Search This Blog

சமூக அக்கறை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சமூக அக்கறை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 3 மார்ச், 2014

சாரி ஃபார் த டிஸ்டபன்ஸ்...ஒரு குரூப்பாத்தான் அலையுறாய்ங்க?

தொடர்ந்து நிறைய எழுத வேண்டும் என்ற ஆசை இருந்தாலும் சொந்த தொழிலில் செக்கு மாடு சுற்றி வருவதைப் போன்று சில வேலைகளையே திரும்ப திரும்ப செய்து கொண்டிருப்பதால் எழுத அமர்ந்தால் மைண்ட் முழுவதும் ஏதோ ப்ளாங்க் ஆக இருப்பதாக ஒரு ஃபீலிங். (ஏற்கனவே மைண்ட் காலியாத்தானே இருக்குதுன்னு ஒரு சந்தேகம் எழலாம்.) பதிவுகளே இல்லாமல் காணாமல் போகாமல் இருக்க உள்ளேன் ஐயா என்று சொல்ல நினைக்கும் விதமாகத்தான் இந்த பழைய பதிவை தூசி தட்டியிருக்கிறேன்.

**********************************************
முறைப்படி சம்பளப்பட்டியல் மூலம் மட்டும் ஊதியம் வாங்குபவர்களுக்கு ஜனவரி, பிப்ரவரி என்றாலே மார்ச்சுவரிக்கு அனுப்பும் அளவுக்கு வரிப்பிடித்தம் இருக்கும் என்ற அளவுக்கு பேதியைக் கொடுக்கும் விஷயம் என்றுதான் சொல்கிறார்கள். 4ஆண்டுகளுக்கு எழுதிய பதிவை இப்போது படித்துப்பார்த்தாலும் அதில் இடம்பெற்றிருந்த என்னுடைய சொந்த புராணம் சில வரிகளை தவிர வேறு எதையும் மாற்றும் அவசியம் இருக்கவில்லை.

மாற்றம் ஒன்றே மாறாதது என்பது பல விஷயங்களில் இருந்தாலும் பெரும்பகுதி மக்களின் அவல நிலை என்பது மாறாததாகவே இருக்கிறது என்றுதான் நினைக்கிறேன். அதனால் பழைய பதிவு இப்போது மீள்பதிவாக உங்கள் பார்வைக்கு..


.
***********************************************
கையெழுத்து போட்டு சம்பளம் வாங்கும் அப்பாவி நடுத்தர வர்க்கத்தின் ஜனவரி, பிப்ரவரி சம்பளங்கள் வருமான வரிக்காகவே பெரும்பாலும் பிடிக்கப்பட்டு விடுவதால் மார்ச்சுவரிக்கே செல்லும் அளவுக்கு பொருளாதார நெருக்கடி இருக்கும் என்று சொல்வார்கள்.

இது பல ஆண்டுகளுக்கு முன்பே எனக்குத் தெரியும்.இப்போது என் கவனத்துக்கு வந்த விஷயமே வேறு.சில தினங்களுக்கு முன்பு நான் வீட்டில் இல்லாத நேரத்தில் என்னுடன் பள்ளியில் படித்த நண்பன் வந்து என்னுடைய புதிய செல்போன் நம்பர் அவனிடம் இல்லாததால் அம்மாவிடம் பேசியிருக்கிறான்."எனக்குத் தெரிஞ்ச கவர்மெண்ட் ஆபீஸ்ல தமிழ்-ஆங்கிலம் டைப் அடிக்கிற திறமையோட கம்ப்யூட்டரும் இயக்கத்தெரிஞ்ச ஆள் வேலைக்கு வேணும். உடனடியா இந்த ஆபீசுக்கு வர சொல்லுங்க."அப்படின்னு வேப்பிலை அடிச்சுட்டு போயிருக்கான்.

எங்க அம்மாவுக்கா, புள்ளைக்கு கவர்மெண்ட் வேலை கிடைக்கப்போகுதுன்னு சந்தோஷம். வீட்டுக்கு வந்ததும் என்கிட்ட சொன்னாங்க. எனக்கு மட்டும் இதுல எதோ ஒரு வில்லங்கம் இருக்குன்னு புரிஞ்சுடுச்சு.

போட்டித்தேர்வுல பாஸ் பண்ணினவங்களுக்கு கூட ஒழுங்கா வேலை கிடைக்குதான்னு தெரியலை. நான் பத்தாம் வகுப்பு, பனிரெண்டாம் வகுப்பு மதிப்பெண் பட்டியலை வேலை ஏய்ப்பு அலுவலகத்துல பதிவு பண்ணினதோட சரி. அதை புதுப்பிக்க கூட இல்லை. இப்படி எதாவது போஸ்டிங் போடுறதுன்னா கட்சிக்காரன்லேர்ந்து மேலதிகாரி வரைக்கும் பல லட்சம் பார்க்காம தண்ணியடிக்க மாட்டாங்கன்னு எனக்கு தெளிவா புரிஞ்சது.

அப்துல்கலாம் ஐயா சொன்னது இந்த மாதிரி கனவு இல்ல அப்படின்னு சொல்லி என் அம்மாவோட கனவை கலைச்சுட்டு மறு நாள் அந்த நண்பனை பார்க்கப்போனேன். எந்த ஒரு விஷயத்தையும் சுத்தமா தெரிஞ்சுக்காம நிராகரிக்கிற பழக்கம் எனக்கு கிடையாதே.

அந்த அரசு அலுவலகத்துல இருந்த ஆபீசரில் பலர் ஒரு விஷயத்தை சபிச்சுகிட்டுதான் இருந்தாங்க.

"ஒழுங்கா கையால எழுதி வேலையை முடிச்சுகிட்டு இருந்தோம். இந்த சனியனை (கம்ப்யூட்டர்) கொண்டு வந்து வெச்சு எங்க உயிரை எடுக்குறாங்க. இதுல சில ஆவணங்களை தமிழ்ல டைப் பண்ணி இந்த பைனான்சியல் இயருக்குள்ள மேலிடத்துக்கு அனுப்பியாகணும்."அப்படின்னு சொன்னார்.

அவ்வளவு வேலை பாக்கி இருந்தது. என்னுடைய திறமையை வெச்சு கணக்கு பண்ணி பார்த்தேன்.ஆறு மணி நேரம் ஒதுக்கி டைப் செய்தா  முப்பது வேலை நாள் தேவைப்படும்.

"எவ்வளவு சார் தருவீங்க.வேலையோட உறுதித் தன்மை எப்படி"ன்னு கேட்டேன்.

"இங்க வேலை பார்க்குற ஆபிசருங்க எல்லாரும் கொஞ்ச பணம் போட்டுதான் உங்களுக்கு சம்பளம் கொடுக்கணும். எங்களால வேலை செய்ய நேரம் இல்லாததால சேர்ந்து கிடக்குற வேலையைத்தான் உங்களை செய்ய சொல்லப் போறோம். இதுக்கு அட்டனன்ஸ் எதுவும் கிடையாது. உங்க வேலை திருப்திகரமா இருந்தா எங்க ஹெட் ஆபீசுல சொல்லி எதாவது வேலை வாங்கித்தர முயற்சி செய்வோம்." அப்படின்னு ரொம்ப அழகா பேசினார் அந்த ஆபிசர்.

எனக்கு விஷயம் புரிஞ்சுடுச்சு. அட்டனன்ஸ் இல்லாம போய் இவங்க இயர் எண்ட் பணிச்சுமையை நான் முடிச்சு கொடுத்தா அத்தோட கழட்டி விட்டுடுவாங்க. அடுத்த வருஷம் அடுத்த அடிமை சிக்காமயா போயிடும்னுங்குறது அவங்க எண்ணம்.

நான் ஒரு நாளைக்கு நூற்றைம்பது ரூபா கேட்டேன். ஆனா அவங்க ஐம்பது ரூபாய்க்கு மேல தரத் தயாரா இல்லை. நானும் அந்த அரசு அலுவலகத்துக்கு வேலைக்குப் போறதா இல்லை. அந்த துறை மட்டுமில்ல. எனக்கு தமிழ்-ஆங்கிலம் டைப், டேலி அக்கவுண்ட்ஸ் எல்லாம் தெரியும்னுங்குறதால வேற சில அரசு அலுவலகங்கள்லயும் கூப்பிட்டாங்க. எல்லாம் மார்ச்சு ஜூரம்தான்.

எனக்கு அவங்க மேல கோபம் இல்லை. வேலை பார்க்க வேண்டிய நாள்ல வேலை பார்க்க மனசில்லாம இருந்துட்டு வருஷக்கடைசி ஆனதும் தவிக்கிறதை புரிஞ்சுகிட்டேன். ஆனா கம்ப்யூட்டரை திட்டுன ஒரு அரசு ஊழியரை தேசியமயமாக்கப்பட்ட வங்கியிலயும் பார்த்திருக்கேன்.

சில பழமைவாதிங்க  புதுசா வந்துருக்குறதை கத்துக்கிட்டா கவுரவக் குறைச்சலா நினைக்கிறது உண்டு. வயசாயிட்டதால இயல்பா இருக்குற சில தயக்கம் காரணமா, இந்த இழவெல்லாம் இப்ப எதுக்கு. நாம இது நாள் வரை ஒழுங்காதான வேலை பார்த்துகிட்டு இருந்தோம்னு நினைச்சே சில மொள்ளமாறித்தனமெல்லாம் செய்துகிட்டு இருப்பாங்க.

இப்ப இரண்டு மாசத்துக்கு முன்னால நான் ஒரு இடத்துல பகுதிநேரப்பணிக்கு சேர்ந்துருக்கேன். அந்த நிறுவனத்துல பத்து வருஷமா பொழுதை ஓட்டிகிட்டு இருக்குற ஆளுங்க ரெண்டு பேர், அடிமட்ட வேலையா நினைக்குற போஸ்டிங்குக்கு வர்ற ஆளுங்களை எதுவும் சொல்றது இல்லை. கொஞ்சம் படிச்சுட்டு கம்ப்யூட்டர் அறிவோட வர்ற ஆளுங்களை சம்பளம் எதுவும் ஒழுங்கா கிடைக்காதுன்னு சொல்லி பயமுறுத்தி நாலே நாள்ல விரட்டிகிட்டே இருந்தாங்க.

அலுவலகத்தை எப்படியோ டெவலப் செய்திருக்கலாம். நானும் வளரணும், நிறுவனமும் வளரணும்னுங்குற கொள்கை என்னுடையது. ஆனா பலருக்கு அந்த எண்ணம் இல்லை. முதலாளி அல்லது மேலதிகாரியோட நான் நெருங்கிடுவேனோனுன்னு பயத்துல என்னைப் பத்தி நிறையவே வத்தி வெச்சுடலாம்னு முயற்சி நடந்துருக்கு. ஆனா நான் வேலைக்கு சேர்ந்த ரெண்டே நாள்ல வேட்டு வெக்கிற ஆளுங்களை கவனிச்சதுல அவங்க எந்த எந்த விஷயத்துல பிரச்சனை பண்ணுவாங்கன்னு புரிஞ்சுகிட்டு என்னோட நடவடிக்கைகளை அமைச்சுகிட்டதால  ஒண்ணும் பண்ண முடியாம தவிக்கிறாங்க.

ஆனா ஒரு விஷயம். இந்த மாதிரி ஆளுங்க வேலை செய்யுற இடத்தையும் உருப்புட விட மாட்டாங்க. கூட வேலை செய்யுறவனையும் காலி பண்றதுலயே கவனமா இருப்பாங்க.

வேலை பார்த்து செட்டிலாகணும்னு நான் இலக்கு நிர்ணயம் பண்ணியிருக்குறது சென்னை அல்லது கோவைதான்.பார்ப்போம். எந்த ஊர் கொடுத்துவெச்சிருக்குன்னு.

எல்லா ஊர்லயும் அரசு அலுவலகங்கள்ல இப்படி மார்ச் மாசம் வந்தா இளைய சமுதாயத்துக்கு ஆசை காட்டி ஒரு மாசம் புழிஞ்சு எடுத்து வேலை வாங்கிகிட்டு சொற்ப தொகையை கொடுத்து கழட்டி விட்டுடுறதுலயே குறியா இருக்காங்க.

பலருக்கு இந்த அனுபவம் இருக்கும். நான் எஸ்கேப். மறு வருஷம் என்ன செய்வாங்க.

"சாரி பார்த டிஸ்டபன்ஸ்...உங்களுக்கு தமிழ்ல டைப் அடிக்கத்தெரியுமா?...கவர்மெண்ட் வேலை கிடைக்க நான் ஏற்பாடு பண்றேன். அப்படின்னு அடுத்த ஆளைத் தேடுவாங்க. அவசரப்பட்டு ஏமாந்துடாதீங்கப்பா. அதுக்குன்னு எல்லாத்தையும் சந்தேகப்பட்டு ஒதுக்கிடாதீங்க. பார்த்து பக்குவமா நடந்துக்க வேண்டியது உங்க பொறுப்பு.

எழுதப்பட்ட தேதி - 25-மார்ச்-2010

செவ்வாய், 18 பிப்ரவரி, 2014

உங்கள் எதிர்காலத்தை தெரிந்து கொள்ள ஆசையா

எனக்கு எதிர்காலத்தைப் பற்றி எந்த கவலையும் கிடையாது என்று வெளிப்படையாக சொல்பவர்களுக்கு கூட அதைப் பற்றிய அச்சம் கொஞ்சமாவது இருக்கத்தான் செய்யும். நமது எதிர்காலம் எப்படித்தான் இருக்கும் என்று தெரிந்து கொள்ள நினைப்பது மனித இயல்பு. மனிதனுக்கு பசி, தூக்கம், உரிய வயதில் எதிர்பால் ஈர்ப்பு போன்ற விசயங்கள் எவ்வளவு இயல்பானதோ அப்படித்தான் எதிர்காலத்தின் மீதான ஆர்வமும்.



வாழ்வின் பல உண்மைகளை எளிமையாக உணர்த்தக்கூடிய நூல் ஜோதிடம் 360. அந்த நூலுக்கு நான் எழுதிய அணிந்துரை இங்கே.

அனுபவ ஜோதிடர் சித்தூர் எஸ்.முருகேசன் எழுதியஜோதிடம் 360 என்ற புத்தகத்தின் முதல் பதிப்பை படித்த எனக்கு நம் வாழ்வியலின் பல உண்மைகள் புரிந்தன. (இன்னும் புரிந்துகொள்ள முடியாத கோடிக்கணக்கான மர்மங்கள் மனித வாழ்வில் உண்டு. அதை உணர எத்தனை எத்தனை ஜென்மம் எடுத்தாலும் போதாது.)

1. ஒன்றை இழந்தால்தான் இன்னொன்றை பெற முடியும்.

2. தேவையற்றதை வாங்கினால் விரைவில் அத்தியாவசியமானதை விற்க நேரிடும்.

3. முதுமையில் கஷ்டப்படாமல் இருக்க இளமையில் கஷ்டப்படுங்கள்.

இந்த மூன்று தத்துவங்களையும் பலரும் கேள்விப் பட்டிருப்பீர்கள். வாழ்க்கை குறித்த எவ்வளவோ தத்துவங்கள் இருந்தாலும் இந்த மூன்றை உணர்ந்தாலே வாழ்க்கையை புரிந்து கொள்ளலாம். ஜோதிடம் 360 முதல் பதிப்பை முழுவதும் படித்ததும் ஜோதிடத்தின்  அடிநாதமும் இந்த மூன்று தத்துவங்களைத்தான் உணர்த்துகிறது என்பது புரிந்தது.

ஒவ்வொருவரும் எப்படி வாழ வேண்டும் என்று ஏற்கனவே இறைவன் எழுதிவிடுகிறான். பிறகு எப்படி அவற்றில் இருந்து விடுபட முடியும் என்ற கேள்வி சிலர் மனதில் எழலாம்.

நம் பூர்வ ஜென்ம பாவங்கள், நம் முன்னோர்களின் பாவங்கள் போன்றவற்றின் மூலம் நவக்கிரகங்களிடம் நாம் கடன் பட்டிருக்கிறோம். அந்த கடனை தீர்ப்பதன் மூலம் தண்டனையின் கடுமை குறையுமா என்பதான முயற்சிதான் பரிகாரங்கள்.

வண்டி பஞ்சர் ஆக வேண்டும் என்று இருந்தால் ஜோதிடம் பார்த்து பரிகாரம் செய்தால் தடுக்க முடியுமா என்றால் முடியாது. ஆனால் ஒர்க்ஷாப் அல்லது பஞ்சர் ஒட்டும் கடைக்கு அருகில் வண்டி பஞ்சர் ஆவதற்கு வாய்ப்பு உண்டு. 

ஜோதிடம் 360 புத்தகத்தில் உள்ள விசயங்களும் இதை அடிப்படையாக கொண்டுதான் இருக்கின்றன. சித்தூர் எஸ். முருகேசன் கூறும் பரிகாரங்கள் உங்களை ஆயிரம், லட்சம் என்று பணம் செலவழித்து அதை, இதை செய்ய வேண்டும் என்று குழப்புவதாக இல்லை. மாறாக நம் வாழ்க்கை முறைகளை நெறிப்படுத்த வைக்கிறது.

உதாரணமாக 30 வயது மனிதரின் காய்ச்சலை குணப்படுத்தும் ஒரு மருந்து பல நேரங்களில் மற்றொரு நபருக்கு வேலை செய்வதில்லை. அதற்கு காரணம், ஒவ்வொரு மனிதனின் உடல் இயக்கமும் ஒரே மாதிரி இருப்பதில்லை. அதே போல்தான் எல்லா மனிதர்களுக்கும் கிரகங்கள் ஒரே மாதிரியான நன்மை, தீமைகளை வழங்குவதில்லை.

சிலருக்கு பூர்வீக சொத்துக்கள் மூலமாக வாடகை, குத்தகை பணமே ஒரு மாதத்துக்கு 10 லட்ச ரூபாய் கிடைக்கும். ஆனால் வேறு சிலர், பழைய கூரை வீட்டை மாதம் ஆயிரம் ரூபாய் வாடகைக்கு விட்டுவிட்டு அதனால் ஏற்படும் பிரச்சனைகளை தீர்க்க 1 லட்ச ரூபாய் செலவழிக்க நேரிடும். இது போன்ற பிரச்சனைகளுக்கு காரணம் என்ன? அதை தவிர்ப்பது எப்படி என்ற வித்தை இந்த நூலை படிப்பவர்களுக்கு ஓரளவாவது வசப்பட வாய்ப்பு உண்டு.

ஒரு பெரிய அரங்கத்தில் ஆயிரம் நாற்காலிகள் இருக்கும். அதில் 900 நாற்காலிகள் காலியாக இருக்கும். அவற்றில் ஒரே ஒரு நாற்காலி மட்டுமே உடைந்திருக்கும். மிகச்சரியாக அதில் போய் ஒருவர் உட்காருவார். துரதிர்ஷ்டம் என்று ஒரு வார்த்தையில் பதில் சொல்லலாம். ஆனால் இப்படி நடப்பது  ஏதோ ஒரு செயலின் (முற்பிறவி அல்லது நாம் ஏற்கனவே செய்த தவறுகள்) எதிர்வினையாக இருக்கக்கூடும்.

ஆக இப்படி ஒவ்வொரு விஷ­யத்திலும் நம்மை மீறிய ஏதோ ஒரு வரையறைக்குட்பட்ட சக்திக்கு கட்டுப்பட்டுதான் உலகமும் மனித வாழ்வும் இயங்குகிறது. அதைப்புரிந்து கொள்ள இந்த நூல் உதவுகிறது. தாறுமாறாக அலைபாயும் மனதை கட்டுப்படுத்துவதுதான் கடினம்.  குறிப்பிட்ட வரையறைக்குட்பட்டு இயங்கும் நம் வாழ்க்கையை சிக்கலற்றதாக்க பல எளிய வழிகள் இருக்கின்றன. நாம்தான் அவற்றை பின்பற்ற மறுத்து மனம் போன போக்கில் வாழ நினைத்து துன்பங்களில் சிக்கிக்கொள்கிறோம். நாமே உருவாக்கிக்கொள்ளும் சிக்கல்களில் இருந்து விடுபட எளிமையான பாதைகளை காட்டுகிறது ஜோதிடம் 360.

1) ஜோதிடம் 360

வெள்ளி, 14 பிப்ரவரி, 2014

பெண்களுக்கு ஷார்ட் டேர்ம் மெமரி லாஸ்?

உங்கள் வாழ்வை எளிதாக மேம்படுத்த உதவும் நூல் ஒன்றின் அறிமுகம்தான் இந்த பதிவு.

பெரும்பாலும் ஆண்களுக்கு, இவ்வளவு நாள் இப்படி வீணாயிடுச்சே என்ற கவலையிலும், அடுத்து பத்து வருசம் கழித்து இந்த ரோட்டை வாங்கி நம்ம பேர் வெச்சிடணும் என்ற ஒரு சிறிய (?!) குறிக்கோள் இருக்கும்.

ஆனால் பெண்களைப் பொறுத்தவரை அதிக அளவில் சீரியலில் பெண்கள் படும் கஷ்டத்தை நினைத்து கவலைப்படவே நேரம் சரியாக இருக்கும். வீட்டு ஓனர் மூணு மாசத்துல காலி பண்ண சொல்லிட்டானே. இப்ப புதுசா வீடு பிடிச்சு இடம் மாற 10 ஆயிரம் ரூபாய் துண்டு விழுமே என்ற கவலையில் கணவன் இருப்பான். ஆனால் மனைவியைப் பொறுத்தவரை நீ புதுசா பிடிக்கிற வீட்டுல உன் அம்மா, அப்பா தங்கச்சி தம்பியை கொண்டு வந்து நுழைச்சிடாத என்ற அளவில்தான் யோசிப்பாள்.

மனைவியின் பேச்சைக் கேட்டுக்கொண்டு பெற்றவர்களை நடுத்தெருவில் நிறுத்துபவர்களும், பெற்றோர் சொல்லை வேதவாக்காக கொண்டு மனைவியை 24 மணி நேரமும் டார்ச்சர் செய்து கசக்கிப்பிழிந்து வேலை வாங்குவதும்தான் நாம் அதிகமாக காணும் விசயம்.



நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே என்று பேசும் ஆண்கள் மிக குறைவு. ஒன்று அம்மா மற்றும் சகோதரிகளிடம் அல்லது மனைவியிடம் சரண்டர் ஆகும் ஆண்களே அதிகம். இந்த உண்மை பெண்களுக்கும் தெரியும்.

பெண்கள் அல்லது ஆண்கள் ஏன் இப்படி இருக்கிறார்கள். கணவன்/மனைவி-யின் செயலுக்கு, குணாதிசயத்துக்கு காரணம் என்ன என்று தெரிந்தால் அன்பை கொடுத்து/பெற்று நிம்மதியாக வாழலாம்.

பல குடும்ப சிக்கல்களுக்கு முக்கிய காரணமே ஆண் அல்லது பெண் ஏன் இப்படி செய்கிறார் என்று அதன் காரணத்தைப் புரிந்து சரிசெய்ய நினைக்காமல் மேலோட்டமாக அவர்கள் செய்யும் செயலை மட்டும் தடுக்க/கண்டிக்க நினைப்பதுதான் விபரீதத்துக்கு காரணம்.

இது மாதிரியான சில அடிப்படை உண்மைகளை அதாவது தாய்-தந்தை, சகோதரன்-சகோதரி, கணவன்-மனைவி ஆகியோரின் செயல்பாடுகளுக்கு உளவியல் ரீதியாக என்ன காரணம் இருக்கும் என்பதை எளிமையாக புரிய வைக்கிறது சித்தூர் எஸ்.முருகேசன் எழுதிய ஆண் பெண் வித்தியாசங்கள் நூல்.

பெண்களுக்கு ஷார்ட் டேர்ம் மெமரி லாஸ் என்று இந்த பதிவுக்கு பெயர் வைக்க காரணம், பெரும்பாலான பெண்களின் கவலையை ஸ்கேன் செய்து பார்த்தீர்கள் என்றால் அன்றைய கதை அல்லது அதிகபட்சம் அடுத்த ஒரு வாரத்துக்குள் செய்ய வேண்டிய வேலைகளைப் பற்றியதாகத்தான் இருக்கும். ஆனால் ஆண்களில் பலர், 8 மாசம் கழித்து ஏழாம் பங்காளி வீட்டு கிரகப்பிரவேசத்துக்கு போகணும், எந்த ட்ரெய்ன்ல டிக்கட் புக்பண்றதுன்னு இப்போ மண்டையை பிச்சுகிட்டு இருப்பாங்க. (பெண்களையும் சாதாரணமாக நினைத்து விட முடியாது. தன் தம்பி அல்லது அண்ணன் வீட்டு விசேஷம் என்றால் இதை தாண்டி ப்ளான் போடும் கில்லாடிகளாக இருக்கவும் வாய்ப்பு உண்டு.)

1) ஜோதிடம் 360

ஞாயிறு, 1 ஜனவரி, 2012

2012ல விலைவாசி உயர்வை சமாளிப்பது எப்படி?

அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்

நீ ஒருவர் மீது குற்றம் சொல்லி விரலை நீட்டும்போது மற்ற நான்கு விரல்கள் உன்னைத்தான் நோக்கும் என்று சொல்வார்கள். அது போல் விலைவாசி நம்மை கசக்கிப்பிழியும் நேரத்தில் அரசையும் சமூகத்தையும் குறை சொல்லும் முன்பு சுயக்கட்டுப்பாட்டுடன் சில விஷ­யங்களை கவனிக்க வேண்டும்.

தமிழகத்தின் மின் தேவையில் கிட்டத்தட்ட இருபத்தைந்து சதவீத மின்சாரம் பற்றாக்குறையாக உள்ளது என்று சொல்கிறார்கள். குளிர்காலத்திலேயே இந்த கதி. ஏப்ரல், 'மே'யிலே என்ன கதியோ. வளர்ந்த சில நாடுகளில் 5 முதல் 7 சதவீதம் வரை மட்டுமே மின்சாரத்தை விநியோகத்துக்காக கம்பி வழியே கொண்டு செல்லும்போது இழப்பு ஏற்படுகிறது என்று சொல்கிறார்கள். ஆனால் நம் நாட்டில் சொல்லப்படும் கணக்கு 40 சதவீதம் வரை. திருட்டு மின்சாரமும் உள்ளடக்கிய கணக்காக இது இருக்கலாம்.

இந்த இழப்பை 20 சதவீதம் என்ற அளவிற்கு குறைத்தாலே பாதி பற்றாக்குறை பறந்தோடிவிடுமே. அடுத்து தெருவிளக்கு, அரசு அலுவலக வளாகம் என்று எந்த அளவு சாத்தியமோ அந்த அளவிற்கு சோலார் சக்தியில் இயங்கும் விளக்குகளை அமைத்தால் எவ்வளவோ மின்சாரம் மிச்சம். எது எதையோ இலவசமாக கொடுப்பவர்கள் ஆண்டுக்கு 4 சிஎப்எல் பல்ப் - களை இலவசமாக கொடுக்கலாம். அல்லது சலுகை விலையில் கொடுக்கலாம். அடுத்து தொகுப்பு வீடுகளுக்கு இலவச மின்சாரம். இது நடுத்தர வர்க்க மக்களை வஞ்சிக்கும் செயல். உண்மையில் மின் கட்டணம் செலுத்த வசதியே இல்லாதவர்களுக்கு இப்படி இலவச மின்சாரம் கொடுத்தால் நியாயமாக ஒரு நாளைக்கு ஒரு யூனிட் போதும். அதற்கு மேல் நுகர்பவர்கள் நிச்சயமாக ஏழைகளாக இருக்கப்போவதில்லை. இப்படி ஒரு விளக்குக்காக கொடுக்கப்படும் வீடுகளில் ஏ/சியைத்தவிர அனைத்தும் இருக்கின்றன. ஆனால் ஓட்டுக்காக இப்படி இலவச மின்சாரத்தை கொடுத்து ஒரு குறிப்பிட்ட பகுதி மக்கள்மீதே அனைத்து சுமைகளையும் ஏற்றுகிறார்கள்.

இப்போது இருக்கும் அனைத்து அரசுப்பள்ளிகளையும் போதிய கட்டமைப்பு வசதிகளுடன் சரியான எண்ணிக்கையில் ஆசிரியர்களை நியமித்து இயங்கச் செய்தால் பஸ் பாஸ் பெறும் மாணவர்களின் எண்ணிக்கை மிக மிக குறைவாகத்தான் இருக்கும்.

நான்குவழிச்சாலைகளுக்கு லட்சக்கணக்கான மக்களிடம் இருந்து நிலத்தை கையகப்படுத்தும் அரசால் சென்னை முதல் கன்னியாகுமரி வரை இரட்டை ரயில் பாதைகளுக்கு ஏற்பாடு செய்வதில் என்ன கஷ்டமோ தெரியவில்லை. அது சரி. 4 வழிப்பாதை என்று சொல்லி ஒரே நாளில் ஒரு கோடி ரூபாய் கூட சுங்கம் வசூலிக்கலாம். ஆயிரக்கணக்கில் ஆம்னி பஸ்களை இயக்கி மக்களை சுரண்டலாம். இரட்டை ரயில் பாதை அமைந்து விட்டால் இதற்கெல்லாம் வழி இருக்காதே. (இதனால் பலர் வேலையிழக்கக்கூடும் என்று சொல்லாதீர்கள். சில பெரு முதலைகள் அதாவது அரசியல்வாதிகள் உள்ளிட்ட சிலர் மட்டுமே இன்னும் 10 தலைமுறைக்கு சொத்து சேர்க்க இந்த 4 வழிப்பாதைகள் அதிகம் உதவி செய்கின்றன.)

திருட்டு விசிடி டாட் காம் என்று இணையதளமே இருக்கிறது. அந்த அளவுக்கு இணைய தளங்களால் சினிமா சீரழிந்து வருகிறது என்று சொல்கிறார்கள். அது ஒரு புறம் இருந்தாலும் முக்கியமாக ஒரு எதிரி சினிமாவுக்குள்ளேயே இருப்பதாகத்தான் எனக்கு தோன்றுகிறது. ஏற்கனவே இருக்கும் இரண்டு கதாநாயகிகள் போதாது என்று இன்னும் இரண்டு பேரை வெளிநாட்டுக்கு அழைத்துச் சென்று பல லட்சம் செலவு செய்து பாடலை படமாக்கி அதை எண்ட் டைட்டிலுக்காக சேர்க்கும் அளவுக்கு சிக்கன சிகாமணிகள் தமிழ் சினிமாவில் இருக்கிறார்கள். இவர்கள் போதாதா சினிமாவை அழிப்பதற்கு.

பெரிய ஹீரோக்களுக்கு கோடிக்கணக்கில் சம்பளம் என்று சொல்கிறார்கள். ஆனால் சாதாரண டெக்னீஷியனுக்கு ஷூட்டிங் நாட்களில் சாப்பாடு கிடைத்தால் பெரிய வி­ஷயம். அந்த அளவுக்கு கொடுமைப்படுத்துவதும் நடக்கிறது. இது நமக்கு தேவையில்லை. ஆனால் பொதுமக்கள் கொஞ்சம் உஷாராகி விட்டதன் அடையாளம்தான் எந்த படமும் ஒரு வாரத்துக்கு மேல் தியேட்டரில் தங்காமல் எஸ்கேப்பாகிக்கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டில் இன்னும் பல கோடிப்பேருக்கு மாத வருமானமே 3 ஆயிரத்திலிருந்து 6 ஆயிரம் ரூபாய்வரைதான் என்பதை இவர்கள் மறந்து விட்டார்கள் போலிருக்கிறது. அதனால்தான் திருவாரூர் போன்ற சின்ன ஊர்களிலேயே ஒரு டிக்கட் 100 ரூபாய்க்கு விற்கிறது. 4 பேர் கொண்ட ஒரு குடும்பம் படம் பார்க்க தியேட்டருக்கு சென்றால் 500 ரூபாய் காலி. ஆத்தாடி...அந்த காசு இருந்தா ஒரு 4 நாளைக்கு குழம்பு வைக்கலாம் என்று நிறைய மக்கள் நினைக்கிறார்கள்.

இருசக்கர வாகனத்தை பயன்படுத்துதல், கேஸ் பயன்பாடு, மின்சாதனங்களை பயன்படுத்துவதில் ஒழுங்குமுறை என்று நாம் சிக்கனமாக இருந்தாலே பாதி கஷ்டத்திலிருந்து தப்பி விடலாம்.

பாத்திரம் ஓட்டையாக இருந்தால் இமயமலை முழுவதும் உருகி ஓடினால் கூட அது நிறையாது என்பதை புரிந்து கொண்டால் சரி.

பற்றாக்குறை என்றால் வருமானத்தை பெருக்கு அல்லது செலவை சுருக்கு என்பதுதான் தாரகமந்திரம். வருமானத்தை பெருக்குவது என்பது மிகவும் திட்டமிட்டு அதிக உழைப்பை கொடுத்தால் மட்டுமே சாத்தியம். ஆனால் சிக்கனம் என்பது சற்று முயற்சி செய்தாலே போதும்.

மேலே நான் சொன்ன சில சிக்கன நடவடிக்கைகளில் முக்கியமாக வீணாவதை தவிர்க்கும் நடவடிக்கைகளில் ஏற்கனவே இறங்கியவர்கள் அப்போதும் பற்றாக்குறை என்றால் வருமானத்தை அதிகப்படுத்தும் நடவடிக்கைகளில்தான் இறங்க வேண்டும்.

அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

பின் குறிப்பு: இதில் அரசியல் வியாதிகளைப்பற்றி அதிகம் சொல்லவில்லையே என்று தானே நினைக்கிறீர்கள். அவர்கள் செய்வது அவ்வளவும் அக்கப்போர்தான். அவர்கள் செலவழிப்பதில் 95 சதவீதம் தெண்டம்தான். அப்புறம் எதைச் சொல்ல...எதை விட...

திங்கள், 14 பிப்ரவரி, 2011

காதல் என்பது...

தமிழ் சினிமாவில் காதலை எவ்வளவு முடியுமோ அவ்வளவு மோசமாக அடித்து துவைத்து பிழிந்து விட்டார்கள் என்று நினைக்கிறேன். அதனால் தான் இப்போது வரும் படங்களில் வரும் காதல் காட்சிகள் பெரும்பாலும் அபத்தமாகவே இருக்கின்றன.

2000வது ஆண்டுக்கு முன்பு வரை படங்களில் வரும் காதல் காட்சிகள் அவ்வளவு சுவாரஸ்யமாக இருக்கும். ஆனால் இப்போது வித்தியாசம் என்ற பெயரில் அபத்தமாகத்தான் எதையாவது செய்கிறார்கள் என்று தோன்றுகிறது. என் வயது முப்பதை தொடப்போவது கூட  இதற்கு காரணமாக இருக்கலாம்.

அது போகட்டும். சென்ற ஆண்டு யூத்ஃபுல் விகடனில் நான் கண்ட நிஜக்காதல் என்ற தலைப்பில் ஒரு கட்டுரை வெளியானது. நான் கல்லூரியில் படிக்கும்போது சக மாணவர்கள் எல்லாம் ஏதாவது ஒரு கனவு தேவதையை மனதில் நினைத்து டூயட் பாடிக்கொண்டிருந்த நேரம், சக மாணவி ஒருத்தி என்னிடம் வந்தாள். "நான் பதினோராம் வகுப்பு படிக்கும்போதில் இருந்தே ஒருவரை நேசிக்கிறேன். இது சரியா, நான் அவரை நம்பி கல்யாணம் பண்ணிக்கலாமா என்று அவள் கேட்கும் அளவுக்கு நான் பொறுப்பான ஆளாக தெரிந்திருக்கிறேன்.(நான் ரொம்ப நல்லவனாக்கும் அப்படின்னு பில்டப் கொடுக்க விரும்பலை. டீனேஜ் வயதில் எல்லோரையும் போல் இளம் பெண்களைப் பார்க்கும்போது மனதில் ஈர்ப்பு ஏற்பட்டது உண்மைதான். ஆனால் குடும்ப சூழ்நிலை காரணமாக வேலை முழு நேரம் படிப்பு பகுதி நேரம் என்ற அளவில் ஆகிவிட்டது.வருமானத்தை தேடி ஓடினேன்...ஓடினேன் என்ற அளவில்தான் இன்னமும் இருக்கிறேன்.)

அந்த மாணவி என்னிடம் ஆலோசனை கேட்பதற்கு முக்கிய காரணம், அப்போது என்னுடன் படித்துக்கொண்டிருந்தவர்களில் நான்தான் நன்றாக படிப்பவன் (செய்தி, கதை, கட்டுரை என்று கையில் சிக்கும் எல்லாவற்றையும்) என்பதால்தான்.

அந்த மாணவி வீட்டின் எதிர்ப்பை மீறி உறுதியாக நின்று காதலித்தவனையே திருமணமும் செய்து கொண்டாள். இப்போது ஒரு குழந்தை இருக்கிறது.


இதே போல் வேறு சில காதலர்களையும் நான் சந்தித்திருக்கிறேன்.

தனியார் நிறுவனத்தில் வேலை செய்த இருவர் காதலித்தார்கள். அந்தப் பெண் தன் காதலனின் ஜாதகத்திற்கு பொருந்தும் வகையில் தனக்கும் ஜாதகம் தயார் செய்து இரு  வீட்டாரின் சம்மதத்தோடு திருமணம் செய்து கொண்டாள். இருவரும் வேறு வேறு ஜாதி. ஆனால் இருவரின் வீட்டிலும் ஜாதி நம்பிக்கையை காட்டிலும் ஜாதக நம்பிக்கை அதிகமாக இருந்தது இவர்களின் அதிர்ஷ்டம்தான் என்று சொல்ல வேண்டும்.

இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால், அந்தப் பெண் தன் காதலனின் சகோதரன் மனைவி கொண்டுவந்ததைக் காட்டிலும் அதிகமான வரதட்சணைதான் வேண்டும் என்று பிறந்த வீட்டிடம்  அடம் பிடித்ததுதான்.


அடுத்த சில காதல் விவகாரங்கள் உறவினர் வீடுகளில் நடந்தது. முன்பெல்லாம் மிக அதிகமாக எதிர்ப்பு தெரிவித்து சாகும் வரை ஒதுக்கி வைத்திருந்த சம்பவங்கள் எல்லாம் என் கண் எதிரே நடந்திருக்கிறது. ஆனால் இப்போது எல்லாம் அந்த அளவுக்கு எதிர்ப்புகள் இல்லை. அதற்கு முக்கிய காரணம், கணிணிப்புரட்சிதான். இப்போது தாராளமயமாக்கல் கொள்கைக்குப் பின்பு ஒரு காலத்தில் பலரும் கற்பனை செய்து பார்க்க முடியாத அளவுக்கு மிக இளம் வயதில் மிக அதிகமாக சம்பாதிக்கத் தொடங்கி விடுகிறார்கள்.

அந்த பணம்தான் பல பெற்றோர்களின் காதல் ஏற்பு கொள்கைக்கு காரணமாக இருக்கிறது.

நான் சிறுவனாக இருக்கும்போது, இளம்பெண்கள் பின்னாலேயே சைக்கிளில் செல்லும் இளைஞர்களை மோசமாக திட்டிய ஒருவர் சமீபத்தில் தனது மகளுக்கு அவள் காதலனையே திருமணம் செய்து வைத்திருக்கிறார்.

அதற்கு அவர் சொல்லும் காரணம், வளர்ந்த புள்ளை, அவளுக்கு நல்லது கெட்டது தெரியாதா என்ன...இப்படி அவர் பேசக் காரணம் காதலித்த அந்த பெண் சென்னையில் ஒரு கணிணி நிறுவனத்தில் மாத சம்பளமாக அரை லகரத்துக்கு மேல் வாங்குகிறாள்.

பல பெற்றோர்களுக்கு தங்கள் மகனோ, மகளோ தேர்ந்தெடுத்திருப்பது நல்ல வாழ்க்கைத்துணைதானா என்ற அக்கறை அவ்வளவாக கிடையாது. நாம் சொல்பவரை திருமணம் செய்து கொண்டார்கள் என்றால் வெளியில் இருப்பவர்களிடம் தன் மகன், மகள் தன்னுடைய பேச்சை மீற மாட்டார்கள் (அடிமைகள்) என்பதை சொல்லிக்கொள்ளும் ஆசை மட்டுமே. இப்போது இந்த மனோபாவம் மாறியிருக்கிறது என்று நீங்கள் சொல்லலாம். ஆனால் பொருளாதாரக்காரணங்கள் பல பெற்றோர்களை வேறு வழியின்றி மாற வைத்திருக்கிறது என்பதே என்னுடைய தனிப்பட்ட கருத்து.

கிட்டத்தட்ட முப்பது வயதாகும் பெண் தனியார் நிறுவனத்தில் வேலை செய்துகொண்டிருக்கிறார். அவரது வருமானத்தை முக்கியமாக கருதும் அவரது பெற்றோர் மகளின் திருமணப்பேச்சை எடுப்பதே இல்லை என்பதை விட கவனமாக தவிர்த்துவருகிறார்கள் என்று சொல்லாம். இப்படிப்பட்டவர்களை நான் இது நாள் வரை கதைகளிலும் சினிமாக்களிலும் மட்டும்தான் அறிந்திருந்தேன். கல்லூரியில் என்னுடன் படித்த மாணவியையே இந்த நிலையில் பார்க்கும்போது எனக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை. பல சூழ்நிலைகளில் ஒரு சாமானியனாக வெறும் பார்வையாளனாகவே கடந்து செல்லவேண்டியிருக்கிறது.

இந்த இருபத்து ஒன்பது வயது பெண்ணின் கதை இப்படி என்றால் மூன்று தினங்களுக்கு முன்பு 20வயது நிரம்பாத பத்தாம் வகுப்பு கூட படிக்காத பெண் காதலனுடன் தலைமறைவாகிவிட்டாள். தந்தை இறந்து விட்ட நிலையில் அந்தப் பெண்ணின் தாய் மிகக்கடுமையாக உழைத்து மகளின் திருமணத்தை நல்லபடியாக நடத்த வேண்டும் என்று போராடிக்கொண்டிருக்கும் நேரத்தில் காதலுக்கு எதிர்ப்பு வருமோ என்று அஞ்சி இவள் அவனுடன் தலைமறைவாகி விட்டாள்.

தினம் தினம் இப்படி பல சம்பவங்களைப் பார்க்கிறேன். பத்திரிகை, தொலைக்காட்சி நிருபர்கள் பலரும் எனக்கு நண்பர்களாக இருப்பதால் இது போன்ற பல செய்திகள் என் கவனத்துக்கு வந்து விடுகின்றன.

இதையெல்லாம் பார்க்கும்போது இதெல்லாம் காதலா...அடச்சே...என்று துப்பத் தோன்றுகிறது. அப்படி சொன்னால் கார் ஓட்டத்தெரியாதவன் காரைக் கொண்டு போய் மோதிவிட்டு காரைக் குற்றம் சொன்ன கதையாகிவிடும்.

காதல் என்பது காதலர்களுக்கும் சரி, அவர்களது குடும்பத்துக்கும் சரி மன வேதனையை, இழப்பை கொடுக்காமல் இருக்க வேண்டும். பல நேரங்களில் பையனோ/பெண்ணோ சரியான துணையை தேர்வு செய்திருந்தாலும் ஈகோ காரணமாக பகைமை பாராட்டுவது இதில் சேராது.

மொத்தத்தில் காதல் என்பது சரியா தவறா என்று வரையறுத்துக்கூறிவிட என்னால் முடியவில்லை.

இருவரது மனம் ஒத்துப்போவதில் தொடங்கி படிப்பு, வேலை, குடும்ப நிலை என்று பல புறக்காரணிகள்தான் காதலை சரி, தவறு என்று எண்ண வைக்கின்றன.

திங்கள், 5 ஜூலை, 2010

புகைப்பிடிக்கும் பழக்கத்தை குறைக்க சூப்பர் ஐடியா

1996ம் ஆண்டு நான் சினிமாதியேட்டரில் வேலை,பள்ளிக்கூடத்தில் படிப்பு என்று இரட்டைக்குதிரையில் சவாரி செய்துகொண்டிருந்த காலகட்டம்.(ஒரு குதிரை சவாரியும் இன்று வரை எனக்கு கைகூடலைன்னுங்குறதெல்லாம் இப்ப நமக்கு தேவையில்லை.)
அப்போது திருவாரூர் நகரத்தில் நான்கு, புற நகர்ப்பகுதியில் ஒன்று என்று ஐந்து தியேட்டர்கள் இருந்தன.இப்போது புற நகர்ப்பகுதியில் இருந்த தியேட்டர்(தியேட்டர் மாதிரி) நெல் கோடவுனா மாறிட்டதா சொன்னாங்க.

திருவாரூர் நகரப்பகுதியில் இருந்த ரெண்டு தியேட்டர்களை இடித்து அப்புறப்படுத்தியாச்சு.மிச்சமிருக்குற மூணு தியேட்டர்கள் எப்படியோ சமாளிச்சு உசுரோட இருக்கு.

இந்த மூணு தியேட்டர்களும் 1996ல சிறப்பா இயங்கிகிட்டு இருந்த சமயம்.பரம்பரை,உள்ளத்தை அள்ளித்தா, நாட்டுப்புறப்பாட்டு,பூவே உனக்காக, காலம்மாறிப்போச்சு,பாஞ்சாலங்குறிச்சி,சிவசக்தி போன்ற படங்கள் ஒரு தியேட்டர்ல குறைந்தபட்சம் முப்பதுநாள், அதிகபட்சம் அறுபதுநாள் என்ற கணக்குல நல்லா வசூல் செய்துகிட்டு இருந்துச்சு.

இன்னொரு தியேட்டர்ல தாயகம், செங்கோட்டை, இந்தியன், காதல்கோட்டை, அவ்வைசண்முகி அப்படின்னு சூப்பர் டூப்பர் ஹிட் படங்களின் அணிவரிசை.
இப்படி ரெண்டு தியேட்டர்களும் பிரமாதமான படங்களைத் திரையிட்டு டிக்கட் விலைகளை பதினைந்து, இருபதுன்னு வசூலிச்சுகிட்டு இருந்தாங்க.(பதினைந்து வருஷத்துக்கு முன்னால)

இது தவிர இன்னொரு தியேட்டர்ல ஆறு ரூபாய், பத்து ரூபாய் என்று டிக்கட்டில் உள்ள விலையையே வசூலித்தபடி சுமாரான படங்களைத் திரையிட்டாங்க.ஆர்ப்பாட்டமில்லாமல் அமைதியாக நல்ல வசூலைதான் அந்த படங்கள் தந்துச்சு.

அந்த மாதிரி சின்ன விலையில டிக்கட் விற்பனை செய்ததுக்கு காரணம்,சின்ன பட்ஜெட் படங்களா அவை இருந்ததுதான்.

ஆனா இப்போ,மாஸ் ஓப்பனிங் இருக்குன்னு நம்புற ஹீரோவுக்கு பத்துப் பதினைஞ்சு கோடியை சம்பளமா கொடுத்து, சத்யம், ஐனாக்ஸ் மாதிரியான தியேட்டர்கள்ல திரையிட்டு ஒரே வாரத்துல கோடிகளை அள்ளிடணும்னு நினைக்கிறாங்க.இந்த ஐடியா பல நேரங்கள்ல தப்புக்கணக்காயிடுது.

காயலான் கடைக்குப் போற நிலையில இருக்குற பஸ்சுலயும் ஏ/சி வால்வோ பஸ்சுலயும் ஒரே டிக்கட் வசூல் செய்தா அது எப்படி சரியா வரும்? இது கூட தீபாவளி, பொங்கல் சமயமா இருந்தா வேற வழி இல்லாம சொந்த ஊருக்குப் போறவங்க புலம்பிகிட்டே ஏறுவாங்க.அதுவும் ஒருநாள் கூத்துதான்.
பாழடைஞ்ச நிலையில இருக்குற தியேட்டர்களிலயும் ஐம்பது நூறுன்னு டிக்கட் விலை வெச்சா யாரால தாங்க முடியும்?. அவனவன் முப்பது ரூபாய் கொடுத்து குடும்பத்தோட ...........யில பார்த்துடுறான்.

செல்போன் உபயோகம் இப்படி அதிரடியா வெற்றி அடைஞ்சதுக்கு முக்கிய காரணம் என்ன? ஆயிரம் ரூபாயில இருந்து லட்ச ரூபாய் வரை மொபைல் கிடைக்குது. எல்லோருக்கும் தாங்கக்கூடிய விலையில சேவைக்கட்டணமும் இருக்கு.

வெளி செல்லும் ஒரு நிமிட அழைப்புக்கு பத்து ரூபாய்,உள் வரும் ஒரு நிமிட அழைப்புக்கு ஐந்து ரூபாய் என்று கட்டணம் இருந்தால் இந்த துறையின் வளர்ச்சி எப்படி இருந்திருக்கும்னு சொல்ல பள்ளிக்கூட பையனே போதும்.பி.ஹெச்.டி படிச்ச நிபுணர் தேவையில்லை.

எந்த தொழிலா இருந்தாலும் நிறைய எண்ணிக்கையில் வாடிக்கையாளர் இருந்தால் அவர்களுக்கு பொருளை கொண்டு சென்று சேர்ப்பது சற்று கூடுதல் செலவு பிடிப்பதோடு, பணிச்சுமையும் அதிகரிக்கத்தான் செய்யும். இதற்குப் பயந்து பெரிய விலைப்பொருட்கள் அல்லது பெரிய அளவு வாங்கும் வாடிக்கையாளர்களை மட்டும் நம்பியிருந்தால் ஒரே ஒரு வாடிக்கையாளர் எடுக்கும் சின்ன முடிவு கூட பெரிய அளவில் கவிழ்த்துவிடும்.

இப்போது சினிமா தொழிலிலும் இந்த..................................தனத்தைதான் சில தயாரிப்பாளர்கள் செய்துகொண்டிருக்கிறார்கள்.

என்னைப் பொறுத்தவரை அவர்கள் சினிமாவை தொழிலாக நினைக்காமல் சூதாட்டமாக மட்டுமே கருதி பேராசைப்பட்டதுதான் நல்ல படங்களுக்கு கூட சரியான தியேட்டர் கிடைப்பதில்லை. கிடைத்தாலும் அதிக விலை காரணமாக அதிக நாட்கள் படம் ஓடுவதில்லை.

இதே டெக்னிக்கை பயன்படுத்தினால் புகைப்பிடிக்கும் வழக்கத்தையும் குறைத்துவிட முடியும் என்று எனக்குத் தோன்றுகிறது.

எப்படின்னுதானே கேட்குறீங்க?

ஒரு சிகரெட் விலை மூணு ரூபாய் நாலு ரூபாய் என்று இருப்பதால்தானே நிறையபேர் ஈஸியா அதுக்கு அடிமையாயிடுறாங்க? ஒரு சிகரெட் விலை நானூறு ரூபாய் ஐநூறு ரூபாய் என்று வைத்துவிட்டால் அதைப் பயன்படுத்தி உடல்நலத்தை கெடுத்துக்கொள்வதோடு, அடுத்தவர் நலனுக்கும் வேட்டு வைப்பது குறையும்.
இப்படித்தானே டிக்கட்,பார்க்கிங்,கேண்டீன் கட்டண விலையேற்றம் ஆகிய விஷயங்களை மட்டுமே வைத்து தியேட்டருக்கு செல்லும் நடுத்தர மக்களை அலற விடும்போது சிகரெட் விலையை ஏற்றி புகைப்  பிடிக்கும் வழக்கத்தை குறைக்க முடியாதா என்ன?

வெள்ளி, 29 ஜனவரி, 2010

கலாம் கனவுக்கு நம்பிக்கையூட்டிய புதிய தலைமுறை இளைஞர்

ஜனவரி 6, 2010 அன்று லஞ்சம் வாங்கிய தாசில்தார் கைது என்ற செய்தி எல்லா நாளிதழ்களிலும் இடம்பிடிக்கக் காரணமான இளைஞருக்கு இந்த துணிச்சலைத் தந்தது லஞ்சம் கொடுக்காமலேயே நமது நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றிக்கொள்ள சட்டத்தில் வழி இருக்கிறது என்ற வல்லுனரின் விளக்கம் புதிய தலைமுறை இதழில் வெளி வந்த கட்டுரைதானாம்.

ராஜ்குமார் என்ற அந்த இளைஞர் பி.பார்ம் படிக்கும் மாணவர் என்ற செய்தி மேலும் நம்பிக்கை அளிக்கிறது. இவர் ஒருவர் மட்டும் லஞ்சம் கொடுக்க மாட்டேன் என்று பிடிவாதம் பிடித்து தவறு செய்யும் அதிகாரியைப் பிடித்துக் கொடுத்துவிட்டால் போதாது. எல்லாரும் இதே மன உறுதியுடன் சட்டத்தின் துணையுடன் போராடினால் மாற்றம் நிச்சயம்.

சில வாரங்களுக்கு முன்பு திருச்சி பாஸ்போர்ட் அலுவலகத்தில் விண்ணப்பம் அளிக்க அதிகாலையில் இருந்து நிறைய பேர் காத்துக் கிடக்க, சில பொது மக்கள் காவலாளிகளுக்கு லஞ்சம் கொடுத்து உள்ளே நுழைய முயற்சித்தபோது தள்ளுமுல்லு ஏற்பட்டு காவல்துறை தடியடி நடத்தும் அளவுக்கு நிலமை மோசமாகிவிட்டிருக்கிறது.

லஞ்சம் கொடுத்து முறைகேடாக உள்ளே நுழைய முயன்றவர்களால் கால்கடுக்க வரிசையில் நின்று தங்கள் உரிமைக்குப் போராடியவர்களுக்கு தடியடி.இந்த மாதிரி கொடுமைக்கும் ஒரு வகையில் மக்களேதான் காரணமாக இருக்கிறார்கள்.மக்கள் திருந்தினால் அதிகாரிகள் தங்கள் கையை லஞ்சத்துக்காக நீட்ட முடியுமா?

சில நாடுகளில் கடமையை மீறுவதற்கு மட்டும்தான் லஞ்சம். இங்கே கடமையை செய்வதற்கே லஞ்சம் என்று இந்தியன் திரைப்படத்தில் ஒரு வசனம் வரும். அது எத்தனை உண்மை!
உண்மை பேசுவது பெரிய விஷயம் இல்லை.பேசுபவரும் இதே போல் நேர்மையாக இருக்கவேண்டும். அப்போதுதான் பூரண பலன் கிடைக்கும்.

******
இது குறித்து தினமலர் வார இதழில் ஒரு கட்டுரை வெளிவந்திருக்கிறது.அதுவும் உங்கள் பார்வைக்கு.



வாரமலர்
அறத்திற்கு அழிவுண்டா? (ஆன்மிகம்)
- ஞானானந்தம்
- வைரம் ராஜகோபால்


உண்மையே பேசு; அறமே செய் என்கிறது வேதம். இந்த கலிகாலத்தில் உண்மையே பேசினால் ஊரெல்லாம் எதிரி; உலகெல்லாம் பகை என்று பலர் பயப்படுகின்றனர். உண்மையைப் பேசுகிறவர்கள், உண்மை பேசினால் மட்டும் போதாது; அறவழியில் வாழ்கிறவர் களாகவும் இருக்க வேண்டும். உங்கள் வாழ்வு, அறவழியில் இல்லாமல் உண்மை பேசுகிறேன் என்று பிறரைப்பற்றி பேசினால் துன்பம் தான் மிஞ்சும்.

பழைய வைத்திய முறையில் மருந்துகள் கொடுக்கும் போது, மருந்து மட்டும் சாப்பிட்டால் போதாது; பத்திய உணவுகள் சாப்பிட்டு, சில மோசமான உணவுகளை சாப்பிடாமல் இருந்தால்தான் மருந்து வேலை செய்யும் என்று சொல்வர். சிலசமயம், பத்தியமற்ற உணவுகள் சாப்பிட்டால் மருந்து விபரீதமாகக் கூட வேலை செய்யும்; அதே மாதிரிதான் உண்மை பேசுவது என்பது மருந்து மாதிரி. அறவழியில் வாழ்வது பத்திய உணவு மாதிரி. இரண்டும் இணைந்து நிகழ வேண்டுமே ஒழிய, உண்மை மட்டும் பேசி அறவழியில் நாம் நடக்கா விட்டால் அடி, உதைதான் கிடைக்கும்.

அறவழியில் நடக்கக் கூட பலர் பயப்படுகின்றனர். அறவழியில் நடந்த ராமர், தருமர் கஷ்டப்பட்டனர். அயோக்கியர்கள் சுகவாழ்வு வாழ்கின்றனர் என்று பலர் புலம்புகின்றனர். இது மாயை; பெரிய பொய். அவர்கட்கு நேர்ந்த சோதனை களைத் துன்பங்களாக கருதுகின்றனர்; ஆனால், அவர்கள் அப்படி இல்லை. நெருப்புக்குக் காகிதம் அஞ்சும்... தங்கம் பயப்படுமா? நீங்கள் அறவழியில் நடந்தால் வரும் அனுபவங்களைத் துன்பம் என்று முத்திரை குத்தாதீர்கள்; அறவழியில் நடப்பவருக்கு ஒருநாளும் துன்பம் வராது. "இன்பமே எந்நாளும்... துன்பம் இல்லை' என்கிறது நாவுக்கரசர் தேவாரம்.

ஒரு ராஜாவின் அரண்மனையில் சிலம்பு திருட்டுப் போய்விட்டது. அரசனுக்குக் கடுங்கோபம். சிலம்பைக் கண்டுபிடிக்க ஒற்றர்களை ஏவினான்; பயன் இல்லை."ஒரு மாதத்திற்குள் சிலம்பைக் கொண்டு வந்து தருபவர்கட்கு பெரும் பரிசுத் தொகை...' என்று அறிவித்தான். கூடவே, மக்களை மிரட்ட, அதற்கு பிறகு, அது யாரிடம் இருந்தது என்று கண்டுபிடிக்கப்பட்டால் மரண தண்டனை என்று அறிவித்தான்.

அந்த ஊருக்குத் தம் சீடர்களோடு வந்து கொண்டிருந்தார் துறவி ஒருவர். வழியில் கீழே கிடந்த சிலம்பு இவர் கைக்கு அகப்பட்டது. விசாரித்தபோது, "இது ராஜாவின் சொத்து; அதை உடனே கொண்டு போய் கொடுத்தால் பரிசு உண்டு. குறிப்பிட்ட நாளுக்குப் பிறகு கொடுத் தால், மரண தண்டனை!' என்று துறவிக்குத் தகவல் கிடைத்தது.

அதை கொடுக்கவில்லை துறவி; வைத்துக் கொண்டார். சீடர்களுக்கு ஒன்றும் புரியவே இல்லை. சரியாக எந்த நாளுக்குப் பிறகு, கொடுத்தால் மரண தண்டனை என்று ராஜா அறிவித்தாரோ, அதற்குப் பிறகு, அரசரிடம் சிலம்பைக் கொடுத்தார். "இப்போது உமக்கு மரண தண்டனை நான் விதிக்க வேண்டி இருக்குமே, ஏன் கிடைத்ததும் தரவில்லை?' என்று சீறினான் அரசன்.

"ஒன்று... கிடைத்ததும் ஓடோடி வந்திருந்தால் பரிசுக்கு நான் ஆசைப்பட்டதாக அர்த்தம்; நான் பரிசை விரும்பவில்லை. இரண்டு, மரண தண்டனை கிடைக்கும் என்று அஞ்சி கொடுக்காமலேயே வைத்திருந்தால் நான் சாவுக்குப் பயந்தவன் என்று அர்த்தம்; நான் மரணத்திற்குப் பயப்படுபவன் இல்லை. சிலம்பை அப்படியே வைத்துக் கொண்டால் பிறர் பொருளுக்கு ஆசைப்படுபவன் என்று ஆகிவிடும்; நான் பிறர் பொருளை விரும்புவதே இல்லை. அதனால், இப்போது கொடுத்து விட்டேன்!' என்றார் துறவி. "இப்போது உமக்கு மரணதண்டனை கிடைக்குமே!' என்றான் அரசன். அவனைப் பார்த்து, "அறவழியில் நடக்கும் ஒருவனை அழிக்க எந்த அரசுக்கும் அதிகாரம் இல்லை. தர்மம், உன் சட்டத்தை விட மேலானது... விடு வழியை...' என்று கூறியபடி கம்பீரமாக நடந்தார் துறவி. தலை வணங்கி வழிவிட்டான் அரசன்.
அறம் அழிவற்றது.
***

சனி, 16 ஜனவரி, 2010

தேன்மொழியாள் - பரிசு பெற்ற முத்திரைக்கதை

ஜனவரி 2006 அமுதசுரபி, இலக்கியச்சிந்தனை புத்தகத்தொகுப்பு(வானதி பதிப்பகம்)
*******************
வெளியூர் வாடிக்கையாளர்களுக்கு விற்பனை வவுச்சர்களைக் கணிப்பொறி மூலம் தேன்மொழி தயார் செய்துகொண்டிருந்தாள். தொலைபேசிவிட்டுவந்த கணக்குப்பிள்ளை,"தேன்மொழி,உங்கம்மா பேசுறாங்க..."என்று சொல்லிவிட்டு அவர் இருக்கைக்குச் சென்றார்.

முதலாளியின் அறையில் அவர் இல்லை.மேசையின் மீது கவிழ்த்துவைக்கப்பட்டிருந்த ஒலிவாங்கியை எடுத்து காதுக்குக் கொடுத்தாள்.

"என்னம்மா அவசரம்?..."

"மாப்பிள்ளை தம்பி வந்துருக்குடி.முக்கியமான விஷயம்.ஆபீஸ்ல சொல்லிட்டு உடனே வா."

இன்னும் ஒருமணி நேரம்தான் இருக்கு.முக்கியமா சில பில் தயார் செஞ்சு அனுப்பியே ஆகணும்...முடிஞ்சதும் நூலகத்துக்குப் போகாம நேரே வீட்டுக்கு வந்துடுறேன்.அவருக்கு வேற ஏதாவது அவசர வேலை இருந்தா முடிச்சுட்டு ஆறுமணிக்கு மேல வரசொல்லு."

பானுமதி,"முக்கியமா பேசணும்னு வந்து உட்கார்ந்திருக்கார்...அவருகிட்ட எப்படி..."என்று இழுத்தாள்.

தேன்மொழி, "சரிம்மா...நான் ஒருமணி நேரத்துல எப்பவும் போல வேலையை முடிச்சுட்டே வந்துடுறேன்."என்று தொலைபேசி இணைப்பைத்துண்டித்தாள்.

பானுமதி திரும்பவும் வீட்டுக்குள் வந்தபோது அவள் தலை குனிந்திருந்தது.

தணிகாசலம்,"என்ன பானு...நான் போன்ல பேசுனா அவ சொல்றதுக்கெல்லாம் தலையை ஆட்டிட்டு வந்துடுவேன்னு நீயே போன.இப்ப நீ பேசுனதும் உடனே வர்றேன்னு சொன்னாளா?..."என்று கிண்டலாக கேட்டார்.

"உங்க பொண்ணாச்சே. என்னைக்கு சொன்ன பேச்சைக் கேட்டா?...தம்பி...நீங்க தப்பா நினைக்காதீங்க.ஆபீஸ்ல ஏதோ முக்கியமான வேலையாம்.அதனால எப்பவும் போல ஆறுமணிக்கே கிளம்பி வர்றேன்னு சொல்லிட்டா.உங்களுக்கு வெளியில எதுவும் வேலை இருந்தா போய் முடிச்சுட்டு வந்துடுங்களேன்."

உடனே சண்முகபாண்டியன்,"இல்லத்தே...ஒருமணி நேரம்தானே.டி.வி.பார்த்துகிட்டு இருந்தா நேரம் போறது தெரியாது."என்றான்.

அவன் வந்ததும் நிறுத்திய தொலைக்காட்சியை இப்போது மீண்டும் தணிகாசலம் இயக்கினார்.

"என்ன மாமா...இன்னும் கலர் டி.வி. வாங்காம இருக்கீங்க?"

"இது நல்லாத்தான் இயங்கிகிட்டு இருக்கு மாப்ளே.கருப்பு-வெள்ளை டி.வியால கண்ணுக்கும் அவ்வளவா கெடுதல் இல்லை. பழுதாகுறவரைக்கும் இருந்துட்டுப்போகட்டும்னு விட்டு வெச்சிருக்கோம்."

"சரிமாமா...தேன்மொழி ஆபீஸ்ல லீவு போடுறதெல்லாம் ரொம்பக்கஷ்டமா?"

"அப்படி எல்லாம் கிடையாது. அவ எப்பவுமே ரொம்ப அவசியமா இருந்தாதான் லீவு போடவோ பர்மிஷன் கேட்கவோ செய்வா...அதுக்காக நீங்க அவசியமில்லைன்னு தப்பா எடுத்துக்காதீங்க..."என்று தணிகாசலம் சிரித்தார்.

முந்தானையை இழுத்துப்போர்த்திக்கொண்ட பானுமதி,"இவர் கொஞ்சம் செல்லம் கொடுத்து வளர்த்துட்டார்...நீங்க தப்பா நினைச்சுக்காதீங்க...நாங்க எப்ப செஞ்ச புண்ணியமோ...நீங்க எங்க குடும்பத்துல சம்மந்தம் பேச வந்துருக்கீங்க."என்றாள்.

சண்முகபாண்டியன் லேசாக நெளிந்துகொண்டு தொலைக்காட்சியில் கவனம் செலுத்தினான்.

***
தரகர் மூலமாக மூன்று மாதங்களுக்குள்ளாகவே எட்டுப்பேர் வந்து பெண் பார்த்துவிட்டுப் போனார்கள். கடைசியாக வந்தவன்தான் சண்முகபாண்டியன்.

எல்லாம் வழக்கம்போல்தான் நடந்தது."எனக்குப் பொண்ணை ரொம்ப புடிச்சிருக்கும்மா..."என்று சண்முகபாண்டியன் தலையைக்குனிந்து
கொண்டான்.தேன்மொழியின் நிறத்துக்கும் அழகுக்கும் ஆசைப்படாதவர்கள் யார் இருக்க முடியும்? சண்முகபாண்டியன் தலையாட்டிவிட்டு அம்மா பிள்ளையாக உட்கார்ந்துகொண்டான். அவன் தாய் போட்ட பட்டியலில் இருசக்கர வாகனம் தவிர மற்ற எல்லாவற்றையும் செய்துவிடலாம் என்று தணிகாசலம் நினைத்தார்.

"அதெல்லாம் முடியாது...நல்லா யோசிச்சு ஒருவாரத்துக்குள்ள முடிவு சொல்லுங்க.."என்ற அந்த அம்மாள் பதிலை எதிர்பார்க்காமல் வெளியேறினாள்.மாப்பிள்ளையும் பேசாமலேயே தாயைப் பின்தொடர்ந்தான்.

"பையன் நல்லவனாத்தெரியுறான். தலைதீபாவளிக்கு, வண்டி வாங்கித்தர்றோம்னு சொல்லி கல்யாணத்தைப் பேசிமுடிச்சுடலாம்மா..."என்றார் தணிகாசலம்.

"அப்பா...நீங்க என்ன சொந்தத்தொழிலா செய்யுறீங்க...மத்த விஷயத்துக்கு வாங்கப்போற கடனை முடிக்கவே ரெண்டு வருஷத்துக்கு மேல ஆகும்...அதுவரை வேற பெரிய செலவு வராம இருக்கணும்...எதிர்பாராம செய்ய முடியாமப்போச்சுன்னா ஒவ்வொரு நாளும் என்னால இம்சைப்பட முடியாது. எனக்கு வரதட்சணை குடுத்து கல்யாணம் செஞ்சுக்குறதே புடிக்கலை...இருந்தாலும் உங்க ரெண்டு பேரு சந்தோஷத்துக்காக நான் எதுவும் சொல்லலை. அதனால நம்ம சக்திக்கு தகுந்த மாதிரி இடமாப் பார்ப்போம்." என்று தேன்மொழி உறுதியாகக் கூறினாள்.

***

எங்க வசதிக்கு இந்த இடம் ஒத்துவராதுன்னு சொல்லி அனுப்பிட்டோம். இவர் ஏன் வந்து உட்கார்ந்துருக்கார்? என்று நினைத்தவாறே தேன்மொழி வீட்டுக்கு உள்ளே நுழைந்தாள்.

அவனைப் பார்த்து,"வாங்க...ஒரு நிமிஷம்...முகம் கழுவிட்டு வந்துடுறேன்.எதுவும் நினைச்சுக்காதீங்க..." என்று தோள்பையை மேசையில் வைத்துவிட்டு கொல்லைப்பக்கம் சென்றாள்.

முகம் கழுவிக்கொண்டிருந்தபோது பின்னால் பானுமதி வந்து நிற்பதை உணர்ந்தாள்.

"என்னம்மா...காப்பி போட்டுக் குடுத்தியா?"என்று திரும்பாமலேயே கேட்டாள்.

"அதெல்லாம் ஆச்சு...இப்ப அம்பதாயிரம் ரூபா பணம் கொண்டு வந்துருக்கார்...அதைவெச்சு வண்டி வாங்கிக் கொடுத்துட்டு நாம செஞ்ச மாதிரி காட்டிக்கச் சொல்றார்.இந்தக் காலத்துல இப்படி ஒரு வரன் கிடைக்குமா?...நான் சம்மதம்னு சொல்றதுக்குள்ளே உங்கப்பா புகுந்து குழப்பிட்டார்...என் பொண்ணு சம்மதிச்சாத்தான்னு உறுதியா சொல்லிட்டார். நீ ஏதாவது உளறி வெக்காத...இப்படி ஒரு மாப்பிள்ளை இந்த ஜென்மத்துக்கு கிடைக்குறது சிரமம்."

"சரிம்மா...நான் பேசிக்குறேன்..."என்று உள்ளே நுழைந்தாள். முகத்தைத் துடைத்துவிட்டு, நெற்றியில் குங்குமம் இட்டுக்கொண்டு எப்போதும்போல் இயல்பாக கூடத்திற்கு வந்தாள்.

மற்றொரு நாற்காலியை தணிகாசலத்திற்குப் பக்கத்தில் போட்டுக் கொண்டு அமர்ந்தாள்.

பானுமதி மனதில் எரிச்சல்."கொஞ்ச நேரம் நின்னு பேசினா என்ன?...எல்லாம் அவர் கொடுத்த இடம்"

"ம்...இப்ப விஷயத்தைச் சொல்லுங்க..."-தேன்மொழிதான் கேட்டாள். நேரே அவளைப் பார்த்துப் பேச சண்முகபாண்டியன் தடுமாறினான்.இப்போது தணிகாசலம் எழுந்து சென்று தொலைக்காட்சி இயக்கத்தை நிறுத்தினார்.

"உங்கம்மா சொல்லலியா?"

"அம்மா சொல்றது இருக்கட்டும்...நீங்க சொல்லுங்க..."

"இப்ப அம்பதாயிரம் ரூபா எடுத்துட்டு வந்துருக்கேன். என்னுடைய சேமிப்புல இருந்து எடுத்தது. இதையும் வெச்சுகிட்டு கல்யாணத்தை நல்லபடியா நடத்துங்க. என்னால நீங்க இல்லாம வாழமுடியாது. அம்மா மனசும் நோகக்கூடாது."

இவள் என்ன சொல்லப்போகிறாளோ என்ற தவிப்பு அவன் முகத்தில் நன்றாகத்தெரிந்தது.

தேன்மொழி புன்னகைத்தாள்.

"தயவு பண்ணி நீங்க மன்னிக்கணும்...இந்தப் பணத்தை நாங்க வாங்கிக்க மாட்டோம்...வேற இடத்துல பொண்ணு பாருங்க...எங்க சக்திக்குத் தகுந்த மாதிரி நாங்க பார்த்துக்குறோம்."என்று இரு கரங்களையும் கூப்பினாள்.

பானுமதிக்கும் சண்முகபாண்டியனுக்கும் அதிர்ச்சி. ஆனால் தணிகாசலம் முகம், இதை நான் ஏற்கனவே எதிர்பார்த்திருந்தேன் என்பது போல் இருந்தது.

"ஏண்டி உனக்கு புத்தி இப்படிப் போகுது? வீடு தேடி இந்த அளவுக்கு இறங்கி வந்து பேசுறவங்களை மதிக்கமாட்டியா?...-பானுமதி கேட்டாள்.

"சார்...நான் வீடு தேடி வர்றவங்களை மட்டுமில்ல...எல்லாரையுமே மதிக்கிறேன்.அதனாலதான் இவ்வளவு பொறுமையா சொல்றேன்."

சண்முகபாண்டியன் வார்த்தைகள் கிடைக்காமல் மிகவும் சிரமப்பட்டான்.

"சரிங்க...என்ன காரணம்னு சொல்லுங்க."

"இல்ல சார்...விளக்கமா சொன்னா உங்க மனசு வேதனைப்படலாம்."

"பரவாயில்லைங்க...நீங்க இல்லைன்னு ஆனப்புறம் எதுக்கு வேதனைப்பட்டு என்ன ஆகப்போகுது?"

"சார்...உங்க அம்மாகிட்ட பேசி வரதட்சணை வேண்டாம்னு சம்மதிக்க வெச்சிருக்கலாம்.ஆனா இத்தனை வருஷம் வளர்த்தவங்களைவிட ஒருநாள் பார்த்த என்மேல உள்ள விருப்பம் உங்களுக்கு முக்கியமாயிடுச்சு. அதனாலதான் உங்க வீட்டுக்குத்தெரியாம பணத்தைக்கொடுத்து எங்களை செலவு செய்யசொல்றீங்க.நாளைக்கு இந்த விஷயம் உங்க வீட்டுக்குத் தெரிஞ்சா என் கதி?..."என்று நிறுத்தி அவன் முகத்தைப் பார்த்தாள்.

"அப்படி ஏதாச்சும் ஆனா நாம தனிக்குடித்தனம் போயிடலாம்..."- சண்முகபாண்டியன் அவசரமாக சொன்னான்.

"எனக்காக உங்க பெற்றோரைத் தூக்கி எறியத்தயாராயிட்டீங்க.நாளைக்கு வேற காரணத்துக்காக என்னையும் ஒதுக்கி வைக்க எவ்வளவு நேரம் ஆகும்? அம்மாவா இருந்தாலும் மனைவியா இருந்தாலும் தப்பு செஞ்சா விஷயத்தை எடுத்துச்சொல்லி புரிய வெக்கிறவர்தான் கணவரா வரணும்னு ஆசைப்படுறேன்.பிரச்சனையைத் தீர்க்காம ஒதுங்கிப்போறவங்களை நம்பி எதுவும் செய்ய முடியாது.

நானும் பிற்காலத்துல ஒருசில தவறுகள் செய்யலாம்...சிலநேரம் கோபப்படலாம்...அது எனக்குப் புரியாத நேரத்துல, சுட்டிக்காட்டி அரவணைக்கிற புருஷன்தான் வேணும்.

எல்லாமே தப்புன்னு கொடுமைப்படுத்துறவர் மட்டுமில்ல...எல்லாத்துக்கும் அடங்கிப்போறவரும் ஆபத்துதான்." இவ்வளவு பேசியபிறகும் தேன்மொழியின் முகத்தில் புன்னகை குறையவில்லை.

அழகில் மட்டுமல்லாமல் குணத்திலும் தேவதையான இவளுக்கு ஏற்ற கணவன் தான் இல்லை என்பதை உணர்ந்து கொண்ட சண்முகபாண்டியன் மவுனமாக வெளியேறினான்.

கதை நிறைவு பெற்றது.
தேன்மொழியாள் சிறுகதை பக்கம் 1

தேன்மொழியாள் சிறுகதை பக்கம் 4
******
கதையைப்பற்றிய குறிப்பு:

2006 ஜனவரி அமுதசுரபி இதழில் வசுமதிராமசாமி அறக்கட்டளையின் 1000 ரூபாய் பரிசு பெற்ற முத்திரை சிறுகதையாக பிரசுரமானது.

இலக்கியச் சிந்தனை: 1970ம் ஆண்டுமுதல் தமிழ்ப்பத்திரிகைகளில் வெளிவரும் கதைகளில் சிறந்த சிறுகதைகளைத் தேர்வு செய்து பரிசு கொடுத்து புத்தகமாகவும் வெளியிட்டு வரும் அமைப்பு.

2006 ஜனவரி மாத சிறுகதையாக தேன்மொழியாள் தேர்வு செய்யப்பட்டது.

"தேன்மொழி கதாபாத்திரம் ஒரு லட்சிய, ஆனால் யதார்த்த கதாபாத்திரமாக உள்ளது. பாத்திரத்தின் இறுதிக்கட்ட உரையே உருவகப்படுத்தப்பட்டு தலைப்பாகத் தந்திருப்பது அழகு! - இது கதையைத் தேர்வு செய்த எழுத்தாளர் பாலுமணிவண்ணன் அவர்கள் சொன்ன வாக்கியம்.

"குடும்பச் சிறையிலிருந்து தற்சார்பும் அதற்கான கல்வியும் பெற்று வெளி உலகில் ஆணுக்குச் சமமாக வேலை செய்யும் தேன்மொழி நாயகி. அமைதியானவள். இவளைக் கல்யாணம் செய்துகொள்ள மாப்பிள்ளை சண்முகமும் அம்மாவும் பார்க்க வருகிறார்கள். சவரன்-வெள்ளி-கல்யாணச்செலவுடன், இருசக்கர வாகனமும் வரதட்சணையாக விதிக்கப்படுகிறது. பெண் வேலை செய்கிறாள் என்று எத்தனை நாட்களுக்குக் கல்யாணமில்லாமல் வைத்துக்கொள்வது? ஆனால், மாப்பிள்ளை நல்லவனாகத் தெரிகிறான். அவன் சேமிப்பில் இருந்து ஐம்பதாயிரம் எடுத்து வந்து தாய்க்குத் தெரியாமல் உதவி - கல்யாணத்தை முடித்துக்கொள்ள விழைகிறான். தேன்மொழிக்குச் சம்மதம் இல்லை.பெற்றோர் அதிர்ச்சியுறுகின்றனர். தேன்மொழி காரணம் சொல்கிறாள்."அம்மாவிடம் பேசி வரதட்சணை வேண்டாம் என்று சம்மதிக்கவைத்திருக்கலாம். ஆனால் இத்தனை வருஷம் வளர்த்தவர்களைவிட, ஒருநாள் பார்த்த என்மேல் உள்ள விருப்பம் முக்கியமாய் விட்டது...பிரச்சனையைத்தீர்க்காமல் ஒத்திப்போட்டு, ஒதுங்கிப் போறவங்களை நம்பி என் வாழ்க்கையை நிர்ணயிப்பது சரியன்று" என்று மறுத்துவிடுகிறாள். வரதட்சணை என்ற சாபக்கேடு, பெண் கல்வி கற்றும், பொருளாதார சுயச்சார்பு பெற்றும் அவள் மணவாழ்வை ஐந்து தலை நாகம் போல் இறுக்குகிறது.தேன்மொழியாள் குணநலமும் நடப்பியல் பிரச்சனைகளைத் தீர்க்க இந்தச் சமுதாயம் மாற வேண்டும் என்ற ஆர்வமும் உடைய பெண்ணாகத் திகழ்வதை ஆசிரியர் காட்டுகிறார். - இது 2006ம் ஆண்டின் 12 மாதச் சிறுகதைகளில் இருந்து சிறந்ததைத் தேர்வு செய்யும்போது எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணன் அவர்கள் தேன்மொழியாள் பற்றிக்கூறியது...

இலக்கியச்சிந்தனை அமைப்பு தேர்வு செய்த 2006ம் ஆண்டின் 12 சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு வானதி பதிப்பகத்தால் வெளியிடப்பட்டிருக்கிறது.

வானதி பதிப்பகம்
23,தீனதயாளு தெரு,
தி.நகர், சென்னை - 17

தலைப்பு:அருவி - முதல் பதிப்பு ஏப்ரல் -2007
விலை:40.00

******

தேன்மொழி என்று கதையின் நாயகிக்கு பெயர் இருப்பதைப்பார்த்ததும்  இது மற்றுமொரு காதலோ என்று எண்ணிவிட வேண்டாம்.நான் எழுதிய சிறுகதைகளாகட்டும், துணுக்கு, கோயில்களின் வரலாறாகட்டும் எல்லாமே 2005ம் ஆண்டு மருதம்பட்டினம் அபிமுக்தீஸ்வரர் ஆலயம் பற்றிய கட்டுரை பிரசுரமானபிறகுதான் அதிகமாக வெளிவந்தன. அந்த ஆலயத்தில் அம்பாளின் பெயர் தேன்மொழியாள். அவ்வளவுதான் விஷயம்.

வியாழன், 14 ஜனவரி, 2010

தமிழ்ப்பட்டிமன்ற நடுவராக ஜாக்கிசான் - பொங்கல் சிறப்புப்பதிவு

சமச்சீர்கல்விக்கும் ஆங்கிலத்திரைப்படத்துக்கும் தொடர்பு  இருக்கா?...


இருக்கே. பள்ளிக்கூடங்கள்ல இருக்குற பாடத்திட்டத்துக்கும் தமிழ் பேசுற ஆங்கிலப்படங்களுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கே.

நீ எந்த பதிவு போட்டாலும் சினிமாவைத்தொடாம எழுதமாட்ட போலிருக்கேன்னு வீட்டுக்கு ஆட்டோவை அனுப்பிடாதீங்கப்பா.

ஒரு பட்டிமன்றத்துல கு.ஞானசம்மந்தன் அவர்கள், "வரவர ஜாக்கிசான் ரொம்ப அழகா தமிழ் பேசுறார். போற போக்கைப் பார்த்தா பட்டிமன்றத்துக்கு நடுவரா அவர் வந்து உட்கார்ந்துடுவார் போலிருக்கே."ன்னார். அதைக் கேட்கும் போது காமெடியாத்தான் இருந்துச்சு.

ஆனா இப்போ அதனால நமக்கு சில சங்கடங்கள் நமக்குத்தெரியாமலேயே இருக்குறது கொஞ்சம் அதிர்ச்சி அளிக்கிற செய்திதான்.

சில தினங்களுக்கு முன்பு புதியதலைமுறை வாரஇதழில் 2010 ஆண்டு எப்படி இருக்கும் என்று ஒவ்வொரு துறையில் உள்ளவர்களிடமும் நேர்காணல் செய்திருந்தார்கள்.

தமிழ்த்திரைப்படத்துறையில் FEFSI தலைவர் வி.சி.குகநாதன்,"ஹாலிவுட் படங்களை அந்த மொழியிலேயே வெளியிடுங்கள். அதன் மூலம் அடிமட்ட ரசிகனும் தன் ரசனையை வளர்த்துக்கொள்ளட்டும். அதைவிட்டுவிட்டு யாரோ ஒரு ஆங்கிலேயனின் வாயசைப்பில் தமிழைத்திணித்து தமிழ் மொழிக்கு களங்கம் ஏற்படுத்திக்கொண்டிருக்கிறார்கள். 2010ம் வருடத்தில் அதைக் கட்டுப்படுத்தவேண்டிய கட்டாயம், தமிழ் சினிமாவிற்கும் தமிழ் சினிமா இளைஞர்களுக்கும் ஏற்பட்டிருக்கிறது."என்று கூறியிருந்தார்.

இதை வெறும் சினிமா தொடர்பான விஷயமாக மட்டும் பார்க்கக்கூடாது.

சமச்சீர்கல்வி பிரமாதம். கலக்கப்போகுதுன்னு ஆளுங்கட்சியும் அதனுடைய ஆதரவாளர்களும் சொல்றாங்க. எதிர்க்கட்சியும் அவங்களைச்சேர்ந்தவங்களும் இது சரியில்லைன்னு வசை பாடுறாங்க. இவங்க எது சூப்பர்னும் விளக்கலை. அவங்க எது சரியில்லைன்னும் சொல்லலை.

நடுவுல என்னை மாதிரியான அப்பாவிகள் மண்டைதான் காயுது.

இப்போது சமச்சீர்க்கல்வித்திட்டத்தின் நிறைகுறையை அலசி ஆராயும் அளவுக்கு நான் பெரிய படிப்பாளி இல்லை. ஆனால் சிறப்பிடம் பெறும் மாணவர்கள் அளவுக்கு அரசுப்பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் திறனையும் மேம்படுத்தும் வ்கையில்தான் பாடத்திட்டம் இருக்க வேண்டுமே தவிர நன்றாகப் படிக்கும் மாணவர்களை நீ, நிறைய அரசுப்பள்ளி மாணவர்களைப் போல் எழுபது சதவீதம் எடுத்தால் போதும் என்று கீழே பிடித்து இழுக்கும் வகையில் சமச்சீர் கல்வி அமையக்கூடாது என்று மட்டும் என்னால் உறுதியாக சொல்ல முடியும்.

இலவசமும் இப்படித்தான். ஒரு பொருளை காசு கொடுத்து வாங்குற அளவுக்கு
ஒருத்தனை பொருளாதார வலு உள்ளவனா மாத்துறதை விட்டுட்டு இலவசம் கொடுத்து ஒரு அடிமையாவே வெச்சிருக்குறதுக்கு உதாரணம் சொல்றேன்.இது வண்ணத்துப்பூச்சி புழு உருவமா இருக்கும்போது அதுக்கு உதவி செய்யுறதா நினைச்சு கூட்டை  உடைக்கிறதும்  இலவசம் கொடுக்குறதும் ஒண்ணுதான்.

தன்னால கூட்டை விட்டு வெளியில வர்ற வண்ணத்துப்பூச்சியாலதான் பறக்க முடியும். நாமே கூட்டை உடைச்சு அதை வெளியில விட்டா எதுக்கும் பிரயோசனமில்லாம உயிரிழக்க வேண்டியதுதான்.

******

நான் 1996க்குப் பிறகு சில ஆண்டுகள் பத்தாம் வகுப்பு முதல் கல்லூரி செல்லும் வரை அவ்வப்போது பகுதிநேரமாக திரையரங்குகளில் பணியாற்றி வந்தேன்.(பார்த்ததே பகுதி நேரம். இதுல என்ன அவ்வப்போது?...அதையும் தொடர்ந்து பார்க்கலைன்னு அர்த்தம்.)

அதில் ஒரு தியேட்டரில் The Rock, Broken Arrow, Independence day, Golden Eye, Tommorow never dies, Air Force One, Universal Soldire, Jumanji, Evil Dead, Anaconda, The Lost World(jurassic park 3) உட்பட பல படங்களைத் திரையிட்டாங்க.

அந்தப் படங்கள்ல வர்ற வசனங்களோட உச்சரிப்பு பாதி புரியாது. ஆனா ஓரளவுக்கு வசனங்களுக்கு அர்த்தம் விளங்கிடுச்சு. அடுத்து 2000வது ஆண்டு
வாக்கில் கேபிள் டிவி கண்ட்ரோல் ரூம்ல வேலை செய்த நாட்கள்ல Star Plus சேனலில் அமிதாப் தொகுத்து வழங்கிய குரோர்பதி நிகழ்ச்சியை நான் தொடர்ந்து பார்ப்பேன்.அப்போதும் எனக்கு ஓரளவு ஆங்கில அறிவு மேம்பட்டதை உணரமுடிஞ்சது.

நான் கல்லூரி இறுதியாண்டு படிக்கும்போது 2003ல உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்ற சமயம். எனக்கு கிரிக்கெட் மேல ஆர்வமே இல்லன்னாலும் அப்போ நான் போட்டிகளைப் பார்க்க ரெண்டு காரணம் இருந்தது.இந்தியா ஆஸ்திரேலியாகிட்ட தவிர வேறு யார்கிட்டயும் தோற்காம இறுதிப்போட்டிக்கு முன்னேறினது முதலாவது காரணம்.

அடுத்தது வேற என்ன...மந்த்ராபேடிதான். அந்தம்மா(?!) கிரிக்கெட் பத்தி அரைகுறையா புரிஞ்சுகிட்டு ஆர்வக்கோளாறுல தப்புதப்பாதான் கேள்வி கேட்கும். ரொம்ப பேர் அதைக் கேட்டாங்களோ இல்லையோ...அம்மணியோட தரிசனத்தை நல்லாவே பார்த்தாங்க.

எங்க கல்லூரி ஆசிரியர் ஒருத்தர்தான் மந்த்ராபேடி பேசுறதை டிவியில பாருங்கன்னு சொன்னார்.நாங்க எல்லாரும் சட்டுன்னு சிரிச்சுட்டோம்.

"நான் பார்க்கசொன்னது அந்த அம்மாவோட ஆங்கிலத்துக்காக. போட்டுருக்குற டிரஸ்சுக்காக இல்லை." அப்படின்னார்.

நான் கொஞ்சம் ஆர்வமா, சார்..அந்தம்மா தப்புத்தப்பால்ல கிரிக்கெட்டைப்பத்தி பேசுது. அப்போ அந்த இங்கிலீஷ் எந்த கதியில இருக்குமோன்னு கேட்டேன்.

எதுவுமே தெரியாத உங்க மாதிரி புத்திசாலிங்களுக்கு அந்த இங்கிலீஷ் போதும் 
அப்படின்னு சொல்லி, கோ எஜுகேஷன் வகுப்புல மானத்தை வாங்கிட்டார்.

இந்த கேலி கிண்டலை எல்லாம் பொருட்படுத்தாம முயற்சி பண்ணினா நிச்சயமா ஆங்கிலத்தை கண்டிப்பா கத்துக்க முடியும்.

ஜெர்மனி, ரஷ்யா, ஜப்பான், சீனா இங்க எல்லாம் ஆங்கிலத்தை நம்பியா இருக்காங்கன்னுதானே நீங்க கேட்குறீங்க. அங்க எல்லாம் நாடு பூராவும் ஒரே மொழிதான். ஆனா நம்ம நாட்டுல சிவில் சர்வீஸ் நேர்முகத்தேர்வுல கலந்துக்க தலைநகர் போனா வழியில குறைந்தது ஆறு மொழியாவது கத்துக்க வேண்டிய நிலை. எத்தனை மொழி கத்துக்குறோமோ அத்தனை மனிதனுக்கு சமம்னு சொல்லுவாங்க.

அதுக்கு நேரம் ஒதுக்க எல்லாராலயும் முடியாது.அதனால நம்ம நாட்டுல எல்லாரும் ஆங்கிலத்தை இணைப்புப்பாலம் மாதிரி பயன்படுத்துற அளவுக்கு கத்துக்குறது அவசியம். அதாவது ஒவ்வொருவருக்கும் தன்னுடைய தாய்மொழி, ஆங்கிலம் இரண்டும் கட்டாயம். அதுக்கு மேல அவங்கவங்க திறமையைப் பொறுத்து கத்துக்கலாம்.

******

செவ்வாய், 12 ஜனவரி, 2010

சற்றும் மனம் தளராத ரசிகன் மீண்டும் எழுதும் கடிதம்

இயக்குனர் ஷங்கருடைய பிளாக்கிற்கு ஒரு நீண்ட கடிதம் எழுதினேன்.பாராட்டுக்களை அதிகமாகவே எழுதியிருந்தாலும் அவர் சறுக்கிய இடங்களையும் மிக மிக நாசூக்காக சுட்டிக்காட்டியபோதே என் மனது எந்த ரிசல்ட்டுக்கும் தயாராகவே இருந்தது.


எதிர்பார்த்தபடியே அந்தக் கடிதத்தை நிராகரித்துவிட்டார். தவறான வார்த்தைகளால் வசைபாடிய கடிதமாக இருந்து அதை வெளியிடாமல் இருந்தால் ஒரு நியாயம் உண்டு. அவருடைய திறமைகளைக் குறிப்பிட்ட அதே நேரம் பாய்ஸ்,சிவாஜி ஆகிய படங்களில் அவருடைய உண்மையான சூழ்நிலையை மிக கவனத்துடன்தான் விளக்கினேன்.

ஆனால் அதை அவர் மனம் ஏற்றுக்கொள்ளவில்லை என்பது தெரிகிறது. யாரும் இதை தயவுசெய்து தனி மனிதத்தாக்குதலாக கருதவேண்டாம்.ஒருவரது படைப்பு எப்போது மக்களின் பார்வைக்கு வருகிறதோ அப்போதே அந்த படைப்புகள் குறித்த விமர்சனங்கள் எழுவதை தவிர்க்க முடியாது. அவரது ஜென்டில்மேன், காதலன், இந்தியன், முதல்வன், ஜீன்ஸ், அந்நியன் படங்கள் மற்றும் அவரது தயாரிப்புகளான காதல், இம்சைஅரசன், ஈரம் பற்றி எல்லாம் பாராட்டிவிட்டு பாய்ஸ் படம் பற்றிய என் கருத்தை சொன்னது அவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை போலிருக்கிறது.

விமர்சனத்தை வெளியிடவில்லை என்றாலும் பரவாயில்லை.இந்த காரணத்தால் வெளியிடவில்லை என்று எனக்கு ஒரு அறிவிப்பு கூட செய்யவில்லை. அது ஏன் என்பதுதான் என் கேள்வி.

வெறும் புகழுரைகளை மட்டும் எதிர்ப்பார்க்கும் படைப்பாளிகள் வரிசையில் ஷங்கரும் இடம்பிடித்துவிட்டார் என்ற என் கருத்துக்கு எதாவது ஒரு எதிர்வினை யாரிடமிருந்தாவது வருகிறதா என்று பார்ப்போம்.

அவருக்கு நேரம் இல்லை என்று சொல்லாதீர்கள். விமர்சனத்தை டெலீட் செய்யும் போது ஒரு வரியில் எனக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பமுடியவில்லை என்பதற்கு நேரம் மட்டுமே காரணமாக இருக்காது என்பது ஊரறிந்த ரகசியம். இல்லை என்றால் பின்னூட்டத்தில் வெறும் புகழுரை மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும் என்று ஒரு எச்சரிக்கையை போட்டிருக்கலாம்.

வெளிப்படையாக பார்க்கும்போது புகழுரைகள் சுகமாக தெரிந்தாலும் ஒரு மனிதனை வீழ்த்துவதில் அதனுடன் போட்டி போட யாராலும் முடியாது. அதே நேரம் விமர்சனங்கள்தான் ஒரு மனிதனை முழுமையாக செதுக்கும் கருவி என்பதை நான் உறுதியாக நம்புகிறேன்.

இப்போ அவர் உன் விமர்சனத்தை வெளியிடாததால் என்ன குடிமுழுகிப்போய்விட்டது என்று கேட்பவர்களுக்காக ஒரு சில விஷயங்களைக் கூறுகிறேன்.

அவர் படங்களில் லஞ்சம் ஒழிப்பு, அனைவருக்கும் கல்வி என்று சில நல்ல கருத்துக்களை சொல்லியிருந்தாலும் அந்த படங்களுக்கான  பத்து ரூபாய் அனுமதிச்சீட்டை ஐம்பது ரூபாய்க்கு(ஊரைப்பொறுத்து தொகை மாறுபடும்) விற்பது கண்கூடு.

திரைத்துறையில் இவர்கள் கருப்புபணத்தில் புரள காரணமான ரசிகர்கள் எதிர்பார்ப்பது எல்லாம் ஒன்றே ஒன்றுதான். சுட்ட படமாக இருந்தாலும் உருப்படியான படமாகத்தான் கேட்கிறோம்.

பாய்ஸ் படத்தை ஏன் ரசிகர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதையும் அனைவரும் அறிவோம்.

ஆனால் படம் எடுத்தவர்கள் என்ன சொன்னார்கள் தெரியுமா? தமிழர்கள் இன்னும் முகமூடி போட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள்.இன்னும் அவர்களின்  ரசனை மேம்படவில்லை என்று எதோ ஒரு பத்திரிகையில் படித்த ஞாபகம்.

இந்த கருத்து முழுவதும் சரி என்றும் சொல்ல முடியாது. தவறு என்றும் சொல்ல

முடியாது. ஏன் அந்தப் படத்தை ஒதுக்கினார்கள் என்ற காரணத்தை  இயக்குனர் மகேந்திரனின் சினிமாவும் நானும் புத்தகத்தில் மேற்கோள் காட்டிய விஷயத்துடன் மிகவும் நாகரீகமான வார்த்தையில் நான் சொன்னதைக் கூட படைப்பாளிகளால் தாங்க முடியவில்லை என்பதால்தான் இந்தக் கடிதம்.

என்னுடைய விமர்சனம் அந்த தளத்தில் வெளியாகவில்லை என்றால் என்ன. என்னுடைய பிளாக்கில் எழுதிவிட்டுப் போகிறேன்.

நான் ஷங்கர் இணையதளத்திற்கு எழுதிய கடிதத்தைப் படிக்க இங்கே க்ளிக்கவும்.

திங்கள், 11 ஜனவரி, 2010

நிதி நிறுவனங்களில் மக்கள் ஏமாற அல்லது ஏமாற்றப்படக் காரணம் என்ன?

மிகப்பெரிய கோடீஸ்வரர் சென்னை சிட்டி பஸ்சில் செல்லும்போது மூன்று ரூபாய் கொடுத்து டிக்கட் எடுக்க காசு இல்லை என்றால் நடத்துனர்,"யோவ்...சாவுகிராக்கி, எறங்குயா முதல்ல..."என்று நல்ல வார்த்தை(?!) சொல்லி அவரை இறக்கிவிடுவார் அல்லது செக்கிங் இன்ஸ்பெக்டரிடம் பிடித்துக்கொடுப்பார்.அந்த நேரத்தில் அந்த பணக்காரரின் சொத்துக்கள் எதுவும் உதவிக்கு வராது.

ஒரு நிதி நிறுவனத்திடம் எல்லாரும் ஒரே நேரத்தில் போட்ட பணத்தை திருப்பிக்கேட்டால் ஏற்படுவதும் இதே நிலமைதான். ஏமாற்றும் நோக்கத்துடன் செயல்படும் நிறுவனங்கள் தவிர்த்து நல்ல நிலையில் இயங்கிக்கொண்டிருக்கும் சில நிறுவனங்களும் திடீரென மூடப்படுவதற்கும் இதுதான் காரணம்.நான் கல்லூரியில் படிக்கும்போது ஒரு பேராசிரியர் கொடுத்த விளக்கம்தான் இது.

10.01.2020 அன்று கலைஞர் தொலைக்காட்சியில் கருத்து யுத்தம் நிகழ்ச்சியில் இது தொடர்பான விவாதம் நடந்தது.அதில் புதியதாக சில விஷயங்களைத் தெரிந்துகொள்ள முடிந்தாலும் பல விஷயங்களைப் பூசி மெழுகிவிட்டார்கள்.

அதுசரி...நிகழ்ச்சியில் கலந்துகொண்டிருந்ததில் சில அரசு அதிகாரிகளும் இருந்தார்கள்.பல விதிகளுக்கு உட்பட்டுதானே அவர்களாலும் பேச முடியும்.

இதில் என்னை நெருடிய விஷயம் என்னவென்றால் பதிவு செய்யப்படாத நிறுவனம் பற்றிய தகவல்களை சாதாரண குடிமக்கள்தான் கண்டறிய வேண்டும் என்று சொல்கிறார்கள். அந்த அளவுக்கு அவர்களுக்கு திறமை இருந்தால் இவ்வளவு நாளும் தொடர்ந்து ஏமாந்து கொண்டே இருக்க மாட்டார்களே.

மக்கள் பேராசையால் அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு ஏமாறுவது பெரும்பாலும் முறையாக பதிவு செய்யப்படாத நிறுவனங்களில்தான். இதற்கு ஓரளவு எளிமையான தீர்வு என்னவென்றால் அரசின் இணையதளத்தில் முறையான பதிவு பெற்ற எல்லா தனியார் நிறுவனங்களின் பட்டியலையும் துறை வாரியாக வெளியிட்டுவிடலாம்.

கல்வி நிறுவனங்கள், நிதி நிறுவனங்கள் இவைதான் மக்களுக்கு அதிக நன்மையும் பாதிப்பையும் ஏற்படுத்தக்கூடியவை. அதனால் அவை பதிவு பெற்றால் மட்டும் போதாது. அவர்களின் எல்லை எதுவரை என்பதையும் தெளிவாக வரையறுத்து அதையும் அரசின் இணையதளம் மூலமாக மக்களின் பார்வைக்கு அளிக்கலாம்.

அதுமட்டுமின்றி கல்வி நிறுவனங்களில் சேர்க்கைக்கான காலக்கெடு முடிந்ததும் உரிய துறையில் முழுமையாக மாணவர் பட்டியலையும் அந்த இணையதளத்தில் வெளிப்படையாக்கிவிட்டால் ஒவ்வொரு ஆண்டும் அனுமதி பெறாமலேயே மாணவர்களை சேர்த்துவிட்டு அவர்களைத் தேர்வு எழுதவிடாமல் நடுத்தெருவில் நிறுத்தும் அவலம் காணாமலேயே போய்விடும்.

ஆனால் இன்னொரு முக்கியமான விஷயத்தையும் மனதில் கொள்ள வேண்டும். அரசாங்கத்தின் சில இணையதளங்களில் உடனுக்குடன் புதிய தகவல்கள் பதிவுசெய்யப்படுவதில்லை என்றும் கூறப்படுகிறது.

இந்தியாவின் பிரதமர் இந்திராகாந்தி என்று இணைய தளத்தில் இருந்தால் அது பழைய தகவல் என்று நமக்கு புரிந்துவிடும்.ஆனால் பல தனியார் நிறுவனங்களின் அங்கீகாரம் தொடர்பான தகவல்களை அப்டேட் செய்யாமல் விட்டுவிட்டால் அது மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்.

நிதிநிறுவனத்தில் ஆரம்பித்து கல்விநிறுவனத்துக்கு போய்விட்டேன்.பரவாயில்லை...கல்வி பெற நிதி தேவை. நிதியைப் பெறவும் கல்வி ஒரு கருவியாக இருக்கிறது.

போலிகளை ஒழிக்க மேலே நான் சொன்ன சில வழிமுறைகள் நிச்சயமாக நல்ல பலன் தரும். ஆனால் நல்ல முறையில் நடைபெறும் சில நிதிநிறுவனங்களும் திடீரென மூடப்படுகின்றனவே. இதற்கு என்ன காரணமாக இருக்கும்.

ஆப்பு எதுவும் வெளியில் இல்லை. அதற்கும் மக்கள்தான் காரணம். கடன் வாங்கியவர்கள் திரும்ப கட்டவில்லை என்றால் அது முதலீட்டாளர்கள் தலையில்தான் துண்டாக விழும். இதிலும் யோசிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் வங்கியிலும் சரி, சிட்பண்ட்டுகளிலும் சரி சிறு தொகை வாங்கியவர்களில் 95 சதவீதம் பேர் ஒழுங்காக திரும்ப செலுத்துவதாகத்தான் சொல்கிறார்கள். இது உண்மையாகத்தான் இருக்கும்.

அப்போது வில்லங்கம் எங்கே இருக்கிறது. எல்லாம் சில பணக்கார முதலைகளால்தான்.அவர்கள் அப்படி பணத்தை திரும்ப செலுத்தாமல் தப்பிக்க யார் காரணம்? நிதி நிறுவனம் என்றால் நிர்வாக இயக்குனர்கள், அரசுடமை வங்கி என்றால் உயரதிகாரிகளிடமிருந்து பல மக்கள் பிரதிநிதிகள் வரை எல்லா மட்டத்திலும் தவறு செய்கிறார்கள்.

அமெரிக்காவில் இரட்டைக்கோபுரத்தை கட்ட எத்தனை ஆயிரம் மூளைகளும் கரங்களும் கால்களும் உழைத்தனவோ? ஆனால் அதை தரைமட்டமாக்கியது மூளை இல்லாத ஒரு சிலர்தானே.

அதேபோல் ஊழலுக்கு முக்கியக் காரணம் சிலரின் பேராசைதான்.

நாலுபேர் நல்லா இருக்கணும்னா எதுவுமேதப்பு இல்லை.- இது நாயகன் படத்தில் வரும் வசனம். இதை ரொம்ப தப்பா புரிஞ்சுகிட்டு தப்பாவே செயல்படுத்துறதுக்கு கொஞ்சபேர்தான் இருக்காங்க. ஆனா இதையே நாடு தாங்காது போலிருக்கே.

ஞாயிறு, 10 ஜனவரி, 2010

விகடன் 16 ப்ளஸ் எனர்ஜி பக்கங்கள் - இந்திரா இ.ஆ.ப


சென்னையின் முன்னணி ஐ.ஏ.எஸ் அகாடமிகளில் சங்கருடையதும் ஒன்று. கடந்த ஆண்டு தமிழகத்தில் இருந்து சிவில் சர்வீஸ் தேர்வுகளில் வெற்றி பெற்ற 96 பேர்களில் 36 பேர் இவரிடம் பயிற்சி பெற்றவர்கள்.ஒவ்வொரு வருடமும் பல ஐ.ஏ.எஸ்.,ஐ.பி.எஸ் - களை உருவாக்கும் இவர் நான்கு முறை சிவில் சர்வீஸ் எழுதி தோல்விகளைத் தழுவியவர் என்பதுதான் ஆச்சர்யம்.

கல்லூரியில் வைஷ்ணவி என்ற பெண்ணை ராகிங் செய்ததால் ஒரு வருட காலம் சஸ்பெண்ட் ஆன சங்கருக்கு அதே பெண்ணுடன் காதல். வேலை பார்த்துக்கொண்டே சங்கர் சிவில் சர்வீஸ் தேர்வு எழுத உதவியிருக்கிறார் வைஷ்ணவி.

தன்னைப் படிக்க வைத்த மனைவியை தற்போது ஐ.ஐ.டி யில் பி.ஹெச்டி., படிக்க வைத்துக்கொண்டிருக்கிறார்.

"நான் ஜெயித்திருந்தால் நான் மட்டும்தான் ஐ.ஏ.எஸ் ஆகியிருப்பேன். தோற்றதினால் இன்று பல ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்-களை உருவாக்கிக்கொண்டிருக்கிறேன். என் தோல்விகள் என்னும் படிக்கட்டுகளில்தான் இத்தனை வெற்றியாளர்கள்!" - அனுபவத்தின் வார்த்தைகளை அழுத்தி உச்சரிக்கிறார் சங்கர்!

இது 13.10.2010 தேதியிட்ட ஆனந்த விகடனின் 16ப்ளஸ் எனர்ஜி பக்கங்களில் வெளியான சங்கர் அளித்த பேட்டியில் ஒரு பகுதிதான் இது.

******

நான் பத்தாம்வகுப்புடன் படிப்பை நிறுத்திவிட்டு பல வேலைகளுக்கும் போய்க்கொண்டிருந்தபோது முன்பு என்னுடன் படித்த மாணவர்களைப் பார்த்துதான் எனக்கும் படிக்கும் ஆசை வந்தது. ஆனால் அது தீவிரமாவதற்கு வேறு சில காரணங்கள் உண்டு.

அவற்றில் முதன்மையானது 1998ம் ஆண்டு குங்குமம் இதழில் ரமேஷ்பிரபா எழுதி  வெளிவந்த கலெக்டர் கனவுகள் தொடர். சிவில்சர்வீஸ் தேர்வுகள் குறித்த தெளிவான வழிகாட்டுதல்களுடன் ஜெயித்த சில அதிகாரிகளின் பேட்டிகள் எனக்கு மிகப்பெரிய ஊக்கம் தந்தன.

சிறந்த அதிகாரியாக பெயர் பெற்ற சி.உமாசங்கர் அப்போது திருவாரூர்மாவட்டத்துக்கு கலெக்டர். கண் முன்னே இவரை உதாரணமாகப் பார்த்தது கூட நான் மீண்டும் படிப்பைத்தொடர உறுதியாக இருந்ததற்கு காரணமாக சொல்லலாம்.

அப்போதுதான் தனித்தேர்வராக நான் பிளஸ்டூ தேர்வு எழுதவேண்டிய நேரத்தில் ஹால்டிக்கட் வராமல் ஓராண்டு வீணாகிப்போனது. உறவினர்களில் சிலர், நீ படிக்கிறது கடவுளுக்கே புடிக்கலை என்று புது விளக்கம் கொடுத்ததும் நீங்க என்ன சொல்றது நான் என்ன கேட்குறது... திருவாரூர் அரசுக்கல்லூரியில் வணிகவியல் பாடத்தில் 100 இடங்களுக்கு ஆயிரம் விண்ணப்பங்கள் வரை வரும். பெரும்பாலும் பள்ளியில் படித்து மிக அதிகமார்க் எடுத்தவங்களுக்குதான் பகல்நேரக் கல்லூரியில் இடம் கிடைக்குமாம். நான் சேர்ந்து காட்டுறேன். என்று மனதுக்குள்ளேயே சவால் விட்டு படித்தேன்.

வெயிட்டிங் லிஸ்ட் அது இது என்று இழுபறி ஆகாமல் முதலில் வெளியிட்ட பட்டியலிலேயே இடம் பிடித்து கல்லூரியில் சேர்ந்தேன்.

இதில் சில விஷயங்களை நீங்கள் யோசிக்க வேண்டும். அவர் சொன்னார், இவர் படிக்கிறார் என்று நான் எந்த படிப்பையும் கண்மூடித்தனமாக தேர்வு செய்யவில்லை.சிவில்சர்வீஸ் தேர்வு எழுத வேண்டும் என்ற எண்ணத்தில் பட்டம் படிக்க ஆசைப்பட்டாலும் பி.காம் படிப்பைத் தேர்வு செய்ய வேறு சில காரணங்களும் இருந்தன. எனக்கு கணக்குப் பாடத்தில் ஆர்வம் அதிகம். அதனால் பி.காம் படிப்பில்  உள்ள கணக்கு தொடர்பான பாடங்களை விருப்பத்துடன் படிக்கலாம் என்பது என் எண்ணமாக இருந்தது. மளிகைக்கடை என்றாலும் மருத்துவம்,விஞ்ஞானம் என்றாலும் பி.காம் படித்தவருக்கு நிச்சயமாக ஒரு பணியிடமாவது இருக்கும்.- இது குடும்ப பொருளாதார சூழ்நிலையை மனதில் கொண்டு எடுத்த முடிவு.

பிறகு சில காரணங்களால் நான் சிவில்சர்வீஸ் தேர்வுகள் எழுத முயற்சிக்கவே இல்லை. அந்த ஆதங்கம் இப்போதும் என் மனதில் உண்டு. அந்த எண்ணத்துக்கு கற்பனை சாயம் பூசி நான் எழுதிய இந்திரா இ.அ.ப என்ற சிறுகதை 2007ம் ஆண்டு தினமலர் - வாரமலர் நடத்திய டி.வி.ஆர் நினைவு சிறுகதைப்போட்டியில் ஆறுதல் பரிசைப் பெற்றது.

சங்கர் ஐ.ஏ.எஸ்., அகாடமி இயக்குநரின் வாழ்வியல் அனுபவங்களை விகடனில் படித்ததும் என் வாழ்வில் நடைபெற்ற சில சம்பவங்கள் நினைவுக்கு வந்துவிட்டன.

நம்மால் முடிந்த வரை ஒருவருக்கு உதவ வேண்டும். பொருளாதாரரீதியாக உதவ முடியாவிட்டால் ஒருவேளை உணவு அளிக்கலாம். அதுவும் முடியாவிட்டால் பசு உண்ண புல்கட்டு கொடுக்கவேண்டும்.இதற்கும் வழியில்லையா, நாலு பேருக்கு நல்ல வார்த்தையாவது சொல்லலாம்.  அதுவும் புண்ணியம்தான்.- என்று ஒரு புத்தகத்தில் படித்தேன். இதுதான் நான் எழுதத் தொடங்குவதற்கு முக்கியக் காரணம்.இப்போது என்னால் முடிந்த காரியம் வேறு எதுவும் இல்லை.





வெள்ளி, 1 ஜனவரி, 2010

அமைதிப்படையும் மதுக்கடையும்


இந்தப் பழக்கத்திற்கு அடிமையானவர்கள் அதிக அளவில் செலவு செய்வதே மதுவுக்காகதான். குடும்பத்தில் தாம்பத்ய பிரச்சனைக்கும் மதுவுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு.

மேலும், அரசுக்கு வருமானம் பற்றாக்குறையாகிவிடும் என்ற காரணம் சொல்லியே  மதுவிலக்கு என்ற விஷயத்தை எல்லாரும் தட்டிக்கழித்துவிருகிறார்கள்.ஆனால் என் மனதுக்குத் தோன்றிய உண்மைக்காரணம் என்ன தெரியுமா?

அரசியல் பகை காரணமாகத்தான் பெரும்பாலான வன்முறைகள் அரங்கேறுகின்றன. இதில் நடக்கும் படுகொலைகளை செய்பவர்கள் மது அருந்திதான் செய்வார்கள்.மது என்னும் அரக்கன்தான் அவர்களை மிருகத்தைவிட கேவலமாக்கிவிடுகிறது.

மது அருந்துவதே மிகப்பெரிய சிக்கலாகிவிட்டால் இது போன்ற குற்றங்களை
செய்ய ஆள் வேண்டுமே.உண்மை இப்படி இருக்க மதுவிலக்கை அவர்கள் எப்படி கொண்டுவருவார்கள்?

சத்யராஜ் இரு வேடங்களில் நடித்த அமைதிப்படை திரைப்படம் நான் ஏழாம் வகுப்பு படிக்கும்போது வெளிவந்தது என்று நினைக்கிறேன்.அமாவாசை (எ)

நாகராஜசோழன் கதாபாத்திரம்  பெரும்பாலான அரசியல்வாதிகளைப் பிரதிபலிக்கும்விதமாக அமைந்திருந்ததால் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

ஒரு காட்சியில் மணிவண்ணன்,"இந்த சாதி கருமத்தை யாரு கண்டுபிடிச்சா?" என்று சத்யராஜிடம் கேட்பார்.

"மந்திரம் சொன்னவங்க கண்டுபிடிச்சதை மந்திரிமாருங்க கெட்டியா புடிச்சுகிட்டாங்க." என்பது சத்யராஜின் பதில்

"ஏங்னா...இந்த சாதியை ஒழிக்கப்போறதா மேடைக்கு மேடை பேசுறீங்கிளே...நிசமாலுமா?"

"உனக்கு வேற எதுவும் தொழில் செய்யத் தெரியுமா?"

"அய்யய்யோ...என்னங்க கெட்ட வார்த்தை எல்லாம்.?"

"தெரியாதுல்ல... எனக்கும்தான். நாம சாதியை ஒழிச்சுட்டோம்னா அப்புறம் நீயும் நானும் மட்டுமில்ல, நம்மளை மாதிரி பொழைப்பு நடத்துற எல்லாருமே சோத்துக்கு பிச்சைதான் எடுக்கணும்."

இதுவும் சத்யராஜ், மணிவண்ணன் இடையே நடக்கும் உரையாடல்தான்.

மதுவிலக்குக்கும் இந்த வசனம் பொருந்தும்.

மது அருந்தும் வழக்கமுடையவர்கள் உடனே என்னைத் துவைத்துக் காயப்போடும் எண்ணத்துடன், "இந்தப்பழக்கம் இல்லாத நீ மட்டும் ஆயிரம் வருஷம் தாண்டி தஞ்சாவூர் பெரிய கோயில் மாதிரி அப்படியே இருக்கப் போறியா?" இப்படி பின்னூட்டம் இட வாய்ப்பு நிறையவே உண்டு.

நீங்கள் என்னதான் சமாதானம் சொன்னாலும் மதுவால் சில தீமைகள் பலரது வாழ்வைப் புரட்டிப் போடும் அளவுக்கு இருக்கின்றன என்பதை நான் உறுதியாக சொல்வேன்.

பொருளாதாரதீமை: மதுவுக்காக ஆயிரம் ரூபாய் செலவழிப்பவனின் வருமானம் பத்தாயிரம் ரூபாயாக இருந்தால் பாதிப்பு உடனடியாக வெளியே தெரிவதில்லை. ஆனால் மூவாயிரம் ரூபாய் சம்பாதிப்பவன் குடும்பத்தை உடனடியாக சீர்குலைத்துவிடும்.

உடல்நலம் தொடர்பான தீமை: சர்க்கரைநோய், இரத்தஅழுத்தம், தாம்பத்ய குறைபாடு உள்ளிட்ட பல வியாதிகள் மதுவால் அதிக பாதிப்பை ஏற்படுத்துவதும் உண்மை.

உறவுசீர்குலைவு: தாம்பத்யத்தில் ஏற்படுத்தும் சிக்கல்களில் தொடங்கி எவ்வளவோ சொல்லிக்கொண்டே போகலாம். முக்கியமாக உங்கள் குழந்தைகள் கூட உங்களை வெறுக்கும் வாய்ப்பு உண்டு.

இந்த தீமைகள் எல்லாம் குடிக்காதவர்கள் குடும்பத்தில் இல்லையா என்று கேட்பார்கள். இது சரியான பதில் இல்லை என்று அனைவருக்குமே தெரியும். ஆனால் ஒப்புக்கொள்ளமாட்டார்கள்.

இதைவிட ஒரு பெரிய கொடுமை என்னவென்றால், மது அருந்தி வாகனம் ஓட்டுவதால் விபத்து ஏற்பட்டு பலரை பரலோகம் அனுப்புவதுதான் அது.

மது - நாட்டுக்கு, வீட்டுக்கு, உயிருக்கு கேடு.

...............போட்டியாக பாஸ்போர்ட் அலுவலக வாசலிலும் பிடுங்கப்பட்ட வேட்டி...



காவலாளிகள் லஞ்சம் வாங்குவது அவர்கள் கடமையாம். நீங்கள் அதிர்ச்சி அடையாதீர்கள். இதை தட்டிக் கேட்ட பொதுமக்கள் மீது  தடியடி நடத்தினால் அப்படித்தானே அர்த்தம்.அரசு ஊழியர் பணி செய்வதை தடுத்தால் அவர்களை தண்டிக்க சட்டம் இருக்கிறது...இதைக் கேடயமாக பயன்படுத்திதான் பல அரசு ஊழியர்கள் தவறு செய்கிறார்கள்.
******

விண்ணப்பம் கொடுப்பதற்காக திருச்சிமண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தில் 31.12.2009 அதிகாலைமுதல் நூற்றுக்கணக்கானோர் காத்திருந்திருக்கிறார்கள். காவலாளிகள், சிலரிடம் லஞ்சம் பெற்றுக்கொண்டு வரிசையை மீறி அவர்களை உள்ளே அனுப்பியதால்
குழப்பம் ஏற்பட்டிருக்கிறது. போலீசார் வந்து தள்ளு முல்லு செய்த பொதுமக்கள் மீது தடியடி செய்திருக்கிறார்கள்.

இந்த சம்பவத்தில்  திருவாரூர் பகுதி இளைஞர் ஒருவரின் வேட்டி உருவப்பட்டிருக்கிறது.

இது இன்றைய காலைக்கதிர் நாளிதழில் வெளிவந்த செய்தி.(01.01.2010)

மக்கள் இப்படி அவமானப்பட முக்கிய காரணம் அதிகாரிகள்தான்.

காவலாளிகளின் கடமையை செய்ய விடாமல் பொதுமக்கள் வம்பு செய்ததாக வழக்குப் பதிவார்கள்.

இல்லையா பின்ன...விண்ணப்பம் கொடுக்க பொதுமக்கள் அங்கே சென்றது சமூக விரோதம், மணிக்கணக்கில் காத்திருந்தவர்களைப் புறம் தள்ளி விட்டு அந்த நேரத்தில் வந்தவர்களை உள்ளே அனுப்ப காவலாளிகள் லஞ்சம் வாங்குவது தேச சேவை. இது புரியாத மக்கள் எதற்கு வெளி நாடு போக வேண்டும்.?

தகவல்தொழில்நுட்பஉலகம் அடைந்த முன்னேற்றத்தில் இப்போதும் அதிகாலை முதல் மணிக்கணக்கில் வரிசையில் நின்று டோக்கன் வாங்கி விண்ணப்பம் கொடுக்கவேண்டுமாம்... என்ன கொடுமை சரவணன்?

நிச்சயமாக செல்போன் இல்லாத ஆள் யாரும் அவ்வளவு எளிதில் பாஸ்போர்ட் பெற விண்ணப்பிக்கப் போவதில்லை. அதனால் குறுஞ்செய்தி மூலமாக விண்ணப்பித்தால்

குறிப்பிட்ட ரகசிய எண்ணை அனுப்பி ஒரு குறிப்பிட்ட நாளில் இந்த நேரத்தில் உரிய சான்றிதழ்களுடனும் இந்த ரகசிய எண்ணுடனும் அலுவலகம் வரவேண்டும் என்று எளிதாக நிர்ணயம் செய்துவிடலாமே.

கண்டவர்களும் ரயிலில் இடம்பிடிப்பதைப் போல் இதிலும் செய்துவிடாமல் இருக்கவேண்டும் என்றால் குடும்ப அட்டை எண்ணையோ வாக்காளர் அடையாள அட்டை எண்ணையோ சேர்த்துப் பதிவு செய்யும் முறையை ஏற்படுத்தினால் பிரச்சனை இருக்காது.

அரசு அலுவலகங்களில் தினமும் எவ்வளவு மனுக்கள் பெறப்பட்டன. உரிய காலகட்டத்தில் ஒரு பணியை முடிக்கவில்லை என்றால் ஏன் என்ற காரணத்தை அந்த அலுவலர் பதிவு செய்து பதிவேடு பராமரிப்பதை கட்டாயமாக்கினால் நிச்சயம் தீர்வு கிடைக்கும்.

எந்த முடிவும் தெரியாமல் மாதக்கணக்கில் வருடக்கணக்கில் காத்திருப்பதைக் காட்டிலும் ஒரு காரணம் தெரிந்தால் நல்லதுதானே. அலுவலர் சொல்லும் காரணம் நியாயமானதாக இருந்தால் திருவாளர் பொது ஜனத்துக்கு ஆப்பு. தவறாக இருந்தால் அதிகாரிக்கு வேட்டு.

எப்பூடி...