Search This Blog

சனி, 10 நவம்பர், 2012

மின் தடையால் என்ன நன்மை

5ஆம் வகுப்பு மாணவனின் கொடூர சிந்தனை - இந்த பதிவுடன் தொடர்புடைய சிறு செய்தி பதிவின் இறுதியில்....

இது கிட்டத்தட்ட மீள்பதிவுதான். இந்த தலைப்பில் இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பதிவிட்டிருந்தேன். இப்போது புதிதாக இப்படி தலைப்பிட்டு எழுதினால் அக்கம்பக்கத்து வீட்டில் இருப்பவர்களே கிழித்து தொங்கவிட்டுவிடுவார்கள். அந்த பழைய பதிவை சிவப்பு நிறத்தில் கொடுத்திருக்கிறேன்.

அதே விஷயத்தை எழுதும்போது இப்போதைய காலகட்டத்தில் எவ்வளவோ செய்திகள் சேர்க்க வேண்டியிருந்தன. இன்றைய செய்தித்தாள் நாளைய குப்பைத்தாள் என்று பாடப்புத்தகத்தில் படித்திருக்கிறேன். ஆனால் இன்றைய இணைய யுகத்தில் ஒரு மணி நேரம் கழிந்தாலே குப்பையாகி விடுகிறது அந்த சூடான செய்தி. அந்த வகையில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு எழுதிய பதிவில் அவ்வளவு விஷயங்களும் மாறியிருப்பதில் ஆச்சரியப்பட ஒண்ணும் இல்லை.
 **********************
தினமும் இரண்டு மணி நேரம் மின்தடை  என்பது சிறுநகரங்களில் உள்ள பலருக்கும் இப்போது பழகி விட்டது. எந்த அளவுக்கு என்றால் அந்த மின்தடையால் நமக்கு ஏதாவது நன்மை உண்டா என்ற கோணத்தில் சிந்திக்க வைக்கும் அளவுக்கு.

நமக்கு கொஞ்சூண்டாவது மின் கட்டணம் குறையும் என்பது ஒரு புறமிருக்க, இந்த மின் தடை தினமும் காலை ஆறு மணிமுதல் எட்டு மணிவரை இருந்தபோதுதான் நகராட்சிக்குழாயில் போதுமான அளவு குடிநீர் கிடைத்தது.

காரணம் அனைவரும் அறிந்ததுதான். பலரும் மின்சார மோட்டார் மூலம் நகராட்சிக் குடிநீரை வேகமாக உறிஞ்சி விடுவார்கள். என்னை மாதிரி இன்னும் காந்திய வழியை நம்பிக்கொண்டிருப்பவர்கள் பற்றாக்குறையான குடிநீரை மட்டும் வைத்து எப்படியாவது சமாளிப்போம். வசதி படைத்தவர்கள் இந்த நீரை வைத்து வாகனங்கள் கூட கழுவுவார்கள். அவர்கள் வீட்டில் உள்ள ஆழ்துளைக் கிணற்றுநீரைப் பாதுகாக்கிறார்களாம்.

பல ஊர்களிலும் காலை ஆறு மணிமுதல் எட்டு மணிவரைதான் பெரும்பாலும் குடிநீர் விநியோகம் இருக்கும். அந்த நேரத்தில் மின்சாரம் தடைபட்டதால் எங்களுக்கெல்லாம் போதுமான அளவு தண்ணீர் கிடைத்தது.

இப்போது மீண்டும் காலை எட்டு மணிமுதல் பத்துமணிவரை என்று மின்தடை. திருடர்கள் பாடு ஜாலி. என்னை மாதிரியான காந்தியவாதிகளுக்கு மறுபடியும் ஒரு சோதனை. இப்படித்தான் மனதைத் தேற்றிக்கொள்ள வேண்டும். வேறு வழி?
******************************
அப்போது இரண்டு மணி நேர மின் தடை பழகிவிட்டதாக எழுதியிருந்தேன். ஆனால் இப்போது பல ஊர்களில் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை உள்ள 12 மணி நேரத்தில் 4 மணி நேரம் மட்டுமே மின்சாரம் வந்து எட்டிப்பார்க்கிறது. இது மாவட்ட தலை நகரத்தின் கணக்கு. கிராமங்கள் என்ன கதியாகியிருக்கிறதோ தெரியவில்லை.

பொழுது விடியும் நேரத்தில் அதாவது காலையில் 6 மணி முதல் 8 மணி வரை மின்சாரத்தின் பயனைப் பெற்றது எப்போது என்று எங்களுக்கே நினைவில்லை. அந்த நேரத்தில் நகராட்சி குடி நீர் வந்தால் மோட்டார் போட்டு உறிஞ்சுபவர்கள் பாடு திண்டாட்டம்தான் என்று நீங்கள் பகல் கனவு கண்டால் அந்த நினைப்பை மாற்றிக்கொள்ளுங்கள். (மின் வேட்டு காரணமாக மனிதர்கள் உருப்படியாக தூங்கி பல மாதங்கள் ஆகிறது. அப்புறம் எங்கே இரவில் கனவு வரும்?) இப்போது அதிகாலையில் 5 மணி முதல் 6 மணி வரை சைக்கிள் கேப்பில் மின்னலைப்போல் மின்சாரம் கிராஸ் ஆகிறது. அந்த நேரத்தில் நகராட்சி குடி நீர் வருகிறது. முன்பெல்லாம் காலை 6.10 மணிக்கு மேல் வந்த குடி நீர் இப்போது மோட்டார் வைத்து திருடுபவர்களுக்காகவே 5 மணிக்கும் 4 மணிக்கும் வருவதற்கு காரணம் என்னவாக இருக்கும்? வேற என்ன, நகராட்சி ஊழியர்களும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளும், அவர்களின் அல்லக்கைகளும் தான் இப்படி மின் மோட்டார் மூலம் குடி நீரை உறிஞ்சுபவர்களில் பெரும்பான்மையாக இருப்பார்கள்.

சென்னைக்கு 2 மணி நேரம்தான் கரண்ட் கட். மற்ற ஊர்களுக்கு 22 மணி நேரம் வரை கட். இதற்கு காரணமாக பன்னாட்டு நிறுவனங்களுக்கு 24 மணி நேரமும் கரண்ட் தருவதாக ஒப்பந்தம் போட்டிருப்பதாக சொல்கிறார்கள். இணையத்தில் மேய்ந்தபோது இப்படி தடையில்லாமல் பன்னாட்டு நிறுவங்களுக்கு வழங்கப்படும் மின்சாரம் 218 மெகாவாட் என்று படித்த நினைவு. இது உண்மையாக இருக்கும் பட்சத்தில் 2500 மெகாவாட் வரை சென்னைக்கு மட்டுமே வழங்கப்படுவதாக வேறு ஒரு புள்ளிவிவரத்தை படித்தால் எனக்கு தலை சுற்றுகிறது. எனக்கு எது உண்மைன்னு புரியலை.

பன்னாட்டு கம்பெனிகளை காரணம் காட்டி, சென்னையில் உள்ள ஹோட்டல், தியேட்டர்கள் உள்ளிட்ட கேளிக்கை விடுதிகளும் நாங்கள் நஷ்டத்தில் விழுந்தால் நாடே சுடுகாடாகிவிடும் என்று தடையில்லாமல் மின்சாரம் வாங்குகிறார்களோ என்னவோ. நம்ம நாட்டுல கோடீஸ்வரனுக்கு கோடிக்கணக்குல கடன் கொடுத்து வசூலிக்காம விட்டுட்டு, இப்போ வெளி நாட்டு மூலதனத்தை காரணம் காட்டி உள்ளூரில ஒரு நாளைக்கு 200 ரூபாயும் முன்னூறு ரூபாயும் சம்பாதிச்சவனை எல்லாம் பிச்சை எடுக்குற நிலைமைக்கு தள்ளிட்டாங்க. இதைப்பத்தி வெளிப்படையா பேசவும் பயமா இருக்கு.
*********************************
மின்வெட்டினால் மக்கள் படும் அவதிகளை இணையத்தின் பல தளங்களிலும் பொதுமக்களே பதிந்து விடுவதால்தான் அச்சு ஊடகங்கள் கொஞ்சம் கொஞ்சம் வெளியிட்டு வருகின்றன. இன்று ஒரு நாளிதழில் திருவாரூர் மாவட்டத்தில் 13 மணி நேர மின் தடையால் மக்கள் அவதிப்படுகிறார்கள் என்று பெட்டிச்செய்தி பிரசுரமாகியிருக்கிறது. உண்மையில் இன்றைய நிலவரம் காலை 10 மணி முதல் 12, மதியம் 4-6, இரவு 8-9 மற்றும் 11-12, நள்ளிரவு 2-3 பிறகு அதிகாலை 5-6 அவ்வளவுதான். சரியாக 16 மணி நேரம் மின் தடை. இது கடந்த 8 நாள் நிலவரம். தங்கம், பெட்ரோல் மாதிரியே தினசரி மின்வெட்டு நிலவரம் எகிறிக்கொண்டே இருக்கிறது. அச்சு ஊடங்கள் விதிவிலக்கு பெற்று 24 மணி நேரமும் மின்சாரம் பெறுவதுடன் இன்னும் என்னென்ன சலுகைகள் பெறுகிறார்கள் என்பது என்னைப் போன்ற சாமானியர்களுக்கு தெரியாது. அப்புறம் எதையாவது சொல்லி அவர்கள் கேஸ் போட்டால் எங்களால் சமாளிக்க முடியாது.
*********************************
5ஆம் வகுப்பு மாணவனின் கொடூர சிந்தனை என்று பதிவை தொடங்கியிருந்தேன். நீலம் புயல் தமிழகத்தை பெரிசா தாக்காம போயிடுச்சே அப்படின்னு கவலையோட சொன்னான் அந்த சின்ன பையன். ஏண்டா கவலைப்படுறேன்னு கேட்டா, மகாபலிபுரத்துல புயல் கிராஸ் ஆனதுக்கே சென்னையில ஓரளவு காத்தடிச்சு நிறைய மரம் விழுந்ததால மின்சாரத்தை நிறுத்திட்டாங்க. அதனால மற்ற மாவட்டங்கள்ல அன்னைக்கு ஒரு நாள் அவ்வளவா மின் தடை இல்லை அப்படின்னு டிவியில சொன்னாங்க. இதே புயல் சென்னையில அடிச்சிருந்தா அதை எல்லாம் சரி செய்ய நாலஞ்சு நாள் ஆகியிருக்கும். அது வரை நமக்கெல்லாம் கொஞ்சம் அதிகமாவே கரண்ட் கிடைச்சுருக்குமே அப்படின்னு சொன்னான்.

எனக்கு இதைக்கேட்டு பெரிய ஷாக் எல்லாம் வரலை. நான் லேண்ட் லைன் போன் எடுத்து பேசினப்போவே 15 வயசு இருக்கும். எனக்கு செல்போன் சொந்தமானப்போ 25 வயசு. அதுவும் நான் காசு கொடுத்து வாங்குனது இல்லை. நண்பர் கொடுத்தது. அதை ஆறு மாசம் வரை பயன்படுத்திய பிறகுதான் ஆயிரம் ரூபாய்க்கு அதுவும் பழைய விலையில செல்போன் வாங்கினேன். ஆனா இப்போ 5 வயசு பையனுக்கு ஸ்மார்ட் போன் கிடைக்குது. இந்த அளவு டெக்னாலஜி மலிந்து போயிருக்கும்போது தமிழகத்துல நிலவுற மின்வெட்டு பத்தி 10 வயசு பையன் பேசுறது ஒரு மேட்டரே இல்லை.

ஆனா ஒட்டு மொத்த தமிழகமும் சென்னை மக்கள் மேல இவ்வளவு கோபத்தோட எதுவும் செய்ய முடியலையேன்னு கையைப் பிசையுறது நல்லாவே தெரியுது. சென்னைக்கு 22 மணி நேரம் கரண்ட், மற்ற ஊர்களுக்கு 22மணி நேரம் கட் அப்படின்னுங்குற விஷயத்துக்கு பின்னால பல அரசியல், அரசோட கொள்கை உட்பட இன்னும் என்னென்னவோ காரணங்கள் இருக்கும். அதையெல்லாம் அலசுறதுக்கு நான் எதுலயும் நிபணர் இல்லை.

நம்மளை விட பக்கத்து வீட்டுக்காரன் நல்லா இருக்கானே, அடுத்த வீட்டுக்காரி காஸ்ட்லியான பட்டுப்புடவை எடுத்துருக்காளேன்னு சிலர் பொறாமைப்படுவாங்க. அப்போ சில அனுபவம் வாய்ந்த பெரியவர்கள், ஏம்ப்பா இப்படி பொச பொசன்னு பொங்குற. அவன் உன் காசை வெச்சா வாங்குனான். அவன் சம்பாதிச்சான். வாங்குறான். நீயும் சம்பாதி. வாங்கு அப்படின்னு சொல்லுவாங்க.

இது நாள் வரை சென்னையில் நடிகர்கள், பெரிய தொழிலதிபர்கள், ஐ.டி. நிறுவனங்கள் உள்ளிட்ட பலரின் சொகுசு வாழ்க்கையை பார்த்து மற்ற ஊர் மக்கள் பெருமூச்சு விட்டாலும், அதன் பின்னால் ஒவ்வொரு துறையினருக்கும் ஒவ்வொரு மாதிரியான கஷ்டம் உண்டு என்பதை உணர்ந்தே இருந்தார்கள். ஆனால் மற்ற ஊர்களுக்கு மின்சாரம் கொடுக்காமல் உங்களுக்கு மட்டும் ஏன் இந்த சொகுசு வாழ்க்கைக்கான மின்சாரம் என்ற எண்ணம் நிறைய மக்களின் மனதில் பொங்கிக்கொண்டு இருப்பது புரிகிறது. நிச்சயமாக இந்த போக்கு ஆரோக்கியமானது அல்ல.

எனக்கு என்னவோ சென்னையில் உள்ள பெரிய ஹோட்டல்கள், திரையரங்கம், ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் போன்ற கேளிக்கை அதிகம் இருக்கும் இடங்களுக்கும் சமமான மின்வெட்டு என்று கோர்ட் உத்தரவு போட்டால் அடுத்த நாள் வெளி மாநிலங்களில் இருந்து விலைக்கு வாங்கி மின்சாரம் 24 மணி நேரமும் வினியோகிப்பதுடன், புதிய திட்டங்கள் 6 மாதத்துக்குள் செயல்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்று தோன்றுகிறது. தலைவலியும் வயிற்று வலியும் தனக்கு வந்தால்தானே தெரியும்?

புதன், 7 நவம்பர், 2012

பீட்சா - ரசிகர்களுக்கு ஏன் பிடிச்சது?

எல்லாரும் விமர்சனம்னுங்குற பேர்ல படத்தை தியேட்டர்ல போய் பார்த்துக்குங்க... ஒரு வசனம், ஒரு சீனைப் பத்தி கூட பேசமாட்டோம்னு எழுதிகிட்டு இருக்காங்க. நானும் விதிவிலக்கா என்ன?

நான்பேச நினைப்பதெல்லாம்னு ஒரு புத்தகம். இயக்குனர் விக்ரமன் எழுதினதுன்னு நியாபகம். அதுல "ஒரு படத்தை பார்த்த ரசிகர் தியேட்டரை விட்டு வெளியில வந்ததுக்கு அப்புறம் ஒரு லட்சம் தப்பைக்கூட கண்டுபிடிச்சு விமர்சனம் செய்யலாம். ஏன்னா விமர்சனத்துக்கு அப்பாற்பட்டு எல்லா வித மனிதர்களையும் திருப்திப்படுத்துற மாதிரி யாராலயும் படமே எடுக்க முடியாது. கதையமைப்புல என்ன காட்சி வருதோ அதுக்கு தகுந்த ரியாக்சன் மட்டும்தான் ரசிகர் முகத்துல இருக்கணும். ஆனா படத்துல ஒரு சீன் முடிஞ்சு அடுத்த சீன் ஓடிகிட்டு இருக்குறப்ப அதுக்கு முன்னால வந்த சீனைப் பத்தி தப்பு கண்டுபிடிச்சு கமெண்ட் அடிச்சா படம் படுத்துடுச்சுன்னு அர்த்தம்.' அப்படின்னு எழுதியிருந்தாருன்னு நினைக்குறேன்.

பீட்சா விசயத்துல என்னைப் பொறுத்தவரை அது நூற்றுக்கு நூறு உண்மை. இந்த படத்தோட வெற்றிக்கு காரணமே, படத்தைப் பற்றி ஒண்ணு ரெண்டு விசயத்தை நெகட்டிவா சொல்றதை படம் பார்த்து முடிச்சுட்டு தியேட்டரை விட்டு வெளியில வந்த பிறகுதான் பேசுறாங்கன்னு நினைக்குறேன். இந்த படத்துல வர்ற காட்சியமைப்பு வேற எந்த பிறமொழிப்படத்துலயும் வரவே இல்லைன்னு சத்தியம் செஞ்சு சொல்ல முடியாது. அதே மாதிரி கிளைமேக்ஸ் காட்சியும் ஒரு சில ஆங்கிலப்படங்கள்ல வந்ததுதான். சொல்லப்போனா நான் 1996-98 காலகட்டத்துல ஆங்கில திரைப்படங்கள் ஓடுற தியேட்டர்ல ஆப்ரேட்டர் அசிஸ்டெண்ட்டா இருந்தப்ப ஓடி ஓடி அறுந்து போன ரீலுக்கு சொந்தமான பல படங்களை நினைவூட்டிய கிளைமேக்ஸ்தான். (பாலியஸ்டர் பிரிண்ட்ல ரெக்கார்டிங் துல்லியம் குறைவுன்னு, சாதா பிரிண்ட் பிலிம்லதான் நல்ல நல்ல ஆங்கிலப்படங்கள் வரும். அந்த ரீல் ஓடும்போதே அறுந்து போறதும் உண்டு.)

திருவள்ளுவரே வந்து அர்த்தம் சொன்னாதான் அந்த திருக்குறளை இந்த அர்த்தத்துலதான் எழுதியிருப்பார்னு நம்புவேன்னு சொன்ன ஒரு காலேஜ் புரொபசரை நான் பார்த்திருக்கேன். அதனால சிலரோட பார்வையில எல்லா படங்கள்லயும் ஏதாவது மைனஸ் கண்டிப்பா இருக்கும். ஆனா அந்த மைனஸ் படம் உறுத்திகிட்டே இருந்து படம் ஓடும்போதே தியேட்டர்ல ரசிகர்களை நெளிய வைத்தால் படம் காலி. வெளியில வந்து பேசினா, கொஞ்ச நேரம் நம்ம கண்ணையே மறைச்சு படம் காட்டிட்டாங்களே அப்படின்னு பாராட்டத்தான் தோணுது.

என்னுடைய 10 வயசுல இருந்து 18 வயசு வரை திரையரங்களுக்கு வரும் 90 சதவீத படங்களை பார்த்துடுவேன். அதன் பிறகு கல்லூரி படிப்பு முடியும் வரை பார்க்கும் படங்களின் எண்ணிக்கை ரொம்ப குறைஞ்சுடுச்சு. அதனால நான் பெரும்பாலும் விமர்சனம் எழுதுறது இல்லை. அது தவிர கேபிள்ல ஒரு படம் போடும்போது திடீர்னு வர்ற விளம்பரங்கள் குறைந்தது அரைமணி நேரத்துக்கு நீளும். நடுவுல வேற சேனல் மாறினா எந்த சேனல்ல அந்த படம் ஓடுனுச்சுன்னு கண்டே பிடிக்க முடியாது. இந்த லட்சணத்துல எப்படி படம்பார்த்து கதை சொல்றது சாரி...விமர்சனம் பண்றது.

அதான் ரொம்ப நாள் கழிச்சு ஊரோட ஒத்து ஊத  சாரி ... விமர்சனம் பண்ண முயற்சி பண்ணியிருக்கேன். அதுக்காக படத்தைப் பத்தி என்ன எழுதியிருக்கன்னு கேட்காதீங்க. படத்தின் இயக்குனர் சில பதிவர்கள் கிட்ட படத்தோட கதையை தயவு செய்து  எழுதிடாதீங்கன்னு சொன்னாராம். நம்மகிட்ட நேரடியா சொன்னா என்ன, சக பதிவர்கள்கிட்ட சொன்னா என்ன. இயக்குனரோட வார்த்தைக்கு மதிப்பு கொடுக்கணும்ல. (நீயெல்லாம் பதிவரான்னு யாரு சார் பல்லைக் கடிக்கிறது?)

விநியோகத்தில் குளறுபடிகள்

மத்திய அரசு மண்ணெண்ணை ஒதுக்கீட்டை குறைத்துவிட்டது என்று காரணம் கூறி குறைந்தது 30 சதவீதம் குடும்ப அட்டைதாரர்களுக்கு பட்டை நாமம் சாத்தும் போக்கு உத்தேசமாக 2011ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதலாக இருக்கலாம். அப்போது முதல் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வரும் ஒரே விசயம், 10 லிட்டர் கொடுத்த இடத்தில் 7லிட்டர், 6 லிட்டர் கொடுத்த இடத்தில் 5 லிட்டர், 3 லிட்டர் கொடுத்த இடத்தில் 2 லிட்டர் என்று குறைத்து தகுதியுள்ள எல்லா கார்டு தாரர்களுக்கும் இல்லை என்று சொல்லாமல் வழங்க வேண்டும் என்பதுதான். (பல கிராமங்களில் எப்போதுமே 2 லிட்டர்தான். அது வேறு விசயம்)

ஆனால் அரசு எந்திரம் எந்திரமாகவே நடந்து கொள்கிறதோ என்று வேதனைப்பட வைக்கும் அளவுக்கு கிட்டத்தட்ட ஒண்ணேகால் வருடமாக மண்ணெண்ணைக்காக தொடர்ந்து மக்களை சாலைமறியலில் ஈடுபட வைக்கும் அளவுக்கு விநியோக முறை குளறுபடியாக இருந்தது. இதில் என்னுடைய அனுபவத்தை முதலில் சொல்கிறேன். 1997ஆம் ஆண்டு திருவாரூர் மாவட்ட தலைநகரமாக ஆனது. அப்போதெல்லாம் சம்மந்தப்பட்ட (கிராமங்களைப் போல்) ரேசன் கடைகளிலேயே மண்ணெண்ணை வழங்கினார்கள். பிறகு திருவாரூரை இரண்டு பகுதிகளாக பிரித்து பைபாஸ் ரோட்டில் ஒன்றும், காகிதக்காரத்தெருவில் ஒன்றும் என இரண்டு மண்ணெண்ணை பங்க் அமைக்கப்பட்டது. அந்த ஆண்டு எனக்கு நினைவில்லை. அதன்பிறகு மாவட்ட தலைநகரம் என்ற கணக்கில் 10 லிட்டர் மண்ணெண்ணை வழங்கப்பட்டது. பிறகு எப்படியோ வில்லங்கம் ஆரம்பித்து மாதத்தில் 5 நாட்கள் கூட உருப்படியாக மண்ணெண்ணை வழங்காமல் திருவிழா கூட்டம் போல் மக்களை கூடி அடிதடியில் இறங்க வைத்தார்கள்.

2001-2002 ஆம் ஆண்டு வாக்கில் மண்ணெண்ணை வாங்க போய் வரிசையில் நின்றால் குறைந்தபட்சம் 5 மணி நேரம் ஆகும். நான் அப்படி வரிசையில் காத்து நிற்கும் நேரத்தில்தான் பொன்னியின் செல்வன் நாவலின் 5 பாகங்கள் உட்பட பல கதைப்புத்தகங்களை (வெவ்வேறு மாதங்களில்) படித்து முடித்தேன். பிறகு 2004ஆம் ஆண்டில் ஒரு நாளைக்கு 200 கார்டுக்கு மண்ணெண்ணை என்ற சுழற்சி முறை அறிமுகப்படுத்தப்பட்டது.

அதுவரை ஒரு நாளில் எவ்வளவு பேர் வருவார்கள் என்று தெரியாமல் எப்படி எந்த பணத்தை கட்டி மண்ணெண்ணை வாங்கி வைக்க முடியும் என்று சாக்குப்போக்கு சொல்லி தப்பித்துவந்தவர்களுக்கு சுழற்சி முறை மிகப்பெரிய ஆப்பு வைத்தது. ஒவ்வொரு மாதத்தின் முதல் திங்கள் கிழமையா?. அன்று உள்ள 200 கார்டில் 10 லிட்டர் எத்தனை கார்டுகளுக்கு, 3 லிட்டர் எத்தனை கார்டுகளுக்கு என்று துல்லியமாக தெரிந்துவிடுவதால் அதிகமாக ஏமாற்றி பொய் கணக்கு எழுத முடியாமல் போயிருக்கும்.

ஆனால் பொதுமக்களுக்கு இந்த முறை மிகப்பெரிய வரப்பிரசாதம். குறைந்தபட்சம் 10 நிமிடம் முதல் 30 நிமிடத்திற்குள் மண்ணெண்ணை கிடைத்து விடும். இப்போது கடந்த ஆண்டு மத்திய அரசின் ஒதுக்கீடு குறைந்ததை காரணம் காட்டி, பேருந்தில் முதலில் ஏறுபவருக்கு உட்கார இடம் என்ற பாணியில் 5ஆயிரம் கார்டுதாரர்களும் நள்ளிரவு 1 மணிக்கே வந்து வரிசையில் நின்று  மண்ணெண்ணைக்காக போராடி அடிதடியுடன் வரிசையில் நிற்க வேண்டிய அவல நிலைக்கு தள்ளப்பட்டார்கள்.

இந்த கலவரத்தை அடக்க மாவட்ட நிர்வாகம் போலீசாரை அனுப்பி வைத்ததுடன் விநியோகமுறையை ஒழுங்கமைக்க உருப்படியான நடவடிக்கை எடுக்கவில்லை. போலீசாருக்கு இது போன்ற வேலைகள் எல்லாம் கூடுதல் பணிச்சுமையாகத்தான் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

இந்த மாதிரி பொருட்கள் எல்லாம் எனக்கு மானிய விலையில் தேவையில்லை, நான் உழைத்து சம்பாதித்துக்கொள்கிறேன் என்ற மனநிலைக்கும் என்னால் செல்ல முடியவில்லை. தினசரி இரண்டு முதல் 4 மணி நேரம் மட்டுமே மின்சார விநியோகம் இருப்பதால் என்னால் ஒரு நாளைக்கு 50 ரூபாய் சம்பாதிப்பதே பெரும்பாடாகிவிருகிறது. இந்த நிலையில் இப்படி பொதுவிநியோகத்திட்டத்தில் கிடைக்கும் பொருளுக்கு கையேந்தி நாள் முழுவதும் காத்துக்கிடந்தாலும் கிடைக்குமா கிடைக்காதா என்று ஜோசியம் பார்க்க வேண்டிய நிலை.

என்னமோ அரசு எந்திரம் எல்லா விசயத்துலயும் அச்சடிச்சு கையெழுத்து போட்ட ரூல்ஸ் படிதான் செயல்படுற மாதிரியும், வாய்மொழி உத்தரவே எந்த அமைச்சரும், அதிகாரியும் போடாதமாதிரி நடந்துகிட்டாங்க. ஆனால் இப்போது நவம்பர் 2012 ஆம் ஆண்டு மண்ணெண்ணை வழங்கும் இடத்தில் 10 லிட்டர் கார்டுதாரர்களுக்கு 7 லிட்டரும், 3 லிட்டர் கார்டுதாரர்களுக்கு 2 லிட்டரும் மட்டுமே வழங்கப்படும் என்று எழுதி போட்டிருக்கிறார்கள். அதன்படிதான் வழங்குகிறார்கள். அப்புறம் என்ன ...............த்துக்கு எல்லா கார்டுதாரர்களையும் ஒரே நாளில் கூடி கும்மி அடிக்க விடுகிறார்கள் என்று தெரியவில்லை. நேற்று 6-11-2012 அன்று எனக்கு தெரிந்த ஒருவர் காலையில் ஒன்பதரை மணிக்கு சென்று பகல் 1 மணிக்குதான் வாங்கியிருக்கிறார். பெண்கள் என்றால் கூட்டத்திற்கு கேட்கவே வேண்டாம். அதிகாலை 3 மணிக்கு சென்று வரிசையில் நின்றவர்கள் பகல் 11 மணிக்கு வாங்கியிருக்கிறார்கள்.

வழங்கும் அளவைக் குறைத்தபிறகும் பழையபடி சுழற்சி முறையில் ஒவ்வொரு வாரமும் அந்த நாளில் வழங்கப்பட்ட 200 கார்டுதாரர்களுக்கு மட்டும் வழங்க வேண்டியதுதானே?

அவ்வளவு சீக்கிரம் செஞ்சுடுவாங்களா என்ன? ஏற்கனவே கடந்த ஒரு வருசமா ஒரு மாசத்துல ஆயிரம் பேருக்கு மண்ணெண்ணை பற்றாக்குறையா வந்திருந்தா இவங்க ஆயிரத்து ஐநூறு பேருக்கு கொடுக்காம ஆட்டைய போட்டிருக்க வாய்ப்பு இருக்கு. இப்போ பழையபடி சுழற்சி முறையில கொடுக்க ஆரம்பிச்சதும் வடைபோச்சேன்னு கவலையாத்தான் இருக்கும்.

ஒருவேளை இந்த மாச தில்லுமுல்லு மூலமா கிடைக்குற பணத்துக்கு தீபாவளி பட்ஜெட் போட்டு கடன் வாங்கி செலவழிச்சிட்டாங்களோ என்னவோ? அப்படி எல்லாம் இல்லைன்னு சொன்னா, எல்லா பொதுமக்களையும் ஏன் ஒரே நாள்ல வரவெச்சு அவனவன் வேலையை விட்டுட்டு வந்து நாள் பூராவும் காத்துக்கிடக்க வெக்கிறீங்கன்னு எனக்கு உண்மை தெரிஞ்சுக்க ஆசையா இருக்கு.

ஆனா ஒண்ணு சார், ரேசன் பொருள் வாங்குறவங்க, அரசாங்க  அலுவலகங்கள்ல ஏதாவது வேலை முடிய வேண்டியவங்க எல்லாம் வேற வேலை எதுவும் இல்லாம வெட்டி ................னுங்கன்னு ஒரு நினைப்பு அரசுப்பணியாளர்கள்ல பலருக்கு இருக்குறதை யாரும் மறுக்க முடியாது. ரொம்ப கூலா, நாளைக்கு வாங்க பார்த்துக்கலாம்னு  இந்த ரெடிமேட் பதில் சொல்லாத அரசுப்பணியாளர்களை விரல்விட்டு எண்ணிடலாம். இந்த கேவலமான நிலை இப்போதைக்கு மாறும்னு தோணலை.