Search This Blog

திங்கள், 30 ஜனவரி, 2012

நேசம்

29-12-2015 தினமணி கதிர் இதழில் பிரசுரமான சிறுகதை

ஏங்க...இந்தக் கதையைக் கேட்டீங்களா...நம்ம பொண்ணுக்கு கல்யாணம் முடிஞ்சு ஒரு வாரம்தான் ஆகுது. புதுப்பொண்டாட்டியை அழைச்சுக்கிட்டு ஊட்டி, கொடைக்கானல்னு போகாம, தன் அம்மா அப்பாவையும் அழைச்சுக்கிட்டு மதுரை, திருச்செந்தூர்னு கோயில் கோயிலா அலையப் போறாராம்  மாப்பிள்ளை. இந்தக் கொடுமையை எங்க போய் சொல்றது?''என்று கணவனிடம் புலம்பினாள் மங்கையர்க்கரசி."

"பொதுவா பொண்ணு வீட்டுல கேட்டு வாங்குற வரதட்சணை, சீர்வரிசையைப் பத்தி மாப்பிள்ள புது விளக்கம் கொடுத்ததும் எல்லாருமே அசந்துட்டீங்க. ஆனா இப்ப மாப்பிள்ள நடந்துக்குறதைப் பார்த்தா பொண்டாட்டிகிட்ட தனியா பேசுறதுக்குக் கூட அம்மாவோட அனுமதி இல்லாம செய்யமாட்டார் போலிருக்கே'' என்று தன் பங்குக்கு மங்கையர்க்கரசியைக் குழப்பினார் நமச்சிவாயம்.

ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பு சசிகலாவைப் பெண் பார்க்க வந்த நபர், "உங்களுடைய ஆர்ப்பாட்டமில்லாத அழகும் அதிர்ந்து பேசாத குணமும் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு'' என்று சம்மதத்தை தெரிவித்தான்.  ஆனால் அவனது பெற்றோர் கேட்ட வரதட்சணையை சசிகலாவின் பெற்றோரால் தர முடியாத நிலை. உங்கள் எதிர்பார்ப்புக்கு ஈடுகொடுக்க எங்களால் முடியாது. மன்னிக்கவும் என்று தகவல் அனுப்பி விட்டார்கள்.

அதைப் பார்த்து பதறிப் போய் ஓடிவந்த அந்த இளைஞன், ""என்னோட சேமிப்பு நிறையவே இருக்கு. அதைத் தர்றேன். எங்க அம்மா கேட்ட வரதட்சணையை நீங்களே செய்யுற மாதிரி சபையில பண்ணிடுங்க'' என்று சொன்னான்.

"உங்க அம்மாகிட்ட பேசி வரதட்சணையே வேண்டாம்னு சம்மதிக்க வெச்சிருந்தா நான் சந்தோஷப்பட்டிருப்பேன். எனக்காக உங்களைப் பெத்தவங்களயே உதறத் துணிஞ்சுட்டீங்க. நாளைக்கு வேற காரணத்துக்காக என்னைய ஒதுக்க மாட்டீங்கன்னு என்ன நிச்சயம்''...என்று சசிகலா கேட்ட கேள்வியில் அவன் பதில் சொல்ல இயலாமல்  வியர்த்து விறுவிறுத்து எதுவும் சொல்லாமல் போனவன்தான். பிறகு பதிலே இல்லை.

அதன்பிறகு வந்த வரன்கள் எல்லாம் ஜாதகப்பொருத்தம் இருந்தால் வரதட்சணையை இவர்களது சக்திக்கு மீறிக் கேட்டார்கள். குறைவாக கேட்டால் அந்த மாப்பிள்ளைக்கு ஏதாவது குறையிருக்குமோ என்ற குழப்பத்தில் யாரிடமாவது சசிகலாவின் அப்பா விசாரிக்கப் போக, அது வம்பில் முடிந்துவிடும்.இதையெல்லாம் விடுத்து நிஜமாகவே புரட்சிகரமான எண்ணத்துடன் வரதட்சணை வாங்காமல் திருமணம் செய்துகொள்ள வந்த வரனின் ஜாதகம் பொருத்தம் இல்லை என்று சசிகலாவின் தந்தை பின்வாங்கிவிட்டார்.

ஆனால் சுந்தரேசன் வரதட்சணையாகவும் கேட்கவில்லை. அதே சமயம் எதுவுமே வேண்டாம் என்றும் சொல்லவில்லை.""உங்க பொண்ணுக்கு நீங்க என்ன செஞ்சாலும் சரி. இது வெறும் சம்பிரதாய வார்த்தையா நான் சொல்றதா நினைக்காதீங்க. எனக்கு வரப்போற மனைவி சீர்வரிசை கொண்டு வரணும்னு அவசியமில்லை'' என்று சொன்னான் தொடர்ந்து,

" ஆனா அவங்க எதுவுமே எடுத்துட்டு வரலைன்னா யாரோ ஒருத்தர் வீட்டுல விருந்தாளியா தங்கியிருக்குற எண்ணம்தான் அவங்களுக்கும் வரும்.  தான் பிறந்த வீட்டுல இருந்து  பொருட்களை எடுத்து வந்தா இந்த வீட்டுல இருக்குறதும் இந்த மனுஷங்களும் என் சொந்தம்னு  அன்னியோன்யம் வரும். இதுவும் என் வீடு அப்படின்னு மனது இயல்பு நிலைக்கு  வந்துடும்'' என்று அவன் தெளிவாகப் பேசியதும் சசிகலாவுக்கு ரொம்பவே பிடித்து விட்டது.

அவனைப்பற்றி மற்ற குணங்கள் அதிகம் தெரியவில்லை என்றாலும் இவன் மனிதர்களை மதிக்கத் தெரிந்தவன் என்பது  புரிந்தது.சீர்வரிசையின் அவசியத்தைப் பற்றி அவன் சொன்ன கருத்தைக் கேட்டு, "இந்த கோணத்தில் நாம சிந்திக்கவே இல்லையே...' என்று  சசிகலாவின் பெற்றோர் திருமணத்திற்கு சம்மதித்து விட்டனர்.சுந்தரேசன் சசிகலா திருமணத்திற்கு முதல்நாள் வரவேற்பு நடந்து கொண்டிருந்த நேரம்.அந்தக் கூட்டத்தில் இருந்தவன்,  "பொண்ணு கருப்பா இருந்தாலும் களையா இருக்காங்கடா...'' என்று மாப்பிள்ளயின் காதில் கிசுகிசுத்தான்.

"இரட்டையர்கள் கிட்ட கூட பத்து வித்தியாசத்தை அவங்க தாயால சொல்ல முடியும். அந்த அளவுக்கு ஒவ்வொருத்தருக்கும் தனித்தனி அடையாளம் உண்டு. சசிகலாவோட நிறம் அவங்களாட தனித்தன்மை'' என்று நண்பனைக் கடிந்து கொண்டான் மாப்பிள்ள சுந்தரேசன்.

"சாரி நண்பா...ஒருத்தரோட நிறம், பிறப்பு, மாற்றுத்திறன் இதைப் பற்றி பேசுனா உனக்குப் பிடிக்காதுன்னு நல்லாவே தெரியும். அதை விடு. நிச்சயதார்த்தம் முடிஞ்சாலே பாதி கல்யாணம் முடிஞ்ச மாதிரின்னு சொல்லுவாங்க. ஆனா இப்போ வரவேற்பும்  முடிஞ்சுடுச்சு. ஆனா அவங்க, இவங்கன்னு மரியாதையா கூப்பிடுறதைப் பார்த்தா இன்னும் பொண்ணு மேல  உனக்கு  பயம் போகலை போலிருக்கே'' என்று கிண்டல் பேச்சை ஆரம்பித்தான் அந்த நண்பன்.""போடி, வாடின்னு பேசுறதெல்லாம் எங்களோட பர்சனல். அதை நாங்க ஊருக்கு வெளிச்சம் போட்டுக் காட்டணும்னு அவசியம் இல்லை'' என்று அந்தப் பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்தான் சுந்தரேசன்.இந்த உரையாடல்களில் எந்த தவறும் இல்லாததால் யாரும் ரகசியமாகப் பேசவில்லை. அதனால் மணமகள் தம்பியின் தோழன் மூலமாக இந்த உரையாடல் சசிகலாவைச் சென்றடைந்தது.

"இவ்வளவு சம்பாதிக்கிற ஆள் வரதட்சணை, சீர் எதையும் கட்டாயப்படுத்தி கேட்காம இருக்கவும் எனக்குச் சின்னதா சந்தேகம் இருந்துச்சுக்கா. இப்ப அவரோட பிரெண்ட்ஸ் கூட இயல்பா பேசினதைக் கேட்டதும் நம்பிக்கை வந்துடுச்சு. எதிர்பார்த்ததை விட பல மடங்கு சூப்பரான மாப்பிள்ள உனக்குக் கிடைச்சிருக்கார்'' என்று அவன் புகழ்ந்துவிட்டு சென்றதும் சசிகலாவின் முகத்தில் இன்னும் பூரிப்பு கூடியது.

திருமணமும் வழக்கமான கேலி, கிண்டல், சாப்பாட்டில் இது தூக்கல், அது குறைச்சல் என்ற முணுமுணுப்புடன் இனிதே நடந்து முடிந்தது.தேனிலவுக்கு எந்த ஊருக்கு அழைச்சுட்டு போகப்போறேன்னு சொல்லாம சஸ்பென்சா வெச்சிருக்காரே. நிச்சயம் நாம எதிர்பாராத இன்ப அதிர்ச்சியைத்தான் தரப்போறாரு என்று குதூகலத்தை எதிர்பார்த்திருந்தாள் சசிகலா.சுந்தரேசனும் கொடுத்தானே ஓர் அதிர்ச்சி வைத்தியம். அதை சசிகலா நிச்சயமாக எதிர்பார்க்கவில்லை. 

ஆம்...திருமணத்தின் பிறகு மறுவீடு செல்லும் சடங்குகள் எல்லாம் முடிந்தவுடன் மதுரை, திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், சுசீந்திரம், கன்னியாகுமரி என்று ஆன்மிகத் தலங்களுக்குச் சுற்றுலா ஏற்பாடு செய்துவிட்டான். அதுவும் அவனுடைய அப்பா அம்மாவுடன் சேர்த்து

."கல்யாணம் முடிஞ்ச சூட்டோட மலை  ஏரியாவுக்கு மனைவியை அழைச்சுட்டுப் போகாம அறுபதாம் கல்யாணம் செஞ்சவன் போல கோயில் குளத்தை சுத்த கிளம்பிட்டாரே என்று சசிகலாவின் பெற்றோர் கவலைப்பட ஆரம்பித்தார்கள்.சசிகலாவிடம் அவள் அம்மா போனில் பேசியபோது,

"எல்லா விஷயத்துலயும் ரொம்ப பர்ஃபெக்டா இருக்குற ஆள்தான். கொஞ்ச நாள் அவர் போக்குக்கு விட்டுடுவோம். அவர் மனசுல என்ன இருக்குன்னு தெளிவா தெரிஞ்சுகிட்டு நான் இது பற்றி பேசுறேன். அவசரப்பட்டு குட்டையைக் குழப்பிட வேண்டாம்'' என்று சொல்லிவிட்டாள் அவள்.சசிகலா, திருமணத்தன்றே மாமியாரை நினைத்து சற்று குழம்பித்தான் இருந்தாள்.

"நல்ல சந்தோஷமான மனநிலையில இருக்குறப்பவே புள்ளயையும் மருமகளயும் தனிக்குடித்தனம் விட்டுட வேண்டியதுதான். அப்புறம் பிரச்சனை பெரிசாகி அவளா கழுத்தைப்பிடிச்சு வெளியில தள்ளுறதுக்குள்ள நாமே மரியாதையைக் காப்பாத்திகிட்டா நல்லதுதானே'' என்று சுந்தரேசனின் அம்மா, யாரிடமோ பேசிக்கொண்டிருந்த செய்தியும் காற்றிலே கலந்து சசிகலாவிடம் வந்து சேர்ந்துவிட்டது.

"சசி...உன் மாமியார் மெகா சீரியல் பைத்தியம்னு நினைக்கிறேன். கொஞ்ச நாள்ல நீ உன் மாமனார் மாமியாரை வீட்டை விட்டு விரட்டிடுவேன்னு பயந்து இப்பவே உங்களைத்  தனிக் குடித்தனம் அனுப்பிடலாம்னு பேசிகிட்டு இருக்காங்க. சரியான முன்ஜாக்கிரதைன்னு தோணுது'' என்று சசிகலாவின் சித்தி தன் காதில் விழுந்த செய்திகள சுருட்டி இவளிடம் பற்ற வைத்துவிட்டாள்.

அக்கம்பக்கத்தில் மாமியார் மருமகள் சண்டை நடக்கும்போது நம்ம தம்பி பொண்டாட்டி இதே மாதிரி நம்ம அம்மா, அப்பாகிட்ட நடந்துகிட்டா எவ்வளவு வேதனையா இருக்கும். அதனால நான் கல்யாணமாகி போற இடத்துல மாமனார் மாமியாரை நல்லபடியா வெச்சுக்கணும் என்று தனக்குத்தானே உறுதிமொழி எடுத்துக்கொண்டிருந்தாள் சசிகலா.

ஆனால் திருமணம் முடியும் முன்பே வரப்போகும் மருமகள் ராட்சசியாக இருந்து விட்டால் என்ன செய்வது என்று பயப்படும் மாமியார் நம்முடன் ஒட்டுதலுடன் பழகுவாரா...நாம் நெருங்கிப்போனாலும் அவரது அடிமனதில் உள்ள அச்சத்தின் காரணமாக நான் செய்யும் ஒவ்வொரு காரியத்திலும் குற்றம் கண்டுபிடித்தால் என்ன செய்வது என்ற சந்தேகமான மனநிலையில்தான் சசிகலா இருந்தாள்.

அதனால்தான் சுந்தரேசன் தேன்நிலவுப் பயணம் போக வேண்டிய நேரத்தில் அவன் அம்மா அப்பாவை சேர்த்து அழைத்துக்கொண்டு கோவில், குளம் என்று அலைந்ததும் வெறுப்பு ஏற்படவில்லை. எந்த ஒரு விஷயத்தையும் நேர்த்தியாக செய்யும் அவன் இதைக்கூட ஏதாவது காரணமாக செய்யலாம் என்று நம்பினாள்.

அந்தரங்கமான நேரத்தில் கூட தொழில், பெற்றோர், உறவினர் என்று எதையாவது பேசி நேரத்தை வீணடிக்காமல் தன்னைப்பற்றி சொன்னதுடன் சசிகலாவுக்கு பிடித்ததைப் பற்றி கேட்டான். அதனாலேயே அவளுக்கு சுந்தரேசனை இன்னும் அதிகமாகப் பிடித்தது.இவர்கள் ஆன்மிகத் தலங்களுக்கு குடும்பத்துடன் சென்றுவிட்டு வந்த ஒரு வாரம் ஆகியிருக்கும். அன்று இரவு சாப்பாட்டு நேரம். "

"டேய் சுந்தரேசா...ரொம்ப வருஷமா நாங்க பார்க்கணும்னு ஆசைப்பட்ட இடத்துக்கெல்லாம் அழைச்சுட்டுப் போய்ட்டே... உங்களோட அந்தக் கோயில்களுக்குப் போய் தரிசனம் செய்யும்போது ரொம்பவே மனநிறைவா இருந்துச்சு.  எங்களுக்கு இந்த சந்தோஷம் போதும்...நீ முதல்ல உன் பொண்டாட்டியை அழைச்சுகிட்டு அவ ஆசைப்படுற இடத்துக்கு போயிட்டு வா''என்றாள் அவன் தாய்."

"ஒவ்வொரு காரியமும் இவங்க சொன்னாத்தான் நடக்குமா...சுத்தம்...'' என்று சசிகலாவின் மனதுக்குள் சலிப்பு தோன்றியது."

"அந்த ஏற்பாடு எல்லாம் ரெடி. அவ போகணும்னு ஆசைப்பட்டதுல ஆறு ஊர்களுக்கு போற மாதிரி நாலு நாள் டூர் பிளான் பண்ணி டிக்கட்டும் ரிசர்வ் பண்ணிட்டேன். அடுத்த வாரம் வியாழக்கிழமை கிளம்பணும்'' என்று சுந்தரேசன் சொன்னதும் சசிகலாவின் முகத்தில் புன்சிரிப்பு தோன்றியது.அன்று இரவு."

"என்ன சசி...இவன்  தேன்நிலவுக்குப்  போக வேண்டிய நேரத்துல அம்மா அப்பாவோட கோவில் குளம்னு போறானே. நம்மள இனிமே எங்க தனியா அழைச்சுட்டு போகப்போறான்னு  உன் மனசுல  ஏமாற்றம் இருந்துருக்குமே...'' என்று அவன் கேட்டதும் சசிகலா முகத்தில் வியப்பு.

"எதிராளி மனசுல என்ன ஓடுதுன்னு பேப்பர்ல இருக்குறமாதிரி தெரியுமா?...இவ்வளவு கரெக்டா சொல்றாரே...' என்று நினைத்து எதுவும் பதில் சொல்லாமல் இருந்தாள். எப்படியும் அவனே இதற்கு விளக்கம் சொல்வான் என்று இவளுக்கும் தெரியும்.""எங்க அம்மா மட்டுமில்லை...ரொம்ப பேர் இப்படித்தான்  பயப்படுறாங்க. அதே மாதிரி மருமகள்களும் நினைக்கிறாங்க. மெகா சீரியல் வர்றதுக்கு முன்னால மாமியார் - மருமகள் சண்டை இல்லையான்னு கேட்கலாம். வாசல் கதவு இடிச்சுடுச்சு...அதனால மாமியாரை வீட்டை விட்டு அனுப்பனுங்குறதுக்கு  மெகாசீரியலும் முக்கிய காரணம்.

இந்த சூழ்நிலையில மனைவி பக்கம் கணவன் சாஞ்சா பெத்தவங்களுக்கு முதியோர் இல்லம் அல்லது வீட்டு வராண்டா. ரெண்டு பக்கமும் முடிவெடுக்க முடியாம திணறுனா ரொம்ப சீக்கிரம் விவாகரத்துக்கு காரணமாயிடுது.வேலை பார்க்குற இடத்துல யார் யாரையோ அனுசரிச்சு போறோம். ஆனா நம்மளாட வாழ்க்கையை நிம்மதியாவும் சந்தோஷமாவும் அமைச்சுக்க கொஞ்சம் கவனமா நடந்துகிட்டா போதும். எந்த பிரச்சனையும் வராது.கல்யாணம் ஆன கையோட அவங்கள கோவிலுக்கு அழைச்சுட்டு போனதால அம்மா வாயிலேர்ந்தே உன்னைத் தனியா கூட்டிட்டு போகணும்னு சொல்லிட்டாங்க. மனைவியை சந்தோஷமா வெச்சுக்குறதுக்கும் யாரோட பர்மிஷனும் தேவையில்லைன்னு நினைக்குற ஆள்.ஆனால் உரசல் வரக் கூடாது பார்'' என்று நீண்ட "லெக்சர்' அடித்தான்..

பெத்தவங்களா, மனைவியோ பிரச்னை பண்ணினா யாராவது ஒருத்தர் பக்கம் சாய்ஞ்சுடாம அந்த சிக்கலுக்கான காரணம்னு பார்த்து அதை சரிசெய்யுற குணத்துடன் இருக்கும் கணவனை நினைத்து சசிகலாவு அடைந்த சந்தோஷத்துக்கு அளவே இல்லை."புண்ணுக்கு புனுகு தடவாம காயத்தை ஆறவைக்கிற வித்தையை எங்க கத்துகிட்டீங்க...'' என்று சசிகலா சொல்லவும் செய்தாள்.

அவளது கைகளைப் பற்றிக்கொண்ட சுந்தரேசன், " மனுஷனை மனுஷனா மதிச்சு நேசிக்கணும். ரொம்ப சாதாரணம். மத்தவங்க நம்மள எப்படி நடத்தணும்னு நாம விரும்புறோமோ அப்படியே நாமளும் மத்தவங்கள நடத்தணும். இது ரொம்ப  சிம்பிள் கான்செப்ட் ''என்றவனுக்குள் ஐக்கியமானாள் சசிகலா.

-------------------------------------------

நேசம்-தினமணி கதிரில் நான் எழுதிய கதை பிரசுரம்

பத்து ஆண்டுகளாக தினமணி அறிவிக்கும் சிறுகதைப்போட்டிகளுக்காக கதைகள் எழுதி அனுப்பிக்கொண்டுதான் இருக்கிறேன். ஒரு முறை கூட பிரசுரம் ஆனதில்லை. தினமணி கதிரில் பேல்பூரி பகுதியில் இரண்டு முறை துணுக்கு எழுதி பரிசு பெற்றதாக நினைவு.

எந்த பெரிய எதிர்பார்ப்பும் இல்லாமல் சாதாரணமாக இப்படி எல்லாம் குடும்பம் இருந்தா எப்படி இருக்கும்னு நினைச்சு எழுதின கதை இது.

வாசிப்பும் நேசிப்பும் அப்படின்னு தலைப்பு வெச்சு நான் எழுதின கதைக்கு நேசம்னு அவங்க தலைப்பு கொடுத்திருக்காங்க. கதையின் கரு அதுதான்.

வாசிப்பும் நேசிப்பும் அப்படின்னு நான் கொடுத்த தலைப்பை அவங்க மாற்றியதற்கு காரணம், ரெண்டு வாரத்துக்கு முன்னால கதிரில் வெளிவந்த சிறப்புகட்டுரைக்கு வாசிப்பும் நேசிப்பும் தலைப்பு வந்துட்டதால இருக்கலாம்.

**********************

புதன், 25 ஜனவரி, 2012

பொங்கல் அன்று திருவாரூர் மக்கள் மனதில் மகிழ்ச்சி பொங்க வைத்த ஆன்மீகம் ஆனந்தம்

திருவாரூரில் உள்ள பலதரப்பட்ட மக்களுக்கும் பிரபல சொற்பொழிவாளர் சுகி.சிவத்தின் நேரடி உரையை கேட்கும் வாய்ப்பை திருவாரூரில் பூத்த ஆன்மீகம் ஆனந்தம் அமைப்பு ஏற்படுத்தி தந்தது.

நான்கு தொழிலதிபர்கள் சேர்ந்து வாக்கிங் போனால் அவர்களின் பேச்சு தங்களின் ஆரோக்கியத்தைப்பற்றியும், தொழில் வளர்ச்சியைப்பற்றியதாகவுமே அமைவதுதான் இயல்பு. திருவாரூரிலும் அப்படி நான்கு பேர் தங்கள் உடல் ஆரோக்கியத்துக்காக வாக்கிங் போக ஆரம்பித்தது மார்கழி மாதத்தின் அதிகாலையில் ஒவ்வொரு நாளும் ஆலய தரிசனம் என்று விரிவடைந்து அதனால் ஏற்பட்ட மனநிறைவை மற்றவர்களும் அடைய வேண்டும் என்ற பரந்த நோக்கத்தால்தான் ஆன்மீகம் ஆனந்தம் என்ற அமைப்பு உருவானது என்று இந்த அமைப்பு தோன்றிய வரலாறைக் கேட்கும்போதே சந்தோ­ஷமாகத்தான் இருக்கிறது.

ஆன்மீகம் ஆனந்தம் அமைப்பின் சார்பில் இதுவரை நடத்தப்பட்ட நிகழ்ச்சிகள்

2011ஆம் ஆண்டு ஆரம்பத்தில் ஆன்மீகம் ஆனந்தம் அமைப்பை ஏற்படுத்தி தொடக்க விழாவை திருவாரூர் ஏகேஎம் மண்டபத்தில் நடத்தினார்கள். அந்த விழாவில் கலந்து கொண்ட நல்ல உள்ளங்களை நினைத்து மகிழ்ச்சி அடைந்த அமைப்பினர் 2011ம் ஆண்டு ஜனவரி 15ம் தேதி அர்ச்சனா சத்தியமூர்த்தி, ஸ்ரீதரன் ஆகியோரின் ஆன்மீக சிறப்புரை, மார்ச் 19ஆம் தேதி தேச.மங்கையர்க்கரசியின் ஆன்மீக சொற்பொழிவு, ஏப்.22ம் தேதி சுவாமி வீரபத்ரானந்த மகராஜின் ஆன்மீக சொற்பொழிவு, ஜுன் 12ம் தேதி புலவர் ராமலிங்கத்தின் ஆன்மீக சிறப்புரை, ஜூலை 3ம் தேதி சுவாமி கமலாத்மானந்தர் மகராஜ், சென்னை வீரமணிகண்ணன் பக்தி பாமாலை கேசட் வெளியீடு, சொற்பொழிவு, ஆக.2ம் தேதி சாரதா நம்பி ஆரூரன் ஆன்மீக ஆனந்த பேருரை, அக்.15ம் தேதி இளம்பிறை மணிமாறனின் ஆன்மீக சொற்பொழிவு ஆகியவற்றை நடத்தியிருக்கிறார்கள்.

வெகுவிரைவாக ஓராண்டு நிறைவடையும் சூழலில் சுகி.சிவம் அவர்களின் சொற்பொழிவை தை மாதம் முதல் நாள், ஏ.கே.எம் திருமண அரங்கில் ஏற்பாடு செய்திருப்பதாக அமைப்பின் செயலாளர் கே.ரெத்தினவேலு மார்கழி மாத தொடக்கத்தில் சொன்னபோது அந்த இடம் பத்தாதே. தியாகராஜசுவாமி கோயில் பிரகாரத்தில் நடத்தினால்தானே சுகி.சிவத்தின் பேச்சைக்கேட்கப்போகும் மக்கள் வெள்ளத்திற்கு சரியாக இருக்கும் என்று நினைத்துக்கொண்டேன். ஆனால் அதை அவரிடம் கூறவில்லை.

ஏன் என்றால் இதைப்பற்றி நாம் ஆலோசனை சொல்லத் தேவை இருக்காது என்றுதான் நினைத்தேன். அந்த அளவுக்கு ஒவ்வொரு நிகழ்ச்சியையும் முறையாக திட்டமிட்டு சிறப்பாகவே நடத்தி வருகிறார்கள். நான் நினைத்தது போலவே திருவாரூர் பெரிய கோயிலின் கமலாம்பாள் சன்னதிக்கு எதிரிலேயே சொற்பொழிவுக்கான இடமாக தேர்வு செய்தார்கள். அவர்கள் நினைத்ததை திருவாரூர் மக்களும் மெய்ப்பித்துவிட்டார்கள். ஆம். ஏற்கனவே திட்டமிட்டபடி திருமண மண்டபத்திலேயே விழா நடைபெற்றிருந்தால் பாதி மக்கள் வெள்ளத்திற்கு கூட அந்த இடம் பத்தாமல் போயிருக்கும். பிரமாண்டமான மக்கள் வெள்ளத்தை பிரமாண்டமான கோயில் பிரகாரம் சிந்தாமல் சிதறாமல் உள்வாங்கிக்கொண்டது.

சுகி.சிவத்தின் பேச்சுக்கு அவ்வளவு ஈர்ப்பு இருக்கக் காரணமே அவரது எளிமையான கருத்துக்கள்தான். மிகவும் சிம்பிளாக ஆரோக்கியம் - ஆன்மீகம் - ஆனந்தம் ஆகியவற்றுக்கு வழியைக் கூறிவிட்டார்.

ஆன்மீகத்தின் பேரில் உடலை பட்டினி போடாமல் இருந்தால் ஆரோக்கியம் வரும். ஆரோக்கியம் இருந்தால் ஆன்மீகத்தில் தன்னை மறந்து ஈடுபாடு வரும். அதில் ஈடுபாடு அதிகமானால் பிரச்சனைகளை வெகு எளிதாக சமாளித்து கடந்து செல்லும் மன நிலை உருவாகும். மன நிலை சமன்பட்டாலே ஆனந்தம்தான். எனக்கு புரிந்த வரையில் என் பார்வையில் சுகி.சிவம் சொல்ல வந்த இதுதான் அவர் ஆற்றிய சொற்பொழிவின் சாரம்சம்.

சொல்லின் செல்வர்-கலைமாமணி-திரு.சுகி.சிவம் அவர்களின் சிறப்பு சொற்பொழிவில் முக்கிய துளிகள்:

மராட்டிய மாமன்னன் சத்ரபதி சிவாஜி ஒரு முறை, எவ்வளவு பேருக்கு நான் அன்னதானம் செய்கிறேன் என்று நினைத்து கர்வமடைந்தாராம். அவரின் குரு ஒரு பாறையை உடைக்கச்சொன்னாராம். அந்த பாறைக்குள் ஒரு தேரையும், சிறிது நீரும் இருந்திருக்கிறது. இந்த தேரைக்கும் நீதான் உணவு படைத்தாயா என்று குரு கேட்டதும் சிவாஜியின் தான் என்ற அகந்தை அழிந்தது.

பொங்கல் என்பதே நன்றி செலுத்தும் விழாதான். ஒருவரிடம் பேனா கடன் வாங்கினாலே திரும்ப கொடுக்கும் போது (எல்லாரும் திருப்பி கொடுப்பதில்லை) நன்றி கூறுகிறோம். நாம் இப்போது உண்ணும் உணவை உருவாக்க காரணமான சூரியனுக்கும், அதற்கு உதவிய கால்நடைகளுக்கும் நன்றி சொல்லும் விழாதான் பொங்கல். இந்த தகவல் நகர வாசிகளாக இருக்கும் பலருக்கு தெரிந்திருக்க நியாயமில்லை. (எனக்கும் இதுவரை தெரியாது).

கடவுள் குடியிருக்கும் வீடு என்பது உடம்பு. அதை விரதம், வேண்டுதல் என்ற பெயரில் துன்புறுத்துவது பாவம். நம் பிள்ளைகள் பட்டினி கிடந்தாலோ, உடலில் காயம் ஏற்படுத்திக்கொண்டாலோ அதை நாம் விரும்புவதில்லை. நாம் அனைவரும் கடவுளின் குழந்தைகள். நாம் நம்மை வருத்திக்கொண்டால் அது எப்படி கடவுளுக்கு மகிழ்ச்சியைத்தரும்? மனித உடம்பைப்போன்ற ஒரு இயந்திரத்தை எத்தனை கோடி செலவு செய்தும் உருவாக்க முடியவில்லை. அத்தனை மதிப்பு மிக்க உடலை கடவுள் நமக்கு சும்மா கொடுக்காமல் 5 கோடிரூபாய் டெப்பாசிட் வாங்கிக்கொண்டு கொடுத்திருந்தால் ஒழுங்காக பராமரிப்போமோ என்னவோ.

முதலில் அன்னத்தை மனிதன் உண்கிறான். பிறகு அன்னம் மனிதனை உண்கிறது. -இது உண்மைதான். அந்த நேரத்துக்கு காப்பி குடிக்கலைன்னா தலையே வெடிச்சுடும் என்று கூறும் வழக்கம் எவ்வளவோ பேருக்கு உண்டு.

பள்ளிகளில் உடற்பயிற்சி வகுப்பு என்பதே மற்ற ஆசிரியர்கள் பங்கு போடத்தான் இருக்கிறது. கணக்கு, அறிவியல், ஆங்கிலம் என்று அத்தனை ஆசிரியர்களும் மொத்தமாக குறிவைப்பது உடற்பயிற்சி வகுப்புகளைத்தான். உடற்பயிற்சி, விளையாட்டு போன்றவற்றில் ஈடுபட்டு உடலில் சேரும்சக்தி நியாயமாக செலவழிக்கப்பட்டால் அந்த குழந்தைகளின் மற்ற சேட்டைகள் குறையும். பாடம் மட்டும் கேட்கும் குழந்தைகள் சிடுமூஞ்சிகளாகத்தான் இருப்பார்கள். உங்கள் மகன் அறிவாளியாக இல்லாமல் போனால் நஷ்டம் இல்லை. அவன் ஏதாவது செய்து பிழைத்துக்கொள்வான். ஆனால் நோயாளியாக இருந்தால் கஷ்டம்.

கிராமத்து ஆசாமி ஒருவர் முதன்முதலில் கிரிக்கெட் பார்க்கும்போது, அவன்தான் பந்து வேணாம் வேணாம்னு சொல்லி அடிக்கிறானே. அப்புறம் ஏன் இவன் திரும்ப திரும்ப போடுறான்? என்று கேட்டாராம்.இப்போது வழக்கம்போல் இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் உதை வாங்குவதை வைத்தும் நகைச்சுவையாக சில வார்த்தைகள் பேசினார் சுகி.சிவம்.

ஒருவன் நல்லதை கற்றுக்கொள்ள வேண்டும் என்று முடிவு செய்துவிட்டால் எங்கும் எதிலும் கற்றுக்கொள்ளலாம். கிரிக்கெட்டில் பேட்ஸ்மேனை நோக்கி போடப்படும் ஒவ்வொரு பந்தும் அவனை அவுட் செய்யத்தான். அந்த பந்தை விளாசி போர், சிக்ஸ் என்று அடிப்பது பேட்ஸ்மேனின் சாமர்த்தியம். வாழ்க்கையும் இப்படித்தான். நம்மைச் சுற்றி உள்ளவர்கள் நம்மை அவுட்டாக்கத்தான் பார்ப்பார்கள். அந்த முயற்சிகளை சாதனையாக மாற்றுவதுதான் நம் திறமை.

கிரிக்கெட்டில் ஒருவனை அவுட்டாக்க 11 பேர் முயற்சிப்பார்கள். வாழ்க்கையும் அப்படியே. நாம் அவுட்டாகி விட்டால் கூடியிருக்கும் 10ஆயிரம் பேர் கை தட்டுவார்கள். அதே சமயம் நாம் அந்த பந்தில் போர் அல்லது சிக்ஸ் அடித்தாலும் அவர்கள் கைதட்டுவார்கள். உலகம் நாம் வாழ்ந்தாலும் பேசும், தாழ்ந்தாலும் ஏசும்.

வயிறு என்ன குப்பைத்தொட்டியா?

பெண்களிடம் ஒரு கெட்டபழக்கம் உண்டு. விரதம், அது இது என்று காரணம் சொல்லி நாள்கணக்கில் சாப்பிடாமல் கூட இருந்துவிடுவார்கள். அதேசமயம் மீதமாகிவிடும் சாப்பாட்டை குப்பைத்தொட்டியில் போடுவதற்கு பதிலாக தன் வயிற்றுக்குள் போட்டு அடைக்கும் வேலையையும் கச்சிதமாக செய்வார்கள். கேட்டால், விலைவாசி இருக்குற நிலைமையில எப்படி கீழே கொட்டுறது? என்று நமக்கே எதிர்கேள்வி வரும். இப்படி உடம்பைப் படுத்தும் காரணத்தால் வீணாகிவிடும் என்று நினைத்த சாப்பாட்டின் மதிப்பை விட பல மடங்கு மருத்துவத்துக்காக செலவழிக்க நேரிடுவதை உணருவதே இல்லை.

இந்திய கலாச்சாரப்படி ஒரு நாளைக்கு 3 வேளையாக உணவை சாப்பிடுவதில் எனக்கு உடன்பாடு கிடையாது. இந்த வி­ஷயத்தில் சீனர்களைப்போல் ஆறு வேளையாக பிரித்து சாப்பிடுவதுதான் ஆரோக்கியத்துக்கு நல்லது. சர்க்கரை அளவு கூடுதலாக உள்ளவர்களை கொஞ்சம் கொஞ்சமாக பிரித்து சாப்பிடுமாறு மருத்துவர்கள் அறிவுறுத்துவார்கள். இப்படி கொஞ்சம் கொஞ்சமாக பிரித்து சாப்பிட்டால் உடலின் ஜீரண உறுப்புகளுக்கு வேலை சுலபமாக இருக்கும்.

இந்த உலகில் சந்தோ­மாக இருப்பவன் யார்? குறைந்த பட்ச துக்கம் உள்ளவனே ஆனந்தமானவன். ஏனென்றால் யாருமே துக்கம் இல்லாமல் இருக்க முடியாது.

சுகி.சிவம் இன்னும் ஏராளமாக பேசினார். அவ்வளவும் நம் வாழ்க்கையை சிக்கலில்லாமல் சுலபமாக்கக்கூடியவை.

உதாரணமாக கணவன் மனைவிக்குள் பிரச்சனை வராமல் இருக்கவேண்டும் என்றால் கணவன் தன் தாயோடு மனைவியை ஒப்பிடக்கூடாது. மனைவி தன் தந்தையுடன் கணவனை ஒப்பிடக்கூடாது. இது மிகச் சுலபமான சந்தோ­த்திற்கு வழி என்றார். உண்மைதான். இதுபோன்ற கவுன்சிலிங் தருவதற்கு சென்னை போன்ற பெரு நகரங்களில் ஆயிரக்கணக்கில் கட்டணம் வசூலிக்கிறார்கள். ஆனால் திருவாரூர் மக்களுக்கு இவை இலவசமாக கிடைக்கட்டும் என்று ஆன்மீகம் ஆனந்தம் அமைப்பினர் இந்த பேச்சுக்கு ஏற்பாடு செய்திருக்கிறார்கள் என்றார்.

இப்படி ஒரு சிறப்பான சொற்பொழிவை ஆற்றிய ஆன்மீகச்செம்மல் சுகி.சுவத்திற்கும், விழாவுக்கு ஏற்பாடு செய்த ஆன்மீகம் ஆனந்தம் அமைப்பினருக்கும் இந்த பேச்சைக் கேட்ட மக்கள் மானசீகமாக நன்றி சொல்லியிருப்பார்கள்.

********************************
ஆன்மீகம் ஆனந்தம் அமைப்பின் 2-ஆம் ஆண்டு துவக்க விழாவை ஒட்டி 40பக்க ஆன்மீக சிறப்பிதழ் ஒன்றை வெளியிட்டிருந்தார்கள். இதை வழக்கமாக திருவாரூரைப்பற்றி இடம்பெறும் செய்திகளைத் தவிர்த்து அதிகம் பேர் அறியாத தகவல்களுடன் உருவாக்கியிருப்பது சிறப்பு.

ஞாயிறு, 15 ஜனவரி, 2012

தை பிறந்தால் வழி பிறக்கும் சரி...சைக்கிள் பிறக்குமா?

திருவாரூர் தியாகராஜசுவாமி ஆலயத்தில் சுகி.சிவம்

இந்த பதிவில் சாதாரண புலம்பல்கள்தான் அதிகம் இருக்கும். சாரி பார் த டிஸ்டபன்ஸ்.

கல்கி பத்திரிகைக்கு 12 ஆண்டுகளாக சிறுகதைப்போட்டிக்கு கதைகள அனுப்பி வருகிறேன். அதில் என்னுடைய ஒருசில வாசகர்கடிதங்கள் பிரசுரமானதோடு சரி. கல்கியில் 2011ஆம் ஆண்டு தீபாவளி தமாக்கா என்று தலைப்பிட்டு பல்சுவை போட்டிகளை நடத்தினார்கள்.

போட்டி பற்றிய அறிவிப்புகளப் படித்ததும் முதலில் மலைப்பாகத்தான் இருந்தது. பிறகு கம்ப்யூட்டர் பரிசு, சைக்கிள் பரிசு ஆகிய இரண்டில் மட்டும் கலந்து கொள்வது என்று முடிவு செய்து அதற்கான தயாரிப்பில் இறங்கினேன். கம்ப்யூட்டருக்கான பரிசுப்போட்டிதான் சற்று சவாலாக இருந்தது. அதில் விமர்சனம், கருத்துக்கள பவர்பாயிண்ட் பிரசன்டேஷனாக கேட்டிருந்தார்கள். எனக்கு அது வரை பவர்பாயிண்ட் பற்றி எதுவுமே தெரியாது.

அதைப்பற்றி அறிந்து கொள்வதில் கவனம் செலுத்தியதால் அதற்கான படைப்புகளில் கவனம் செலுத்த இயலவில்லை. தனியாக ஜாப் டைப்பிங் சென்டர் வைத்திருப்பதால் அந்த வேலைப்பளு, ஒரு நாளைக்கு மின்சாரம் இருக்கும் 18 மணி நேரத்தில் தூக்கம், சாப்பாடு, குளியல், கோயிலில் சாமி தரிசனம், அலுவலகப்பணி என்று போனது போக மீதம் உள்ள நேரத்தில் அவசரமாக தயார் செய்து அனுப்பிய படைப்புக்களில் எங்கள் தெருவில் உள்ள கோயில் பற்றிய எனது அனுபவத்தை மிகவும் சிம்பிளாக உள்ளது உள்ளபடி எழுதியது எனக்கு சைக்கிள் பரிசை வாங்கித்தந்துள்ளது.

அந்த சைக்கிள் பரிசு கிடைத்த விவரம் தெரிந்ததும் புது சைக்கிளை ஒரு நாள், பழைய சைக்கிள் ஒரு நாள் என்று மாற்றி மாற்றி ஓட்ட வேண்டும் என்று நினைத்தேன். அந்த நேரம் சரியில்லை என்று நினைக்கிறேன். என்னுடைய காலாக எனக்கு உழைத்த சைக்கிளின் (அந்த சைக்கிளின் பிறந்த தேதி: 08.09.1995) கைப்பிடி துருப்பிடித்து முறிந்து விட்டது.

அந்த கட்டுரை 22.01.2012 தேதியிட்ட கல்கியில் பிரசுரம் ஆகியுள்ளது. எங்கள் தெருவில் உள்ள பிள்ளையார் கோவிலின் மடப்பள்ளியை ஒருவர் ஆக்கிரமித்து இருந்ததால் திருப்பணி தடைபட்டிருந்தது. அந்த ஆக்கிரமிப்பு சட்ட விதிகளின்படி நகராட்சி அதிகாரிகளால் விரைவில் அகற்றப்பட்டு சீக்கிரத்தில் குடமுழுக்கு நடைபெற வேண்டும் என்பதே எங்கள் பிரார்த்தனை என்று கட்டுரையின் இறுதியில் குறிப்பிட்டிருந்தேன். அந்த கட்டுரை பிரசுரமான இதழ் கடைக்கு வந்த தேதி 14.1.2012 போகிப்பண்டிகை. ஆனால் 12.1.2012 விவேகானந்தர் பிறந்த நாள் அன்று ஆக்கிரமிப்பாளரே கடையை காலி செய்து கொண்டுவிட்டார்.

போகும்போது கோவில் பராமரிப்பு செலவைக் குறைக்க நினைத்தாரோ என்னவோ. சங்கடஹர சதுர்த்தி அன்று கோவிலில் விளக்கு எரியக்கூடாது என்ற நல்ல எண்ணத்தில் மீட்டர் போர்டில் ப்யூஸ் கேரியரைப் பிடுங்கி எடுத்துச் சென்றதுடன், மெயின் பாக்ஸ்ஐ சிதைத்து தொங்கவிட்டுவிட்டார்.

ஆனால் 10 நிமிடத்தில் வேறு ஒரு மாற்று ஏற்பாடு மூலம் ஆலயத்தில் மின் விளக்கை எரியச் செய்யும் வேலையை பிள்ளையார் என் மூலமாக நிறைவேற்றிக்கொண்டது போல் தெரிகிறது.

ஏற்கனவே 2009ஆம் ஆண்டு அக்டோபர் 6ஆம் தேதியும் சங்கடஹர சதுர்த்திதான். அன்றுதான் கோவில் மண்டபத்திற்கான பில்லர் போட இடம் போதவில்லை என்று காவல்நிலையத்தில் நாங்கள் புகார் செய்தோம். அப்போது காவல்துறை ஆய்வாளரின் அறிவுரையின் பேரில் ஆக்கிரமிப்பாளரே பாதி கடையை இடித்துக்கொண்டார்.

இப்போது 2012லும் ஒரு சங்கடஹர சதுர்த்தி நாள் அன்றே அவரது முழு ஆக்கிரமிப்பையும் அகற்றிக் கொண்டார். எல்லாம் பிள்ளையார் செயல் என்றே நம்புகிறோம்.

இந்த கட்டுரை வெளிவந்த கல்கி இதழின் அட்டைப்படத்தில் நண்பன் படத்தின் ஸ்டில் இடம்பெற்றிருந்தது. நான் 7ஆம் வகுப்பு படிக்கும்போது வெளியான ஜென்டில்மேன் படத்தைப் பார்த்ததுமே இயக்குனர் ஷங்கரை எனக்கு ரொம்பவும் பிடித்து விட்டது. அவர் ரீமேக்கிய நண்பன் படத்தின் கலர் ஃபுல் (ராமராஜன் கலர்?) ஸ்டில்லுடன் கல்கி இதழ் வெளிவந்தது மனதுக்கு கூடுதல் சந்தோஷத்தைக் கொடுத்தது என்று சொல்லலாம்.

நண்பன் படம் திருவாரூரில் இரண்டு தியேட்டர்களில் வெளியாகியுள்ளது. திருவாரூரில் ஒரு தியேட்டருக்கே சரியாக கூட்டம் வருவதில்லை. நண்பன் படத்தை வெளியிடுபவர்கள் ஒன்றில் மட்டும் வெளியிட்டிருக்கலாம். அப்படி செய்திருந்தால் கொள்ளைக்காரன் திருவாரூரில் ரிலீசாக வாய்ப்பு கிடைத்திருக்கும். இந்த மூன்று நாட்கள் விடுமுறையின்போது ஒரு சிறிய பட்ஜெட் படம் (நண்பனுடன் ஒப்பிடும் போது சிறிய பட்ஜெட் என்று தாராளமாக சொல்லலாம்.) ஓரளவு வசூல் செய்யும் உரிமையை தடுத்துவிட்டார்கள் என்றே சொல்லலாம்.

சினிமாக்காரர்கள சிறிய பட்ஜெட் சினிமாக்கள காலி செய்துவிட்டு திருட்டு விசிடி, கேளிக்கை வரியால் அழிந்து கொண்டிருக்கிறது என்று கூப்பாடு போடுவதையும் வழக்கமாக கொண்டிருக்கிறார்கள். தைலம்மை தியேட்டர் வாசலில் வைக்கப்பட்டிருக்கும் நண்பன் பட பிளக்ஸ் போர்டை பார்த்ததும் என் நினைவுகள் 20 ஆண்டுகள் பின்னோக்கி சென்றுவிட்டது.

அப்போதெல்லாம் பெரிய ஹீரோக்கள் நடித்தபடம் அல்லது பொங்கல், தீபாவளிக்கு ரிலீசாகும் படங்களுக்கு மட்டுமே துணி பேனர்கள் வரும். தியேட்டர் வாசலில் அதைப் பார்க்கும் போதே என்னால் ஆச்சர்யம் தாங்க முடியாது. உருவம் அப்படியே அசலாக போஸ்டரில் இருந்தாலும் துணி பேனரில் ரஜினி மாதிரியோ, மீனா மாதிரியோ இருக்கும் உருவத்தை பார்த்து இதை வரைய எவ்வளவு கஷ்டப்படுறாங்களா என்று நினைப்பேன். மேலும் திருச்சி ஏரியாவில் 10 தியேட்டரில் படம் ரிலீசாகிறதே. அத்தனை ஊருக்கும் பேனர் வரைஞ்சு அனுப்புறதுன்னா எத்தனை நாளைக்கு முன்னாலயே வரைய ஆரப்பாங்க என்றெல்லாம் என்னை நானே கேட்டுக்கொண்டதுண்டு. அந்த பேனர்களில் போஸ்டருடன் ஒட்டும் தியேட்டர்பெயர் கொண்ட ஸ்லிப்புகள ஒட்டி வைப்பார்கள். தீபாவளி, பொங்கல் சமயங்களில் 30 இன்ச் உயரம், 40 இன்ச் அகலத்தில் லித்தோ போஸ்டர்கள் திடீரென முளைக்கும்.

ஆனால் இப்போது ஒரே நாள் இரவில் 100 அல்லது 200 அடி நீளமுள்ள பிளக்ஸ் போர்டுகளக்கூட மெஷின்கள் அலட்சியமாக பிரிண்ட் செய்து தள்ளி விடுகின்றன. அதுதான் படத்தின் ஸ்டில்லுடனே தைலம்மையின் பொங்கல் நல்வாழ்த்துக்கள் என்று பிளக்ஸ் போர்டு வைக்க முடிகிறது. டெக்னாலஜி வளர்ச்சி நல்ல விஷயம்தான். ஆனால் துணி பேனரில் வரைந்து கொண்டிருந்தவர்களில் எத்தனை பேர் கம்ப்யூட்டர் டிசைன் கற்றுக்கொண்டு வளர்ச்சியடைந்திருப்பார்கள்?

விவசாயம், ஓவியம் என்று பல துறைகளிலும் தொழில்நுட்பப் புரட்சி வந்து பலரை வாழ வைத்துக்கொண்டிருக்கிறது. உயர்த்தியும் விட்டிருக்கிறது. ஆனால் எவ்வளவு பேரை முகவரி இல்லாமல் ஆக்கியிருக்கும் என்று யாருக்கும் தெரியாது.

காலத்தின் வேகத்தில் பலர் காணாமல் போய்க்கொண்டிருக்கிறார்கள். ஆனால் வேகமான இந்த உலகத்தில் தடுக்கி விழுந்தவனை தூக்க ஒருவன் முயற்சித்தால் அவனையும் சேர்த்து சமாதியாக்கிவிட்டு ஓடத்தான் பின்னால் வருபவர்கள் முயற்சிக்கிறார்கள். அதையும் சமாளித்து கீழே விழுந்தவனையும் காப்பாற்றி, தானும் சேர்ந்து ஓடுவதற்கு நாம் முயற்சிக்க வேண்டும்.

திருவாரூரில் சில தொழில்அதிபர்கள் சேர்ந்து ஆன்மீகம் ஆனந்தம் என்ற குழுவாக செயல்பட்டு வருகிறார்கள். திருவாரூர் நகரிலும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் சில கோயில்களில் வழிபாடு, சொற்பொழிவு நிகழ்ச்சி என்று பல காரியங்கள செய்து வருகிறார்கள். இந்த பொங்கலுடன் ஓராண்டு நிறைவு பெறும் நேரத்தில் இன்று 15.1.2012 அன்று திருவாரூர் தியாகராஜசுவாமி ஆலயத்தில் சுகி.சிவம் சொற்பொழிவுக்கு ஏற்பாடு செய்துள்ளனர்.

மாலை 6.01 என்று நேரம் குறிப்பிட்டிருக்கின்றனர். இந்த நிகழ்ச்சி குறித்து திருவாரூர் நகர் முழுவதும் பெரிய அளவில் விளம்பரம் செய்யப்பட்டுள்ளது.

ஞாயிறு, 1 ஜனவரி, 2012

2012ல விலைவாசி உயர்வை சமாளிப்பது எப்படி?

அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்

நீ ஒருவர் மீது குற்றம் சொல்லி விரலை நீட்டும்போது மற்ற நான்கு விரல்கள் உன்னைத்தான் நோக்கும் என்று சொல்வார்கள். அது போல் விலைவாசி நம்மை கசக்கிப்பிழியும் நேரத்தில் அரசையும் சமூகத்தையும் குறை சொல்லும் முன்பு சுயக்கட்டுப்பாட்டுடன் சில விஷ­யங்களை கவனிக்க வேண்டும்.

தமிழகத்தின் மின் தேவையில் கிட்டத்தட்ட இருபத்தைந்து சதவீத மின்சாரம் பற்றாக்குறையாக உள்ளது என்று சொல்கிறார்கள். குளிர்காலத்திலேயே இந்த கதி. ஏப்ரல், 'மே'யிலே என்ன கதியோ. வளர்ந்த சில நாடுகளில் 5 முதல் 7 சதவீதம் வரை மட்டுமே மின்சாரத்தை விநியோகத்துக்காக கம்பி வழியே கொண்டு செல்லும்போது இழப்பு ஏற்படுகிறது என்று சொல்கிறார்கள். ஆனால் நம் நாட்டில் சொல்லப்படும் கணக்கு 40 சதவீதம் வரை. திருட்டு மின்சாரமும் உள்ளடக்கிய கணக்காக இது இருக்கலாம்.

இந்த இழப்பை 20 சதவீதம் என்ற அளவிற்கு குறைத்தாலே பாதி பற்றாக்குறை பறந்தோடிவிடுமே. அடுத்து தெருவிளக்கு, அரசு அலுவலக வளாகம் என்று எந்த அளவு சாத்தியமோ அந்த அளவிற்கு சோலார் சக்தியில் இயங்கும் விளக்குகளை அமைத்தால் எவ்வளவோ மின்சாரம் மிச்சம். எது எதையோ இலவசமாக கொடுப்பவர்கள் ஆண்டுக்கு 4 சிஎப்எல் பல்ப் - களை இலவசமாக கொடுக்கலாம். அல்லது சலுகை விலையில் கொடுக்கலாம். அடுத்து தொகுப்பு வீடுகளுக்கு இலவச மின்சாரம். இது நடுத்தர வர்க்க மக்களை வஞ்சிக்கும் செயல். உண்மையில் மின் கட்டணம் செலுத்த வசதியே இல்லாதவர்களுக்கு இப்படி இலவச மின்சாரம் கொடுத்தால் நியாயமாக ஒரு நாளைக்கு ஒரு யூனிட் போதும். அதற்கு மேல் நுகர்பவர்கள் நிச்சயமாக ஏழைகளாக இருக்கப்போவதில்லை. இப்படி ஒரு விளக்குக்காக கொடுக்கப்படும் வீடுகளில் ஏ/சியைத்தவிர அனைத்தும் இருக்கின்றன. ஆனால் ஓட்டுக்காக இப்படி இலவச மின்சாரத்தை கொடுத்து ஒரு குறிப்பிட்ட பகுதி மக்கள்மீதே அனைத்து சுமைகளையும் ஏற்றுகிறார்கள்.

இப்போது இருக்கும் அனைத்து அரசுப்பள்ளிகளையும் போதிய கட்டமைப்பு வசதிகளுடன் சரியான எண்ணிக்கையில் ஆசிரியர்களை நியமித்து இயங்கச் செய்தால் பஸ் பாஸ் பெறும் மாணவர்களின் எண்ணிக்கை மிக மிக குறைவாகத்தான் இருக்கும்.

நான்குவழிச்சாலைகளுக்கு லட்சக்கணக்கான மக்களிடம் இருந்து நிலத்தை கையகப்படுத்தும் அரசால் சென்னை முதல் கன்னியாகுமரி வரை இரட்டை ரயில் பாதைகளுக்கு ஏற்பாடு செய்வதில் என்ன கஷ்டமோ தெரியவில்லை. அது சரி. 4 வழிப்பாதை என்று சொல்லி ஒரே நாளில் ஒரு கோடி ரூபாய் கூட சுங்கம் வசூலிக்கலாம். ஆயிரக்கணக்கில் ஆம்னி பஸ்களை இயக்கி மக்களை சுரண்டலாம். இரட்டை ரயில் பாதை அமைந்து விட்டால் இதற்கெல்லாம் வழி இருக்காதே. (இதனால் பலர் வேலையிழக்கக்கூடும் என்று சொல்லாதீர்கள். சில பெரு முதலைகள் அதாவது அரசியல்வாதிகள் உள்ளிட்ட சிலர் மட்டுமே இன்னும் 10 தலைமுறைக்கு சொத்து சேர்க்க இந்த 4 வழிப்பாதைகள் அதிகம் உதவி செய்கின்றன.)

திருட்டு விசிடி டாட் காம் என்று இணையதளமே இருக்கிறது. அந்த அளவுக்கு இணைய தளங்களால் சினிமா சீரழிந்து வருகிறது என்று சொல்கிறார்கள். அது ஒரு புறம் இருந்தாலும் முக்கியமாக ஒரு எதிரி சினிமாவுக்குள்ளேயே இருப்பதாகத்தான் எனக்கு தோன்றுகிறது. ஏற்கனவே இருக்கும் இரண்டு கதாநாயகிகள் போதாது என்று இன்னும் இரண்டு பேரை வெளிநாட்டுக்கு அழைத்துச் சென்று பல லட்சம் செலவு செய்து பாடலை படமாக்கி அதை எண்ட் டைட்டிலுக்காக சேர்க்கும் அளவுக்கு சிக்கன சிகாமணிகள் தமிழ் சினிமாவில் இருக்கிறார்கள். இவர்கள் போதாதா சினிமாவை அழிப்பதற்கு.

பெரிய ஹீரோக்களுக்கு கோடிக்கணக்கில் சம்பளம் என்று சொல்கிறார்கள். ஆனால் சாதாரண டெக்னீஷியனுக்கு ஷூட்டிங் நாட்களில் சாப்பாடு கிடைத்தால் பெரிய வி­ஷயம். அந்த அளவுக்கு கொடுமைப்படுத்துவதும் நடக்கிறது. இது நமக்கு தேவையில்லை. ஆனால் பொதுமக்கள் கொஞ்சம் உஷாராகி விட்டதன் அடையாளம்தான் எந்த படமும் ஒரு வாரத்துக்கு மேல் தியேட்டரில் தங்காமல் எஸ்கேப்பாகிக்கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டில் இன்னும் பல கோடிப்பேருக்கு மாத வருமானமே 3 ஆயிரத்திலிருந்து 6 ஆயிரம் ரூபாய்வரைதான் என்பதை இவர்கள் மறந்து விட்டார்கள் போலிருக்கிறது. அதனால்தான் திருவாரூர் போன்ற சின்ன ஊர்களிலேயே ஒரு டிக்கட் 100 ரூபாய்க்கு விற்கிறது. 4 பேர் கொண்ட ஒரு குடும்பம் படம் பார்க்க தியேட்டருக்கு சென்றால் 500 ரூபாய் காலி. ஆத்தாடி...அந்த காசு இருந்தா ஒரு 4 நாளைக்கு குழம்பு வைக்கலாம் என்று நிறைய மக்கள் நினைக்கிறார்கள்.

இருசக்கர வாகனத்தை பயன்படுத்துதல், கேஸ் பயன்பாடு, மின்சாதனங்களை பயன்படுத்துவதில் ஒழுங்குமுறை என்று நாம் சிக்கனமாக இருந்தாலே பாதி கஷ்டத்திலிருந்து தப்பி விடலாம்.

பாத்திரம் ஓட்டையாக இருந்தால் இமயமலை முழுவதும் உருகி ஓடினால் கூட அது நிறையாது என்பதை புரிந்து கொண்டால் சரி.

பற்றாக்குறை என்றால் வருமானத்தை பெருக்கு அல்லது செலவை சுருக்கு என்பதுதான் தாரகமந்திரம். வருமானத்தை பெருக்குவது என்பது மிகவும் திட்டமிட்டு அதிக உழைப்பை கொடுத்தால் மட்டுமே சாத்தியம். ஆனால் சிக்கனம் என்பது சற்று முயற்சி செய்தாலே போதும்.

மேலே நான் சொன்ன சில சிக்கன நடவடிக்கைகளில் முக்கியமாக வீணாவதை தவிர்க்கும் நடவடிக்கைகளில் ஏற்கனவே இறங்கியவர்கள் அப்போதும் பற்றாக்குறை என்றால் வருமானத்தை அதிகப்படுத்தும் நடவடிக்கைகளில்தான் இறங்க வேண்டும்.

அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

பின் குறிப்பு: இதில் அரசியல் வியாதிகளைப்பற்றி அதிகம் சொல்லவில்லையே என்று தானே நினைக்கிறீர்கள். அவர்கள் செய்வது அவ்வளவும் அக்கப்போர்தான். அவர்கள் செலவழிப்பதில் 95 சதவீதம் தெண்டம்தான். அப்புறம் எதைச் சொல்ல...எதை விட...