Search This Blog

பத்திரிகைகளில் பிரசுரமானவை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பத்திரிகைகளில் பிரசுரமானவை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 22 டிசம்பர், 2009

தெரிஞ்ச தொழிலை விட்டவனும் கெட்டான்.தெரியாத தொழிலைத் தொட்டவனும் கெட்டான்.

இதை நாம கண்ணை மூடிகிட்டு நம்ப வேண்டாங்க. ஏன் அப்படின்னு   விளக்கம் சொல்றதுக்கு முன்னால ஒரு சிறிய நகரத்துல நடந்த சம்பவத்தைப் பகிர்ந்துக்குறேன்.
எங்க குடும்ப நண்பர் ஒருத்தர் வேலை பார்த்த இடம் ஒரு பெரிய தனியார் நிறுவனம்.சில ஆண்டுகளுக்கு முன்னால வேற ஊருக்கு மாற்றலாகி குடும்பத்தோட போயிட்டார். அதே ஊரிலேயே அவர் பொண்ணையும் திருமணம் செய்து கொடுத்தார்.

மாப்பிள்ளை - செல்போன் ரீசார்ஜ், உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் கடை வைத்திருந்தார். அக்கம் பக்கத்துல உள்ளவங்க ஆசை வார்த்தையால வாடகை சைக்கிள் கம்பெனியும் நடத்தி வந்தார். செல்போன் தொடர்பான வியாபாரத்துல அவர் ரொம்பவே திறமைசாலிதான். ஆனால் சைக்கிள் விஷயத்தில் பூஜ்யம் என்பதால் ஒரு ஆளுக்கு நிறைய சம்பளம் கொடுத்து அந்தக் கடையை நடத்தி வந்தார். ஆனால் அதில் தொடர்ந்து நஷ்டம் ஏற்பட்டதால் சைக்கிள் கடையை மூடிவிட்டார்.

அது ஏற்படுத்திய பொருளாதார இழப்பினால் பிறகு செல்போன் கடையும் தள்ளாடியது. சைக்கிள் கடையால் பல மாதங்கள் நஷ்டம் வந்திருந்தாலும் நண்பரின் பெண் திருமணமாகிப் போன நேரம்தான் ஒரு கடையை இழுத்து மூடவேண்டியுள்ளது என்று சுற்றத்தார் பேசியிருக்கிறார்கள். இதனால் இரண்டு குடும்பங்களிலும் நிம்மதி இல்லை.

ஒவ்வொரு ஆணின் பின்னாலும் ஒரு பெண் இருக்கிறாள் என்பது உண்மைதான். (உதவியாக இருந்தாலும் சரி, தொந்தரவு கொடுக்காமல் இருந்தாலும் சரி...இரண்டையுமே வெற்றிக்கு காரணமாக இருக்கலாம்.)

ஆனால் முற்றிலும் தெரியாத தொழிலில் ஈடுபட்டுவிட்டு அதில் நஷ்டம்

ஏற்பட்டால் உடனே மனைவி வந்த நேரம்தான், குழந்தை பிறந்த நேரம்தான்னு சொல்லி தப்பிக்கிறவங்களை என்ன செய்யுறது?

தெரிஞ்ச தொழிலை விட்டவனும் கெட்டான்.தெரியாத தொழிலைத் தொட்டவனும் கெட்டான். - இந்தப் பழமொழி குறித்த என்னுடைய கருத்தை சொல்றேன்.

இந்தப் பழமொழிக்கு முக்கிய காரணங்களா சோம்பேறித்தனமும், ஆர்வமின்மையும்தான் இருக்கணும். ஏன்னா, செய்யுற தொழிலை விடுறவன் சோம்பேறியா இருக்கலாம். ஆர்வம் இல்லாதவன்தான் தெரியாத தொழிலை அதனுடைய போக்குலேயே விட்டு நஷ்டப்படுவான்.

பேராசை மற்றொரு காரணமா இருக்கும். நீங்க யோசிச்சுப் பார்க்கும்போதும் ஒரு தொழில் வீழ்ச்சி அடைய பல காரணங்கள் இருக்குறதா தெரியலாம். ஆனா அதுக்கெல்லாம் அடிப்படையா மேலே சொல்லியிருக்குற மூணு காரணங்கள்தான் அதிகமா இருக்கும்.

இது 2008 ஜனவரியில் ஒரு பத்திரிகையில் பிரசுரமான என்னுடைய படைப்பு.

வெள்ளி, 18 டிசம்பர், 2009

பள்ளி மாணவர்களை பலி கொடுக்கத் துணியும் அரசுப்பேருந்து ஓட்டுநர்கள்



திருவாரூர் தெற்கு வீதியில் நகராட்சி அலுவலகம் அருகில் பேருந்து நிறுத்தம் உள்ளது. இங்கு ஆண்கள், பெண்கள் மேல்நிலைப்பள்ளிகள் அருகருகே உள்ளன. பள்ளி முடியும் நேரத்தில் அரசுப்பேருந்துகள் இங்கே நிறுத்தப்படுவது இல்லை.

மாலை நேரங்களில் பேருந்துகளைத் துரத்திச் சென்று மாணவர்கள் ஏமாற்றத்துடன் திரும்புவதும் மாணவிகள் வெகுநேரம் காத்திருந்து நேரங்கழித்து வீடு போய்ச் சேரவேண்டியதும் தினசரி வாடிக்கையாகி விட்டது.

பேருந்து நிறுத்தம் எதிரில் சாலையை இரண்டாகப் பிரித்து போக்குவரத்தை ஒழுங்குபடுத்துவதற்காக தற்காலிக இரும்பு வேலிகள் வைக்கப்பட்டுள்ளன.

மாணவர்களை ஏற்றாமல் செல்வதற்காக, ஓட்டுநர்கள் பேருந்தை இடப்புறத்தை விட்டு வலப்புறமாக மிகவும் வேகமாக ஓட்டிச் செல்கிறார்கள். அப்போது பேருந்தில் ஏற முயலும் மாணவர்கள் தற்காலிக இரும்பு வேலிகளில் அடிபட்டுக் கீழே விழுகிறார்கள். இந்த நிலை தொடர்ந்தால் உயிரிழப்பு ஏற்படுவது அதிகமாகிவிடும்.


அரசு இலவச பஸ் பாஸ் கொடுத்தது மாணவர்களை சவக்கிடங்கிற்கு அனுப்பிவிடுமோ என்று அஞ்ச வேண்டியிருக்கிறது.

இப்படித் தாறுமாறாக வாகனத்தை இயக்கும் ஓட்டுநர்களுக்குக் கட்டுப்பாடுகள் விதித்துக் கண்டித்தால்தான் இளைய சக்தியை அநியாயமாக பலி கொடுக்கும் அவலம் தடுக்கப்படும்.

சம்மந்தப்பட்ட அதிகாரிகள் கவனிப்பார்களா?

ஜனவரி 2006ல் இதை "இளைய சக்தியை இழக்கலாமா" என்ற தலைப்பில் எழுதினேன். இதனால் கிடைத்த ஒரே பலன், சாலைக்கு நடுவே இருந்த தற்காலிக இரும்பு வேலிகளை உடனடியாக அகற்றி விட்டார்கள்.

அரசுப்பேருந்தில் பள்ளி மாணவர்களை ஏற்றிக்கொள்ளும் லட்சணம்தான் எல்லாருக்குமே தெரியுமே. இன்று வரை எந்த ஊரிலும் பெரும்பாலான ஓட்டுநர்களின் அலட்சியப்போக்கு குறையவே இல்லை.