Search This Blog

மின்வெட்டு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மின்வெட்டு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 14 மார்ச், 2012

கரகாட்டக்காரன் காமெடியும் - மின்சார வாரியமும்

ரெண்டு பழம் வாங்குனியா? கடைக்காரன் கொடுத்தானா?

ஒண்ணு இங்க இருக்கு. இன்னொன்னு எங்க? -- சினிமாவுலயாச்சும் இப்படி செந்திலிடம் கேட்டு கவுண்டமணியால் அடிக்க முடிஞ்சது.
  
நம்மால் அதுவும் செய்ய முடியாது.

நீ யாரை அடிக்கப் போறன்னுதானே கேட்குறீங்க?

தமிழகம் முழுவதும் தொழிற்சாலைகளுக்கு வாரம் ஒரு நாள் (ஞாயிறுடன் சேர்த்தால் இரண்டு இரண்டு நாள்) மின்சார விடுமுறை விட்டால் வீடுகளுக்கு ஒரு நாளைக்கு 4 மணி நேரம் மட்டும் மின்வெட்டு அளிக்கலாம் அப்படின்னு சொன்னாங்க.

நாங்களும் நம்பிட்டோம்.
தொழிற்சாலைகளுக்கு மின்சார விடுமுறை, சென்னைக்கு கூடுதலா ஒரு மணி நேர மின்வெட்டு இதெல்லாம் விட்டபிறகு நிலைமை ரொம்ப கேவலமா போயிட்டுதே. ஏன் அப்படின்னு கேட்டா இப்படி சிறு தொழில் நிறுவனங்கள் கிட்டயும் வீடுகள் கிட்டயும் ஏமாத்தி புடுங்குன மின்சாரத்தை நட்சத்திர ஹோட்டல்கள், மெகா மால், தியேட்டர்கள் இவங்களுக்கு எல்லாம் மின்சார விடுமுறை அளிக்காம கொடுத்துகிட்டு இருக்காங்களாம்.

அது சரி. ஐயாயிரம் ரூபாய்க்கு டீசல் போட்டு ஜெனரேட்டரை ஓட்டுறதுக்கு பதிலா ஐநூறு ரூபாயை அதிகாரிகளுக்கு கொடு. பிரச்சனை சால்வுடு.-இப்படிப்பட்ட நிர்வாகம் இருக்குற நாட்டுலதான நாம இருக்கோம்.

இப்படி வள வளன்னு எழுதாம ஏழை மேலும் பிச்சைக்காரனாகிறான். கோடீஸ்வரன் மேலும் கொள்ளையடிக்கிறான் அப்படின்னு எழுதுனா போதும். ஆனா என்ன பண்றது. சில நேரங்கள்ல எல்லாத்தையும் விளக்கமா சொல்லித்தான் ஆகணும்.

பாத்திரம் ஓட்டையா இருந்தா உலகத்துல இருக்குற எல்லாரும் சேர்ந்து ............................. அடிச்சா கூட பாத்திரம் நிரம்பாதுன்னு நம்ம நாட்டு அரசியல் வியாதிகளுக்கு யார் புரிய வெக்கிறது.

இவ்வளவு பேசுறியே? தனி மனிதனா மின்சார சிக்கனத்துக்கு என்ன செய்யுறன்னு நீங்க கேட்கலாம். கடந்த மூணு வருஷத்துக்கு முன்னாலயே எங்க வீட்டுல சிஎஃப்எல் பல்ப்புக்கு மாறியாச்சு. வெளியில் மாலை 6 மணி முதல் 9 மணி வரை கூடுதல் ஒளி தர்ற சிஎஃப் எல் பல்ப்பும், 9 முதல் காலை 5.30 மணி வரை 5 வாட் சிஎஃப் எல் பல்ப்பும் போட்டிருக்கோம்.

என் எல்லைக்கு உட்பட்ட விஷயம் இவ்வளவுதான்.

ஆனா பெரிய தனியார் நிறுவனங்களும், உள்ளாட்சி அமைப்புகள்ல இருக்குறவங்களும் மின்சார சிக்கனத்தை கடைப்பிடிக்கிறத விரல் விட்டு எண்ணிடலாம்.

இப்போ காலை 6 மணியிலேர்ந்து 9 மணி வரை கரண்ட் இல்லாததால தெரு விளக்கை ஒழுங்கா நிறுத்துறது இல்லை.

காலை 9.30 அல்லது 10 மணிக்கு மேலதான் நிறுத்துறாங்க. இந்த அரை மணி நேரத்துல எவ்வளவு மின்சாரம் விரயம்?

அவ்வளவு ஏன்?

திருவாரூர் பெரிய கோவிலுக்கு தினமும் காலையில போறது என் வழக்கம். அங்கேயும் அடிக்கடி இந்த கதிதான். என் உயரத்துக்கு எட்டுற அளவுல சுவிட்ச் இருக்குறது ரௌத்ர துர்க்கை சன்னதியிலயும், மகாலஷ்மி சன்னதியிலயும்தான். நான் சுற்றி வரும்போது அந்த இடத்துல மட்டும் சுவிட்சை நிறுத்திடுவேன். மற்ற லைட்டுகளுக்கு எங்கே சுவிட்ச் இருக்குன்னு கோவில் எலக்ட்ரீஷியனுக்கு மட்டும்தான் தெரியும்னு நினைக்கிறேன்.

இந்த மாதிரி அலட்சியமா மின்சாரத்தை வீணாக்குறவங்களை சாமானியன் என்ன செய்ய முடியும்?

கண்ட, கண்ட ............................ எல்லாம் இலவசமா கொடுக்குறவங்க சி எப் எல் பல்ப்புகளை அதிக எண்ணிக்கையில தயாரிச்சு நியாயமான லாபத்துல விற்பனை செய்துட்டு குண்டு பல்ப் இருந்தா அந்த வீட்டுக்கு மின்சாரம் துண்டிக்கப்படும்னு சொன்னாலே போதும். 500 மெகா வாட் மிச்சமாகும்.

வெளி மாநிலத்துல வாங்கின மின்சாரத்தை கொண்டு வர வழியில்லைன்னு ஒரு பக்கம் செய்தி வெளிவருது.

அது சரி, 50 ரூபா மதிப்புள்ள ஸ்டாம்ப் பேடு வாங்க டெல்லியில இருக்குற தலைமையிடத்துக்கு எழுதி 1000 ரூபா செலவழிச்சு கொண்டுவர்ற அளவுக்கு நிர்வாகத்துல சட்டச் சிக்கலை வெள்ளைக்காரன் உருவாக்கி வெச்சிட்டு போயிட்டான்.

அந்த காலத்துல இது மாதிரி சில பொருட்கள் எல்லா ஊர்லயும் கிடைக்காது. அதனால அப்படி நடைமுறை இருந்துருக்கலாம். இன்னும் அதையே புடிச்சுகிட்டு தொங்குறோம்.

குஜராத்துல இருந்து தமிழ் நாட்டுக்கு 1000 வாட் மின்சாரம் போகணுமா? ரைட். நெய்வேலியில இருந்து ஆந்திராவுக்கு போற ஆயிரம் வாட் மின்சாரத்தை தமிழ்நாட்டுக்கே கொடுத்துடுங்க.

குஜராத்ல இருந்து இங்க விலைக்கு கொடுக்க வேண்டிய ஆந்திராவுக்கோ கர்நாடகாவுக்கோ பண்ட மாற்று முறையில கொடுக்க முடியாதா என்ன?

செய்ய முடியும். ஆனா நாங்க செய்ய மாட்டோமே. அப்படி செய்தா Line Loss அப்படின்னு சொல்லிட்டு இஷ்டத்துக்கு மின்சாரத்தை திருட முடியாதே.

பகலிலாவது 12 மணி நேரத்துல 6 மணி நேரம் மின்சாரம் இருக்கு. ஆனா ராத்திரியில ஒண்ணரை மணி நேரத்துக்கு ஒரு முறை முக்கால் மணி நேரம்னு போட்டு சாகடிக்கிறாங்களே. இது ஏன்னு நான் சர்வே எடுத்தேன்.

ஆளுங்கட்சி காரர்: ராத்திரியில தொடர்ந்து 3 மணி நேரம் கட் பண்ணினா ஜனங்க பொங்கிடுவாங்க.

(கிழிச்சாங்க. அப்படி பொங்கியிருந்தா முதல் நாள் பன்னண்டு மணி நேரம் கட் பண்ணினப்பவே, எவனைக் கேட்டு வெளி நாட்டு கம்பெனிக்கு 24 மணி நேரமும் மின்சாரம் தர்றேன்னு ஒத்துகிட்டீங்க அப்படின்னு கேட்டுருக்க மாட்டாங்களா?

எதிர்க்கட்சிகளில் ஒருவர் : மூணு மணி நேரம் தொடர்ந்து கட் பண்ணினா சொரணை இல்லாத தமிழன் அதுக்கும் பழகிடுவான். அப்பப்ப திங்கிற சோத்தைப் புடுங்குற மாதிரி கட் பண்ணினாத்தான் கூடங்குளம் வேணும்னு போராடுவான்.

(இதுல லாஜிக் இருக்கே)

எதிர்க்கட்சிகளில் இரண்டாமவர் : ஒரு காலத்துல குலக்கல்வி முறை கொண்டு வந்தாங்க. ஆனா அது ஃபெயிலியர். இப்போ தேர்வு தொடங்க 2 மாசம் இருக்கும்போதுல இருந்து இஷ்டத்துக்கு கட்பண்ணி படிக்க விடாம கவனத்தை சிதற வெச்சாச்சுன்னா, காசு இருக்குறவன் தவிர மற்ற யாரும் பெரிய படிப்பெல்லாம் படிக்க முடியாது.

(இதுவும் உண்மையோன்னு தோணுது. ஏன்னா ஒரு காலத்துல தெரு விளக்கு வெளிச்சத்துல இருந்தே படிச்சு முன்னேறினவங்க உண்டு. ஆனா இப்போ முடியாது. காரணம், அப்போ இந்த அளவுக்கு தான் வீட்டுக்கே காற்று நுழையாத அளவுக்கு வீடு கட்டுற பழக்கம் இல்லை. இவ்வளவு சாக்கடை இல்லை. கொசுவும் இவ்வளவு அதிகமாக இல்லை.)

கூடங்குளம் வேண்டாம்னு ஏழெட்டு மாசத்துக்கு முன்னால பிரச்சனை வெடிச்சப்பவே நான் ஒருத்தர்கிட்ட "இப்ப பாருங்க சார்...வெறும் நூறு இரு நூறு மெகா வாட்டுக்காக கூடங்குளத்தை திறக்கணும்னு சொன்னா எல்லாரும் உதைக்க வருவாங்கன்னு அவங்களுக்கும் தெரியும். அதனால, ஒரு நாளைக்கு 12 முதல் 15 மணி நேரம் கரண்ட்-டை கட் பண்ண ஆரம்பிப்பாங்க. மக்களே போராடி கூடங்குளம் வேணும்னு சொன்னதும் நெய்வேலி, தூத்துகுடி, மேட்டூர்னு இருட்டடிப்பு செய்திருக்குற மெஷினை எல்லாம் ஓட விட்டுட்டு, கூடங்குளத்தாலதான் தமிழ் நாடே ஒளிருதுன்னு சொல்லப்போறாங்கன்னு பேசினேன்.

நல்ல விஷயம் எதுவும் நான் நினைக்குற படி நடக்க மாட்டெங்குது. ஆனா உருப்புடாத விஷயம் எப்படி சார் அப்படியே நடக்குதுன்னு எனக்கு இப்பவும் ஒரு குழப்பம் இருக்கு.

காற்றாலை மின்சாரத்தை வாங்குறதுல பிரச்சனை இல்லை. ஆனா அதன் விலை மிக அதிகம்னு சொல்றாங்க. அப்படி அதிக விலைக்கு வாங்கி வீட்டுக்கு மட்டும் மாச மாசம் ரேஷன் அளவு மாதிரி கொடுத்துட்டு கூடுதல் பயன்பாட்டுக்கு லாபம் வெச்சே கொடுக்க வேண்டியதுதானே.

ஆடம்பர விளக்குகளுக்கு, வியாபார நிறுவனங்களுக்கு குறிப்பா சொல்லப்போனா கல்யாண மண்டபத்துக்கு கூட ஒரு கல்யாணத்துக்கு அரசு மின்சாரம் இவ்வளவுதான்னு ஸ்லோப் வெச்சுடலாம். இதை ஏன் சொல்றேன்னா, காசு கொடுக்குறோம். அதை ஏன் சிக்கனமா செலவழிக்கணும்னு ஒரு எண்ணம் நிறைய மக்களுக்கு இருக்கு. 15 ரூபா பொருளை 1 ரூபாய்க்கு கொடுக்குறதாலதானே இப்படி. 15 ரூபா பொருளுக்கு 17 ரூபா விலை இருந்தா அப்படி செய்ய தோணுமா?

அரசு விரைவுப்பேருந்து முன்பதிவு பயணப்படிவம் இலவசமா கொடுத்தப்போ நிறைய வீணாக்குவாங்க. ஒரு படிவம் 1 ரூபா அப்படின்னு விலை வெச்சதும் இஷ்டத்துக்கு எழுதி கிழிச்சு போடுறது அனேகமா இல்லைனே சொல்லலாம்.

சரி...இந்த மின்வெட்டால நீயும் கடுமையா பாதிக்கப்பட்டிருக்கன்னு தெரியுது... போய் தூங்கு தம்பின்னு யாரோ சொல்றாங்க.

அது உண்மைதாங்க. நானும் ரொம்ப பாதிக்கப்பட்டது உண்மைதான். இதை இன்னும் வெளிப்படையா கேட்டா, என்னையும் ஹீரோவாக்கிடுவாங்களோன்னு பயமா இருக்கு.

டென்சன் ஆகாதீங்க சார். நான் ஹீரோன்னு சொன்னது, சூப்பர் ஸ்டார் மாதிரி இல்லை.(கொஞ்சம் ஓவர்தான்) மௌனகுரு ஹீரோ சார். எப்படின்னா, ஒருத்தனை சாகடிக்கவும் கூடாது. அவன் பேசுறது யார்கிட்டயும் எடுபடவும் கூடாது அப்படின்னு, பைத்தியம்னு முத்திரை குத்தினாலும் குத்திடுவாங்க. என்ன பண்றது...நாம ஜன நாயக நாட்டுல வாழ்றோம்.

என்ன கொடுமை சரவணா இது.

சனி, 23 ஏப்ரல், 2011

மின் வெட்டு - சில தீர்வுகள்

கடந்த சில ஆண்டுகளாகவே தமிழகத்தில் மின்தட்டுப்பாடு நிலவி வந்தாலும் கோடை காலங்களில் இந்த பற்றாக்குறை உச்சத்தை தொட்டுவிடுகிறது. இந்த ஆண்டு ஏப்ரல் மாதமே சென்னை தவிர்த்த பிற நகரங்களில் ஒரு நாளைக்கு ஆறு முதல் எட்டுமணி நேரம் வரை மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

தினமும் மின்வெட்டு கட்டாயமாக்கப்பட்டதால் நடுத்தரக் குடும்பங்களில் கூட இன்வெர்ட்டர்களை மிக அதிகமாகப் பயன்படுத்த தொடங்கியுள்ளனர். இதனால் சுமார் 20 சதவீதம் வரை மின் நுகர்வு கூடுதலாகும் என்று கூறப்படுகிறது.

ஏப்ரல் மாதமே இந்த அளவு மின் பற்றாக்குறை ஏற்பட இது கூட  முக்கியக் காரணமாக இருக்கலாம். பொதுவாகவே புதிய மின்திட்டங்கள் பலன் தர குறைந்தது 5 வருடங்களாவது ஆகும் என்பது அனைவரும் அறிந்ததே.

அதனால் ஆட்சியாளர்கள் எதிர் அணியினரை குறை கூறுவதை நிறுத்தி விட்டு நீண்டகால நோக்கில் பல முடிவுகளை எடுக்க வேண்டியது அவசியம்.
முதல் காரியமாக வீடுகளில் முற்றிலுமாக குண்டு பல்ப் உபயோகத்தை தடுத்து நிறுத்துவது அவசியம். வசதியானவர்களும், நடுத்தர வருவாய் பிரிவினரும் குண்டு பல்ப் பயன்படுத்துவதை தவிர்த்து விட்டு குழல்விளக்கு, சி.எஃப்.எல் போன்றவற்றை பயன்படுத்தத் தொடங்கி விட்டனர்.

ஆனால் இன்னமும் கிராமங்களிலும், வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவர்களும் நிறையவே குண்டு பல்ப் பயன்படுத்தி வருகிறார்கள். இந்த நிலையை மாற்றுவது அரசுக்கு மிகவும் சுலபமான ஒன்றுதான்.

சி.எஃப்.எல் பல்ப்புகள் குறைவான மின்சக்தியைப் பெற்று குறைவான வெப்பத்துடன் அதிக ஒளியைத் தருவதாக சொல்லப்படுகிறது. அந்த பல்ப்புகள் செயலிழந்த பிறகு பாதுகாப்பான முறையில் அழிக்கப்படவில்லை என்றால் அவற்றிலிருக்கும் பாதரசத்தால் கதிர்வீச்சு அபாயம் ஏற்படும்.

ஆனால் எல்.இ.டி வகை விளக்குகளில் இத்தகைய அபாயங்கள் குறைவுதான் என்று சொல்கிறார்கள். மேலும் அவற்றின் ஆயுளும் சி.எஃப்.எல் பல்ப்புகளை விட அதிகம். எனவே இவற்றை முழு அளவில் உற்பத்தி செய்து ஒரு குடும்பத்துக்கு ஒரு ஆண்டுக்கு இத்தனை என்று மானிய விலையில் விற்பனை செய்யலாம்.

ஒரு வேளை அவை முன்பே பழுதாகி விட்டால் அவற்றை அந்த விற்பனை நிலையத்தில் திரும்பக் கொடுத்துவிட்டு மீண்டும் மானிய விலையிலேயே புதிய எல்.இ.டி பல்ப் வாங்கிக் கொள்ளும் வகையில் வழிசெய்தால் அது மிகப்பெரிய அளவில் பலன் தரும்.

சிறு துளி பெரு வெள்ளம் என்ற பழமொழி இதற்கும் பொருந்தும். நம் நாட்டில் உள்ள மக்கள் தொகைக்கு இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டால் மிகப் பெரிய அளவில் நாட்டின் பொருளாதாரத்திற்கும், சுற்றுச்சூழலுக்கும் பெரிய நன்மை தரும்.

இது தவிர அரசு அலுவலகங்கள், தெரு விளக்குகள் போன்றவற்றில் முழு அளவில் சூரியஒளி மின்சாரத்தின் உதவியுடன் சாத்தியப்படும் இடங்களில் எல்லாம் எல்.இ.டி விளக்குகளைப் பயன்படுத்தினால் மின் பற்றாக்குறைப் பிரச்சனையின் வேகத்தைக் கட்டுப்படுத்தலாம்.

என் வீட்டிலேயே முன்பெல்லாம் இரண்டு மாதங்களுக்கு மின் நுகர்வு 120 முதல் 140 யூனிட் வரை இருந்தது. நான் கம்ப்யூட்டர் வாங்கிய நேரத்தில் வீட்டில் இருந்த குண்டு பல்ப்புகளை சுத்தமாக ஒழித்து விட்டு, சி.எஃஎல் பல்ப் உபயோகத்தை அதிகப்படுத்தினேன். இதற்கு நல்ல பலன் கிடைத்துள்ளது.

இப்போது கம்ப்யூட்டர் உபயோகம் அதிகமான பிறகும் மின்சார நுகர்வின் அளவு இரண்டு மாதங்களுக்கு 150 என்ற அளவுக்குள்தான் பெரும்பாலும் இருக்கிறது. எல்.இ.டி பல்ப்புகள் பயன்படுத்தினால் இன்னமும் மின்சாரம் சிக்கனமாக செலவாகும் என்பது கண்கூடு.

என்னுடைய ஒரு வீட்டுக்கே இப்படி என்றால் நாடு முழுவதும் இப்படி முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டால் எத்தனையோ சதவீதம் மின்சார தேவை குறையும். முக்கியமாக மின்வெட்டே இல்லை என்ற நிலை வந்தால் இன்வெர்ட்டர் பயன்பாடு மிகவும் அத்தியாவசிய தேவையுள்ள இடங்கள் தவிர மற்ற இடங்களில் குறைந்து விடும். இதனாலும் 20 சதவீத அளவுக்கு மின்சாரம் விரயமாவது தடுக்கப்படும்.

இதில் தனிமனிதர்கள் ஆர்வம் காட்டினாலும் செய்து முடிக்க வேண்டிய திறன் அரசுக்குதான் உள்ளது.

அரசு இயந்திரம் செவி சாய்க்குமா?

மின் திருட்டைப் பற்றி இந்தப் பதிவில் எழுதவில்லை. ஏனெனில் அது பெரிய தொடர்கதை.

திங்கள், 21 பிப்ரவரி, 2011

வச்சுகிட்டாய்யா வஞ்சகம் பண்றோம்...

இது வடிவேலுவின் காமெடி வசனம். கடந்த 17,18 (வியாழன், வெள்ளி) இரண்டு நாட்களும் வெளியூர் பயணம் சென்றிருந்தோம். சனிக்கிழமை காலையில் எட்டரை மணிக்கு மேலாகியும் மின்விநியோகம் இல்லை. வழக்கமாக காலை ஆறு மணிமுதல் எட்டரை மணி வரைதானே துண்டிப்பார்கள் என்று நண்பனிடம் விசாரித்தேன்.

அடடே...இப்பல்லாம் தினமும் மூணு மணி நேரம் பியூசை புடுங்கிடுறாங்களே...இது தெரியாம ஒரு எழுத்தாளர்(?) இருக்கலாமா அப்படின்னு ஐஸ் வெச்சுட்டு போயிட்டான். போறதுக்கு முன்னால "இன்னும் ஒரு மாசம் ஆன பிறகு தினமும் நாலு மணி நேரம், அப்புறம் தேர்தல் முடிஞ்சதும் தினமும் அஞ்சு மணி நேரம் ஆப்புதாண்டி..."ன்னு போனஸ் நியூஸ் வேற.

இதைக் கேட்டதும் அப்படியே நான் ஷாக் ஆயிட்டேன்.(கரண்ட்டே இல்ல...அப்புறம் எப்படி ஷாக் அடிக்கும்னு கேட்க கூடாது.)

2008ம் வருஷம் இப்படி தினமும் அஞ்சு மணி நேரம் மின்வெட்டு இருந்தது. காலையில ஆறு மணியில இருந்து ஒன்பது மணி வரை மின் நிறுத்த சேவை தொடங்கும். பிறகு இரவு எட்டு மணி முதல் ஒன்பது மணிவரை. அடுத்த ஆப்பு ரெண்டு மணி முதல் மூணு வரை. மார்கழி மாசத்துல கூட இவ்வளவு சீக்கிரம் எந்திரிச்சிருக்க மாட்டோம். பல பேருக்கு நள்ளிரவுன்னா இப்படி நரக இரவாகூட இருக்கும்னு புரிய வெச்சாங்க. சென்னையில இருந்தா தெரிஞ்சிருக்காது. குடிசை வீட்டுல வாடகைக்கு இருக்குறவன் கூட சென்னையில எதாவது மந்திரி வீட்டுக்கு பக்கத்துல குடி போனாத்தேவலை போலிருக்கேன்னு பொறாமை பட்ட நேரம் அது.

எங்க தெரு பிள்ளையார் கோவில்ல விநாயகர் சதுர்த்திக்கு முதல் நாள் இரவு தோரணம் கட்டுற வேலையில ஈடுபட்டிருந்தோம். பதினைந்து நிமிட நேரத்திற்கான வேலை மீதம் இருந்த நிலையில் இரவு ரெண்டு மணிக்கு பவர் கட். அமாவாசை முடிந்த மூன்றாவது நாள் என்பதால் எதிரில் இருந்தவங்க பல் கூட தெரியாத அளவுக்கு இருட்டு.(வாயை மூடிகிட்டு இருந்துருப்பாங்களோ)

நோக்கியா டார்ச் உபயத்தில் வேலையைத் தொடராமல் இரண்டு தெரு தள்ளி இருந்த மெயின் ரோட்டு டீக்கடைக்கு வந்தோம். 24மணி நேர சர்வீஸ் என்றாலும் ஸ்டவ் எரியும் வெளிச்சத்துடன் ஒரே ஒரு சிம்னி விளக்கு மட்டுமே ஒளி கொடுத்தது. (இருட்டுக்கடை டீ). இந்த லொக்கேஷனுக்கு காரணம், காவல்துறை.

இன்று நண்பன் அதிவிரைவில் அஞ்சுமணி நேரம் கரண்ட் கட் என்றதும் இந்த சம்பவங்கள் நினைவுக்கு வந்துவிட்டன.

தேர்தல் வர்றதுனால கரண்ட் கட் இருக்காதுன்னு ரொம்ப பேர் பேசிகிட்டு இருந்தாங்களே...அப்படின்னு என் சந்தேகத்தை ஒருத்தர்கிட்ட கேட்டேன். அப்படி ஒரு சூழ்நிலையை கொண்டு வரணும்னு அதிகாரத்துல இருக்குறவங்களுக்கும் ஆசையாத்தான் இருக்கும். ஆனா அவங்க வெச்சுகிட்டாய்யா வஞ்சகம் பண்றாங்க?. இப்படி ஒரு பதில் அவர்கிட்ட இருந்து வந்தது. இடுக்கண் வருங்கால் நகுக அப்படின்னு வள்ளுவர் சொன்னதை தமிழருங்க வேத வாக்காவே எடுத்துகிட்டாங்கன்னு எனக்கு தோணுச்சு.

ஒருத்தர் தன் பையனை போட்டு அடி பின்னிகிட்டு இருந்தார். "ஏன் சார்...பரிச்சையில பெயில் ஆயிட்டானா"ன்னு கேட்டேன்.

அட போங்க சார்...அப்படி பெயிலாயிட்டு வந்து பெயிலாயிட்டேனு சொல்லியிருந்தாதான்  சந்தோசப்பட்டிருப்பேனே. இவன் பள்ளிக்கூடத்துலயே சேரலை. ஆனா பெயிலாயிட்டேன்னு புலம்புறான். அப்படின்னு சொல்லிட்டு பையனை மறுபடி வெளுக்க ஆரம்பிச்சுட்டார். (இதைப் படிச்சுட்டு தமிழ் நாட்டுல மின்வெட்டே இருக்காதுன்னு சிலர் வாக்குறுதி கொடுக்குறதை நினைச்சு மனச குழப்பிக்க கூடாது. ஓ.கே)