Search This Blog

என்ன கொடுமை சரவணன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
என்ன கொடுமை சரவணன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 2 மார்ச், 2011

நீங்க சரவணனா...உங்களைத்தான் தேடுறோம்

முருகப்பெருமானே பக்தைக்கு உதவி செய்ய மனித ரூபத்துல வர்ற கதை அப்படி இப்படின்னு பில்ட்டப் கொடுத்து ரிலீஸ் செய்திருக்காங்க. நான் தியேட்டர்ல படம் பார்த்து ரொம்ப வருஷம் ஆகுது. ஆனா ஒரு நொடி எனக்கே ஆசை வர்ற மாதிரி இன்னைக்கு தினத்தந்தியில ஒரு விளம்பரம்.

படத்துல தனுஷ் பேரு சரவணனாம்

நீங்க சரவணனா...அப்போ 4 சரவணன்களுக்கு இலவச அனுமதி. ஒரு காட்சிக்கு ஒரே ஒரு சரவணனுக்கு மட்டும் ஓசி டிக்கட் அப்படின்னு விளம்பரத்தைப் பார்த்ததும் போகலாமான்னு தோணுச்சு. ஆனா கீழே வழக்கம்போல ஒரு வார்த்தை நட்சத்திரக் குறியோட இருந்துச்சு. வேற என்ன, நிபந்தனைக்குட்பட்டதுதான். இந்த ஒரு வார்த்தையை வெச்சு அப்பாவி நுகர்வோரை(என்னை மாதிரி அப்பாவிகளை) என்ன பாடு படுத்துறாங்க.

இந்த வார்த்தையால என்ன ஆச்சுன்னுதானே கேட்குறீங்க. நான் போய் ஓ.சி டிக்கட் கேட்க, அவங்க பதிலுக்கு வி.ஏ.ஓ., ஆர்.ஐ., தாசில்தார் - இவங்ககிட்ட எல்லாம் நாந்தேன் சரவணன்னு புதுசா சர்டிபிகேட் வாங்கிட்டு வர சொல்லிட்டாங்கன்னு வெச்சுக்குங்க.

ஏன் இந்த மாதிரி ரிஸ்க். நான் வேற வேற ஒரு நல்ல புனைப்பெயர் தேடிகிட்டு இருக்கேன். சொந்தப்பேர்ல எழுதுனா வாசகர் கடிதம் கூட தட்டுத்தடுமாறிதான் பிரசுரம் ஆகுது.(அதான் பிளாக்கை குப்பைத்தொட்டியாக்கி வெச்சிருக்கியேன்னு நீங்க நினைக்கிறது புரியுது.)

அதனால நான் என்ன முடிவெடுத்துட்டேன்னா, இப்போ தியேட்டருக்கு போகப்போறது இல்லை. அவ்வளவுதான்.

இருபது வருஷத்துக்கு முன்னால வரைக்கும் நாலு பேர் கொண்ட குடும்பம் (நடுத்தர நகரத்துல) ஒரு படம் பார்க்க அஞ்சு ரூபாய்ல இருந்து பத்து ரூபாய்க்குள்ள முடிஞ்சுடும். (இப்போ டூவீலர் பார்க்கிங்குக்கே இதை விட அதிகமா கறந்துடுறீங்கிளே.) அப்போ ஒரு ஆள் தினக்கூலியில முப்பது ரூபாயில இருந்து அம்பது ரூபாய் வரை சம்பாதிக்கலாம். ஆக ஒரு குடும்பம் படம் பார்க்க ஆகுற செலவு அந்த ஆளோட தினக்கூலியில இருபது சதவீதத்துல இருந்து முப்பது சதவீதமாத்தான் இருக்கும்.

ஆனா இப்போ பெரும்பாலும் ஒரு ஆளோட சம்பளம் நூத்தம்பது ரூபாயில இருந்து இருநூறு ரூபாயாத்தான் இருக்கு. (இதை விட பல மடங்கு அதிகமா சம்பாதிக்கிற ஆள் டாஸ்மாக்ல கொடுத்தது போக மீதிதான் மத்த செலவுக்கு.)

ஓரளவு நல்லா சம்பாதிக்கிற குடும்பத்தினர் படத்துக்கு போற அளவுக்கு நேரம் இருக்குறது இல்லை. வேலை முடிச்சுட்டு இரவு லேட்டா வர்றதும், காலையில சீக்கிரமே புறப்பட்டு ஓடுறதும்னு அவங்க பொழைப்பும் திண்டாட்டம்தான்.

தியேட்டர் காலியா இருக்க இன்னொரு முக்கிய காரணம் டிக்கட் கட்டணம்தான்னு எல்லாருக்குமே தெரியும். திருவாரூர்லயே ஒரு டிக்கட் ஃப்ளாப் ஆன படத்துக்கே அறுபது ரூபாய். பெரிய நடிகர்கள் படத்துக்கு ஒரு வாரம் வரை நூறு, எண்பதுன்னு விக்கிறாங்க.

சராசரி அறுபது ரூபாய் டிக்கட்டுன்னா நாலு பேர் இருக்குற குடும்பத்துக்கு ஸ்நாக்ஸ் செலவு சேர்த்து முன்னூறுக்கும் மேல ஆகும். பலருக்கு அது ரெண்டு நாள் சம்பளமா கூட இருக்கலாம்.

நல்லா கவனிக்கணும். ஒரு காலத்துல ஒரு ஆளோட ஒரு நாள் சம்பளத்துல முப்பது சதவீதம்தான் ஒரு குடும்பம் படம் பார்க்க செலவானுச்சு.

ஆனா இப்போ ஒரு குடும்பம் படம் பார்க்க ஒரு ஆளோட ரெண்டு நாள் சம்பளம் தேவைப்படுது.

சினிமா டிக்கட் விலை உயர்ந்துருக்குற வேகத்துல பெரும்பாலான மக்களோட வருமானம் உயரலை. அதோட ஒரு ஆள் ஒரு நாளைக்கு நானூறு ரூபாய் சம்பாதித்தாலும் அதைப் பிடுங்கி எறியுற மாதிரி விலைவாசி ஆயிடுச்சு.

அதனாலதான் மக்கள் டிவிடிக்கு முதலிடம் கொடுத்துட்டு தியேட்டரை கொஞ்சம் தள்ளி வெச்சுட்டாங்க. அது மட்டும் இல்லாம 24மணி நேரமும் தொலைக்காட்சியில எதாவது இருந்துகிட்டே இருக்கு.

யோசிங்கப்பா.

அப்புறம் இலவசம்னு படிச்சதும் இன்னொரு விஷயம் நினைவுக்கு வருது. புதுச்சேரியில கலர்டிவிதான் எங்க எல்லார் வீட்டுலயும் இருக்கே. இன்னொரு டி.வியை வெச்சு என்ன செய்யுறதுன்னு மக்கள் ரொம்ப வருத்தப்பட்டாங்களாம். அதனால கம்ப்யூட்டர் இலவசமா வழங்க முயற்சி எடுப்போம்னு சொல்லியிருக்காங்க.

தமிழகத்துல மேல்சபை வாக்காளர் பட்டியல்ல பேர் சேர்த்தவங்களுக்கு ஒரு லேப்டாப்பும், மத்தவங்களுக்கு டெஸ்க் டாப்பும் கொடுக்கப்போறோம்னு அறிவிக்கப்போறாங்க.(நடத்துங்க...உங்க வீட்டு சொத்தையா வாரி வழங்கப்போறீங்க.)

தமிழ் நாடு சட்டப்பேரவைக்கு தேர்தல் தேதி அறிவிச்சாச்சு. கடந்த சில தேர்தல்ல சில அரசியல் வியாதிகளோட மன்னிக்கவும் அரசியல்வாதிகளோட பிரச்சாரம் மட்டுமில்லாம 49 (O) விதி குறித்த விழிப்புணர்வும் அதிகமாயிருக்கு.

நானும் போன தேர்தல்ல ஓ போடத்தாங்க போனேன். எங்களுக்கு இருக்குற வேலையில இது என்ன வெட்டி வேலைன்னு பூத் அலுவலர் போலீஸ்காரர்கிட்ட புகார் பண்ணிட்டார். உடனே ஒரு ஏட்டும், இன்ஸ்பெக்டரும் வந்து நீ யாரு, எங்க வேலை செய்யுற அப்படி இப்படின்னு மிரட்ட ஆரம்பிச்சுட்டாங்க. கொலை செய்யுறவனும், கோடி கோடியா ஊழல் செய்யுறவனும் போலீஸ் காரங்களோட சிரிச்சு பேசிகிட்டு போறாங்க. எங்களை மாதிரி சட்டதிட்டத்தை மதிச்சு நடக்குற ஆளுங்களை போலீஸ் குற்றவாளியைப் போல் நடத்துது. என்ன கொடுமை சார் இது.

ஆனாலும் ஒரு ஆறுதல். போன நாடாளுமன்ற தேர்தல்ல புதுக்கோட்டையில மட்டும் பத்தாயிரத்துக்கும் அதிகமானவங்க வாக்களிக்க விருப்பமில்லைன்னு பதிவு செஞ்சிருக்காங்க.

அதிலும் ஒரு நெருடல். புதுக்கோட்டை நாடாளுமன்ற தொகுதியை கொத்து பரோட்டாவாக்கி பக்கத்துல இருக்குற எல்லா தொகுதியிலயும் சேர்த்துட்டதுக்காகதான் இந்த புறக்கணிப்பாம்.

இதே ஒற்றுமையோட செயல்பாடு திருப்தி அளிக்காத வேட்பாளரை எதிர்த்து இந்த மாதிரி முடிவெடுத்தா நாடு நல்ல வழிக்கு சீக்கிரமா போயிடும்.

அது சரி...கேஸ் அடுப்பு, டி.வி இதெல்லாம் எப்படி  ஓசியில வாங்க முடியும். அதையெல்லாம் விட்டுட்டு வடை போச்சேன்னு புலம்புற அளவுக்கு அப்பாவிகளா பொதுஜனம்.

சனி, 23 அக்டோபர், 2010

......ஒவ்வொருத்தருக்கும் கம்ப்யூட்டர் இலவசம்.

 இதுதான் அடுத்த அறிவிப்பா இருக்கும். தமிழக சட்டமேலவைக்கு தேர்தல் நடத்தியே தீருவதுன்னு பட்டடாரி, ஆசிரியர் தொகுதி வாக்காளர் பட்டியல் தயாரிக்கிறதுக்கான வேலைகள் தொடங்கிடுச்சு. 

கொஞ்ச நாள் வரைக்கும், 'நம்ம ஆளுங்கதான் ஃப்ரீயா கொடுத்தா பினாயிலைக்கூட குடிப்பாங்க'ன்னு ஒரு சினிமாவுல கவுண்டமணி சொல்ற டயலாக்கை நானும் பேசிக்கிட்டுதான் இருந்தேன்.

இந்த மாதிரி ஒரு தொகுதிக்கு வாக்காளர் பட்டியல் தயாரிக்கிறாங்கன்னு தெரிஞ்சதும் சரி பேர் சேர்த்து அடையாள அட்டையை வாங்கித்தான் வெச்சுப்போமே ஒரு ஆசை. ஏற்கனவே எழுத்துப்பிழையோட வாக்காளர் அடையாள அட்டை,அட்ரசுல எழுத்துப்பிழையோட பான் கார்டு, எப்படியோ ஓட்டிக்காட்டி வாங்கின லைசென்ஸ் அப்படின்னு பல கார்டுகளோட இதுவும் இருந்துட்டு போகட்டுமேன்னு முடிவு பண்ணினேன்.

வேலை பார்க்குற இடத்துல ஒரு நண்பர் ஆர்.டி.ஓ அலுவலகத்துக்கு அடிக்கடி போவார். அவர்கிட்ட,' எனக்கு இது பற்றி முழு விவரங்கள் தெரியலை. உங்களுக்கு தெரிஞ்ச ஆளுங்க இருந்தா விவரம் கேட்டு அப்ளிகேஷன் வாங்கிட்டு வாங்களேன். அப்படின்னு சொன்னேன்.

"அடப்போய்யா...ஏற்கனவே சாதாரண வாக்காளர் அடையாள அட்டையை வெச்சு ரொம்ப அதிகமா கிழிச்சுட்டியாக்கும். போய் வேற வேலையைப் பாருப்பா."அப்படின்னு அலுத்துகிட்டார். (நண்பேன்டா) அவரு அந்த அட்டையை வெச்சு எங்கெங்க மூக்குடைபட்டாரோ...பாவம்.

இதுக்கு மேல அடுத்தவங்களை நம்பி சரிவராதுன்னு நெட்டுல விவரங்களை டவுன்லோடு செஞ்சேன்.

முதல் பட்டதாரின்னு ஒரு சான்றிதழ் வாங்குறதுக்காக தாசில்தார் அலுவலகத்துக்கு 2000வது வருஷம் போனது. அதுக்கப்புறம் என் வேலையா அங்கே போனதே இல்லை. வாக்காளர் அடையாள அட்டைக்கு விண்ணப்பம் கொடுத்தது, போட்டோ எடுத்தது எல்லாமே எங்க வீட்டுக்கு அடுத்த தெருவுல இருந்த வாக்குச்சாவடியிலேயே முடிஞ்சுடுச்சு.

இந்த பத்து ஆண்டுகள்ல அடுத்தவங்க வேலைக்காக ஒண்ணு ரெண்டு தடவை போயிருக்கேன். பொதுவாவே இந்த மாதிரி அரசு அலுவலகத்துக்குப் போனா பெரும்பாலான ஊழியர்கள் 'நான் கடவுள்' தோரணையிலேயே நடந்துக்குறது எல்லாருக்கும் தெரிஞ்ச விஷயம்தான்.

இந்த தடவை நமக்கு அப்படி எதாவது இன்சல்ட் நடந்தா அதை அப்படியே சுடச்சுட நியூசாக்கிடலாம்னு ஒரு ஐடியாவோடத்தான் போனேன். (இப்போ ஒரு தமிழ் நாளிதழோட கிளை அலுவலகத்துல வேலை பார்க்குற துணிச்சல்தான். இல்லன்னாலும் இருக்கவே இருக்கு இளைய பாரதம்.)

நிச்சயம் ஒரே நாள்ல வேலை நடக்காது. எத்தனை நாள் அலையணுமோன்னு நினைச்சுகிட்டுதான் 22.10.2010 அன்று ஆர்.டி.ஓ அலுவலகத்துக்கு போனேன். என்ன ஒரேடியா மட்டம் தட்டுறன்னு கேட்காதீங்க. என் ராசி அப்படி. அவசரமா தீப்பெட்டி வாங்கணும்னு பஸ்ஸ்டாண்ட்ல இருக்குற கடைகளுக்கு போனா கூட அங்க ஸ்டாக் இல்லாம பத்து கடைகள்ல அலைஞ்சுதான் வாங்கணும்.

சுருக்கமா சொன்னா எல்லாரும் ஹாயா லிப்ட்டுல ஏறி மாடிக்குப் போவாங்க. எனக்கு அப்படி போக கொடுப்பினை இருக்காது. மாடிப்படியில ஏறித்தான் போகணும். உடம்புக்கு நல்லதுதானேன்னு கேட்பீங்க. ரெண்டு மூணு மாடின்னா பரவாயில்லை. பத்து மாடிக்கு தினம் பத்து தடவை ஏறி இறங்குறதுன்னா...என்ன ஷாக் ஆகிட்டீங்கிளா. இதுதாங்க என் அதிர்ஷ்டம். எனக்கு பழகிடுச்சு.

22.10.2010 அன்று தமிழ்நாடு கிழக்கு மத்தியம் பட்டதாரி தொகுதி வாக்காளர் பட்டியல்ல என் பெயரை சேர்க்க விண்ணப்பம் கொடுக்க போனேனா...அப்படியே ஷாக் ஆயிட்டேன்.(வடிவேலு மாடுலேஷனில் படிக்கவும்.)

நான் எல்லா ஆவணங்கள், ஜெராக்ஸ் அப்படின்னு ரொம்ப தயாராத்தான் போயிருந்தேன். ஒரு ஊழியர்கிட்ட விபரம் கேட்டதும் கோபப்படாம டக்குன்னு விபரம் சொன்னார்.

அது ஏன்னு எனக்கு தெரியலை.

பொதுவான வாக்காளர் பட்டியல்ல பேர் சேர்க்கணும்னு சிறப்பு முகாம் நாட்கள்ல வாக்குச்சாவடிக்கு போனா தப்பிச்சோம். இந்த மாதிரி அலுவலகத்துக்கு போனா சரியான பதில் கிடைக்காது. ஏன்னா அவங்களுக்கே எப்ப விண்ணப்பம் வாங்கணும்னு தெரியாம இருக்கலாம். அது சரி, கதவைப் பூட்டிட்டு இழுத்துப்பார்க்க கூட மேலதிகாரிகிட்ட அனுமதி வாங்கணும்குற மாதிரி பல விதிகள் காலத்துக்கு பொருந்தாம இன்னும் இருக்குதே.

என்கிட்ட அவர் மரியாதையா பேசினதுக்கு காரணம், நான் பட்டதாரின்னுங்குறதுனாலயா,
இல்ல...ஆசிரியர் தொகுதிக்கு ஒருத்தர் கூட விண்ணப்பம் கொடுக்க வரலை. வேற வேலை வெட்டி இல்லாததால பட்டதாரி தொகுதிக்கு பேர் கொடுக்க இந்த மாதிரி வர்ற யூத்துகளையும் பயமுறுத்தி விரட்டி விட்டுட்டா ஆளில்லா கடையில எப்படி டீ ஆத்துறதுன்னு பயமா.

எனக்கு எதுவும் தெரியலையே.

அஞ்சு நிமிஷத்துல என் விண்ணப்பத்தைக் கொடுத்து துணை தாசில்தார்கிட்ட ஒப்புகை ரசீது வாங்கிட்டு வந்துட்டேன். இப்ப தெரியுதா நான் ஏன் ஷாக் ஆனேன்னு.

இந்த மாதிரி அப்ளிகேஷன் போட்டதை வெளியில சொன்னதும் உன் வேலையை ஒழுங்கா பார்த்தா என்ன...அவனுங்க சம்பாதிக்க நீ உன் நேரத்தை வேஸ்ட் பண்ணி இப்படி அலையுறியான்னு கேட்டாங்க.

பட்டதாரி, ஆசிரியர் தொகுதிகள்ல இருக்குற வாக்காளர் எல்லாருக்கும் கம்ப்யூட்டர் இலவசம். அப்படின்னு அறிவிப்பு வந்தாலும் ஆச்சர்யப்பட ஒண்ணும் இல்லை. ஏன்னா தமிழ்நாட்டோட நிலைமை அப்படின்னு நான் சொன்னதும் அவங்களும் யோசிக்கத் தொடங்கிட்டாங்க.

அப்புறம் ஏதாவது ஒரு நிதி 3G அல்லது 4G வயர்லெஸ் இண்டர்நெட் சேவை நிறுவனம் ஆரம்பிப்பார். இலவச கம்ப்யூட்டர் வாங்கின எல்லாரும் சும்மாவா வெச்சிருப்பாங்க...இணைய இணைப்பு வாங்கி வருஷத்துக்கு பத்து பதினஞ்சாயிரமாவது பில் கட்ட மாட்டாங்களா?

இந்தியன் படத்துல ஒரு வசனம். மற்ற நாடுகள்லயும் லஞ்சம் இருக்கு. ஆனா அங்க கடமையை மீறத்தான் லஞ்சம். இங்கதான் கடமையை செய்யவே லஞ்சம்.

பப்ளிக்கே அப்படித்தான் இருக்காங்க. அப்படி இருக்கும்போது அரசியல்வியாதிங்களை எப்படி முதல் குற்றவாளியாக்குறது.

ஞாயிறு, 1 ஆகஸ்ட், 2010

இரண்டரை லட்ச ரூபாய் போச்சே!...இந்திய ரூபாய்க்கான புதிய குறியீடு வடிவமைப்பு

ஊரோட ஒத்துப்போகாம எப்ப பார்த்தாலும் நீதி,நேர்மை,நடுநிலைமை அப்படின்னு பேசி வாய்ப்புக்களை இழக்குறதே அவனுக்கு வழக்கமாப் போச்சு.(அவன் வேற யாரு...நாந்தேன்.)
எல்லா விஷயத்துலயும் அயல்நாட்டு ஐடியாவைத்தான் சுடணுமான்னு ரொம்பவே யோசிச்சு நானே ஒரு குறியீட்டை வடிவமைச்சு போட்டிக்கு அனுப்புனேன்.

நான் வடிவமைத்து அனுப்பிய புதிய குறியீடு - விளக்கம் 1
நான் வடிவமைத்து அனுப்பிய புதிய குறியீடு - விளக்கம் 2
நான் வடிவமைத்து அனுப்பிய புதிய குறியீடு - விளக்கம் 3
நான் வடிவமைத்து அனுப்பிய புதிய குறியீடு - விளக்கம் 4
நான் வடிவமைத்து அனுப்பிய புதிய குறியீடு - விளக்கம் 5

தமிழகத்தைச்சேர்ந்த ஒருத்தர் வடிவமைச்ச குறியீடு தேர்வு செய்யப்பட்ட விஷயம் தெரிஞ்சதும் முதல்ல பெருமையாத்தான் இருந்துச்சு.ஆனா தொடர்ந்து வந்த தகவல்கள்,நான் எந்த அளவுக்கு விஷயம் தெரியாம இருந்துருக்கேன்னு வேதனைப்பட வெச்சது.

என்னோட வடிவமைப்பு எழுதுறதுக்கு கடினமா இருந்ததாலயோ, வேற காரணங்களாலயோ நிராகரிக்கப்பட்டிருந்தா பெருமையா இருந்துருக்கும்.ஹிந்தி தேசிய மொழியா அங்கீகரிக்கப்பட்ட ஒரே காரணத்தால அதை அடிப்படையா வெச்சி உருவாக்கப்பட்ட குறியீடு ஏக மனதா தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கு.

இது உதயக்குமாருக்கு சாத்தியமாகக் காரணம் அவருக்கு ஹிந்தி தெரிஞ்சதாலதான்.

என்னுடைய வருத்தம் என்னன்னா, தமிழ்-ஆங்கிலம் ஆகிய மொழிகள்ல நான் கொடுத்த விளக்கம் யாருடைய கவனத்துக்கும் போகாமலேயே நிராகரிக்கப்பட்டிருக்கலாமோன்னுதான்.

ஹிந்தியை எதிர்க்குறோம்னு சொல்லி பல மத்திய அரசுப்பணிக்குரிய வாய்ப்பை நமக்கு கடினமாக்கி வெச்சிட்டாங்க. இப்போ இது மாதிரியான சாதனை முயற்சிகள் ஹிந்தி தெரியாத காரணத்தால வெளி உலகத்துக்கு தெரியாமலேயே போகுது. இந்த அவல நிலையை நினைச்சு பெருமூச்சு விடத்தான் முடியும். வேற என்ன செய்யுறது?

பத்திரிகையாளர் 'ஞாநி' ஓ பக்கங்களை குமுதத்தில் படிச்சதும் எனக்கு கொஞ்சம் நம்பிக்கை வந்தது. நான் வடிவமைச்ச குறியீட்டுக்கு  தேர்ந்தெடுக்கப்பட தகுதியில்லாம இருக்கலாம்.ஆனா நான் அதுல என்னென்ன விஷயங்கள் இருக்கணும்னு நினைச்சு உருவாக்குனேனோ அந்த கொள்கைகள் நடுநிலையானவைன்னு புரிஞ்சுடுச்சு.

நீங்களும் இந்த பக்கங்களைப் படிச்சுட்டு அமைதியா யோசிச்சுப் பாருங்க. உண்மை புரியும்.

ஆனா ஒண்ணுங்க...ரூபாய் நோட்டுல பதினெட்டு மொழிகள் இருக்கேன்னு பெருமையா நினைச்சு தமிழ்,ஆங்கிலத்துல மட்டும் விளக்கம் அனுப்பினது எவ்வளவு முட்டாள்தனம்னு நல்லாவே புரிஞ்சுகிட்டேன்.
வெட்டி நியாயம் பேசாம ஹிந்தி கத்துகிட்டா பல விஷயங்களுக்கு நல்லது.இல்லன்னா நம்மை இந்த நிலையில வெச்சிருக்குற அரசியல்வாதிகளோட புள்ளைங்க ஹிந்தியைக் கத்துக்கிட்டு வெளுத்து வாங்கிகிட்டு இருக்குறதை கட்டியிருக்குற கோவணத்தையும் இழந்துட்டு நாம வேடிக்கை பார்த்துகிட்டே இருக்க வேண்டியதுதான்.

ஓ பக்கங்கள் 1
ஓ பக்கங்கள் 2
ஓ பக்கங்கள் 3
ஓ பக்கங்கள் 4
ஓ பக்கங்கள் 5

திங்கள், 5 ஜூலை, 2010

செல்போன் பேசியபடி வாகனம் ஓட்டச் சொல்லும் போலீஸ்

சில தினங்களுக்கு முன்பு என் நண்பன் ஒருத்தன் இரவு பதினோரு மணிக்கு மாநில நெடுஞ்சாலையில் போய்க்கிட்டு இருந்தான். இடையில செல்போன் அழைப்பு வந்துருக்கு. உடனே டூவீலரை சாலையை விட்டு இறக்கி மணல் பகுதியில் நிறுத்திட்டுதான் செல்போன்ல பேசியிருக்கான்.அப்போ அவன்கிட்ட ரெண்டு போலீஸ்காரங்க ஓடி வந்துருக்காங்க.
அவங்களைப் பார்த்ததும் ஷாக்காகி செல்போன் பேசுறதை நிறுத்திட்டு என்னன்னு கேட்டுருக்கான்.ஓடி வந்தவங்கள்ல ஒரு போலீஸ்காரர் இவனுக்கு தெரிஞ்சவராம்.

"என்ன தம்பி...நீங்கதானா?"ன்னு அவர் கேட்டிருக்கிறார்.இதைப் பார்த்ததும் கூட வந்த இன்னொரு போலீஸ்காரர்,"உங்களுக்கு தெரிஞ்ச பையனா, சரி...சரி...இங்கெல்லாம் நிக்க கூடாது. உடனே கிளம்பு."ன்னு சொன்னாராம்.

"இல்ல சார்...போன்ல பேசுறதுக்காகதான்..."அப்படின்னு இவன் இழுத்துருக்கான்.

"அதெல்லாம் வண்டியை ஓட்டிகிட்டு போகும்போதே பேசிக்க...கிளம்பு...கிளம்பு..."அப்படின்னு அந்த இன்னொரு போலீஸ்காரர் விரட்டியிருக்கார்.

நண்பனுக்கு தெரிஞ்ச போலீஸ்காரரும், "நீங்க கிளம்புங்க தம்பி..."அப்படின்னு சொல்லி கண்ணைக்காட்டியிருக்கார்.

இவனும் போன்ல அப்புறம் பேசுறேன்னு சொல்லி போனைக் கட்பண்ணிட்டு டூவீலரை எடுத்துட்டு கிளம்பிட்டானாம். ரொம்ப பக்கத்துலேயே பேட்ரோல் வாகனமும் இன்னொரு சொகுசுக்காரும் லைட்டைக்கூட எரிய விடாம நின்னுருக்கு.

சொகுசுக்கார்ல வந்தவங்ககிட்ட ரெண்டு போலீஸ்காரங்க தீவிரமான வசூல்வேட்டையில இருந்துருக்காங்க. நண்பனுக்கு விஷயம் தெரிஞ்சதும் அவனுக்குள்ள சிரிச்சுகிட்டு வந்துருக்கான். அந்த வண்டிகளைத் தாண்டுனதும் கொஞ்ச தூரத்துலேயே இன்னும் ரெண்டு போலீஸ்காரங்க, அந்தப் பக்கம் காவலுக்கு.

வண்டி ஓட்டும்போதே செல்போன் பேசுங்கன்னு சொல்லி இவங்க யாரைக்காப்பாத்துறாங்க, யாருக்கு குழி வெட்டுறாங்கன்னு புரியுதா?

இந்த சம்பவம் எந்தப் பகுதியில நடந்தது, நண்பன் பெயர் என்னன்னு சொல்லாம பதிவு எழுதுறேன். நம்ம நாட்டுல கருத்து சுதந்திரம் எந்த அளவுக்கு இருக்குன்னு தெரியுதா? என்னைப் பொறுத்த வரை முழு சுதந்திரம் இல்லை. நீங்க உடனே இந்த ஊர்ல பெட்ரோல் இந்த விலை. அந்த ஊர்ல பிஸ்கட் அந்த விலைன்னு பட்டியல் வாசிக்காதீங்க நண்பர்களே.

தப்பு பண்றவன் அதிகாரத்துல இருக்குறவங்ககிட்ட கூடிக் குலாவுறான். நேர்மையா நடக்குறவங்க போலீசைப் பார்த்து பயப்படுறாங்க.இதுக்கு காரணம் என்ன? நல்ல பேர் எடுக்குறது ரொம்ப கஷ்டம். கெட்டபேர் வாங்க ஒரு நொடி போதும்னு சொல்லுவாங்க.

அதே மாதிரி, தப்பு பண்றவன் மேல வழக்கு பதிவு பண்ணி ஒரு நாளாவது ரிமாண்டுல வெக்கிறதுதான் கஷ்டம். யோக்கியன் மேல ஒரே ஒரு பொய் வழக்கு போட்டு ஒன்பது வருஷம் கூட விசாரணையே பண்ணாம உள்ள வைக்கலாம். இதுதான் நம்ம நாடு.
இதுலயும் ஒரு ஆறுதல் என்னன்னா...நமக்கே ஷாக் கொடுக்குற அளவுக்கு ஒண்ணு ரெண்டு ரொம்ப நல்ல போலீஸ்காரங்களும் இருக்கத்தான் செய்யுறாங்க.சென்னை சிட்டிபஸ்சுக்குள்ள பயணிகள் கூட்டத்துக்குள்ள இருக்காரா இல்லையான்னே கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு கண்டக்டர் இருப்பாரே... அந்த மாதிரியான சொற்ப எண்ணிக்கையில்.

திங்கள், 15 பிப்ரவரி, 2010

ஸ்பெக்ட்ரம் ஊழலும் பயிற்சி முடித்த ஆசிரியைகளும்...

மிக அதிகபேர் எழுதக்கூடிய தேர்வுமுடிவுகள் வெளிவந்த நேரத்தில் கூட இவ்வளவு பரபரப்பு இருப்பது சந்தேகம்.ஆனால் அவற்றுக்கு உரிய சான்றிதழ்கள் கிடைத்ததில் இருந்து ஒரு வாரகாலத்திற்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்கள் நிரம்பி வழியும்.
பத்தாம் வகுப்பு, பனிரெண்டாம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் வழங்கியபிறகு மாணவர்களும் மாணவிகளும் அதைப்பதிவு செய்வதற்குள் வெந்து நொந்துவிடுகிறார்கள்.இப்போது இந்தப் பட்டியலில் புதியதாக சேர்ந்திருக்கும் கோர்ஸ், ஆசிரியர் பயிற்சி படிப்பு.

சில வாரங்களுக்கு முன்பு ஆசிரியர் பயிற்சித்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. ஆனால் ஓரிரு தினங்களுக்கு முன்புதான் சான்றிதழ்களை வழங்கியிருப்பார்கள் போலிருக்கிறது.

இன்று திருவாரூரிலும் மாணவிகள் மிக நீ............ண்ட வரிசையில் காத்திருந்தார்கள்.பொன்னை (பொண்ணு இல்ல) வைக்கிற இடத்துல பூவை வைக்கிறதா சொல்லுவாங்க. ஆனா பல பொண்ணுங்க டயட் அது இதுன்னு ஐம்பது கிலோ எடை இருக்கவேண்டிய நேரத்துல முப்பத்தஞ்சு கிலோதான் இருப்பாங்க.(முப்பது சதவீதம் தள்ளுபடி?)

இந்த லட்சணத்துல பல மணி நேரம் காத்திருத்தல் அவங்களை மேலும் பலவீனப்படுத்தும். கணிணி வந்த பிறகு இப்படி கால் கடுக்க காத்திருக்குறது நேரத்தைக்கொல்றது மாதிரி.

பதிவு செய்யுற வரிசையை வெச்சுதான் வேலைக்கு கூப்பிடுவாங்களாம். என்ன கொடுமை சார் இது.ஒரு லட்சம் கோடி ரூபா காண்ட்ராக்டை ஆயிரம் கோடி ரூபாய்க்கு கொடுத்துட்டு முதல்ல வந்தவங்களுக்கு கொடுத்துட்டோம்னு ரொம்ப கூலா சொன்னாங்க.இது என்ன சினிமா டிக்கட்டா?அப்புறம் ஸ்பெக்ட்ரம் ஊழலுக்கும் இதுக்கும் என்ன வித்தியாசம்.

தேர்வு முடிவு வெளிவந்த தேதியை பதிவு பண்ணின தேதியா எடுத்துகிட்டு அந்த அந்த கல்வி நிறுவனங்களிலேயே போய் எல்லா சான்றிதழ்களையும் பதிவு பண்ணிடலாம். அது கஷ்டம்னா, சுழற்சி முறையில வந்து பதிவு பண்ண வைக்கலாம்.தேர்வு முடிவு வெளியிடப்பட்ட தேதிதான் பதிவு செய்த தேதியா கணக்கு வெச்சுகிட்டா என்ன பிரச்சனை?

இதுல பல நடைமுறை சிக்கல் இருக்குன்னு சொல்லுவாங்க. இஷ்டப்பட்டா எதுவும் சிக்கல் இல்லை. மனசுக்கு விருப்பம் இல்லைன்னாதான் தட்டிக்கழிக்க ஆயிரம் காரணம் இருக்குறதா தெரியும்.

இன்னைக்கு மெகா டி.வி செய்தியில விருதுநகர், திருவாரூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்துல கூடி நின்ன கூட்டத்தைக் காட்டினாங்க. நாளைக்கு பேப்பர்ல எவ்வளவு தள்ளுமுள்ளு, தடியடி, உடம்புல வலு இல்லாம மயங்கி விழுந்தது எத்தனைபேர் - இந்த விவரங்கள் எல்லாம் வரும்.

திருவாரூர்ல கொஞ்ச நாள் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக வளாகத்துல வேலை வாய்ப்பு அலுவலகமும் இயங்கி வந்தது.மத்திய பல்கலைக்கழகம் இயங்க தற்காலிக கட்டிடம் வேணும்னு அங்க இருந்த எல்லா அரசு அலுவலகங்களையும் தட்டி விட்டதுல திருவாரூர் கால்நடை மருத்துவமனைக்கு எதிர்ல வந்து வேலைவாய்ப்பு அலுவலகம் விழுந்துடுச்சு.

ஒரே நாள் பதிவுமூப்புன்னு ரெண்டுலட்சம் பேர் இருந்தாலும் அதுல தகுதி படைச்சவங்களைத் தேர்வு செய்ய வேறு வழிமுறையை உருவாக்கணுமே தவிர, கோயில்ல பொங்கல் கொடுக்குற மாதிரி முதல்ல பதிவு பண்ணினாதான் வேலை அப்படின்னு சொல்றது மிக மிக முட்டாள் தனம்.

இது மாதிரி பத்தாம் வகுப்பு, பனிரெண்டாம் வகுப்பு, ஆசிரியர் பயிற்சி தேர்வு எல்லாம் சனிக்கிழமை எழுதி திங்கள் கிழமை சான்றிதழ் கொடுத்து அவங்க செவ்வாய் கிழமை பதிவுபண்ண கூடிடுறாங்களா?

இல்லையே...ஒவ்வொரு வருஷமும் இந்த கூத்துதானே நடக்குது. ஒரு மா நாடு போட பல மாசங்களுக்கு முன்னாலேயே திட்டமிடுற ஆட்சியாளர்கள், இது மாதிரி நிரந்தர பிரச்சனைகளுக்கு தீர்வு காணுற முயற்சியே எடுக்குறது இல்லையே.

இதுல பொது மக்கள் செய்ய ஒண்ணும் இல்லை.அதிகாரிகளையும் அரசியல்வாதிகள் அல்லது வியாதிகள்தான் ஆட்டி வைக்கணும்.
இந்த கோரிக்கையை வெச்சு இளைஞர்கள் போராடினா, அவங்களையே, பணி செய்ய விடாம தடுத்ததா சொல்லி உள்ள வெச்சிடுவாங்க.

டென்த், பிளஸ்டூவை பள்ளிகள்லேயே பதிவு பண்ற வசதி கொண்டு வந்ததா சொன்னாலும் இந்த முயற்சியும்  தொடர்ந்து நடைபெறணும்.

ஆசிரியர் பணி - புனிதப்பணி. இப்படி எல்லாம் அவங்களை அலைக்கழிச்சா அது நாளைக்கு ஆசிரியரான பிறகு இந்த  கோபம் அவங்களை அறியாமலேயே பிள்ளைங்க மேல திரும்பலாம். இது மாதிரி எல்லாரும் இருப்பாங்கன்னு சொல்லலை. ஒரு சில ஆசிரியர்கள் மோசமா நடந்துக்குறதை பார்த்தா, அவங்க வளர்ந்த சூழ்நிலையும்  பட்ட  வடுக்களும்   கூட இதுக்கு காரணமோன்னு நினைக்கத் தோணுது.

ஞாயிறு, 14 பிப்ரவரி, 2010

கடைசியில என்னையும் இப்படி மாத்திட்டாங்களே!

முதல்வன் படத்தின் உச்சகட்ட காட்சியில் பாதுகாவலர்கள் சுட்டுக் கொன்றவுடன் அர்ஜூன்,"கடைசியில என்னையும் அரசியல்வாதியாக்கிட்டாங்களே!" என்று மணிவண்ணனிடம் சொல்வார்.
இப்போது "இப்ப என்னையும் ரசிகனாக்கிட்டாங்களே!"என்று நான் புலம்பவேண்டியதாயிடுச்சு.சீரியல் பார்த்து நேரத்தை தொலைச்சு உறவுகளை சிதையவிட்டுகிட்டு இருக்குற நிறைய தாய்மார்களை நான் கிண்டல் பண்ணினேன்.

ஆனா திங்கள் முதல் வியாழன் வரை இரவு பத்துமணிக்கு கலைஞர் தொலைக்காட்சியில ஒளிபரப்பாகுற விசாரணை தொடரை இரண்டு வாரமா
பார்த்துகிட்டு இருக்கேன்.

படத்துல ரெண்டு மணி நேரம் வில்லங்கத்தைக் காட்டிட்டு பத்து நிமிஷம் புத்திமதி சொல்றதையே தப்புன்னு சொல்றோம். ஆனா பல நெடுந்தொடர்கள்ல அஞ்சு வருஷம் அவ்வளவு தப்பையும் காட்டிட்டு கடைசி ஒரு எபிசோடுல மெசேஜ் சொல்றோம்னுதான் பில்ட்அப் பண்ணுவாங்க.

ஆனா விசாரணை தொடர் எல்லாமே குட்டிக்குட்டிக் கதைகள்.திங்கள் கிழமை ஆரம்பமாகுற கதை வியாழன் அன்னைக்கு முடிஞ்சுடும்.எல்லாம் கிரைம் ஸ்டோரிதான். ஒவ்வொரு கதையோட முடிவுலயும் ஒரு நல்ல மெசேஜ் உண்டு.இதுக்கெல்லாம் காரணம் யாரு...நம்ம கிரைம் ஸ்டோரி மன்னன் ராஜேஷ்குமார்தான்.

கதை வசனம் இவரே.பொதுவா ராஜேஷ்குமாரோட நாவல்கள்ல பல குற்றவாளிகள் ரொம்பவும் புத்திசாலித்தனமா தப்பு செய்வாங்க.ஆனா கதையோட முடிவுல கண்டிப்பா அவங்க மாட்டிக்கிற மாதிரிதான் எழுதியிருப்பார்.தொலைக்காட்சி தொடர்லேயும் இதே மாதிரிதான் கதை இருக்கு.இந்த சமூக அக்கறைதான் அவர்கிட்ட எனக்கு ரொம்ப புடிச்சுது.

அப்புறம் ராஜேஷ்குமார் நாவல்களின் புகழ்பெற்ற கதாபாத்திரங்களான விவேக்,ரூபலா,விஷ்ணு -இந்த மூணு பேரும் இருக்காங்க.கதைகளோட, இந்த தொலைக்காட்சித் தொடர்ல விஷ்ணுவோட கதாபாத்திரம் பிரமாதமா சிரிப்பை வரவழைக்கிது.அது ஷ்யாம்கணேஷ்னு நினைக்கிறேன். நாளைக்கு கன்பர்ம் பண்ணிடலாம்.இந்த வகையில எழுத்தாளர் ராஜேஷ்குமார், வசனகர்த்தாவா வெற்றி அடைஞ்சுட்டார் அப்படின்னுங்குறது என் கருத்து.

சுஜாதாவின் படைப்பான கணேஷ், வசந்த் கதாபாத்திரங்களும் இதே சுவாரஸ்யத்தை தரும்.

ஆனா எனக்குள்ள ஒரு பயம். இந்த நிகழ்ச்சியின் இடையில மா.மா விளம்பரமும் (அதுதாங்க மானாட, மயிலாட.) ஒரு எசகுபிசகான மருந்துக்கான விளம்பரமும் மட்டும் தான் போடுறாங்க.
ஒண்ணு, அரைமணி நேரத்துல இருபத்து ஏழு நிமிஷம் விளம்பரத்தையும் பிகினிங் டைட்டிலையும் எண்ட் டைட்டிலையும் போட்டு சாகடிக்கிறாங்க. இல்லன்னா இப்படி மிகக்குறைந்த விளம்பரத்தை மட்டும்தான் போடுறாங்க.அதுக்கு நீ ஏன் பயப்படுற அப்படின்னுதானே கேட்குறீங்க...

ஸ்பான்சர் கிடைக்காம நிகழ்ச்சி நின்னுடுமோன்னுதான் நான் பயப்படுறேன்.பார்ப்போம்...விசாரணை எந்த அளவுக்குப்போகுதுன்னு.

******

திருவாரூரில் பார்த்து நான் தற்போது கவலைப்பட்ட விஷயம்.

தேரோடும் நாலு வீதியிலயும் சிமெண்ட் ரோடு போடப்போறாங்களாம்.பூமி பூஜை போட்டு மணல், ஜல்லி எல்லாம் வந்து இறங்கிட்டு.பொக்லைன் வெச்சு ஏற்கனவே இருந்த தார்ரோட்டுல கோடு போட்டு கிழிச்சுகிட்டு இருக்காங்க.

இதுனால வரப்போற நன்மை என்னன்னு எனக்கு தெரியாது.ஆனா சில தீமைகளை மட்டும் இப்ப சொல்லிடுறேன்.

மண் தரை இல்லாம போறதால மழை நீர் பூமிக்குள்ள போற நுண்துளைகள் அடைபட்டுப்போகும்.
வருஷத்துக்கு ஒன்பதுமாசங்கள் அனல் காத்து தாங்காம இந்த தெருவுல இருக்குற அணிக நிறுவனங்கள் வீடுகள்ல குளிர்சாதனப்பெட்டி, மின் விசிறியோட பயன்பாடு ரொம்பவும் அதிகமாயிடும்.

இப்படி பூமி மேல மேல வெப்பமாகுறதுக்கு கோடிக்கணக்குல செலவு பண்ணி திட்டம் போட்டுட்டு குடிமக்கள், வெப்பத்தைக்குறைக்கணும்னு சொல்றாங்க. என்ன கொடுமை சரவணன் இது.

பேசாம நானும் அரசாங்கப்பணிகளை டெண்டர் எடுக்குற ஒப்பந்தக்காரராயிருந்தா இப்போ சுவிஸ் பாங்க்ல பணம் சேர்த்துருக்கலாமோ.