Search This Blog

தமிழ் சினிமாவின் போக்கு குறித்த பார்வை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தமிழ் சினிமாவின் போக்கு குறித்த பார்வை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 7 ஜூலை, 2010

தயாராகுங்கள் 1947க்கு...மதராசப்பட்டினம்


வசீகரம் என்றால் அது பெண்ணின் குரலில்தான் என்று சிலர் சொல்லக்கூடும்.ஆனால் ஒரு விளம்பரத்தில் வந்த ஆணின் குரல் என்னை மிக அதிகமாகவே ஈர்த்துவிட்டது.

"தயாராகுங்கள்...1947க்கு...ரெட் ஜெயண்ட் மூவீஸ் உதயநிதி ஸ்டாலின் ஏஜிஎஸ் எண்டர்டெய்ன்மெண்ட் கல்பாத்தி எஸ் அகோரம் இணைந்து வழங்கும் மதராசபட்டினம்" என்று டிரெய்லர்களில் ஒலிக்கும் குரல்தான் அது.
சில ஆண்டுகளுக்கு முன்பு தொ(ல்)லைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் சினிமாப்பட டிரெய்லர்கள் ஆறு மாதமானாலும் ஒரே மாதிரியாகத்தான் இருக்கும்.அவை ஒளிபரப்பாகத் தொடங்கிய சில நாட்களிலேயே அந்த டிரெய்லர் ஆரம்பமான உடனேயே வேறு சேனலுக்குத் தாவி விடுவோம்.

நாக்கமுக்க புகழ் சேர்த்த படத்துக்கு எல்லாப் பாடல்களையும் வைத்து நாலைந்து வகையாக டிரெய்லர்கள் உருவாக்கி மாற்றி மாற்றி ஒளிபரப்பத்தொடங்கியவுடன் மற்றவர்களும் இந்த முறையை அதிகமாக பின்பற்றினார்கள்.ரசிகர்களுக்கு சலிப்புத்தட்டிவிடக்கூடாதே என்ற பயம்தான் இதற்குக் காரணம்.
1.இளம்பெண் ஐ பேடில் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் பாடலைக் கேட்டுக்கொண்டிருக்கும்போது வீதியில் வெள்ளையனே வெளியேறு கோஷத்துடன் பேரணி.

2.டீக்கடையில் ஹோம்தியேட்டர் சிஸ்டம் பாடிக்கொண்டிருக்கும்.அதில் இந்தியா சுதந்திரம் அடைந்த காலகட்டத்தில் உள்ள செய்தியை வாசித்துக்கொண்டிருப்பார்கள்.

3.ஐ.டி துறையில் உள்ள நபர் இன்றைய மாடர்ன் ஹவுசில் இருந்து அலுவலகத்திற்கு கிளம்பும்போது பேப்பரில் 1947ம் ஆண்டு செய்திகள் முதல்பக்கத்தில் இடம்பெற்றிருக்கும்.

4.லேட்டஸ்ட் மாடல் காரில் ஏறும் பெண்மணியின் ஹேண்ட் பேக்கை ஒருவன் பிடுங்கிக்கொண்டு ஓடுவான்.அவர் உதவி என்று கத்தும்போது "வாட் ஹேப்பன்?"என்று கேட்டவாறு ஆங்கிலேய போலீசார் ஓடி வருவார்கள்.
இப்படி விதவிதமான ஐடியாக்களோடு படத்தின் கதை நடக்கும் காலகட்டமான 1947க்கு நம்மை அழைத்துச் செல்ல முயற்சி செய்து படத்துக்கான டிரெய்லரை உருவாக்கியிருக்கிறார்கள்.

நிச்சயம் இது நல்ல முயற்சி.இது போன்ற படங்கள் வெற்றி அடைந்தால் அது ரசிகர்களுக்கு மேலும் நல்ல படங்கள் கிடைக்க வழி வகுக்கும். ஆனால் இதற்கு படத்தின் திரைக்கதையும் உதவ வேண்டும்.

சமகாலக் கதைக்களனைக் கொண்ட குறும்படம் ஒன்றில் நான் பணியாற்றினேன்.அதையே எங்களால் நினைத்தபடி எடுக்கமுடியவில்லை.படப்பிடிப்பு முடியும் வரை எதோ ஒரு விஷயத்துக்காக காம்ப்ரமைஸ் ஆகிக்கொண்டேதான் இருந்தோம்.யதார்த்த சூழ் நிலை இப்படி இருக்கும்போது கடந்த கால வரலாற்றைப் படமாக்குவது எவ்வளவு கஷ்டம் என்பது எனக்கு நன்றாகவே தெரிந்தது. ஹேராம், சிறைச்சாலை ஆகிய படங்கள் நான் விரும்பிப்பார்த்தவை.அந்த காலகட்ட கதைக்களத்தை காட்சிப்படுத்த படக்குழுவினர் மேற்கொண்ட சிரமங்கள் எனக்கு நன்றாகவே புரிந்தன.
ஆனால் சிறைச்சாலை படம் என் மனதில் ஏற்படுத்திய வலியை ஹேராம் ஏற்படுத்தவில்லை.சிறைச்சாலை இந்திய சுதந்திரப்போராட்டத்தில் ஈடுபட்ட அனைவருக்கும் இழைக்கப்பட்ட கொடுமைகளை பார்வையாளனுக்கு உணர்த்துவதில் ஓரளவு வெற்றி பெற்றதாகவே கருதுகிறேன்.ஹேராம் படத்தைப் பொறுத்தவரை அது கலவரத்தைப் படம்பிடித்துக் காட்டியிருந்தாலும் தனி மனிதனுக்கு ஏற்பட்ட பாதிப்பை கூறுவதாக அமைந்திருந்தது.

எவ்வளவுதான் நீங்கள் படம்பிடிக்க கஷ்டப்பட்டிருந்தாலும் அதெல்லாம் எங்களுக்குத் தேவையில்லை.எங்களுக்குத் தேவை சந்தோஷம் என்பதுதான் மக்களின் மனநிலையோ என்ற எண்ணம் எனக்கு எழுகிறது.இதற்குக் காரணம், ஹேராம், சிறைச்சாலை படங்களுக்கு வர்த்தகரீதியான வெற்றி கிடைக்காததும் இம்சை அரசன் 23ம் புலிகேசியின் அதிரடி வெற்றியும்.
சேது, நந்தா, காதல்,அங்காடித்தெரு, வெயில் போன்று சோகத்தை மையமாகக் கொண்ட படங்களைக் கொண்டாடியவர்கள்தான் நம் ரசிகர்கள்.

பிறகு ஏன், ஐம்பது ஆண்டுகளுக்கு முந்தைய காலகட்டத்தைக் கொண்டு எடுக்கப்பட்ட படங்கள் சாமானியர்களிடம் போதிய வரவேற்பைப் பெறுவதில்லை?
மதராசப்பட்டினம் இப்படிப்பட்ட படங்களின் வரிசையில் சேர்ந்துவிடாமல், புதிய பாதையை ஏற்படுத்துகிறதா என்று பார்ப்போம்.