத்ரியை வெவ்வேறு கோணங்களில் படம்பிடித்துக்கொண்டிருந்தது வெற்றியின் நண்பன்தான்.திடீரென சந்தியாவுக்கும் அவனுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

அங்கே வந்த வெற்றி,"இங்க என்னப்பா சத்தம்..."என்றான்.

"நீ மட்டுமில்ல, உன் நண்பர்களாலயும் பிரச்சனைதான்.என் ஃப்ரெண்ட் எங்க அக்காவுக்கு இந்த தலை அலங்காரம் செய்ய எவ்வளவு சிரமப்பட்டிருப்பான்னு தெரியுமா? அதை மொபைல் கேமராவுல படம் பிடிக்க எங்களுக்கு எவ்வளவு நேரம் ஆயிடும்?ஆனா போட்டோகிராபர்கிட்ட இருக்குற கேமராவுல பதிவுசெஞ்சா எவ்வளவு தரமா இருக்கும்... அதை சொன்னா, உன் பிரண்டு மாட்டேன்னு சொல்றார்.
நீயும் உன் நண்பர்களும் என் கிட்ட வம்பு பண்ணிகிட்டே இருக்குறதுன்னு தீர்மானமா இருக்கீங்கிளா?"என்று சந்தியா படபடத்தாள்.

"த்தோடா...நெனப்புதான் பொழப்ப கெடுக்குமாம்...சக்தி...என்னடா பிரச்சனை..."

"நீயே எடுடா வெற்றி..."என்று அந்த கேமராவை இவனிடம் தந்தான் சக்திவேல்.

வியூ ஃபைண்டர் வழியே பார்த்த வெற்றி, படம்பிடிக்காமல் கேமராவை நகர்த்திவிட்டு,"அண்ணி...கோவிச்சுக்காம வேற பிளவுஸ் மாத்திட்டு வந்துடுங்க. ஆயிரம் வாட்ஸ் பல்ப்...பிளாஷ் லைட்...உங்க கூந்தல் அழகை அழகா படம்பிடிக்கலாந்தான்...ஆனா போட்டோவுல பார்க்கும்போது கொஞ்சம் நெளியுற மாதிரி இருக்கும்.இந்த விளக்கம் உங்களுக்கு போதும்னு நினைக்குறேன்.நாங்க கொஞ்ச நேரம் வெளியில இருக்கோம்...சந்தியாவோட பேச்சைக்கேட்காதீங்க...ஒரு மண்ணும் தெரியாத விவரம் பத்தாத பொண்ணு."என்று நண்பர்களுடன் வெளியேறினான்.

"கேமராமேன் பசங்க எப்படி சொல்றதுன்னு தவிச்சுருக்கானுங்க. வெற்றிக்கு கொஞ்சம் கூட இங்கிதம் இல்ல. எப்படி விஷயத்தை உடைச்சுட்டு போறான் பாரு..."என்று சந்தியா, கதவை சாத்தினாள்.

"அடப்போடி இவளே...இங்கிதம் பார்த்துகிட்டு இருந்தா விடிய விடிய அப்படியே சண்டை போட்டுகிட்டு நின்னுருக்கவேண்டியதுதான்.வெற்றி சொன்னதுதான் சரி. முன்பக்கம் புடவை இருக்குறதால ஒண்ணும் பிரச்சனை இல்லை.

வியர்வையில அப்படியே ஸ்ட்ராப் பளிச்சுன்னு தெரியுது பாரு.அதோட லைட் வெளிச்சமும் சேர்ந்தா அவ்வளவுதான். எதை எதை படம்பிடிக்கணும்னு நாகரிகம் தெரிஞ்ச பசங்கதான். அதான் நம்ம பிரின்ஸ்பால், எஸ்.பி அப்படின்னு எல்லார்கிட்டயும் நல்லபேர் எடுத்துடுறான்.
நான் கூட ஒரு சில கல்யாணவீடியோவை பார்த்துருக்கேன்.விவரம் புரியாத பசங்க அப்படியே ஷூட் பண்ணிருப்பாங்க. சில நொடிகள்தான்னாலும் சம்மந்தப்பட்டவங்க கொஞ்சம் சங்கடமா ஃபீல் பண்ற மாதிரி ஆயிடும்.

அதனால இந்த விஷயத்துல நான் வெற்றி பக்கம்."என்றாள் ஒரு தோழி.

இதற்குள் காயத்ரியும் உடை மாற்றியிருந்தாள்.
******
மறுநாள் காலை 10.00 மணி முதல் 11.30 மணி வரைதான் முகூர்த்தம்.மண்டபம் மிகப்பெரியதாக இருந்ததால் முதலில் கூட்டம் அதிகமானதை கவனிக்கவில்லை.நேரம் ஆக ஆக சுந்தர்ராஜனுக்கு லேசான பதட்டம் தொற்றிக்கொண்டது.

'நானூறு பேருக்குமேல வரமாட்டாங்க...அப்படின்னு சம்மந்தி சொன்னாருன்னு நம்பி ஆயிரத்து நூறு பேருக்குதான் சமைக்க சொன்னேன்.இப்ப அவரோட சொந்தக்காரங்க எண்ணிக்கையே ஆயிரம்பேர் வந்துடுவாங்க போலிருக்கே...இந்த நிலவரத்தை பார்த்தா, பாதிபேர் நேரமாகுறதைப்பார்த்து சாப்பிடாமலேயே போயிடுவாங்க. அப்படியே எல்லாரும் சாப்பிடலாம்னு உட்கார்ந்தா உணவு பத்தாதே...'என்று குழம்பிய சுந்தர்ராஜனால் திருமண சடங்குகளில் மனம் ஒன்றி ஈடுபடமுடியவில்லை.
சமையலறையை கவனித்துக்கொண்டிருந்த வெற்றி எதற்கோ அரங்கத்துக்குள் வந்த நேரத்தில் தந்தையின் முகத்தைக் கவனித்துவிட்டான்.

வற்புறுத்தி கேட்டதும் தன் கவலையை வெற்றியின் காதோடு காதாக சொன்னார்.

"எல்லாத்தையும் நான் பார்த்துக்குறேன்.எத்தனை பேர் வந்தா என்னப்பா...சாதாரணமா இவ்வளவு பேருக்கு நம்மால சாப்பாடு போட முடியுமா?...இந்த புண்ணியத்தை நமக்கு தர்ற இவங்களுக்கு நாம சந்தோஷத்தோட நல்லபடியா சாப்பாடு போட்டு அனுப்பணும்.எழுநூறுபேர்தானே அதிகமா வந்துருப்பாங்க...இதெல்லாம் ஒரு மேட்டரா..."என்று அவருக்கு தைரியம் சொன்ன வெற்றி, தன் நண்பர்களை அழைத்தான்.

"டேய்...இந்த விஷயத்துல எங்க சொந்தக்காரங்களை நம்ப முடியாது. நாற்காலியை விட்டு எழுந்திரிக்காம, நாங்க அவங்களை டைனிங் ஹாலுக்கு பஸ்சுல அழைச்சுட்டுப்போய் சாப்பிட வைக்கலைன்னு குத்தம் சொல்லிகிட்டு இருப்பாங்க.அதனால கல்யாணம் முடிஞ்சதும் யாரும் வெளியில போயிடக்கூடாது. அந்த மாதிரி கவனிக்கிறது உங்க பொறுப்பு. ஒரு பந்தியில நானூறு பேர் உட்காரலாம். அதிகபட்சம் ஆறு பந்திக்குதான் ஆள் இருக்கும்.

நான் கூடுதல் சாப்பாட்டுக்கு வேண்டிய வழியை செய்யுறேன்."என்று தலைமை சமையல்கலைஞரிடம் சென்றான் வெற்றி.

"அய்யா...ஆயிரத்து இருநூறு பேருக்கு என்ன சமையல் செய்யுறீங்கிளோ...அதே மாதிரி இன்னும் அறுநூறு பேருக்கும் சமையல் பண்ணிடணும். தேவையான பொருட்களை நாங்க வாங்கிட்டு வர்றோம். உங்களுக்கு பேசிய தொகையை இந்தகூடுதல் வேலைக்கு ஏற்ற மாதிரி நியாயமான அளவுல அதிகரித்து தர்றது என் பொறுப்பு."என்று தெளிவாகப்பேசினான். அவரும் முக மலர்ச்சியுடன் சம்மதித்தார்.

கூடுதல் சமையலுக்கு மூன்று மணி நேரம் அவகாசம் இருந்ததால் வெற்றியின் திட்டப்படி எந்த குளறுபடியும் இல்லாமல் அனைவருக்கும் உணவு உபசரிப்பு நல்லபடியாக நிறைவேறியது.

******

"வெட்டித்தனமா வில்லங்கம் செய்துகிட்டு இருந்தாலும் அவன் மட்டும் இல்லன்னா பாதிப்பேருக்கு சாப்பாடு இல்லாம அசிங்கப்பட வேண்டியதாயிருக்கும்."என்று ஒரு உறவினரிடம் சுந்தர்ராஜன் ஆதங்கப்பட்டுக்கொண்டிருந்தார்.

அது ராமலிங்கத்தின் உறவினர் ஒருவரின் காதுகளில் விழுந்துவிட அவர் மிகச் சரியான முறையில் ஒரு வில்லங்கத்துக்கு நெருப்பு பற்றவைத்தார்.

"சம்மந்தி...இப்ப எவ்வளவு கூடுதலா செலவாயிருக்குன்னு சொல்லுங்க...நான் எப்படியாவது தந்துடுறேன்..."என்று வருத்தம் வார்த்தைகளில் வெளிப்பட்டுவிடாமல் அடக்கிக்கொண்டு பேசினார்.

பதிலுக்கு சுந்தர்ராஜனும் எதோ சொல்ல நினைத்தபோது வெற்றி இடையில் புகுந்தான்.
"ஆஹா...ரொம்ப குடும்பங்கள்ல இப்படிதான் தகராறு ஆரம்பமாகுதா...மாமா...இதுல உங்களை யார் தப்பு சொன்னா...திடீர்னு இவ்வளவு கூட்டம் வரும்னு யாருமே எதிர்பார்க்கலைதான். ஏன்னா...நாம எவ்வளவு பத்திரிகை கொடுத்தாலும் அவங்கள்ல எத்தனை பேர் கல்யாணத்துக்கு வந்து வாழ்த்துவான்னு யாராலயும் சொல்ல முடியாது.விசேஷம் நடத்துனா இதெல்லாம் சாதாரணம்.

சின்னப்பையன்...எனக்கு தெரியுது...மணிவிழா கொண்டாடுற வயசுல உங்களுக்கு புரியலையே...இவ்வளவு பேருக்கு சாப்பாடு போட்டு அண்ணனும் அண்ணியும் தங்கள் வாழ்க்கையைத் தொடங்கியிருக்காங்க...இது எவ்வளவு பெரிய புண்ணியம் தெரியுமா?இதுக்கு வாய்ப்பு ஏற்படுத்திக்கொடுத்த கடவுளுக்கும் வந்திருந்தவங்களுக்கும் நன்றி சொல்றதை விட்டுட்டு புதுசா பூத்திருக்குற உறவை சிதைக்கிற முயற்சியில இறங்கிட்டீங்கிளே...அங்க பாருங்க...அண்ணன்-அண்ணி முகத்துல பசியோட வாட்டம் நல்லா தெரியுது.

பெரிய மனுஷன் நான் சொல்றேன்...பேசாம என் கூட வாங்க..."என்று வெளியில் கிளம்பினான்.

"நீ கோவிச்சுகிட்டு எங்கடா போற?"

"அதெல்லாம் யாருக்கு தெரியும்?...நமக்கு இங்க மண்டபத்துல சாப்பாடு இல்லை.வேற ஒரு இடத்துல ஏற்பாடு பண்ணியிருக்கேன்... எல்லாரும் பஸ்சுல ஏறுங்க..."என்று வெற்றி சொன்னதும் மற்றவர்கள் புதிராகப்பார்த்தார்கள்.

"என் பிரெண்ட்ஸ் அஞ்சு பேர், இங்கயே சாப்பிட்டாச்சு. அவனுங்க இப்ப எல்லாத்தையும் பார்த்துக்குவானுங்க.பயப்படாம வாங்க."என்று வெற்றி முதல் ஆளாக பேருந்தில் ஏறினான்.

அந்த பேருந்து பத்து நிமிட பயணத்தில் சென்று அடைந்த இடம், ஒரு ஆதரவற்ற குழந்தைகள் இல்லம்.

"இவங்களை பேசாம மண்டபத்துக்கு அழைச்சுட்டு வந்துருக்கலாமே..."என்று ஒரு உறவினர் தன் தத்துவ முத்துக்களை உதிர்த்தார்.

"பெரியப்பா...ஒரு வேளை சாப்பாட்டுக்காக இவங்களை அலைக்கழிக்கக்கூடாது.இப்பவே பதினஞ்சு நிமிஷம் லேட். இப்படி ஆகும்னு தெரியும். அதனாலதான் ஒரு மணி நேரம் முன்னால எல்லாடுக்கும் பழங்கள், பிஸ்கட் அப்படின்னு கொஞ்சமா கொடுக்க சொல்லிட்டேன்.

நம்மாளயே பசி பொறுக்க முடியலையே...குழந்தைங்களால மட்டும் முடியுமா?...அதோட கல்யாண சாப்பாட்டுல சேர்க்கப்படுற சில பொருட்கள் இந்தக் குழந்தைகளுக்கு எதாவது சங்கடங்கள் தரலாம். அதனால வழக்கமா அவங்களுக்கு தர்ற உணவோட, குறிப்பிட்ட சில வகைகளை மட்டும் குழந்தைகளுக்கு ஒத்துக்குற அளவுல செய்து அவங்களோட புது தம்பதி சாப்பிடணும்னு பிளான் பண்ணினேன். நல்லபடியா போய்கிட்டு இருக்கு."என்றான் வெற்றி.

அந்த குழந்தைகளுடன் மதிய விருந்து உண்டது அனைவருக்குமே நெகிழ்ச்சியான அனுபவமாக இருந்தது.

மீண்டும் மண்டபத்துக்கு வந்து அனைவரும் ரிலாக்சாக அமர்ந்தார்கள்.

"சின்ன மாப்ள...உங்களைப்பத்தி என்னவோன்னு நினைச்சேன். ஆனா அசத்திட்டீங்க போங்க..."என்று ராமலிங்கம் நெகிழ்ந்தார்.

"என்ன வேணும்னு கேளுடா..."என்று சுந்தர்ராஜன் சொன்னார்.

"கேட்பேன்...திட்டக்கூடாது..."என்று வெற்றி புதிர் போட்டான்.

"அவன் என்ன சொல்லப்போறான்...எனக்கு கல்யாணம் பண்ணி வைங்கப்பான்னு சொல்லுவான். என்ன, அதானே..."என்று அவன் தாத்தா சொன்னார்.

உடனே வெற்றி வெட்கப்படவில்லை.

"எப்படி தாத்தா இவ்வளவு சரியா என் மனசுல உள்ளதை சொன்னீங்க..."

"ஒழுங்கா படிப்பை முடி...அப்புறம் பார்க்கலாம்."

"ஏம்பா...ஒரே மாதிரியே சிந்திக்கிறீங்க...ஹவுஸ் வொய்ஃப் தான் இருக்கணுமா? ஏன், ஹவுஸ் ஹஸ்பெண்ட் இருக்ககூடாதா. நல்ல வேலைக்குப்போற பொண்ணா கல்யாணம் பண்ணிகிட்டா வீட்டுப்பணியில அவளுக்கு ஓய்வு கொடுத்த மாதிரி இருக்கப்போகுது..."என்று வெற்றி சொல்லவும் அங்கே கூடி நின்ற அனைவருமே சிரித்தார்கள்.

"நல்லா காமெடி பண்றடா..."என்று சுந்தர்ராஜனும் சிரித்தார்.

"சீரியசாதாம்பா...எப்படியும் நான் ஆங்கிலப்பேப்பர்களை எழுதி பாஸ் பண்ணி டிகிரி வாங்கப்போறது இல்லை. அதனாலதான் புத்திசாலித்தனமா இந்த முடிவு எடுத்தேன்."

"என்னது...இது புத்திசாலித்தனமா?...அப்புறம் காலத்துக்கும் அவ சொல்றதை கேட்டுகிட்டு இருக்க வேண்டியதுதான்."என்று முதன் முதலாக அன்புச்செல்வன் பேசினான்.

"அண்ணி... அண்ணன் உங்க பேச்சைக் கேட்க மாட்டாராமா...இதுக்குமேல உங்க சாமர்த்தியம்..."என்று வெற்றி சொன்னதும் காயத்ரியின் கன்னங்கள் மேலும் சிவந்தன.

"இப்ப பேசுனதெல்லாம் நல்லாத்தான் இருக்கு...நீயும் உன் ஃபிரெண்ட்சும் பிளக்ஸ் போர்டுல திருவாரூரில் திருவிழான்னு போட்டுருக்கீங்கிளே...அப்ப திருவாரூர் தேர் திருவிழாவுக்கு கூடுற கூட்டத்தை எல்லாம் என்னன்னு சொல்றது?"என்று காயத்ரியின் தோழி ஒருத்தி கேட்டாள்.
"நல்லா பாருங்க சார்...தலைக்கு நூறு ரூபா, ஒரு பிரியாணி, குவார்ட்டர் பாட்டில் அப்படின்னு செலவு பண்ணி பொதுக்கூட்டத்துக்கு கூட்டத்தைக் கூட்டிட்டு  திருவாரூர் மாநகரில் திருவிழா அப்படின்னு விளம்பரம் செய்யுவாங்க...அந்த கூட்டத்தோட ஒப்பிடும்போது நம்ம வீட்டு கல்யாணத்துக்கு வந்த கூட்டம் சொற்பம்தான்.

ஆனா இந்த கூட்டம் நாம பத்திரிகை வெச்சதை மதிச்சு வந்த கூட்டம். அதனால திருவாரூரில் திருவிழான்னு நாங்க பிளக்ஸ்ல போட்டது தப்பே இல்லை.இதை இவங்க கேட்கலை...சந்தியாதான் கேட்க சொல்லியிருப்பான்னு எனக்கு நல்லா தெரியும்...

இப்பவே இப்படின்னா...காலம் பூரா நான் எப்படி சமாளிக்கிறதுன்னு நீங்களே சொல்லுங்க..."என்று வெற்றி கூறியதின் அர்த்தம் பலருக்கும் உடனடியாக புரியவில்லை.

அவன் தாத்தாதான்,"அட...திருட்டு ராஸ்கல்...உன் மனசுல இப்படி ஒரு எண்ணம் இருக்கா...இது முன்னாலேயே தெரிஞ்சிருந்தா ரெண்டு கல்யாணத்தையும் சேர்த்து முடிச்சிருக்கலாமே..."என்றார்.

இதைக்கேட்ட சந்தியாவின் முகத்தில் திகைப்பு.

"தாத்தா...நீங்களா எதாவது சொல்லி தீர்மானம் பண்ணிடாதீங்க...அப்புறம் சந்தியா என்னை அடிச்சு தொவைச்சு காயப்போட்டுடுவா...முதல்ல எங்க படிப்பு முடியட்டும்...அப்புறம் சந்தியாவுக்கு ஒரு வேலை கிடைக்கட்டும். நான் அதுக்குள்ள அம்மாகிட்ட நல்லா சமையல் கத்துக்குறேன்...அப்புறம் சம்மதமான்னு சந்தியா சொல்லட்டும். அதுவரை  யாரும் இதைப்பத்தி பேசக்கூடாது...பேசக்கூடாது...பேசக்கூடாது..."என்றான்.

"அதை ஏண்டா மூணு தடவை சொல்ற..."என்று தாத்தா கேட்கவும்,"எல்லாம் ஒரு எஃபெக்டுக்காகதான்."என்று வெற்றி சொன்னான்.

"பய ஒரு தீர்மானத்தோடதான் இருக்கான் போலிருக்கே..."என்று சுந்தர்ராஜன் சொல்லவும், அங்கே மீண்டும் சிரிப்பொலி.

சுபம்.
******

திருவாரூரில் திருவிழா - தொடர்கதை - அத்தியாயம் 1
திருவாரூரில் திருவிழா - தொடர்கதை - அத்தியாயம் 2
திருவாரூரில் திருவிழா - தொடர்கதை - அத்தியாயம் 3
திருவாரூரில் திருவிழா - தொடர்கதை - அத்தியாயம் 4
திருவாரூரில் திருவிழா - தொடர்கதை - அத்தியாயம் 5
திருவாரூரில் திருவிழா - தொடர்கதை - அத்தியாயம் 6

******
பள்ளிப்பருவத்தில் இனக்கவர்ச்சிக்கும் காதலுக்கும் வித்தியாசம் தெரியாமல் தன் வாழ்வைத் தொலைத்த எவ்வளவோ பெண்கள் உண்டு.
 ஆனால் ஒரு பெண் இதே போல் பள்ளியில் படிக்கும்போதே காதலில் விழுந்தாலும் அதில் எப்படி வெற்றி பெற்றாள் என்பதை நீங்களும் தெரிந்து கொள்ள வேண்டுமா? விகடனின் காதலர் தின சிறப்பிதழில் வெளிவந்த இந்த சிறு கட்டுரையை படிக்க இங்கே க்ளிக்கவும்.

கொஞ்சம் சமூக அக்கறை...இந்த இடத்தில் க்ளிக் செய்து பாருங்களேன்.