Search This Blog

வியாழன், 27 ஜூன், 2019

செங்கம் டிராவல்ஸ் - 3




பிரேக் போட்டு திடீரென இவர்கள் பேருந்து நின்ற நொடி எதிரில் ஒரு டேங்கர்லாரி இந்த பேருந்தை மோதுவது போல் நெருங்கி வந்து வலது பக்கம் விலகிச் சென்றது பின்னாலேயே வேளாங்கண்ணி செல்லும் மூன்று அரசு விரைவுப்பேருந்துகளும் சர்... சர்... சர்ரென கிராஸ் செய்து சென்றன.


‘‘டிரைவர்... ஹெட்லைட்டைப் போட்டுட்டு போய்கிட்டே இருக்க வேண்டியதுதானே...


ஓவர்டேக் பண்ணி வர்ற லாரிக்கு ஏன் வழி விடுறீங்க... எதிர்ல நாம வர்றதைப் பார்த்ததும் அவன்ல வேகத்தைக் குறைச்சு பஸ்சுங்களுக்கு பின்னால போயிருக்கணும்?’’ என்று முன் சீட்டில் முட்டிக்கொண்ட ஒருவர் கொதித்தார்.


 ‘‘ஒரு பஸ்சா இருந்தா அவனே பின்னால ஒதுங்கியிருப்பான்... இங்க மூணு பஸ்சு. அதோட எவ்வளவு தூரம் முயற்சி பண்ணி டாப் கியருக்கு பிக்கப் ஆயிருந்தானோ... இப்போ நாம வழி மறிச்சிருந்தா அடுத்து அஞ்சு கிலோ மீட்டர் தூரத்துக்கு அவனால வண்டியை நார்மல் ஸ்பீடுக்கு கூட கொண்டு போக முடியாது...


நானும் எழுபது எண்பதுல போய் சடன் பிரேக் போடலியே... இருபத்தஞ்சுல போனப்பதான குத்துனேன்....’’ என்றார் ஓட்டுநர்.


‘‘அது சரி... பள்ளிக்கூட பஸ் ஓட்டுன ஆள்னுங்குறது சரியாத்தான் இருக்கு... அநியாயத்துக்கு நல்லவங்களா இருக்காதீங்கப்பு...’’ என்றவரின் குரலில் கொதிப்பு அடங்கியிருந்தது.


‘‘வெளியில இருக்குற டேங்கர்லாரி டிரைவருக்கு இரக்கப்பட்ட நீங்க, பஸ்சுக்குள்ள எழுந்து நின்னுகிட்டு இருந்த சிங்கத்தைப் பத்தி யோசிக்காம மூக்கை உடைச்சுட்டீங்கிளே...’’ என்று ஒருவன் சொல்லவும்,


‘‘நீ வேற ஏண்டா மானத்தை வாங்குற...’’ என்று வைத்தியலிங்கம் அவனைப் பார்த்து பல்லைக்கடித்தான்.


பேருந்தினுள் இருந்தவர்கள் ஆளாளுக்கு ஏதோ கதை பேசிக் கொண்டு வர, அர்ச்சனாவின் மனதில் இப்போதைக்கு ஒரே ஒரு கேள்விதான்.


‘பஸ்சுல இருக்குறதுல பாதிப்பேருக்கு மேல சொந்தக்காரங்கதான். இவனை எந்த பழக்கத்துல பெரியப்பா உள்ள விட்டிருக்காரு... நமக்கு தெரிஞ்சவரை இவனோட நம்ம பெரியப்பாவுக்கு எந்த பழக்கமும் இல்லையே...’என்ற கேள்வி அர்ச்சனாவின் மனதில் வெகு நேரமாக ஓடிக்கொண்டே இருந்தது.


‘‘நாலு வேன் புடிச்சாகூட நெருக்கியடிச்சு உட்காரணும்... அதோட பயங்கரமா குலுக்கி எடுத்துடும். அக்கம் பக்கம் உட்கார்ந்துருக்குறவங்க கிட்ட நல்லா பேசக்கூட முடியாது. அதுக்காகத்தான் தாராளமா உட்கார்ந்து போகலாம்னு பஸ்சைப் பிடிச்சேன்...


நான் நினைச்ச மாதிரியே எல்லாரும் சகஜமா பேசி அரட்டை அடிச்சுகிட்டு வர்றீங்க... ஆனா அர்ச்சனாவுக்குதான் என்னாச்சுன்னு தெரியலை... நீ வேலைக்கு போறதும் கம்பெனி பஸ்சுலதானே... அதுல வாயைத் திறந்தா மூட மாட்டேன்னு இண்டர்போல் ஆபிசர்ஸ் சொன்னாங்க... இப்ப என்னாச்சு...?’’ என்று சிரிக்காமல் விஜயகுமார் பேசவும் இதைக் காதில் வாங்கியவர்கள் சிரித்தார்கள்.




‘‘அய்யோ... பெரியப்பா... மானத்தை வாங்காதீங்க... ஏதோ கம்பெனி ஞாபகம்... அதான்...’’ என்று சமாளித்தாள்.


‘‘என்னது... கம்பெனி ஞாபகமா?... உன்னை மாதிரி வெளியூர்ல தங்கி வேலை பார்க்குற பொண்ணுங்க வீட்டு நியாபகம்னு சொல்லி கேள்விப்பட்டிருக்கேன்... நீ குடும்ப விசேசத்துக்கு வந்தும் வேலை ஞாபகத்துலயே இருக்க... உன் கம்பெனி ரொம்ப கொடுத்து வெச்சதும்மா...


ஆனா ஒரு சின்ன விண்ணப்பம்... இது நம்ம வீட்டு கல்யாணம்... மாப்பிள்ளைக்கு நீயும் ஒரு தங்கச்சி. அதை மனசுல வெச்சு இந்த சந்தோஷத்துல பங்கெடுத்துக்க... இந்த பயணமும் நினைவுகளும் ரொம்ப நாளைக்கு நம்ம மனசுல இருக்கும்ணு நம்புறேன்...’’ என்று விளையாட்டாக கும்பிட்டார்.


‘‘ஸ்....யப்பா... போதும் பெரியப்பா... தாங்கலை...’’ என்று அவளும் கைகூப்பினாள்.




1 கருத்து:

  1. தேவையில்லாம ஜவ்வுமாதிரி இழுக்குறீங்க
    சுவாரசியம் இல்லை
    செம போர் அடிக்கின்றது

    பதிலளிநீக்கு