Search This Blog

வெள்ளி, 4 டிசம்பர், 2009

கண்ணீர் சிந்த வைத்த கட்டுரை - (நன்றி : தேவதை மாதமிருமுறை இதழ்)


தேவதை டிசம்பர் 1-15, 2009 இதழில் "பிரசவம் ...நடந்தது என்ன? என்ற ஒரு கட்டுரை சேனல் பஃபே பகுதியில் பிரசுரமாகியிருந்தது. நான் ஒரு சில திரைப்படங்கள் பார்த்து கண் கலங்கியது உண்டு. பிறகு திரையரங்கத்தில் திரைப்படம் திரையிடும் வேலை செய்ததுடன் படங்கள் மனதைப் பாதிப்பதும் நின்று போனது.

கண் முன்னால் எங்கள் கல்லூரி மாணவி லாரியில் சிக்கி படுகாயமடைந்த போது கலங்கி இருக்கிறேன். வேறு எந்த நிகழ்வும் கண்ணீரை வரவழைத்தது இல்லை.


2004 ல் ஆழிப்பேரலை வந்தபோது நான் வேலை செய்த தனியார் நிறுவன உரிமையாளரும், பிரபல தொண்டு நிறுவனமும் நாகப்பட்டணத்தில் செய்த நிவாரணப்பணிகளில் ஈடுபட்டபோது கூட கண்ணீர் சிந்த நேரம் இல்லை. சிறு வயதில் இருந்து இப்போது வரை போராட்டங்களே வாழ்க்கையானதாலோ என்னவோ, எந்த சம்பவமும் என்னைப் பரிதாபப்பட வைத்ததுடன் சரி...பல மணி நேரம் மனதைப் பாதித்தது இல்லை.

ஆனால் ஒரு கட்டுரையில் இருந்த சாதாரண எழுத்து என்று நான் நினைத்துப் படித்தது... ஒரு தாயின் வேதனையை அருகில் இருந்து உணர்ந்தது போலவே....இல்லை,இல்லை...நானே அனுபவித்தது போல் ஒரு அதிர்ச்சி.

பிரசவம் என்பது ஒரு பெண்ணுக்கு மறுபிறவி என்று சொல்வார்கள். இந்த வார்த்தை இதுநாள் வரை என் மனதில் எந்த சலனமும் ஏற்படுத்தியதில்லை. ஆனால் என்னைப் பெற்றெடுத்த தாயும் மறுபிறவி எடுத்துதானே உலகில் நடமாடிக்கொண்டிருக்கிறார்...அவருக்கு நன்றி செலுத்த இவ்வுலகில் ஈடாக எதுவுமே இல்லையே...நாம் என்ன செய்தாலும் அது அந்தக் கடனுக்கு வட்டியில் ஒரு பகுதியைக்கூட  செலுத்துவதாக அமையாதே...என்றெல்லாம் சிந்தித்து மனம் முழுவதும் தவிப்புடன் இரண்டு நாட்கள் சரியான தூக்கமே இல்லை.

மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவரும் தாயின் மனம் புண்படாமல் நடந்து கொள்வதுதான் உயர்ந்த விஷயமாக இருக்க முடியும். என்பதை உணர வைத்தது இந்தக் கட்டுரை.

மேலே உள்ள வரிகள் உணர்ச்சி வசப்பட்ட நிலையில் எழுதியது. அதற்காக இது அனைத்தையும் மறுக்கப் போகிறேன் என்று நினைக்காதீர்கள்.


மனத் தெளிவுடன் சிந்தித்துப் பார்த்தேன். உண்ர்ச்சிவசப்பட்ட நிலையில் எடுக்கும் எந்த முடிவும் தவறாக முடிவதற்கு வாய்ப்பு அதிகம் என்பது அனைவரும் அறிந்த ஒன்றுதான். தாயை மதிக்கிறேன் என்று ரொம்பவும் அதிகமாக உணர்ச்சிவசப்படும் ஆண்கள்தான் அடுத்த தாயான மனைவியை புரிந்துகொள்ளத் தவறி விடுகிறார்கள்.

இந்த தவறை ஒருபோதும் செய்யக்கூடாது என்பதை நான் புரிந்துகொண்டேன்.

இருவர் மனதும் புண்படக்கூடாது என்பது ஒவ்வொரு ஆணுக்கும் உள்ள மிகப் பெரிய சவால்தான். இதை விட பெரிய அளவில் பெண்கள் எவ்வளவோ பிரச்ச்னைகளை சந்திக்கிறார்கள். ஆண்கள் இந்த ஒரு சவாலில் வென்றால் குடும்பமே சொர்க்கமாகுமே...

தாய்மையின் பெருமையை உணரச் செய்த தேவதைக்கு நன்றி.

1 கருத்து: