Search This Blog

சனி, 6 ஜூலை, 2019

செங்கம் டிராவல்ஸ் - 6



‘‘தம்பி... உனக்கு தட்டி பாஸ் கொடுக்கும்போதே என்ன சொன்னேன்... படம் போட்டு முதல் நாளோ, சனி ஞாயிறு மாதிரி விடுமுறை நாள்லயோ, இந்த மாதிரி கூட்டம் நிறைய இருக்குற நாள்லயோ வராத... சாதாரண நாட்கள், இன்று இப்படம் கடைசின்னு ஸ்லிப் ஒட்டியதும் வான்னுதானே சொன்னேன்... மறந்துட்டியா தம்பி...’’ என்றார் தியேட்டரின் உரிமையாளர் பழனிச்சாமி. 
















‘‘இல்லன்ணே... டிக்கட் கேட்கதான்ணே வந்தேன்...’’


‘‘டிக்கட்டா... யாருக்குடா...’’


‘‘எனக்குதான்ணே...’’


‘‘ஏண்டா தம்பி... படிக்கிறப்பவே காலையில நாலரை மணிக்கு எழுந்திரிச்சு பேப்பர் போட்டு கஷ்டப்பட்டு ஏதோ கொஞ்சம் சம்பாதிக்கிற...


இன்னும் ரெண்டு வாரம் கழிச்சு வந்தா உன்னைய சும்மாவே உள்ள அனுப்பப்போறேன். இப்போ ஏண்டா செலவழிக்கப்போற...’’ என்றார்.


அவரிடம் உண்மையான காரணத்தை சொல்ல முடியாமல், ‘‘இல்லண்ணே... என்ன இருந்தாலும் தலைவர் படம்...’’ என்று இழுக்க, ’’சரிடா... செகண்ட் கிளாஸ் டிக்கட் நாற்பது ரூபா. அதை வாங்கிக்க...’’ என்று கண்ணாடி கதவு வழியாகவே இவனை உள்ளே அழைத்துச் சென்றார்.


டிக்கட்டை வாங்கிக் கொண்ட அவன், ‘‘அண்ணே... சைக்கிளை கொண்டு போய் போட்டுட்டு வந்துடுறேன்...’’ என்றதும், உரிமையாளர்,


‘‘நில்லுடா... இந்த சாவியை எடுத்துட்டுப்போய் எண்ட்ரன்சுக்கு பக்கத்துல நம்ம வண்டிங்க எல்லாம் நிக்கிற இடத்துல சைக்கிளைப் போட்டுட்டு கதவைப் பூட்டி சாவியைக் கொண்டாந்துடு...’’ என்று ஒரு வளையத்தில் மாட்டியிருந்த சாவியைக் கொடுத்தார்.


வரதராஜனுக்கு ஏக குஷி. காரணம், பெண்களுக்கு டிக்கட் கொடுக்கும் பகுதியில்தான் தியேட்டர் ஊழியர்கள், நிர்வாகிகள் வாகனங்கள் நிறுத்தும் இடம் இருந்தது. இவன் அந்த இடத்தின் கதவைத்திறந்து தன்னுடைய சைக்கிளை வைக்கும்போது அர்ச்சனாவும், அந்த காலனியில் இருந்த அத்தனை பேரும் பார்த்தார்கள். இவன் சைக்கிளை நிறுத்தி பூட்டி விட்டு வெளியே வந்து அந்த இடத்தின் கதவைப் பூட்டிக் கொண்டு திரும்பும்போது எதிரில் நின்றது, இவன் பேப்பர் போடும் வீட்டில் உள்ள புவனேஸ்வரி.


‘‘என்ன தம்பி... இங்கயும் வேலைபார்க்குறியா?’’ என்றதும்,


‘‘அய்யய்யோ... இல்லக்கா... நான் ஸ்கூல்ல படிக்கிறேன்... இங்க படம் பார்க்க வந்தேன்... ஓனர் சைக்கிளை இங்க போட்டுக்க சொன்னார்...’’ என்று அவசரமாக பதிலளித்தான்.


‘‘கூட்டம் இருக்குறதைப் பார்த்தா பொம்பளைங்களுக்கு குடுக்குற இருபது ரூபா டிக்கட் கிடைக்காது போலிருக்கு... நீ சொல்லி வாங்கித்தர்றியாப்பா...’’ என்று கேட்டதும் ஒருகணம் யோசித்தான்.


வாங்கித்தர்றேன்னு பந்தாவா சொல்லி, ஓனர் மறுத்துட்டா அசிங்கம்... அதனால போய் கேட்டுட்டு வந்துடுறேன் சொல்லி தப்பிக்கிறதுதான் நல்லது என்ற முடிவுக்கு வந்த வரதராஜன், ‘‘அக்கா... ஓனர் என்ன மூடுல இருக்காருன்னு தெரியலை... எதுக்கும் போய் கேட்டுட்டு வந்துடுறேனே... எத்தனை டிக்கட்?’’ என்று கேட்டான்.


‘‘இருபத்து மூணு...’’ என்று அந்த பெண் சொல்லவும், இதை நான் எதிர்பார்த்ததுதான், ஆனா ஓனருக்கு மயக்கம் வராம இருக்கணும்... என்று தனக்குத்தானே சொல்லிக்கொண்டு கண்ணாடி கதவு நுழைவாயிலுக்கு சென்றான்.


அவர் இவன் பேசிக்கொண்டிருந்ததைப் பார்த்திருப்பார் போலிருக்கிறது.


‘‘அங்க என்னடா லேடீஸ்கிட்ட கதை பேசிகிட்டு இருந்த...’’


‘‘இல்லண்ணே... நான் பேப்பர் போடுற ஏரியாவுல ஒரு காலனியில இருக்காங்க... இருபது ரூபா டிக்கட் கேட்டாங்க... அதான்...’’ என்று இழுத்தான் வரதராஜன்.


‘‘நீ என்ன சொன்ன?...’’ என்று பழனிச்சாமி கேட்டபோது அவர் குரலில் ஏதோ ஒரு எச்சரிக்கை உணர்வு.


‘‘முதலாளிகிட்ட கேட்டுட்டு வர்றேன்னுதான் சொன்னேன் முதலாளி...’’


இதைக் கேட்ட பழனிச்சாமி, அருகில் நின்ற தியேட்டர் ஊழியர்களிடம், ‘‘வியர்க்க விறுவிறுக்க பையன் பணம் கொடுத்து படம் பார்க்குறேன்னு சொன்னப்ப தலைவர் படம்னு ஆவலா இருக்குறதா நினைச்சேன்... அங்க நிக்கிற கூட்டத்தைப் பார்க்கும்போதுதான் விசயம் புரியுது. பையன் தெளிவாத்தான் இருக்கான்... ஆனாலும் திறமைசாலிடா நீ... டிக்கட் வாங்கித் தர்றேன்னு பந்தா பண்ணாம, என் கிட்ட கேட்டு சொல்றேன்னு தெளிவா எஸ்கேப் ஆகுற மாதிரி பதில் சொல்லிட்டு வந்துருக்க... சரி... எத்தனை டிக்கட் வேணும்?’’ என்று கேட்டவாறு அருகில் நின்ற ஊழியரின் கையில் இருந்த மூன்றாம் வகுப்பு டிக்கட் புத்தகத்தை வாங்கி டிக்கட்டுகளை எண்ணுவதற்காக ஒரு டிக்கட்டை இரண்டு விரல்களால் பிடித்தார்.


‘‘இருபத்திமூணு....’’


வரதராஜன் எதிர்பார்த்ததுபோல் உரிமையாளருக்கு மயக்கம் வரவில்லை. ஆனால் ஒரு சில விநாடிகள் ஸ்தம்பித்து நின்றார்.



வெள்ளி, 5 ஜூலை, 2019

செங்கம் டிராவல்ஸ் - 5



அர்ச்சனா பத்து ஆண்டுகளுக்கு பிறகு அவனை சந்தித்த விஷயத்தை மலர்வழியிடம் சொன்னதும் அவள், ’’ஆக, உன் அண்ணன் கல்யாணத்துக்கு வர்றப்பவே உன் கல்யாணத்தையும் பார்த்துடலாம்னு சொல்லு.’’ என்று போனிலேயே அர்ச்சனாவை கிண்டலடித்தாள்.


‘‘விடியற்காலையில அவனைப் பார்த்ததுல இருந்து எனக்கு பழசு மொத்தமும் ஒவ்வொண்ணா நினைவுக்கு வந்துகிட்டு இருக்கு... அப்பதான் அவன் ஒரு வார்த்தை கூட என்கிட்ட பேசுனதே கிடையாது. இப்பவும் என்னையப் பார்த்து அதிர்ச்சி அடைஞ்சதோட சரி... கிட்டக்கயே வரலை. அதனாலதான் அவன் என்ன செய்யப்போறானோன்னு பயமா இருக்கு.






ஏண்டி பேயறைஞ்ச மாதிரி இருக்கன்னு அம்மா கேட்குற கேள்விக்கு பதில் இல்லை. சுத்தி நம்ம சொந்தக்காரங்க இருக்குறாங்களே, அவங்க ஒரு பக்கம் ஏன் இப்படி கனவு கண்டுகிட்டு இருக்கன்னு கிண்டல் பண்றாங்க...


உன் கிட்ட பேசினா தெளிவு கிடைக்கும்னு பார்த்தா நீயும் உன் பங்குக்கு ஓட்டுற...’’ என்றாள் அர்ச்சனா.


‘‘சரி சரி கோபிக்காத... அந்த மாதிரி நடந்து உன் உடம்புல ரத்தத்தை பார்த்ததும் கோபத்துல ரெண்டு வார்த்தை கத்துனேன். அன்னைக்கு ஓடுனவன். இத்தனை வருசம் கழிச்சு அதுவும் எதார்த்தமாத்தான் இந்த பயணத்துக்குள்ள வந்துருக்கான். இவ்வளவு வீரதீர பரமாக்கிரமசாலி உன் கிட்ட வந்து பேசலைன்னு கவலைப்படுற... என் ஒருத்தி பேச்சுக்கே பயந்து ஓடுனவன் உன்னைச் சுத்தி முக்கால்வாசிப்பேர் உன் சொந்தக்காரங்க இருக்கும்போது எப்படி தைரியமா வந்து பேசுவான்?’’ என்று மலர்விழி எதிர்க்கேள்வி எழுப்பினாள்.


‘‘நீதானடி இப்படி அவமானப்பட்டு போற பசங்க ஆசிட் அடிச்சாங்க, கத்தியால குத்துனாங்கன்னு கதை கதையா சொன்ன... இப்ப இப்படி பேசுற?’’


‘‘ஆமா... சொன்னேன். யார் இல்லைன்னு சொன்னா? அந்த மாதிரி தப்பு காரியம் செய்யுறதுக்கு ஒண்ணு துணிச்சல் வேணும்... இல்லன்னா கிறுக்கு புடிச்சவனா இருக்கணும். உன் ஆள் ரெண்டு லிஸ்ட்டுலயுமே இருக்க முடியாது.


ஏன்னா, துணிச்சல் உள்ளவன்னா நான் ஒரு நாள் மிரட்டுனதுக்கே உன் கண்ணுல படாம காணாமப் போயிருக்க மாட்டான். தொடர்ந்து உன்னைய ஆஸ்பத்திரியிலயோ, வேற எங்கேயோ பார்த்து உடம்பு எப்படி இருக்கு... நீ என்ன ஆனன்னு தெரிஞ்சுகிட்டு, நீ தேறி வந்ததுக்கு அப்புறம் உன்னைய தொடர்ந்து பார்த்து காதலை சொல்ல முயற்சி பண்ணியிருப்பான்.


கிறுக்கு புடிச்சவனா இருந்தா அப்பவே உன் மேலயாச்சும் என் மேலயாச்சும் ஏதாவது தாக்குதல் நடத்தியிருப்பான்.


ஆக, இவன் டீன் ஏஜ்ல இருக்குற கோடிக்கணக்கான பசங்க செய்யுற வேலைக்கு மேல எதையும் செய்யாத அல்லது செய்யுறதுக்கு தைரியம் இல்லாத சராசரியான ஒரு ஆள்.


டீன் ஏஜ் வயசுல கிட்டத்தட்ட ஒரு வருசம் அந்த சம்பவம் தவிர வேறு எந்த வகையிலயும் நம்மை டிஸ்டர்ப் பண்ணாம ஃபாலோ பண்ணின ஒருத்தன் ஒரே நாள்ல காணாமப் போனதும் உன் ஆழ் மனசுல அவன் நினைவு பதிஞ்சிருக்கலாம்... உனக்கும் வீட்டுல எத்தனையோ மாப்பிள்ளை பார்த்தும் எதுவும் திருப்தியா தெரியலைன்னு சொல்ற... ஒருவேளை இவன்தான் உனக்குன்னு பிறந்தவனோ என்னவோ... நாங்களும் இங்க கோயம்புத்தூர்ல இருந்து பஸ் ஏறிட்டோம். மதியம் வந்துடுவேனே... வாய்ப்பு இருந்தா அவன்கிட்ட நான் பேச முடியுதான்னு பார்த்து அதுக்கப்புறம் முடிவு செய்வோம்...


இந்த வயசுல நீ எடுக்குற முடிவுக்கு அவ்வளவு சீக்கிரம் பேரண்ட்ஸ்கிட்ட இருந்து எதிர்ப்பு வரும்னு சொல்ல முடியாது... நாம நேர்ல பேசுவோமா...’’ என்று அலைபேசி இணைப்பை மலர்விழி துண்டித்தாள்.



சும்மா இருக்குறது அவ்வளவு சுலபமா?


ஒரு வேலையைச் செய்வது போல் போக்கு காட்டுபவர்களும்சும்மாஇருப்பவர்களும்தான் உண்மையாக வேலை செய்பவர்களைவிடஅதிகமாய்வேலை வாங்கப்பட்டுக் கொண்டிருப்பார்கள்.


அந்த பணி இடத்தைக் கூர்ந்து கவனியுங்கள்.


"ஏம்ப்பா...அவன் சும்மாதான இருக்கான்இந்த வொர்க்க அவன்கிட்ட கொடுங்க...' 


"நீங்க ஃப்ரீயாத்தான இருக்கீங்க... கொஞ்சம் இவருக்கு ஹெல்ப் பண்ணுங்க...'
இப்படி எல்லா வேலைகளிலும் கொஞ்சம் பங்கு இவருக்கு ஒதுக்கப்பட்டுகடைசியில் இவர் செய்கிற வேலையைப் பார்த்தால் அது எல்லோரையும் விடஅதிக அளவில்தான் இருக்கும்இதற்கு உருப்படியாக ஒரே வேலையில் தன்னைஐக்கியப்படுத்தி விட்டுப் போய்விடலாம்அப்போது அவரை யாரும் தொந்தரவுசெய்ய மாட்டார்கள்


"அவர் அந்த வேலைல பிஸிஎன்பார்கள்.






வெள்ளி, 28 ஜூன், 2019

செங்கம் டிராவல்ஸ் - 4



முன்கதை சுருக்கம்:




அர்ச்சனா உறவினர் திருமணத்திற்கு மணமகன் வீட்டாருடன் மதுரைக்கு செல்கிறாள். அவர்கள் ஒப்பந்தம் செய்துள்ள பேருந்தில் ‘அவனை’ பார்த்ததும் அதிர்ச்சியில் பத்து ஆண்டுகளுக்கு முன்பு நடந்த பழைய சம்பவங்கள் தொடர்ந்து கண் முன் தோன்றி அவள் மனதை அலைக்கழிக்கிறது.




பத்து ஆண்டுகளுக்கு முன்பு- அர்ச்சனா பள்ளியில் இறுதி ஆண்டு படிக்கும்போது அவன் சுற்றி வந்த நாட்களில் நடந்த சில சம்பவங்கள் இவள் நினைவுக்கு வருகின்றன. அர்ச்சனாவின் தோழிகள் கூட அவனைப் பற்றிக் குறிப்பிட்டு கிண்டல் செய்கிறார்கள்.


பேருந்தில் அவனைப் பார்த்தது முதல் பழைய நினைவுகளில் அர்ச்சனா மூழ்கிவிடுகிறாள். அதனால்தான் பேருந்து நின்று எல்லோரும் டீ குடிக்க இறங்கிச் சென்றது கூட தெரியாமல் சிந்தனையில் இருப்பவளைப் பார்த்து அவள் தாயார் சித்ரா கடிந்து கொள்கிறாள்.


இந்த எண்ண அலைகளிலிருந்து விடுபட வேண்டும் என்றால் பழைய சம்பவங்களின் போது சாட்சியாக இருந்த மலர்விழியிடமே கேட்டு விடலாம் என்று போன் செய்கிறாள்..


*****




செங்கம் டிராவல்ஸ்


தொடர்கதை


திருவாரூர் சரவணன்


பகுதி 4


05–04–2019


சித்ரா வாசல் தெளித்து விட்டு கோலமாவு டப்பாக்கள் அடங்கிய பிளாஸ்டிக் தட்டை எடுத்துக்கொண்டிருக்கும்போதுதான் சத்தம் கேட்டு அர்ச்சனா விழித்தாள்.


சட்டென்று படுக்கையை விட்டு எழுந்து அமர்ந்தவள், ‘‘அம்மா... என்னை எழுப்பதானே சொன்னேன்... இப்ப நீபாட்டுக்கு என்னைய விட்டுட்டு கோலம் போடப் போனா என்ன அர்த்தம்...’’


‘‘ஏண்டி காலையிலேயே இப்படி கத்துற... நான் தண்ணி தெளிக்க எழுந்திரிச்சப்ப நல்லா அசந்து தூங்கிட்டு இருந்த. பொதுவா நல்ல தூக்கத்துல நீ இருக்கும்போது எழுப்புனா பட்டுன்னு கன்னம், கை, காலுன்னு எது சிக்குதோ அங்க ஒரே அறை விடுவ... அது மட்டுமில்லாம நம்ம காலனியில 12 வீடு இருக்கு. ஒரு வீட்டுக்கு கணக்கு வெச்சா ரெண்டரை நாள்தான் கோலம் போடுற முறை வரும். இன்னைக்கு நாம போட்டா அடுத்து 12 நாள் கழிச்சுதான். இதுக்கு ஏன் உன் தூக்கத்தையும் கெடுத்துகிட்டுன்னு விட்டுட்டேன்... அதுக்கு இவ்வளவு கோபமா?’’


‘‘அப்போ மத்த நாள் எப்பவும் போல காலையில ஆறரை மணிக்கு தண்ணி புடிச்சா போதுமா?’’


‘‘அப்படியே ஒரு டேங்கர் லாரி தண்ணியை புடிச்சு ஊத்தப்போற...ச்சே... மணியாகுது வா கோலம்போட...’’ என்று சொல்லிவிட்டு வீட்டை விட்டு வெளியேறவும், பின்னாலேயே அர்ச்சனாவும் ஓடினாள்.




திடு திடுவென்று அர்ச்சனா ஓடும் சத்தம் கேட்ட அவள் தாய், ’’ஏய்... டி.விக்கு பக்கத்துல ஸ்கார்ப் இருக்கு பாரு. அதை எடுத்து கட்டிகிட்டு வா... பனியில உடம்பு முடியாம விழுந்துட்டன்னா நாலு நாள்ல மிச்சம் இருக்குற அரையாண்டு பரிச்சை கோவிந்தாதான்...’’


சித்ரா சொன்னதிலும் நியாயம் இருக்கவே, வேறு வழியின்றி தலைக்கு ஸ்கார்ப்பை கட்டிக் கொண்டு கோலம் போட வந்தாள் அர்ச்சனா. ஆனாலும் அவள் மனதில் ஒருவேளை அவன் இந்த நேரத்தில் வந்தால், ஸ்கார்ப் கட்டிக் கொண்டிருக்கும் தன்னை அடையாளம் கண்டு கொள்வானா என்ற சந்தேகம் எழுந்தது.


‘‘ம்ச்ஹ... பசங்களுக்கு உடம்பெல்லாம் கண்ணு... அப்படியா நாம அடையாளம் தெரியாம மாறிடப்போறோம்...’’ என்று மைண்ட் வாய்சில் பேசுவதாக நினைத்து வாய்விட்டு உளறினாள் அர்ச்சனா.


‘‘என்னடி ஏதோ புலம்புற... தூங்குறப்ப கண்ட கனவு இன்னும் கலையலையா... இதுக்குத்தான் நீ எழுந்திரிக்க வேணாம்னு சொன்னேன்.’’ என்ற சித்ராவைப் பார்த்து முறைத்து விட்டு, அம்மா போட்ட கோலத்திற்கு வண்ணம் தீட்டுவதில் கவனம் செலுத்தினாள்.


அப்போது யாரோ சைக்கிளை நிறுத்தி ஸ்டாண்ட் போடும் சத்தம். நிமிர்ந்து பார்த்தாள். அவனேதான். சைக்கிள் கேரியரில் நாளிதழ்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.



வியாழன், 27 ஜூன், 2019

செங்கம் டிராவல்ஸ் - 3




பிரேக் போட்டு திடீரென இவர்கள் பேருந்து நின்ற நொடி எதிரில் ஒரு டேங்கர்லாரி இந்த பேருந்தை மோதுவது போல் நெருங்கி வந்து வலது பக்கம் விலகிச் சென்றது பின்னாலேயே வேளாங்கண்ணி செல்லும் மூன்று அரசு விரைவுப்பேருந்துகளும் சர்... சர்... சர்ரென கிராஸ் செய்து சென்றன.


‘‘டிரைவர்... ஹெட்லைட்டைப் போட்டுட்டு போய்கிட்டே இருக்க வேண்டியதுதானே...


ஓவர்டேக் பண்ணி வர்ற லாரிக்கு ஏன் வழி விடுறீங்க... எதிர்ல நாம வர்றதைப் பார்த்ததும் அவன்ல வேகத்தைக் குறைச்சு பஸ்சுங்களுக்கு பின்னால போயிருக்கணும்?’’ என்று முன் சீட்டில் முட்டிக்கொண்ட ஒருவர் கொதித்தார்.


 ‘‘ஒரு பஸ்சா இருந்தா அவனே பின்னால ஒதுங்கியிருப்பான்... இங்க மூணு பஸ்சு. அதோட எவ்வளவு தூரம் முயற்சி பண்ணி டாப் கியருக்கு பிக்கப் ஆயிருந்தானோ... இப்போ நாம வழி மறிச்சிருந்தா அடுத்து அஞ்சு கிலோ மீட்டர் தூரத்துக்கு அவனால வண்டியை நார்மல் ஸ்பீடுக்கு கூட கொண்டு போக முடியாது...


நானும் எழுபது எண்பதுல போய் சடன் பிரேக் போடலியே... இருபத்தஞ்சுல போனப்பதான குத்துனேன்....’’ என்றார் ஓட்டுநர்.


‘‘அது சரி... பள்ளிக்கூட பஸ் ஓட்டுன ஆள்னுங்குறது சரியாத்தான் இருக்கு... அநியாயத்துக்கு நல்லவங்களா இருக்காதீங்கப்பு...’’ என்றவரின் குரலில் கொதிப்பு அடங்கியிருந்தது.


‘‘வெளியில இருக்குற டேங்கர்லாரி டிரைவருக்கு இரக்கப்பட்ட நீங்க, பஸ்சுக்குள்ள எழுந்து நின்னுகிட்டு இருந்த சிங்கத்தைப் பத்தி யோசிக்காம மூக்கை உடைச்சுட்டீங்கிளே...’’ என்று ஒருவன் சொல்லவும்,


‘‘நீ வேற ஏண்டா மானத்தை வாங்குற...’’ என்று வைத்தியலிங்கம் அவனைப் பார்த்து பல்லைக்கடித்தான்.


பேருந்தினுள் இருந்தவர்கள் ஆளாளுக்கு ஏதோ கதை பேசிக் கொண்டு வர, அர்ச்சனாவின் மனதில் இப்போதைக்கு ஒரே ஒரு கேள்விதான்.


‘பஸ்சுல இருக்குறதுல பாதிப்பேருக்கு மேல சொந்தக்காரங்கதான். இவனை எந்த பழக்கத்துல பெரியப்பா உள்ள விட்டிருக்காரு... நமக்கு தெரிஞ்சவரை இவனோட நம்ம பெரியப்பாவுக்கு எந்த பழக்கமும் இல்லையே...’என்ற கேள்வி அர்ச்சனாவின் மனதில் வெகு நேரமாக ஓடிக்கொண்டே இருந்தது.


‘‘நாலு வேன் புடிச்சாகூட நெருக்கியடிச்சு உட்காரணும்... அதோட பயங்கரமா குலுக்கி எடுத்துடும். அக்கம் பக்கம் உட்கார்ந்துருக்குறவங்க கிட்ட நல்லா பேசக்கூட முடியாது. அதுக்காகத்தான் தாராளமா உட்கார்ந்து போகலாம்னு பஸ்சைப் பிடிச்சேன்...


நான் நினைச்ச மாதிரியே எல்லாரும் சகஜமா பேசி அரட்டை அடிச்சுகிட்டு வர்றீங்க... ஆனா அர்ச்சனாவுக்குதான் என்னாச்சுன்னு தெரியலை... நீ வேலைக்கு போறதும் கம்பெனி பஸ்சுலதானே... அதுல வாயைத் திறந்தா மூட மாட்டேன்னு இண்டர்போல் ஆபிசர்ஸ் சொன்னாங்க... இப்ப என்னாச்சு...?’’ என்று சிரிக்காமல் விஜயகுமார் பேசவும் இதைக் காதில் வாங்கியவர்கள் சிரித்தார்கள்.




‘‘அய்யோ... பெரியப்பா... மானத்தை வாங்காதீங்க... ஏதோ கம்பெனி ஞாபகம்... அதான்...’’ என்று சமாளித்தாள்.


‘‘என்னது... கம்பெனி ஞாபகமா?... உன்னை மாதிரி வெளியூர்ல தங்கி வேலை பார்க்குற பொண்ணுங்க வீட்டு நியாபகம்னு சொல்லி கேள்விப்பட்டிருக்கேன்... நீ குடும்ப விசேசத்துக்கு வந்தும் வேலை ஞாபகத்துலயே இருக்க... உன் கம்பெனி ரொம்ப கொடுத்து வெச்சதும்மா...


ஆனா ஒரு சின்ன விண்ணப்பம்... இது நம்ம வீட்டு கல்யாணம்... மாப்பிள்ளைக்கு நீயும் ஒரு தங்கச்சி. அதை மனசுல வெச்சு இந்த சந்தோஷத்துல பங்கெடுத்துக்க... இந்த பயணமும் நினைவுகளும் ரொம்ப நாளைக்கு நம்ம மனசுல இருக்கும்ணு நம்புறேன்...’’ என்று விளையாட்டாக கும்பிட்டார்.


‘‘ஸ்....யப்பா... போதும் பெரியப்பா... தாங்கலை...’’ என்று அவளும் கைகூப்பினாள்.




புதன், 26 ஜூன், 2019

செங்கம் டிராவல்ஸ் - 2


பகுதி 2


முன்கதை சுருக்கம்:


அர்ச்சனா உறவினர் திருமணத்திற்கு மணமகன் வீட்டாருடன் மதுரைக்கு செல்கிறாள். அவர்கள் ஒப்பந்தம் செய்துள்ள பேருந்தில் ‘அவனை’ பார்த்ததும் அதிர்ச்சியில் பத்து ஆண்டுகளுக்கு முன்பு நடந்த பழைய சம்பவங்கள் தொடர்ந்து கண் முன் தோன்றி அவள் மனதை அலைக்கழிக்கிறது.


*****


மணல் நிறத்துக்கு மாறியிருந்த பள்ளிச்சீருடையான வெள்ளை சட்டையை கழற்றி வீசியதும் முகம் கழுவி வந்து, கலர் சட்டையை அணிந்து கொண்டிருந்தான் வரதராஜன்.


‘‘டேய்... வரதுகுட்டி... செத்த ரேசன் கடை வரைக்கும் வந்துட்டுப்போடா... அரிசி வாங்கித்தர்றேன்... அதை எடுத்துட்டுபோய் சுந்தரி வீட்டுல போட்டுட்டு வந்துடு...’’


‘‘ஏம்மா... முன்னாலயே சொல்ல மாட்டியா? அவசரமா வெளியில கிளம்பிகிட்டு இருக்கேன்... இப்ப போயி ஏன் உயிரை வாங்குற?... தெட்சிணாமூர்த்தி இன்னும் வரலையா?...’’


‘‘டேய் நாக்குட்டி... அப்பா பேரை இப்படி தலையில அடிச்ச மாதிரி சொல்றதுக்கு ஒரு நாளைக்கு விளக்கமாறு பிய்யப்போவுது பாரு...’’


‘‘ஆமா... நீ மட்டும் வரதராஜன்னு அழகா ஒரு பேர் வெச்சிட்டு, பொம்பளைப் புள்ளை இல்லைன்னு என்னைய வரதுக்குட்டி, நாய்க்குட்டின்னுல்லாம் கூப்பிடு... நான் மட்டும் அப்பா பேர் சொல்ற புள்ளையா இருக்கறதை குத்தம் சொல்லு...’’


‘‘பேர் சொல்லும் பிள்ளைன்னா ஊர் உலகத்துல நல்ல பேர் எடுத்துக் குடுக்குறதுடா... இப்படி மரியாதை இல்லாம அப்பன் ஆத்தாளை கூப்பிடுறது இல்லை... இப்ப வரப்போறியா இல்லையா...’’ என்று குரலில் கடுமையை கூட்டினாள் வசந்தி.


ஆனால் வரதராஜன் ரேசன் கடைக்கு செல்லும் மன நிலையில் இல்லை. ‘‘நாளைக்கு சனிக்கிழமை எனக்கு லீவுதான். காலையில போலாம்...’’ என்று சட்டை பொத்தான்களை போட்டுக்கொண்டே பேசினான்.


‘‘இல்லடா குட்டி... மனுச உசிருகூட இப்ப இருக்கும் நாளைக்கும் இருக்கும்னு சொல்லலாம்... ஆனா ரேசன் கடையில இந்த நொடி இருக்குறது அடுத்த வினாடி இருக்கும்னு சொல்ல முடியாதுடா... மூணாவது வீட்டு சுசீலா இப்பதான் வாங்கிட்டு வந்தா, பத்து பதினஞ்சு பேர்தான் நிக்கிறாங்களாம்... ஆறு மணி ஆயிடுச்சுன்னா கணக்கு முடிக்கணும்னு தர மாட்டாங்கடா... நாளைக்கு காலையில கொடுத்தாதான் நிச்சயம்... அதனாலதான்டா சொல்றேன்...’’ என்று கெஞ்சலாக பேசினாள் வசந்தி.




‘‘நீ போய் வரிசையில நின்னு வாங்குறதுக்குள்ள நான் வந்துடுறேம்மா... அர்ஜண்டா போகணும்...’’ என்று வீட்டை விட்டு கிளம்பி ஓடுவதிலேயே குறியாக இருந்தான் வரதராஜன்.


இதுவே அவன் நண்பர்கள் அருகில் இருந்திருந்தால், ‘அர்ஜண்டாக போகணும்’ என்று வரதராஜன் சொன்னதுக்கு ‘கொல்லைப்பக்கம் கழிவறை இருக்கு... அதை விட்டுட்டு எங்கடா போற?’ என்று கேட்டிருப்பார்கள்.



செவ்வாய், 25 ஜூன், 2019

செங்கம் டிராவல்ஸ் - 1


பகுதி 1


பத்து வருசத்துக்கு முன்னால பார்த்தப்ப எப்புடி இருந்தியோ... அப்படியேத்தாண்டி இன்னமும் இருக்க... கொஞ்சம் கூட மாறவே இல்லை... ஏதாவது லேகியம் திங்கிறியா?" என்று அர்ச்சனாவின் முகத்தை தடவி ராமாயி பாட்டி திருஷ்டி கழித்தாள். அதை புன்சிரிப்புடன் ஏற்றுக் கொண்ட அர்ச்சனாவின் முகத்தில் லேசான வெட்கப்புன்னகை.







அடுத்த நொடி அவள் இதயத்துடிப்பு தறிகெட்ட வேகத்தில் பயணிக்கத் தொடங்கியது. பத்து ஆண்டுகளாக முகமும், உடலமைப்பும் மாறவில்லை என்று அந்த பாட்டி சொன்னதற்காக வெட்கப்பட்டவள், அவனும் இவளை அடையாளம் கண்டு கொண்டுவிட்டான் என்பதை உணர்ந்ததும், நம்முடைய உருவமும் முகமும் வேற மாதிரி மாறியிருக்கக்கூடாதா என்று தவித்தாள்.









டேய்... சரிகாஷா சாவுக்கப்புறம் ஈவ் டீசிங் புகாருக்கு கடுமையான தண்டனைன்னு எல்லாருக்கும் தெரியும். அப்படி இருந்தும் நீங்க எல்லாம் திருந்தவே மாட்டீங்கிளா? இவ அண்ணன்கிட்ட சொல்லி முதல் வேலையா உன் பேர்ல ஈவ்டீசிங் புகார் கொடுத்து உன்னைய உள்ள தூக்கி வெச்சி மிதிக்க வெக்கிறோம் பார்..." என்று அர்ச்சனாவின் தோழி மலர்விழி கத்தியதும் திரும்பிப்பார்க்காமல் அங்கிருந்து சென்றவன்தான் இல்லை, இல்லை... ஓடிப்போனவன்தான் இவன். அதன் பிறகு இந்த பத்து ஆண்டுகளில் ஒரு நாள் கூட அவனை அர்ச்சனாவோ, அவளுடைய தோழி மலர்விழியோ பார்க்கவே இல்லை. ஆனால் இன்று...






ஞாயிறு, 30 செப்டம்பர், 2018

டி.வி.ஆர் நினைவு சிறுகதைப்போட்டி - 2018ல் முதல் பரிசு பெற்ற சிறுகதை


தினமலர் - வாரமலர் (சென்னை, புதுச்சேரி, கோவை, மதுரை பதிப்புகள்)

டி.வி.ஆர் நினைவு சிறுகதைப்போட்டி - 2018ல் முதல் பரிசு பெற்ற சிறுகதை



தலைப்பு :மாற்றம் என்பதே மாறாதது...



'இந்தியா சுதந்திரமடைந்து, இத்தனை ஆண்டு காலம் கடந்து, நம்ம ஊர்ல, ரயில்வே ஸ்டேஷன் மற்றும் ரயில் பாதை அமைக்க, அரசு முடிவு பண்ணியிருக்குறதை நினைச்சு சந்தோஷப்படுறதா இல்ல, அதுக்காக, நம்ம ஊருல இருக்குற எல்லா விளை நிலம் மற்றும் பாதி பேரின் வீடுகளையும் பறிகொடுத்துட்டு ரோட்டுல நிற்கப் போறோமே... அதை நினைச்சு அழுது புலம்புவதா...' என்று தெரியாமல் தவித்துப் போய் நின்றது, அரசன்பந்தல் கிராமம்.












பக்கத்தில் உள்ள நகரத்திலிருந்து, அந்த கிராமத்துக்கு வரும் வழி முழுவதும், இரு பக்கமும், அரச மரங்கள் பந்தல் போல் குடை பரப்பி நிற்பதால் தான், 'அரசன்பந்தல்' என்று இந்த ஊருக்கு பெயர் வந்ததாக, கிராமத்தில் உள்ள வயதானோர் சொல்வர். அரசன்பந்தல் பெயர், பேச்சு வாக்கில், 'அரசம்பந்தல்' என்றானது.



கிராமத்து நுழை வாயிலில் இருந்த அந்த பெரிய அரச மரத்தடியில், ஊர் மக்கள் அனைவரும், அவர்கள் வாழ்வுக்கான வெளிச்சத்தை கண்டு விடலாம் என்ற நம்பிக்கையில், இரவு, 10:00 மணிக்கு கூடி இருந்தனர்.



''ரயில் பாதை அமைக்கப்பட்டா, நாலு பயணியர் ரயிலும், ஆறு விரைவு ரயில்களும் இயக்கப்படும்ன்னு வழித்தடத்தோட அறிவிச்சிருக்காங்க...



''மத்த ரயிலை விடுங்க... சென்னைக்கு ஒரு ரயில், நம்ம ஊர்ல இருந்து கிளம்புனா, இப்ப, நம் மாவட்டத்துல இருக்குறவங்க பயணம் பண்ணுற, 20 பேருந்துகள் தேவையில்லை... ஒரு ரயில், குறைஞ்சது, 20 பேருந்துகளோட தேவையை பூர்த்தி செய்யுது... அவ்வளவு டீசல் மிச்சம்ன்னு சொல்றதை விட, பேருந்து மட்டுமல்லாம, கார், வேன்னு எவ்வளவு பேர் போறாங்க... அது விடுற புகை, ஏற்படுத்துற விபத்து எல்லாம், ரயில் போக்குவரத்து சிறப்பா இருக்குற பகுதிகள்ல குறையுது. நாம இதையெல்லாம் யோசிக்கணும்... இன்னும் பழங்கால கதைகளையே பேசக்கூடாது,'' என, கூட்டத்திலிருந்து ஒருவர் குரல் கொடுத்தார்.



''எது பழங்கால கதை? எங்க தாத்தா காலத்துலேயே, ரயில் பாதை வேணும்ன்னு அரசாங்கத்துக்கு மனு கொடுத்து கொடுத்து, ஆசை நிறைவேறாம, அவர் மட்டுமில்லாமல், அடுத்த தலைமுறையான எங்க அப்பாவும் போய் சேர்ந்துட்டாரு... இப்போ நாம சமீப காலமா ரயில் பாதை கேட்குறதையே மறந்தாச்சு... ஆனா, திடீர்னு அரசு அறிவிச்சு இருக்குன்னா, அது, நம்ம மேல உள்ள அக்கறையாலயா... இல்லவே இல்லை. அவங்க, 10 டிரெயின் என்ன, 60 டிரெயின் விடட்டும்... அதுல பயணம் பண்ண, நாம இங்க வாழப்போறது இல்லை."

"ரயில் பாதை அமைக்க, நம்ம மொத்த நிலத்தையும் கையகப்படுத்த, அரசு அறிவிப்பு வெளியிட்டிருக்கு... நம்ம பகுதி பூமிக்குள்ள, ஏதோ தாது இருக்காம். அதை வெட்டி எடுத்து, துறைமுகத்துக்கு கொண்டு போறதுக்காக தான் இந்த திட்டம் வர்றதுன்றது, ஊரறிஞ்ச ரகசியம். இது, உங்க எல்லாருக்கும் கூட தெரிஞ்சிருக்கும்,'' என்றான், மற்றொருவன்.



இப்போது, அந்த கிராமத்திலேயே படித்த, சிந்திக்கக் கூடிய கோபால் பேச ஆரம்பித்தான்...



''நீ சொல்றது, நுாத்துக்கு நுாறு உண்மை தான். ஆனா, நாம இன்னொரு விஷயத்தையும் யோசிக்கணும்...,

''சுந்தரம்...'' என்று தன் நண்பனை விளித்து,

''நம்ம ஊரு கிளை நுாலகத்துல, வைரமுத்துவோட, 'கள்ளிக்காட்டு இதிகாசம்' நாவலை எத்தனை முறை எடுத்து படிச்ச... வைகை ஆத்துல அணை கட்டும்போது, மக்களோட எத்தனை கிராமம், காணாமப் போனதுன்னு படிச்சிட்டு, எப்படி அழுதுருக்க...

அணையோட நீர்ப்பிடிப்பு பகுதிகள்ல காலம் காலமா வாழ்ந்தவங்களோட தியாகத்தால, எத்தனையோ ஊர், பாசன வசதி பெற்று செழிக்கிறது... ஆக மொத்தத்துல, யாரோ தியாகம் பண்ண, யாரோ வாழப் போறாங்க...

ஆனா, இப்போ, நாம காணாமப் போகப் போறோம்... நம்ம கதையை எழுத யாராச்சும் இருப்பாங்களான்னு தெரியலை... நம்ம சோகக் கதை வெளியில தெரியாமலேயே போகப் போகுது,'' என்ற கோபாலுக்கு, கண்கள் கலங்கின.



''ஏம்ப்பா... நம்ம ஊர்ல நிறைய பேர் படிச்சிருந்தாலும், எதையும் ஆராய்ஞ்சு பார்த்து, கொஞ்சம் புத்தியோட பேசுறது நீயும், சுந்தரமும் தான். இப்போ நீங்களே, அரசாங்கம் கொண்டு வந்த இந்த திட்டத்தால, நாம சமாதியாகப் போறது மாதிரி பேசுறீங்களே,'' என்றார் முன்னாள் பஞ்சாயத்து தலைவர், வீரமணி.

அதைத் தொடர்ந்து ஆளாளுக்கு பேசினர்...

''அரசாங்கத்தை எதிர்த்து, நாம எதுவும் செய்ய முடியாது... வலுக்கட்டாயமா கிளம்பணும்ன்னு உத்தரவு போட்டுட்டாங்கன்னா, நாம வேற என்ன செய்யுறது!

''நாட்டுல எத்தனையோ அணை, ரோடு, பஸ் ஸ்டாண்ட் கட்டுறாங்க... எல்லாமுமே விளைச்சல் நிலத்துக்கும், மரம் மட்டைக்கும் சமாதி கட்டித்தான் எழும்பி நிக்குது.



''இன்னைக்கு நஷ்டம் நமக்குன்னு சொன்னதும், புலம்பி தவிக்கிறோம். பக்கத்து ஊர்ல மெடிக்கல் காலேஜ், கலெக்டர் ஆபீஸ், பஸ் ஸ்டாண்ட், கோர்ட்டுன்னு மொத்தமா நிலத்தை வளைச்சப்போ, நாம யோசிச்சோமா?''

''நிலத்தை, வீட்டை விட்டு வெளியேறுறது பிரச்னை இல்லை. அரசாங்கத்தோட திட்டத்துக்காக, நிலம் எடுக்குறப்ப, சில பெரும் முதலாளி, பண்ணையாருங்க, வேணும்ன்னா, அரசாங்கத்துகிட்ட இருந்து, சாமர்த்தியமா, நஷ்ட ஈடு வாங்கி, வேற முதலீடு பண்ணி முன்னேறி இருப்பாங்க...

''ஆனா, நம்மள மாதிரியான சாமானிய ஆளுங்களுக்கு, சந்தை விலை இல்லாம, அரசாங்கத்தோட, 'கைடு வேல்யூ'படி கிடைக்கிற நஷ்டஈடு, நாலு நாளைக்கு கூட காணாது. அந்த பணத்தை வெச்சு எதையும் உருப்படியா பண்ண முடியாம, அடுத்து, என்ன செய்யலாம்ன்னு யோசிக்கிறப்பவே, அந்த இத்தனுாண்டு காசும், காணாம போயிடும்...''



''விவசாயம் பார்த்துகிட்டு நிம்மதியா இருந்தவனெல்லாம், சென்னை, திருப்பூர் மாதிரி ஊருக்கு, 'வாட்ச்மேன்' வேலைக்கும், ஜவுளிக் கடை, இரும்புக் கடை வேலைக்கும் போயிடுறான்.









''இதிலும் பல பேர், சென்னை மாதிரி ஊர்ல, வாடகைக்கு வீடு பிடிச்சு, தங்க கூட வருமானம் இல்லாம, 'பிளாட்பாரத்'துல வாழ்க்கையை நடத்திட்டு இருக்காங்க... நம்ம நிலைமையும் அப்படி ஆகிடுமோன்னு பயமா இருக்கு,'' என்று, நியாயமான கவலையை வெளியிட்டார், ஒருவர்.

கடைசியாக பேசிய அந்த நபர், நிதர்சனத்தை சொன்னதும், கிராமமே அதிர்ச்சியில் உறைந்தது.



இதுபோல் நடப்பதை பத்திரிகைகளில் அவ்வப்போது படித்திருந்தாலும், ஏதோ ஒரு செய்திக் கட்டுரை என்ற அளவில் கடந்து சென்று விடுவர்.

இப்போது தங்களுக்கும் அந்த நிலைமை ஏற்படப் போகிறது என்ற அச்சம், அந்த கிராம மக்கள் கண்களில் நன்றாகவே தெரிந்தது.



''இதையெல்லாம் யோசிக்கும்போது, போராடித்தான் ஆகணும் போலிருக்கே,'' என்று இன்னொருவர் கூறவும், அவசரமாக இடைமறித்தான், சுந்தரம்...

''ஊரே திரண்டு நின்னு போராட்டம் பண்ணினா, அரசு அதிகாரி யாராச்சும் வந்து, பிரச்னையை கேட்டுட்டாச்சும் போனாங்க... அது எல்லாம் இப்ப வழக்கொழிஞ்சு போச்சு... நாம அமைதியா போராடினாலும், அதுல ஏதாவது ஒரு முறையில வன்முறையை வெடிக்க வெச்சு, போராட்டத்தை அடக்க நினைச்சா, நாம என்ன செய்ய முடியும்?



''அதனால, நான் ஒரு வழியை யோசிச்சு வச்சிருக்கேன்... அரசாங்கம் அதை செஞ்சு குடுக்கும்ன்னு நம்பறேன். நாம, நம்பிக்கையோட கேட்டுத்தான் பார்ப்போம்.



''ஒருவேளை, நம்ம கோரிக்கையை அரசு ஏத்துக்கிட்டா, நாம யாரும் சென்னை, திருப்பூர்ன்னு கூலி வேலைக்கு போய், 'பிளாட்பாரத்'துல வாழ்ந்து, 'அட்ரஸ்' இல்லாம தொலைஞ்சு போக வேணாம்,'' என்ற சுந்தரத்தை, எல்லாரும் ஆவலுடன் பார்த்தனர்.



''மார்க்கெட் விலையை விட, அஞ்சு மடங்கு நஷ்டஈடு வேணும்ன்னு கேட்கணும்...''



அப்போது ஒருவர் எழுந்து, ''அப்படி கேட்டோம்ன்னு வெச்சுக்க... இன்னைக்கு நம்மளை காலி பண்ணி விரட்டுறதுக்காக, முதல்ல சரின்னு சொல்லிட்டு, பிறகு, எத்தனை வருஷம் ஆனாலும் கண்டுக்கவே மாட்டாங்க... நாம தான் கோர்ட்டுல வழக்கு போட்டுட்டு அலையணும்.



''முன்பெல்லாம், அப்படி வழக்கு போட்டா, 20 வருஷம் கழிச்சாவது தீர்ப்பு வந்துச்சு. இப்போ, மக்கள் நலனுக்காக, நிலத்தை அரசு எடுக்குறப்ப, அது குடுக்குறதை வாங்கிட்டு போங்கன்னு, வழக்கு தள்ளுபடியானாலும் ஆச்சரியப்படுறதுக்கில்லை,'' என்றார்.





















''ஏண்ணே அவசரப்படுறீங்க... என்று இடைமறித்த சுந்தரம், 'ரேஷன்ல அரிசியா கொடுக்குறதால தான் பல குடும்பங்கள்ல சாப்பிட முடியுது... மானியத்தை, பணமா போட்டிருந்தாங்கன்னா, நிச்சயம் பொறுப்பில்லாத குடும்பத் தலைவர்கள் உள்ள குடும்பத்தினர் பட்டினி தான் கிடக்கணும்... உங்களுக்கு விஷயம் புரிஞ்சிருக்கும்'ன்னு நினைக்கிறேன்.



''அதனால, நான் என்ன சொல்றேன்னா, நாம பாடுபட்டு, நிலத்தை பசுமையா மாற்றி வெச்சிருக்கோம். அதை, நாட்டு மக்கள் நலனுக்காக, அரசாங்கம் எடுக்குறதை தடுக்குறது நியாயம் இல்லை. அதுக்கான சக்தியும் நம்மகிட்ட இல்லை.



''ஒவ்வொருத்தர்கிட்டயும் எடுக்குற நிலத்துக்கு ஈடா, அரசுக்கு சொந்தமான, ரெண்டு மடங்கு தரிசு நிலத்தை கொடுக்கட்டுமே... அந்த தரிசு நிலத்துல நமக்கு தனித்தனியா வீடும் கட்டி கொடுக்கட்டும்.



''அந்த நிலத்துல, இலவசமா, 'போர்' போட்டு தரட்டும்... இலவச மின்சாரம் கொடுக்க வேண்டாம்... அதுக்கு பதில், சூரிய மின் சக்தி மோட்டார் செட் அமைச்சு கொடுக்கட்டும்.



''ராஜஸ்தான் பாலைவனத்துல, குளங்கள் வெட்டி, மழை தண்ணீரை சேமிச்சு, சிறப்பா விவசாயம் செய்யுறாங்க... நாம, நம்ம செலவுலயோ, அரசு செலவுலயோ கூட குளம் வெட்ட வேண்டாம்... மண் பாண்டங்கள், செங்கல் செய்யுறவங்களுக்கு மண்ணை வித்தா, அவங்களே குளத்தோட அளவுக்கு மண்ணை வெட்டி எடுத்துட்டு, நமக்கான குளத்தையும், பணத்தையும் தந்துடப் போறாங்க.



''குளத்து தண்ணீரை வீணடிக்காம, சொட்டு நீர் பாசனமோ, அதைவிட மேம்பட்ட தொழில்நுட்பம் என்ன இருக்கோ அதை பயன்படுத்தி, தரிசு நிலங்களை, விளை நிலமா மாத்துவோம்... யாரோ போட்ட பாதையில போறதை விட, நாமே புது ராஜபாட்டையை உருவாக்கி, அதுல பயணம் செய்யுறது எவ்வளவு சுகம் தெரியுமா?



''நிலத்தை தர மறுத்தா தான் அரசு வலுக்கட்டாயமா நம்மை வெளியேற்றும். அதுக்கு முன், நாமளே மாற்று வழியை சொல்லி, வாழ வழி கேட்டா, செய்யாமலா போவாங்க... நம்ம கிராமம் முன்னுதாரணமாகும். தொழிற்சாலைகளும் பெருகி, இன்னொரு பக்கம் தரிசு நிலங்கள், விவசாய நிலமாவும் மாறினா, நாடு எங்கேயோ போயிடும்; நம் வாழ்வாதாரமும் பாதிக்காது.



''நாளைக்கு, இந்த மாற்று யோசனையை முன் வைத்து, அதிகாரிகள்கிட்ட கோரிக்கை வைப்போம்... இதுக்கு எத்தனை பேர் சம்மதிக்கிறீங்க,'' என்று கேட்டான், சுந்தரம்.



எல்லாவற்றுக்கும் மாற்றம் உண்டு; மாற்றம் ஒன்றே மாறாதது என்பதை, அரசன்பந்தல் கிராம மக்கள் ஏற்றுக்கொண்டதற்கு அடையாளமாக, அனைத்து மக்களின் கைகளும் உயர்ந்தன.

****

கதாசிரியர் பற்றிய குறிப்பு:



க.சரவணன்

வயது: 36, சொந்த ஊர்: திருவாரூர், படிப்பு: பி.காம்., பணி: சொந்த தொழில் - கம்ப்யூட்டர் சென்டர் வைத்து, டி.டி.பி., வேலை, அழைப்பிதழ் மற்றும் புத்தக வடிவமைப்பு பணிகளை செய்து வருகிறார்.

சிறு வயதில், தினமலர் - சிறுவர்மலர், அம்புலிமாமா, பூந்தளிர், ராணிமுத்து காமிக்ஸ் என்று படிக்க ஆரம்பித்து, ஆனந்த விகடன், வாரமலர் மற்றும் நாவல்கள் என வாசிக்கும் பழக்கத்தை விரிவாக்கி, கல்லுாரி ஆண்டு விழா மலரில், சிறுகதை எழுதி, தன் எழுத்துப் பணிக்கு, அஸ்திவாரம் போட்டுள்ளார்.

இன்று, பல இதழ்களில் இவரது சிறுகதைகள், கவிதை, கட்டுரைகள் வெளியாகின்றன. பல்வேறு சிறுகதை போட்டியில் பங்கேற்று, பரிசுகளையும் பெற்றுள்ளார்.



இந்த ஆண்டு, 'டி.வி.ஆர்., நினைவு சிறுகதை' போட்டியில், முதல் பரிசு பெற்றிருப்பது, மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.



புதன், 8 ஆகஸ்ட், 2018

கலைஞர் -


விழாவில் அன்றைய மாண்புமிகு அமைச்சர் தங்கம் தென்னரசு, "என்னப்பா...கல்யாணம் எப்ப வெச்சிருக்க...எந்த மண்டபம்...மாப்பிள்ளை என்ன படிச்சிருக்காரு...அப்படின்னு கேள்வியா கேட்டு அடுக்குவாரு ஒருத்தரு. எப்பன்னு கேட்குறீங்கிளா?...பொண்ணோட கல்யாணப் பத்திரிகையை கொடுக்க வந்தவர்கிட்ட பத்திரிகையை வாங்கி கையில வெச்சுகிட்டே இவ்வளவு கேள்வி வரும். படிக்கிற பழக்கம் அந்த அளவுக்குதான் இருக்கு. இந்த நிலை மாறனும்." அப்படின்னு பேசினார்.















கலைஞர் ஒரு படைப்பாளி மட்டுமல்லாது மிகச் சிறந்த படிப்பாளியாகவும் இருந்தது அனைவரும் அறிந்ததே... அவரைச் சுற்றி இருந்தவர்களும் வாசிப்பு முக்கியம் என்பதை உணர்ந்திருந்தார்கள் என்பதையே இந்த பேச்சு உணர்த்தியது.



கட்டுரையை முழுவதும் படிக்க....

சனி, 9 டிசம்பர், 2017

தமிழ்செல்வனுக்கு வேதாளம் சொன்ன பதில்கள்...











இந்த தொடர் யாரையும் இழிவுபடுத்த வேண்டும்
என்ற எண்ணத்தில் எழுதவில்லை. சமீப காலமாக நாட்டில் நடக்கும் சம்பவங்களைப் பார்க்கும்
போது அவற்றில் சில வேதனையான சம்பவங்கள் மிகவும் மனதை பாதிக்கின்றன. இந்த மாதிரி பிரச்சனைகளுக்கு
தீர்வுகள் யார் கையில் இருக்கின்றது என யோசிக்கும்போது, மனிதர்கள் அனைவருமே சூழ்நிலைக்
கைதிகளாக இருப்பதாக எனக்கு தோன்றுகிறது.




ரஜினிகாந்த்துக்கு வேதாளம் சொன்ன பதில்கள்... இப்படித்தான் தலைப்பு வைக்க எண்ணினேன். மக்களின் எதிர்வினை எப்படி இருக்குமோ என்ற அச்சம் இருந்ததால் அந்த எண்ணம் காணாமல் போய்விட்டது.







பதிவை முழுவதுமாக படிக்க...








சனி, 25 நவம்பர், 2017

புத்தக விமர்சனம் - சுழிக்காற்று







இது வரை நான் படித்த புத்தகங்களில் அளவுக்கு அதிகமாக தொடக்கம் முதல் முடிவு வரை ஏகப்பட்ட அச்சுப்பிழைகளுடனும், நாலைந்து வரிகள் ஆங்காங்கே திரும்ப திரும்ப Copy & Paste ஆகி இருப்பதும் இந்த புத்தகத்தில்தான் என்று நினைக்கிறேன்.





எழுதியவர் கௌசிகன்



வெளியீடு : லட்சண்யா பப்ளிகேஷன்


5/4, காந்தி தெரு,


மேற்கு மாம்பலம்,


சென்னை -33






70களில் கல்கியில் வெளிவந்த தொடர்கதை... சுதந்திர இந்தியாவில் நடைபெறும் கதை. கதை நடக்கும் ஆண்டு குறிப்பிடப்படவில்லை என்பதால் 1960 முதல் 70 காலகட்ட சம்பவங்கள் போல் சித்தரிக்கப்பட்டிருப்பதாக எனக்கு தோன்றுகிறது. 





பண்ணை விவசாயம் செய்து வந்த ஒரு ஜமீன்தார், உலகப்போர் காலகட்டத்தில் ராணுவத்துக்கு உணவு சப்ளை செய்யும் காண்ட்ராட்க்ட் தொழில் செய்து கோடிக்கணக்கான சொத்துக்கு அதிபதி. யுத்தம் முடிந்து உணவு சப்ளை ஒப்பந்தம் இல்லை என்றாலும் இறைச்சி உள்ளிட்ட உணவு பதார்த்தங்களை பாதுகாக்க ஆங்கிலேய அரசால் வழங்கப்பட்ட மெகா குளிர்சாதன பெட்டி (ஃப்ரிட்ஜ்) இன்னும் நல்ல நிலையில் இயங்கிக்கொண்டிருப்பதாக கதையில் இடையிடையே சொல்லப்படுகிறது. அந்த பண்ணை தொடர்பான ஊழியர்கள் அடுத்தடுத்து கொல்லப்படுவதும், மர்ம முடிச்சுகள் அவிழ்வதும்தான் கதை.





ஜமீன்தார் தர்மலிங்கம் படுத்த படுக்கையில் இருக்கிறார். ஜமீன்தாரின் மகன் கந்தசாமியும் படுக்கையில். கந்தசாமியின் மனைவி ஒரு மகள் மஞ்சுளாவை விட்டுவிட்டு இறந்துவிட்டதால் கோகிலாவை இரண்டாவது திருமணம் செய்து கொள்கிறார்.





தர்மலிங்கம் இறந்துவிட, அவரது அடக்கம் முடிந்தவுடன் மஞ்சுளா திரும்ப ஊருக்கு புறப்படுகிறாள். ரயில் ஏறுவதற்குள் படுக்கையில் இருந்த கந்தசாமியும் இறந்த தகவல் எதேச்சையாக தெரிய வர, மஞ்சுளா ஊருக்கு செல்லாமல், தந்தையின் உடலை பார்க்க வருகிறாள். அவரது உடலும் அவசர அவசரமாக புதைக்கப்படுகிறது. மஞ்சுளாவின் காதலன் துப்பறிகிறான்.





முடிவில் தர்மலிங்கம் இறக்கும் முன்பே 15 நாட்களுக்கு முன்னதாக புயல்காற்று அடித்த நாள் அன்றே கந்தசாமி இறந்துவிடுகிறார். கந்தசாமி இறந்ததை வெளியில் சொல்லாமல் மெகா பிரிட்ஜ்-களில் வைத்து பாதுகாத்து, தர்மலிங்கம் அடக்கம் முடிந்த அன்று இரவே கந்தசாமியும் இறந்து விட்டதாக வெளியில் சொல்லியிருக்கிறார்கள் என்பது தெரியவருகிறது.





தர்மலிங்கத்துக்கு முன்னதாகவே கந்தசாமி இறந்து விட்ட விஷயம் தெரிந்த நர்ஸ், கணக்குப்பிள்ளை, நர்ஸ்-ன் அண்ணன், இந்த உண்மை தெரிந்த அந்த ஊர் டாக்சி டிரைவர் ஆகியோர்தான் கதையின் தொடக்கத்திலிருந்து ஒவ்வொருவராக கொல்லப்படுபவர்கள்.





நோய்வாய்ப்பட்டு படுக்கையில் இருந்த நபர் இறந்தவர் பற்றிய செய்தியை ஏன் அவர் தந்தை இறக்கும்வரை உலகத்துக்கு தெரியவிடாமல் வைத்து விட்டு பிறகு வெளியில் சொல்லப்பட வேண்டும்?





தர்மலிங்கம் இறந்த பிறகு அவர் மகன் கந்தசாமி இறந்தால் மொத்தம் உள்ள 4 கோடி சொத்துக்களில் (இந்தியா சுதந்திரமடைந்த பிறகு 1950 அல்லது 60களில் 4 கோடி என்று கதை புனையப்பட்டுள்ளது.) கந்தசாமியின் இரண்டாவது மனைவி கோகிலாவுக்கு 2 கோடியும், முதல் மனைவியின் மகள் மஞ்சுளாவுக்கு 2 கோடியும் கிடைக்கும்.


















ஆனால் தர்மலிங்கத்துக்கு முன்பே கந்தசாமி இறந்து விட்டால் கந்தசாமியின் பெயரில் உள்ள சுமார் 6 லட்சம் தொகை கூட சரி பாதியாக இரண்டாவது மனைவி கோகிலாவுக்கும், மகள் மஞ்சுளாவுக்கும் செல்லும். தர்மலிங்கம் இறப்புக்கு பின்னர் 4 கோடி சொத்தும் பேத்தி மஞ்சுளாவுக்கு மட்டும் சொந்தம் என்று உயில் இருப்பதால்தான் கந்தசாமி அவரது தந்தை தர்மலிங்கத்துக்கு முன்பாகவே இறந்ததை மறைத்து விடுகிறார்கள்.





இந்த சதித்திட்டத்தை எப்படி நிறைவேற்றுகிறார்கள் என்று பார்ப்போம்.





கந்தசாமி தன் தந்தைக்கு பக்கத்தில் இன்னொரு படுக்கையில் இருந்த நிலையில் புயல் அடித்த அன்று கந்தசாமி இறந்ததும் விஷயம் யாருக்கும் தெரியாமல் சீரியஸ் என்று மட்டும் வெளியில் சொல்லப்படுகிறது.





குடும்ப டாக்டருக்கு போன் செய்ததும் அவர் உடனடியாக வர முடியாத அளவுக்கு மழை, இன்னொரு கேஸ் அட்டண்ட் செய்தல் என்று தடங்கல் ஏற்படுகிறது. அடுத்த நாள் காலையில் வரும்போது கந்தசாமியின் இரண்டாவது மனைவி டாக்டரை சத்தம் போட்டு விரட்டிவிடுகிறாள். உங்களை நம்பி அவரை வெச்சிருந்தா இன்னேரம் இறந்திருப்பார். அதனால என் அண்ணன் டாக்டர்தான் அவரை வெச்சி இனிமே சிகிச்சை செய்துக்குறோம் என்று சொல்லவும் டாக்டர் குற்ற உணர்ச்சியில் ஒதுங்கி விடுகிறார்.





அடுத்து உண்மை தெரிந்த நர்சையும் வேலையை வீண் பழி சுமத்தி விட்டு விரட்டி விடுகிறார்கள். (பின்புதான் அவள் கொல்லப்படுவாள்) கணக்குப்பிள்ளையையும் கொலை செய்து, அவன் டிராக்டர் விற்ற பணத்துடன் ஓடிவிட்டதாக கதை கட்டி விடுவார்கள்.





ஜமீன்தார் தர்மலிங்கத்தையே மகனை பார்க்க விடமாட்டார்கள். ஏன், புது நர்ஸ், இரண்டாவது மனைவி கோகிலா, அவள் சகோதரனான டாக்டர் ஆகிய மூவரைத் தவிர வேறு யாருமே கந்தசாமியை பார்க்கவே முடியாது. யார் கேட்டாலும் அவருக்கு ஓய்வு தேவை என்று ஒரே பாட்டைப் பாடி அனுமதிக்கவே மாட்டார்கள். கந்தசாமியின் மகளைக்கூட தந்தையை பார்க்க அனுமதிக்க மாட்டார்கள். ஆனாலும் அவள் கந்தசாமியை ஒரு முறை பார்த்து பேசுவார். (அது எப்படி பிணத்துடன் பேசினாள் என்று நீங்கள் கேட்கலாம். அது சஸ்பென்ஸ். வேண்டுமானால் கதையை படித்து தெரிந்து கொள்ளுங்கள்.) 





பிறகு தர்மலிங்கம் இறந்த பிறகு ஒரு நாளைக்குள்ளாகவே கந்தசாமி இறந்ததாக அறிவிக்கப்படும். அப்போது குடும்ப டாக்டர் வந்து, நான் கடைசியா உங்க அப்பாவுக்கு கழுத்துல இருந்த கட்டியை கிழிச்சு மருந்து போட்டேன். ஆனால் அந்த காயம் 15 நாளா கொஞ்சம் கூட ஆறாம இருந்துருக்கு என்று வியப்படைவார். அதை வைத்து கந்தசாமியின் உடல் 15 நாட்கள் ஃப்ரிட்ஜ்-ல் இருந்திருக்கும் என்று துப்பறிபவர் கண்டுபிடிக்கத்தொடங்குவதாக போகும் இந்த மர்ம நாவல்.





கதையை படித்ததும் உங்களுக்கு என்னென்னவோ தோன்றுகிறதா... நல்லது... அது எதையும் கமெண்ட்-டில் சொல்ல வேண்டாம். 





இதை எதுக்கு சொல்றேன்னா, 





நமக்கு ஏன் சார் வம்பு... இருக்குற எடம் தெரியாம இருந்துட்டு போயிடணும்....





*****************************************************


வாண்டுமாமா





இப்போது 32 வயதுக்கு மேல் இருப்பவர்களில் சிறு வயது வாசிப்பு பழக்கம் இருந்திருந்தால் வாண்டுமாமா என்ற பெயரை தெரியாமல் இருக்காது.









சிறுவர் இலக்கியமென்றால் முதலில் நினைவுக்கு வருமிருவர் குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா. மற்றவர் வாண்டுமாமா ( இயற்பெயர் வி.கிருஷ்ணமூர்த்தி ). அழ வள்ளியப்பா குழந்தைகளுக்காக, குழந்தைகள் இரசிக்கும்படியான அற்புதமான கவிதைகள் எழுதியவர். வாண்டுமாமாவோ குழந்தைகளுக்காக கதைகள், கட்டுரைகள் போன்றவற்றை எழுதியதுடன் குழந்தைகளுக்கான சஞ்சிகைகளின் ஆசிரியராகவும் (பூந்தளிர், கோகுலம்) தன் பணியினைத் தொடர்ந்தவர். அறிவியல், இலக்கியம், வரலாறு எனப் பல்வேறு துறைகளிலும் குழந்தைகளுக்கு எளிமையாக, சுவையுடன், புரியும் வண்ணம் கட்டுரைகளை, கதைகளைப் படைத்தவர் வாண்டுமாமா. இவரது நூல்கள் பலவற்றை வானதி பக்கம் மிகவும் அழகாக, சித்திரங்களுடன் வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அப்பா சொன்ன கதைகள், தாத்தா சொன்ன கதைகள், பாட்டி சொன்ன கதைகள் என்று பல தொகுதிகளை வானதி பக்கம் வெளியிட்டது நினைவுக்கு வருகிறது. வாண்டுமாமா சிறுவர்களுக்காக எழுதியதுடன் பெரியவர்களுக்காகவும் எழுதியிருக்கின்றார். கல்கி சஞ்சிகையுடன், அதன் இன்னுமொரு வெளியீடான கோகுலம் சஞ்சிகையுடன் இவரது வாழ்வு பின்னிப் பிணைந்துள்ளது. கல்கியில் இவர் எழுபதுகளில் கெளசிகன் என்னும் பெயரில் எழுதிய சுழிக்காற்று, சந்திரனே நீ சாட்சி ஆகிய மர்மத் தொடர்கதைகளும், பாமினிப் பாவை என்ற சரித்திரத் தொடர் நாவலும் இன்னும் ஞாபகத்திலுள்ளன.





நாங்கள் சிறுவர்களாக இருந்த சமயம், நானும் என் சகோதர, சகோதரிகளூம் கல்கியில் வெளியான இவரது 'ஓநாய்க்கோட்டை' என்னும் சித்திரத் தொடரினை விரும்பி வாசித்தோம். இப்பொழுதும் அச்சித்திரத் தொடரில் வரும் 'தூமகேது' என்னும் பாத்திரம் நினைவில் நிற்கிறது. பால்ய காலத்தில் எமக்குத் திகிலினை ஏற்படுத்திய பாத்திரங்களிலொன்று தூமகேது.





கல்கியில் அப்பொழுதெல்லாம் ஒவ்வொரு இதழிலும் சிறுவர் விருந்து என்னும் பெயரில் ஓரிரு பக்கங்கள், அழகான வர்ணச் சித்திரங்களுடன் வாண்டுமாமா தயாரித்து வழங்கிய சிறுவர் பக்கம் வெளிவரும். எனக்கு மிகவும் பிடித்த பகுதி அது. அதன் பக்கங்களைச் சேகரித்து அழகாக 'பைண்டு' செய்து வைத்திருந்தேன் ஏனைய தொடர்களைப் போல. அக்காலகட்டத்தில் ஈழநாடு (யாழ்ப்பாணம்) பத்திரிகையின் மாணவர் மலர் பக்கமும், கல்கியின் சிறுவர் விருந்து பக்கமும் (வாண்டுமாமாவின் தயாரிப்பில்) மிகவும் பிடித்த சிறுவர் பக்கங்கள். ஈழநாட்டின் மாணவர் மலர் என் மாணவப் பருவத்தில் என் எழுத்தார்வத்தை மிகவும் ஊக்கியது. கல்கியின் சிறுவர் விருந்தும், வாண்டுமாமாவின் சிறுவர் படைப்புகளும் அந்த வயதில் என்னை மிகவும் ஈர்த்தவை.





தனது தொண்ணூற்றியொரு வயதில்  (12.6.2014),   வாண்டுமாமா இவ்வுலகை நீத்தார் என்னும் செய்தி சிறிது துயரத்தினைத் தந்தாலும் அவரது வாழ்க்கை கொண்டாடப்பட வேண்டிய வாழ்க்கை. தன் வாழ்க்கையையே சிறுவர் இலக்கியத்துக்காக அர்ப்பணித்த மிகச்சிறந்த எழுத்தாளர் அவர். ஆனந்த விகடன் சஞ்சிகையில் 2012இல் எழுத்தாளர் சமஸ் இவருடன் கண்ட நேர்காணல் இவ்வாறு முடிவடைகின்றது:





‘‘கிட்டத்தட்ட முக்கால் நூற்றாண்டாக எழுதிக்கொண்டிருக்கிறீர்கள். ஓர் எழுத்தாளராக இந்த வாழ்க்கை திருப்தி அளிக்கிறதா?’’





‘‘பெரிய புகார் ஒண்ணும் என்கிட்டே இல்லை. எப்போ கிடைக்கும் எப்போ போகும்னு தெரியாத வேலை, கைக்கும் வாய்க்கும் பத்தாத சம்பளம்னே வாழ்க்கை கழிஞ்சுட்டாலும் குடும்பம் எனக்கு நெருக்கடியைத் தரலை. எனக்கு நாலு பெண் பிள்ளைகள். ஒரு பையன். எல்லாரும் இன்னைக்கு நல்லா இருக்காங்க. காரணம்... என் மனைவி. எழுதுறவன் வாழ்க்கையோட நெருக்கடிகளைப் புரிஞ்சு நடத்துக்கிட்ட புண்ணியவதி. இன்னைக்கும் பணக் கஷ்டங்கள் விட்டுடலை. ரெண்டு புஸ்தகங்கள் எழுதிக்கிட்டு இருக்கேன். ஆனா, பணம் மட்டும் வாழ்க்கை இல்லையே?’’





பணம் , பணம் என்று வாழ்க்கையையே பணத்துக்காக வீணாக்குவோர் மத்தியில் 'பணம் மட்டும் வாழ்க்கை இல்லையே' என்பதை நன்கு விளங்கி, தன் ஆற்றலை, சமூகப்பங்களிப்பை சிறுவர் இலக்கியத்துக்காக அர்ப்பணித்த எழுத்தாளரான வாண்டுமாமாவின் நினைவுகளும் , அவரது படைப்புகளும் என்றென்றும் எம்முடனிருந்து வரும்.





-நன்றி வ.ந.கிரிதரன், 


http://www.geotamil.com/pathivukalnew/index.php?option=com_content&view=article&id=2147:2014-06-14-03-59-50&catid=28:2011-03-07-22-20-27