Search This Blog

திங்கள், 18 செப்டம்பர், 2017

இலவச மின்னூல் - உளி தரும் வலி குறு நாவல்



இந்த குறு நாவல் 2008ம் ஆண்டு எழுதப்பட்டது.



நாவலில் வரும் மாணவி தேவிரஞ்சனிக்கும் மாணவி அனிதாவுக்கும் எந்த ஒற்றுமையும் இல்லை என்று உங்களுக்கு தோன்றலாம். ஆனால் ஒரு ஒற்றுமை உள்ளது. அதை இந்த குறுநாவலைப் படித்ததும் உணர முடிந்தால் எழுதுங்கள்.


அத்தியாயம் - 1


தேவி ரஞ்சனி பள்ளியில் இருந்து வீட்டுக்கு வந்தபோது யாருமே இல்லை. பக்கத்து வீட்டில் சாவியை வாங்கி பூட்டைத் திறந்து கதவைத் தள்ளி உள்ளே நுழைந்தாள். புத்தகப் பையை அவள் வீசிய வேகத்தில் அது, டி.வி.யை ஸ்டாண்டுடன் கீழே தள்ள முயற்சி செய்தது பலனளிக்கவில்லை. அந்த சின்ன ஹாலிலும் கால்வாசி இடத்தை ஆக்கிரமித்திருந்த சோபாவில் அமர்ந்தாள். ‘அம்மா, அப்பா ஊரிலிருந்து வர்றதுக்குள்ள நான் செத்துட்டா என்ன?’ என்ற விபரீத எண்ணம் இப்போது தேவிரஞ்சனியின் மனதில் தோன்றியது.


அவள் அம்மா பரமேஸ்வரி இடைவிடாமல் அழுகை சீரியல்களாக பார்த்துக் கொண்டிருந்ததால் தேவிரஞ்சனி அறிந்து கொண்ட விஷயங்களில் தற்கொலைக்கான வழிகளும் உண்டு.


இப்போது அவள் சாக நினைத்ததும் மனதில் உடனடியாக தோன்றிய விஷயங்கள் பூச்சி மருந்தும், தூக்கில் தொங்குதலும்தான். ரயில் முன் பாய்வது, மொட்டை மாடியில் இருந்து கீழே குதிப்பது ஆகியவை மிகவும் சித்தரவதை தரக்கூடியவை என்பதை அவளும் அறிந்துதான் இருந்தாள்.


டியூஷனில் கூடப்படிக்கும் ஆனந்த், தேவிரஞ்சனியை ஒருநாள் பார்க்காவிட்டாலும் பைத்தியம் பிடித்தது போல் ஆகி தூக்கமே வருவதில்லை என்று சொல்கிறான்.


ஆனால் அம்மா, அப்பாவுக்கு என் முகத்தை எப்போது பார்த்தாலும் எரிச்சல்தான் வருகிறது... தினமும் ரெண்டு மணி நேரம் டியூஷனில் உடன் இருக்கும் ஆனந்த் ஆசையாகப் பேசுகிறான். பள்ளிக்கூடம், டியூஷன் போக மற்ற நேரம் பூராவும் வீட்டிலேயே இருக்கணும்... ஆனா அம்மா, அப்பா திட்டிட்டே இருக்காங்க... அண்ணன் குருவும் சேர்ந்துக்குறான்...


எனக்குன்னு வீட்டுல யாருமே இல்லையே... அப்புறம் ஏன் நான் உயிரோட இருக்கணும்... என்று தேவி ரஞ்சனி நினைத்தபோது குரு, வீட்டுக்குள் நுழைந்தான்.





***********


தஞ்சாவூர் மேல அலங்கத்தில் அமைந்திருந்த அந்த திருமண மண்டபம் அலுவலக நேர சென்னை மாநகரப் பேருந்து போல் பிதுங்கிக் கொண்டிருந்தது. இரண்டு மாதங்களுக்கு முன்பு கணவனிடம் சண்டை போட்டு வாங்கிய பதினைந்தாயிரம் ரூபாய் மதிப்பிலான பட்டுச்சேலை, அடகில் இருந்து மீட்ட நகைகள் பாதி, இரவல் நகை மீதி என்று ஜொலித்துக்கொண்டிருந்த பரமேஸ்வரிக்கு மனதில் லேசான கவலை.






பட்டுப்புடவைக்காக தன் கணவன், அலுவலகத்தில் வாங்கிய கடனுக்கு ஒரே ஒரு தவணை மட்டுமே கட்டியிருக்கும் விஷயம், கந்து வட்டிக்கு கடன் வாங்கி அடகுக் கடையில் இருந்த நகைகளை மீட்டது, கெஞ்சிக் கூத்தாடி பக்கத்து வீட்டில் இரவல் நகைகளை வாங்கி அணிந்திருப்பது போன்ற குடும்ப ரகசியங்கள் தன் உறவுக்காரப் பெண்மணிகளுக்கு தெரிந்திருக்குமோ என்று அஞ்சினாள்.


 உண்மையில் பரமேஸ்வரியின் கவலை தேவையற்ற ஒன்று. இது போன்ற குடும்ப விழாக்களில் நடமாடும் தேவதைகளாக தங்களைக் கருதும் பல பெண்கள் தன் குடும்பத்தின் செல்வச் செழிப்பைப் பிறருக்கு காட்டுவதிலும், வெளியில் தெரியாத வறுமை நிலையை மற்றவர்கள் அறிந்து கொள்ளக்கூடாது என்பதிலும்தான் கவனமாக இருப்பார்கள்.


இதை சரியாக உணராத பரமேஸ்வரி, இரண்டு பெண்கள் கூடிப் பேசிக் கொண்டிருந்தாலே தன் குடும்ப விஷயம்தான் என்று எண்ணி தவித்துக் கொண்டு இருந்தாள்.


 அவளுடைய இந்த எண்ணத்துக்கும் ஒரு காரணம் உண்டு. அவள் பெயர் ராதா. இவள், மைத்துனன் மனைவி, அதாவது பரமேஸ்வரி கணவன் அசோக்ராஜனின் தம்பி மனைவி.


அசோக்ராஜனின் தம்பி புருஷோத்தம் ராஜன் பாலங்கள், மேல்நிலை நீர் தேக்கத் தொட்டி போன்றவைகளை கட்டித் தரும் ஒப்பந்தக்காரர்.


அசோக்ராஜனோ ஒரு தனியார் நிறுவனத்தில் உதவி மேலாளர். இப்போது உங்களுக்கே யார் வீட்டில் அதிகமாக காசு புழங்கும் என்று நன்றாகத் தெரிந்திருக்கும்.


நம்மாலும் இப்படி வசதியாக வாழ முடியவில்லையே என்ற ஏக்கம் பரமேஸ்வரி மனம் முழுவதும் நிறைந்து கிடந்தாலும் ராதாவிடம் சாதாரணமாக பேசிக் கொண்டுதான் இருந்தாள்.


அதற்கு வேட்டு வைத்ததும் இது போலவே ஒரு திருமண நிகழ்ச்சிதான். ராதாவும் பரமேஸ்வரியும் சாதாரணமாகத்தான் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது இன்னொரு பெண் இவர்களுக்கு அருகில் வந்து, ‘ஏம்மா ராதா... உன் பொண்ணு டாக்டருக்கு படிக்கிறாளாமே...’ என்றாள்.


அவ்வளவுதான்... ராதாவின் சுயபுராண வண்டி ஓடத் தொடங்கிவிட்டது.


ஆமாம் மாமி... பொண்ணுக்கு சின்ன வயசுல இருந்தே டாக்டராகணும்னு வெறி. ஆனா மார்க் கொஞ்சம் குறைஞ்சிடுச்சி...(690)... புள்ளைங்க சந்தோஷத்துக்கு முன்னால என்னடி பெரிய பணம்னு என் வீட்டுக்காரர் நாற்பது லட்சம் நன்கொடை கொடுத்து சீட் வாங்கிட்டார்.


கைராசி டாக்டர்னு பேர் வாங்கிட்டா நாலஞ்சு வருஷத்துல போட்ட காசை எடுத்துட முடியாதா என்ன?...’ என்ற ராதா சற்று சோர்வடைந்து பேச்சை நிறுத்தியபோது அரைமணி நேரம் ஆகியிருந்தது.


அந்த மாமி அத்துடன் நிறுத்தியிருக்கலாம். ஆனால் செய்யவில்லையே...


பரமேஸ்வரி...நம்ம சாதிசனத்துல முதன்முதலா டாக்டருக்கு படிக்கிறது ராதாவோட பொண்ணுதான்... நீ கூட இனிமே என் கொழுந்தனார் பொண்ணு டாக்டர்னு ரொம்ப பெருமையா சொல்லிக்கலாம்...’ என்ற மாமி, ராதாவைப் பார்த்து, ‘ஊர் மக்கள்கிட்ட வைத்தியத்துக்கு பணத்தை சேர்த்து வாங்கிட்டு எங்க கிட்ட எதுவும் வாங்க வேணாம்னு பொண்ணுகிட்ட சொல்லுடி...’என்றாள்.





பரமேஸ்வரி மனதின் அடியில் இருந்த ஏக்கத்தை அந்த மாமி கிளறி விட்டதில் அது பொறாமையாக புகையத் தொடங்கியதோடு நிற்காமல் கடுஞ்சொற்களான தீயாக எரியத் தொடங்கியது.


எங்கயோ எப்படியோ சம்பாதிச்ச காசைக் கொடுத்து டாக்டர் பட்டம் வாங்குறது ரொம்ப பெருமையாக்கும்...’ என்று பரமேஸ்வரி முணுமுணுத்துக் கொண்டு கீழ்த்தாடையை தோளில் இடித்துக் கொண்டதை ராதா கவனித்து விட்டாள்.


என் புருஷனுக்கு திறமை இருக்கு... லட்சக்கணக்குல சம்பாதிக்கிறாரு... பொழைக்க வழி இல்லாதவளுங்க எல்லாம் வயிறெரியிறாளுக... ப்ரீ சீட் கிடைச்சாக்கூட எக்ஸாம் பீஸ் கட்டத் துப்பில்லாதவங்ககிட்ட எல்லாம் சரிக்கு சரியா உட்கார்ந்து பேசின என்னைச் சொல்லணும்...’ என்று ராதாவும் வார்த்தைகளைச் சிதற விட, அங்கே ஒரு குழாயடிச்சண்டை ஆரம்பமானது. திருமண மண்டபமே ஒரு கட்டப்பஞ்சாயத்துக்
களமாக மாறிவிட விசேஷத்துக்கு வந்திருந்த உறவினர்கள் ஆளுக்கு ஒரு தீர்ப்பு வழங்கினார்கள்.


ஓரகத்தியின் வசதியான வாழ்வைப் பார்த்து பொறாமையால் பரமேஸ்வரிதான் வம்பிழுத்துவிட்டாள் என்று பெரும்பாலானவர்கள் கூறிவிட நேரடியாக மோதிக் கொள்ளாமலே அசோக்ராஜனும் புருஷோத்தம்ராஜனும் விரோதிகளானார்கள்.


என் புள்ளை குரு பொழுதன்னைக்கும் கிரிக்கெட் பைத்தியமாத்தான் இருக்கான். அதனால என் பொண்ணு தேவி ரஞ்சனியை அரசு ஒதுக்கீட்டுலேயே டாக்டருக்குப் படிக்க வெச்சு அவ (ராதா) மூஞ்சில கரியைப் பூசலை... இல்ல... பூசிட்டு பேசிக்குறேன்...’ என்று ஆவேசம் அடங்காமல் பரமேஸ்வரி பேசிக் கொண்டிருந்தாள்.


இந்த சண்டையைப் பார்த்து பூரித்துப் போயிருந்த ஒரு புண்ணிய ஆத்மா (?) ‘ஏண்டி ஈஸ்வரி... உன் பொண்ணு நம்ம திருவாரூர்லேயே ரொம்ப சுமாரான பள்ளிக்கூடத்துலதான் படிக்கிறா. அதே ஸ்கூல்ல பிளஸ்டூ எழுதுனா டாக்டர் சீட் காசு கொடுத்துதான் வாங்க வேண்டி இருக்கும்... அதுக்கு என்ன செய்யப் போற... முதல்ல இதையெல்லாம் யோசனை செய்...’ என்றது.


‘‘அந்தப் பள்ளிக்கூடத்துல படிச்சே மாநில அளவுல அஞ்சாவது மார்க் வாங்கின புள்ளைங்களும் இருக்காங்க. இப்ப என் பொண்ணு பத்தாம் வகுப்புதானே படிக்கிறா... கழுதை தலையில ரெண்டு தட்டி தொண்ணூத்தி அஞ்சு சதவீத மார்க் எடுக்க வெச்சுட்டா பதினோராம் வகுப்புக்கு நாமக்கல் பள்ளிக்கூடம் எதுலயாவது சேர்த்துடலாம்... என் சவாலை நிறைவேத்தாம செத்தா என் கட்டை வேகாதுக்கா...’ என்ற பரமேஸ்வரி தன் சேலை முந்தானையில் மூக்கை சிந்திக்கொண்டாள்.


இவ்வளவு நேரம் மவுனமாக இருந்த ஓய்வு பெற்ற ஆசிரியர் ராமநாதன், ‘ஏம்மா... உங்க ரெண்டு பேர் மனசுமே புண்பட்டு வேதனையிலதான் இருக்கும். ஆனாலும் நான் சொல்றதைக் கேட்டுட்டு அப்புறம் உங்க எண்ணங்களைச் சொல்லுங்க...’ என்று நிறுத்தினார். இரண்டு பெண்களுமே பதில் சொல்லவில்லை.


‘‘ராதாவோட பொண்ணு, மார்க் குறைவா எடுத்திருந்தாலும் மருத்துவம் படிக்கிறது அவளுடைய விருப்பமா இருந்ததால எதுவும் பிரச்சனை இல்லை. பரமேஸ்வரி... உன் பெண்ணுடைய ஆர்வம் எந்தப் பாடத்துலன்னு நமக்கு தெரியாது. நம்மால படிக்க முடியாத விருப்பப்பாடத்தை பிள்ளைங்க விருப்பம் இல்லாம அவங்க மேல திணிச்சா சில நேரங்கள்ல உயிருக்கு கூட ஆபத்தா முடியலாம். வறட்டு பிடிவாதத்துக்கு தன்மானம்னு பேர் வெச்சு புள்ளைங்களோட எதிர்காலத்த வீணடிச்சுடாதீங்க...’ என்று தொடர்ந்து பேசினார் அவர்.


‘‘இத்தனை பேர் கூடியிருக்குற இடத்துல கால்காசுக்கு வக்கிலாம இருக்கோம்னு பேசி இவ அசிங்கப்படுத்திட்டா... என் பொண்ணு டாக்டரானால்தான் இந்த அவமானம் தீரும். உங்களுக்கு என்ன தெரியும்?’ என்ற பரமேஸ்வரியின் குரலில் இருந்த கோபம் சற்றும் குறையவில்லை.


இப்போது என்ன சொன்னாலும் காதில் விழாது என்று உணர்ந்த ராமநாதன், ‘சரிம்மா... உங்க போட்டியால நம்ம சொந்தத்துலயே ஒண்ணுக்கு ரெண்டு டாக்டர் உருவானா பெருமைதான்...


ஆனா ஒரு விஷயம்... உங்களுக்குள்ள கசப்பான எண்ணங்கள் ஏற்பட்ட இடம், என் அண்ணன் பொண்ணுக்கு கல்யாணம் நடந்த இடம். உங்க ரெண்டு குடும்பமும் இதோட பிரிஞ்சுட்டா, ஏதோ பெரிய பாவம் பண்ணிட்டதா நினைச்சு நாங்க வேதனைப்படுவோம்.


அதனால சுபகாரியம், பண்டிகை போன்ற நாட்களிலாவது ரெண்டு குடும்பமும் ஒண்ணா வந்து கலந்துக்கணும். விரோதம் இல்லாம ஆரோக்கியத்தைக் காப்பாத்த ஆரோக்கியமான போட்டியாத்தான் உங்க ரெண்டு குடும்பமும் டாக்டர்களை உருவாக்கணும்...’ என்றார்.


ராமநாதனின் இந்த பேச்சுக்கு பலன் கிடைத்தது. ஏதோ வழிப்போக்கர்கள் போல் பங்காளிகள் குடும்பம் பழகியது. இந்த சம்பவம் முடிந்து மூன்று மாதங்களில் நிறைய சுபகாரியங்கள்.


ராதாவும் பரமேஸ்வரியும் அருகருகே அமர்ந்து பேசிக்கொள்ளும்போது பொருளாதார விஷயம் இடம் பெறாது. ஆனாலும் பரமேஸ்வரி, ராதாவை விட விலை உயர்ந்த சேலை, நகைகள் அணிய வேண்டும் என்று ஆசைப்பட்டாள்.


முதன்முதலில் ராதாவிடம் சவால் விட்டு விட்டு வந்த பரமேஸ்வரிக்கு மிகப் பெரிய அதிர்ச்சி, தேவிரஞ்சனியின் மதிப்பெண் பட்டியல் ரூபத்தில் வந்தது.


பத்தாம் வகுப்பு முதல் பருவத் தேர்வில் தேவிரஞ்சனி பெற்றிருந்த மொத்த மதிப்பெண்கள் ஐநூறுக்கு இருநூற்று முப்பத்து எட்டு. அதை பயந்து கொண்டே பரமேஸ்வரியிடம் தேவிரஞ்சனி காட்டியபோது...


**************************************************


அத்தியாயம் - 2


குரு வீட்டுக்குள் நுழைந்த உடனே வெளியேறும் அவசரத்தில்தான் இருந்தான். ‘ஏய்... தேவி... அம்மா அந்த மாப்பிள்ளை அழைப்பு முடிஞ்சு லேட்டாத்தான் வருவாங்க... காப்பி போட்டியா?... அது சரி... உனக்கு ஏது அவ்வளவு திறமை... காப்பி அடிச்சாவது நிறைய மார்க் எடுக்குற வழியும் தெரியலை...’ என்றவன் ஹாலை நோட்டம் விட்டான்.


என்னது... புத்தக மூட்டை பறந்துருக்கு?... அரையாண்டு மார்க் லிஸ்ட் கொடுத்துட்டாங்களா... மறுபடி ஊத்திக்கிச்சா... அப்ப இன்னைக்கு ராத்திரி மண்டகப்படிதான்... இன்னமுமா நம்ம பேரண்ட்ஸ் உன்னை நம்பிகிட்டு இருக்காங்க...’ என்று வடிவேலு பாணியில் சொன்ன குரு, சமையலறையில் உள்ள பாத்திரங்களில் எதையோ தேடினான்.


பிறகு தண்ணீரைக் குடித்து விட்டு வெளியே வந்த அவன், ‘தேவி... அடுத்த வாரம் நடக்கப்போற மாவட்ட அளவிலான கிரிக்கெட்டுக்கு மெட்டீரியல்ஸ் வாங்கப் போறோம்... என் பிரண்ட்ஸ் யாரும் தேடி வந்தா சோழா தியேட்டருக்கு பக்கத்துல உள்ள கடைக்கு வர சொல்லிடு.


சொல்லுவியா?... அது சரி, இன்னும் என்ன அழுமை... நீ முன்னூறு மார்க் டோட்டல் வந்தாலே மறுபடி ஒரு சுனாமி வரும்... அம்மா, அப்பா மிரட்டத்தான் செய்யுவாங்க... நீ தைரியமா பேசு... உங்களாலயே அவ்வளவு மார்க் எடுக்க முடியலையே... உங்க பொண்ணு நான் அவ்வளவு மார்க் எடுக்கணும்னு ஆசைப்பட்டா அது பேராசைன்னு சொல்லு... வரட்டா...’ என்று வெளியேறினான்.


சட்டென்று எழுந்த தேவி ரஞ்சனி, கதவைச் சாத்தி தாழிட்டாள். பிறகு நேரே சமையலறைக்குள் நுழைந்ததும் அவள் கண்கள் அலைபாய்ந்து ஓரிடத்தில் நின்றன. அந்த இடம், சிலிண்டருக்கு அருகில் இருந்த பகுதி. அங்கே அழகான அட்டைப்பெட்டி பேக்கிங்கில் எலி மருந்து... அதை அவள் கையில் எடுத்தபோது...


>>>>>>>>>


பரமேஸ்வரியின் கையில் இருந்தது சாப்பாட்டுத்தட்டு. அதை வைத்தே தேவிரஞ்சனியை இவள் அடித்து முடித்தபோது சுத்தமாக அந்த தட்டு மடங்கியிருந்தது. முதலில் தேவி ரஞ்சனிக்கு விஷயம் புரியவில்லை.


எப்போதுமே இந்த மார்க்தானே எடுப்போம்... ஒவ்வொரு தடவையும் அம்மா வாயில் இருந்து வெளிவரும் அதிகபட்ச கெட்டவார்த்தையேஏண்டி மூதேவி... நீ உருப்படவா போறே...’ என்பதுதான்.


கல்யாணத்துக்குப் போன அம்மாவுக்கு என்னாச்சு... பைத்தியம் பிடிச்ச மாதிரி என்னை ஏன் அடிக்கிறா? என்று யோசித்துக் கொண்டே அழுதாள் அவள். இப்போது பரமேஸ்வரியும் அழுதுகொண்டே, ‘இன்னைக்கு கல்யாண மண்டபத்துல என்ன நடந்துச்சுன்னு தெரியுமாடி...’ என்று கேட்டாள்.


லூசா நீ... கல்யாணத்துக்கு போனது நீ... கேள்வி மட்டும் என்கிட்டயா?’ என்று நினைத்த தேவி ரஞ்சனி அமைதியாக நின்றாள்.


உன்னோட ராதா சித்தி அவ்வளவு மோசமா கேவலப்படுத்திட்டா... அவ பொண்ணுக்கு இருபது லட்சம் காசைக் கொடுத்து மெடிக்கல் சீட் வாங்கினதுக்கே இப்படி அலட்டுறாளேன்னு முணுமுணுத்தேன்...


அது அவளுக்கு பொறுக்கலையாம்... நம்ம குடும்பத்தையே கேவலமா பேசிட்டா... நானும் உன்னைய நம்பி ஒரு சவால் விட்டேன். ஆனா நீ அந்த சவாலுக்கு ஒரு சதவீதம் கூட பதிலடி குடுக்க முடியாதபடி செஞ்சுட்டு நிக்கிறியே...’


என்னதான் சவால்னு சொல்லித்தொலையேன்...’ என்பது போல் இருந்தது தேவிரஞ்சனியின் பார்வை.


கவர்மெண்ட் கோட்டாவுல உன்னைய டாக்டர்க்கு படிக்க வெச்சுக் காட்டுவேன்னு அங்க வீராப்பா பேசிட்டு வந்தேன். நீ என்னடான்னா இப்படி அடிமட்ட மார்க் வாங்கிட்டு வந்து நிக்கிறியே...’ என்று பரமேஸ்வரி மீண்டும் அழத் தொடங்கினாள்.


அடிவாங்கியபோது வராத மயக்கம் இப்போது தேவிரஞ்சனிக்கு வந்தது. சட்டென்று கீழேயே விழுந்து விட்டாள்.


ஒரு சொம்பு தண்ணீரை மகள் முகத்தில் கொட்டிய பரமேஸ்வரி,


ஏண்டி மூதேவி... நீ பிளஸ்டூ பரிட்சை எழுதும்போதா டாக்டராகணும்னு சொன்னேன். இப்பதான் பத்தாம் வகுப்புல அடி எடுத்து வெச்சிருக்க... 


அடுத்த வருஷம் திருச்சியில ஒரு அருமையான பள்ளிக்கூடத்துல சேர்க்கணும்னா இப்பவே உன் முயற்சியைத் தொடங்கணும். அதுக்கு மூணு வருஷம் போதாதா? நீ என்ன செய்வியோ தெரியாது. பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுல நீ மாநில அளவுல ஏதாவது நல்ல மார்க் எடுக்கணும்...’ என்றதும் குரு கை கொட்டி சிரித்தான்.


அம்மா... இது உனக்கே கொஞ்சம் ஓவரா தெரியல?... அதிகபட்சம் எழுபது சதவீத மார்க் எடுக்கணும்னு சொல்லு. அது நியாயம்... ஒரேடியா தொண்ணூத்து ஒன்பது சதவீதத்துக்குஅஸ்திவாரம் போட சொல்றது அநியாயமா இல்லை?’


பொறுக்கி... சும்மா வாயை மூடு... நீ மட்டும் கிரிக்கெட் பின்னால அலையாம இருந்தா எவ்வளவு மார்க் எடுப்பேன்னு எனக்குத்தான் தெரியும்.’ என்று மகனை அதட்டிய பரமேஸ்வரி, ‘தேவி கண்ணு... நம்ம குடும்ப மானமே உன் கையிலதான் இருக்கு... இனிமே நீ வீட்டுல ஒரு வேலையும் செய்ய வேண்டாம்... படிக்கிறதை தவிர வேற எதுலயும் கவனம் போகக்கூடாது... என்ன?’ என்று தட்டிக் கொடுத்து விட்டுச் சென்றாள்.


டியூஷன் எங்கே சிறப்பாக உள்ளது என்று விசாரித்ததில் திருவாரூர் பெரிய கோயிலுக்கு அருகில் ஒரு ஆசிரியரைப் பற்றி தகவல் தெரிந்தது. அங்கே தினமும் காலை ஆறு மணிக்கு வகுப்புகள் தொடக்கம்.


ஆனாலும் தேவி ரஞ்சனியை அதிகாலை நாலு மணிக்கு மேல் பரமேஸ்வரி தூங்கவே விடுவதில்லை. அவள் பல் துலக்கி விட்டு வருவதற்குள் பிஸ்கட்டுகளும் காப்பியும் தயாராக இருக்கும்.


கொட்டாவி விட்டுக்கொண்டே என்ன படித்தோம் என்பது புரியாமல் தேவிரஞ்சனி புத்தகத்தை வாசித்துக் கொண்டிருக்கும்போதே மணி ஐந்தேகாலாகிவிடும்.
பரமேஸ்வரி அதற்குள் குளியலறையில் வெந்நீரைத் தயாராக வைத்துவிடுவாள்.


திருவாரூர் கமலாலயக் கரையைத் தாண்டிச் செல்வதற்குள், தேவிரஞ்சனியின் பற்கள் டைப் அடித்துக் கொண்டிருக்கும்.


டியூஷன் ஆரம்பித்து முதல் அரை மணிநேரம் எதுவும் தெரியாது. பிறகு மெல்ல மெல்ல பசியினால் பெருங்குடல் சிறுகுடலைத் தின்று கொண்டிருக்கும். இதில் பாடம் எப்படி மனதில் பதியும்?


பசி மயக்கத்துடன் எட்டேகால் மணிக்கு வீடு திரும்பும் பிள்ளைகளைப்பார்த்துஎன் பிள்ளைங்க எவ்வளவு சிரமப்பட்டு படிச்சிட்டு வருதுங்கஎன்று பெருமைப்பட்டுக்கொண்டிருப்பார்கள்.


பத்து தோசைகளைத் தின்னும் அளவுக்கு பசி இருந்தாலும் பள்ளிக்கு கிளம்ப வேண்டிய நேரம் பயமுறுத்த, அரைவயிறு உணவுடன் தேவிரஞ்சனி பள்ளிக்கு சென்றுவிடுவாள்.


பாடம் நடத்துவது என்றால் புத்தகத்திலோ, கையேட்லோ உள்ளதை அப்படியே படித்துக் காட்டுவதுதான் என்று தப்பாகப் புரிந்து கொண்ட ஆசிரியையிடம் தாக்குப் பிடிக்க முடியாமல், நாலு மணிக்கே துரத்தப்பட்ட உறக்கம் மீண்டும் தேவிரஞ்சனி போன்ற மாணவிகளிடம் வந்து தஞ்சமடையும்.


ஏய்... பாடத்தை கவனிக்காம என்ன கனவு... டிவியில காதல் டூயட்டை பார்த்துட்டு இங்க வந்து எங்க உயிரை வாங்க வேண்டியது...’ என்று ஒரு சில ஆசிரியைகள் கடுஞ்சொற்களை வீசுவார்கள்.


இதைக் கேட்டு அரைகுறையாக அதைப்பற்றி தெரிந்திருப்பதை முழுவதும் அறிந்து கொள்ளும் ஆர்வம் வருவது இயற்கை.


இதில் ஏதாவது விபரீதம் வந்துவிட்டால் ஒட்டுமொத்தப் பழியையும் மாணவச்சமுதாயத்தின் மீது போட்டுவிடுவார்கள்.


பரமேஸ்வரி, தன் மகளை அதிகாலையில் எழுப்பி விட்டு படிக்க வைத்தாலும், தேவிரஞ்சனி தனியாக இருப்பதால் அவள் ஒரு பக்கமும் பரமேஸ்வரி ஒரு பக்கமும் தூங்கி விடுவார்கள்.


அக்கம்பக்கத்தில் தேவிரஞ்சனியுடன் படிக்கும் மாணவிகள் யாராவது இருந்தால் ஒருவருக்கொருவர் துணையாக இருக்குமே என்று நினைத்தாள்.


அதற்குரிய வாய்ப்பும் வெகு விரைவிலேயே அமைந்தது.


பரமேஸ்வரி குடும்பம் குடியிருந்த வீடு மொத்தம் இருபது வீடுகளால் ஆன காலனி. இவர்களது வீட்டுக்கு நான்காவது வீட்டுக்கு ஆறுமுகம் என்ற ஒருவர் குடும்பத்துடன் குடிபுகுந்தார்.


அவர், அரசு அலுவலகம் ஒன்றில் எழுத்தர். அவர் மனைவி ஜெயந்தி இல்லத்தரசி. அவர் மகன் விவேக், அரசுக் கல்லூரியில் பி..வரலாறு படிக்கிறான். அவர் மகள் சசிகலா, தேவி ரஞ்சனி படிக்கும் அதே பள்ளியில் பத்தாம் வகுப்புதான் படிக்கிறாள்.


சசிகலா வேறு செக்ஷனாக இருந்தாலும், தன் மகளுக்கு படிப்புத்துணை அமைந்து விட்டது என்று பரமேஸ்வரிக்கு மிகவும் மகிழ்ச்சி.


இவள் போய் கேட்டதுமே ஜெயந்தி, ‘சசி... இந்த ஆண்ட்டி பொண்ணும் உன் ஸ்கூல்தானே... அந்த பொண்ணு கூட படிக்கிறியா?’ என்றாள்.


சசிகலாவும் சம்மதம் சொல்லிவிட, பரமேஸ்வரிக்கு பாரம் குறைந்தது போல் இருந்தது.


சசிகலா... தினமும் நாலு மணிக்கு அலாரம் வெச்சு எழுந்திரிப்பியா?... இல்ல, அம்மா எழுப்பி விடுவாங்களா?’ என்று பரமேஸ்வரி ஆர்வமானாள்.


சாரி ஆண்ட்டி... நான் தினமும் காலையில அஞ்சரைக்குதான் எழுந்து குளிப்பேன்... ஆறுலேர்ந்து ஏழு வரை படிச்சிட்டு, அம்மாவுக்கு ஹெல்ப் பண்ண அடுத்த ஒரு மணி நேரம் ஒதுக்கிடுவேன்


சாயந்திரமும் ஆறுலேர்ந்து ஏழுவரை இல்லன்னா எட்டு வரை படிப்பு... அதிகபட்சமா ஒன்பதரைக்குள்ள தூங்கிடுவேன்...’ என்று சசிகலா சொன்னதும் இவளுக்குசப்பென்றானது.


பரவாயில்லம்மா... சாயந்திரம் ரெண்டு பேரும் சேர்ந்து படிங்க...’ என்றாள் பரமேஸ்வரி.


இருவரும் சேர்ந்து படிப்பதால் காலாண்டுத்தேர்வில் தேவி ரஞ்சனி ஓரளவாவது நல்ல மதிப்பெண் வாங்குவாள் என்பது பரமேஸ்வரியின் எதிர்பார்ப்பு.


சசிகலாவின் குடும்பம் அவ்வளவாக வசதி இல்லாவிட்டாலும் கல்வியில் ஏழைகள் இல்லை என்ற எண்ணம் பரமேஸ்வரிக்கு இருந்தது.


தேவிரஞ்சனியும் முன்பு போல் இல்லாமல் மிகவும் உற்சாகமாக நடமாடினாள். இதே நிலை நீடித்து, மகள் மருத்துவப்படிப்பில் சேர்ந்து விட்டால் போதும் என்ற எண்ணம் மட்டும்தான் இவளுக்கு.


அந்த எண்ணம் கனவாகவே போய்விடுமோ என்ற எண்ணம் ஏற்படும் வகையில் தேவிரஞ்சனியின் காலாண்டுத்தேர்வு மதிப்பெண்கள் இருந்தன. அது மட்டுமில்லாமல்,
தேவி... நீ இனிமே சசிகலாவோட பேசினது தெரிஞ்சது... அவ்வளவுதான்...’ என்று பரமேஸ்வரி எச்சரித்தாள்.


*********************************************


அத்தியாயம் - 3


எலிமருந்தை கையில் எடுத்த தேவிரஞ்சனிக்கு ஒரு சந்தேகம். அந்த சந்தேகம் வந்ததற்கு காரணம் எறும்பு மருந்துதான். முன்பு ஒருமுறை எறும்புகளை ஒழிப்பதற்காக எறும்பு மருந்தை வாங்கி வந்து போட்டனர். ஒரு எறும்பு கூட சாகவில்லை. ஆனால் நிறைய கரப்பான்பூச்சிகள் செத்து விழுந்தன.


எலி மருந்தும் கிட்டத்தட்ட அப்படித்தான். பிரட்டில் தோய்த்து வைத்த எலி மருந்தால் ஒரு எலி கூட சாகவில்லை. இதைத் தின்றால் நம் உயிர் உடனே போய்விட்டால் பரவாயில்லை. இல்லை என்றாலும் வயிற்றில் உள்ள மருந்தை எடுக்க, வாய்வழியே குழாயை செருகி என்னென்னவோ செய்து பாடாய்ப்படுத்துவார்களாம். அதை எல்லாம் தாங்கிக் கொள்ள முடியுமா?


தற்கொலை செய்ய நினைத்ததும் செய்து விட முடியாதபடி வரிசையாக என்னென்னவோ யோசனை வருகிறதே... இப்படி சாக நினைக்கும் எல்லாருமே இந்த மாதிரிதான் சிந்திப்பார்களோ? ஒருவேளை சாகாமல் பிழைத்துக் கொண்டான் மறுபடியும் மார்க் குறைவாக எடுத்ததற்காக அம்மா அடித்தால் என்ன செய்வது?...


வீட்டில் அம்மாவின் முகத்தைப் பார்க்கும்போதே வெறுப்பு வருகிறது. அதைத் தாண்டி அம்மாவின் முகத்தில் என்னைப் பார்த்ததுமே எரிச்சல். ஒரே வீட்டில் இருந்தால் இப்படித்தான் தோணுமோ? டியூஷனுக்கு வரும் ஆனந்த் புன்னகைக்கும்போதெல்லாம் மனசுக்கு சந்தோஷமாக இருக்கே...


அம்மா, அப்பாவும் இப்படி சிரிச்சா, புன்னகை செய்தால் எப்படி இருக்கும்?


ஆனந்த ஒரு நாள் கூட என்னைய பார்க்காம இருக்க முடியலைன்னு சொல்றானே... இதுக்கு என்ன அர்த்தம்?... தேவி ரஞ்சனியின் மனதில் இப்படி பல எண்ணங்கள் தறிகெட்டு ஓடிக்கொண்டிருக்கும்போது அழைப்பு மணி ஒலித்தது.


>>>>>>>>>>>>>>>>>>>>>


தன் மகளுடன் சேர்ந்து படி என்று அழைத்து விட்டு, சில நாட்களில் அப்படியே மாற்றிப் பேசும் சூழ்நிலைக்கு பரமேஸ்வரி செல்லக் காரணத்தை நேரடியாகச் சொன்னால் அது உங்களுக்கு வினோதமாகத் தெரியும்.


அதனால் சசிகசலாவும் அவள் அண்ணனும் தற்போது வளர்ந்து வரும் சூழலைத் தெரிந்து கொண்டால் உங்களுக்கு குழப்பம் ஏற்படாது.


சசிகலாவின் அண்ணன் விவேக் பெயருக்கு டிஷ்னரியில் அர்த்தம் தேடினால் வால் பையன் என்று அர்த்தம் வந்தாலும் வரும். அப்படித்தான் அவன் வளர்ந்து வந்தான். வீட்டில் அவன் உடைப்பதற்கு என்றே ஏதாவது விலை குறைந்த பொருள் இருக்க வேண்டும். இல்லை என்றால் தொலைக்காட்சி போன்ற விலை உயர்ந்த பொருட்களை சிதறடித்து விடுவான்.


ஆறுமுகமும் எவ்வளவோ அடித்தும் மிரட்டியும் பார்த்தாயிற்று. விவேக் திருந்தும் வழி தெரியவே இல்லை. ஆறுமுகமும் ஜெயந்தியும் தண்ணீர் தெளித்து விட்டுவிட்டார்கள்.


விவேக் எட்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோது வகுப்பில் ஆசிரியர் அமரும் நாற்காலியை என்னவோ செய்து உடைத்துவிட்டான். முதலில் லேசாக பயந்தாலும் விவேக்கிற்கு லேசான அசட்டுத் துணிச்சல் இருந்தது.


சக மாணவர்கள் காட்டிக் கொடுக்க மாட்டார்கள் என்றுதான் நினைத்தான். ஆனால் வகுப்பாசிரியர் தியாகராஜன் இவ்விஷயம் குறித்து அன்பாகப் பேசினார். அதில் உருகிய மாணவர்களில் ஒருவன் மிகவும் உணர்ச்சிவசப்பட்டு உண்மையைக் கூறிவிட்டான்.


தியாகராஜன் கண்களை இமைக்காமல் சற்று நேரம் அப்படியே பார்த்தார். அவர் பார்வையின் வீச்சை விவேக்கால் தாங்க முடியவில்லை. அவன் தலை குனிந்தது. பிறகு வழக்கம்போல் அவர், பாடம் நடத்திவிட்டுக் கிளம்பினார்.


தலைமை ஆசிரியரிடம் புகார் அளிப்பாரோ என்று பயந்தான். அதற்குரிய அறிகுறி எதுவும் அன்று மாலை வரை தெரியவில்லை.


விவேக் மனதில் மாபெரும் நிம்மதி. பள்ளியை விட்டு வெளியில் வந்த உடனே இவ்விஷயத்தையே மறந்து விட்டான். அன்று இரவு விவேக் வீட்டில் டிபன் சாப்பிட்டுக்கொண்டிருக்கும்போது அழைப்பு மணி சத்தம்.


தந்தையை திட்டிக் கொண்டே சென்று கதவைத் திறந்தவனுக்கு அதிர்ச்சி.


அவன் வகுப்பாசிரியர் தியாகராஜன்தான் நின்று கொண்டிருந்தார்.


சாப்பாட்டு நேரத்துல இடையூறு செஞ்சதுக்கு மன்னிக்கணும்...’ என்ற தியாகராஜன் கூச்சப்படாமல் உள்ளே வந்து சோபாவில் அமர்ந்தார்.


யார் இதுஎன்ற கேள்வி ஆறுமுகம், ஜெயந்தி, சசிகலா ஆகியோரின் பார்வையிலேயே தெரிந்தது.


விவேக்... நான்தான் உன் வகுப்பாசிரியர்னு
சொல்லுப்பா... இவரைக் கீழே விழ வைக்கலாம்னுதான் நாற்காலியை உடைச்சு அப்படியே நிறுத்தி வெச்சேன். ஆனா மனுஷன் கிரேட் எஸ்கேப்னு சொல்லு... அப்பதானே அறிமுகம் முழுசா இருக்கும்...’ என்று தியாகராஜன் இயல்பாகப் பேசப்பேச, விவேக் கண்களில் பீதி.


ஆறுமுகம் அப்படியே எழுந்து எச்சில் கையால் மகனை அடிக்கப் பாய்ந்தார். சட்டென்று குறுக்கே புகுந்த ஆசிரியர், ‘சார்... இப்படித்தான் நடக்கும்னு எதிர்பார்த்தேன்... ஆனால் நடக்கணும்னு ஆசைப்படுற விஷயம் வேற...’ என்று சமாதானம் செய்தார்.


விவேக்... போய் சாப்பிடு... சார்... நீங்களும் சாப்பிடுங்க... நான் என் வீட்டுலேயே சாப்பிட்டுட்டுதான் கிளம்பினேன். புள்ளைங்கன்னா குறும்பு செய்யணும்... அப்படி செய்யாததெல்லாம் ஒரு பிள்ளையா...’ என்று கேட்டுவிட்டு நிறுத்தியதும் அனைவரும் குழம்பினார்கள்.


ஆறுமுகத்துக்கு அதற்கு மேல் பொறுமை இல்லை. ‘சார்... நீங்க இப்ப என்ன செய்யணும்னு சொல்றீங்கன்னே புரியலை... அந்த நாற்காலியை சரி செய்ய எவ்வளவு செலவாகும்னு சொல்லுங்க... கொடுத்துடுறேன்...


இந்த குரங்கைப் பெத்ததுக்கு இன்னும் என்னென்ன அனுபவிக்கணுமோஎன்று கூறும்போது ஜெயந்தி லேசாக முறைத்ததை தியாகராஜனும் கவனித்தார்.


பணம் வசூல் பண்றது என் நோக்கமா இருந்தா ரிஜிஸ்டரைப் பார்த்து உங்களுக்கு ஒரு போன் பண்ணியிருந்தா போதுமே... இவன் என்னைக் கீழே சாய்க்குற அளவுக்கு நான் மோசமா பாடம் நடத்தினேனா இல்ல... ரொம்ப நட்பு ரீதியா பழகுற வாத்தியார்தானேன்னு ரொம்பவும் உரிமை எடுத்துகிட்டானான்னு தெரியலை...


அதனால நாற்காலியை சரி செய்ய ஆகுற செலவை நானே செய்யுறேன்... ஆனா அதைச் சரி செய்யுற கார்பெண்டருக்கு ஹெல்ப்பரா விவேக்தான் வேலை செய்யணும்...


அதையும் வர்ற ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள்ல வெச்சுக்குவோம்... இவன் செஞ்ச தப்புக்கு எல்லா மாணவர் முன்னிலையிலும் தண்டனை கொடுத்திருந்தா இன்னும் அதிகமாக வெறுப்பு வரும். உடைச்ச பொருளுக்கு நஷ்ட ஈடு வாங்கிட்டா அந்த பணத்துக்காக நீங்க பட்ட கஷ்டம் அவனுக்கு தெரியாது.


இப்ப அதை சரி செய்யுற கார்பெண்டரோட இவனும் வேலை செய்யும்போது ஒரு பொருளை உருவாக்குறது இவ்வளவு கஷ்டமான்னு உணருவான். இந்த தண்டனையை மற்ற மாணவர்களுக்கு முன்னால நிறைவேத்தினா அதையும் அவமானமா நினைச்சு அவன் மனசு வேதனைப்படும்.


அதனாலதான் லீவு நாளைத் தேர்ந்தெடுத்தேன். அடுத்த தடவை இதே மாதிரி தப்பு செஞ்சா சக மாணவர்கள் முன்னாலதான் தண்டனை... இப்போ அந்த நாற்காலியை சரி செய்து கொடுத்து விவேக்தான்னு சொன்னாலே போதும்... மற்ற மாணவர்கள் மனசுல லேசான பயமாவது இருக்கும்.


ஒரு குழந்தை தப்பு செஞ்சா உடனே அடிக்கிறதுக்குப் பேர் தண்டனை இல்லை. அதைத் திருந்த விடாம செய்யுற குற்றம்... என்னைப் பொறுத்தவரை தண்டனைன்னா அந்த தப்பை உணர்ந்து திருத்திக்கிறதா இருக்கணும்... ஞாயிற்றுக்கிழமை உங்க பையனை ஸ்கூலுக்கு அழைச்சிட்டு வருவீங்கன்னு நினைக்கிறேன்...’ என்ற தியாகராஜன் புன்னகையுடன் விடைபெற்றுச் சென்றார்.


அவருடைய இந்த வித்தியாசமான அணுகுமுறை ஆறுமுகம்ஜெயந்தி இருவரையும் வாய்மூடி பிரமிக்கச் செய்திருந்தது.


தியாகராஜனின் நம்பிக்கை வீண் போகவில்லை. அந்த தண்டனைக்குப் பிறகு விவேக் பல விஷயங்களில் நல்லவிதமாக மாறிக் கொண்டு வந்தான். ஒரு நாள் ஏதோ ஒரு கோபத்தில் சாப்பாட்டுத் தட்டை அப்படியே உதைத்துவிட்டான். கரண்டி வளையும் அளவுக்கு அடிக்க வேண்டும் என்று நினைத்த ஜெயந்தி, அப்படியே ஆத்திரத்தை விழுங்கிக் கொண்டாள்.


அந்த வார சனிஞாயிறு இரண்டு நாட்களிலும் விவேக்கை சமையலில் உதவியாக வைத்துக் கொண்டாள். அன்று சாப்பாட்டுத் தட்டை உதைத்ததற்கு மன்னிப்பு கேட்டதை ஜெயந்தியாலேயே நம்ப முடியவில்லை.


எல்லா பிள்ளைகளுமே நல்ல பிள்ளைகள்தான் என்று பெரியவர்கள் சொன்னது உண்மைதான் என்பதை ஆறுமுகம்ஜெயந்தி தம்பதியர் உணர்ந்தனர்.


முன்பு அளவுக்கு இப்போதெல்லாம் விவேக் அவ்வளவாக பிடிவாதம் பிடிப்பதில்லை. ஆனால் படிப்பில் இப்போதும் சுமார் ரகம்தான். வழக்கம்போல் இருபதாவது ரேங்க்குக்கு மேல்தான் எடுத்து வந்தான்.


ஜெயந்தி இதைப்பற்றி கவலையுடன் ஆறுமுகத்திடம் சொன்னாள்.


இதுக்கு ஏண்டி கவலைப்படுறே... நம்ம தியாகராஜன் சார்கிட்ட ஏதாவது யோசனை கேட்போம்...’ என்ற ஆறுமுகம், மனைவியை அழைத்துக் கொண்டு ஆசிரியரின் வீட்டுக்கே சென்றுவிட்டார்


அந்த வீட்டின் முன்புறம் செம்பருத்தி, நந்தியாவட்டை, வெவ்வரளி போன்ற விதவிதமான மலர்ச்செடிகள். பத்து வயதுக்கு குறைவான வயதுடைய இரண்டு பெண் குழந்தைகள் அந்தச் செடிகளுக்கு நீரூற்றிக் கொண்டிருந்தார்கள்.


பாப்பா... தியாகராஜன் சாரைப் பார்க்கணும்...’ என்றதுமே அவர்களில் ஒரு பெண், ‘நீங்க யாரு... என்ன விஷயமா வந்துருக்கீங்கன்னு சொல்லலாமா?...’ என்று கேட்டாள்.


அந்த குழந்தையின் மரியாதையான பேச்சில் மயங்கிய ஆறுமுகம், விஷயத்தைக் கூறினார்.


உடனே அந்தப் பெண், கேட்டைத் திறந்துரெண்டுபேருமே உள்ள வாங்க...’ என்று அழைத்துச் சென்று கூடத்தில் அமர வைத்தது. ஒரே நிமிடத்தில் இரண்டு கண்ணாடி கிளாஸ்களில் தண்ணீரைக் கொண்டு வந்து கொடுத்து விட்டு, ‘அப்பா இப்போ வந்துடுவாங்க...’ என்று கூறியபின் மீண்டும் செடிகளை கவனிக்கச் சென்றது.


வாங்க சார்... வாங்க மேடம்...’ என்று பலமான வரவேற்பு கொடுத்துக் கொண்டே வந்த தியாகராஜன், எதிரில் இருந்த நாற்காலியில் அமர்ந்தார்.


குழந்தைங்க ரொம்ப சமர்த்து சார்... பூச்செடின்னா ரொம்ப பிரியமா?’ என்று ஜெயந்தி கேட்டாள்


ஆமாங்க... அந்தச் செடிகள் உருவானதுல முக்கால்வாசி பங்கு என் பொண்ணுங்களோட உழைப்பு இருக்கு. பொதுவாவே தோட்டம் அமைச்சு பராமரிக்கிறவங்க மனசு அதிகமா கோபப்பட வாய்ப்பு இல்லை. உடம்புக்கும் மனசுக்கும் புத்துணர்ச்சி தரும்.


அவங்க அம்மா இல்லாத சமயத்துல யாரும் வந்தா தண்ணீர் கொடுத்து உட்கார வைக்கணும்னு சொல்லியிருக்கேன். என் மனைவி கோயிலுக்குப் போயிருக்காங்க. அப்புறம் சார்... நீங்க வந்த விஷயம் என்னன்னு நான் தெரிஞ்சுக்கலாமா?’


வேற ஒண்ணும் இல்ல சார்... விவேக் மற்ற விஷயங்கள்ல திருந்திகிட்டு வர்றான். நல்லா தெரியுது. ஆனா படிப்புல எந்தவிதமான முன்னேற்றமும் இல்லை. அதுக்கு ஏதாவது வழி செய்யலாமே சார்...’ என்று ஆறுமுகம் தயங்கி தயங்கிதான் விஷயத்தைச் சொன்னார்.


என்ன ரேங்க் எடுக்கணும்னு எதிர்பார்க்குறீங்க...’ சட்டென்று தியாகராஜன் இப்படிக் கேட்கவும் ஆறுமுகத்தால் எந்த பதிலும் சொல்ல முடியவில்லை.


உடனே ஜெயந்தி, ‘பர்ஸ்ட் ரேங்க் எடுத்தா வேணாம்னு சொல்ல மாட்டோம்...’ என்று கூறவும் தியாகராஜன் சிரித்து விட்டார்.


மேடம்... நீங்க ஆசைப்படுறது தப்பே இல்லை... விவேக் இப்ப ஆவரேஜா முன்னூற்றி இருபது மார்க் எடுக்குறான். அவனை விட அதிகமா எடுக்குற மாணவர்கள் சுமாரா இருபது பேர் இருக்காங்க.


இவங்க அத்தனை பேரும் இல்லன்னா விவேக் பர்ஸ்ட் ரேங்க் எடுத்துடுவான். இதே மாதிரி அவன் பத்தாம் வகுப்புலயும் மார்க் எடுத்து முதல் மாணவனா பாஸ் பண்ணிட்டான்னு வெச்சுக்குவோம்... அவன் கேட்ட ஸ்கூல்ல விருப்பமான பாடப்பிரிவு கிடைச்சிருமா?’


அது எப்படி சார் கிடைக்கும்... மார்க்கும் முக்கியமாச்சே...’ என்று ஆறுமுகத்திடமிருந்து தயக்கமின்றி பதில் வந்தது.


அப்புறம் ஏன் சார் ரேங்க் பற்றி கவலைப்படுறீங்க?... கூட யாருமே படிக்கலைன்னு நினைச்சு அவனால எவ்வளவு மார்க் எடுக்க முடியுமோ... அவ்வளவு மார்க் எடுக்க சொல்லுங்க... எதிர்காலத்துக்கு நல்ல பாதை கிடைக்கும்.


பல பெற்றோர் தன் பிள்ளை பர்ஸ்ட் ரேங்க் எடுத்தா போதும்னு நினைக்குறாங்க. தன் பிள்ளையோட குறைவா மார்க் எடுத்தவன் இந்த ஒரு இடத்துல போட்டிக்கு வர மாட்டான். ஆனா மற்ற பள்ளிகள்ல இருந்து முன்னால வந்து நின்னா என்ன செய்யுறது? இதை ஏன் யோசிக்க மாட்டெங்குறாங்க...’ என்று தியாகராஜன் சொன்னதும் ஆறுமுகம்ஜெயந்திக்கு குழப்பம் தீர்ந்தது.


ஆசிரியருக்கு நன்றி சொல்லி விட்டுக் கிளம்பினார்கள். வாசல் வரை வந்த பிறகு ஜெயந்தி மனதில் வேறொரு சந்தேகம்...


***************************************


அத்தியாயம் - 4


அழைப்பு மணி ஒலித்ததும் தறிகெட்ட சிந்தனையில் இருந்து விடுபட்ட தேவிரஞ்சனி, எலி மருந்தை சமையலறையிலேயே முன்பு இருந்த இடத்தில் வைத்து வைத்து கதவைத் திறந்தாள். அவள் அண்ணன் குருவின் நண்பர்கள்தான் நின்று கொண்டிருந்தார்கள்.


அண்ணன் சோழா தியேட்டருக்கு பக்கத்துல நிக்கிறேன்னு சொல்லுச்சு...’ என்ற அவள் அவர்களின் பதிலுக்கு காத்திருக்காமல் கதவைச் சாத்தினாள். சமையலறை சென்றதும்


மீண்டும் அழைப்பு மணி அலறியது.


மனுஷியை நிம்மதியா சாகக்கூட விடமாட்டெங்குறாங்க...’ என்று அலுத்துக் கொண்ட தேவிரஞ்சனி, கதவைத்திறந்த போது எதிரில் நின்றது எலக்ட்ரீஷியன் பாலு.


இவர்கள் காலனியிலேயே மாடியில் ஐந்தாவது வீட்டில் குடியிருக்கிறார் அவர்.


கிரைண்டரின் மோட்டார் புகைந்து விட்டது என்று, இரண்டு நாட்களுக்கு முன்பு ரிப்பேருக்காக மோட்டாரை கழட்டி எடுத்துச் சென்றிருந்தார்.


தேவி... மோட்டாரை மாட்டிட்டுப் போறேம்மா... அம்மா இன்னும் ஊர்லேர்ந்து வரலியா? குருவை இப்பத்தான் சோழா தியேட்டருக்கு போற வழியில பார்த்தேன்.’ என்று பேசியவாறே அவர் நேரடியாக சமையலறைக்குச் சென்றார்.


அவர், மோட்டாரை கழட்டிச் செல்லும்போது தேவி பார்க்கவில்லை. இப்போது அந்த மோட்டாரை பொருத்துவதற்காக பாலு பட்ட சிரமங்களை கண்ட தேவிரஞ்சனி சற்று நேரம் தன்னுடைய தற்கொலை எண்ணங்களை மறந்திருந்தாள்.


ஆனால் பாலு வேலையை முடித்துக் கொண்டு கிளம்பும்போது சொன்ன செய்தி, தேவி ரஞ்சனியை தற்கொலை மட்டுமே இதற்கு ஒரே தீர்வு என்று நினைக்க வைத்தது.


>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>


சார்... ஒரு நிமிஷம்...’ என்று ஜெயந்தி கேட்டதும், ‘இன்னும் சந்தேகம் தீரலியா... பரவாயில்லை... கேளுங்க...’ என்று தியாகராஜன் புன்னகையுடன் சொன்னார்.


நீ எவ்வளவு மார்க் எடுத்தாலும் பரவாயில்லைன்னு விட்டா அது சரியா வருமா?’


சரியா வராதுதான்... நீ எடுக்குற மார்க் நிச்சயமா உதவாது... உன்னை நீ காப்பாத்திக்க...
நல்ல மார்க் எடுத்தால்தான் எதிர்காலத்துக்கு நல்லதுன்னு புள்ளைங்களுக்குப் புரிய வைக்கணும்...’


அது, வண்டி ஒட்டும்போது கிளட்சைப் பயன்படுத்துற மாதிரி கவனமா செய்யணும். கிளட்சை இந்த அளவுதான் அழுத்தணும்னு படம் வரைஞ்சு பாகம் குறிக்க முடியாது. வண்டி ஓட்ட ஒட்ட தானா கைவர வேண்டிய கலை அது. ஆனாலும் எனக்குத் தெரிஞ்ச ஒரு விஷயத்தை சொல்றேன்...


என் அப்பாகிட்ட இருந்து நான் கத்துகிட்ட விஷயம் அது. இப்பவும் நேரம் தவறாம எந்த ஒரு விஷயத்தையும் நான் செய்யக் காரணம் என் அப்பாதான்.


எங்களுக்கு பூர்வீகம் ராமநாதபுரம் மாவட்டத்துல ஒரு சின்ன கிராமம். பரமக்குடியில இருந்து ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில பத்து கிலோமீட்டர் தூரம் போனா பொட்டிதட்டிமடம்னு ஒரு நிறுத்தத்துல இறங்கணும். அங்கிருந்து இடப்பக்கம் நாலு கிலோ மீட்டர் நடந்தா பகைவென்றி கிராமம். எங்க பூர்வீகத்தை அடையலாம்.


இன்னொரு பாதை இருக்கு. பரமக்குடியில இருந்து நயினார் கோவில், வல்லம் வழியா போனா இருபத்தஞ்சு கிலோ மீட்டர் தூரம் இருக்கும். ஆனா எங்க தாத்தா வீட்டு வாசல்லயே இறங்கலாம். ஆனா அந்த பஸ் ஒரு நாளைக்கு மூணு தடவைதான்.


பரமக்குடியில மதியம் ரெண்டு மணிக்கு அந்த பஸ்சைத் தவறவிட்டா அடுத்தது இரவு எட்டு மணிக்குதான்.


ஆனா என் அப்பா அதுவரை காத்திருக்காம தேசிய நெடுஞ்சாலை வழியில அழைச்சிட்டுப் போய், நாலு கிலோ மீட்டர் நடக்க விட்டுடுவாரு. ரொம்ப நாள் கழிச்சு நானா ஒரு விஷயம் தெரிஞ்சுகிட்டேன்


காலையில அஞ்சு மணிக்கே எங்க வீட்டை விட்டுக் கிளம்பிட்டா மதியம் ரெண்டு மணிக்கு தாத்தா வீட்டு வாசல் வரை போற பஸ்சை பரமக்குடியில புடிச்சிடலாம். லேட்டாயிட்டா முடியாது. அது புரிஞ்ச உடனே, எப்ப ஊருக்கு போகணும்னாலும் அஞ்சு மணிக்கு வீட்டை விட்டுக் கிளம்பியே ஆகணும்னு நான் எல்லாரையும் அவசரப்படுத்துவேன்.


அதுக்கு என் அப்பா, ‘தியாகு... சீக்கிரமா எழுந்த ஊருக்கு போகணும்னு நானே சொன்னப்ப தூக்கம் கெடுதேன்னு நினைச்ச... லேட்டா கிளம்பினாலும் கொஞ்ச தூரம் நடந்தா ஊருக்கு போயிடலாம்னு சொல்லுவ...


அதிகாலையில எழுந்தா நாலு கிலோ மீட்டர் தூரம் நடக்க வேண்டியதில்லைன்னு நீயே இப்போ புரிஞ்சுகிட்ட. இப்படித்தான் எந்த ஒரு விஷயத்துலயும் கஷ்டப்பட்டா பின்னால சௌகர்யம் கிடைக்கிறது உறுதி... இதுதான் உலகம்னு சொன்னார். உங்களுக்கும் புரிஞ்சிருக்கும்னு நினைக்குறேன்.


இப்ப பொறியியல் படிப்புக்கு விண்ணப்பிக்கிற எல்லாருக்குமே இடம் கிடைக்க வாய்ப்பு இருக்கு. ஆனா அது எவ்வளவு சிறந்த கல்லூரியில மிக நல்ல எதிர்காலம் உள்ள படிப்புன்னு முடிவு செய்யுறது அந்த மாணவனோட மதிப்பெண்தான்.


புள்ளைங்க கிட்ட எவ்வளவு கண்டிப்பு, எவ்வளவு பாசம் காட்டுறேன்னு பெற்றோர்களுக்கு சொல்லித்தர தனி பல்கலைக்கழகமே ஆரம்பிக்கலாம். காசு வாங்கிட்டு சொல்லித் தந்தாதான் இந்த விஷயங்களை கொஞ்சமாவது கவனிப்பீங்க...’ என்று தியாகராஜன் முடித்தபோது ஆறுமுகம்ஜெயந்தி இருவரும் மலைத்துப்போய் நின்றார்கள்.


பிள்ளை வளர்ப்பிலேயே இவ்வளவு நுணுக்கங்களா என்று வியப்பது அவர்களின் கண்களிலேயே தெரிந்தது.


நான்தான் இவ்வளவு சொல்லிட்டேன்னு பிள்ளையை கண்டிக்காம வளர்த்துடாதீங்க. பிரேக் பிடிச்சா டயர் தேயுமேன்னு வண்டியை மரத்துல மோதுன மாதிரி ஆயிடும்...


பையனை வெளியில கூட்டிட்டு போனா பழங்கள் மாதிரி உடம்புக்கு நன்மை தர்ற இயற்கை விஷயங்களைக் கேட்டா வாங்கிக் கொடுங்க. அது பாசம், டிசம்பர் மாத குளிர்ல ஐஸ்கிரீம் கேட்டா முகத்தை கடுமையாக்கி, கண்டிப்பா வாங்கித் தர மாட்டேன்னு சொல்லுங்க. இதுதான் கண்டிப்பு.


நீங்க முக்கியமா நினைவுல வெச்சுக்க வேண்டிய மற்றொரு விஷயம்...’ என்று தியாகராஜன் நிறுத்தியதும்இன்னுமா?’ என்பது போல் ஆறுமுகம் பார்த்தார்.


பிள்ளைங்க பிறந்ததே டாக்டர், இஞ்சினியர் ஆகுறதுக்குதான்னு நினைக்காம அக்கவுண்ட், ஆர்.டி. மாதிரி நாட்டுல இருக்குற மற்ற வேலைகளுக்கும் ஆள் வேணும்னு மனசுல வையுங்க... அவ்வளவுதான்...’ என்று கூறி வழி அனுப்பி வைத்தார்.


மொத்தத்தில் தியாகராஜன் குழந்தைகளை வளர்க்க வழி சொல்லவில்லை! குழந்தைகளுக்கு வழிகாட்டியாக பெற்றோர்கள் நிகழ்வதற்கு ஆலோசனை கூறினார் அவ்வளவுதான்.


இந்த ஆலோசனைகளை முடிந்த அளவு பயன்படுத்தும் ஆறுமுகம், தன் மகனையும் மகளையும் கல்வியின் மீது வெறுப்பு வராதபடி வளர்த்து வந்தார்.


ஆனால் பரமேஸ்வரி, தன் ஓரகத்தி முன்னால் தலைநிமிர்ந்து நடக்க வேண்டும் என்பதற்காக தேவிரஞ்சனியை பிழிந்து எடுத்துக் கொண்டிருக்கிறாள். அவளுக்கா தன் பெண்ணின் விருப்பத்தைப் புரிந்து கொள்ள முடியும்?


காலாண்டுத்தேர்வில் தேவிரஞ்சனியின் மதிப்பெண்களைப் பார்த்த பரமேஸ்வரி அவசரமாக சசிகலாவின் மதிப்பெண் பட்டியலை வாங்கிப் பார்த்தாள். அவளுடைய மதிப்பெண்கள் தேவி ரஞ்சனியை விட சற்றுதான் அதிகம்.


ஓட்டமாக அதை எடுத்துச் சென்று ஜெயந்தியிடம் காட்டினாள். அதற்கு ஜெயந்தி கூறிய பதில் பரமேஸ்வரியை திகைக்க வைத்தது.


தேவி அம்மா... புள்ளைங்களை எப்பவும் யாரோடயும் ஒப்பிட்டு பேசக்கூடாது. ஒவ்வொரு குழந்தைக்கும் ஏதாவது தனித்திறமை இருக்கும். எல்லா பிள்ளையும் நூற்றுக்கு நூறு எடுக்கணும்னு எதிர்பார்க்க கூடாது.’ என்று இயல்பாக பேசினாள்.


அவளிடம் எதுவும் பேசாமல் திரும்பிய பரமேஸ்வரி, தேவிரஞ்சனியிடம் போய், ‘இனிமே அந்த சசிகலா கூட சேர்ந்த... அவ்வளவுதான்...’ என்றாள்.


அவளோட சேர்ந்து படின்னு நீதானம்மா சொன்ன?... இப்ப என்ன நடந்துச்சு...’ தேவி ரஞ்சனிக்கு எதுவும் புரியாமல்தான் கேட்டாள்.


சசிகலாவோட சேர்ந்து உனக்கும் வாய் அதிகமா ஆயிடுச்சு... நான் சொன்னதை நீ கேளு... அரையாண்டு தேர்வுல நீ குறைஞ்சது நானூறு மார்க்காவது எடுக்கணும்... அவளோட சேர்ந்தா அதுல பாதி கூட எடுக்க மாட்ட...


இந்த விஷயம் இவ்வளவு நாளா எனக்குப் புரியாமப் போயிடுச்சு... மறுபடி மறுபடி சொல்றேன்... இனிமே நீ சசிகலாவோட சேரவே கூடாது... ஜாக்கிரதை...’ என்று எச்சரித்தாள்.


*******************************


அத்தியாயம் - 5


கிரைண்டரை சரி செய்துவிட்டுக் கிளம்பிய பாலு, ‘தேவி... என் பொண்ணு அரையாண்டுத்தேர்வுல ரெண்டு பாடத்துல பெயில். புடிச்சுத் திட்டித்தான் டியூஷன்ல விட்டுட்டு வந்துருக்கேன். அவளாவது ஒன்பதாம் வகுப்புதான். பரவாயில்லை. உனக்கு இந்த வருஷம் பப்ளிக் எக்ஸாம். நீயும் வழக்கம் போலதான் மார்க் எடுத்துருக்கியா? உங்க அம்மா வந்ததும் அர்ச்சனை இருக்கும்... நானும் வந்து கண்டிக்கச் சொல்றேன்...’ என்று கூறிய அவர் சிரித்து விட்டுச் சென்றார்.


அம்மா, அப்பா இதையெல்லாம் கண்டுக்காம விட்டாலும் சுற்றிலும் இருக்குறவங்க விட மாட்டாங்க போலிருக்கே... விஷயத்தையும் மறைக்க முடியாது... நாளைக்கு பள்ளிக்கூடத்துல கேள்விக்கு மேல கேள்வியா கேட்டு உயிரை எடுத்துடுவாங்க...


அதுக்கு பதில் நாமே உயிரை விட்டுடுறது பெட்டர்...’ என்று நினைத்த தேவி ரஞ்சனி, இறுதியாக ஒரு தீர்மானத்துக்கு வந்தாள்.


>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>


பரமேஸ்வரி தன் மகளை சசிகலாவிடம் சேரவே கூடாது என்று எச்சரித்த அன்று மதிய உணவு இடைவேளையின்போதே தேவிரஞ்சனி பேசிவிட்டாள்.


சசிகலா... ஏண்டி எங்கம்மா உன்னோட பேசக்கூடாதுன்னு சொல்லி திட்டுறாங்க...’


என்னுடைய பேரண்ட்ஸ், உங்க அம்மா மாதிரி என்னைய டாக்டராகணும், இஞ்சினியராகணும்னு எல்லாம் டார்ச்சர் பண்ண மாட்டாங்க. எங்க அம்மா அப்பா என்னையும் என் அண்ணாவையும் முழு சுதந்திரம் கொடுத்து வளர்க்குறாங்க... அவங்க நோக்கமே எனக்கு ஆரம்பத்துல புரியலை. ஆனா இது மாதிரி பேரண்ட்ஸ் கிடைக்க நாங்க ரொம்ப புண்ணியம் பண்ணியிருக்கணும்னு மட்டும் புரியுது.


எனக்கு ஓவியம் வரையறதுலதான் விருப்பம்... அதனால பாடத்துல உன்னால எவ்வளவு முடியுமோ அவ்வளவு மார்க் வாங்கு... ஆனா ஓவியப் போட்டிகளை ஒண்ணு விடாதன்னு சொல்லியிருக்காங்க...


நானும் கிட்டத்தட்ட உன் அளவுதான் மார்க் எடுத்தேன்னு தெரிஞ்சதும் உங்கம்மா வந்து எங்கம்மா கிட்ட கம்ப்ளயிண்ட் பண்ணினாங்க... எங்கம்மா அதையெல்லாம் கேட்காம உங்கம்மாவுக்கு அட்வைஸ் பண்ணினாங்க. அந்தப் பேச்சை எல்லாம் கேட்டா நீயும் என்னை மாதிரியே சுமாரா படிச்சாப்போதும்னு நினைச்சிடுவேன்னு பயந்துருப்பாங்க...


பரவாயில்லை... நாம ஸ்கூல்ல மட்டும் தோழிகளாவே இருப்போம்... வீட்டுல விரோதிகள்... உங்க அம்மாவுக்காக...’ என்ற சசிகலா, தேவிரஞ்சனியின் கரத்தைப் பற்றி அழுத்தமாக குலுக்கினாள்.


சசிகலாவின் பெற்றோர் குணத்தைப் பற்றி அறிந்த தேவி ரஞ்சனி, ‘இறைவா... என்னைய ஏன் கொடுமைக்கார பெற்றோர்களுக்கு மகளாப் படைச்ச?...’ என்று பல இரவுகளில் மவுனமாக அழுதிருக்கிறாள்.


பரமேஸ்வரியைத் தாண்டி வகுப்பாசிரியையின் பேச்சு இருக்கும். ஒருமுறை தேவிரஞ்சனியின் வகுப்பில் படிக்கும் நந்தினி என்ற மாணவிக்கு தபால் மூலம் காதல் கடிதம் வந்து சேர்ந்தது.


தலைமையாசிரியை அதை எடுத்துக் கொண்டு வகுப்புக்கே வந்து படித்துக் காண்பித்தாள்.


இருபது வரிக் கடிதத்தில் எழுபது எழுத்துப்பிழைகள்.


உங்களுக்கெல்லாம் தோல் கொஞ்சம் வெள்ளையா இருந்தாப் போதுமே... பத்துப் பேரையாச்சும் பின்னால அலையவிட்டாத்தான் நிம்மதி? தமிழ்ல ஒரு லெட்டர் எழுதத் தெரியாதவனை எல்லாம் காதலிச்சு என்ன செய்யப்போற?... நீ ஒரு தடவை கூட டோட்டல் முன்னூறைத் தாண்டியது கிடையாதே... எப்படி முடியும்? புத்தகத்தைப் பிரிச்சாலே அவன் ஞாபகம்தான் வருதோ என்னவோஎன்று தலைமை ஆசிரியை சொன்னதும், மற்ற ஆசிரியைகளும் சேர்ந்து கொண்டு சிரித்தார்கள்.


மிஸ்... அவனை நான் டியூஷன்லதான் பார்த்திருக்கேன். எந்த கிளாஸ்னு தெரிஞ்சுகிட்டு  அவனா அனுப்பியிருக்கான். எனக்கு வேற எதுவும் தெரியாது...’ என்று கதறினாள் நந்தினி.


உனக்கு எதுவுமே தெரியாதுடி... ஆனா...’ என்று தலைமை ஆசிரியை கூறிய வார்த்தைகளைக் கேட்டதும் நந்தினி மட்டுமின்றி அத்தனை மாணவிகளும் காதுகளைப் பொத்திக் கொண்டார்கள்.


எல்லோரும் நல்ல பிள்ளை மாதிரி எப்படி நடிக்கிறாளுங்க பார்த்தியா... இதெல்லாம் படிச்சுக் கிழிச்சது போதும்... உன் அப்பா அம்மாவோட வந்து டி.சி.யை வாங்கிட்டு போ...’ என்று இரக்கமின்றி தலைமை ஆசிரியை தீர்ப்பளித்தார்.


பிறகு அவள் பெற்றோர், தலைமை ஆசிரியையின் காலில் விழுந்து கெஞ்சி, நந்தினியின் படிப்பைத் தொடரச் செய்தார்கள். இதை எல்லாம் பார்க்கும் போது, உலகத்தில் எல்லாருமே அசுரர்களாகவும், அரக்கிகளாகவும்தான் தேவி ரஞ்சனி கண்களுக்கு தெரிந்தார்கள்.


இப்படியே இரண்டு மாதங்கள் கடந்தன. அரையாண்டுத் தேர்வு விடைத்தாள்களைப் பார்த்த தேவிரஞ்சனிக்கு உயிரே இல்லை. ஓரிரு நாட்களில் தரப்படும் மதிப்பெண் பட்டியலைப் பார்த்தால் பரமேஸ்வரி என்ன செய்வாள் என்பது யாருக்குமே தெரியாது. இதை நினைக்கும்போது தேவிரஞ்சனியின் உடம்பு நடுங்கியது.


அவளுடைய நிலையிலேயே மேலும் இரண்டு மாணவிகள் இருந்தார்கள். அவர்களில் ஒருத்தி ஆர்வக்கோளாறில் பின் விளைவுகளைப் பற்றி யோசிக்காமல் சொன்ன யோசனையை ஏற்றுக் கொண்டதுதான் தன் உயிருக்கே உலை வைக்கும் என்பது தேவிரஞ்சனிக்கு அப்போது தெரியாது.


ஆசிரியைகளின் ஓய்வு அறையை சுத்தம் செய்வதற்கு தினமும் மூன்று மாணவிகள் செல்வார்கள். அன்று அந்த மாணவிகள் வேலையை முடித்துக் கொண்டு சென்ற பிறகு, தேவி ரஞ்சனியும் மற்ற இரு மாணவிகளும் அந்த அறைக்குள் நுழைந்தனர்.


ஆசிரியை ஒருவரின் திருமண வரவேற்பு விழாவுக்காக எல்லா ஆசிரியைகளும் பள்ளி நேரம் முடிந்த உடனேயே சென்று விட்டார்கள். அங்கே யாரும் இல்லாமல் போனதுதான் இந்த மாணவிகள் தவறு செய்ய முதல் காரணமாகி விட்டது


தேவிரஞ்சனியுடன் வந்த மாணவிகளில் ஒருத்தி ஒரு முடிவுடன்தான் வந்திருந்தாளோ என்னவோ... நிறைய சாவிகள் அடங்கிய வளையத்தையே கொண்டு வந்திருந்தாள்.


ஐந்தாவது முயற்சியிலேயே அந்த கபோர்டு திறந்து கொண்டது. அதைத் திறந்து உள்ளே இருந்த ரேங்க் கார்டுகளை கிழித்துக் குப்பையாக்கினார்கள். திரும்பவும் பூட்டிவிட்டு குப்பைகளை, பள்ளிக்கு வெளியில் இருந்த குப்பைத் தொட்டியில் போட்டுவிடலாம் என்று வேகமாக நடந்தார்கள்.


வாசலை நெருங்கியபோது எதிரே வாட்ச்மேன்.


உங்களுக்கு ஏன் பாப்பா இந்த சிரமம்... பள்ளிக்கூடத்துக்கு உள்ளேயே மரத்தடியில ஒரு குப்பைத் தொட்டி இருக்கே... அதுல போட வேண்டியதுதானே...’
என்று வாஞ்சையுடன் கேட்டார்


இல்ல வாட்ச்மேன்... நாங்க வெளியிலயே போட்டுடுறோம்...’ என்று நகர முற்பட்டார்கள்


வேண்டாம் பாப்பா... ஸ்கூலுக்குள்ள நீங்க தூய்மைப்பணி செஞ்சா தப்பில்லை... வெளியில குப்பையோட போக வேண்டாம்... சொன்னா கேளுங்க...’ என்று வாட்மேன் குரலைக் கடுமையாக்கினார்.


சற்று தயக்கத்துடனேயே மூன்று மாணவிகளும் பள்ளிக்குள் இருந்த குப்பைத் தொட்டியிலேயே குப்பைகளைப் போட்டுவிட்டுக் கிளம்பினார்கள்


தேவி ரஞ்சனியின் வகுப்பு ஆசிரியை இன்னும் இரண்டு நாட்கள் கழித்து ரேங்க் கார்டுகளைத் தேடியிருந்தால் குற்றம் எளிதில் நிரூபணமாகி இருக்காது.


மறுநாளே ரேங்க் கார்டுகள் காணாமல் போன விஷயம் ஆசிரியைகளுக்கிடையே காட்டுத்தீயாகப் பரவிவிட்டது. அவர்களின் அடுத்த கட்ட விசாரணை வாட்ச்மேனிடம்தான்.


அவருக்கு முதலில் விஷயம் புரியாமல் குழம்பினார். பிறகு சட்டென்று தெளிவுடன் ஓடிச்சென்று குப்பைத் தொட்டியைக் கிளறினார்.


பிறகென்ன!... கிழந்த ரேங்க் கார்டுகளும் கையுமாக அந்த மூன்று மாணவிகளும் சிக்கிக் கொண்டார்கள்


எப்போ இந்த மாதிரி திருட்டு புத்தி வந்துடுச்சோ... இனி உங்களை நம்ப முடியாது... நாளைக்கே உங்க பேரண்ட்சைக் கூட்டிட்டு வாங்க... பிரேயர்ல எல்லா ஸ்டூடண்ட்ஸ் முன்னாலயும் உங்களைக் குடும்பத்தோட தலைகுனிய வைத்து டி.சியைக் குடுத்து அனுப்புனாத்தான் சரிவரும்...’ என்று தலைமை ஆசிரியை உறுதியாகக் கூறிவிட, மூன்று மாணவிகளும் ஆடிப்போய்விட்டார்கள்.


ஏற்கனவே வீட்டில் இருந்த பிரச்சனைகள் போதாது என்று இது வேறா... எனக்குத் தேவையா இது என்று தேவி ரஞ்சனி அங்கேயே அழுது தீர்த்தாள்.


எப்படி வீட்டில் விஷயத்தை சொல்லப்போகிறோம் என்று மனம் நொந்தபடியே வீட்டுக்கு வந்த தேவிரஞ்சனி, பக்கத்து வீட்டில் சாவியை வாங்கித் திறந்து உள்ளே நுழைந்த உடன் புத்தக மூட்டையை வீசி எறிந்தாள். அது டி.வி.யை ஸ்டாண்டுடன் கீழே தள்ள முயற்சி செய்து தோற்றுப்போனது.


******************************************


அத்தியாயம் - 6


தேவி... இப்படி பண்ணிட்டுப் போயிட்டியே...’ என்று குரு போட்ட சத்தத்தில் அந்தக் காலனியே அதிர்ந்தது.


படுக்கை அறையில் இருந்த தொட்டி ஊக்கில் சுடிதார் துப்பட்டாவில் சுருக்கு போட்டு உயிரை விட்டிருந்தாள் தேவிரஞ்சனி. அவளை எப்படி கீழே இறக்குவது என்று புரியாமல் கதறிக்கொண்டிருந்தான் குரு.


தன்னிடம் இருந்த ஆயுதத்தால் பாலுதான் துப்பட்டாவை அறுத்து, தேவியை கீழே இறக்கினார். ‘பத்து நிமிஷத்துக்கு முன்னாலதான் உன்கிட்ட பேசிட்டு போனேன்... பாவி... இப்படி செய்வன்னு தெரியலையே...’ என்று மனம் கலங்கிய பாலு, ஏதோ ஒரு நப்பாசையில் மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றார். அங்கு தேவிரஞ்சனியை பரிசோதித்த மருத்துவர்கள் அவள் ஏற்கனவே இறந்து விட்டாள் என தெரிவித்தனர்.


அந்த காலனியில் குடியிருப்பவர்கள் மட்டுமின்றி அந்த தெருவே அரசு மருத்துவமனை வாசலில் கூடி நின்றது.


ஏற்கனவே உயிர் போயிடுச்சு... நாளைக்கு காலையிலதான் பிரேதப் பரிசோதனை செஞ்சு தருவோம்...’ என்று மருத்துவர் கூறிவிட்டார்.


மறுநாள்.


பரமேஸ்வரிஅடிப்பாவி மகளே... உனக்கு நான் என்ன குறை வெச்சேன்...(?!)’ என்று கதறிக்கொண்டிருந்தாள்.


வீட்டின் வெளியே, தேவிரஞ்சனி படிக்கும் பள்ளியின் தலைமை ஆசிரியை, ‘சனியன்... தப்பு பண்ணினதைக் கண்டிக்கலாம்னு பேரண்ட்சைக் கூட்டிட்டு வர சொன்னேன்... தூக்குல தொங்கி இப்ப என் உயிரை எடுக்குது... இனிமே எவளாவது பள்ளிக்கூடத்துக்கு நெருப்பு வெச்சாக்கூட கண்டுக்கக் கூடாது...’ என்று முணுமுணுத்தார்.


சசிகலா குடும்பம் மூலம் விஷயம் தெரிந்து தியாகராஜனும் அங்கே வந்திருந்தார். ஓரளவு கிடைத்த தகவல்களை வைத்து என்ன நடந்திருக்கும் என்பதை அவரால் யூகிக்க முடிந்தது.


என்னுடைய அறிவுரையால விவேக்சசிகலா மாதிரி ரொம்பக் கொஞ்சம் பேரைத்தான் நல்ல திசையில அனுப்ப முடிஞ்சது... தேவிரஞ்சனி மாதிரி தினம் தினம் எத்தனை ஆயிரம் மாணவ மாணவிகள் பாதிக்கப்படுறாங்களோ...’ என்று நினைத்து பெருமூச்சு விட்டார் தியாகராஜன்.


தேவிரஞ்சனி உயிரை விட்டுத் தொங்கிய ஊக் அந்த சீலிங்கில் இருக்கக்கூடாது என்று நினைத்த பாலு, சுத்தியலால் அதை லேசாகத்தான் ஒரு முறை தட்டினார். தேவிரஞ்சனியின் மனதைப்போலவே அதுவும் பட்டென்று உடைந்து விட்டது.


அடுத்தநாள், தியாகராஜன் தன் பள்ளியின் அறிவிப்பு பலகையில்,


கல்லைச் செதுக்கும்போது உளி தரும் வலியை தாங்கினால்தான் சிற்பமாகலாம் என்ற உண்மையை பலர் அறிந்திருந்தாலும், உணர்ந்தவர்கள் மிகக் குறைவு. குழந்தைகள் சிலைக்குரிய கற்கள் என்றால், பெற்றோரும் ஆசிரியரும் சிற்பிகள். கற்கள் நன்றாக இருந்தாலும் சிற்பிகளுக்கு அனுபவம் இல்லை என்றால் கல் உடைந்துதான் போகும் என்பதை நாம் உணருவது எப்போது?


 என்ற கேள்வியை எழுப்பியிருந்தார்.