Search This Blog

செவ்வாய், 14 செப்டம்பர், 2010

வன்முறை ஒருபோதும் தீர்வு ஆகாது

கிருஷ்ணகிரி அருகே உள்ள பள்ளியில் அந்த கல்வி நிறுவனத்தின் பேருந்து மோதி மாணவன் உயிரிழந்த சம்பவம் மிகப்பெரிய எதிர்விளைவை ஏற்படுத்தியுள்ளது.
பேருந்தின் ஓட்டுநருக்கு உரிமம் இல்லை, அதிகவேகம், பிரேக் இல்லை என்று பல வித செய்திகள் பரவி வருகின்றன. இதில் எது உண்மையோ இல்லையோ, அந்த மாணவன் இந்த உலகத்தில் இல்லை என்பது மட்டும் கலங்க வைக்கும் உண்மை.

பணம் கட்டாத மாணவனை வகுப்புக்குள் விடாமல் திருப்பியனுப்பியிருக்கிறார்கள். அவன் பணம் வாங்கி வருவதற்காக வீட்டுக்கு திரும்பிய நேரத்தில்தான் விபத்து நடந்திருக்கிறது என்பது வெளியில் சொல்லப்படும் செய்தி. கல்வி கடை வியாபாரமாக்கிவிட்டதன் மிகச் சிறிய எதிரொலிதான் இது. தன்னால் பணம் கட்ட சிரமமாக இருக்கும் என்று தெரிந்தும், அரசுப்பள்ளிகள் அல்லது வேறு பள்ளிகளை நாடாமல் இந்தப் பள்ளியில் தன் மகனை சேர்த்தது அந்த தந்தையின் தவறா?

பல அரசுப்பள்ளிகளில் தரமான கல்வி கிடைக்க விடாமல் வைத்திருப்பது அரசின் தவறா?

மாணவன் இறந்த சிறிது நேரத்திலேயே பள்ளிக்கூடத்தை சூறையாடியிருக்கிறார்கள். அந்த அளவுக்கு அந்தப் பள்ளியின் மீது கோபம் என்பது மட்டும் தெரிகிறது.

வீட்டில் பிள்ளையை அடித்து அல்லது கண்டித்து வளர்க்கவில்லை என்றால் அதை வெளியில் யாராவது செய்வார்கள். நமக்கு நாமே சுயக்கட்டுப்பாடு செய்துகொள்ளவில்லை என்றால் காவல்துறையினர் அந்தப் பணியை நிறைவேற்றுவார்கள்.

நாட்டில் தொண்ணூறு சதவீத பள்ளிகள் ஏதோ ஒரு விதியை மீறிதான் செயல்பட்டு வருகின்றன.அவற்றை ஒழுங்குபடுத்த வேண்டிய அரசு மவுனமாக இருப்பதால்தான் மக்கள் வாய்ப்புக் கிடைக்கும்போது இம்மாதிரியான வன்முறையில் இறங்கி விடுகிறார்கள்.

இதை நான் நியாயப்படுத்தவே இல்லை. அரசுப்பள்ளிகளை தத்தளிக்கவைத்துவிட்டு தனியார் பள்ளி முதலாளிகளின் வருமானத்துக்கு மறைமுகமாக உடந்தையாக இருப்பது யார் குற்றம்?

தனியார் பள்ளிகள் எப்படி வேண்டுமானாலும் கொள்ளை அடித்துச் செல்லட்டும். நாட்டில் ஏழைகள் கல்வி கற்க அரசுப்பள்ளிகள் உருப்படியாக செயல்பட வைப்பதை அரசு தன் கடமையாக அல்லவா செய்ய வேண்டும்.

ஒரு மாணவனின் உயிர் போனது யாராலும் ஈடு செய்ய முடியாத இழப்புதான். ஆனால் அதற்காக பள்ளியை நாசமாக்கி சான்றிதழ்களை எரித்து மிக அதிகமான நஷ்டத்தை ஏற்படுத்தியதேல்லாம் மன்னிக்கவே முடியாத குற்றம்.

இப்போதெல்லாம் படித்து நல்ல பணியில் இருப்பவர்கள் கூட குடித்துவிட்டு வண்டி ஓட்டுகிறார்கள். முதலில் பாமரன் முதல் படித்தவன் வரை சாலை விதிகளை மதித்து விபத்து இல்லாத உலகத்தை உருவாக்கும் நோக்கத்தோடு பயணத்தை தொடங்குவோம்.இது உடனடியாக சாத்தியம் இல்லை என்று எனக்கும் தெரியும். அப்படி உடனடியாக நடந்து விடுமா என்று நினைத்திருந்தால் நமக்கு சுதந்திரம் கிடைத்திருக்காது. பெற்ற சுதந்திரத்தை பேணிக்காக்க வேண்டும்.

இப்படியா நம்முடைய வசதிக்காக கண்டறிந்த வாகனத்தால் நம் உயிரையே அழித்துக் கொள்வது?

இப்படி எதாவது ஒரு சம்பவம் நடந்தால் பதிவு எழுதத்தான் உனக்கு தெரியும். வேற என்ன செய்யுற அப்படின்னு நீங்க கேட்கலாம்.சைக்கிளோ, மோட்டார் சைக்கிளோ...அவற்றை சாலைவிதிகளை மதித்து இயக்கி வருகிறேன். பார்க் செய்யும்போது அடுத்தவருக்கு இடையூறு இல்லாமல் நிறுத்துவேன். ஏதோ என்னால் முடிந்தது.

4 கருத்துகள்:

  1. சைக்கிளோ, மோட்டார் சைக்கிளோ...அவற்றை சாலைவிதிகளை மதித்து இயக்கி வருகிறேன். பார்க் செய்யும்போது அடுத்தவருக்கு இடையூறு இல்லாமல் நிறுத்துவேன். ஏதோ என்னால் முடிந்தது.


    ....Little drops of water,
    little grains of sand,
    make the mighty ocean
    and the beauteous land.
    .... Little deeds of kindness,
    little words of love,
    make our earth an Eden,
    like the heaven above.

    பதிலளிநீக்கு
  2. http://blogintamil.blogspot.com/2010/09/blog-post_15.html

    ...Congratulations!

    பதிலளிநீக்கு
  3. //மோட்டார் சைக்கிளோ...அவற்றை சாலைவிதிகளை மதித்து இயக்கி வருகிறேன். பார்க் செய்யும்போது அடுத்தவருக்கு இடையூறு இல்லாமல் நிறுத்துவேன்.//... மிக நல்ல விஷயம். இதை போல் அனைவரும் கடைப்பிடிக்க ஆரம்பித்தால் நல்லது.

    பதிலளிநீக்கு