Search This Blog

செவ்வாய், 20 நவம்பர், 2012

ஆங்கில டப்பிங் படங்களால் நன்மையா ? தீமையா?



இப்போது சில மாதங்களாக மீண்டும் நூலகத்தில் இருந்து அதிகமாக புத்தகங்கள் எடுத்து படிக்கத்தொடங்கியிருக்கிறேன். (நேர உபயம் : மின்வெட்டு)

ஈரமான ரோஜாவே பட புகழ் இயக்குனர் கேயார் எழுதிய "இதுதான் சினிமா" என்ற புத்தகத்தை இப்போது மீண்டும் படித்தேன். சினிமா உலகத்தில் இருக்கின்ற படத்தயாரிப்பு மற்றும் மார்க்கெட்டிங் சிக்கல்களை தெளிவாக விளக்கும் புத்தகம் அது. இன்னும் எவ்வளவோ பிரச்சனைகள் இருக்கலாம். அதைப் பற்றி நான் இப்போது பேசவில்லை. நான் சொல்ல வந்த விஷயம் வேறு. அதில் டப்பிங் படங்கள் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்களுக்கு மறைமுகமாக சில சங்கடங்கள் தருவதை பற்றி எழுதியிருந்தார். அதை அப்படியே நான் தட்டச்சினால், யாராவது என் மனம் புண்பட்டுவிட்டது என்று வழக்கு தொடர வாய்ப்பு இருக்கிறதா என்ற அச்சம் இருக்கிறது. அதனால் இத்தோடு நிறுத்திக்குவோம். அது என்ன என்று யோசிப்பவர்கள் அந்த புத்தகம் கிடைத்தால் படித்து தெரிந்து கொள்ளவும்.

இப்போது இந்த புத்ததமிழ் பேசும் ஜாக்கிசான் என்ற தலைப்பில் 2010ஆம் ஆண்டு நான் எழுதிய பதிவை மீண்டும் தூசு தட்டியிருக்கிறேன். இப்போது புதிய பதிவுகள் போடுவதை நான் மிகவும் குறைத்துக்கொள்ள காரணம், இப்போது உள்ள சமுதாய சூழ் நிலைகள் காரணமாக மிகவும் பாதிக்கப்பட்டு திணறும் கோடிக்கணக்கானவர்களில் நானும் ஒருவன். அந்த கோபங்கள் நாகரிகமான வார்த்தைகளாக வெளிப்பட்டால் கூட எந்த பக்கம் வழக்கு பாயுமோ என்ற சந்தேகத்துடன் பொழுதைக்கழிக்க வேண்டியிருக்கிறது. ஏன் இந்த வம்பு. இந்த நந்தன தமிழ் வருடம் முடியும் வரை அமைதி காப்போம். அதன் பிறகு இணையத்தில் எழுதுபவர்களின் கழுத்தை நெறிக்கும் சட்டப்பிரிவில் உரிய நியாயமான மாற்றம் உரிய சட்டப்படி உருவாகும் என்று நம்புவோம்.

இப்போது 2010ஆம் ஆண்டு நான் எழுதிய பதிவின் மீள்பிரசுரம்.

********************************************************


சமச்சீர்கல்விக்கும் ஆங்கிலத்திரைப்படத்துக்கும் தொடர்பு  இருக்கா?...


இருக்கே. பள்ளிக்கூடங்கள்ல இருக்குற பாடத்திட்டத்துக்கும் தமிழ் பேசுற ஆங்கிலப்படங்களுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கே.

நீ எந்த பதிவு போட்டாலும் சினிமாவைத்தொடாம எழுதமாட்ட போலிருக்கேன்னு வீட்டுக்கு ஆட்டோவை அனுப்பிடாதீங்கப்பா.

ஒரு பட்டிமன்றத்துல கு.ஞானசம்மந்தன் அவர்கள், "வரவர ஜாக்கிசான் ரொம்ப அழகா தமிழ் பேசுறார். போற போக்கைப் பார்த்தா பட்டிமன்றத்துக்கு நடுவரா அவர் வந்து உட்கார்ந்துடுவார் போலிருக்கே."ன்னார். அதைக் கேட்கும் போது காமெடியாத்தான் இருந்துச்சு.

ஆனா இப்போ அதனால நமக்கு சில சங்கடங்கள் நமக்குத்தெரியாமலேயே இருக்குறது கொஞ்சம் அதிர்ச்சி அளிக்கிற செய்திதான்.

சில தினங்களுக்கு முன்பு புதியதலைமுறை வாரஇதழில் 2010 ஆண்டு எப்படி இருக்கும் என்று ஒவ்வொரு துறையில் உள்ளவர்களிடமும் நேர்காணல் செய்திருந்தார்கள்.

தமிழ்த்திரைப்படத்துறையில் FEFSI தலைவர் வி.சி.குகநாதன்,"ஹாலிவுட் படங்களை அந்த மொழியிலேயே வெளியிடுங்கள். அதன் மூலம் அடிமட்ட ரசிகனும் தன் ரசனையை வளர்த்துக்கொள்ளட்டும். அதைவிட்டுவிட்டு யாரோ ஒரு ஆங்கிலேயனின் வாயசைப்பில் தமிழைத்திணித்து தமிழ் மொழிக்கு களங்கம் ஏற்படுத்திக்கொண்டிருக்கிறார்கள். 2010ம் வருடத்தில் அதைக் கட்டுப்படுத்தவேண்டிய கட்டாயம், தமிழ் சினிமாவிற்கும் தமிழ் சினிமா இளைஞர்களுக்கும் ஏற்பட்டிருக்கிறது."என்று கூறியிருந்தார்.

இதை வெறும் சினிமா தொடர்பான விஷயமாக மட்டும் பார்க்கக்கூடாது.

சமச்சீர்கல்வி பிரமாதம். கலக்கப்போகுதுன்னு ஆளுங்கட்சியும் அதனுடைய ஆதரவாளர்களும் சொல்றாங்க. எதிர்க்கட்சியும் அவங்களைச்சேர்ந்தவங்களும் இது சரியில்லைன்னு வசை பாடுறாங்க. இவங்க எது சூப்பர்னும் விளக்கலை. அவங்க எது சரியில்லைன்னும் சொல்லலை.

நடுவுல என்னை மாதிரியான அப்பாவிகள் மண்டைதான் காயுது.

இப்போது சமச்சீர்க்கல்வித்திட்டத்தின் நிறைகுறையை அலசி ஆராயும் அளவுக்கு நான் பெரிய படிப்பாளி இல்லை. ஆனால் சிறப்பிடம் பெறும் மாணவர்கள் அளவுக்கு அரசுப்பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் திறனையும் மேம்படுத்தும் வ்கையில்தான் பாடத்திட்டம் இருக்க வேண்டுமே தவிர நன்றாகப் படிக்கும் மாணவர்களை நீ, நிறைய அரசுப்பள்ளி மாணவர்களைப் போல் எழுபது சதவீதம் எடுத்தால் போதும் என்று கீழே பிடித்து இழுக்கும் வகையில் சமச்சீர் கல்வி அமையக்கூடாது என்று மட்டும் என்னால் உறுதியாக சொல்ல முடியும்.

இலவசமும் இப்படித்தான். ஒரு பொருளை காசு கொடுத்து வாங்குற அளவுக்கு 
ஒருத்தனை பொருளாதார வலு உள்ளவனா மாத்துறதை விட்டுட்டு இலவசம் கொடுத்து ஒரு அடிமையாவே வெச்சிருக்குறதுக்கு உதாரணம் சொல்றேன்.இது வண்ணத்துப்பூச்சி புழு உருவமா இருக்கும்போது அதுக்கு உதவி செய்யுறதா நினைச்சு கூட்டை  உடைக்கிறதும்  இலவசம் கொடுக்குறதும் ஒண்ணுதான்.

தன்னால கூட்டை விட்டு வெளியில வர்ற வண்ணத்துப்பூச்சியாலதான் பறக்க முடியும். நாமே கூட்டை உடைச்சு அதை வெளியில விட்டா எதுக்கும் பிரயோசனமில்லாம உயிரிழக்க வேண்டியதுதான்.

******

நான் 1996க்குப் பிறகு சில ஆண்டுகள் பத்தாம் வகுப்பு முதல் கல்லூரி செல்லும் வரை அவ்வப்போது பகுதிநேரமாக திரையரங்குகளில் பணியாற்றி வந்தேன்.(பார்த்ததே பகுதி நேரம். இதுல என்ன அவ்வப்போது?...அதையும் தொடர்ந்து பார்க்கலைன்னு அர்த்தம்.)

அதில் ஒரு தியேட்டரில் The Rock, Broken Arrow, Independence day, Golden Eye, Tommorow never dies, Air Force One, Universal Soldire, Jumanji, Evil Dead, Anaconda, The Lost World(jurassic park 3) உட்பட பல படங்களைத் திரையிட்டாங்க.

அந்தப் படங்கள்ல வர்ற வசனங்களோட உச்சரிப்பு பாதி புரியாது. ஆனா ஓரளவுக்கு வசனங்களுக்கு அர்த்தம் விளங்கிடுச்சு. அடுத்து 2000வது ஆண்டு
வாக்கில் கேபிள் டிவி கண்ட்ரோல் ரூம்ல வேலை செய்த நாட்கள்ல Star Plus சேனலில் அமிதாப் தொகுத்து வழங்கிய குரோர்பதி நிகழ்ச்சியை நான் தொடர்ந்து பார்ப்பேன்.அப்போதும் எனக்கு ஓரளவு ஆங்கில அறிவு மேம்பட்டதை உணரமுடிஞ்சது.

நான் கல்லூரி இறுதியாண்டு படிக்கும்போது 2003ல உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்ற சமயம். எனக்கு கிரிக்கெட் மேல ஆர்வமே இல்லன்னாலும் அப்போ நான் போட்டிகளைப் பார்க்க ரெண்டு காரணம் இருந்தது.இந்தியா ஆஸ்திரேலியாகிட்ட தவிர வேறு யார்கிட்டயும் தோற்காம இறுதிப்போட்டிக்கு முன்னேறினது முதலாவது காரணம்.

அடுத்தது வேற என்ன...மந்த்ராபேடிதான். அந்தம்மா(?!) கிரிக்கெட் பத்தி அரைகுறையா புரிஞ்சுகிட்டு ஆர்வக்கோளாறுல தப்புதப்பாதான் கேள்வி கேட்கும். ரொம்ப பேர் அதைக் கேட்டாங்களோ இல்லையோ...அம்மணியோட தரிசனத்தை நல்லாவே பார்த்தாங்க.

எங்க கல்லூரி ஆசிரியர் ஒருத்தர்தான் மந்த்ராபேடி பேசுறதை டிவியில பாருங்கன்னு சொன்னார்.நாங்க எல்லாரும் சட்டுன்னு சிரிச்சுட்டோம்.

"நான் பார்க்கசொன்னது அந்த அம்மாவோட ஆங்கிலத்துக்காக. போட்டுருக்குற டிரஸ்சுக்காக இல்லை." அப்படின்னார்.

நான் கொஞ்சம் ஆர்வமா, சார்..அந்தம்மா தப்புத்தப்பால்ல கிரிக்கெட்டைப்பத்தி பேசுது. அப்போ அந்த இங்கிலீஷ் எந்த கதியில இருக்குமோன்னு கேட்டேன்.

எதுவுமே தெரியாத உங்க மாதிரி புத்திசாலிங்களுக்கு அந்த இங்கிலீஷ் போதும்  
அப்படின்னு சொல்லி, கோ எஜுகேஷன் வகுப்புல மானத்தை வாங்கிட்டார்.

இந்த கேலி கிண்டலை எல்லாம் பொருட்படுத்தாம முயற்சி பண்ணினா நிச்சயமா ஆங்கிலத்தை கண்டிப்பா கத்துக்க முடியும்.

ஜெர்மனி, ரஷ்யா, ஜப்பான், சீனா இங்க எல்லாம் ஆங்கிலத்தை நம்பியா இருக்காங்கன்னுதானே நீங்க கேட்குறீங்க. அங்க எல்லாம் நாடு பூராவும் ஒரே மொழிதான். ஆனா நம்ம நாட்டுல சிவில் சர்வீஸ் நேர்முகத்தேர்வுல கலந்துக்க தலைநகர் போனா வழியில குறைந்தது ஆறு மொழியாவது கத்துக்க வேண்டிய நிலை. எத்தனை மொழி கத்துக்குறோமோ அத்தனை மனிதனுக்கு சமம்னு சொல்லுவாங்க.

அதுக்கு நேரம் ஒதுக்க எல்லாராலயும் முடியாது.அதனால நம்ம நாட்டுல எல்லாரும் ஆங்கிலத்தை இணைப்புப்பாலம் மாதிரி பயன்படுத்துற அளவுக்கு கத்துக்குறது அவசியம். அதாவது ஒவ்வொருவருக்கும் தன்னுடைய தாய்மொழி, ஆங்கிலம் இரண்டும் கட்டாயம். அதுக்கு மேல அவங்கவங்க திறமையைப் பொறுத்து கத்துக்கலாம்.

******

1 கருத்து:

  1. நல்ல பகிர்வு...மொழிகள் நிறைய தெரிந்து வைத்து கொள்வது அவசியம் தான்.

    பதிலளிநீக்கு