Search This Blog

மீள்பதிவு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மீள்பதிவு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 3 மார்ச், 2014

சாரி ஃபார் த டிஸ்டபன்ஸ்...ஒரு குரூப்பாத்தான் அலையுறாய்ங்க?

தொடர்ந்து நிறைய எழுத வேண்டும் என்ற ஆசை இருந்தாலும் சொந்த தொழிலில் செக்கு மாடு சுற்றி வருவதைப் போன்று சில வேலைகளையே திரும்ப திரும்ப செய்து கொண்டிருப்பதால் எழுத அமர்ந்தால் மைண்ட் முழுவதும் ஏதோ ப்ளாங்க் ஆக இருப்பதாக ஒரு ஃபீலிங். (ஏற்கனவே மைண்ட் காலியாத்தானே இருக்குதுன்னு ஒரு சந்தேகம் எழலாம்.) பதிவுகளே இல்லாமல் காணாமல் போகாமல் இருக்க உள்ளேன் ஐயா என்று சொல்ல நினைக்கும் விதமாகத்தான் இந்த பழைய பதிவை தூசி தட்டியிருக்கிறேன்.

**********************************************
முறைப்படி சம்பளப்பட்டியல் மூலம் மட்டும் ஊதியம் வாங்குபவர்களுக்கு ஜனவரி, பிப்ரவரி என்றாலே மார்ச்சுவரிக்கு அனுப்பும் அளவுக்கு வரிப்பிடித்தம் இருக்கும் என்ற அளவுக்கு பேதியைக் கொடுக்கும் விஷயம் என்றுதான் சொல்கிறார்கள். 4ஆண்டுகளுக்கு எழுதிய பதிவை இப்போது படித்துப்பார்த்தாலும் அதில் இடம்பெற்றிருந்த என்னுடைய சொந்த புராணம் சில வரிகளை தவிர வேறு எதையும் மாற்றும் அவசியம் இருக்கவில்லை.

மாற்றம் ஒன்றே மாறாதது என்பது பல விஷயங்களில் இருந்தாலும் பெரும்பகுதி மக்களின் அவல நிலை என்பது மாறாததாகவே இருக்கிறது என்றுதான் நினைக்கிறேன். அதனால் பழைய பதிவு இப்போது மீள்பதிவாக உங்கள் பார்வைக்கு..


.
***********************************************
கையெழுத்து போட்டு சம்பளம் வாங்கும் அப்பாவி நடுத்தர வர்க்கத்தின் ஜனவரி, பிப்ரவரி சம்பளங்கள் வருமான வரிக்காகவே பெரும்பாலும் பிடிக்கப்பட்டு விடுவதால் மார்ச்சுவரிக்கே செல்லும் அளவுக்கு பொருளாதார நெருக்கடி இருக்கும் என்று சொல்வார்கள்.

இது பல ஆண்டுகளுக்கு முன்பே எனக்குத் தெரியும்.இப்போது என் கவனத்துக்கு வந்த விஷயமே வேறு.சில தினங்களுக்கு முன்பு நான் வீட்டில் இல்லாத நேரத்தில் என்னுடன் பள்ளியில் படித்த நண்பன் வந்து என்னுடைய புதிய செல்போன் நம்பர் அவனிடம் இல்லாததால் அம்மாவிடம் பேசியிருக்கிறான்."எனக்குத் தெரிஞ்ச கவர்மெண்ட் ஆபீஸ்ல தமிழ்-ஆங்கிலம் டைப் அடிக்கிற திறமையோட கம்ப்யூட்டரும் இயக்கத்தெரிஞ்ச ஆள் வேலைக்கு வேணும். உடனடியா இந்த ஆபீசுக்கு வர சொல்லுங்க."அப்படின்னு வேப்பிலை அடிச்சுட்டு போயிருக்கான்.

எங்க அம்மாவுக்கா, புள்ளைக்கு கவர்மெண்ட் வேலை கிடைக்கப்போகுதுன்னு சந்தோஷம். வீட்டுக்கு வந்ததும் என்கிட்ட சொன்னாங்க. எனக்கு மட்டும் இதுல எதோ ஒரு வில்லங்கம் இருக்குன்னு புரிஞ்சுடுச்சு.

போட்டித்தேர்வுல பாஸ் பண்ணினவங்களுக்கு கூட ஒழுங்கா வேலை கிடைக்குதான்னு தெரியலை. நான் பத்தாம் வகுப்பு, பனிரெண்டாம் வகுப்பு மதிப்பெண் பட்டியலை வேலை ஏய்ப்பு அலுவலகத்துல பதிவு பண்ணினதோட சரி. அதை புதுப்பிக்க கூட இல்லை. இப்படி எதாவது போஸ்டிங் போடுறதுன்னா கட்சிக்காரன்லேர்ந்து மேலதிகாரி வரைக்கும் பல லட்சம் பார்க்காம தண்ணியடிக்க மாட்டாங்கன்னு எனக்கு தெளிவா புரிஞ்சது.

அப்துல்கலாம் ஐயா சொன்னது இந்த மாதிரி கனவு இல்ல அப்படின்னு சொல்லி என் அம்மாவோட கனவை கலைச்சுட்டு மறு நாள் அந்த நண்பனை பார்க்கப்போனேன். எந்த ஒரு விஷயத்தையும் சுத்தமா தெரிஞ்சுக்காம நிராகரிக்கிற பழக்கம் எனக்கு கிடையாதே.

அந்த அரசு அலுவலகத்துல இருந்த ஆபீசரில் பலர் ஒரு விஷயத்தை சபிச்சுகிட்டுதான் இருந்தாங்க.

"ஒழுங்கா கையால எழுதி வேலையை முடிச்சுகிட்டு இருந்தோம். இந்த சனியனை (கம்ப்யூட்டர்) கொண்டு வந்து வெச்சு எங்க உயிரை எடுக்குறாங்க. இதுல சில ஆவணங்களை தமிழ்ல டைப் பண்ணி இந்த பைனான்சியல் இயருக்குள்ள மேலிடத்துக்கு அனுப்பியாகணும்."அப்படின்னு சொன்னார்.

அவ்வளவு வேலை பாக்கி இருந்தது. என்னுடைய திறமையை வெச்சு கணக்கு பண்ணி பார்த்தேன்.ஆறு மணி நேரம் ஒதுக்கி டைப் செய்தா  முப்பது வேலை நாள் தேவைப்படும்.

"எவ்வளவு சார் தருவீங்க.வேலையோட உறுதித் தன்மை எப்படி"ன்னு கேட்டேன்.

"இங்க வேலை பார்க்குற ஆபிசருங்க எல்லாரும் கொஞ்ச பணம் போட்டுதான் உங்களுக்கு சம்பளம் கொடுக்கணும். எங்களால வேலை செய்ய நேரம் இல்லாததால சேர்ந்து கிடக்குற வேலையைத்தான் உங்களை செய்ய சொல்லப் போறோம். இதுக்கு அட்டனன்ஸ் எதுவும் கிடையாது. உங்க வேலை திருப்திகரமா இருந்தா எங்க ஹெட் ஆபீசுல சொல்லி எதாவது வேலை வாங்கித்தர முயற்சி செய்வோம்." அப்படின்னு ரொம்ப அழகா பேசினார் அந்த ஆபிசர்.

எனக்கு விஷயம் புரிஞ்சுடுச்சு. அட்டனன்ஸ் இல்லாம போய் இவங்க இயர் எண்ட் பணிச்சுமையை நான் முடிச்சு கொடுத்தா அத்தோட கழட்டி விட்டுடுவாங்க. அடுத்த வருஷம் அடுத்த அடிமை சிக்காமயா போயிடும்னுங்குறது அவங்க எண்ணம்.

நான் ஒரு நாளைக்கு நூற்றைம்பது ரூபா கேட்டேன். ஆனா அவங்க ஐம்பது ரூபாய்க்கு மேல தரத் தயாரா இல்லை. நானும் அந்த அரசு அலுவலகத்துக்கு வேலைக்குப் போறதா இல்லை. அந்த துறை மட்டுமில்ல. எனக்கு தமிழ்-ஆங்கிலம் டைப், டேலி அக்கவுண்ட்ஸ் எல்லாம் தெரியும்னுங்குறதால வேற சில அரசு அலுவலகங்கள்லயும் கூப்பிட்டாங்க. எல்லாம் மார்ச்சு ஜூரம்தான்.

எனக்கு அவங்க மேல கோபம் இல்லை. வேலை பார்க்க வேண்டிய நாள்ல வேலை பார்க்க மனசில்லாம இருந்துட்டு வருஷக்கடைசி ஆனதும் தவிக்கிறதை புரிஞ்சுகிட்டேன். ஆனா கம்ப்யூட்டரை திட்டுன ஒரு அரசு ஊழியரை தேசியமயமாக்கப்பட்ட வங்கியிலயும் பார்த்திருக்கேன்.

சில பழமைவாதிங்க  புதுசா வந்துருக்குறதை கத்துக்கிட்டா கவுரவக் குறைச்சலா நினைக்கிறது உண்டு. வயசாயிட்டதால இயல்பா இருக்குற சில தயக்கம் காரணமா, இந்த இழவெல்லாம் இப்ப எதுக்கு. நாம இது நாள் வரை ஒழுங்காதான வேலை பார்த்துகிட்டு இருந்தோம்னு நினைச்சே சில மொள்ளமாறித்தனமெல்லாம் செய்துகிட்டு இருப்பாங்க.

இப்ப இரண்டு மாசத்துக்கு முன்னால நான் ஒரு இடத்துல பகுதிநேரப்பணிக்கு சேர்ந்துருக்கேன். அந்த நிறுவனத்துல பத்து வருஷமா பொழுதை ஓட்டிகிட்டு இருக்குற ஆளுங்க ரெண்டு பேர், அடிமட்ட வேலையா நினைக்குற போஸ்டிங்குக்கு வர்ற ஆளுங்களை எதுவும் சொல்றது இல்லை. கொஞ்சம் படிச்சுட்டு கம்ப்யூட்டர் அறிவோட வர்ற ஆளுங்களை சம்பளம் எதுவும் ஒழுங்கா கிடைக்காதுன்னு சொல்லி பயமுறுத்தி நாலே நாள்ல விரட்டிகிட்டே இருந்தாங்க.

அலுவலகத்தை எப்படியோ டெவலப் செய்திருக்கலாம். நானும் வளரணும், நிறுவனமும் வளரணும்னுங்குற கொள்கை என்னுடையது. ஆனா பலருக்கு அந்த எண்ணம் இல்லை. முதலாளி அல்லது மேலதிகாரியோட நான் நெருங்கிடுவேனோனுன்னு பயத்துல என்னைப் பத்தி நிறையவே வத்தி வெச்சுடலாம்னு முயற்சி நடந்துருக்கு. ஆனா நான் வேலைக்கு சேர்ந்த ரெண்டே நாள்ல வேட்டு வெக்கிற ஆளுங்களை கவனிச்சதுல அவங்க எந்த எந்த விஷயத்துல பிரச்சனை பண்ணுவாங்கன்னு புரிஞ்சுகிட்டு என்னோட நடவடிக்கைகளை அமைச்சுகிட்டதால  ஒண்ணும் பண்ண முடியாம தவிக்கிறாங்க.

ஆனா ஒரு விஷயம். இந்த மாதிரி ஆளுங்க வேலை செய்யுற இடத்தையும் உருப்புட விட மாட்டாங்க. கூட வேலை செய்யுறவனையும் காலி பண்றதுலயே கவனமா இருப்பாங்க.

வேலை பார்த்து செட்டிலாகணும்னு நான் இலக்கு நிர்ணயம் பண்ணியிருக்குறது சென்னை அல்லது கோவைதான்.பார்ப்போம். எந்த ஊர் கொடுத்துவெச்சிருக்குன்னு.

எல்லா ஊர்லயும் அரசு அலுவலகங்கள்ல இப்படி மார்ச் மாசம் வந்தா இளைய சமுதாயத்துக்கு ஆசை காட்டி ஒரு மாசம் புழிஞ்சு எடுத்து வேலை வாங்கிகிட்டு சொற்ப தொகையை கொடுத்து கழட்டி விட்டுடுறதுலயே குறியா இருக்காங்க.

பலருக்கு இந்த அனுபவம் இருக்கும். நான் எஸ்கேப். மறு வருஷம் என்ன செய்வாங்க.

"சாரி பார்த டிஸ்டபன்ஸ்...உங்களுக்கு தமிழ்ல டைப் அடிக்கத்தெரியுமா?...கவர்மெண்ட் வேலை கிடைக்க நான் ஏற்பாடு பண்றேன். அப்படின்னு அடுத்த ஆளைத் தேடுவாங்க. அவசரப்பட்டு ஏமாந்துடாதீங்கப்பா. அதுக்குன்னு எல்லாத்தையும் சந்தேகப்பட்டு ஒதுக்கிடாதீங்க. பார்த்து பக்குவமா நடந்துக்க வேண்டியது உங்க பொறுப்பு.

எழுதப்பட்ட தேதி - 25-மார்ச்-2010

சனி, 22 பிப்ரவரி, 2014

முதல்வன்-சில சிந்தனைகள்...

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு எழுதிய பதிவு. அதில் எழுதிய விஷயங்களில் அப்படி ஒன்றும் பெரிய மாற்றம் ஏற்பட்டுவிடவில்லை. இன்னும் சொல்லப்போனால் நிலவரம் இன்னும் கேவலமாகி திருவாளர் அப்பாவி பொதுஜனத்திற்கு இன்னும் கலவரம் தருவதாகவே இருக்கிறது.

அதனால் அப்படியே இங்கே மீள்பதிவு இட்டுள்ளேன்.

இன்னும் கோடி மனிதர்கள் பிறந்தாலும் அவர்களின் தேவைகளை நிறைவேற்ற பூமியில் இருக்கும் வளங்களுக்கு வல்லமை உண்டு. ஆனால் எத்தனை பூமி உருவாகி நினைத்தாலும் அவற்றால் ஒரே ஒரு மனிதனின் பேராசையை கூட நிறைவேற்ற முடியாது.

இது காந்தியடிகளின் கூற்று. இந்த நிலையை நோக்கி நம் நாடு ரொம்பவும் வேகமாக சென்றுகொண்டிருப்பது கண்டு ரொம்பவே நான் அதிர்ச்சி அடைந்து கொண்டிருக்கிறேன். இதைத் தவிர வேறு என்னதான் செய்வது?

எதிலும் முதல்வனாக இருக்க வேண்டும் என்ற இலக்கு சரிதான். ஆனா அதற்காக தகிடுதத்தம் செய்வது ஆபத்தானது. இது சாதாரண ஆட்களுக்கு.

இன்னும் சிலர் இருக்கிறார்கள், எதிலும் முதல்வனாக மட்டுமல்ல எல்லா நம்பராகவும் தானே இருக்க வேண்டும் என்ற கொடூர எண்ணத்துடன். அதாவது மற்றவர்களை ஒழித்துக்கட்டிவிட வேண்டும். இது அதிகாரத்தில் இருப்பவர்களின் பேராசை. ஒண்ணாம் நம்பராக மட்டுமல்ல...ஒரே நம்பராக இருக்க வேண்டும் என்பதை கொள்கையாகவே வைத்திருக்கும் பேர்வழிகளிடம்தான் சிக்கித்தவித்துக்கொண்டிருக்கிறோம்.

திருவாரூரில் இருந்து ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியிலிருந்து பத்து கிலோமீட்டர் தொலைவில் இளையாங்குடி (இது சிவகங்கை மாவட்டத்தில் உள்ளது). அங்கிருந்து சாலைக்கிராமம் செல்லும் சாலையில் சில மைல் தூரத்தில் உள்ள எங்கள் குலதெய்வம் கோவிலுக்கு ஆண்டுக்கு ஒரு முறை மாசிமாத மஹா சிவராத்திரி அன்று மிகப்பெரிய அளவில் கூட்டம் கூடும்.

நான் கடந்த பிப்ரவரி மாத மத்தியில் பௌர்ணமி வழிபாட்டுக்கு சென்று வந்து விட்டதால் இப்போது செல்லவில்லை. இன்னொரு உறவினர் திருவாரூரில் இருந்து கிளம்பி சென்ற நேரத்தையும் வழிபாடு முடித்து இங்கே ஊர் திரும்பிய நேரத்தையும் சொன்னபோது எனக்கு மயக்கம் வராத குறைதான்.

சுமார் இருபது ஆண்டுகளுக்கு முன்பு திருவாரூரிலிருந்து பட்டுக்கோட்டைக்கு ஜெயலட்சுமி என்ற தனியார் பேருந்தில் அதிகாலை 5 மணிக்கு கிளம்பினால் கிட்டத்தட்ட ஏழரை மணி வரை பார்த்து பத்திரமா (60 கிலோ மீட்டர்) அழைச்சுட்டு போவாங்க. அப்புறம் அங்க ஒரு ஹோட்டல்ல காலை டிபனை முடிச்சுட்டு எட்டு மணி சுமாருக்கு பரமக்குடி செல்லும் பேருந்தில் ஏறி அமர்ந்தால் அது அறந்தாங்கி, காரைக்குடி, காளையார் கோவில், கல்லல், இளையாங்குடி வழியாக ஊர்ந்து மதியம் மூன்று மணிக்கு பரமக்குடிக்கு போய்ச் சேரும்.

அப்போதெல்லாம் நாம என்னமோ நானூறு கிலோ மீட்டர் பயணம் செய்யுறதா நினைச்சுக்குவேன். சும்மாவா...பத்து மணி நேரப் பயணமாச்சே.( காலை 5 மணிமுதல் மதியம் 3 வரை கணக்கிட்டு பாருங்க. சரியா இருக்கும்.)

அப்புறம் 1993, 94ம் வருஷமா இருக்கலாம். பரமக்குடியில இருந்து தஞ்சாவூருக்கு பேருந்துகள் இயக்கப்பட்டன. அஞ்சரை முதல் அஞ்சே முக்கால் மணி நேரப் பயணம். தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து திருவாரூருக்கு சுமாரா ரெண்டு மணி நேர பயணம்(65 கி.மீ). மொத்தமா எட்டு மணி நேரத்துல ஊருக்கு போக முடியுதேன்னு சந்தோஷப்பட்டோம்.

இதுல என்ன கொடுமைன்னா பட்டுக்கோட்டை, காரைக்குடி வழியா பரமக்குடி போனா நூற்றி தொண்ணூறுல இருந்து இருநூறு கிலோமீட்டர் தொலைவுதான்னு நினைக்கிறேன். சமீபமா பத்து ஆண்டுகளுக்குள்ளதான் இந்த சாலைகளை முழுமையா இருவழி போக்குவரத்துக்கு ஏதுவா அகலப்படுத்துனாங்க. ஆனா தஞ்சாவூர், புதுக்கோட்டை, காரைக்குடி வழியா போனா இருநூற்று நாற்பது முதல் இருநூற்று அம்பது கிலோமீட்டர் தொலைவு இருக்கும். ஒவ்வொரு ஊருக்குள்ளயும் பேருந்து நிலையம் சென்று ஊருக்குள்ள சுத்தி திரும்புற தொலைவு தனி.

அப்புறம் இந்த நேரத்தையும் குறைக்க முடியுமான்னு யோசிச்சேன். தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருப்பத்தூர், சிவகங்கை, மானாமதுரை, பரமக்குடின்னு போனா  இருநூற்று நாற்பது கிலோ மீட்டர் தொலைவுதான். ஆனா சரியா பஸ் கிடைத்து போனா ஏழு மணி நேரத்துக்குள்ள போயிடலாம்.

அதிலும் பரமக்குடியில் அதிகாலை 4 மணிக்கு திருச்சிக்கு மானாமதுரை, திருப்பத்தூர் வழியாக செல்லும் பேருந்தில் ஏறினால் பெரும்பாலும் காலை ஏழு இருபத்து ஐந்துக்குள் புதுக்கோட்டை வந்துவிடலாம். அடுத்த இரண்டு நிமிடங்களில் அடுத்த பேருந்தில் ஏறிவிட்டால் எட்டே முக்காலுக்குள் தஞ்சைக்கு செல்வதும் உறுதி. பிறகு அங்கிருந்து ஒண்ணே முக்கால் மணி நேரம். பெரும்பாலும் பத்தரை மணிக்குள் திருவாரூர் வந்து விடலாம். ஏறத்தாழ ஆறரை மணி நேர பயணம்.

இவ்வாறு ஒவ்வொரு ஊரிலும் மாறி செல்லும்போது சில நாட்களில் அதிக கூட்டம், ஊர்வலம் என்று எதாவது காரணங்களினால் சரியான சமயத்தில் பஸ் கிடைப்பது சிக்கலாகிவிடும்.

பத்து மணி நேர பயணம் ஆறரை மணி நேரமாக சுருங்குவதற்கு எவ்வளவு போராட்டம் நடக்கிறது என்று பாருங்கள்.

பயணதூரம் குறையும் வகையில் வழி இல்லையா என்று நீங்கள் கேட்பது புரிகிறது. திருவாரூரிலிருந்து திருத்துறைப்பூண்டி வழியாக முத்துப்பேட்டை சென்ற உடன் அடுத்து கிழக்கு கடற்கரை சாலை வழியாக ராமநாதபுரம் செல்ல கிட்டத்தட்ட இருநூறு கிலோ மீட்டர் தொலைவு இருந்தாலும் சொந்த வாகனம் என்றால் அதிகபட்சம் மூன்று மணி நேரத்திற்குள் சென்றுவிடலாம்.

எங்கள் உறவினரில் சிலர், இந்த பாதையில் ராமநாதபுரம் வரை செல்லாமல் தொண்டியை அடுத்த உப்பூர் வழியாக சாலைக்கிராமம் சாலையில் சென்று கோவிலை அடைந்திருக்கிறார்கள். மொத்த பயண நேரம் மூன்றரை மணி நேரத்திற்கும் குறைவுதானாம்.

ரோடு சூப்பர் என்று என்னிடம் பாராட்டிப் பேசினார்கள். அதெல்லாம் சரிதான். இப்போ இருக்கும் சந்தோஷம் இன்னும் சில ஆண்டுகளில் காணாமல் போய்விடும். ஆங்காங்கே டோல்கேட் அமைத்து சுங்கவரி என்ற பெயரில் கொள்ளை அடிக்க ஆரம்பித்து விடுவார்கள்.

சாலை நன்றாக இருக்கவேண்டும் என்றால் இந்த மாதிரியான செலவினங்களை சமாளித்துதானே ஆக வேண்டும் என்று நீங்கள் சொல்லலாம். ஆனால் இந்த சாலைகளுக்கு எவ்வளவு செலவாகிறது, அதில் அரசின் பங்கு எவ்வளவு, தனியாரின் பங்கு எவ்வளவு, அதற்கு குறிப்பிட்ட தொகை லாபம், வட்டி, பராமரிப்பு, ஊழியர்களின் ஊதியம் போன்ற செலவுகள் போக எவ்வளவு தொகை மிக அதிகமாக வசூலிக்கிறார்கள் என்ற விபரமே தெரியவில்லை.

ஒரு நகராட்சிக்கு சொந்தமான கடைக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வாடகை தருவதாகத்தான் அரசியல்வாதி ஒப்பந்தம் செய்திருப்பார். ஆனால் உள் வாடகையாக தினமும் ஆயிரம் ரூபாய் கூட வசூலிப்பார். இதே மாதிரியான கொள்ளைகள்தான் சுங்க வரி வசூல் செய்வதிலும் இருக்கும்.

பக்கத்து மாநிலமான கேரளாவில் படகுப்போக்குவரத்து நிறையவே நடக்கிறது. சுமார் ஐம்பது கிலோமீட்டர் தொலைவுக்கு, இரண்டரை மணி நேர படகுப்பயணத்துக்கு பத்து ரூபாய்தான் வசூலிக்கப்படுகிறதாம். ஆனால் இங்கே கன்னியாக்குமரியில் ஐந்து நிமிட பயண தூரத்தில் இருக்கும் விவேகானந்தர் பாறைக்கு செல்ல முப்பது ரூபாய் கட்டணம். அங்கிருந்து திருவள்ளுவர் சிலைக்கு செல்ல வேண்டுமானால் அதற்கு தனி கட்டணமாம்.

அரசியல் வியாதிகள் செலவழிக்கும், பத்து தலைமுறைக்கு சேர்த்து வைக்கும் எல்லா பணமும் கோவில்களில் இருந்து கழிப்பறை வரை எல்லா இடத்திலும் இப்படித்தான் சாதாரண பொது மக்களிடமிருந்து அநியாய கட்டண முறையில் வலுக்கட்டாயமாக பிடுங்கப்படுகிறது.

தமிழகம் முழுவதும் இரட்டை ரயில் பாதை இருந்தால் எவ்வளவு எரிபொருள் மிச்சமாகும், எவ்வளவு சாலை விபத்துகள் குறையும்?...அது அவ்வளவு எளிதானது இல்லைன்னு சொல்லிடாதீங்க. ஆறு மாசத்துல அவ்வளவு பெரிய தலைமைச் செயலகம் கட்ட முடியும்போது இது முடியாதா. நான் சொல்வது போல இரட்டை ரயில் பாதை வந்துவிட்டால் ஆம்னி பஸ் பிஸினஸ் படுத்து விடும். அப்புறம் எங்களுக்கு வருமானம்?- இப்படி ஒரு எண்ணம்தான் அரசியல்வாதிகள் மனதில் ஓடும்.

வியாழன், 29 நவம்பர், 2012

ஜெமினி



பொதுவாக சிறைத்தண்டனை என்பது தவறிழைத்தவர்கள் தங்கள் தப்பை உணர்ந்து திருந்தச்செய்வதாக இருக்க வேண்டும். ஆனால் நடைமுறையில் அது எந்த அளவுக்கு சாத்தியப்பட்டிருக்கிறது? இதற்கான சின்ன விளக்கம் 10 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான ஜெமினி திரைப்படத்தில் இரு வரி வசனத்தில் சொல்லப்பட்டிருந்தது.

மிக ஜாலியான எண்டர்டெயின்மெண்ட் படம் என்று ஒரு சாரரும், இந்த மாதிரியான மசாலா படங்கள் தொடர்ந்து வந்தால் தமிழ் சினிமாவின் உலகத்தரம் கெட்டுவிடும் என்று பலதரப்பட்ட கருத்துக்கள் வெளிவந்தன. இப்போது அதைப்பற்றி நான் பேசப்போவதில்லை. அந்த படம் தொடர்பாக நான் எழுதிய பழைய பதிவு உங்கள் பார்வைக்கு.
******************************


ஓ போட்ட ஜெமினி படம் சாதாரண மசாலாதான். அந்தப் படத்துலயும் நல்ல மெசேஜ் நிறையவே இருக்குங்க. வெறும் பாடல்களால மட்டும் அந்தப்படம் நல்லா ஓடலை. கலாபவன்மணியோட மிருகக்குரல் மிமிக்ரியும் படத்தோட அதிரடி வெற்றிக்கு முக்கியக் காரணம்னு விக்ரமே ஒத்துக்குவார். இந்தப் படத்தின் இயக்குநர் பெயரும் "சரண்" (அவரோட முழுப்பெயர் சரவணன்னு சொல்றாங்க.) - தயாரிப்பாளர் ஏ.வி.எம் சரவணன்  அப்படிங்குறதுல சின்ன சந்தோஷம்.


முதலில் சில நகைச்சுவைக் காட்சிகளைப் பற்றி சொல்லிவிடுகிறேன்.

ஜெமினியில் தேஜாவின் கையாள் ஒருவர், "இந்த சரக்கை மட்டும் அப்படியே கை மாத்தி விட்டா கோடி ரூபாய் ஓடி வரும்." என்பார்.

உடனே தேஜா அந்த ஆளிடம்,"நீ எவ்வளவு படிச்சிருக்க?" என்று கேட்பார்.

"ரெண்டாங்கிளாஸ்" என்று சொல்லும் ஆளின் முகத்தில் தெரியும் பூரிப்பை பார்க்க வேண்டுமே.அடா...அடா... வில்லன் சம்மந்தப்பட்ட காட்சி என்பதை மறந்து காமெடிக்காட்சியைப் போல் படமாக்கியிருப்பார்கள்.

அதற்கு தேஜா கொஞ்சம் கூட சிரிக்காமல், "நம்ம கேங்லயே அதிகமா படிச்சுட்டோம்னு திமிர்ல பேசுறியா"ன்னும்பார். பெரிய நகைச்சுவை நடிகர்களின் காட்சிக்கு சவால் விடும் வகையில் சிரிப்பை ஏற்படுத்தும்.

கமிஷனர், ஜெமினி, தேஜா இருவரையும் ஒரு செல்லில் அடைத்து வைத்திருப்பார்கள். ரொம்பவும் வெறுத்துப் போன ஜெமினி,"திருந்தித் தொலையேண்டா"என்று தேஜாவைப் பார்த்து சொல்வார்.

அதற்கு தேஜா,அவர் இடுப்பின் இரு புறமும் கைகளை ஊன்றிக் கொண்டு,"நான் என்ன தப்பு பண்ணினேன்...இப்ப திருந்த சொல்ற..."என்று கேட்கும்போது ஒரு அப்பாவித் தனம் தெரியும்.

இது மாதிரி வில்லன் வரும் காட்சிகள் அனைத்தையும் நகைச்சுவையுடனேயே படமாக்கியதற்கு சேர்த்து ஒரு ஆப்பு வெச்சாங்க பாருங்க...வெறுத்துப் போயிட்டேன். எதை சொல்றேன்னு புரியலை?

படத்துல காமெடி நடிகர்கள் நடிச்ச காட்சிகள்தான். அந்த மாதிரி மொக்கையை நான் எதிர்பார்க்கவே இல்லை.

அது கிடக்கட்டும்.

நான் சொல்ல வந்த விஷயம் வேற. நல்ல கமிஷனரா வர்ற மலையாள நடிகர் முரளி,"குற்றவாளிகளைத் திருத்துறதுக்குதான்  சிறைச்சாலைன்னா தண்டனை முடிஞ்சு வர்ற நபர்கள் தவறு செய்யக்கூடாது...

ஆனா நிஜத்துல அப்படி நடக்குறது இல்லையே. ஏன் அப்படி?

சட்டம்னுங்குறது ஃப்ரிட்ஜ் மாதிரி ஆயிடுச்சு. தண்டனை அனுபவிக்க உள்ள போறவங்க வெளியில வரும்போது எந்த மாற்றமும் இல்லாம அப்படியே  ஃப்ரெஷ்ஷா வந்து கிரைம் பண்றாங்க.சமூகமும் சில அதிகாரப் பொறுப்புகளும் அவங்க திருந்தி வாழ்றதை அனுமதிக்கிறது இல்லை.  இந்த நிலைமையை மாற்ற எதோ என்னாலான முயற்சி. அவங்க திருந்த வாய்ப்பு ஏற்படுத்தி தர்றேன்."அப்படின்னு சொல்வார்.

எல்லாரும் ரொம்ப யோசிக்க வேண்டிய விஷயங்க இது.

நான் இந்தப் படத்தைப் பார்க்கும்போது கிரணைப் பார்த்து ஜொள் விடாம சமர்த்துப்பிள்ளையா இருக்கேன்னு இப்பவாச்சும் நம்புறீங்கிளா?

வேலூர் சிறைச்சாலையும் குற்றவாளிகளை மாற்ற, தொழிற்சாலையாக மாறி வரும் விஷயம் தினமலரில் வெளிவந்துள்ளது.

அந்த செய்தி கீழே...

வேலூர்: வேலூர் ஆண்கள் சிறையில் குற்றவாளிகளுக்கு தொழில் பயிற்சி அளிக்கப்பட்டு, தொழிற்சாலையாக மாறி வருகிறது.வேலூர் தொரப்பாடியில் பிரிட்டிஷ்காரர்கள் காலத்தில் 1867ம் ஆண்டு அமைக்கப்பட்ட மத்திய சிறை, தமிழகத்தில் முதல் சிறை என்ற பெருமை உடையது. இந்த சிறையில் 2,130 கைதிகள் நிரப்பும் வசதிகள் உள்ளன.


சென்னையில் புழல் சிறை துவங்கப்பட்டதால், தற்போது, இங்கு 935 கைதிகள் உள்ளனர். ஆயுள் தண்டனை கைதிகள் 215 பேரும், ஐந்து முதல் பத்து ஆண்டு தண்டனை பெற்ற கைதிகள் 230 பேரும் உள்ளனர்.தண்டனை அனுபவிக்கும் இடமாக இருந்த சிறைச்சாலை தற்போது, தொழிற்சாலையாக மாறி வருகிறது. இங்கு ஷூ, அட்டை ஃபைல், மெழுகுவர்த்தி, பாண்டேஜ் துணி, டெய்லரிங் போன்ற தொழிற்பயிற்சிகள் ஆயுள் தண்டனை கைதிகளுக்கு அளிக்கப்பட்டு வருகிறது.தொழிற்பயிற்ச்சி பெற்ற கைதிகள் மூலம் ஷூ, அட்டை ஃபைல், மெழுகுவர்த்தி, பாண்டேஜ் துணி ஆகியவை தயார் செய்யப்படுகிறது. கைதிகள் தயாரிக்கும் பொருட்களுக்கு ஏற்ப சம்பளம் வழங்கப்படுகிறது.


* ஷூ தொழிற்சாலை: தமிழகத்தில் வேறு எந்த சிறையிலும் ஷூதயாரிக்கும் தொழிற்சாலை இல்லை. பிரிட்டிஷ்காரர்கள் காலத்தில் துவங்கப்பட்ட ஷூ தயாரிக்கும் தொழிற்சாலையில் இது வரை 10 லட்சம் ஷூக்கள் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்தாண்டு 50 லட்சம் மதிப்புள்ள 20 ஆயிரம் ஜோடி ஷூக்கள் தயாரிக்க ஆர்டர் பெறப்பட்டு அனைத்தும் மூன்று மாதத்தில் செய்து முடிக்கப்பட்டது.இந்த ஷூக்கள் போலீஸ், தீயணைப்பு துறை, சிறைத்துறையில் மூலம் ஆர்டர் பெறப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. ஷூ தயாரிப்பு பணியில் 100 கைதிகள் வேலை பார்க்கின்றனர். ஒரு நாளைக்கு 300 ஷூக்கள் தயாரிக்கப்படுகிறது.இதற்காக 60 லட்ச ரூபாய் மதிப்பில் வெளி நாட்டில் இருந்து இரு இயந்திரங்கள் வாங்கப்பட்டுள்ளது. மூன்று நிலைகளில் ( நன்றாக வேலை செய்பவர், கொஞ்சம் வேலை செய்பவர், புதியதாக வேலை செய்பவர் ) என்று தரம் பிரிக்கப்பட்டு மாதம் 600 ரூபாய், 800 ரூபாய், 1,500 ரூபாய் வரை கூலி வழங்கப்படுகின்றது.இதில், 40 சதம் இயந்திரத்தின் மூலமும், 60 சதம் கையாலும் தயாரிக்கின்றனர். காலை 7.30 மணி முதல் பகல் 11.30 வரை, மதியம் 1.30 முதல் மாலை 4. 30 வரையில் பணி நடக்கிறது.பணி நேரத்தில் இரு முறை சிறைத்துறை நிர்வாகம் சார்பில் கைதிகளுக்கு டீ கொடுக்கின்றனர்.


* டெய்லரிங் யூனிட்: இங்கு 26 தையல் மிஷின்கள் உள்ளது. 33 பேர் வேலை செய்கின்றனர். ஜாக்கெட், சுடிதார் தைக்கின்றனர். நல்ல லாபம் தரும் இந்த தொழிலை செய்து வந்த பத்து பேர் விடுதலையாகியதும் சொந்தமாக கடை வைத்துள்ளனர்.


* ஃபைலிங் பேட் யூனிட்: இங்கு 75 பேர் வேலை செய்கின்றனர். ஒரு நாளைக்கு 3,000 வீதம் ஒரு மாதத்திற்கு ஒரு லட்சம் ஃபைல் பேடு செய்கின்றனர். அரசு அலுவலகங்களுக்கு மட்டும் விற்பனை செய்யப்படுகிறது.இந்தாண்டு 5 லட்சம் ஃபைல் பேடுகள் சப்ளை செய்ய ஆர்டர் பெற்றுள்ளனர். மாதம் 750 ரூபாய் வரை சம்பாதிக்கின்றனர்.


* மெழுகு வர்த்தி யூனிட்: மூன்று பேர் வேலை செய்கின்றனர். இங்கு தயார் செய்யப்படும் மெழுகு வர்த்திகள் வேலூர் ரோட்டரி சங்கம் மூலம் விற்பனை செய்யப்படுகிறது.


* பவர் லூம்: நான்கு பவர் லூம்கள் உள்ளன. பத்து பேர் வேலை செய்கின்றனர். அரசு மருத்துவமனைகளுக்கு பாண்டேஜ் துணி தயாரித்து சப்ளை செய்கின்றனர். மாதம் 8,000 மீட்டர் பாண்டேஜ் துணி தயாரிக்கின்றனர். ஒரு மீட்டர் விலை 12 ரூபாய். இங்கு பணிபுரியும் கைதிகள் மாதம் 1,500 வரை சம்பளம் பெறுகின்றனர்.


வேலூர் மத்திய ஆண்கள் சிறை கண்காணிப்பாளர் சேகர் கூறியதாவது:இங்குள்ள மினி தொழிற்சாலையில் வேலை பார்ப்பவர்கள் பெரும் பாலும் ஆயுள் தண்டனை மற்றும் நீண்ட காலகைதிகள். ஒரு கமிட்டி மூலம் தேர்வு செய்து பயிற்சிகள் கொடுத்து வேலைக்கு அனுப்புகின்றோம்.நிறைய ஆர்டர்கள் வருகிறது. இவர்கள் சம்பாதிக்கும் பணம் இவர்கள் கணக்கில் வரவு வைக்கப்படும், இவர்கள் குடும்பத்தினருக்கும், குழந்தை படிப்பு செலவுக்கும் மாதா, மாதம் அனுப்பப்படுகிறது. ஆர்வத்துடன் கைதிகள் வேலை பார்க்கின்றனர்.வேலூர் மத்திய சிறையில் அமைக்கப்பட்டுள்ள தொழிற்சாலைகள் மூலம் வேலை வாய்ப்பு, கல்வி, தோட்டம் பராமரிப்பு போன்றவை அளிக்கப்படுகிறது. விடுலையாகி வெளியே செல்லும் கைதிகள், இந்த பயிற்சி மூலம் யாரையும் எதிர் பார்க்காமல் சுய தொழில் செய்ய அவர்களுக்கு வசதியாக அமையும்.இவ்வாறு அவர் கூறினார்.

எதிர்பாராவிதமாக தவறிழைப்பவர்கள் தண்டனையை அனுபவித்த பிறகு வெளியில் வந்து மக்களோடு மக்களாக வாழும் வழி இருந்தால் அவர்கள் தவறான பாதையையே வாழ்க்கையாக்கிக் கொள்ள மாட்டார்கள்.

செவ்வாய், 27 நவம்பர், 2012

படிக்கிறது கஷ்டமா?

தமிழகத்தில் சென்னையை தவிர பிற மாவட்டங்களில் 16/24 மணி நேரத்துக்கு குறையாமல் மின்வெட்டு இயல்பு வாழ்க்கைக்கு வேட்டு வைத்துவிட்டதால் மீண்டும் பழைய காலத்துக்கே செல்லத்தொடங்கியிருக்கிறோம். அதில் முக்கியமானது அக்கம்பக்கத்து வீடுகளில் உள்ளவர்களுடன் ஊர்வம்பு உட்பட பல விஷயங்களைப் பேசுவது, வாசிக்கும் பழக்கம் உள்ளவர்கள் மீண்டும் நூலகங்களில் அதிகமாக தென்படுகிறார்கள்.

கடந்த சில மாதங்களாக வாரம் ஒரு நாள் நூலகத்துக்கு சென்ற நான் இப்போது நூலக வேலை நாட்களில் பெரும்பாலும் சென்று விடுகிறேன். மீண்டும்  வாசிப்பு.

எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர் ஒரு தொலைக்காட்சி பேட்டியில், தயாரிப்பாளர், ஹீரோ உட்பட யாரும் ஸ்கிரிப்டை படித்துப்பார்க்க விரும்புவதில்லை. முதல்ல கதையோட "நாட்" என்னன்னு சொல்லுங்கன்னு கேட்பாங்க. அது நல்லா இருந்ததுன்னா மொத்த கதையையும் நீங்களே சொல்லிடுங்கன்னு கேட்பாங்க. என்று கூறியிருந்தார்.

இந்த நேரத்தில் 2009 ஆம் ஆண்டில் எழுதிய பழைய பதிவு கண்ணில் பட்டது. அது இங்கே உங்களுக்கு மீள்பதிவாக.
*************************************************
புதிய சட்டசபை வளாகம் அமைவதால் சாலைவிரிவாக்கம் செய்ய சென்னை வாலஜா சாலையில் உள்ள கலைவாணர் அரங்கத்தை இடித்துவருவதாக படத்துடன் செய்தி வெளிவந்தது. முன்பு ஒரு நாள் நம் முதல்வர், இன்னும் சிறப்பான வசதிகளுடன் புதிய அரங்கம் கட்டப்படும் என்று தெரிவித்திருந்தார். அது தேர்தல் வாக்குறுதியாகி விடாது என்று நம்புவோம்.

இந்த அரங்கத்தில் நானும் ஒரு விழாவுக்கு பார்வையாளராக சென்றேன். 2007 ஏப்ரலில் விகடன் பிரசுரம் பிரிட்டானிகா தகவல் களஞ்சியம் வெளியிடும் விழாவை பிரமாண்டமாக நடத்தியது.

விழாவை சிறப்பித்தவர்கள், கலைஞர் மு.கருணாநிதி, கவிக்கோ. அப்துல்ரகுமான், கவிப்பேரரசு வைரமுத்து, இளமைக்கவிஞர் வாலி, பொள்ளாச்சிமகாலிங்கம், கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, சுதா சேஷய்யன், விகடன் குழும உரிமையாளர்கள் எஸ்பாலசுப்ரமணியன், பா. சீனிவாசன் மற்றும் ஒரு சிலர் என்
நினைவில் இல்லை. தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடியவர் சீர்காழி சிவ சிதம்பரம.

அப்போது நான் சென்னையில் இருந்ததால் குறுஞ்செய்தி மூலமாக விண்ணப்பித்து அழைப்பிதழ் பெற்றேன். கெல்லீஸ் ஏரியாவில் இருந்து  சென்ற நான் எம்.எல்.ஏ விடுதிக்கு பக்கமாக மிதிவண்டியை பார்க் செய்தது ஒரு  சாதனை(?!) (சுற்றுப்புறச் சூழலை காக்கிறேனாக்கும்.)

விழா குறித்த நேரத்திலிருந்து ஒரு சில நிமிடங்கள் மட்டுமே தாமதமாக தொடங்கியது எனக்கு மகிழ்ச்சி தந்த அதிர்ச்சி.

விழாவில் மாண்புமிகு அமைச்சர் தங்கம் தென்னரசு, "என்னப்பா...கல்யாணம் எப்ப வெச்சிருக்க...எந்த மண்டபம்...மாப்பிள்ளை என்ன படிச்சிருக்காரு...அப்படின்னு கேள்வியா கேட்டு அடுக்குவாரு ஒருத்தரு. எப்பன்னு கேட்குறீங்கிளா?...பொண்ணோட கல்யாணப் பத்திரிகையை கொடுக்க வந்தவர்கிட்ட பத்திரிகையை வாங்கி கையில
வெச்சுகிட்டே இவ்வளவு கேள்வி வரும். படிக்கிற பழக்கம் அந்த அளவுக்குதான் இருக்கு. இந்த நிலை மாறனும்." அப்படின்னு பேசினார்.

பெருமை வாய்ந்த அந்த அரங்கம் 2009ம் ஆண்டோட நம்மை விட்டு விலகிடுச்சு.

இது மாதிரி பல விஷயங்கள் புது வருஷத்துல வரும். போகும். நாம நல்ல விஷயங்களுக்கு மனதின் ஓரத்துல இடம் கொடுப்போம். கசப்பான அனுபவங்கள் மறுபடி வராம பார்த்துக்குவோம். இதுதான் புத்தாண்டுல நாம எடுத்துக்குற பாசாங்கில்லாத உறுதிமொழியா இருக்க முடியும்.

ஞாயிறு, 25 நவம்பர், 2012

நாகராஜசோழன் - MA MLA

சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு தமிழில் வெளிவந்த அமைதிப்படை திரைப்படத்தில் அமாவாசை (எ) நாகராஜ சோழன் - சோழர் பரம்பரையிலிருந்து ஒரு MLA என்று பேசும் வசனம் அல்வா மேட்டர் போல் பிரபலம். இப்போது அந்த படத்தின் இரண்டாம் பாகம் பற்றிய விளம்பரங்களை அவ்வப்போது நாளிதழில் பார்த்தேன். இளையபாரதத்தில் பழைய பதிவுகளை தூசு தட்டும்போது 2010 ஆம் ஆண்டு நான் எழுதிய பதிவு ஒன்றில் அமைதிப்படை என்ற வார்த்தையை பார்த்ததும் அது இங்கே மீள்பதிவாக.
***********************************************

இந்தப் பழக்கத்திற்கு அடிமையானவர்கள் அதிக அளவில் செலவு செய்வதே மதுவுக்காகதான். குடும்பத்தில் தாம்பத்ய பிரச்சனைக்கும் மதுவுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு.

மேலும், அரசுக்கு வருமானம் பற்றாக்குறையாகிவிடும் என்ற காரணம் சொல்லியே  மதுவிலக்கு என்ற விஷயத்தை எல்லாரும் தட்டிக்கழித்துவிருகிறார்கள்.ஆனால் என் மனதுக்குத் தோன்றிய உண்மைக்காரணம் என்ன தெரியுமா?

அரசியல் பகை காரணமாகத்தான் பெரும்பாலான வன்முறைகள் அரங்கேறுகின்றன. இதில் நடக்கும் படுகொலைகளை செய்பவர்கள் மது அருந்திதான் செய்வார்கள்.மது என்னும் அரக்கன்தான் அவர்களை மிருகத்தைவிட கேவலமாக்கிவிடுகிறது.

மது அருந்துவதே மிகப்பெரிய சிக்கலாகிவிட்டால் இது போன்ற குற்றங்களை
செய்ய ஆள் வேண்டுமே.உண்மை இப்படி இருக்க மதுவிலக்கை அவர்கள் எப்படி கொண்டுவருவார்கள்?

சத்யராஜ் இரு வேடங்களில் நடித்த அமைதிப்படை திரைப்படம் நான் ஏழாம் வகுப்பு படிக்கும்போது வெளிவந்தது என்று நினைக்கிறேன்.அமாவாசை (எ)
நாகராஜசோழன் கதாபாத்திரம்  பெரும்பாலான அரசியல்வாதிகளைப் பிரதிபலிக்கும்விதமாக அமைந்திருந்ததால் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

ஒரு காட்சியில் மணிவண்ணன்,"இந்த சாதி கருமத்தை யாரு கண்டுபிடிச்சா?" என்று சத்யராஜிடம் கேட்பார்.

"மந்திரம் சொன்னவங்க கண்டுபிடிச்சதை மந்திரிமாருங்க கெட்டியா புடிச்சுகிட்டாங்க." என்பது சத்யராஜின் பதில்

"ஏங்னா...இந்த சாதியை ஒழிக்கப்போறதா மேடைக்கு மேடை பேசுறீங்கிளே...நிசமாலுமா?"

"உனக்கு வேற எதுவும் தொழில் செய்யத் தெரியுமா?"

"அய்யய்யோ...என்னங்க கெட்ட வார்த்தை எல்லாம்.?"

"தெரியாதுல்ல... எனக்கும்தான். நாம சாதியை ஒழிச்சுட்டோம்னா அப்புறம் நீயும் நானும் மட்டுமில்ல, நம்மளை மாதிரி பொழைப்பு நடத்துற எல்லாருமே சோத்துக்கு பிச்சைதான் எடுக்கணும்."

இதுவும் சத்யராஜ், மணிவண்ணன் இடையே நடக்கும் உரையாடல்தான்.

மதுவிலக்குக்கும் இந்த வசனம் பொருந்தும்.

மது அருந்தும் வழக்கமுடையவர்கள் உடனே என்னைத் துவைத்துக் காயப்போடும் எண்ணத்துடன், "இந்தப்பழக்கம் இல்லாத நீ மட்டும் ஆயிரம் வருஷம் தாண்டி தஞ்சாவூர் பெரிய கோயில் மாதிரி அப்படியே இருக்கப் போறியா?" இப்படி பின்னூட்டம் இட வாய்ப்பு நிறையவே உண்டு.

நீங்கள் என்னதான் சமாதானம் சொன்னாலும் மதுவால் சில தீமைகள் பலரது வாழ்வைப் புரட்டிப் போடும் அளவுக்கு இருக்கின்றன என்பதை நான் உறுதியாக சொல்வேன்.

பொருளாதாரதீமை: மதுவுக்காக ஆயிரம் ரூபாய் செலவழிப்பவனின் வருமானம் பத்தாயிரம் ரூபாயாக இருந்தால் பாதிப்பு உடனடியாக வெளியே தெரிவதில்லை. ஆனால் மூவாயிரம் ரூபாய் சம்பாதிப்பவன் குடும்பத்தை உடனடியாக சீர்குலைத்துவிடும்.

உடல்நலம் தொடர்பான தீமை: சர்க்கரைநோய், இரத்தஅழுத்தம், தாம்பத்ய குறைபாடு உள்ளிட்ட பல வியாதிகள் மதுவால் அதிக பாதிப்பை ஏற்படுத்துவதும் உண்மை.

உறவுசீர்குலைவு: தாம்பத்யத்தில் ஏற்படுத்தும் சிக்கல்களில் தொடங்கி எவ்வளவோ சொல்லிக்கொண்டே போகலாம். முக்கியமாக உங்கள் குழந்தைகள் கூட உங்களை வெறுக்கும் வாய்ப்பு உண்டு.

இந்த தீமைகள் எல்லாம் குடிக்காதவர்கள் குடும்பத்தில் இல்லையா என்று கேட்பார்கள். இது சரியான பதில் இல்லை என்று அனைவருக்குமே தெரியும். ஆனால் ஒப்புக்கொள்ளமாட்டார்கள்.

இதைவிட ஒரு பெரிய கொடுமை என்னவென்றால், மது அருந்தி வாகனம் ஓட்டுவதால் விபத்து ஏற்பட்டு பலரை பரலோகம் அனுப்புவதுதான் அது.

மது - நாட்டுக்கு, வீட்டுக்கு, உயிருக்கு கேடு.

வெள்ளி, 23 நவம்பர், 2012

புகையிலிருந்து தப்பிப்பது எப்படி?

குடிச்சுட்டு வாகனம் ஓட்டுறவங்க சாலையில ஒழுங்கா போறவங்களை அடிச்சு சாகடிக்கிறது நடந்தாலும், அப்படி அசம்பாவிதம் நடக்காத பட்சத்தில் அப்படி குடிக்கிறவங்க நம்ம மேல வாந்தி எடுக்காத வரை சிக்கல் இல்லை. ஆனா பழைய கால ரயில் இஞ்சின் மாதிரி புகையை அடுத்தவன் மூஞ்சியில விட்டு கேன்சரை அனுப்புறவங்களை என்ன செய்யுறதுன்னே புரியலை. 2010ல் எழுதிய பதிவை இப்போவும் எந்த திருத்தம் இல்லாம பிரசுரம் செய்யுற அளவுக்கு எந்த டெவலப்மெண்டும் இல்லாம இருக்கு.

நாகரிகமான வார்த்தையில சுதந்திரமா கருத்து சொல்ல பயமா இருக்கு. ஆனா அடுத்தவன் மூஞ்சியில புகையை விட்டு அவன் ஆயுசைக் குறைக்குறவன் எந்த பயமும் இல்லாம இருக்கான். என்ன கொடுமை சார் இது?

என் காசு...நான் குடிக்குறேன்னு சொல்றவங்களை திருத்த நான் பதிவு எழுதலை. வாயில வெச்சு ஊதுங்க. உடம்பு பூராவும் கட்டி வெச்சு கொளுத்திக்குங்க. அது உங்க இஷ்டம். ஆனா பத்தவெச்சு அடுத்தவன் மூஞ்சுக்கு புகையை அனுப்பாதீங்கன்னுதான் சொல்றேன்.

இப்போ 2010ல் எழுதிய பதிவு மீண்டும் உங்கள் பார்வைக்கு.
****************************************

1996ம் ஆண்டு நான் சினிமாதியேட்டரில் வேலை,பள்ளிக்கூடத்தில் படிப்பு என்று இரட்டைக்குதிரையில் சவாரி செய்துகொண்டிருந்த காலகட்டம்.(ஒரு குதிரை சவாரியும் இன்று வரை எனக்கு கைகூடலைன்னுங்குறதெல்லாம் இப்ப நமக்கு தேவையில்லை.)
அப்போது திருவாரூர் நகரத்தில் நான்கு, புற நகர்ப்பகுதியில் ஒன்று என்று ஐந்து தியேட்டர்கள் இருந்தன.இப்போது புற நகர்ப்பகுதியில் இருந்த தியேட்டர்(தியேட்டர் மாதிரி) நெல் கோடவுனா மாறிட்டதா சொன்னாங்க.

திருவாரூர் நகரப்பகுதியில் இருந்த ரெண்டு தியேட்டர்களை இடித்து அப்புறப்படுத்தியாச்சு.மிச்சமிருக்குற மூணு தியேட்டர்கள் எப்படியோ சமாளிச்சு உசுரோட இருக்கு.

இந்த மூணு தியேட்டர்களும் 1996ல சிறப்பா இயங்கிகிட்டு இருந்த சமயம்.பரம்பரை,உள்ளத்தை அள்ளித்தா, நாட்டுப்புறப்பாட்டு,பூவே உனக்காக, காலம்மாறிப்போச்சு,பாஞ்சாலங்குறிச்சி,சிவசக்தி போன்ற படங்கள் ஒரு தியேட்டர்ல குறைந்தபட்சம் முப்பதுநாள், அதிகபட்சம் அறுபதுநாள் என்ற கணக்குல நல்லா வசூல் செய்துகிட்டு இருந்துச்சு.

இன்னொரு தியேட்டர்ல தாயகம், செங்கோட்டை, இந்தியன், காதல்கோட்டை, அவ்வைசண்முகி அப்படின்னு சூப்பர் டூப்பர் ஹிட் படங்களின் அணிவரிசை.
இப்படி ரெண்டு தியேட்டர்களும் பிரமாதமான படங்களைத் திரையிட்டு டிக்கட் விலைகளை பதினைந்து, இருபதுன்னு வசூலிச்சுகிட்டு இருந்தாங்க.(பதினைந்து வருஷத்துக்கு முன்னால)

இது தவிர இன்னொரு தியேட்டர்ல ஆறு ரூபாய், பத்து ரூபாய் என்று டிக்கட்டில் உள்ள விலையையே வசூலித்தபடி சுமாரான படங்களைத் திரையிட்டாங்க.ஆர்ப்பாட்டமில்லாமல் அமைதியாக நல்ல வசூலைதான் அந்த படங்கள் தந்துச்சு.

அந்த மாதிரி சின்ன விலையில டிக்கட் விற்பனை செய்ததுக்கு காரணம்,சின்ன பட்ஜெட் படங்களா அவை இருந்ததுதான்.

ஆனா இப்போ,மாஸ் ஓப்பனிங் இருக்குன்னு நம்புற ஹீரோவுக்கு பத்துப் பதினைஞ்சு கோடியை சம்பளமா கொடுத்து, சத்யம், ஐனாக்ஸ் மாதிரியான தியேட்டர்கள்ல திரையிட்டு ஒரே வாரத்துல கோடிகளை அள்ளிடணும்னு நினைக்கிறாங்க.இந்த ஐடியா பல நேரங்கள்ல தப்புக்கணக்காயிடுது.

காயலான் கடைக்குப் போற நிலையில இருக்குற பஸ்சுலயும் ஏ/சி வால்வோ பஸ்சுலயும் ஒரே டிக்கட் வசூல் செய்தா அது எப்படி சரியா வரும்? இது கூட தீபாவளி, பொங்கல் சமயமா இருந்தா வேற வழி இல்லாம சொந்த ஊருக்குப் போறவங்க புலம்பிகிட்டே ஏறுவாங்க.அதுவும் ஒருநாள் கூத்துதான்.
பாழடைஞ்ச நிலையில இருக்குற தியேட்டர்களிலயும் ஐம்பது நூறுன்னு டிக்கட் விலை வெச்சா யாரால தாங்க முடியும்?. அவனவன் முப்பது ரூபாய் கொடுத்து குடும்பத்தோட ...........யில பார்த்துடுறான்.

செல்போன் உபயோகம் இப்படி அதிரடியா வெற்றி அடைஞ்சதுக்கு முக்கிய காரணம் என்ன? ஆயிரம் ரூபாயில இருந்து லட்ச ரூபாய் வரை மொபைல் கிடைக்குது. எல்லோருக்கும் தாங்கக்கூடிய விலையில சேவைக்கட்டணமும் இருக்கு.

வெளி செல்லும் ஒரு நிமிட அழைப்புக்கு பத்து ரூபாய்,உள் வரும் ஒரு நிமிட அழைப்புக்கு ஐந்து ரூபாய் என்று கட்டணம் இருந்தால் இந்த துறையின் வளர்ச்சி எப்படி இருந்திருக்கும்னு சொல்ல பள்ளிக்கூட பையனே போதும்.பி.ஹெச்.டி படிச்ச நிபுணர் தேவையில்லை.

எந்த தொழிலா இருந்தாலும் நிறைய எண்ணிக்கையில் வாடிக்கையாளர் இருந்தால் அவர்களுக்கு பொருளை கொண்டு சென்று சேர்ப்பது சற்று கூடுதல் செலவு பிடிப்பதோடு, பணிச்சுமையும் அதிகரிக்கத்தான் செய்யும். இதற்குப் பயந்து பெரிய விலைப்பொருட்கள் அல்லது பெரிய அளவு வாங்கும் வாடிக்கையாளர்களை மட்டும் நம்பியிருந்தால் ஒரே ஒரு வாடிக்கையாளர் எடுக்கும் சின்ன முடிவு கூட பெரிய அளவில் கவிழ்த்துவிடும்.

இப்போது சினிமா தொழிலிலும் இந்த..................................தனத்தைதான் சில தயாரிப்பாளர்கள் செய்துகொண்டிருக்கிறார்கள்.

என்னைப் பொறுத்தவரை அவர்கள் சினிமாவை தொழிலாக நினைக்காமல் சூதாட்டமாக மட்டுமே கருதி பேராசைப்பட்டதுதான் நல்ல படங்களுக்கு கூட சரியான தியேட்டர் கிடைப்பதில்லை. கிடைத்தாலும் அதிக விலை காரணமாக அதிக நாட்கள் படம் ஓடுவதில்லை.

இதே டெக்னிக்கை பயன்படுத்தினால் புகைப்பிடிக்கும் வழக்கத்தையும் குறைத்துவிட முடியும் என்று எனக்குத் தோன்றுகிறது.

எப்படின்னுதானே கேட்குறீங்க?

ஒரு சிகரெட் விலை மூணு ரூபாய் நாலு ரூபாய் என்று இருப்பதால்தானே நிறையபேர் ஈஸியா அதுக்கு அடிமையாயிடுறாங்க? ஒரு சிகரெட் விலை நானூறு ரூபாய் ஐநூறு ரூபாய் என்று வைத்துவிட்டால் அதைப் பயன்படுத்தி உடல்நலத்தை கெடுத்துக்கொள்வதோடு, அடுத்தவர் நலனுக்கும் வேட்டு வைப்பது குறையும்.
இப்படித்தானே டிக்கட்,பார்க்கிங்,கேண்டீன் கட்டண விலையேற்றம் ஆகிய விஷயங்களை மட்டுமே வைத்து தியேட்டருக்கு செல்லும் நடுத்தர மக்களை அலற விடும்போது சிகரெட் விலையை ஏற்றி புகைப்  பிடிக்கும் வழக்கத்தை குறைக்க முடியாதா என்ன?

மிஸ்-சாகிப்போன பர்ஸ்


இரண்டு மணி நேரம் வரிசையில் நின்று டிக்கட் கவுண்டருக்குள் கையை நீட்டும்போதுதான் நேரம் முடிந்தது அல்லது டிக்கட் முடிந்தது என்று சொல்வார்கள்.


ஒரு அரங்கத்தில் ஆயிரம் நாற்காலி இருக்கும். அதில் 960 நாற்காலி காலியாக இருக்கும். ஆனால் அங்கோ உடைந்திருக்கும் ஒரே ஒரு நாற்காலியில் மிகச்சரியாக போய் உட்காருவேன். இப்படி ஏன் சறுக்குது என்று புரியாமலேயே அடி வாங்கிக்கொண்டு புலம்பும் மிகச்சாதாரணர்களில் நானும் ஒருவன்.

அப்படி கிடைத்த ஒரு அனுபவத்தை 2010ஆம் ஆண்டு எழுதியிருந்தேன். மீண்டும் உங்கள் பார்வைக்காக.
**********************************************

கிராமத்தில் இருந்து பட்டணம்(சென்னை ?!) வரும் இளைஞன் பேருந்து  அல்லது ரயில் நிலையத்திலேயே உடைமைகளைத் தவற விடுவது, சென்னை மாநகரப்பேருந்துகளில் பர்ஸ் பிக்பாக்கெட் அடிக்கப்படுவது போன்ற காட்சிகள் அடங்கிய திரைப்படங்கள் சற்று அளவுக்கு அதிகமாகவே எனக்கு இவை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தியிருந்தன.

2004ம் ஆண்டு நான் வேலைக்காக மூட்டை முடிச்சுகளோடு மாம்பலம் ரயில்நிலையத்தில் வந்து இறங்கினேன். அங்கிருந்து வேகமாக ரங்கநாதன் தெரு வழியாக தி.நகரில் நான் செல்ல வேண்டிய இடங்களுக்கு மிகச்சரியாக போய் சேர்ந்தேன். ஆட்டோக்காரர்கள் சூழ்ந்துகொள்ளப் பார்ப்பார்கள். சாதாரணமாக ஒரு அலட்சியப் பார்வையுடன் அவர்களைக் கடந்து சென்று கொண்டே இரு என்று
என்னுடைய நண்பர் பாஸ் (எ) பாஸ்கரன் கூறியிருந்தார். அது மிகச் சரியான அளவில் எனக்குப் பலன்தந்தது.

வீடு அல்லது அலுவலகத்தில் இருந்து கிளம்பும் முன்பே பத்து ரூபாய் வரை சில்லறையை சட்டைப்பையில் வைத்துக்கொள்வதை வழக்கமாக வைத்திருந்தேன். பொது இடங்களில் பணத்தை மொத்தமாக வெளியில் எடுத்ததே இல்லை என்பதால் மாநகரப்பேருந்துப் பயணமும் எனக்கு சிக்கலாக அமையவில்லை.

சில சூழ்நிலைகள் காரணமாக திருவாரூரில் உள்ள ஒரு நிறுவனத்தில் வேலைக்குச் சேர வேண்டிய கட்டாயம். இரண்டு மாதங்களுக்குள்ளாகவே ஊர் திரும்பிவிட்டேன். ஆனால் அதற்குள் பேருந்துகள் செல்லும் வழித்தடம் தவிர பிற பாதைகளும் பழக்கமாகிவிட்டன.எல்லாம் என்னுடைய சைக்கிளுடைய உபயம்தான்.

திரும்பவும் 2006ம் ஆண்டு சென்னைக்கு வந்தேன். அப்போது புரசைவாக்கத்தில் இருந்து சாலிகிராமம் வந்து சேர போக்குவரத்து நெரிசல் நேரத்தில் ஒண்ணரைமணி நேரம் கூட ஆகும். ஆனால் நான் தங்கியிருந்த இடத்தில் இருந்து பூந்தமல்லிநெடுஞ்சாலை, பச்சையப்பன்கல்லூரி, நெல்சன்மாணிக்கம் பாலம், நுங்கம்பாக்கம் ரயில்நிலையம், சூளைமேடு, வடபழனி நூறடி சாலை வழியாக சில குறுகியபாதைகள், ஒரு சில சிக்னல்கள் என்று சாலிகிராமத்தை வந்து அடைய முக்கால்மணிநேரம்தான் ஆகும்.

பிறகு அலுவலகம் ராயப்பேட்டை பகுதிக்கு மாறிய பிறகும் எனக்கு பயணம் எளிதாகத்தான் இருந்தது. சேத்துப்பட்டு கீழ்ப்பாலம், எழும்பூர், கிரீம்ஸ்ரோடு அல்லது எழும்பூர், புதுப்பேட்டை, அண்ணாசாலை, சத்யம் தியேட்டர் இந்த பாதை வழியாக ராயப்பேட்டை அரசுமருத்துவமனைக்குப் பின்புறம் ஒரு தெருவில் உள்ள அலுவலகத்துக்குச் சென்று வந்ததால் பேருந்துப் பயணம் என்பது மிக மிக குறைவு. இதனால் என்னுடைய பர்ஸ் பறிபோக வாய்ப்பு என்பதும் மிக அரிதாகத்தான் இருந்தது.

சில தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கு கேமரா உதவியாளராக நான் பணியாற்றியபோது அந்த விளம்பர நிறுவனத்தின் காரில் போய்தான் பந்தாவாக இறங்குவோம்.அப்படித்தான் ஒருநாள் கிண்டியில் உள்ள அந்த பிரபல நட்சத்திர ஹோட்டலுக்கு விளம்பர நிறுவனத்தைச் சேர்ந்த நான்கு பேர் சென்றோம்.

நான் அங்கே செல்வது அதுதான் முதல்முறை. விமான பணிப்பெண்களைக்காட்டிலும் அழகு வாய்ந்த ஒரு தேவதை வந்து உங்களுக்கு உதவட்டுமான்னு ஆங்கிலத்தில் கேட்டதும் கொஞ்ச நேரம் அப்படியே ஷாக்காகி நின்னுட்டேன். வேற என்ன பண்றது,

அந்தப் பொண்ணு கேட்டது புரியுது. திரும்ப எப்படி ஆங்கிலத்துல பேசுறதுன்னு தெரியாம முழிச்சுகிட்டு இருக்கேன். அப்புறம் கூட வந்தவங்க இன்விடேஷனைக்காட்டி வழி கேட்டதும் அப்பவும் அந்த அப்சரஸ் பதில் சொன்னது ஆங்கிலத்துலதான்.

படியேறிப் போகும்போது அந்த கேமராமேன், "டேய் சரவணா, கேமரா பேக்கை நீ வெச்சுக்க...கேமரா ஸ்டாண்டை என்கிட்ட கொடு"ன்னு கேட்டார்.

எனக்கு விஷயம் புரியலை.

நாம நாலு பேர் இருக்கோம். அந்தப் பொண்ணு உங்கிட்ட வந்து ஹெல்ப்பண்ணவான்னு கேட்குது. நான் அரைமணி நேரம் மேக்கப் போட்டது வேஸ்ட்.எல்லாத்துக்கும் மச்சம் வேணும் போலிருக்கேன்னார். அப்பதான் அது நக்கல்னு எனக்கு புரிஞ்சது.

இவரு வயித்தெரிச்சலை தண்ணி(விஸ்கி இல்லை) ஊத்தி அணைக்கலைன்னா நாளைக்கு நமக்கே ஆப்புதான்னு ஒரு குரல் எனக்கு மட்டும் கேட்டுச்சு.

"அண்ணே...உங்க டேலண்ட்டுக்கு அதால தடுமாறாம பதில் சொல்ல முடியாதுன்னு பயந்துதான் ஊருக்கு இளைச்ச எங்கிட்ட பேசியிருக்கும்." அப்படின்னு சொன்னேன். (எதுவும் உண்மையா இருக்காது.நாலு பேர்ல நான் முன்னால நடந்தேன். அது எங்கிட்ட பேசிடுச்சு. அவ்வளவுதான். இது  குருநாதருக்குப் புரிஞ்சிருக்காதுன்னு நினைக்கிறேன்.)

அந்த மீட்டிங் ஹால்ல தமிழக அமைச்சர் ஒருவரும் ஆந்திராவைச்சேர்ந்த தொழிலதிபர் ஒருவரும் முக்கிய விருந்தினர்கள்.தமிழகத்தில் புதுசா ஒரு தொழிற்சாலை அமைப்பதற்கு அறிமுகவிழாதான் அது.

இதுல உன் பர்ஸ் எப்படி போச்சுன்னுதானே கேட்குறீங்க?

மீட்டிங் முடிஞ்சு பஃபே முறையில சாப்பாடு, கூலிங், ஹாட்டிரிங்ஸ் எல்லாமும் உண்டுங்க. நான் அப்பவும் வெஜிடேரியன்தான். அந்தப் பக்கம் போகலாம்னு பார்த்தப்ப கேமராமேன், எங்களுக்கு வண்டியோட்டுன புது டிரைவரை பார்க்கிங்ல போய் அழைச்சுட்டு வரசொன்னார். நானும் ரொம்ப ஆர்வமா போனேன்.

திரும்பி வந்தப்ப எல்லார் கையிலயும் ஒரு புது பர்ஸ். மீட்டிங்ல கலந்துகிட்டவங்களுக்கு கிப்ட். நான் போய் கேட்டப்ப தீர்ந்துடுச்சு. மற்ற மூணு பேர்கிட்டயும், "எனக்கும் வாங்கி வெச்சிருக்கலாமே"ன்னு கேட்டேன்.

"நீ வாங்கின பிறகு டிரைவரை அழைச்சுட்டு வர்றதுக்காக போயிருக்கலாமே"ன்னு ரொம்ப கூலா சொன்னாங்க. இதுதான் சென்னைன்னு புரியவெச்ச மற்றொரு தருணம்னு உணர்ந்தேன். இதுதாங்க என் அதிர்ஷ்டம்.

இதுல கொடுமை என்னன்னா, அந்த டிரைவர் எதோ சிகிச்சை எடுத்துக்குறதால வெளியில எதுவுமே சாப்பிட மாட்டேன்னு சொல்லிட்டார். நான் போனதும் வேஸ்ட். பர்சும் போச்சு.

நீதி: எல்லாத்தையும் ஜெயிச்சுட்டோம். யாரும் ஏமாத்த முடியாதுன்னு இறுமாப்பா இருந்தா இப்படித்தான் பல்ப் வாங்கணும்.

வியாழன், 22 நவம்பர், 2012

மோசடியில் சிக்கும் மக்கள்




கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக பண விஷயத்தில் படித்தவர், படிக்காதவர் என்று பலரும் ஏமாந்து கொண்டேதான் இருக்கிறார்கள். இதில் பணத்தாசையை அதிகமாக காட்டும் விளம்பரங்களை பார்த்து 20 ஆண்டுகளுக்கு முன்பு ஏமாந்தது சரி. இப்போதும் பெரிய அளவில் ஊடகங்களில் விளம்பரம் செய்தால் அவர்கள் மோசடி செய்ய வாய்ப்பிருக்காது என்று முழுவதுமாக தங்கள் பணத்தை அர்ப்பணித்துவிட பெரும்பாலான மக்கள் தயாராக இருக்கிறார்களோ என்று எனக்கு சந்தேகம் இருந்துகொண்டே இருக்கிறது.

1ரூபா விதைச்சா 1 கோடிரூபாய் அறுக்கலாம் என்ற ரீதியிலான விளம்பரங்களுக்கு பஞ்சமே இல்லை.  பணப்பட்டுவாடாவில் சிக்கல் வந்து முதலீட்டாளர்கள் தங்கள் பணத்திற்கு அலைந்து கொண்டிருக்கிறார்கள் என்று கலைமகள் சபா, அனுபவ், ரமேஷ்கார்ஸ், என்று ஆரம்பித்து ஈமு கோழிகள் வரை எவ்வளவோ உதாரணங்களை பேப்பரில் படித்திருக்கிறேன்.

ஆனாலும் சினிமாக்களில் ஒரே பாட்டில் கதா நாயகன் கோடீஸ்வரனாவது போல் திருவாளர் பொது ஜனமும் ஆசைப்படுவதும் இது மாதிரியான சிக்கல்களுக்கு ஒரு காரணமாக இருக்குமோ.

நிதி நிறுவன மோசடிகள் குறித்த தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றை பார்த்துவிட்டு 2010ஆம் ஆண்டு நான் எழுதிய பதிவு இப்போது மீண்டும் உங்கள் பார்வைக்கு.


மிகப்பெரிய கோடீஸ்வரர் சென்னை சிட்டி பஸ்சில் செல்லும்போது மூன்று ரூபாய் கொடுத்து டிக்கட் எடுக்க காசு இல்லை என்றால் நடத்துனர்,"யோவ்...சாவுகிராக்கி, எறங்குயா முதல்ல..."என்று நல்ல வார்த்தை(?!) சொல்லி அவரை இறக்கிவிடுவார் அல்லது செக்கிங் இன்ஸ்பெக்டரிடம் பிடித்துக்கொடுப்பார்.அந்த நேரத்தில் அந்த பணக்காரரின் சொத்துக்கள் எதுவும் உதவிக்கு வராது.

ஒரு நிதி நிறுவனத்திடம் எல்லாரும் ஒரே நேரத்தில் போட்ட பணத்தை திருப்பிக்கேட்டால் ஏற்படுவதும் இதே நிலமைதான். ஏமாற்றும் நோக்கத்துடன் செயல்படும் நிறுவனங்கள் தவிர்த்து நல்ல நிலையில் இயங்கிக்கொண்டிருக்கும் சில நிறுவனங்களும் திடீரென மூடப்படுவதற்கும் இதுதான் காரணம்.நான் கல்லூரியில் படிக்கும்போது ஒரு பேராசிரியர் கொடுத்த விளக்கம்தான் இது.

10.01.2010 அன்று கலைஞர் தொலைக்காட்சியில் கருத்து யுத்தம் நிகழ்ச்சியில் இது தொடர்பான விவாதம் நடந்தது.அதில் புதியதாக சில விஷயங்களைத் தெரிந்துகொள்ள முடிந்தாலும் பல விஷயங்களைப் பூசி மெழுகிவிட்டார்கள்.

அதுசரி...நிகழ்ச்சியில் கலந்துகொண்டிருந்ததில் சில அரசு அதிகாரிகளும் இருந்தார்கள்.பல விதிகளுக்கு உட்பட்டுதானே அவர்களாலும் பேச முடியும்.

இதில் என்னை நெருடிய விஷயம் என்னவென்றால் பதிவு செய்யப்படாத நிறுவனம் பற்றிய தகவல்களை சாதாரண குடிமக்கள்தான் கண்டறிய வேண்டும் என்று சொல்கிறார்கள். அந்த அளவுக்கு அவர்களுக்கு திறமை இருந்தால் இவ்வளவு நாளும் தொடர்ந்து ஏமாந்து கொண்டே இருக்க மாட்டார்களே.

மக்கள் பேராசையால் அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு ஏமாறுவது பெரும்பாலும் முறையாக பதிவு செய்யப்படாத நிறுவனங்களில்தான். இதற்கு ஓரளவு எளிமையான தீர்வு என்னவென்றால் அரசின் இணையதளத்தில் முறையான பதிவு பெற்ற எல்லா தனியார் நிறுவனங்களின் பட்டியலையும் துறை வாரியாக வெளியிட்டுவிடலாம்.

கல்வி நிறுவனங்கள், நிதி நிறுவனங்கள் இவைதான் மக்களுக்கு அதிக நன்மையும் பாதிப்பையும் ஏற்படுத்தக்கூடியவை. அதனால் அவை பதிவு பெற்றால் மட்டும் போதாது. அவர்களின் எல்லை எதுவரை என்பதையும் தெளிவாக வரையறுத்து அதையும் அரசின் இணையதளம் மூலமாக மக்களின் பார்வைக்கு அளிக்கலாம்.

அதுமட்டுமின்றி கல்வி நிறுவனங்களில் சேர்க்கைக்கான காலக்கெடு முடிந்ததும் உரிய துறையில் முழுமையாக மாணவர் பட்டியலையும் அந்த இணையதளத்தில் வெளிப்படையாக்கிவிட்டால் ஒவ்வொரு ஆண்டும் அனுமதி பெறாமலேயே மாணவர்களை சேர்த்துவிட்டு அவர்களைத் தேர்வு எழுதவிடாமல் நடுத்தெருவில் நிறுத்தும் அவலம் காணாமலேயே போய்விடும்.

ஆனால் இன்னொரு முக்கியமான விஷயத்தையும் மனதில் கொள்ள வேண்டும். அரசாங்கத்தின் சில இணையதளங்களில் உடனுக்குடன் புதிய தகவல்கள் பதிவுசெய்யப்படுவதில்லை என்றும் கூறப்படுகிறது.

இந்தியாவின் பிரதமர் இந்திராகாந்தி என்று இணைய தளத்தில் இருந்தால் அது பழைய தகவல் என்று நமக்கு புரிந்துவிடும்.ஆனால் பல தனியார் நிறுவனங்களின் அங்கீகாரம் தொடர்பான தகவல்களை அப்டேட் செய்யாமல் விட்டுவிட்டால் அது மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்.

நிதிநிறுவனத்தில் ஆரம்பித்து கல்விநிறுவனத்துக்கு போய்விட்டேன்.பரவாயில்லை...கல்வி பெற நிதி தேவை. நிதியைப் பெறவும் கல்வி ஒரு கருவியாக இருக்கிறது.

போலிகளை ஒழிக்க மேலே நான் சொன்ன சில வழிமுறைகள் நிச்சயமாக நல்ல பலன் தரும். ஆனால் நல்ல முறையில் நடைபெறும் சில நிதிநிறுவனங்களும் திடீரென மூடப்படுகின்றனவே. இதற்கு என்ன காரணமாக இருக்கும்.

ஆப்பு எதுவும் வெளியில் இல்லை. அதற்கும் மக்கள்தான் காரணம். கடன் வாங்கியவர்கள் திரும்ப கட்டவில்லை என்றால் அது முதலீட்டாளர்கள் தலையில்தான் துண்டாக விழும். இதிலும் யோசிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் வங்கியிலும் சரி, சிட்பண்ட்டுகளிலும் சரி சிறு தொகை வாங்கியவர்களில் 95 சதவீதம் பேர் ஒழுங்காக திரும்ப செலுத்துவதாகத்தான் சொல்கிறார்கள். இது உண்மையாகத்தான் இருக்கும்.

அப்போது வில்லங்கம் எங்கே இருக்கிறது. எல்லாம் சில பணக்கார முதலைகளால்தான்.அவர்கள் அப்படி பணத்தை திரும்ப செலுத்தாமல் தப்பிக்க யார் காரணம்? நிதி நிறுவனம் என்றால் நிர்வாக இயக்குனர்கள், அரசுடமை வங்கி என்றால் உயரதிகாரிகளிடமிருந்து பல மக்கள் பிரதிநிதிகள் வரை எல்லா மட்டத்திலும் தவறு செய்கிறார்கள்.

அமெரிக்காவில் இரட்டைக்கோபுரத்தை கட்ட எத்தனை ஆயிரம் மூளைகளும் கரங்களும் கால்களும் உழைத்தனவோ? ஆனால் அதை தரைமட்டமாக்கியது மூளை இல்லாத ஒரு சிலர்தானே.

அதேபோல் ஊழலுக்கு முக்கியக் காரணம் சிலரின் பேராசைதான்.

நாலுபேர் நல்லா இருக்கணும்னா எதுவுமேதப்பு இல்லை.- இது நாயகன் படத்தில் வரும் வசனம். இதை ரொம்ப தப்பா புரிஞ்சுகிட்டு தப்பாவே செயல்படுத்துறதுக்கு கொஞ்சபேர்தான் இருக்காங்க. ஆனா இதையே நாடு தாங்காது போலிருக்கே.

செவ்வாய், 20 நவம்பர், 2012

ஆங்கில டப்பிங் படங்களால் நன்மையா ? தீமையா?



இப்போது சில மாதங்களாக மீண்டும் நூலகத்தில் இருந்து அதிகமாக புத்தகங்கள் எடுத்து படிக்கத்தொடங்கியிருக்கிறேன். (நேர உபயம் : மின்வெட்டு)

ஈரமான ரோஜாவே பட புகழ் இயக்குனர் கேயார் எழுதிய "இதுதான் சினிமா" என்ற புத்தகத்தை இப்போது மீண்டும் படித்தேன். சினிமா உலகத்தில் இருக்கின்ற படத்தயாரிப்பு மற்றும் மார்க்கெட்டிங் சிக்கல்களை தெளிவாக விளக்கும் புத்தகம் அது. இன்னும் எவ்வளவோ பிரச்சனைகள் இருக்கலாம். அதைப் பற்றி நான் இப்போது பேசவில்லை. நான் சொல்ல வந்த விஷயம் வேறு. அதில் டப்பிங் படங்கள் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்களுக்கு மறைமுகமாக சில சங்கடங்கள் தருவதை பற்றி எழுதியிருந்தார். அதை அப்படியே நான் தட்டச்சினால், யாராவது என் மனம் புண்பட்டுவிட்டது என்று வழக்கு தொடர வாய்ப்பு இருக்கிறதா என்ற அச்சம் இருக்கிறது. அதனால் இத்தோடு நிறுத்திக்குவோம். அது என்ன என்று யோசிப்பவர்கள் அந்த புத்தகம் கிடைத்தால் படித்து தெரிந்து கொள்ளவும்.

இப்போது இந்த புத்ததமிழ் பேசும் ஜாக்கிசான் என்ற தலைப்பில் 2010ஆம் ஆண்டு நான் எழுதிய பதிவை மீண்டும் தூசு தட்டியிருக்கிறேன். இப்போது புதிய பதிவுகள் போடுவதை நான் மிகவும் குறைத்துக்கொள்ள காரணம், இப்போது உள்ள சமுதாய சூழ் நிலைகள் காரணமாக மிகவும் பாதிக்கப்பட்டு திணறும் கோடிக்கணக்கானவர்களில் நானும் ஒருவன். அந்த கோபங்கள் நாகரிகமான வார்த்தைகளாக வெளிப்பட்டால் கூட எந்த பக்கம் வழக்கு பாயுமோ என்ற சந்தேகத்துடன் பொழுதைக்கழிக்க வேண்டியிருக்கிறது. ஏன் இந்த வம்பு. இந்த நந்தன தமிழ் வருடம் முடியும் வரை அமைதி காப்போம். அதன் பிறகு இணையத்தில் எழுதுபவர்களின் கழுத்தை நெறிக்கும் சட்டப்பிரிவில் உரிய நியாயமான மாற்றம் உரிய சட்டப்படி உருவாகும் என்று நம்புவோம்.

இப்போது 2010ஆம் ஆண்டு நான் எழுதிய பதிவின் மீள்பிரசுரம்.

********************************************************


சமச்சீர்கல்விக்கும் ஆங்கிலத்திரைப்படத்துக்கும் தொடர்பு  இருக்கா?...


இருக்கே. பள்ளிக்கூடங்கள்ல இருக்குற பாடத்திட்டத்துக்கும் தமிழ் பேசுற ஆங்கிலப்படங்களுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கே.

நீ எந்த பதிவு போட்டாலும் சினிமாவைத்தொடாம எழுதமாட்ட போலிருக்கேன்னு வீட்டுக்கு ஆட்டோவை அனுப்பிடாதீங்கப்பா.

ஒரு பட்டிமன்றத்துல கு.ஞானசம்மந்தன் அவர்கள், "வரவர ஜாக்கிசான் ரொம்ப அழகா தமிழ் பேசுறார். போற போக்கைப் பார்த்தா பட்டிமன்றத்துக்கு நடுவரா அவர் வந்து உட்கார்ந்துடுவார் போலிருக்கே."ன்னார். அதைக் கேட்கும் போது காமெடியாத்தான் இருந்துச்சு.

ஆனா இப்போ அதனால நமக்கு சில சங்கடங்கள் நமக்குத்தெரியாமலேயே இருக்குறது கொஞ்சம் அதிர்ச்சி அளிக்கிற செய்திதான்.

சில தினங்களுக்கு முன்பு புதியதலைமுறை வாரஇதழில் 2010 ஆண்டு எப்படி இருக்கும் என்று ஒவ்வொரு துறையில் உள்ளவர்களிடமும் நேர்காணல் செய்திருந்தார்கள்.

தமிழ்த்திரைப்படத்துறையில் FEFSI தலைவர் வி.சி.குகநாதன்,"ஹாலிவுட் படங்களை அந்த மொழியிலேயே வெளியிடுங்கள். அதன் மூலம் அடிமட்ட ரசிகனும் தன் ரசனையை வளர்த்துக்கொள்ளட்டும். அதைவிட்டுவிட்டு யாரோ ஒரு ஆங்கிலேயனின் வாயசைப்பில் தமிழைத்திணித்து தமிழ் மொழிக்கு களங்கம் ஏற்படுத்திக்கொண்டிருக்கிறார்கள். 2010ம் வருடத்தில் அதைக் கட்டுப்படுத்தவேண்டிய கட்டாயம், தமிழ் சினிமாவிற்கும் தமிழ் சினிமா இளைஞர்களுக்கும் ஏற்பட்டிருக்கிறது."என்று கூறியிருந்தார்.

இதை வெறும் சினிமா தொடர்பான விஷயமாக மட்டும் பார்க்கக்கூடாது.

சமச்சீர்கல்வி பிரமாதம். கலக்கப்போகுதுன்னு ஆளுங்கட்சியும் அதனுடைய ஆதரவாளர்களும் சொல்றாங்க. எதிர்க்கட்சியும் அவங்களைச்சேர்ந்தவங்களும் இது சரியில்லைன்னு வசை பாடுறாங்க. இவங்க எது சூப்பர்னும் விளக்கலை. அவங்க எது சரியில்லைன்னும் சொல்லலை.

நடுவுல என்னை மாதிரியான அப்பாவிகள் மண்டைதான் காயுது.

இப்போது சமச்சீர்க்கல்வித்திட்டத்தின் நிறைகுறையை அலசி ஆராயும் அளவுக்கு நான் பெரிய படிப்பாளி இல்லை. ஆனால் சிறப்பிடம் பெறும் மாணவர்கள் அளவுக்கு அரசுப்பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் திறனையும் மேம்படுத்தும் வ்கையில்தான் பாடத்திட்டம் இருக்க வேண்டுமே தவிர நன்றாகப் படிக்கும் மாணவர்களை நீ, நிறைய அரசுப்பள்ளி மாணவர்களைப் போல் எழுபது சதவீதம் எடுத்தால் போதும் என்று கீழே பிடித்து இழுக்கும் வகையில் சமச்சீர் கல்வி அமையக்கூடாது என்று மட்டும் என்னால் உறுதியாக சொல்ல முடியும்.

இலவசமும் இப்படித்தான். ஒரு பொருளை காசு கொடுத்து வாங்குற அளவுக்கு 
ஒருத்தனை பொருளாதார வலு உள்ளவனா மாத்துறதை விட்டுட்டு இலவசம் கொடுத்து ஒரு அடிமையாவே வெச்சிருக்குறதுக்கு உதாரணம் சொல்றேன்.இது வண்ணத்துப்பூச்சி புழு உருவமா இருக்கும்போது அதுக்கு உதவி செய்யுறதா நினைச்சு கூட்டை  உடைக்கிறதும்  இலவசம் கொடுக்குறதும் ஒண்ணுதான்.

தன்னால கூட்டை விட்டு வெளியில வர்ற வண்ணத்துப்பூச்சியாலதான் பறக்க முடியும். நாமே கூட்டை உடைச்சு அதை வெளியில விட்டா எதுக்கும் பிரயோசனமில்லாம உயிரிழக்க வேண்டியதுதான்.

******

நான் 1996க்குப் பிறகு சில ஆண்டுகள் பத்தாம் வகுப்பு முதல் கல்லூரி செல்லும் வரை அவ்வப்போது பகுதிநேரமாக திரையரங்குகளில் பணியாற்றி வந்தேன்.(பார்த்ததே பகுதி நேரம். இதுல என்ன அவ்வப்போது?...அதையும் தொடர்ந்து பார்க்கலைன்னு அர்த்தம்.)

அதில் ஒரு தியேட்டரில் The Rock, Broken Arrow, Independence day, Golden Eye, Tommorow never dies, Air Force One, Universal Soldire, Jumanji, Evil Dead, Anaconda, The Lost World(jurassic park 3) உட்பட பல படங்களைத் திரையிட்டாங்க.

அந்தப் படங்கள்ல வர்ற வசனங்களோட உச்சரிப்பு பாதி புரியாது. ஆனா ஓரளவுக்கு வசனங்களுக்கு அர்த்தம் விளங்கிடுச்சு. அடுத்து 2000வது ஆண்டு
வாக்கில் கேபிள் டிவி கண்ட்ரோல் ரூம்ல வேலை செய்த நாட்கள்ல Star Plus சேனலில் அமிதாப் தொகுத்து வழங்கிய குரோர்பதி நிகழ்ச்சியை நான் தொடர்ந்து பார்ப்பேன்.அப்போதும் எனக்கு ஓரளவு ஆங்கில அறிவு மேம்பட்டதை உணரமுடிஞ்சது.

நான் கல்லூரி இறுதியாண்டு படிக்கும்போது 2003ல உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்ற சமயம். எனக்கு கிரிக்கெட் மேல ஆர்வமே இல்லன்னாலும் அப்போ நான் போட்டிகளைப் பார்க்க ரெண்டு காரணம் இருந்தது.இந்தியா ஆஸ்திரேலியாகிட்ட தவிர வேறு யார்கிட்டயும் தோற்காம இறுதிப்போட்டிக்கு முன்னேறினது முதலாவது காரணம்.

அடுத்தது வேற என்ன...மந்த்ராபேடிதான். அந்தம்மா(?!) கிரிக்கெட் பத்தி அரைகுறையா புரிஞ்சுகிட்டு ஆர்வக்கோளாறுல தப்புதப்பாதான் கேள்வி கேட்கும். ரொம்ப பேர் அதைக் கேட்டாங்களோ இல்லையோ...அம்மணியோட தரிசனத்தை நல்லாவே பார்த்தாங்க.

எங்க கல்லூரி ஆசிரியர் ஒருத்தர்தான் மந்த்ராபேடி பேசுறதை டிவியில பாருங்கன்னு சொன்னார்.நாங்க எல்லாரும் சட்டுன்னு சிரிச்சுட்டோம்.

"நான் பார்க்கசொன்னது அந்த அம்மாவோட ஆங்கிலத்துக்காக. போட்டுருக்குற டிரஸ்சுக்காக இல்லை." அப்படின்னார்.

நான் கொஞ்சம் ஆர்வமா, சார்..அந்தம்மா தப்புத்தப்பால்ல கிரிக்கெட்டைப்பத்தி பேசுது. அப்போ அந்த இங்கிலீஷ் எந்த கதியில இருக்குமோன்னு கேட்டேன்.

எதுவுமே தெரியாத உங்க மாதிரி புத்திசாலிங்களுக்கு அந்த இங்கிலீஷ் போதும்  
அப்படின்னு சொல்லி, கோ எஜுகேஷன் வகுப்புல மானத்தை வாங்கிட்டார்.

இந்த கேலி கிண்டலை எல்லாம் பொருட்படுத்தாம முயற்சி பண்ணினா நிச்சயமா ஆங்கிலத்தை கண்டிப்பா கத்துக்க முடியும்.

ஜெர்மனி, ரஷ்யா, ஜப்பான், சீனா இங்க எல்லாம் ஆங்கிலத்தை நம்பியா இருக்காங்கன்னுதானே நீங்க கேட்குறீங்க. அங்க எல்லாம் நாடு பூராவும் ஒரே மொழிதான். ஆனா நம்ம நாட்டுல சிவில் சர்வீஸ் நேர்முகத்தேர்வுல கலந்துக்க தலைநகர் போனா வழியில குறைந்தது ஆறு மொழியாவது கத்துக்க வேண்டிய நிலை. எத்தனை மொழி கத்துக்குறோமோ அத்தனை மனிதனுக்கு சமம்னு சொல்லுவாங்க.

அதுக்கு நேரம் ஒதுக்க எல்லாராலயும் முடியாது.அதனால நம்ம நாட்டுல எல்லாரும் ஆங்கிலத்தை இணைப்புப்பாலம் மாதிரி பயன்படுத்துற அளவுக்கு கத்துக்குறது அவசியம். அதாவது ஒவ்வொருவருக்கும் தன்னுடைய தாய்மொழி, ஆங்கிலம் இரண்டும் கட்டாயம். அதுக்கு மேல அவங்கவங்க திறமையைப் பொறுத்து கத்துக்கலாம்.

******

வெள்ளி, 16 நவம்பர், 2012

சிங்கிளாக பயணம் செய்வதில் சில சிக்கல்கள்



சென்னை உள்ளிட்ட பெரிய நகரங்களில் பணிபுரிவதற்காக வந்து தங்கியிருப்பவர்கள் தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை நாட்களில் பிறந்து வளர்ந்த ஊர்களுக்கு சென்று மறுபடியும் திரும்புவதை வாழ் நாள் சாதனையாகவே கல்வெட்டில் செதுக்கி வைக்கலாம். இந்த ஆண்டு தீபாவளிக்கு மறுநாள் சென்னையில் இருந்து திருவாரூருக்கு வந்திருந்த ஐ.டி.கம்பெனி ஆபீசராக (?!) வேலை பார்க்கும் நண்பன் செல்போனில் "அய்யய்யோ...டிக்கட்டை கேன்சல் செஞ்சுடு"ன்னு அலறினான்.

"இது மாதிரி பண்டிகைக்கு மறு நாள் பஸ், ரயில் எதுலேயுமே டிக்கட் கிடைக்குறது ரொம்ப கஷ்டம். நீ ஏன் டிக்கட்டை கேன்சல் செய்ய சொல்ற?" என்றேன்.

"பஸ்சுல டபுள் பர்த்துல புக் பண்ணியிருக்குற விஷயத்தை இப்பதான் சொன்னான். பக்கத்துல ஜோடி சேர்றவன் ஒழுங்கான ஆளா இருந்தா பரவாயில்லை. அவன் குடிச்சுட்டு புரள்ற ஆளா இருந்தா நான் செத்தேன். அதுக்கு நான் மயிலாடுதுறை, சிதம்பரம், புதுச்சேரியில பஸ் மாறி மாறி தூக்கம் கெட்டு ஊருக்கு போயிடுவேன்.

இன்னொரு பிரச்சனை ரயில்ல பர்த்துன்னா பக்கவாட்டுல மட்டும்தான் ஆடும். ஆனா பஸ் எட்டு திசையிலயும் அலசிதான் நம்மளை ஊருக்கு கொண்டு போய் சேர்க்கும்.'' என்று அரைமணி நேரம் லெக்சர் அடித்தான்.

தனியா பயணம் பண்ணினா ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு பிரச்சனை. அதுல முக்கால்வாசி எல்லாருக்கும் ஒரே மாதிரி பிரச்சனைதான் வரும் போலிருக்கேன்னு என் மனசுல தோணுச்சு. சிங்கம் சிங்கிளா போனா எவ்வளவு அக்கப்போர் அப்படின்னு 2010ல வலையேத்துன பதிவை தூசிதட்டி இங்க கொடுத்துட்டேன்.
**********************************
சிங்கம் தனியா போய்தான் அதிரவைக்கும்னு சொல்றாங்க. ஆனா நிஜ வாழ்க்கையில சிங்கிளா இருந்தா பல இம்சைதான் வரும். எல்லாத்தையும் சொல்ல நேரம் இல்லை.அதனால சில வில்லங்கம் மட்டும் உங்கள் பார்வைக்கு.

ஜூன் முதல்வாரம் குற்றாலத்துல நெருங்கிய உறவினர் கிரஹப்பிரவேச விழா வெச்சிருந்தார். பாட்டி காலமானதும் ஏப்ரல் இறுதியில இருந்து மே மாசம் முழுவதும் திருவாரூர்-பரமக்குடி பயணமாவே இருந்ததால அம்மாவை விட்டுட்டு நான் மட்டும் தனியே குற்றாலத்துக்கு பயணம்.

விசேஷகாலமா இருந்ததால இரவு நேரத்துல தஞ்சாவூர்ல இருந்து மதுரை போறவரை இடம் கிடைக்கிறது கஷ்டம். அங்கிருந்து செங்கோட்டை போற பஸ்சுலயும் சூழ்நிலை எப்படி இருக்குன்னு தெரியாம ரிஸ்க் எடுக்க விரும்பலை.

S.E.T.C பஸ்ல டிக்கட் ரிசர்வ் பண்ண போனேன். ஆறாம் நம்பர் இருக்கையே கிடைச்சது. பதினோரு மணி நேர டிராவல்ல குறைஞ்சது ரெண்டு மணி நேரமாச்சும் தூங்கலாம்னு நம்பி பஸ்சுல ஏறுனேன்.

நைட் டின்னருக்காக(?!) தஞ்சாவூர்லயே கிட்டத்தட்ட ஒருமணி நேரம் வெயிட்டிங்.


தஞ்சை நகரைக் கடந்ததும் ஓரமா வண்டி நின்னுச்சு. என்னன்னு பார்த்தா கண்டக்டர், டிரைவர் சீட்டுல உட்கார்ந்து ஓட்ட ஆரம்பிச்சுட்டார். சிக்கன நடவடிக்கையால ஹெவி டிரைவிங் தெரிஞ்ச ஆளைத்தான் கண்டக்டரா போட்டுருக்காங்கன்னு அறிவுக்கு தெரிஞ்சாலும் மனசு அந்த இளைஞரை கண்டக்டராவே பார்த்துச்சு. மனசுல நினைவுக்கு வந்த கடவுளை எல்லாம் வேண்டிகிட்டு தைரியத்தை கொண்டுவர முயற்சி செய்தேன்.

அப்புறம் எங்க தூங்குறது?

எக்ஸ்பீரியன்ஸ் ஆட்கள்ல பலர், கியர் பாக்ஸ் எக்கேடு கெட்டுப்போனா என்னன்னு கிளட்சை ஒழுங்கா பயன்படுத்தாமயே கியர் மாத்துவாங்க. ஆனா இந்த கண்டக்டர் ரொம்ப சரியா கிளட்சை யூஸ் பண்ணி கியர் மாத்தி பஸ்சை இயக்குனார்."சரி...இவர், வேலைக்கு சேர்ந்து ரொம்ப நாள் ஆகலை போலிருக்கு."அப்படின்னு ஒரு எண்ணம்.

மதுரை வரைக்கும் எனக்கு தூக்கமே வரலை. மாட்டுத்தாவணி பஸ்ஸ்டாண்டுலேருந்து கிளம்பினதுமே தூங்கலாம்னு பார்த்தா பஸ் ரிங் ரோடு போகாம யானைக்கல், வடக்குமாரட்வீதி வழியா பழ மார்க்கெட்டுக்கு போனது. கண்டக்டர் கீழே இறங்கிப் போய் பழங்கள் வாங்கிட்டு வந்தார்.(அவங்களுக்குதான்.)

அப்படியே பெரியார் பேருந்து நிலைய பகுதி, பழங்காநத்தம், திருப்பரங்குன்றம் சாலை வழியா போய் திருமங்கலத்தை நெருங்குனுச்சு. சரி...இனிமே வேடிக்கை பார்க்க எதுவும் இல்லைன்னு நினைச்சு கண்களை மூடி தூங்க முயற்சி செஞ்சேன்.

சில நிமிஷங்கள்தான்.ஒரு அவலக்குரல். நான் அப்படியே ஷாக் ஆயிட்டேன்.(இதை மட்டும் வடிவேலு மாடுலேஷனில் படிக்கவும்.) வேற ஒண்ணுமில்லைங்க. அஞ்சு வரிசைக்குப் பின்னால உட்கார்ந்துருந்த ஒருத்தர் மூணு வரிசை ஆளுங்க மேல வாந்தி எடுத்துட்டார். சாதாரணமாவே எனக்கு பேருந்துப் பயணத்தின்போது வாந்தி வர முயற்சிக்கும். நான் வாயை வயித்தைக் காயப்போட்டு சமாளிச்சுடுவேன்.(இதனாலேயே உடம்புல தெம்பு இல்லாம பர்சனாலிட்டி கொஞ்சம் குறையும்.வேற வழி?)

ஆனா அந்த ஆள் ஃபுல் மப்புல சைடு டிஷ்ஷா என்ன எழவைத்தின்னாரோ? அது எதுக்குமே அவரோட வயித்தைப் புடிக்கலை.(பஸ் மேல என்ன பாசமோ) எல்லாம் வெளியில வந்துடுச்சு.

ஆறு பேர் சட்டையை கழட்டிட்டாங்க. வாந்தி எடுத்தவரை அடிக்க இல்லைங்க...இந்த நாத்தம் தாங்காமதான். அப்புறம் சாலையோர டீக்கடையில பஸ்சை நிறுத்தி காசு கொடுத்து நாலு குடம் தண்ணி வாங்கி பஸ்சை அலசி விட்டார் கண்டக்டர். நடக்குறது,பறக்குறது,நீந்துறதுன்னு என்னென்ன அவரு வயித்துக்குள்ள இருந்துச்சோ?அவ்வளவு சீக்கிரம் நாத்தம் போயிடுமா?

கண்டக்டரோட கைக்காசுல சாய்பஜன் ஊதுபத்தி, கம்ப்யூட்டர் சாம்பிராணி எல்லாம் வாங்கி கொளுத்தி வெச்சார். அப்புறம் கொஞ்சம் பரவாயில்லை. ஒரு முக்கால் மணி நேரம் அவுட்.

பஸ் கிளம்புனதும் அப்பாடா, இனி இல்லை தொல்லைன்னு நினைச்சா மறுபடி ஒரு நாத்தம்.

எனக்கு பக்கத்துல உட்கார்ந்துருந்தவர், செண்ட் அடிச்சார். அய்யய்யோ..இதுக்கு அந்த வாந்தி நாத்தமே பரவாயில்லையேன்னு மனசுக்குள்ளயே புலம்புனேன். வேற என்ன பண்றது?

நானூறு கிலோமீட்டர் தொலைவா இருந்தாலும் இரவு நேரப் பயணத்துல சில சவுகர்யங்கள் இருக்கு. வெயில் தெரியாது. சராசரியா பகல் நேரத்தை விட இரவு நேரத்துல பத்து கிலோ மீட்டர் வேகம் அதிகமாவே இருக்கும்.தென்காசி பகுதியில ரயில்வே மேம்பாலம் கட்டுறதால செங்கோட்டை போற பஸ் எல்லாமே இலஞ்சி சந்திப்போட வேற வழியா போயிடுச்சு.


அதனால குற்றாலம் போக வேண்டிய நான் இலஞ்சியிலேயே இறங்கினேன். நிறைய தமிழ் சினிமாவுல வர்ற மாதிரியே நான் இறங்கின இடத்துலயும் ஒரே ஒரு டீக்கடை மட்டும் இருந்துச்சு.

அதிகாலை நாலு மணியா இருந்தாலும் பங்காளி ஒருத்தர் டூவீலரை எடுத்துகிட்டு வந்துட்டார்.அவரோட போய் கிரஹப்பிரவேச வீட்டுக்குப்போய் குளிச்சி(நம்புங்கப்பா) மேக்கப் போட்டு, விழாவுல கலந்துகிட்டு, வயித்தை நிரப்பின பிறகு பார்த்தா மணி ஆறே முக்கால்தான் ஆனது.

அண்ணே...அப்படியே எல்லா அருவிக்கும் போய் ஒரு குளியல் போட்டுட்டு வந்துடுறேன்னு சொன்னேன். இன்னொரு பங்காளியும் வண்டியில என்னைய அழைச்சுட்டு போனார்.

பிரதான அருவி தெரியுற தூரத்துலயே நிறுத்திட்டு,"தம்பி...அதான் அருவி...பார்த்து நல்லா கும்பிட்டுக்க..."அப்படின்னு சொன்னார்.

எனக்கு ஷாக். (இதெல்லாம் ரெண்டரை வருஷத்துக்கு முன்னால எழுதிய பதிவு. அப்போ அடிக்கடி ஷாக் அடிக்கும்.)

"ஏண்டா டேய்...சீசன் ஆரம்பிக்கிறதுக்கு முன்னால வந்தா இப்படி நின்னு கும்பிட்டுட்டுதான் போகணும். அடுத்து ஐந்தருவிக்குப்போவோம்...இப்ப வீட்டுல குருக்கள், கோமியம் தெளிச்சாரே...அந்த மாதிரி ஏதாச்சும் செஞ்சுக்க முடியுதான்னு பார்க்கலாம்னு சொன்னார்.

நீங்க தண்ணியே தெளிக்க வேணாம்னு வீட்டுக்கு வண்டியை திருப்ப சொல்லிட்டேன்.


குற்றாலம் வரைக்கும் போயிட்டு அருவியிலயே குளிக்க முடியலையேன்னு நொந்து போய் வந்தா பாபநாசம் அணைக்குள்ள இருக்குற பாணதீர்த்த அருவியில எக்கச்சக்கமா தண்ணீர் கொட்டுறதைப் பார்த்து என் வயித்து ஹீட் அதிகமானதுதான் மிச்சம்.
*****
சிங்கம் சிங்கிளாத்தான் வரும்...ஓங்கி அடிச்சா ஒண்ணரை டன் வெயிட்...இப்படி எல்லாம் டயலாக்கை ஹீரோ பேசும்போது கேட்க நல்லாத்தான் இருக்கு.

ஆனா தனியா பஸ்சுல பயணம் பண்ணும் போது எவ்வளவு இம்சையா இருக்கு தெரியுமா? நாற்பது ஐம்பது கிலோமீட்டர் தூரம் பயணம் செய்யும்போது கஷ்டம் தெரியாது.

இப்ப நான் போன மாதிரி நானூறு கிலோமீட்டர் வேணாம், நம்ம நாட்டுல பல சாலைகளில் இருநூறு கிலோ மீட்டர் தூரம் பயணம் போறதுக்குள்ளயே நாக்கு வெளியில வந்துடுது.(திருவாரூர் - தஞ்சாவூர் தூரம் 65 கிலோ மீட்டர்தான். ஆனா இந்த தூரம் போறதுக்குள்ளயே ஸ் ஸ் சப்பா...இப்பவே கண்ணைக்கட்டுதேன்னு புலம்ப வேண்டியதுதான்.)

காத்தோட்டமா ஜன்னல் ஓரமா அப்படான்னு போய் உட்கார்ந்துருப்போம்.ரெண்டு லேடீஸ் வந்து,"சார் அங்க மாறி உட்காருங்களேன்."அப்படின்னு ஆரம்பிப்பாங்க.ரெண்டு பேரா போனா இந்த இம்சை இல்லை.

இப்படித்தான் ஒரு தடவை நான் தஞ்சாவூர்லேருந்து திருவாரூர் வரும்போது மாறி உட்கார சொன்ன ஒரு பொண்ணுகிட்ட கோபப்பட்டேன்.

"இப்ப மாறி உட்கார சொன்னீங்கன்னா பின் பக்க கண்ணாடியை உடைச்சுகிட்டு கீழே குதிக்க வேண்டியதுதான்.மாறி உட்கார சொல்லியே டிரைவருக்கு எதிர்ல இருந்த என்னைய பின்பக்க வாசல் வரைக்கும் கொண்டுவந்துட்டீங்க. இப்படியே அடுத்த பஸ்சுக்கு அனுப்பிடலாம்னு பார்க்குறீங்களா?"ன்னு விட்ட சவுண்டுல அந்தப் பொண்ணோட சேர்ந்து கண்டக்டரும் சிரிக்கிறாரு.

இந்தப் பிரச்சனைக்கு தீர்வு, நண்பர்கள் யாரையாவது கூட அழைச்சுட்டுப்போனாத்தான் கிடைக்கும். இன்னும் பெட்டர் ஐடியான்னா அது மனைவியோட பயணம் பண்றதுதான்னு நான் சொல்லுவேன்.(சீக்கிரம் அம்மாகிட்ட சொல்லி பொண்ணு பார்க்க சொல்லணும்.)
******
சிங்கிளா இருந்து சாதிக்கிறது எல்லாம் சினிமா வசனத்துக்குதான் சரியா வரும். குறைந்த பட்சம் இன்னொருத்தர் உதவி இல்லாம பெரும்பாலான காரியங்கள் பெரிய வெற்றி அடையுறது இல்லை.

வில்லன் நடிகர் சொதப்பியிருந்தா கில்லியின் அபார வெற்றியும், சிங்கம் படம் இப்படி பேசப்படுறதும் அவ்வளவா சாத்தியம் இல்லை.
 ******

இப்ப நாங்க திருப்பணியில ஈடுபட்டிருக்குற கோவில் கர்ப்பக்கிரஹ விமான உயரம் சுமாரா இருபத்திரெண்டரை அடி. இதை கட்டி முடிக்கிறதுக்குள்ளேயே எங்களுக்கு நாக்கு தள்ளிகிட்டு இருக்கு. வரும்போது ஸ்ரீவில்லிபுத்தூர் கோபுரதரிசனம் கிடைத்தது. அதைப் பார்த்ததும் நம்ம முன்னோர்களோட திறமையை நினைச்சு ரொம்ப பெருமையா இருந்துச்சு.

பெரியவங்களை மதிக்க மாட்டெங்குறாங்கன்னுங்குறது என்னை மாதிரி யூத்து மேல இருக்குற புகார். நாங்களா ஸ்ரீவில்லிபுத்தூர் கோபுரம் தமிழக அரசின் சின்னமா இருக்குறதை எதிர்க்குறோம்?
***********************

வியாழன், 15 நவம்பர், 2012

மிஸ்டு கால்

காதலர்கள் பெற்றோரை சம்மதிக்கவைத்து செய்துகொண்ட திருமணத்திற்கு சென்று வந்தேன். அப்போது கண்ணில் பட்டது பழைய பதிவு. இந்த கதையை நானும் பத்திரிகைகளுக்கு அனுப்பி பார்த்தேன். அவர்கள் எதிர்பார்ப்புக்கு ஏதோ குறையலாம். அதனால் பொறுமையிழந்து வலையில் ஏற்றிய கதை. இப்போது உங்கள் பார்வைக்கு மீண்டும். கிட்டத்தட்ட 4 ஆண்டுகளுக்கு முன்னால் கற்பனையில் உதித்த கதை.

*************************************************************

காதல் என்றால் மிஸ்டு கால் இல்லாமல் இருக்காது. அதே போல் ராங் நம்பர் போட்டு நட்பாக (?!) தொடங்கி காதலில் முடிந்தது என்று பேப்பரில் செய்திகளைப் படித்திருக்கிறோம்.

இரண்டு முறை ராங் நம்பர் போட்ட ஆசாமியை நம்பி நாகர்கோயிலில் இருந்து சென்னைக்கு ஒரு பெண் ஓடி வந்திருக்கிறாள். இந்த சம்பவத்தில் ஆச்சர்யம் என்னவென்றால் போனில் பேசிய அந்த நபரும் திருமணமாகாதவனாக இருந்திருக்கிறான். அதை விட இன்னொரு வியப்பு, அந்த பையன் குடும்பத்தினரும் இந்த திடீர் காதலுக்கு ஆதரவாக இருந்திருக்கிறார்கள்.

இது மாதிரி சம்பவங்களின் சதவீதம் ஒன்றிரண்டு மட்டுமே என்பது நம் அனைவருக்கும் தெரிந்ததுதான். மொபைல் போன்களால் எவ்வளவு நன்மைகள் என்று எளிதாக பட்டியலிட்டுவிடலாம். ஆனால் தீமைகளை கணக்கெடுத்தால் ஸ்...அப்பாடா....இப்பவே கண்ணைக் கட்டுதே என்று புலம்ப வேண்டியதுதான்.

ஒரு மிஸ்டு காலை வைத்து எப்படி எல்லாம் காதல் வளர்கிறது, அதே சமயம் எப்படி எல்லாம் அந்த காதலுக்கு பிரச்சனை வருகிறது என்று நான் எழுதிய கதைதான் இந்த 
மிஸ்டு கால்.



******

சுவாதிக்கு எப்படியாவது பிறந்தநாள் வாழ்த்து சொல்லியே தீருவது என்று பரமேஸ்வரன் நேற்றே முடிவு செய்து விட்டான். அவளிடமிருந்து பதில் நடவடிக்கையை எதிர்பார்த்து ஒரு மணி நேரமாக மிஸ்டு கால் கொடுத்துக் கொண்டே இருந்தும் பலன் இல்லாததால் பரமேஸ்வரனின் மனம் சோர்வடைந்து விட்டது.

தன்னுடைய இந்த நேர தவிப்பைப் பற்றி நினைக்கும் போதே அவனையும் அறியாமல் அவன் முகத்தில் சிறு புன்னகை. ‘சரி...சிறிது நேரம் கழித்து முயற்சித்துப்பார்க்கலாம்...’என்று தனக்குத்தானே பரமேஸ்வரன் சமாதானம் சொல்லிக்கொண்டான்.அதே நேரத்தில் திருவாரூர் மாவட்ட சிறப்பு காவல்துறை எஸ்.பி வஜ்ரவேலு தலைமையில் ஒரு குழுவே பரமேஸ்வரனைத் தேடிப்புறப்பட்டுக் கொண்டிருந்தது. அவனைத்தான் பிடிக்கப் போகிறோம் என்று தேடி வரும் காவல்துறையினருக்கே தெரியாதபோது பரமேஸ்வரன் மட்டும் இதை அறிந்து கொண்டு விட முடியுமா?

அதனால் அவன் எந்தக் கவலையும் இல்லாமல் சுவாதியும் அவனும் காதலர்களான இனியதருணத்தை மீண்டும் நினைத்துப்பார்த்து கனவுலகில் மிதந்து கொண்டிருந்தான்.

தானும் காதலிப்போம்...காதலிக்கப்படுவோம் என்று பரமேஸ்வரன் எப்போதுமே நினைத்ததும் இல்லை.எதிர்பார்த்ததும் இல்லை.சொல்லப்போனால் வயதுக்கோளாறால் காதல் என்றுநினைத்துக் கொண்டு சில பள்ளி மாணவிகள்,கல்லூரி மாணவிகள் திருவாரூர் நகரில் உள்ள ஒதுக்குப்புறமான தெருக்களில் நின்று யாருடனாவது பேசிக் கொண்டிருப்பதைப் பார்க்கும் இவன்,தன் நண்பர்களிடம், “பார்றா...சட்டி தீயுற அளவுக்கு கடலை வறுக்குறாங்க...”என்று கூறிச் சிரிப்பான்.

இப்போது செல்போன் சூடு உடல் முழுவதும் பரவினாலும் சுவாதியுடன் பேசிக்கொண்டிருப்பது அலுக்கவில்லை என்பது அவனுக்கு வியப்பான வி­யமாகத்தான் தோன்றியது.

கதைகளில் வருவது போல் பரமேஸ்வரனுக்கும் சுவாதிக்கும் முதல் பார்வையிலேயே காதல் வந்துவிடவில்லை. அதற்காக,அவன் சுவாதியைப் பல நாட்கள் பின்தொடர்ந்து சென்று சம்மதிக்க வைத்தான் என்று நினைப்பதும் தப்பு.

இருவரும் முதன்முதலாக சந்தித்துக் கொண்டபோது,வெளிப்பார்வைக்கு மிகச் சாதாரணமாகத் தோன்றிய சம்பவத்தால் வெகு இயல்பாக இருவரது மனங்களும் இடம் மாறின.

திருவாரூரில் பாதாள சாக்கடை அமைக்கும் பணியில் ஈடுபட்டு வந்த தொழிலாளர்கள் நான்கு நாட்களாக அந்த இரண்டு புங்க மர நிழலில்தான் அமர்ந்து மதிய உணவு உண்டு இளைப்பாறி வந்தார்கள்.

ஓர் இளம் தாய் தன்னுடைய கைக்குழந்தையை அந்த மரம் ஒன்றில் தொட்டில் கட்டி தூங்க வைத்திருந்தாள்.

அந்த வீட்டு உரிமையாளரான முத்துகிருஷ்ணன் அன்றுதான் வெளியூரில் இருந்து வந்திருப்பார் போலிருக்கிறது.

“யோவ்...இது என்ன சத்திரமா...சாவடியா...நான் என் வீட்டுக்கு காத்து வரட்டுமேன்னு இந்த மரங்களை விட்டு வெச்சா நீங்கள்லாம் வந்து குடியேறிடுவீங்கிளா?...முதல்ல தொட்டியை அவுறுங்க...பத்து நிமி­த்துக்குள்ள எல்லாரும் ஓடிடணும்...”என்று அவர் பேசவும், இப்படியும் இரக்கமே இல்லாமல் ஒரு மனு­ன் இருப்பானா என்ற எண்ணம் அவர்கள் மனதில் எழுந்தது.

அதை வெளியில் காட்டிக்கொள்ளாமல் ஒருவன், “சார்...இன்னும் நாலு நாள்தான் இந்த தெருவுல வேலை இருக்கும்...அதுவரைக்கும் கொஞ்சம் பொறுத்துக்குங்க சார்...”என்றான்.

ஆனால் முத்துகிருஷ்ணனுக்கு மனம் இரங்கவே இல்லை.தன்னுடைய முடிவில் பிடிவாதமாக இருந்தார்.சிறிது நேரம் எல்லா தொழிலாளர்களுமே அமைதியாக இருந்தார்கள்.

திடீரென்று ஒருவன்,“சார்...இந்த மரம் ரெண்டும் உங்க வீட்டு காம்பவுண்டுக்குள்ளே இல்லை...ரோட்டோரமா பொது இடத்துலதான் இருக்கு...குழந்தை இந்த இடத்துலதான் தொட்டில்ல தூங்கும்...நாங்களும் இங்கதான் உட்கார்ந்து சாப்பிடுவோம்...உங்களால முடிஞ்சதைப் பார்த்துக்குங்க...”என்று சொல்லிவிட்டான்.

சட்டென்று திகைத்துப் போன முத்துகிருஷ்ணன் எதுவும் பேசாமல் உள்ளே சென்று விட்டார்.

மறுநாள் காலையில் வேலைக்கு வந்த தொழிலாளர்கள் அதிர்ந்தார்கள்.மேற்பார்வையாளராக வந்த பரமேஸ்வரனும்தான்.

அந்த தெருவில் இருந்த இரண்டே இரண்டு புங்க மரங்களின் கிளைகளை எல்லாம் முத்துகிருஷ்ணன் ஆள் வைத்து வெட்டி வீழ்த்தி இருந்தார்.மின்சாரக் கம்பிகள் எதிர்புறத்தில் இருந்ததால் மிகப்பெரிய குடை போல் பரவி நின்ற மரங்கள் இப்போது நினைவுத்தூண் போல ஒரு ஆள் உயரமாக குறைந்து பரிதாபமாக காட்சி அளித்தன.

எதுக்கும் அஞ்சாத மனு­னா இருக்கானே என்று தொழிலாளர்கள் தங்களுக்குள்ளேயே முணுமுணுத்துக்கொண்டார்களே தவிர,அவரைக் கேள்வி கேட்க யாரும் துணியவில்லை.

அந்த தாய் தன் குழந்தைக்கு எங்கே தொட்டில் கட்டுவது என்று புரியாமல் கலங்கி நின்றாள்.

பரமேஸ்வரன் தன் சக  ஊழியர் ஒருவரிடம் கைப்பேசி மூலம் அனுமதி பெற்று வேறு இடத்தில் நடக்கும் வேலைக்கு கைக்குழந்தையுடன் அந்தப்பெண்ணை அனுப்பி வைத்தான்.

“வடக்கு வீதியில இந்த அளவுக்கு மோசமான ஆளுங்க இல்லை... நீ தைரியமா போம்மா...”என்று சொல்லிவிட்டு முத்துகிருஷ்ணன் வீட்டு வாசலுக்கு வந்தான்.

அருவருப்பாகத் தோன்றும் வகையில் முகம் நிறைய கோபத்துடன் வெளியே வந்த அவர், “என்ன?...”என்றார்.

“சார்...வடக்கு வீதியில சில வரு­ங்களுக்கு முன்னால குடியிருந்த ராமசாமி பையனுக்குதானே உங்க பொண்ணைக் கட்டிக் குடுத்தீங்க? ”என்று பரமேஸ்வரன் கேட்டதும் முத்துகிருஷ்ணனின் முகம் இன்னும் மோசமாக சுருங்கியது.

“அதுக்கு என்னய்யா இப்ப?...”என்று மிகவும் நாகரிகமாக (?!) கேட்டார் அவர்.
“எட்டு வரு­மா புள்ளை இல்லாம ரொம்பவும் மனசு உடைஞ்சு போய் இருந்த நேரத்துல உங்க பொண்ணுக்கு தாயாகுற பாக்கியம் கிடைச்சிருக்குன்னு எனக்கும் தெரியும்.

ஒரு கைக்குழந்தையை தொட்டில் கட்டி தூங்க வெச்சது உங்களுக்கு பிடிக்கலை...குழந்தையோட கை,கால்,தலையை எல்லாம் பிச்சு எறியுற மாதிரி மரத்தை வெட்டிட்டீங்கிளே...

உங்க வீட்டுல  இருந்து ஒரு உயிர் வெளிஉலகத்துக்கு வர்ற நேரத்துல இப்படி செய்யலாமா?...இப்ப அடிக்கடி மின்தடை ஏற்படுது.கர்ப்பவதியா இருக்குற உங்க பொண்ணு பகல் நேரத்துல காத்து வாங்கக் கூட வழி இல்லாம பண்ணிட்டீங்கிளே...”என்ற பரமேஸ்வரனின் குரலில் உண்மையான வருத்தம் தெரிந்தது.

முத்துகிருஷ்ணன்,“யோவ்...ஒரு வேலை செய்ய வந்தா அதை மட்டும் கவனிங்க.கிராமத்தான் மாதிரி சாபம் குடுக்குற வேலை எல்லாம் வேண்டாம்.... என் குடும்பத்துல புள்ளை இல்லாம வரம் வாங்குன கதை எல்லாம் உனக்கு ஏன்?...பொம்பளை மாதிரி பொரணி பேசாம பொழப்பைப் பாரு...”என்று சிடுசிடுத்தார்.

இந்த மனிதரிடம் என்ன பேசினாலும் பலன் இருக்காது என்பதை உணர்ந்து கொண்ட பரமேஸ்வரன் தன் வேலையைக் கவனித்தான்.

சிறிது நேரத்தில் வெளியில் கிளம்பிய முத்துகிருஷ்ணனின் இளைய மகள் சுவாதி,போகிற போக்கில் ஒரு துண்டுச் சீட்டை அவன் கையில் திணித்து “ஒரு மிஸ்டு கால் கொடுங்க...திரும்பவும் நான் மிஸ்டு கால் கொடுத்தா மட்டும் நீங்க போன் பண்ணி பேசுங்க...செய்தி இருக்கு.”என்று அவசரமாக கூறிவிட்டு நகர்ந்தாள்.

சுவாதி பரமேஸ்வரனிடம் அவசரகதியாக ஏதோ பேசிவிட்டுச் சென்றாலும் இவன் அவளிடம் பேசியது பரஸ்பரம் ஒரு மிஸ்டுகாலுக்குப் பிறகுதான்.

இரண்டு மரங்களுக்காக பரமேஸ்வரன் கண் கலங்கி வருந்திப் பேசியது முத்துகிருஷ்ணன் மனதை அசைக்காவிட்டாலும் சுவாதியின் மனதை அவள் வசம் இல்லாமல் செய்து விட்டதை நினைத்து மகிழ்ச்சியில் திக்கு முக்காடிப் போனான் அவன்.

சுவாதியின் வீட்டில் சர்வாதிகாரியைப் போல் அதிகாரம் செலுத்திக் கொண்டிருந்த முத்துகிருஷ்ணனை எப்படியாவது மீறிவிட வேண்டும் என்ற எண்ணம் சுவாதி உட்பட அனைவருக்குமே அடி மனதில் ஓர் ஆசையாக இருந்திருக்கும் போலிருக்கிறது.

சுவாதி,பரமேஸ்வரனைத்தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற உறுதியான முடிவுக்கு முதலிலேயே வந்து விட்டாள்.ஆனால் மனதை இன்னும் பக்குவப்படுத்திக் கொண்டுதான் தந்தையிடம் பேச வேண்டும் என்று  நினைத்திருந்தாள்.

மிஸ்டு கால் கொடுத்தால் மட்டுமே பேச வேண்டும் என்று பரமேஸ்வரனிடம் உறுதியாக சொன்னதற்கு காரணம் இதுதான்.

அப்படி இருந்தும்  அவன் அவளிடம் பேச நினைத்து மிஸ்டு கால் கொடுத்ததற்கு காரணம்,இன்று சுவாதியின் பிறந்தநாள்.இரவு பனிரெண்டு மணி ஆனதுமே வாழ்த்து சொல்ல ஆசைதான்.ஆனாலும் மரம்வெட்டி மாமனார் (?!) முத்துகிருஷ்ணனை நினைத்து பரமேஸ்வரனுக்கும் பயம் இருக்கத்தான் செய்தது.

ஒரு மணி நேரத்துக்கும் மேலாக அவன் மிஸ்டு கால் கொடுத்து விட்டு சற்று ஓய்ந்த போது சுவாதியின் கைப்பேசி திரையில் தவறிய அழைப்புகள் 46 என்று தெரிந்தது.

புகழ் பெற்ற ஆழித்தேர் திருவாரூரில் வலம் வரும் வீதிகளில் ஒன்று வடக்குவீதி.அங்கே உள்ள சினிமா தியேட்டருக்கு எதிரில் முப்பது வீடுகளுடன் பிரமாண்டமான வாடகைக்குடியிருப்பு இருந்தது.
அங்கே ஒரு வீட்டில்தான் பரமேஸ்வரனின் குடும்பம் வசித்து வந்தது.

திடீரென்று அங்கே சிறப்பு எஸ்.பி வஜ்ரவேலுவுடன் வந்த போலீசார் பரமேஸ்வரனைப் பிடித்து இழுத்துச் சென்று வேனில் ஏற்றினார்கள். அப்போதுதான் பரமேஸ்வரன் ஏற்கனவே அவன் நண்பன் விஜயகுமார் முகத்தில் பயத்துடன் உடல் முழுவதும் வியர்வையுடன் வேனுக்குள் அமர்ந்திருந்ததைப் பார்த்தான்.

இருவருக்குமே எதுவும் பேசத் தோன்றவில்லை.
பரமேஸ்வரனின் குடும்பத்தார் என்னவோ தெரியலையே என்ற பதட்டத்துடன் காவல்நிலையம் கிளம்பினார்கள்.

 அப்போது வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த ஒருவர், “சார்... இருபது நாளைக்கு முன்னால வடக்கே வெடிகுண்டு நிறைய வெடிச்சதுல்ல...அதுல சம்மந்தப்பட்ட குற்றவாளிகள் நாடு பூராவும் தொடர்ந்து சிக்கிகிட்டே இருக்காங்களாம். இவ்வளவு போலீஸ் வந்ததைப்பார்த்தா எனக்கும் அப்படித்தான் தோணுது...”என்று அருகில் இருந்தவரின் வாய்க்கு அவல் தந்து கொண்டிருந்தார்.

‘முத்துகிருஷ்ணன் இவ்வளவு பெரிய ஆளா?....இவரை எதிர்த்துப் போராடி காதல்ல ஜெயிக்கணுமா?’ என்று நினக்கும் போதே பரமேஸ்வரனுக்கு பெருமூச்சு எழுந்தது.

அந்த வேன் கீழவீதியில் உள்ள நகர காவல் நிலையத்துக்குச் செல்லாமல் திருத்துறைப்பூண்டி சாலையில் உள்ள சிறப்பு முகாமுக்குச் சென்றது.வேனில் இருந்து இறங்கி அந்த முகாம் அலுவலகத்திற்குள் செல்லும்போதே பரமேஸ்வரன் முத்துகிருஷ்ணனைப் பார்த்துவிட்டான்.

‘உதை வாங்கப் போறது நான்...இவர் ஏன் பேயறைஞ்சது மாதிரி முகம் வெளிறிப்போய் நிக்கிறாரு...’என்ற குழப்பத்துடனேயே நடந்தான்.

உள்ளே சுவர் ஓரமாக நாற்காலியில் அமர்ந்து அழுது கொண்டு இருந்தவளைப் பார்த்ததும் இவனுக்கு அதிர்ச்சி.

‘சுவாதி நீ எங்கே?...உன் இப்பாதான் புகார் கொடுத்து என்னைய இழுத்துட்டு வர வெச்சிருப்பாருன்னு நினைச்சா...இப்ப கதை வேற மாதிரி போகுதே...’ என்று யோசித்த பரமேஸ்வரன் எந்த முடிவுக்கும் வர முடியாமல் திணறினான்.

அவள் அருகில் இருந்த இரண்டு பெண் போலீசாரைப் பார்த்தாலே போதும்...வயிறு கலங்கிவிடும் என்ற அளவுக்கு அவர்களின் முகம் கொடூரமாக இருந்தது.

எஸ்.பி.வஜ்ரவேலு, “மிஸ்டர் பரமேஸ்வரன்...இதே மரியாதை உங்களுக்குத் தொடர்ந்து கிடைக்கணும்னு நினைச்சா எல்லா உண்மையையும் சொல்லிடுங்க...எதுவுமே தெரியாத மாதிரி நடிச்சா என்னோட கொடூரமான முகத்தைப் பார்க்க வேண்டியது இருக்கும்...”என்று கர்ஜித்தார்.

“இப்ப மட்டும் என்ன வாழுதாம்...”என்று மனசுக்குள் சொல்லிக் கொண்ட பரமேஸ்வரன் சில நொடிகள் கண்களை மூடிக்கொண்டு நின்றான்.

பிறகு மெதுவாக கண்களைத் திறந்து,“சார்... என்னையப் புடிக்க இவ்வளவு பேர் வந்திருக்க வேண்டியது இல்லை.ஒரே ஒரு கான்ஸ்டபிள் வந்து கூப்பிட்டாலே ஓடி வந்திருப்பேன்...

சுவாதிக்கு பிறந்தநாள் வாழ்த்து அவ அப்பாவுக்குத் தெரியாம சொல்லணும்னு நினைச்சு மிஸ்டு கால் கொடுத்தேன்.இதுதான் செய்தி...நீங்க கேட்குற வி­ஷயம் இதுதானான்னு எனக்குத் தெரியலை...”என்று பிசிறில்லாமல் பேசினான்.

“பிறந்தநாள் வாழ்த்து சொல்றதுக்காகதான் நாற்பத்தி ஆறு மிஸ்டுகால் கொடுக்குறியா...தீவிரவாதியோட தொடர்பு வெச்சுகிட்டு எவ்வளவு அழகா சமாளிக்கிற பாரு...
அவ என்னடான்னா அழுதே சாதிக்கிறா...இவன் பயமில்லாத மாதிரி நடிக்கிறான்.தூக்கிப்போட்டு நாலு மிதி மிதிச்சா எல்லா உண்மையும் வந்துடும்...”என்று வஜ்ரவேலு சொன்னதும் பரமேஸ்வரனுக்கு பகீர் என்றது.

“சார்...அங்கங்க குண்டு வெடிப்பு நடந்ததும் உங்க டிபார்ட்மெண்டுக்குதான் தேவை இல்லாத தலைவலியும் பணிச்சுமையும் அதிகம்னு எனக்கு நல்லா தெரியும்.அந்த மன உளைச்சல் தாங்காம உங்ககிட்ட சிக்குற அப்பாவி மேலயே எல்லா வழக்கையும் பதிவு பண்ணி ஃபைலை மூடிடலாம்னு நினைக்காதீங்க சார்... ”என்று அவன் சொன்னதும் அருகில் நின்ற கான்ஸ்டபிள் ஒருவர் அடிக்க வந்தார்.

சடடென்று கீழே அமர்ந்து தன் முழங்கால்களுக்கிடையே முகம் புதைத்த பரமேஸ்வரன், “சார்...ஒவ்வொரு கேள்வியா கேட்டுட்டு அப்புறமா ஒரு முடிவுக்கு வந்த பிறகு அடிக்கலாம் சார்...டிராபிக் போலீஸ் இல்லன்னா கூட நோ என்ட்ரிக்குள்ள போக நினைக்காத ஆள் சார் நான்... ”என்றான்.

இதைக் கேட்ட எஸ்.பி.யின் முக இறுக்கம் சற்று தளர்ந்தது.

“பரமேஸ்வரன்,நேத்து தி எர்த் ஹோட்டல்ல பதுங்கி இருந்த தீவிரவாதியைப் புடிச்சோம்.அவனோட சிம்கார்டு சுவாதியோட பேர்ல இருக்கு.அவனும் உண்மைய சொல்ல மாட்டேன்னு சாதிக்கிறான். இவ அழுதுகிட்டே இருக்கா...
ரெண்டு பேரோட போன்ல உள்ள நம்பர் எல்லாத்தையும் அட்ரஸ் லிஸ்ட்டோட தயார் பண்ணிகிட்டு இருக்கோம்.அந்த நேரத்துலதான் உன்கிட்ட இருந்து நாற்பத்தி ஆறு மிஸ்டு கால். சந்தேகம் வராம என்ன செய்யும்?...”

“சார்...உங்க சந்தேகம் நியாயமானதுதான்.ஆனா இந்தப் பொண்ணு எம்.எஸ்.சி படிச்சுட்டு வேலை பார்க்குது...இந்த மாதிரி வேலை எல்லாம் செய்யுமான்னு யோசிக்க வேணாமா சார்?...”

“எனக்கு அறிவுரை சொல்றியா...இந்தக்காலத்துப் பசங்க எல்லாரும் சினிமா பார்த்து ரொம்பவும் கெட்டுப்போய்தான இருக்காங்க...தாதாவை வாத்தியாரம்மா காதலிக்கிறது...இந்த மாதிரி மோசமான உதாரணங்கள் ஆயிரம் வரும்போது நல்லது ஒண்ணு ரெண்டை நீங்க எங்க கவனிக்கிறீங்க...”என்று கூறிய எஸ்.பி.யின் முகம் மீண்டும் கடுமையானது.

பரமேஸ்வரன் மறுபடியும் கண்களை மூடிக் கொண்டான்.

“என்னய்யா நீ...எதுக்கேடுத்தாலும் முனிவர் மாதிரி கண்ணை மூடிக்குறே?...ம்...இதெல்லாம் சரி வராது...தேர்ட் டிகிரிதான்... ”என்றார்.

இதைக் கேட்டு பட்டென்று பரமேஸ்வரன் எழுந்து நின்றான்.
“என்ன சார் நீங்க?...சுவாதியோட போன்ல இருந்து அந்த தீவிரவாதியோட நம்பருக்கு எத்தனை கால் போயிருக்குன்னு மொபைல் ஆப்ரேட்டர் கிட்ட கேட்டா உண்மை தெரிஞ்சிடும்.

அதிகமா சிம்கார்டு விற்பனை செய்யுற கடைக்காரங்களுக்கு மொபைல் நிறுவனங்கள் ஏகப்பட்ட பரிசு தருது...அதுக்கு ஆசைப்படுற சிலர்,பெரிய ஆஃபர் இருக்குற நேரத்துல கம்ப்யூட்டர் மூலம் சிம்கார்டை ஆக்டிவே­ன் செஞ்சு ஏதாவது போட்டோ,முகவரி சான்று கொடுத்து சமாளிச்சுடுறாங்க.
சுவாதி சிம்கார்டு வாங்குன கடைகாரனை விசாரிச்சுட்டு தீவிரவாதியோட சிம்கார்டுக்கு கொடுக்கப்பட்ட ஆவணங்களை சரி பார்த்தா தப்பு எங்கன்னு தெரிஞ்சுடப்போகுது...

அதை விட்டுட்டு ஏதோ அப்பாவி நாங்க சிக்கிட்டோம்னு வெச்சு அமுக்கப்பார்க்குறீங்கிளே சார்...
இந்த மாதிரி விசாரணை உங்களுக்கு சாதாரண பணி தான்...ஆனா எங்களுக்கு வாழ்க்கைப் பிரச்சனை. ப்ளீஸ் சார்... ”என்றான்.

சினிமாவில் மட்டும்தான் மேற்கூறியது போல சம்பவம் நடந்த மறுநாளே இவர்களை விடுதலை செய்யும்படி நீதிபதி உத்தரவிடுவார்.

நிஜத்தில் அது அவ்வளவு சுலபமா என்ன?

பரமேஸ்வரனும் ஒரு தவறு செய்திருந்தான்.அவன் நண்பன் விஜயகுமார் பெயரில் வாங்கிய சிம்கார்டைத்தான் அதுநாள் வரை பயன்படுத்தி வந்தான்.இதுவே சட்டப்படி குற்றம்.

பரமேஸ்வரன் கொடுத்த நாற்பத்தி ஆறு மிஸ்டு கால்களைப் பார்த்ததும் முதலில் விஜயகுமார் சிக்கியதற்குக் காரணம் இதுதான்.

இந்த வழக்கு முடியவே ஓர் ஆண்டுக்கும் மேல் ஆகிவிட்டது. அதனால் அபராதத்துடன் எச்சரிக்கை செய்து விஜயகுமாரையும் பரமேஸ்வரனையும் நீதிமன்றம் விடுவித்தது.

சுவாதியின் பெயரிலேயே வாங்கப்பட்ட சிம்கார்டு தீவிரவாதியிடம் இருந்ததற்குக் காரணம்,சில்லரை விற்பனையாளர்தான்.
சிலரிடம் புகைப்படம்,முகவரிசான்று நகல் வாங்கும் போது புகைப்படத்தில் கையயாப்பம் வாங்காமல் பெற்றுக் கொண்டு நிறைய போலி ஆவணங்கள் தயாரித்து மோசடி செய்தது கண்டுபடிக்கப்பட்டது.

சுவாதி குற்றமற்றவள் என்று நீதிமன்றத் தீர்ப்பு வரும்போது  இரண்டு ஆண்டுகள் கடந்திருந்தன.

***

பரமேஸ்வரன்,சுவாதி  இவர்களின் திருமணம் முடிந்த பின்பு குற்றாலத்திற்கு சுற்றுலா சென்றார்கள்.

இருவரும் பிரதான அருவிக்கு குளிக்கச் சென்ற போது சுவாதி, “என்னங்க...நம்ம வாழ்க்கைளில ரெண்டு வரு­ஷத்துக்குள்ள இவ்வளவு போராட்டம் நடக்கும்னு எதிர்பார்க்கவே இல்லை...எதிரிக்கு கூட இந்த நிலை வரக்கூடாதுன்னுதான் வேண்டிக்குறேன்.முதன் முதல்ல என்னைய போலீஸ் ஸ்டே­னுக்கு கூட்டிட்டு போனப்ப நான் பட்ட அவமானம்,இப்பவும் ஞாபகம் வந்து என்னைய வேதனைப்படுத்துது...நீங்க மட்டும் இல்லைன்னா நான் குற்றவாளி இல்லன்னு நிரூபிக்க எவ்வளவு போராடியிருக்கணுமோ தெரியலை...”என்றாள்.

உடனே பரமேஸ்வரன்,“இதையே பாசிட்டிவா நினைச்சுப் பாரேன். இந்த சம்பவம் நடக்கக் கூடாதுதான்...ஆனா நடந்துடுச்சு...இதே மாதிரி நடக்கலைன்னா என்ன ஆகி இருக்கும்...உங்க அப்பா சம்மதம் இல்லாம நம்ம கல்யாணம் நடந்து,அவர் ஆசீர்வாதம் இல்லையேன்னு ஏக்கம் இருந்துருக்கும்.

இந்த வழக்கு வி­ஷயமா ரெண்டு வரு­மும் நான் உன்னோடயும் உன் குடும்பத்தோடயும் பழகுனதுல எல்லாருடைய சம்மதத்தோட நம்ம கல்யாணம் நடந்துடுச்சு...ரெண்டு வரு­ம் மனதளவுல நாம பட்ட கஷ்டம் வாழ்நாள் பூராவும் உன் குடும்பத்தோட சுமூகமான உறவுக்கு வழி சொல்லியிருக்குன்னு நினைச்சுக்கயேன்...”என்றான்.

‘அட...இதை நாம யோசிக்கலையே...’ என்று சுவாதி மனதில் சந்தோ­ சாரல் உருவானபோது குற்றாலத்திலும் சாரல் மழை பெய்யத் தொடங்கியது.
***