Search This Blog

கதை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கதை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 6 ஜூலை, 2019

செங்கம் டிராவல்ஸ் - 6



‘‘தம்பி... உனக்கு தட்டி பாஸ் கொடுக்கும்போதே என்ன சொன்னேன்... படம் போட்டு முதல் நாளோ, சனி ஞாயிறு மாதிரி விடுமுறை நாள்லயோ, இந்த மாதிரி கூட்டம் நிறைய இருக்குற நாள்லயோ வராத... சாதாரண நாட்கள், இன்று இப்படம் கடைசின்னு ஸ்லிப் ஒட்டியதும் வான்னுதானே சொன்னேன்... மறந்துட்டியா தம்பி...’’ என்றார் தியேட்டரின் உரிமையாளர் பழனிச்சாமி. 
















‘‘இல்லன்ணே... டிக்கட் கேட்கதான்ணே வந்தேன்...’’


‘‘டிக்கட்டா... யாருக்குடா...’’


‘‘எனக்குதான்ணே...’’


‘‘ஏண்டா தம்பி... படிக்கிறப்பவே காலையில நாலரை மணிக்கு எழுந்திரிச்சு பேப்பர் போட்டு கஷ்டப்பட்டு ஏதோ கொஞ்சம் சம்பாதிக்கிற...


இன்னும் ரெண்டு வாரம் கழிச்சு வந்தா உன்னைய சும்மாவே உள்ள அனுப்பப்போறேன். இப்போ ஏண்டா செலவழிக்கப்போற...’’ என்றார்.


அவரிடம் உண்மையான காரணத்தை சொல்ல முடியாமல், ‘‘இல்லண்ணே... என்ன இருந்தாலும் தலைவர் படம்...’’ என்று இழுக்க, ’’சரிடா... செகண்ட் கிளாஸ் டிக்கட் நாற்பது ரூபா. அதை வாங்கிக்க...’’ என்று கண்ணாடி கதவு வழியாகவே இவனை உள்ளே அழைத்துச் சென்றார்.


டிக்கட்டை வாங்கிக் கொண்ட அவன், ‘‘அண்ணே... சைக்கிளை கொண்டு போய் போட்டுட்டு வந்துடுறேன்...’’ என்றதும், உரிமையாளர்,


‘‘நில்லுடா... இந்த சாவியை எடுத்துட்டுப்போய் எண்ட்ரன்சுக்கு பக்கத்துல நம்ம வண்டிங்க எல்லாம் நிக்கிற இடத்துல சைக்கிளைப் போட்டுட்டு கதவைப் பூட்டி சாவியைக் கொண்டாந்துடு...’’ என்று ஒரு வளையத்தில் மாட்டியிருந்த சாவியைக் கொடுத்தார்.


வரதராஜனுக்கு ஏக குஷி. காரணம், பெண்களுக்கு டிக்கட் கொடுக்கும் பகுதியில்தான் தியேட்டர் ஊழியர்கள், நிர்வாகிகள் வாகனங்கள் நிறுத்தும் இடம் இருந்தது. இவன் அந்த இடத்தின் கதவைத்திறந்து தன்னுடைய சைக்கிளை வைக்கும்போது அர்ச்சனாவும், அந்த காலனியில் இருந்த அத்தனை பேரும் பார்த்தார்கள். இவன் சைக்கிளை நிறுத்தி பூட்டி விட்டு வெளியே வந்து அந்த இடத்தின் கதவைப் பூட்டிக் கொண்டு திரும்பும்போது எதிரில் நின்றது, இவன் பேப்பர் போடும் வீட்டில் உள்ள புவனேஸ்வரி.


‘‘என்ன தம்பி... இங்கயும் வேலைபார்க்குறியா?’’ என்றதும்,


‘‘அய்யய்யோ... இல்லக்கா... நான் ஸ்கூல்ல படிக்கிறேன்... இங்க படம் பார்க்க வந்தேன்... ஓனர் சைக்கிளை இங்க போட்டுக்க சொன்னார்...’’ என்று அவசரமாக பதிலளித்தான்.


‘‘கூட்டம் இருக்குறதைப் பார்த்தா பொம்பளைங்களுக்கு குடுக்குற இருபது ரூபா டிக்கட் கிடைக்காது போலிருக்கு... நீ சொல்லி வாங்கித்தர்றியாப்பா...’’ என்று கேட்டதும் ஒருகணம் யோசித்தான்.


வாங்கித்தர்றேன்னு பந்தாவா சொல்லி, ஓனர் மறுத்துட்டா அசிங்கம்... அதனால போய் கேட்டுட்டு வந்துடுறேன் சொல்லி தப்பிக்கிறதுதான் நல்லது என்ற முடிவுக்கு வந்த வரதராஜன், ‘‘அக்கா... ஓனர் என்ன மூடுல இருக்காருன்னு தெரியலை... எதுக்கும் போய் கேட்டுட்டு வந்துடுறேனே... எத்தனை டிக்கட்?’’ என்று கேட்டான்.


‘‘இருபத்து மூணு...’’ என்று அந்த பெண் சொல்லவும், இதை நான் எதிர்பார்த்ததுதான், ஆனா ஓனருக்கு மயக்கம் வராம இருக்கணும்... என்று தனக்குத்தானே சொல்லிக்கொண்டு கண்ணாடி கதவு நுழைவாயிலுக்கு சென்றான்.


அவர் இவன் பேசிக்கொண்டிருந்ததைப் பார்த்திருப்பார் போலிருக்கிறது.


‘‘அங்க என்னடா லேடீஸ்கிட்ட கதை பேசிகிட்டு இருந்த...’’


‘‘இல்லண்ணே... நான் பேப்பர் போடுற ஏரியாவுல ஒரு காலனியில இருக்காங்க... இருபது ரூபா டிக்கட் கேட்டாங்க... அதான்...’’ என்று இழுத்தான் வரதராஜன்.


‘‘நீ என்ன சொன்ன?...’’ என்று பழனிச்சாமி கேட்டபோது அவர் குரலில் ஏதோ ஒரு எச்சரிக்கை உணர்வு.


‘‘முதலாளிகிட்ட கேட்டுட்டு வர்றேன்னுதான் சொன்னேன் முதலாளி...’’


இதைக் கேட்ட பழனிச்சாமி, அருகில் நின்ற தியேட்டர் ஊழியர்களிடம், ‘‘வியர்க்க விறுவிறுக்க பையன் பணம் கொடுத்து படம் பார்க்குறேன்னு சொன்னப்ப தலைவர் படம்னு ஆவலா இருக்குறதா நினைச்சேன்... அங்க நிக்கிற கூட்டத்தைப் பார்க்கும்போதுதான் விசயம் புரியுது. பையன் தெளிவாத்தான் இருக்கான்... ஆனாலும் திறமைசாலிடா நீ... டிக்கட் வாங்கித் தர்றேன்னு பந்தா பண்ணாம, என் கிட்ட கேட்டு சொல்றேன்னு தெளிவா எஸ்கேப் ஆகுற மாதிரி பதில் சொல்லிட்டு வந்துருக்க... சரி... எத்தனை டிக்கட் வேணும்?’’ என்று கேட்டவாறு அருகில் நின்ற ஊழியரின் கையில் இருந்த மூன்றாம் வகுப்பு டிக்கட் புத்தகத்தை வாங்கி டிக்கட்டுகளை எண்ணுவதற்காக ஒரு டிக்கட்டை இரண்டு விரல்களால் பிடித்தார்.


‘‘இருபத்திமூணு....’’


வரதராஜன் எதிர்பார்த்ததுபோல் உரிமையாளருக்கு மயக்கம் வரவில்லை. ஆனால் ஒரு சில விநாடிகள் ஸ்தம்பித்து நின்றார்.



வெள்ளி, 11 டிசம்பர், 2009

கதாநாயகன்


"தமிழ் நாடு முழுவதும் அறுபது தியேட்டரை வாடகைக்கு பிடிச்சுடுங்க." என்று சகதேவ் சொன்னதும் மனோகரனுக்கு எதுவும் புரியவில்லை.

கடந்த ஐந்து ஆண்டுகளாக சுகதேவ் நடித்தது எட்டு தமிழ்ப்படங்கள். அனைத்துமே வெற்றி பெற்றது திரையுலகினர் மட்டுமின்றி பலரையும் பொறாமைப்பட வைத்தது. தமிழகம் முழுவதும் நூறு தியேட்டர்களில் வெளியாகி குறைந்தது எண்பது தியேட்டர்களிலாவது அறுபது நாட்களுக்கு குறையாமல் ஓடும்.

ஆனால் ஒரு தியேட்டரில் கூட நூறு நாட்கள் ஓடியதே இல்லை.

சென்னையில் மட்டுமாவது இரண்டு தியேட்டர்களை வாடகைக்குப் பிடித்து நூறு நாட்கள் ஓட்டினால் இமேஜ் உயருவதோடு சம்பளத்தையும் அதிகரிக்கலாம் என்று மேளாலர் மனோகரன் எத்தனையோ முறை சொல்லியும் சகதேவ் கேட்பதாக இல்லை.

"சிறிய பட்ஜெட் படங்கள் வெளியாவது தடைபடும்...மின்சாரம் வீணாகும்...நான் நடிச்ச படங்கள் ஆளே இல்லாமல் என் காசுல நூறு நாள் ஓடுறத விட, தன்னால ஐம்பது நாள் ஓடி எல்லாருக்கும் லாபம் சம்பாதிச்சு கொடுத்தால் போதும். என்றெல்லாம் கூறிய சகதேவ் இப்போது தமிழ் நாடு முழுவதும் அறுபது தியேட்டரை வாடகைக்கு பிடிச்சுடுங்க..."என்று சொன்னதும் குழப்பம் தாங்காத மனோகரன்,

"சார்...நான் தியேட்டரை புக் பண்ண சொன்னப்ப எல்லாம் நீங்க கேட்கலை. உங்க படம் ரிலீஸ் ஆக இன்னும் மூணு மாசமாவது ஆகும். இப்ப எதுக்கு சார் தியேட்டர்? "என்றான்.

"நேற்று ஃபோர் ஃப்ரேம் தியேட்டர்ல பார்த்த படம் எப்படி இருந்துச்சு?"

"அருமையான படம்...ஆனா பாவம்... வினியோகஸ்தர்கள் கிடைக்காம திண்டாடுறாங்க..."என்று மனோகரன் வருத்தப் பட்டான்.

"இந்த படத்துக்கு நல்ல ஓபனிங் கிடைக்காம போயிடக்கூடாதுன்னுதான் நானே தியேட்டரை பிடிச்சு கொடுக்க முடிவு பண்ணிட்டேன். அன்னதானம் பண்றதும் நாலு பேரை படிக்க வைக்கிறது மட்டும் செய்தால் போதாது. எங்கிட்ட சினிமா பணம் கொடுத்திருக்கு. அது நல்லா இருக்க திரும்பவும் கொஞ்சமா செலவு செய்யப்போறேன்." என்று சகதேவ் சொன்னதைக் கேட்டு சினிமாவில் மட்டுமின்றி நிஜவாழ்விலும் ஹீரோவாகத் திகழும் ஒருவரிடம் வேலை செய்வதை நினைத்து மனோகரன் மகிழ்ந்தான்.

பரிசு



தஞ்சாவூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தின் உதவி மேலாளரின் திருமணம் அந்த மண்டபத்தில் நடைபெற்றுக் கொண்டிருந்தது.

மாப்பிள்ளையின் சக ஊழியர்கள் எல்லாம் அக்கவுண்டண்ட் வினோத்தைப் பற்றியே பேசிக் கொண்டிருந்தார்கள்.

"வினோத் சார் என்ன கிப்ட் வாங்கிட்டு வரப்போறேன்னு இதுவரை சொல்லவே மாட்டேன்னுட்டாரே... இப்பவும் மனுஷன் கையை வீசிட்டு வந்திருக்குறதைப் பார்த்தா மோதிரம்தான் எடுத்துட்டு வந்திருப்பார் போலத் தெரியுது." என்று ராஜாராமன் சக ஊழியர்களிடம் சொல்லிக் கொண்டிருந்தார்.

"அவரோட கல்யாணத்துக்கு நாம எல்லாருமே தனித்தனியா நைட்லாம்ப் வாங்கிட்டுப் போனதும் ஏற்பட்ட அதிர்ச்சியிலிருந்து அவர் இன்னும் வெளியிலேயே வரலைன்னு நினைக்குறேன்." என்று மற்றொருவர் சொன்னார்.

திருமணம் முடிந்து மற்ற சில சடங்குகள் முடியும் வரை வினோத், மணமக்களுக்கு எதையுமே பரிசளிக்கவில்லை.

"மதிய சாப்பாட்டுக்கு நேரமாச்சு...எந்த ஏற்பாடும் செய்யாம மண்டபத்தை காலி செய்யப்போறாங்களே.இவ்வளவு சிக்கனமா? " என்று சிலர் முகம் சுளித்தார்கள்.

அனைவரையும் ஏற்றிக்கொண்டு சென்ற அந்த பேருந்து போய் நின்ற இடம், ஒரு ஆதரவற்ற குழந்தைகள் இல்லம். அந்தக் குழந்தைகளுடன் மணமக்கள் உட்பட அனைவரும் உணவருந்தியபோது ஒவ்வொருவரும் தங்கள் வாழ்வில் இது ஒரு நெகிழ்ச்சியான தருணம் என்பதை உணர்ந்தார்கள்.

இந்த ஏற்பாடுகளைச் செய்தது வினோத் என்பது தெரியவும், இதுவும் ஒரு மதிப்பு மிக்க பரிசுதான் என்பது அனைவருக்கும் புரிந்தது.

தண்ணீர்


"ராஜவேலு...அவங்க எவ்வளவு பெரிய குடும்பம்னு தெரியுமா? வசதியை எல்லாம் எதிர்பார்க்காம ஜாதகம் சரியா இருந்த ஒரே காரணத்துக்காக நம்ம வீட்டுப் பொண்ணைக் கேட்டு வந்துருக்காங்க. நீ எதனால குடுக்க வேண்டாம்னு சொல்ற?"

"மாப்பிள்ளை வீடு நமக்கு தூரத்து சொந்தம் வேற. அந்த விஷயமே இப்பதான் தெரிஞ்சது. நாம தேடி அலைந்தாலும் இப்படி ஒரு சம்மந்தம் அமையாதுடா..." என்றாள் வசந்தா.

"அம்மா...போன வருஷம் சென்னையில இருக்குற இவங்களோட கம்பெனி நேர்காணலுக்காக போனேன். அங்க எனக்கு வேலை கிடைக்கலை. அதைப் பற்றி எனக்கு வருத்தம் கிடையாது.

நானூறு கிலோமீட்டர் பயணம் பண்ணி நேர்முகத்தேர்வுக்கு என் சொந்த செலவுல போனேன்...சரி...பரவாயில்லை.

நாங்க நாலே பேர் உச்சி வெயில் நேரத்துல போயிருந்தோம். நாங்க குளிர் பானமெல்லாம் கேட்கலை. தாகத்துக்கு தண்ணீர் கேட்டோம்.

கம்பெனிக்கு வெளியில டீக்கடை இருக்குன்னு வழிகாட்டுறாங்க. அங்க உள்ள பணியாளர்கள், பார்வையாளர்களுக்கு தண்ணீர் வசதி இல்லாம இருக்காது.

இவங்களை வேலைக்கு எடுக்கலை. அப்புறம் ஏன் தண்ணீர் கொடுக்கணும்னு நினைக்குற அளவுக்கு குறுகிய மனப்பான்மை கொண்ட அந்த கம்பெனி முதலாளி குடும்பத்துல என் தங்கை நிம்மதியா வாழ முடியும்னு எனக்குத் தோணலைம்மா."என்றான்.

அவன் பேச்சில் இருந்த உண்மை வசந்தாவையும் காயப் படுத்தியது. இப்போது அவளுக்குள்ளேயும் இந்த சம்மந்தம் வேண்டாம் என்ற தீர்மானம்.

திங்கள், 7 டிசம்பர், 2009

ஊட்டுல சொல்லிட்டு வந்துட்டியா...


வாசகர்களின் கனிவான கவனத்திற்கு: பொழுது போக்குக்காக எழுதப்பட்ட இந்தக் கதை வட்டாரப் போக்குவரத்து அலுவலக கொடுமையை நினைவூட்டினால் அதற்கு இளையபாரத ஆசிரியர் பொறுப்பல்ல...

 ஒவ்வொரு ஏரியாவிலும் மகிழ்ச்சியாக வாழ்பவர்களைப் பார்த்து வயிற்றெரிச்சல் படுவதற்கென்றே சிலர் பிறவி எடுத்திருப்பார்கள். ஆனால் வயிற்றெரிச்சல் வாஞ்சிநாதன் அப்படிப்பட்ட ஆள் இல்லை.

ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பு வரை மட்டுல்ல... இப்போது கூட வாஞ்சிநாதன், ஆட்டோ ஓட்டுநர்களைத் தவிர வேறு யாரைப் பார்த்தும் வயிற்றெரிச்சலுடன் குமுறுவது கிடையாது.

வாஞ்சிநாதன் பொறாமைப்படும் அளவுக்கு ஆட்டோ டிரைவர்களின் வாழ்க்கை சொகுசானது அல்ல. ஆனாலும் ஃபயர் இஞ்சின் வந்து எரிச்சலை அணைக்கும் அளவுக்கு வாஞ்சிநாதன் வயிற்றில் தீ கொழுந்து விட்டு எரியக் காரணம் ஆட்டோக்காரர்களுக்கே சொந்தமான பொன்மொழிதான் என்றால் உங்களால் நம்ப முடியாதுதான்.

வியர்வை சிந்த, கால்கள் வலிக்க, சைக்கிள் மிதிப்பது சிரமமாக இருந்ததை உணர்ந்ததும்தான் பலர் மோட்டார் சைக்கிள் ஓட்ட ஆசைப்படுவார்கள். ஆனால் வாஞ்சிநாதனின் கதையே வேறு.

அவனுக்கு எட்டு வயது இருக்கும்போது திருவாரூர் பனகல் சாலையில் உள்ள பூங்கா அருகில் சாலையை கடக்க முயற்சித்தான். சாலையைக் கடக்கும்போது நடக்க வேண்டும் என்பது புரியாமல் முக்காபலா பாடலுக்கு நடுரோட்டிலேயே அவன் நடனமாட, அப்போது அங்கே சென்று கொண்டிருந்த வாகனங்களில் ஒரு ஆட்டோ மட்டும் சடாரென்று நின்றது. 'பிரேக் பிடிச்சதும் நின்னுடுச்சே...இது நம்ம ஆட்டோதானா' என்று டிரைவருக்கே சந்தேகம்.

ஆனாலும் சட்டென்று சுதாரித்துக் கொண்டு, "டேய்...சாவுகிராக்கி...வூட்டுல சொல்லிட்டு வந்துட்டியா?..." என்று திட்டிவிட்டு கிளம்பினான்.

வாஞ்சிநாதன் மட்டும் இப்போது பெரிய ஆளாக இருந்திருந்தால் பெற்றோரையும் தெருவாசிகளையும் அழைத்துவந்து ஒரே ஒரு சாலை மறியலாவது செய்து ஊரையே ரத்தபூமியாக மாற்றியிருப்பான்.

ஆனால் பாவம்...அவன் தான் சின்ன குழந்தையாயிற்றே... அதான் விவரம் புரியலை. 'வூட்டுல சொல்லிட்டு வந்துட்டியா' என்ற வார்த்தைகள் சாதாரணமானதுதான் என்று நினைத்துவிட்டான்.

அதை ஆட்டோக் காரர்கள் உச்சரித்து கொடூரமாக முறைக்கும் அழகில் ஏதோ அவமானமான வார்த்தையாகிப் போனதாக உணருவதற்கு சில காலம் பிடித்தது.

வூட்டுல சொல்லிட்டு வந்துட்டியா என்று அவ்வப்போது யாரையாவது திட்டாத ஆட்டோ டிரைவர்கள் லைசன்ஸ் இல்லாத போலிகளாகத்தான் இருப்பார்கள் என்று தீர்மானம் செய்ய வாஞ்சி நாதனுக்கு இரண்டு ஆண்டுகள் தேவைப்பட்டன.

வாழ்க்கைன்னா ஏதாவது லட்சியம் வேண்டும் என்று வகுப்பு ஆசிரியர் சொன்னதை மறுக்காமல் ஏற்றுக் கொண்ட அவன், தானும் ஆட்டோ அல்லது கார் ஓட்டு நராகி யாரையாவது 'வூட்டுல சொல்லிட்டு வந்துட்டியா?' என்று திட்டிவிட்டுதான் வேறு வேலைக்கே போக வேண்டும் என்று மனதுக்குள் உறுதி மொழி எடுத்துக் கொண்டான்.

மற்றவர்களுக்குத் தெரிந்தால் ச்சீ...இதெல்லாம் ஒரு லட்சியமா என்று நினைக்கலாம். ஆனால் இதை நிறைவேற்றுவது இவ்வளவு கடினமாக இருக்கும் என்று அவன் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை.

முதல் பிரச்சனை, வாஞ்சிநாதனுக்கு சைக்கிளே ஓட்டத் தெரியாது. அதை தட்டுத்தடுமாறி கற்றுக் கொண்ட போது அவனுக்கு வயது பதினெட்டு.

ஆனாலும் அவனுடைய எட்டு ஆண்டு கனவு கொஞ்சமும் கலையவில்லை. ஒரு நாள் வாஞ்சிநாதன், மோட்டார் சைக்கிள் ஓட்டக் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆசையை வெளியிட்டான்.

அவர், அந்தக் காலத்து ரேலி சைக்கிளை இன்னமும் பாதுகாத்துப் பயன்படுத்துபவர். இப்போது மோட்டார் சைக்கிளுக்கு எங்கே போவார்?

வாஞ்சி நாதனின் லட்சியத்தை அறியாத அவர், "மோட்டார் சைக்கிள் எல்லாம் வேண்டாம்...கார் ஓட்டப் பழகிட்டு அந்த வேலைக்கே போ..." என்று உறுதியாக சொல்லி விட்டார்.

கார் ஓட்டப் பழகும் முன்பு மோட்டார் சைக்கிள் ஓட்டக் கற்றுக் கொண்டே ஆக வேண்டும். அதை ஓட்டும் போதே யாராவது குறுக்கே வந்தால் அவர்களைத் திட்டிவிட்டு, கார் ஓட்டும் எண்ணத்தையே விட்டுவிடலாம் என்றுதான் வாஞ்சி நாதன் நினைத்தான்.

விதிதான் வலியது ஆயிற்றே... அவன் கார் ஓட்டாமல் இருக்க முடியுமா என்ன?

அவன் உறவினர்கள், நண்பர்கள் பலரும் இவன் மோட்டார்சைக்கிள் ஓட்டுவதை விரும்பவில்லை.

'உன்னை வீரனாக்கிப் பார்க்கும் துணிவு இல்லடா...' என்று சொன்னவர்கள் யாரிடமுமே இரு சக்கர மோட்டார் வாகனமே இல்லை என்பது வேறு விஷயம்.

ஆனால் அவன் மனம் தளராமல் முயன்றான்.

அப்போது ஆபத்பாந்தவனாக வாஞ்சி நாதனுக்கு மோட்டார் (சைக்கிள்) கொடுத்தது அவன் தாய்மாமாதான்.

"என் உயிரையே உன் கிட்ட நம்பி ஒப்படைக்கிறேன்." என்று அவர் ஒரு கியர் வண்டியைத் தந்தார். அதை வாங்கி பத்து ஆண்டுகள்தான் ஆகிறது என்று சொன்ன பொய்யை வாஞ்சிநாதனும் நம்பி விட்டான்.

வண்டியின் பெயர் லேபிளை எடுத்துவிட்டுப் பார்த்தால், சுதந்திரம் பெறுவதற்கு முன்னால் இந்தியாவில் முதன்முதலில் உருவான வண்டியை வாங்கி வைத்துவிட்டு பத்து ஆண்டுகள்தான் ஆகிறது என்று தவறான தகவல் தந்ததற்காக வழக்குத் தொடர்ந்து விடுவார்கள். (வண்டியை சினிமாவில் நடிக்க வைப்பதற்காக  அதன் வயதை குறைத்து சொல்லியிருப்பாரோ?)

ஒரு சுபயோக சுப தினத்தில் திதி, நட்சத்திரம், யோகம், நேரம் பார்த்து பக்கவாட்டு ஸ்டாண்டை எடுத்து விட்டு வண்டியில் ஏறி அமர்ந்தான். இவனுடைய வீர சாகசத்தைக் காண தெருவே கூடி நின்றது.

ஏதாவது தடுமாற்றத்தில் கீழே விழுந்தால் பிறகு எப்படி தலை நிமிர்ந்து இங்கே நடப்பது? என்ற கவலை அவனுக்கு.

அப்போது வாஞ்சிநாதனின் மாமன் மகள், வீட்டுக் கண் (எவ்வளவு நாளைக்குதான் கடைக்கண் பார்வை என்று எழுதுவது?) பார்வையை வீச, துணிச்சலுடன் சாவியைத் திருகினான்.

எந்த முன்விளைவும் பின்விளைவும் இல்லை. அதாவது, நியூட்ரல் இண்டிகேட்டர் எரியவில்லை.

"மாமா...வண்டி நியூட்ரலான்னு எப்படி தெரியும்?" என்று அவன் கேட்டு முடிக்கும் முன்பே அவன் மாமா, வண்டியின் பின்புறம் கை வைத்து தள்ளினார். சட்டென்று மூன்றடி தூரம் வண்டி முன்னால் செல்ல, வாஞ்சிநாதன் சமாளித்து நின்றான்.

"மாப்ள...இப்படித்தான் தெரிஞ்சுக்கணும்." என்றார்.

சுற்றி நின்றவர்கள் சிரித்ததால் அவனும் சிரித்தான். (ஊரோடு ஒத்து வாழ்கிறானாம்.)

பிறகு கிக்கரை உதைத்தால் ஸ்டார்ட் ஆகும் வழி தெரியவில்லை.அருகில் வந்த அவன் மாமா, கிக்கரை லேசாக ம்ற்றொரு கோணத்தில் வைத்து,

"இப்படி செய்து உதைத்தால்தான் ஸ்டார்ட் ஆகும்." என்றார்.

அதன்பிறகு ஒரே ஒரு முறை உதைத்து வண்டியை ஸ்டார்ட் செய்தான். ஆனால் கிளட்சைப் பிடித்து கியர் போட்டு மீண்டும் கிளட்சை ரிலீஸ் செய்து வண்டியை நகர்த்துவதற்குள் இருபத்தாறுமுறை ஸ்டார்ட் செய்ய வேண்டியதாயிற்று.

"கொஞ்சம் அதிகமா அழுத்தினால்தான் பிரேக் பிடிக்கும்." என்று வாஞ்சிநாதனின்  பின்னால் தூரத்தில் மாமாவின் குரல் கேட்டது.

அப்படி எல்லாம் எதுவுமில்லை. வாஞ்சிநாதன் தன்னுடைய முழு பலத்தையும் ஒரே காலில் கொண்டுவந்து பிரேக் ஷூ மீதே ஏறி நின்ற பிறகுதான் மோட்டார் சைக்கிள் நின்றது.

முதல் சுற்றை அவன் வெற்றிகரமாக முடித்ததில் மாமா மிகவும் சந்தோஷப்பட்டார். ஆனால் அவன் லட்சியம்தான் நிறைவேறவில்லை.

ஆமாம். அவன் வண்டி ஓட்டும்போது தெருவில் உள்ள எல்லாருமே ஒதுங்கி நின்றுதான் வேடிக்கை பார்த்தார்கள். (வாஞ்சிநாதன் மீது அவ்வளவு நம்பிக்கை.)

ஒருவருமே குறுக்கே வராத போது அவன் எப்படி 'வூட்டுல சொல்லிட்டு வந்துட்டியா' என்று திட்ட முடியும்?

வாஞ்சிநாதன் அவன் மாமாவின் உயிரை (மோட்டார்சைக்கிள்தான்) வைத்தே வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் ஓட்டு நர் உரிமம் பெற்று விட்டான்.

மோசமான வண்டியா இருந்தாலும் நம் திறமையை வெச்சு டெஸ்ட்டுல பாஸ் பண்ணிட்டேனே என்று அவன் அருகில் இருந்தவனிடம் வாஞ்சிநாதன் சொன்னதுதான் தாமதம், அவனுக்கு நெற்றிக்கண் மட்டும் இருந்திருந்தால் இவன் நிச்சயமாக சாம்பலாகி இருப்பான்.

"யோவ்...டிரைவிங் ஸ்கூல்ல வாங்குன காசுக்கு எல்லாருக்கும் உரிமம் கொடுத்தா சந்தேகம் வந்துடுமாம். அதான் உன்னைவிட மோசமா வண்டி ஓட்டுன என்னைய பெயிலாக்கிட்டாங்க. என்றதும்தான் வாஞ்சிநாதனின் திறமை (?!) அவனுக்கே புரிந்தது.

அதன் பிறகு வாஞ்சிநாதன் கார் ஓட்டப் பழகி விட்டு, மூன்றாண்டுகளாக வாடகைக்கார் ஓட்டி வருகிறான். ஆனாலும் அவன் லட்சியம் நிறைவேறுகிற வழியைக் காணோம்.

பின்பு ஒரு நாள் திருவாரூர் கடைத்தெருவில் வாஞ்சிநாதன் மிதமான வேகத்தில் சென்று கொண்டிருந்தான். அப்போது தலைமை அஞ்சல் நிலைய வளாகத்தின் உள்ளே இருந்து திடீரென ஒரு புல்லட் சீறிப் பாய்ந்து வந்தது.

இவன் சட்டென்று காரை நிறுத்தி எட்டிப் பார்த்தான்.

"............................., வூட்டுல சொல்லிட்டு வந்துட்டியா?" என்று வாஞ்சிநாதன் தான் திட்டு வாங்கினான். ஆம்!...கார் ஓட்ட ஆரம்பித்த பிறகு இவன் வாங்கும் முதல் திட்டு.

புல்லட் ஓட்டி வந்தது ஆளுங்கட்சியைச் சேர்ந்த ஆசாமி என்பதால் வாஞ்சிநாதன் நல்ல பிள்ளையாக வாயை மூடிக் கொண்டான்.

நடந்து போனாலும்  கார்ல போனாலும் இப்படி திட்டு வாங்குறது மட்டும் நிற்காது போலிருக்கே என்று வேதனையுடன் வண்டியை ஓட்டினான்.

அப்புறம் ஒரு நாள் பள்ளி மாணவன் ஒருவன், சைக்கிளில் வந்து வாஞ்சிநாதனின் கார் முன்னால் தடுமாறி விழுந்தான். சின்னப் பையனை சுலபமாக திட்டி விடலாம். நம்ம லட்சியமும் நிறைவேறிடும். என்று அவன் நினைத்தபோதே விதி வேறு விதமாக விளையாடியது.

"யோவ்...அவன் மேட்டுல ஏறி வர்றான். நீ சமதள ரோட்டுலதான போற?...மெதுவா கவனிச்சு வந்தா என்ன?" என்று ஒருவர் திட்ட ஆரம்பிக்க, வாஞ்சிநாதன் தலை தப்பிச்சுதுடா சாமி... என்று நினைத்தவாறு வீடு வந்து சேர்ந்தான்.

அடுத்த முறை அழகான கல்லூரி மாணவி, காருக்கு முன்னால் தடுமாறி விழ, இன்று திட்டுவதற்கு நல்ல சந்தர்ப்பம் என்று நினைத்து கீழே இறங்கினான்.

"அடப்பாவி...சின்னக் குழந்தையை(?!) கார் ஏத்தி கொல்லத் துணிஞ்சுட்டியே...நீ நல்லா இருப்பியா..."என்று ஒரு குரல்...வேறு வழியின்றி இந்த முறையும் வாஞ்சிநாதன் புறமுதுகு காட்ட வேண்டியதாயிற்று.

அடுத்து ஒரு நாள் கும்பகோணத்திற்கு சவாரி சென்று விட்டு தனியாக காரில் திருவாரூருக்குத் திரும்பிக் கொண்டிருதான். எட்டு ஆண்டுகளாக சாலையை அகலப்படுத்தும் பணி போர்க்கால (?!) வேகத்தில் நடைபெற்று வந்ததால்  வாஞ்சிநாதன் காரை மிதிவண்டியின் வேகத்தில்தான் இயக்கிக் கொண்டிருந்தான்.

குறிப்பிட்ட தூரத்திற்கு சாலையின் இருபுறமும் பள்ளத்தில் மழை நீர் தேங்கி நின்றதால் ஆழம் தெரியாமல் காரை விடுவதற்கு அவன் விரும்பவில்லை.

அப்போது சற்றுத் தொலைவில் ஓர் அரசுப்பேருந்து.

ஒரு வாகனம் மட்டுமே செல்லும் அளவுக்குதான் தார்ச்சாலை. அதனால் வாஞ்சிநாதன் தன் காரின் முகப்பு விளக்கை ஒளிரச் செய்து கொண்டே வந்தான். ஆனால் அரசுப் பேருந்து பள்ளம் இல்லாத சாலை ஓரத்தில் ஒதுங்கி நிற்காமல் தொடர்ந்து வந்தது.

வாஞ்சிநாதன் அதிர்ச்சி அடைந்து சட்டென்று காரை நிறுத்தினான். உடனடியாக கியர் மாற்றி பின்னால் செல்ல முயற்சித்தபோது நேருக்கு நேராக மோதுவது போல் வந்த அரசுப்பேருந்து அப்படியே நின்றது.

இவன் தன் லட்சியத்தை நிறைவேற்றும் எண்ணத்தில் தலையை வெளியே நீட்டி,

"வூட்டுல..." என்று ஆரம்பித்த நொடி, அந்த அரசுப்பேருந்து ஓட்டுநரும் எட்டிப் பார்த்தார்.

அந்த ஓட்டுநருக்கும் வாஞ்சிநாதனின் வயதுதான் இருக்கும்,

"அண்ணே...கோவிச்சுக்காதீங்க...நீங்க லைட்டைப் போட்டதுமே நான் பிரேக் ஷூ மேல ஏறி நின்னுட்டேன்... ஆனா அது இங்க வந்துதான் நிக்கிது..." என்று பரிதாபமாக சொல்லவும் வாஞ்சி நாதனுக்கு வழக்கம் போல் ஏமாற்றம்.

முயற்சி உடையோர் இகழ்ச்சி அடையார் என்ற பழமொழியை நினைத்து மனதை தேற்றிக் கொண்டான். வேறு வழி?

ஸ்...அப்பாடா...இப்பவே கண்ணைக் கட்டுதே...இவ்வளவு நேரம் வாஞ்சிநாதனோட பயணம் செஞ்சதுல ரொம்ப டயர்டா இருக்கு... கொஞ்ச நாள் ஓய்வு எடுத்துட்டு அப்புறமா அவன் லட்சியம் என்ன ஆச்சுன்னு பார்ப்போம்.

ஞாயிறு, 6 டிசம்பர், 2009

ரூ.2500.00 பெற்ற சிறுகதை - நாளைய விழுதுகள்.


குழந்தைத் தொழிலாளர்கள் உருவாவதற்கு பெற்றோர்தான் முதல் காரணம் என்று சொல்பவர்களில் நானும் ஒருவன். இல்லை...சமூகம்தான் காரணம் என்று மாறுபட்ட கருத்தை நீங்கள் கொண்டிருக்கலாம். அடுத்த முறை இதை நீங்கள் சொல்வதற்கு முன்பு ஒரு விஷயத்தை யோசித்துப் பாருங்கள். உண்மை புரியும்.

'உன்மீது உனக்கே நம்பிக்கை இல்லை என்றால் மற்றவர்களுக்கு எப்படி இருக்கும்?'
- இது ஒரு புகழ் பெற்ற பொன்மொழி.

நானும் அதையேதான் கேட்கிறேன்...பெற்றோர்களுக்கே பிள்ளைகள் மீது அக்கறை இல்லை என்றால் மற்றவர்களுக்கு என்ன வந்தது?...பெரியவர்களின் பொறுப்பில்லாத்தனமே குழந்தைத் தொழிலாளர் உருவாக காரணம்.

வருமானம் குறைவு என்றாலும் மது, புகை உள்ளிட்ட சில தீய பழக்கங்களால்தான் பலரும் தங்கள் குடும்பத்தின் அடிப்படை தேவைகளைக் கூட நிறைவேற்றத் தவறுகிறார்கள். குழந்தைத் தொழிலாளர் உருவாவதற்கு முதல் விதை இந்த சூழ்நிலையில்தான் விழுகிறது.

இந்த தீய பழக்கங்கள் சில வியாதிகளுடன், வறுமை - சோம்பேறித்தனம் ஆகியவற்றையும் இலவச இணைப்பாகத் தந்துவிடுகிறது.

மாநில குழந்தைத் தொழிலாளர் மறுவாழ்வு மையமும் ராணி வார இதழும் இணைந்து நடத்திய சிறுகதைப் போட்டியில் 2006 ம் ஆண்டு மே மாதம் "குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பில் பெற்றோரின் பங்கு" என்ற தலைப்பு கொடுத்திருந்தார்கள்.

அதில் நான் எழுதி முதல் பரிசு ரூ.2500.00 பெற்ற சிறுகதைதான் நாளைய விழுதுகள்.

கதையை முழுவதுமாக படிக்க...

சனி, 5 டிசம்பர், 2009

முகங்கள் - எழுதத் தொடங்கிய காலத்தில் பரிசு பெற்றுத் தந்த சிறுகதை.



முதன் முதலாக எனக்கு பரிசு பெற்றுத்தந்த சிறுகதை 'முகங்கள்'.தினமலர் வாரமலர்  நடத்திய டி.வி.ஆர் நினைவு சிறுகதைப் போட்டியில் ஆறுதல் பரிசு பெற்றது. ஆண்டு 2003. 


 வரதட்சணை காரணமாக மருமகள்கள் பற்றவைக்கும் ஸ்டவ் மட்டும் வெடிக்கும் அவலம் இன்னும் நம் நாட்டில் உண்டு. பல ஏழைப்பெண்கள் முதிர்கன்னிகளாகவே இருக்கும் அவலத்துக்கும் வரதட்சணை முக்கிய காரணம்.
 
ஆனால் வரதட்சணை வேண்டாம் என்று ஒரு ஆண் முன்வந்தால் அவனை சந்தேகத்துடன்தான் பார்க்கிறார்கள். திருமணம் செய்துகொள்ள வேண்டிய பெண்களே இப்படிப்பட்ட ஆண்களை வேண்டாம் என்று சொல்கிறார்கள்.


அவர்கள் அச்சத்துக்கும் காரணம் இருக்கிறது. நினைவில் வைத்துக் கொள்ள முடியாத எண்ணிக்கையில் திருமணம் செய்து கொள்ளும் நபர்கள் கூட வரதட்சணை வேண்டாம் என்று வலை வீசித்தான் மொத்தமாக சுருட்டிக்கொண்டு சென்றுவிடுகிறார்கள்.

சாலை விபத்து அதிகம் என்பதற்காக பயணம் செய்யாமல் இருக்கிறோமா? நல்ல குணத்துடன் ஒருவர் வரதட்சணை வாங்காமல் திருமணம் செய்ய வரும்போது சரியான முறையில் அவர் பின்னணியை தெளிவாக விசாரித்து திருமணத்துக்கு சம்மதிக்க பெண்கள் முன் வரவேண்டும்.

அவர்கள் மீது சந்தேகம் இருக்கும்வரை வரதட்சணை பெருக்கத்துக்கு ஆண்களை மட்டும் குற்றம் சொல்வது தவறு என்பதுதான் என் கருத்து.

வரதட்சணை வேண்டாம் என்று இருக்கும் ஒருவன் சந்திக்கும் பிரச்சனை, அவனுக்கு சாதாரணமாக வரும் நோய் ஒன்று எப்படி திருமணத்தையே நிறுத்துகிறது, பெண்களை மட்டும் குற்றம் சொல்லிக்கொண்டே இருக்காமல் அவர்களில் சிலரும் நமக்கு வியப்பூட்டும்படி  இருப்பதும் உண்டு - இந்த விஷயங்கள் அனைத்தையும் சேர்த்து எழுதிய சிறுகதை - 'முகங்கள்'

ஞாயிறு, 29 நவம்பர், 2009

மனத்திருப்தி


"நீ எதுவும் வேலைக்கெல்லாம் போக வேண்டாம்"என்று முதலிரவு அன்றே கணவன் சொல்வான் என்று சசிகலா கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை.

திருமணத்துக்கு முன்பே அவன் சசிகலாவிடம்,"ஓவியம்,படிப்பு அப்படின்னு உனக்கு இருக்கும் தனித்தன்மைகள் நம்ம வீட்டோடயே முடங்கிட நான் காரணமாக மாட்டேன்."என்று உறுதியளித்திருந்தான்.

இப்போது என்னவென்றால் முதலிரவு அறைக்குள் வந்ததும் வராததுமாக நீ எந்த வேலைக்கும் போக வேண்டாம் என்று சொல்கிறானே...கடைசியா இவனும் சராசரி மனிதன்தானா  என மனதுக்குள்ளேயே புழுங்கினாள்.

ஆனால் அவன் அடுத்து சொன்ன வார்த்தைகள் சசிகலாவுக்கு இன்ப அதிர்ச்சியை அளித்தன.

"நீ ஒரு இடத்துக்கு வேலைக்குப் போனா சம்பளம் கிடைக்கும். ஆனா உன்னோட மற்ற திறமைகள் வெளிவராமலேயே போற அபாயம் இருக்கு. அதனால நீ நம்ம ஊர்ல இருக்குற ஆதரவற்ற குழந்தைகள் இல்லத்துக்கு தினமும் குறிப்பிட்ட நேரம் போனா உன் திறமைகளை நாலு பேருக்கு கற்றுக் கொடுத்த மனத் திருப்தியும் இருக்கும். சந்தோஷமும் கிடைக்கும்."என்று அவன் சொன்னதும் சட்டென்று கணவனைக் கட்டிக் கொண்டாள் சசிகலா.

கதாசிரியர் - (வந்த படத்துக்கா? வராத படத்துக்கா?)


"சார்...டைட்டில்ல கதைன்னு உங்க பேரைப் பார்த்ததும் முகில் எதுவும் பிரச்சனை பண்ணிட மாட்டானே..."

அவன் சொன்னா யாருய்யா நம்புவாங்க?...நாம ரெண்டு பேரும் இருபது வருஷமா சினிமாத்துறையிலதான் இருக்கோம். இதுவரைக்கும் ஒரு படத்துலயாவது நான் சொந்தமா எழுதின கதை இருந்ததா...இல்லைன்னு உனக்கும் எனக்கும்தான் தெரியும்.

ஆனா இதை நானே சொன்னாலும் யாரும் நம்ப மாட்டாங்க. அதான்யா நேரம்னுங்குறது.  இதுக்காகத்தான் அவனை உதவி இயக்குனரா வெச்சுகிட்டே சினிமாவுக்கு இப்படி இருக்கணும்...அப்படி மாத்தணும்னு சொல்லியே கதையை வேற வடிவத்துக்கு மாத்திட்டேன். விடுய்யா பார்த்துக்கலாம்."என்ற அந்த பிரபல இயக்குனர் மேலும் ஒரு கோப்பை உற்சாக பானத்தை உள்ளே ஊற்றினார்.

அப்போது கதையைத் தந்த அப்பாவி உதவி இயக்குனரான இளைஞன் வந்தான். அவன் கையில் இரண்டு கடிதங்கள்.

"வாடா...அடுத்த வாரம் நம்ம படம் வெளியாகப் போகுது. நீயும் இப்ப ஒரு கிளாஸ் ஊத்திக் கொண்டாடு..."என்று அழைத்தார் பிரபல இயக்குனர்.

"அதெல்லாம் வேண்டாம் சார். என்னுடைய கதையை நீங்க திரைக்கதையா மாற்றினதும் அது நான் எழுதி தமிழா மாத இதழ்லல வெளிவந்த நாவலாவே மாறிடுச்சு. அதான் அந்த பத்திரிகை நிர்வாகத்துகிட்ட இந்தக் கதையைப் படமாக்க அனுமதிக்கடிதம் வாங்கிட்டு வந்துட்டேன்.

இதுல என்னோட அனுமதிக்கடிதத்தையும் சேர்த்து வெச்சிருக்கேன்.

டைட்டில்ல கதைன்னு என் பேரைப் போடும்போது தமிழா மாத இதழ்லல பிரசுரமானதுன்னும் ஒரு வரி சேர்த்துடுங்க..."என்று அந்த உதவி இயக்குனர் சொன்னதும் பிரபல இயக்குனர் மயங்கிச்    சரிந்தார்.

சனி, 28 நவம்பர், 2009

தட்சணை


"ஏம்மா...நான் அவ்வளவு தூரம் சொல்லியும் என் பேச்சைக் கேட்காம உன்னை யார் வரதட்சணை கேட்கச் சொன்னது? " என்ற சந்திரனின் குரலிலேயே கோபம் தெரிந்தது.

"அடப்பாவி...இதுக்காகவா பொண்ணு வீட்டுல இருந்து இங்க வந்து சேர்ற வரைக்கும் மூஞ்சியை உம்முன்னு வெச்சுகிட்டு இருந்த?...மண்டு...பொண்ணு வீட்டுக்காரங்ககிட்ட இத்தனை பவுன் நகை போடணும்...அவ்வளவு சீர்வரிசை சாமான் வேணுன்னு கண்டிச்சுக் கேட்டாதாண்டா அதுக்குப் பேர் வரதட்சணை. உங்க சக்திக்கு என்ன செய்ய முடியுமோ அதை உங்க பொண்ணுக்கு செய்யுங்கன்னு நான் சொன்னதுக்கு காரணம் என்னன்னு தெரியுமா?

புகுந்த வீட்டுக்கு பொண்ணு வர்றப்ப அவ வீட்டுல இருந்து எதுவுமே கொண்டு வரலைன்னு வெச்சுக்கோயேன்...நாம இந்த வீட்டுக்கு வேண்டாத விருந்தாளியோ அப்படின்னு ஒரு தாழ்வு மனப்பான்மை வந்துட வாய்ப்பு இருக்கு.அவ கல்யாணமாகி ஓரளவு அத்தியாவசியமான பொருட்களோட வந்தா இது நம்ம வீடு...இது நாம கொண்டு வந்த பொருள்...அப்படின்னு ஒரு அக்கறை வரும். மனசுல எந்த வித விகல்பமும் இல்லாம புகுந்த வீட்டோட ஒட்டிக்குவா.

நான் பொண்ணு வீட்டுக்காரங்ககிட்ட ஏதாச்சும் செய்யுங்கன்னு சொன்னது அவங்களை கஷ்டப்படுத்துறதுக்காக இல்லை. அந்தப் பொண்ணு மனசு சங்கடப்படாம இங்க வந்து வாழ்றதுக்காகன்னு இப்ப புரியுதா?"என்று சந்திரனின் அம்மா சொன்னதும் அவன் மனதில் இருந்த மிகப் பெரிய பாரம் நீங்கி லேசானது.

அனுபவம்


"கயல்விழி...பல நேரங்கள்ல நீ செய்ய்யுறதெல்லாம் எதுக்குன்னே புரிய மாட்டெங்குது..."எனறார் பரசுராமன்.

"கல்யாணமாகி எட்டு வருஷம் கழிச்சு என்னங்க குழப்பம்?"

"நம்ம வீட்டுவேலை செய்யுற மாலினியோட பொண்ணு சாந்தினியோட படிப்புக்குரிய செலவை நீதான் பார்த்துக்குற... அதுக்காக ஞாயிற்றுக்கிழமை சாந்தினியும் அவ அம்மாவோட நம்ம வீட்டுக்கு வரணும்னு சொல்றதுதான் ஏன்னு எனக்குப் புரியலை.

அவ வீட்டுலேயே இருந்தா எதையாச்சும் படிப்பா...இல்லன்னா விளையாடுவா...அது ரெண்டையும் செய்ய விடாம இங்க வரவழைச்சுடுற,,,

அப்படி வர்றவ அவ அம்மாவுக்கு உதவியா இருந்தாலாவது ரெண்டு பேரும் சீக்கிரமா வீடு போய்ச் சேருவாங்க.

சாந்தினி எந்த வேலையும் செய்யாம அவ அம்மா நம்ம வீட்டு வேலை செய்யுறதை உட்கார்ந்து வேடிக்கை பார்க்குறதால யாருக்கு என்ன லாபம்? "என்றார்.

"குழந்தைத் தொழிலளிங்க நம்ம வீட்டால உருவாகாம தடுக்குறதுக்காகத்தான் சாந்தினியை எந்த வேலையும் செய்யக்கூடாதுன்னு சொன்னேன். மாலினியோட புருஷன் குடிச்சுட்டு பொறுப்பில்லாம இருக்குறான். அதனால மாலினி எவ்வளவு கஷ்டப்படுறான்னு சாந்தினி உணரணும்.

அதுக்காகத்தான் ஞாயிற்றுக்கிழமையானா சாந்தினி அவ அம்மாவோட வரணும்னு சொன்னேன்." என்று கயல்விழி  கூறியதும்  அவளுடைய சமூக அக்கறையை நினைத்து பூரிப்படைந்தார் பரசுராமன்.

அங்கீகாரம்


ஆடியோ ரிலீஸ் ஆனதும் அந்தப் பாட்டு இவ்வளவு பெரிய ஹிட் ஆகும் என்று திரைஉலகம் மட்டுமல்ல...படத்தை உருவாக்கியவர்களே எதிர்பார்க்கவில்லை. பாடல் ஹிட் ஆனதையடுத்து ஆங்கில பாப் பாடகரே வலிய வந்து மிகக்குறைவான சம்பளத்தில் ஆடித் தர சம்மதித்தார்.

உடனடியாக தயாரிப்பாளரும் வெளியில் கடன் வாங்கி ஏற்கனவே படம் பிடித்த பாடல் காட்சியை மீண்டும் ஆங்கில பாப் பாடகரை வைத்து படப்பிடிப்பை நடத்த ஏற்பாடு செய்தார்.
படத்தொகுப்பு வேலைகள் நடந்துகொண்டிருந்தன. "தமிழ் நடன நடிகரை வைத்து ஏற்கனவே எடுத்த பாடல் காட்சியை சேர்க்க வேண்டாம்"என்று தயாரிப்பாளர் சொன்னார்.

'அந்த பாடலுக்காக பதினைந்து நாள் உழைத்த நடனக் கலைஞனுக்கு  நாமதான் பணம் கொடுத்தாச்சே...பிறகு பாடலை சேர்ப்பது பற்றி ஏன் கவலைப் படணும்?...யாரும் எதுவும் சேர்க்க மாட்டாங்களே...'என்பது தயாரிப்பாளரின் வாதமாக இருந்தது.

"சம்பளம் கொடுத்ததோட நம்ம பொறுப்பு முடிஞ்சிட்டதா யார் சொன்னா? ஒரு கலைஞனுக்கு ஊதியத்தைவிட பெரிசா நினைக்கிறது ரசிகர்களோட கை தட்டலைத்தான். அது அவருக்கு கிடைக்கனும்னா பாடலை படத்துல சேர்த்து மக்களோட பார்வைக்கு கொண்டு போகணும்.

இது தான் நம்ம கடமை. அந்தப் பாட்டை எங்க சேர்க்குறதுன்னு குழப்பமே வேண்டாம்...கிளைமாக்ஸ் முடிந்ததும் இந்தப் பாட்டோட எண்ட் டைட்டிலை ஓட விட்டுடலாம்." என்று இயக்குனர் சொன்னதில் இருந்த மனிதநேயம் புரிந்ததால் தயாரிப்பாளர் மகிழ்வுடன் சம்மத்தார்.

வெள்ளி, 27 நவம்பர், 2009

தண்டனை


"உங்க பையன் வகுப்பறையில வேணுன்னே நாற்காலியை தள்ளிவிட்டு உடைச்சுட்டானாம். தலைமையாசிரியர் உங்களை பள்ளிக்கூடத்துக்கு வர சொன்னார். "என்று அவர் சொன்னதும் சேகர்பாபுவுக்கு ஆத்திரமாக வந்தது.


விக்னேஷ் பற்றி அந்த தெருவுக்கே தெரிந்ததுதான். கிரிக்கெட் விளையாடுகிறேன் என்று ஏதாவது வாகனம் அல்லது வீட்டின் கண்ணாடியை உடைத்து விடுவான். இதற்காக மாதம் ஐந்து முறையாவது நஷ்ட ஈடு வழங்குவது சேகர்பாபுவுக்கு ரெகுலர் செலவாகவே இருக்கும்.


"தெருக்காரங்களுக்கு குடுத்ததை இப்ப பள்ளக்கூடத்துக்கு தரும்படியா பண்ணிட்டான்...எல்லாம் என் தலை எழுத்து..."என்று புலம்பிக் கொண்டே தலைமையாசிரியரைப் பார்க்கச் சென்றார்.


"சார்...என் பையனைப் பற்றி எனக்கு ரொம்ப நல்லாவே தெரியும். கட்டி வெச்சு நல்லா தோலை உரிங்க. பண நஷ்டத்தை நான் தந்துடுறேன்."என்றவாறு பர்சை வெளியில் எடுத்தார்.


உடனே தலைமையாசிரியர், "உங்க கிட்ட யார் சார் பணம் கேட்டா?... பள்ளிக்கூடத்துல சரியில்லாத பர்னிச்சர்களை எல்லாம் சரிசெய்ய வர்ற சனிக் கிழமை கார்பெண்டர் வர்றாரு. உங்க பையன் அவருக்கு உதவியா இருந்து  வேலை செய்யணும். இந்த தண்டனையில உங்களுக்கு ஒண்ணும் ஆட்சேபணை இல்லையே? "என்றார்.


"தண்டனைன்னா ஒருத்தனை மேலும் முரடனாக்காம திருத்தணும்னு நினைக்குற உங்க நோக்கம் சிறப்பானது சார்..."என்று தலைமையாசிரியரைப் பாராட்டி விட்டு மன நிறைவுடன் கிளம்பினார் சேகர்பாபு.

கொடைவள்ளல்


அழைப்பு மணியோசை கேட்டதுமே என் மனதில் குழப்பம்.

"இங்க குடி வந்து ரெண்டு நாள்தானே ஆகுது. வேண்டியவங்களுக்கு எல்லாம் இனிமேதான் முகவரியை தெரியப்படுத்தணும். அதுக்குள்ள யாரா இருக்கும்"என்று நினைத்துக் கொண்டே கதவைத்திறந்தேன்.

ஆறு நடுத்தர வயது ஆண்கள் காவியுடை, நெற்றியில் விபூதி குங்குமம், நோட்டீஸ், மஞ்சள் பை என்று நின்றதுமே, "இந்த மாதிரி ஆளுங்களோட தொல்லை தாங்காதே..."என்று மனதுக்குள்ளேயே முணுமுணுத்தபடி "என்ன விஷயம்?" என்றேன்.

ஒருவர் தன் பற்களை எல்லாம் என்னிடம் காட்டியே தீருவது என்ற முடிவுடன் ஒரு சிரிப்பையும் உதிர்த்துவிட்டு, "சார்...பத்து நாள்ல நம்ம தெரு அம்மன் கோயில் திருவிழா..."என்றவாறு நோட்டீசை என் கையில் திணித்தார். மற்றொருவர் ரசீதுப் புத்தகத்தில் எழுதத் தயாரானார்.

'என் மனைவிக்கு பக்தி அதிகம்னு இவங்களுக்கும் தெரிஞ்சிடுச்சா...பர்சை விட்டு பறந்துடுச்சுடா பெரிய தொகை' என்று நான் மனதுக்குள் அதிர்ந்த  நேரத்தில்தான் அந்த திருப்பம்.

"என்னங்க...நான் பேசிக்குறேன்..." என்று அருகே வந்த என் மனைவி,

"அய்யா...இந்த மாதிரி கோயிலுக்கெல்லாம் பணம் கொடுக்குறது என் வீட்டுக் காரருக்கு சுத்தமா பிடிக்காது. இருந்தாலும் வீடு தேடி வந்த உங்களை வெறும் கையோட அனுப்ப எனக்கு மனசில்லை. இந்தாங்க...இருபது ரூபாய்..."என்று அவர்களிடம் கொடுத்தாள்.

வந்தவர்கள் எதுவும் பேசாமல் பணத்தைப் பெற்றுக்கொண்டு ரசீது தந்துவிட்டுச் சென்றார்கள்.

'புது வீட்டுக்கு வந்ததும் என் மனைவி இப்படி மாறிட்டாளே' என்ற சந்தோஷம் எனக்கு. அவளிடமே என் சந்தேகத்தைக் கேட்டுவிட்டேன்.

"நீங்க ஏதேதோ கற்பனை பண்ணீக்காதீங்க. நான் அவங்களை இருபது ரூபாயோட அனுப்பக் காரணமே வேற. நேற்றே அந்தக் கோயிலைப் பற்றி விசாரிச்சுட்டேன். இங்க ரெகுலரா பூஜை செய்ய ஆள் கிடையாதாம். வருஷம் ஒரு முறை திருவிழாவுக்கும், தீபாவளி, பொங்கல் போன்ற நாட்களுக்கு மட்டும் ஒரு குருக்களை வெச்சு பூஜை செய்யுறாங்களாம். மற்ற நாட்களில் சரியா  விளக்கு கூட எரியுறது இல்லைன்னு சொன்னாங்க.

ஆனா இந்த ஆட்கள் ஒவ்வொரு வருடமும் வசூல் பண்ணி பட்டிமன்றம், இன்னிசை நிகழ்ச்சின்னு செலவழிக்கிறாங்களாம். இந்த மாதிரி வசூல் செய்த பணத்தை வெச்சு தினமும் ஒருகால வழிபாடு நடக்க ஏற்பாடு பண்ணின பிறகு பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் நடத்தினா பரவாயில்லை.

வருஷம் பூராவும் பட்டினி போட்டுட்டு ஒரே ஒரு நாள் விருந்து வைக்கிற செயலுக்கு நாம் ஏன் அதிகமா கொடுக்கணும்னு நினைச்சுதான் இருபது ரூபாயோட அனுப்பினேன். இந்த திருவிழா முடிஞ்ச பிறகு தினமும் வழிபாடு நடக்க கண்டிப்பா நான் ஏற்பாடு செய்வேன்...

அப்ப ஒரு பெரிய தொகையை நீங்கதான் தரணும்..." என்று என் மனைவி சொல்லி முடிப்பதற்குள் 'தடால்' என்று ஒரு சத்தம்...

என்னவோ ஏதோன்னு பயந்துடாதீங்க...நான் தான்  மயக்கம் போட்டு விழுந்துட்டேன்.