Search This Blog

வியாழன், 29 நவம்பர், 2012

ஜெமினி



பொதுவாக சிறைத்தண்டனை என்பது தவறிழைத்தவர்கள் தங்கள் தப்பை உணர்ந்து திருந்தச்செய்வதாக இருக்க வேண்டும். ஆனால் நடைமுறையில் அது எந்த அளவுக்கு சாத்தியப்பட்டிருக்கிறது? இதற்கான சின்ன விளக்கம் 10 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான ஜெமினி திரைப்படத்தில் இரு வரி வசனத்தில் சொல்லப்பட்டிருந்தது.

மிக ஜாலியான எண்டர்டெயின்மெண்ட் படம் என்று ஒரு சாரரும், இந்த மாதிரியான மசாலா படங்கள் தொடர்ந்து வந்தால் தமிழ் சினிமாவின் உலகத்தரம் கெட்டுவிடும் என்று பலதரப்பட்ட கருத்துக்கள் வெளிவந்தன. இப்போது அதைப்பற்றி நான் பேசப்போவதில்லை. அந்த படம் தொடர்பாக நான் எழுதிய பழைய பதிவு உங்கள் பார்வைக்கு.
******************************


ஓ போட்ட ஜெமினி படம் சாதாரண மசாலாதான். அந்தப் படத்துலயும் நல்ல மெசேஜ் நிறையவே இருக்குங்க. வெறும் பாடல்களால மட்டும் அந்தப்படம் நல்லா ஓடலை. கலாபவன்மணியோட மிருகக்குரல் மிமிக்ரியும் படத்தோட அதிரடி வெற்றிக்கு முக்கியக் காரணம்னு விக்ரமே ஒத்துக்குவார். இந்தப் படத்தின் இயக்குநர் பெயரும் "சரண்" (அவரோட முழுப்பெயர் சரவணன்னு சொல்றாங்க.) - தயாரிப்பாளர் ஏ.வி.எம் சரவணன்  அப்படிங்குறதுல சின்ன சந்தோஷம்.


முதலில் சில நகைச்சுவைக் காட்சிகளைப் பற்றி சொல்லிவிடுகிறேன்.

ஜெமினியில் தேஜாவின் கையாள் ஒருவர், "இந்த சரக்கை மட்டும் அப்படியே கை மாத்தி விட்டா கோடி ரூபாய் ஓடி வரும்." என்பார்.

உடனே தேஜா அந்த ஆளிடம்,"நீ எவ்வளவு படிச்சிருக்க?" என்று கேட்பார்.

"ரெண்டாங்கிளாஸ்" என்று சொல்லும் ஆளின் முகத்தில் தெரியும் பூரிப்பை பார்க்க வேண்டுமே.அடா...அடா... வில்லன் சம்மந்தப்பட்ட காட்சி என்பதை மறந்து காமெடிக்காட்சியைப் போல் படமாக்கியிருப்பார்கள்.

அதற்கு தேஜா கொஞ்சம் கூட சிரிக்காமல், "நம்ம கேங்லயே அதிகமா படிச்சுட்டோம்னு திமிர்ல பேசுறியா"ன்னும்பார். பெரிய நகைச்சுவை நடிகர்களின் காட்சிக்கு சவால் விடும் வகையில் சிரிப்பை ஏற்படுத்தும்.

கமிஷனர், ஜெமினி, தேஜா இருவரையும் ஒரு செல்லில் அடைத்து வைத்திருப்பார்கள். ரொம்பவும் வெறுத்துப் போன ஜெமினி,"திருந்தித் தொலையேண்டா"என்று தேஜாவைப் பார்த்து சொல்வார்.

அதற்கு தேஜா,அவர் இடுப்பின் இரு புறமும் கைகளை ஊன்றிக் கொண்டு,"நான் என்ன தப்பு பண்ணினேன்...இப்ப திருந்த சொல்ற..."என்று கேட்கும்போது ஒரு அப்பாவித் தனம் தெரியும்.

இது மாதிரி வில்லன் வரும் காட்சிகள் அனைத்தையும் நகைச்சுவையுடனேயே படமாக்கியதற்கு சேர்த்து ஒரு ஆப்பு வெச்சாங்க பாருங்க...வெறுத்துப் போயிட்டேன். எதை சொல்றேன்னு புரியலை?

படத்துல காமெடி நடிகர்கள் நடிச்ச காட்சிகள்தான். அந்த மாதிரி மொக்கையை நான் எதிர்பார்க்கவே இல்லை.

அது கிடக்கட்டும்.

நான் சொல்ல வந்த விஷயம் வேற. நல்ல கமிஷனரா வர்ற மலையாள நடிகர் முரளி,"குற்றவாளிகளைத் திருத்துறதுக்குதான்  சிறைச்சாலைன்னா தண்டனை முடிஞ்சு வர்ற நபர்கள் தவறு செய்யக்கூடாது...

ஆனா நிஜத்துல அப்படி நடக்குறது இல்லையே. ஏன் அப்படி?

சட்டம்னுங்குறது ஃப்ரிட்ஜ் மாதிரி ஆயிடுச்சு. தண்டனை அனுபவிக்க உள்ள போறவங்க வெளியில வரும்போது எந்த மாற்றமும் இல்லாம அப்படியே  ஃப்ரெஷ்ஷா வந்து கிரைம் பண்றாங்க.சமூகமும் சில அதிகாரப் பொறுப்புகளும் அவங்க திருந்தி வாழ்றதை அனுமதிக்கிறது இல்லை.  இந்த நிலைமையை மாற்ற எதோ என்னாலான முயற்சி. அவங்க திருந்த வாய்ப்பு ஏற்படுத்தி தர்றேன்."அப்படின்னு சொல்வார்.

எல்லாரும் ரொம்ப யோசிக்க வேண்டிய விஷயங்க இது.

நான் இந்தப் படத்தைப் பார்க்கும்போது கிரணைப் பார்த்து ஜொள் விடாம சமர்த்துப்பிள்ளையா இருக்கேன்னு இப்பவாச்சும் நம்புறீங்கிளா?

வேலூர் சிறைச்சாலையும் குற்றவாளிகளை மாற்ற, தொழிற்சாலையாக மாறி வரும் விஷயம் தினமலரில் வெளிவந்துள்ளது.

அந்த செய்தி கீழே...

வேலூர்: வேலூர் ஆண்கள் சிறையில் குற்றவாளிகளுக்கு தொழில் பயிற்சி அளிக்கப்பட்டு, தொழிற்சாலையாக மாறி வருகிறது.வேலூர் தொரப்பாடியில் பிரிட்டிஷ்காரர்கள் காலத்தில் 1867ம் ஆண்டு அமைக்கப்பட்ட மத்திய சிறை, தமிழகத்தில் முதல் சிறை என்ற பெருமை உடையது. இந்த சிறையில் 2,130 கைதிகள் நிரப்பும் வசதிகள் உள்ளன.


சென்னையில் புழல் சிறை துவங்கப்பட்டதால், தற்போது, இங்கு 935 கைதிகள் உள்ளனர். ஆயுள் தண்டனை கைதிகள் 215 பேரும், ஐந்து முதல் பத்து ஆண்டு தண்டனை பெற்ற கைதிகள் 230 பேரும் உள்ளனர்.தண்டனை அனுபவிக்கும் இடமாக இருந்த சிறைச்சாலை தற்போது, தொழிற்சாலையாக மாறி வருகிறது. இங்கு ஷூ, அட்டை ஃபைல், மெழுகுவர்த்தி, பாண்டேஜ் துணி, டெய்லரிங் போன்ற தொழிற்பயிற்சிகள் ஆயுள் தண்டனை கைதிகளுக்கு அளிக்கப்பட்டு வருகிறது.தொழிற்பயிற்ச்சி பெற்ற கைதிகள் மூலம் ஷூ, அட்டை ஃபைல், மெழுகுவர்த்தி, பாண்டேஜ் துணி ஆகியவை தயார் செய்யப்படுகிறது. கைதிகள் தயாரிக்கும் பொருட்களுக்கு ஏற்ப சம்பளம் வழங்கப்படுகிறது.


* ஷூ தொழிற்சாலை: தமிழகத்தில் வேறு எந்த சிறையிலும் ஷூதயாரிக்கும் தொழிற்சாலை இல்லை. பிரிட்டிஷ்காரர்கள் காலத்தில் துவங்கப்பட்ட ஷூ தயாரிக்கும் தொழிற்சாலையில் இது வரை 10 லட்சம் ஷூக்கள் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்தாண்டு 50 லட்சம் மதிப்புள்ள 20 ஆயிரம் ஜோடி ஷூக்கள் தயாரிக்க ஆர்டர் பெறப்பட்டு அனைத்தும் மூன்று மாதத்தில் செய்து முடிக்கப்பட்டது.இந்த ஷூக்கள் போலீஸ், தீயணைப்பு துறை, சிறைத்துறையில் மூலம் ஆர்டர் பெறப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. ஷூ தயாரிப்பு பணியில் 100 கைதிகள் வேலை பார்க்கின்றனர். ஒரு நாளைக்கு 300 ஷூக்கள் தயாரிக்கப்படுகிறது.இதற்காக 60 லட்ச ரூபாய் மதிப்பில் வெளி நாட்டில் இருந்து இரு இயந்திரங்கள் வாங்கப்பட்டுள்ளது. மூன்று நிலைகளில் ( நன்றாக வேலை செய்பவர், கொஞ்சம் வேலை செய்பவர், புதியதாக வேலை செய்பவர் ) என்று தரம் பிரிக்கப்பட்டு மாதம் 600 ரூபாய், 800 ரூபாய், 1,500 ரூபாய் வரை கூலி வழங்கப்படுகின்றது.இதில், 40 சதம் இயந்திரத்தின் மூலமும், 60 சதம் கையாலும் தயாரிக்கின்றனர். காலை 7.30 மணி முதல் பகல் 11.30 வரை, மதியம் 1.30 முதல் மாலை 4. 30 வரையில் பணி நடக்கிறது.பணி நேரத்தில் இரு முறை சிறைத்துறை நிர்வாகம் சார்பில் கைதிகளுக்கு டீ கொடுக்கின்றனர்.


* டெய்லரிங் யூனிட்: இங்கு 26 தையல் மிஷின்கள் உள்ளது. 33 பேர் வேலை செய்கின்றனர். ஜாக்கெட், சுடிதார் தைக்கின்றனர். நல்ல லாபம் தரும் இந்த தொழிலை செய்து வந்த பத்து பேர் விடுதலையாகியதும் சொந்தமாக கடை வைத்துள்ளனர்.


* ஃபைலிங் பேட் யூனிட்: இங்கு 75 பேர் வேலை செய்கின்றனர். ஒரு நாளைக்கு 3,000 வீதம் ஒரு மாதத்திற்கு ஒரு லட்சம் ஃபைல் பேடு செய்கின்றனர். அரசு அலுவலகங்களுக்கு மட்டும் விற்பனை செய்யப்படுகிறது.இந்தாண்டு 5 லட்சம் ஃபைல் பேடுகள் சப்ளை செய்ய ஆர்டர் பெற்றுள்ளனர். மாதம் 750 ரூபாய் வரை சம்பாதிக்கின்றனர்.


* மெழுகு வர்த்தி யூனிட்: மூன்று பேர் வேலை செய்கின்றனர். இங்கு தயார் செய்யப்படும் மெழுகு வர்த்திகள் வேலூர் ரோட்டரி சங்கம் மூலம் விற்பனை செய்யப்படுகிறது.


* பவர் லூம்: நான்கு பவர் லூம்கள் உள்ளன. பத்து பேர் வேலை செய்கின்றனர். அரசு மருத்துவமனைகளுக்கு பாண்டேஜ் துணி தயாரித்து சப்ளை செய்கின்றனர். மாதம் 8,000 மீட்டர் பாண்டேஜ் துணி தயாரிக்கின்றனர். ஒரு மீட்டர் விலை 12 ரூபாய். இங்கு பணிபுரியும் கைதிகள் மாதம் 1,500 வரை சம்பளம் பெறுகின்றனர்.


வேலூர் மத்திய ஆண்கள் சிறை கண்காணிப்பாளர் சேகர் கூறியதாவது:இங்குள்ள மினி தொழிற்சாலையில் வேலை பார்ப்பவர்கள் பெரும் பாலும் ஆயுள் தண்டனை மற்றும் நீண்ட காலகைதிகள். ஒரு கமிட்டி மூலம் தேர்வு செய்து பயிற்சிகள் கொடுத்து வேலைக்கு அனுப்புகின்றோம்.நிறைய ஆர்டர்கள் வருகிறது. இவர்கள் சம்பாதிக்கும் பணம் இவர்கள் கணக்கில் வரவு வைக்கப்படும், இவர்கள் குடும்பத்தினருக்கும், குழந்தை படிப்பு செலவுக்கும் மாதா, மாதம் அனுப்பப்படுகிறது. ஆர்வத்துடன் கைதிகள் வேலை பார்க்கின்றனர்.வேலூர் மத்திய சிறையில் அமைக்கப்பட்டுள்ள தொழிற்சாலைகள் மூலம் வேலை வாய்ப்பு, கல்வி, தோட்டம் பராமரிப்பு போன்றவை அளிக்கப்படுகிறது. விடுலையாகி வெளியே செல்லும் கைதிகள், இந்த பயிற்சி மூலம் யாரையும் எதிர் பார்க்காமல் சுய தொழில் செய்ய அவர்களுக்கு வசதியாக அமையும்.இவ்வாறு அவர் கூறினார்.

எதிர்பாராவிதமாக தவறிழைப்பவர்கள் தண்டனையை அனுபவித்த பிறகு வெளியில் வந்து மக்களோடு மக்களாக வாழும் வழி இருந்தால் அவர்கள் தவறான பாதையையே வாழ்க்கையாக்கிக் கொள்ள மாட்டார்கள்.

2 கருத்துகள்:

  1. இந்த விசயம் நல்லாத்தான் இருக்கு எந்த வேலையும் செய்யத்தெறியாம ஊழல் செய்து உள்ளே போகும் அரசியல்வாதிகளுக்கும் ஏதாவது பயிற்சி அளித்து ஊழல் பணத்தில் மிகச்சிறு பகுதியாவது மீட்டால். அரசுக்கும் நல்லது வெளியே போய் ஏதாவது தொழில் செய்து பிழைக்கலாமானு யோசிக்கவாவது செய்வாங்க.

    பதிலளிநீக்கு
  2. வேலூர் சிறைச்சாலை பற்றிய உங்கள் தகவலுக்கு நன்றி.இதன்மூலம் தண்டனைக்குட்பட்டவர்களின் குடும்பங்களும் பயன்பெறுவர்

    பதிலளிநீக்கு