Search This Blog

புதன், 7 நவம்பர், 2012

விநியோகத்தில் குளறுபடிகள்

மத்திய அரசு மண்ணெண்ணை ஒதுக்கீட்டை குறைத்துவிட்டது என்று காரணம் கூறி குறைந்தது 30 சதவீதம் குடும்ப அட்டைதாரர்களுக்கு பட்டை நாமம் சாத்தும் போக்கு உத்தேசமாக 2011ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதலாக இருக்கலாம். அப்போது முதல் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வரும் ஒரே விசயம், 10 லிட்டர் கொடுத்த இடத்தில் 7லிட்டர், 6 லிட்டர் கொடுத்த இடத்தில் 5 லிட்டர், 3 லிட்டர் கொடுத்த இடத்தில் 2 லிட்டர் என்று குறைத்து தகுதியுள்ள எல்லா கார்டு தாரர்களுக்கும் இல்லை என்று சொல்லாமல் வழங்க வேண்டும் என்பதுதான். (பல கிராமங்களில் எப்போதுமே 2 லிட்டர்தான். அது வேறு விசயம்)

ஆனால் அரசு எந்திரம் எந்திரமாகவே நடந்து கொள்கிறதோ என்று வேதனைப்பட வைக்கும் அளவுக்கு கிட்டத்தட்ட ஒண்ணேகால் வருடமாக மண்ணெண்ணைக்காக தொடர்ந்து மக்களை சாலைமறியலில் ஈடுபட வைக்கும் அளவுக்கு விநியோக முறை குளறுபடியாக இருந்தது. இதில் என்னுடைய அனுபவத்தை முதலில் சொல்கிறேன். 1997ஆம் ஆண்டு திருவாரூர் மாவட்ட தலைநகரமாக ஆனது. அப்போதெல்லாம் சம்மந்தப்பட்ட (கிராமங்களைப் போல்) ரேசன் கடைகளிலேயே மண்ணெண்ணை வழங்கினார்கள். பிறகு திருவாரூரை இரண்டு பகுதிகளாக பிரித்து பைபாஸ் ரோட்டில் ஒன்றும், காகிதக்காரத்தெருவில் ஒன்றும் என இரண்டு மண்ணெண்ணை பங்க் அமைக்கப்பட்டது. அந்த ஆண்டு எனக்கு நினைவில்லை. அதன்பிறகு மாவட்ட தலைநகரம் என்ற கணக்கில் 10 லிட்டர் மண்ணெண்ணை வழங்கப்பட்டது. பிறகு எப்படியோ வில்லங்கம் ஆரம்பித்து மாதத்தில் 5 நாட்கள் கூட உருப்படியாக மண்ணெண்ணை வழங்காமல் திருவிழா கூட்டம் போல் மக்களை கூடி அடிதடியில் இறங்க வைத்தார்கள்.

2001-2002 ஆம் ஆண்டு வாக்கில் மண்ணெண்ணை வாங்க போய் வரிசையில் நின்றால் குறைந்தபட்சம் 5 மணி நேரம் ஆகும். நான் அப்படி வரிசையில் காத்து நிற்கும் நேரத்தில்தான் பொன்னியின் செல்வன் நாவலின் 5 பாகங்கள் உட்பட பல கதைப்புத்தகங்களை (வெவ்வேறு மாதங்களில்) படித்து முடித்தேன். பிறகு 2004ஆம் ஆண்டில் ஒரு நாளைக்கு 200 கார்டுக்கு மண்ணெண்ணை என்ற சுழற்சி முறை அறிமுகப்படுத்தப்பட்டது.

அதுவரை ஒரு நாளில் எவ்வளவு பேர் வருவார்கள் என்று தெரியாமல் எப்படி எந்த பணத்தை கட்டி மண்ணெண்ணை வாங்கி வைக்க முடியும் என்று சாக்குப்போக்கு சொல்லி தப்பித்துவந்தவர்களுக்கு சுழற்சி முறை மிகப்பெரிய ஆப்பு வைத்தது. ஒவ்வொரு மாதத்தின் முதல் திங்கள் கிழமையா?. அன்று உள்ள 200 கார்டில் 10 லிட்டர் எத்தனை கார்டுகளுக்கு, 3 லிட்டர் எத்தனை கார்டுகளுக்கு என்று துல்லியமாக தெரிந்துவிடுவதால் அதிகமாக ஏமாற்றி பொய் கணக்கு எழுத முடியாமல் போயிருக்கும்.

ஆனால் பொதுமக்களுக்கு இந்த முறை மிகப்பெரிய வரப்பிரசாதம். குறைந்தபட்சம் 10 நிமிடம் முதல் 30 நிமிடத்திற்குள் மண்ணெண்ணை கிடைத்து விடும். இப்போது கடந்த ஆண்டு மத்திய அரசின் ஒதுக்கீடு குறைந்ததை காரணம் காட்டி, பேருந்தில் முதலில் ஏறுபவருக்கு உட்கார இடம் என்ற பாணியில் 5ஆயிரம் கார்டுதாரர்களும் நள்ளிரவு 1 மணிக்கே வந்து வரிசையில் நின்று  மண்ணெண்ணைக்காக போராடி அடிதடியுடன் வரிசையில் நிற்க வேண்டிய அவல நிலைக்கு தள்ளப்பட்டார்கள்.

இந்த கலவரத்தை அடக்க மாவட்ட நிர்வாகம் போலீசாரை அனுப்பி வைத்ததுடன் விநியோகமுறையை ஒழுங்கமைக்க உருப்படியான நடவடிக்கை எடுக்கவில்லை. போலீசாருக்கு இது போன்ற வேலைகள் எல்லாம் கூடுதல் பணிச்சுமையாகத்தான் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

இந்த மாதிரி பொருட்கள் எல்லாம் எனக்கு மானிய விலையில் தேவையில்லை, நான் உழைத்து சம்பாதித்துக்கொள்கிறேன் என்ற மனநிலைக்கும் என்னால் செல்ல முடியவில்லை. தினசரி இரண்டு முதல் 4 மணி நேரம் மட்டுமே மின்சார விநியோகம் இருப்பதால் என்னால் ஒரு நாளைக்கு 50 ரூபாய் சம்பாதிப்பதே பெரும்பாடாகிவிருகிறது. இந்த நிலையில் இப்படி பொதுவிநியோகத்திட்டத்தில் கிடைக்கும் பொருளுக்கு கையேந்தி நாள் முழுவதும் காத்துக்கிடந்தாலும் கிடைக்குமா கிடைக்காதா என்று ஜோசியம் பார்க்க வேண்டிய நிலை.

என்னமோ அரசு எந்திரம் எல்லா விசயத்துலயும் அச்சடிச்சு கையெழுத்து போட்ட ரூல்ஸ் படிதான் செயல்படுற மாதிரியும், வாய்மொழி உத்தரவே எந்த அமைச்சரும், அதிகாரியும் போடாதமாதிரி நடந்துகிட்டாங்க. ஆனால் இப்போது நவம்பர் 2012 ஆம் ஆண்டு மண்ணெண்ணை வழங்கும் இடத்தில் 10 லிட்டர் கார்டுதாரர்களுக்கு 7 லிட்டரும், 3 லிட்டர் கார்டுதாரர்களுக்கு 2 லிட்டரும் மட்டுமே வழங்கப்படும் என்று எழுதி போட்டிருக்கிறார்கள். அதன்படிதான் வழங்குகிறார்கள். அப்புறம் என்ன ...............த்துக்கு எல்லா கார்டுதாரர்களையும் ஒரே நாளில் கூடி கும்மி அடிக்க விடுகிறார்கள் என்று தெரியவில்லை. நேற்று 6-11-2012 அன்று எனக்கு தெரிந்த ஒருவர் காலையில் ஒன்பதரை மணிக்கு சென்று பகல் 1 மணிக்குதான் வாங்கியிருக்கிறார். பெண்கள் என்றால் கூட்டத்திற்கு கேட்கவே வேண்டாம். அதிகாலை 3 மணிக்கு சென்று வரிசையில் நின்றவர்கள் பகல் 11 மணிக்கு வாங்கியிருக்கிறார்கள்.

வழங்கும் அளவைக் குறைத்தபிறகும் பழையபடி சுழற்சி முறையில் ஒவ்வொரு வாரமும் அந்த நாளில் வழங்கப்பட்ட 200 கார்டுதாரர்களுக்கு மட்டும் வழங்க வேண்டியதுதானே?

அவ்வளவு சீக்கிரம் செஞ்சுடுவாங்களா என்ன? ஏற்கனவே கடந்த ஒரு வருசமா ஒரு மாசத்துல ஆயிரம் பேருக்கு மண்ணெண்ணை பற்றாக்குறையா வந்திருந்தா இவங்க ஆயிரத்து ஐநூறு பேருக்கு கொடுக்காம ஆட்டைய போட்டிருக்க வாய்ப்பு இருக்கு. இப்போ பழையபடி சுழற்சி முறையில கொடுக்க ஆரம்பிச்சதும் வடைபோச்சேன்னு கவலையாத்தான் இருக்கும்.

ஒருவேளை இந்த மாச தில்லுமுல்லு மூலமா கிடைக்குற பணத்துக்கு தீபாவளி பட்ஜெட் போட்டு கடன் வாங்கி செலவழிச்சிட்டாங்களோ என்னவோ? அப்படி எல்லாம் இல்லைன்னு சொன்னா, எல்லா பொதுமக்களையும் ஏன் ஒரே நாள்ல வரவெச்சு அவனவன் வேலையை விட்டுட்டு வந்து நாள் பூராவும் காத்துக்கிடக்க வெக்கிறீங்கன்னு எனக்கு உண்மை தெரிஞ்சுக்க ஆசையா இருக்கு.

ஆனா ஒண்ணு சார், ரேசன் பொருள் வாங்குறவங்க, அரசாங்க  அலுவலகங்கள்ல ஏதாவது வேலை முடிய வேண்டியவங்க எல்லாம் வேற வேலை எதுவும் இல்லாம வெட்டி ................னுங்கன்னு ஒரு நினைப்பு அரசுப்பணியாளர்கள்ல பலருக்கு இருக்குறதை யாரும் மறுக்க முடியாது. ரொம்ப கூலா, நாளைக்கு வாங்க பார்த்துக்கலாம்னு  இந்த ரெடிமேட் பதில் சொல்லாத அரசுப்பணியாளர்களை விரல்விட்டு எண்ணிடலாம். இந்த கேவலமான நிலை இப்போதைக்கு மாறும்னு தோணலை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக