Search This Blog

புதன், 26 ஜூன், 2019

செங்கம் டிராவல்ஸ் - 2


பகுதி 2


முன்கதை சுருக்கம்:


அர்ச்சனா உறவினர் திருமணத்திற்கு மணமகன் வீட்டாருடன் மதுரைக்கு செல்கிறாள். அவர்கள் ஒப்பந்தம் செய்துள்ள பேருந்தில் ‘அவனை’ பார்த்ததும் அதிர்ச்சியில் பத்து ஆண்டுகளுக்கு முன்பு நடந்த பழைய சம்பவங்கள் தொடர்ந்து கண் முன் தோன்றி அவள் மனதை அலைக்கழிக்கிறது.


*****


மணல் நிறத்துக்கு மாறியிருந்த பள்ளிச்சீருடையான வெள்ளை சட்டையை கழற்றி வீசியதும் முகம் கழுவி வந்து, கலர் சட்டையை அணிந்து கொண்டிருந்தான் வரதராஜன்.


‘‘டேய்... வரதுகுட்டி... செத்த ரேசன் கடை வரைக்கும் வந்துட்டுப்போடா... அரிசி வாங்கித்தர்றேன்... அதை எடுத்துட்டுபோய் சுந்தரி வீட்டுல போட்டுட்டு வந்துடு...’’


‘‘ஏம்மா... முன்னாலயே சொல்ல மாட்டியா? அவசரமா வெளியில கிளம்பிகிட்டு இருக்கேன்... இப்ப போயி ஏன் உயிரை வாங்குற?... தெட்சிணாமூர்த்தி இன்னும் வரலையா?...’’


‘‘டேய் நாக்குட்டி... அப்பா பேரை இப்படி தலையில அடிச்ச மாதிரி சொல்றதுக்கு ஒரு நாளைக்கு விளக்கமாறு பிய்யப்போவுது பாரு...’’


‘‘ஆமா... நீ மட்டும் வரதராஜன்னு அழகா ஒரு பேர் வெச்சிட்டு, பொம்பளைப் புள்ளை இல்லைன்னு என்னைய வரதுக்குட்டி, நாய்க்குட்டின்னுல்லாம் கூப்பிடு... நான் மட்டும் அப்பா பேர் சொல்ற புள்ளையா இருக்கறதை குத்தம் சொல்லு...’’


‘‘பேர் சொல்லும் பிள்ளைன்னா ஊர் உலகத்துல நல்ல பேர் எடுத்துக் குடுக்குறதுடா... இப்படி மரியாதை இல்லாம அப்பன் ஆத்தாளை கூப்பிடுறது இல்லை... இப்ப வரப்போறியா இல்லையா...’’ என்று குரலில் கடுமையை கூட்டினாள் வசந்தி.


ஆனால் வரதராஜன் ரேசன் கடைக்கு செல்லும் மன நிலையில் இல்லை. ‘‘நாளைக்கு சனிக்கிழமை எனக்கு லீவுதான். காலையில போலாம்...’’ என்று சட்டை பொத்தான்களை போட்டுக்கொண்டே பேசினான்.


‘‘இல்லடா குட்டி... மனுச உசிருகூட இப்ப இருக்கும் நாளைக்கும் இருக்கும்னு சொல்லலாம்... ஆனா ரேசன் கடையில இந்த நொடி இருக்குறது அடுத்த வினாடி இருக்கும்னு சொல்ல முடியாதுடா... மூணாவது வீட்டு சுசீலா இப்பதான் வாங்கிட்டு வந்தா, பத்து பதினஞ்சு பேர்தான் நிக்கிறாங்களாம்... ஆறு மணி ஆயிடுச்சுன்னா கணக்கு முடிக்கணும்னு தர மாட்டாங்கடா... நாளைக்கு காலையில கொடுத்தாதான் நிச்சயம்... அதனாலதான்டா சொல்றேன்...’’ என்று கெஞ்சலாக பேசினாள் வசந்தி.




‘‘நீ போய் வரிசையில நின்னு வாங்குறதுக்குள்ள நான் வந்துடுறேம்மா... அர்ஜண்டா போகணும்...’’ என்று வீட்டை விட்டு கிளம்பி ஓடுவதிலேயே குறியாக இருந்தான் வரதராஜன்.


இதுவே அவன் நண்பர்கள் அருகில் இருந்திருந்தால், ‘அர்ஜண்டாக போகணும்’ என்று வரதராஜன் சொன்னதுக்கு ‘கொல்லைப்பக்கம் கழிவறை இருக்கு... அதை விட்டுட்டு எங்கடா போற?’ என்று கேட்டிருப்பார்கள்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக