Search This Blog

சனி, 30 ஜனவரி, 2010

ஓப்பனிங் எல்லாம் நல்லாத்தான் இருக்கு. ஆனா ஃபினிஷிங் சரியில்லையேப்பா...

இன்னும் மூன்று மாதங்களுக்குள் நூலகத்தில் 50 லட்சம் மாணவர்களை உறுப்பினர்களாக சேர்க்கப்போவதாக 30.01.2010 தினமலர் நாளிதழில் செய்தி வெளிவந்துள்ளது.இதுவரை பத்து லட்சம் மாணவர்கள் சேர்ந்திருப்பதாகவும் இவர்களால் இரண்டரைகோடி ரூபாய் வைப்புத்தொகை சேர்ந்திருப்பதாகவும் சொல்கிறார்கள்.
இது மட்டுமல்ல, உள்ளாட்சித் துறைகளால் வசூல் செய்யப்படும் வரிகளில் அடங்கிய நூலகம் மற்றும் கல்விக்கான தொகையும் உண்டு.இந்தப் பணம் எல்லாம் உருப்படியாக செலவழிக்கப்படுகின்றனவா என்று பார்த்தால் ஏமாற்றம்தான் மிஞ்சுகிறது.

சென்னை மாநகராட்சியில் மட்டுமே வரியாக வசூலிக்கப்பட்டதில் கல்விக்கான தொகையில் எத்தனையோ மாநகராட்சிப் பள்ளிகளை சீரமைக்கலாம் என்று சொல்கிறார்கள்.ஆனால் அந்த தொகை வேறு பயன்பாட்டுக்கு செலவழிக்கப்பட்டுவருகிறதாம்.

குடிசைகளை அகற்றுகிறோம் என்ற போர்வையில் சென்னை நகரின் அரசுப்பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் குடும்பங்களை எல்லாம் ஐம்பது கிலோமீட்டருக்கு அப்பால் துரத்தி அடித்துவிட்டார்கள். அவ்வளவு தூரம் பிள்ளைகளை படிக்க அனுப்பமுடியாது என்று இந்த அப்பாவிகள் மன்றாடியதற்கு கோர்ட் உத்தரவை மீற முடியாது என்று ஒருவர் சொல்கிறார். சென்னை தியாகராய நகரில் விதிகளை மீறிய கட்டிடங்கள் எல்லாம் இதே கோர்ட் உத்தரவை மீறிதான் இவ்வளவு காலமாக இருக்கின்றன. இன்னமும் இருந்து கொண்டே இருக்கும்.சட்டத்தின் பிடியில் சிக்குவதெல்லாம் ஏழைகள்தானே.

இப்படி மாணவர்களை வெளியூருக்கு குடும்பத்துடன் துரத்தி அடித்து விட்டு மாணவர்களே சேரவில்லை என்று நகரின் முக்கியப்பகுதிகளில் இருக்கும் மாநகராட்சிப் பள்ளிகளை எல்லாம் மூடிவிடலாம்.அந்த இடங்களை ஊழல் அரசியல்வாதிக்கு தாரை வார்த்துவிடலாம். அவர்கள் அதை கூறு போட்டு வித்து கறுப்பு பணத்தில் புரளலாம். இந்த உண்மை புரியாமல் ஒருவர் திருட்டு வி.சி.டியால் கறுப்பு பணம் வருகிறது என்று அப்பாவியாக பேசுகிறார்.

மறுபடி நூலக விஷயத்துக்கு வருவோம்.
நூலகம் என்றால் பணம் ஒதுக்கி புத்தகம் வாங்குவதுடன் கடமை முடிந்தது என்று எந்த மடையன் நினைத்திருக்கிறானோ தெரியவில்லை.இன்னும் பல ஊர்களில் நூலகம் வாடகைக் கட்டிடத்தில் என்று இடிந்து விழலாம் என்ற யோசனையில்தான் இருக்கின்றன.

திருவாரூர் மாவட்ட மைய நூலகம் இந்த மாதிரி அவல நிலையில் இருந்து  தப்பித்து 50 லட்ச ரூபாய் மதிப்பீட்டில்(?!) புதிய கட்டிடத்தில்தான் இருக்கிறது.இணைய இணைப்புடன் கணிணிகள், பெரிய இடம் என்று கட்டமைப்புக்கு குறைவே இல்லை.ஆனால் பயன்படுத்தும் வாசகர்கள் எண்ணிக்கையைப்பார்க்கும்போது வேதனைதான் மிஞ்சுகிறது.

நூலகத்தின் உள்ளே உள்ள குறைகள் என்று சொன்னால் பணியாளர்களைத்தான் என் கைவிரல் சுட்டிக்காட்டுகிறது.காலை எட்டு மணி முதல் இரவு எட்டு மணிவரை என்றுதான் வேலை நேரத்தைக் குறிப்பிட்டிருக்கிறார்கள். ஆனால் தினமும் காலை 8.15 முதல் 8.30 மணி வரை எப்போது வேண்டுமானாலும் திறப்பார்கள். தனியார் கடைகளில் வேலை செய்பவர்கள் காலை ஒன்பது மணிமுதல் இரவு பத்துமணிவரை அவதிப்படுகிறார்கள்.
ஆனால் இங்கே காலை எட்டு முதல் இரண்டு மணிவரை ஒரு ஷிப்டும் மதியம் இரண்டு மணிமுதல் இரவு எட்டு மணிவரை இரண்டாவது ஷிப்டும் செயல்படும். ஆறுமணி நேரம்தான் நிரந்தர ஊழியர்களுக்கு பணி. ஆனால் காலை எட்டு மணிக்கு ஒரு நாளும் திறப்பது கிடையாது. வருகைப்பதிவேட்டில் மட்டும் காலை ஏழரை மணி என்று குறிப்பிட்டு விடுவார்கள். எனக்கு என்னவோ வாசகர்களுக்குதான் ஏழரை என்று தோன்றுகிறது.

பின்ன என்னங்க.காலையில ஒன்பது மணிக்கு வேலைக்கோ பள்ளிக்கூடத்துக்கோ போக நினைக்குறவங்க எட்டு மணிக்கெல்லாம் நூலகம் வந்துட்டு ஒரு அரைமணி நேரம் எதாவது படிச்சுட்டு இல்ல புத்தகம் தேடி எடுத்துட்டு போகலாம்னு வந்து பார்த்தா எட்டரை மணி வரை திறக்க மாட்டாங்க. அப்புறம் அரை வெளியில போக வேண்டிய அவசரத்துல இருக்குறவங்க எப்படி நூலகத்துக்கு வருவாங்க?

அடுத்து வாரஇதழ்கள் பிரச்சனை.திருவாரூர் நூலகத்துக்கு சில வார இதழ்கள் ஒரு கடையிலதான் வாங்கிட்டு வருவாங்க. அது சரியான நேரத்துக்கு நூலகம் வந்து சேராது.ஆளாளுக்கு இது என் வேலை இல்லை, உன் வேலை இல்லைன்னு பல நேரங்கள்ல பதினைந்து நாட்கள் வரை புத்தகங்கள் வந்து சேராது. திருவாரூர் நகரின் மையப்பகுதியில் இருந்து கிட்டத்தட்ட ரெண்டு கிலோ மீட்டர் தூரத்துல இருக்குற நூலகத்துக்கு வந்து புத்தகங்கள் இல்லைன்னா அடுத்து போகத்தான் வேணுமான்னு யோசிப்பாங்க.

ஆனா இப்படி இருபது நாள் கழித்து எடுத்துட்டு வர்ற புத்தகத்தை சில ஊழியர்களே வீட்டுக்கு எடுத்துட்டுப்போய்ட்டு மறு நாள் மதியம்தான் கொண்டுவருவாங்க. அதுக்கு இடையில யாராவது கேட்டா, யாரோ வாசகர்தான் திருடியிருப்பாங்க அப்படின்னு சொல்லிட்டா அவங்க வேலை முடிந்தது.

அப்ப அவங்க சின்சியரா வேலையே பார்க்குறது இல்லையான்னுதானே கேட்குறீங்க? ஏன் இல்லை...இரவு எட்டு மணிக்குப் பூட்டுறதுக்காக ஏழரை மணிக்கே வாசகர்களை மறைமுகமா விரட்ட ஆரம்பிச்சுடுவாங்களே.

அடுத்து திருவாரூர் நூலகத்துக்கு போறதுல வயசானவங்களுக்கும் குழந்தைகளுக்கும் உள்ள பிரச்சனையைப் பத்தி பார்ப்போம்.
நாகப்பட்டணம் போற புறவழிச்சாலையில ஒரு வயலுக்குள்ளதான் நூலகம் அமைந்திருக்கு. அரைமணி நேரம் நூலகத்துல இருக்குறதா இருந்தாலும்  திருவாரூர்ல இருந்து போறவங்க சாப்பாடு எடுத்துட்டுப் போறது நல்லது. ஏன்னா, மேம்பாலத்துல ஏறி இறங்குறதுக்குள்ள சாப்பிட்டது எல்லாம் செரிச்சுடும்.

அடுத்த பிரச்சனை, இது தேசிய நெடுஞ்சாலையா இருக்குறதால கனரக வாகனப் போக்குவரத்தும் மிக அதிகம். ரயில்வே மேம்பாலத்துல ரெண்டு பேருந்து போற அளவுக்குதான் வழி இருக்கு. ஆனா இரண்டு பக்கமும் தலா ஒரு அடி அகலத்துக்கு மண் குவிஞ்சு கிடக்கும். அதுல சைக்கிள், மோட்டார் சைக்கிள் ஓட்டுறது கஷ்டம். அதனால கொஞ்சம் விலகி போகும்போது எதிரும் புதிருமா இரண்டு பேருந்து வந்தா அவ்வளவுதான், அவங்க அடிக்கிற ஹாரன் சவுண்டுல நூலகத்துல எவ்வளவு சத்தம் இருந்தாலும் சைலன்ஸ் தான்.

பெரியவங்களே இந்தப் பாதையில போறது கஷ்டம்.அப்புறம் எப்படி சின்னப்பசங்களை அனுப்புவாங்க?படிக்கிறதுன்னா கஷ்டம் இருக்கத்தான் செய்யும். அப்படின்னு நீங்க சொல்றீங்க. ஆனா அதுக்கு உயிரோட இருக்கணுமே அப்படின்னு அவங்க சொல்றாங்க.

நாயகன் படத்துல "நாலு பேர் நல்லா இருக்கணும்னா எதுவுமே தப்பு இல்லை." -இந்த வசனத்தை அரசியல்வாதிங்கதான் ரொம்ப கெட்டியா புடிச்சுகிட்டாங்க.234 பேர் வருஷத்துக்கு சில நாட்கள் மட்டும் கூடப்போற சட்ட சபைக்கு கொடுக்குற முக்கியத்துவம் ஏழை மாணவர்கள் மேல இல்லை.

கமிஷன் அடிக்கிறதோட அரசியல்வாதி தொடர்புடைய யார் யார் பலனடைவாங்க அப்படின்னு  பார்க்குறதோட சரி.அந்த வேலை மக்களுக்கு உபயோகமா இருக்குமா அப்படின்னு எல்லாம் யோசிக்குறதே இல்லை. திருவாரூர்ல பஸ்ஸ்டாண்ட் நெரிசலான பகுதியில இருக்கு.அதை ஊருக்கு வெளியில கொண்டு போனா மக்களுக்கு நல்லது. ஆனா சில வியாபாரிங்க அப்படி செய்யவிடலை. ஆனா நூலகத்தை பொறம்போக்குல.... ச்சை...புறநகர்ல கட்டிவெச்சுட்டாங்க.
ஐம்பது வரிகளுக்குள்ள இந்த பதிவை எழுதிடலாம்னு நினைச்சேன். முடியலை. எழுத எழுத கோபம்தான் வருது. அதனால இப்ப இதோட நிறுத்திக்குறேன்.

சினிமா தொடர்பான ஒரு சந்தேகம்: சினிமாவைக் கிண்டல் பண்ணி அப்பப்ப படம் வந்திருக்கு. அதோட சில சினிமாக்காரர்களோட கண்டனமும்தான்.இப்ப வந்திருக்குற "தமிழ்ப்படம்"  சினிமாக்காரங்க யாரும் மூச்சு விடலையே. இதுக்குப் பேர்தான் பரமசிவன் கழுத்துல இருந்துகிட்டு பாம்பு கருடன்கிட்ட வாலாட்டுறதோ?

4 கருத்துகள்:

  1. தொடர்ந்து எழுதுங்க... ஒரு நாள் வெற்றி கிடைக்கும்

    பதிலளிநீக்கு
  2. இந்த பிரச்சனைகள் ஊருக்கு ஊர் இருக்குங்க... இதை அப்படியே ஜுனியர் விகடனுக்கு, நக்கீரனுக்கு அனுப்புங்க... சம்பந்தபட்டவர்களுக்கு தெரியவரட்டும்...அப்பயும் ஒண்ணும் பண்ணமாட்டானுங்க... சும்மா ஒரு பார்மாலிட்டிக்கு அனுப்புங்க...

    //தமிழ்ப்படம்" சினிமாக்காரங்க யாரும் மூச்சு விடலையே. இதுக்குப் பேர்தான் பரமசிவன் கழுத்துல இருந்துகிட்டு பாம்பு கருடன்கிட்ட வாலாட்டுறதோ?//

    அதிகாரத்தை கைல வச்சுருக்கறவன்கிட்ட அதிகாரம் காமிச்சா என்னாகும்னா தெரியாதா??

    பதிலளிநீக்கு
  3. //இந்த பிரச்சனைகள் ஊருக்கு ஊர் இருக்குங்க... இதை அப்படியே ஜுனியர் விகடனுக்கு, நக்கீரனுக்கு அனுப்புங்க... சம்பந்தபட்டவர்களுக்கு தெரியவரட்டும்...அப்பயும் ஒண்ணும் பண்ணமாட்டானுங்க... சும்மா ஒரு பார்மாலிட்டிக்கு அனுப்புங்க...//

    சரியா சொன்னீன்க...நீங்க வேற அய்.அய்.டி கிட்ட உள்ள முக்கிய சலையையே கேவலமா வச்சிருக்கானுங்க இந்த லஞ்ச புழுக்கள்..

    பதிலளிநீக்கு
  4. "திருவாரூர்ல பஸ்ஸ்டாண்ட் நெரிசலான பகுதியில இருக்கு"

    திருச்சி, பெங்களூர் போன்று திருவாரூர் மட்டுமே ரயில்நிலையமும் பஸ் ஸ்டாண்டும் சேர்ந்து உள்ளது. அருகில் உள்ள CRC டெபோவை தண்டலைக்கு மாற்றிவிட்டு பஸ் ஸ்டாண்டு டெபோ சேர்த்து மிகபெரிய பஸ் ஸ்டாண்டு கட்டலாம்.

    பதிலளிநீக்கு