Search This Blog

சிறுதொழில் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சிறுதொழில் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 14 ஏப்ரல், 2011

தமிழ் சோறு போடுமா?

எனக்கு இப்போ போடுதே. சரஸ்வதி பூஜை அன்னைக்கு பிறந்த பையன். படிப்பு பிரமாதமா வரும்னு யாரோ சொன்னாங்களாம்.

அவரு சொன்ன மாதிரியே படிப்பு நல்லா வந்துச்சுங்க. ஆனா அது பள்ளிக்கூட படிப்பு இல்லை. கதைபுக் படிக்கிறதுல ரொம்பவே ஆர்வம் அதிகமா போயிடுச்சு.

எனக்கு முதன்முதலா அறிமுகமான புத்தகம்னு சொன்னா அது தினமலர் நாளிதழோட இணைப்பா வெள்ளிக்கிழமையில வெளிவந்த சிறுவர்மலர்தான். பீர்பால், தெனாலிராமன், மரியாதைராமன் உட்பட பல நீதிக்கதைகள் தவிர நிறைய புராணக்கதைகளும் அந்த புத்தகத்தில்தான் படிச்சிருக்கேன்.

தெரிஞ்சவங்க யார் வீட்டுக்காவது போனா அம்புலிமாமா, பூந்தளிர் ஆகிய புத்தகங்கள் கிடைக்கும். நான் எவ்வளவு ஆர்வமா கதைப்புத்தகங்கள் படிக்கத்தொடங்கினாலும் என் அம்மாவுக்கு இதெல்லாம் பிடிக்காது.

பாடப்புத்தகத்தை விட்டுட்டு இது என்ன வெட்டி வேலை அப்படின்னு சொல்லுவாங்க. வீட்டுல சிறுவர்மலர் படிக்கிற வாய்ப்பு இல்லாமல் போனதும் தெருவில் உள்ள இரண்டு சலூன் கடைகளை தஞ்சமடைந்து விடுவேன். ஒரு கடையில் தினமலர் மற்றொன்றில் தினத்தந்தி.

பாடப்புத்தகம் தவிர மற்றவற்றை படிப்பதில் ஆர்வம் வந்தது இப்படித்தான். கல்லூரி ஆண்டு மலர் மூலமாக எழுதத்தொடங்கி ஓரளவு அவை பிரசுரமும் ஆனதும் வழக்கமாக என்னிடம் இருக்கும் சோம்பேறித்தனத்தால் தொடர்ந்து எழுதவில்லை.

கல்லூரியில் இறுதியாண்டு படிக்கும்போது திருச்சி தினமலர் நாளிதழில் நேர்காணலுக்கு அழைத்திருந்தார்கள். அன்று எனக்கு கல்லூரிப்படிப்பு இறுதியாண்டின் இறுதித்தேர்வு. அப்போது நேர்காணலுக்கு அடுத்த நாள் சென்றால் ஒப்புக்கொள்ள மாட்டார்கள் என்று எனக்கு நானே சமாதானம் சொல்லி தயங்கினேன். அது என் வாழ்வில் எட்டு ஆண்டுகளை வீணடித்து விட்டது.

தன்னம்பிக்கையுடன் அடுத்த நாள் சென்று இதைப்போல் நேற்று எனக்கு தேர்வு இருந்தது என்று சொல்லியிருந்தால் அன்றைக்கு நேர்காணலுக்கு அனுமதித்திருந்திருக்கலாம். இந்நேரம் அந்த வேலையில் இருந்து பெரிய நிலைக்கு வந்திருக்கலாம். அல்லது அந்த வருமானம், சூழ்நிலை போன்றவை எனக்கு ஒத்து வராமல் வேறு வேலையில் கவனம் செலுத்தியிருக்கலாம்.

ஆனால் இரண்டும் நடக்காமல் நாளிதழ் அல்லது தொலைக்காட்சியில் நுழையும் (அரைகுறை) போராட்டத்திலேயே ஏழு ஆண்டுகளுக்கு மேல் தொலைத்து விட்டேன்.

இப்போது சில மாதங்களுக்கு முன்பு திருச்சி தினமலர் நாளிதழின் கிளை அலுவலகத்தில் பக்க வடிவமைப்பாளராக பணியில் சேர்ந்தபோதுதான், இந்த ஊதியத்தில் இருந்து படிப்படியாக முன்னேறக்கூடிய வயதைத்தாண்டி விட்டோம் என்ற உண்மையைப் புரிந்து கொண்டேன்.

அதாவது மாயை விலகியது என்று கூட சொல்லலாம். சட்டென்று ஒரு முடிவுக்கு வந்தேன். தமிழில் ஏகப்பட்ட கதைப்புத்தகங்களைப் படித்த அனுபவத்தால் தட்டச்சு செய்வதில் இலக்கணப் பிழைகள் மிக மிக குறைவாகவே வரும். இது நான் கணிப்பொறியில் டி.டி.பி வேலைகள் செய்வதற்கு உதவியாக இருக்கிறது.

அதனால்தான் தமிழ் எனக்கு சோறு போடுகிறது என்று இந்த பதிவில் எழுதியிருக்கிறேன்.

இதற்காக நான் கடை வைக்க இடம் தேடி அலைந்த போது வேறு சில உண்மைகளை உணர்ந்து கொண்டேன். முக்கியமாக கருப்பு பணம் (முக்கியமாக அரசியல் மூலமாக புழங்குவது) சாமானியர்களைக்கூட எந்த அளவு பாதிக்கிறது என்பது புரிந்தபோது அதிர்ச்சிதான் ஏற்பட்டது.

ஒரு ஊரின் பேருந்து நிலையம், முக்கிய கடைவீதி போன்ற இடங்களில் கடைகளுக்கு ஆயிரக்கணக்கில் (லட்சக்கணக்கிலும் கூட) கேட்பது வேறு விஷயம். ஆனால் என்னுடைய டி.டி.பி வேலைகளுக்கு ஒதுக்குப்புறமான பகுதியில் கடை இருந்தால் கூட போதும் என்று இடம் தேடினேன். ஆனால் அதற்கே ஐம்பதாயிரம் ரூபாய் முன்பணமும் மாதம் மூன்றாயிரம் ரூபாய் வாடகையும் கேட்டார்கள்.

திருவாரூர் போன்ற இடங்களில் இதெல்லாம் கொஞ்சம் ஓவர்தான். இதற்கு முக்கிய காரணம், அரசியல் தொடர்புடைய சிலர் தங்களின் பணத்தை கொட்டி காம்ப்ளக்ஸ் கட்டி விட்டனர். அவர்கள் சொல்லும் விலைக்கு பைனான்ஸ் உள்ளிட்ட பல தொழில் செய்பவர்கள் ஒப்புக்கொள்வதால், சாதாரண சிறிய தெருக்களில் உள்ளவர்கள் கூட மிக மிக அதிக முன்பணம் வேண்டும் என்று கேட்கிறார்கள்.

ஆக மொத்தத்தில் இதெல்லாம் வளர்ச்சி இல்லை. வீக்கம்தான் என்று உணர முடிகிறது.

இப்போது நான் வீட்டில் வைத்து செய்து கொடுக்கும் வேலைகளுக்கு பக்கத்துக்கு பத்து ரூபாய் வாங்குகிறேன். ஐம்பதாயிரம் ரூபாய் கடன் வாங்கி கடை பிடித்தால் ஒரு பக்கத்துக்கு பதினைந்து, இருபது என்று வாங்கும் கட்டாயத்துக்கு தள்ளப்படுவேன் என்பது புரிகிறது.

இன்னொரு வேடிக்கை என்னவென்றால், திருவாரூரில் பலர் ஒரு கடை வைத்து தொழில் செய்பவர்கள் குறைந்தது இரண்டு மூன்று கடைகளை பிடித்து பூட்டி வைத்து வாடகை கொடுத்து வருகிறார்கள். (தங்கள் கடைகளில் இடம் போதாமல் கிடங்காக பயன்படுத்துபவர்களை நான் சொல்லவில்லை.) தானும் படுக்காமல், தள்ளியும் படுக்க மாட்டேன் என்று சொல்பவர்களை என்ன செய்வது.

(திருவாரூர் மக்களை ஆண்டவன்தான் என்கிட்ட இருந்து காப்பாத்தணும்.ஹி..ஹி...)