Search This Blog

வியாழன், 14 ஜனவரி, 2010

தமிழ்ப்பட்டிமன்ற நடுவராக ஜாக்கிசான் - பொங்கல் சிறப்புப்பதிவு

சமச்சீர்கல்விக்கும் ஆங்கிலத்திரைப்படத்துக்கும் தொடர்பு  இருக்கா?...


இருக்கே. பள்ளிக்கூடங்கள்ல இருக்குற பாடத்திட்டத்துக்கும் தமிழ் பேசுற ஆங்கிலப்படங்களுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கே.

நீ எந்த பதிவு போட்டாலும் சினிமாவைத்தொடாம எழுதமாட்ட போலிருக்கேன்னு வீட்டுக்கு ஆட்டோவை அனுப்பிடாதீங்கப்பா.

ஒரு பட்டிமன்றத்துல கு.ஞானசம்மந்தன் அவர்கள், "வரவர ஜாக்கிசான் ரொம்ப அழகா தமிழ் பேசுறார். போற போக்கைப் பார்த்தா பட்டிமன்றத்துக்கு நடுவரா அவர் வந்து உட்கார்ந்துடுவார் போலிருக்கே."ன்னார். அதைக் கேட்கும் போது காமெடியாத்தான் இருந்துச்சு.

ஆனா இப்போ அதனால நமக்கு சில சங்கடங்கள் நமக்குத்தெரியாமலேயே இருக்குறது கொஞ்சம் அதிர்ச்சி அளிக்கிற செய்திதான்.

சில தினங்களுக்கு முன்பு புதியதலைமுறை வாரஇதழில் 2010 ஆண்டு எப்படி இருக்கும் என்று ஒவ்வொரு துறையில் உள்ளவர்களிடமும் நேர்காணல் செய்திருந்தார்கள்.

தமிழ்த்திரைப்படத்துறையில் FEFSI தலைவர் வி.சி.குகநாதன்,"ஹாலிவுட் படங்களை அந்த மொழியிலேயே வெளியிடுங்கள். அதன் மூலம் அடிமட்ட ரசிகனும் தன் ரசனையை வளர்த்துக்கொள்ளட்டும். அதைவிட்டுவிட்டு யாரோ ஒரு ஆங்கிலேயனின் வாயசைப்பில் தமிழைத்திணித்து தமிழ் மொழிக்கு களங்கம் ஏற்படுத்திக்கொண்டிருக்கிறார்கள். 2010ம் வருடத்தில் அதைக் கட்டுப்படுத்தவேண்டிய கட்டாயம், தமிழ் சினிமாவிற்கும் தமிழ் சினிமா இளைஞர்களுக்கும் ஏற்பட்டிருக்கிறது."என்று கூறியிருந்தார்.

இதை வெறும் சினிமா தொடர்பான விஷயமாக மட்டும் பார்க்கக்கூடாது.

சமச்சீர்கல்வி பிரமாதம். கலக்கப்போகுதுன்னு ஆளுங்கட்சியும் அதனுடைய ஆதரவாளர்களும் சொல்றாங்க. எதிர்க்கட்சியும் அவங்களைச்சேர்ந்தவங்களும் இது சரியில்லைன்னு வசை பாடுறாங்க. இவங்க எது சூப்பர்னும் விளக்கலை. அவங்க எது சரியில்லைன்னும் சொல்லலை.

நடுவுல என்னை மாதிரியான அப்பாவிகள் மண்டைதான் காயுது.

இப்போது சமச்சீர்க்கல்வித்திட்டத்தின் நிறைகுறையை அலசி ஆராயும் அளவுக்கு நான் பெரிய படிப்பாளி இல்லை. ஆனால் சிறப்பிடம் பெறும் மாணவர்கள் அளவுக்கு அரசுப்பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் திறனையும் மேம்படுத்தும் வ்கையில்தான் பாடத்திட்டம் இருக்க வேண்டுமே தவிர நன்றாகப் படிக்கும் மாணவர்களை நீ, நிறைய அரசுப்பள்ளி மாணவர்களைப் போல் எழுபது சதவீதம் எடுத்தால் போதும் என்று கீழே பிடித்து இழுக்கும் வகையில் சமச்சீர் கல்வி அமையக்கூடாது என்று மட்டும் என்னால் உறுதியாக சொல்ல முடியும்.

இலவசமும் இப்படித்தான். ஒரு பொருளை காசு கொடுத்து வாங்குற அளவுக்கு
ஒருத்தனை பொருளாதார வலு உள்ளவனா மாத்துறதை விட்டுட்டு இலவசம் கொடுத்து ஒரு அடிமையாவே வெச்சிருக்குறதுக்கு உதாரணம் சொல்றேன்.இது வண்ணத்துப்பூச்சி புழு உருவமா இருக்கும்போது அதுக்கு உதவி செய்யுறதா நினைச்சு கூட்டை  உடைக்கிறதும்  இலவசம் கொடுக்குறதும் ஒண்ணுதான்.

தன்னால கூட்டை விட்டு வெளியில வர்ற வண்ணத்துப்பூச்சியாலதான் பறக்க முடியும். நாமே கூட்டை உடைச்சு அதை வெளியில விட்டா எதுக்கும் பிரயோசனமில்லாம உயிரிழக்க வேண்டியதுதான்.

******

நான் 1996க்குப் பிறகு சில ஆண்டுகள் பத்தாம் வகுப்பு முதல் கல்லூரி செல்லும் வரை அவ்வப்போது பகுதிநேரமாக திரையரங்குகளில் பணியாற்றி வந்தேன்.(பார்த்ததே பகுதி நேரம். இதுல என்ன அவ்வப்போது?...அதையும் தொடர்ந்து பார்க்கலைன்னு அர்த்தம்.)

அதில் ஒரு தியேட்டரில் The Rock, Broken Arrow, Independence day, Golden Eye, Tommorow never dies, Air Force One, Universal Soldire, Jumanji, Evil Dead, Anaconda, The Lost World(jurassic park 3) உட்பட பல படங்களைத் திரையிட்டாங்க.

அந்தப் படங்கள்ல வர்ற வசனங்களோட உச்சரிப்பு பாதி புரியாது. ஆனா ஓரளவுக்கு வசனங்களுக்கு அர்த்தம் விளங்கிடுச்சு. அடுத்து 2000வது ஆண்டு
வாக்கில் கேபிள் டிவி கண்ட்ரோல் ரூம்ல வேலை செய்த நாட்கள்ல Star Plus சேனலில் அமிதாப் தொகுத்து வழங்கிய குரோர்பதி நிகழ்ச்சியை நான் தொடர்ந்து பார்ப்பேன்.அப்போதும் எனக்கு ஓரளவு ஆங்கில அறிவு மேம்பட்டதை உணரமுடிஞ்சது.

நான் கல்லூரி இறுதியாண்டு படிக்கும்போது 2003ல உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்ற சமயம். எனக்கு கிரிக்கெட் மேல ஆர்வமே இல்லன்னாலும் அப்போ நான் போட்டிகளைப் பார்க்க ரெண்டு காரணம் இருந்தது.இந்தியா ஆஸ்திரேலியாகிட்ட தவிர வேறு யார்கிட்டயும் தோற்காம இறுதிப்போட்டிக்கு முன்னேறினது முதலாவது காரணம்.

அடுத்தது வேற என்ன...மந்த்ராபேடிதான். அந்தம்மா(?!) கிரிக்கெட் பத்தி அரைகுறையா புரிஞ்சுகிட்டு ஆர்வக்கோளாறுல தப்புதப்பாதான் கேள்வி கேட்கும். ரொம்ப பேர் அதைக் கேட்டாங்களோ இல்லையோ...அம்மணியோட தரிசனத்தை நல்லாவே பார்த்தாங்க.

எங்க கல்லூரி ஆசிரியர் ஒருத்தர்தான் மந்த்ராபேடி பேசுறதை டிவியில பாருங்கன்னு சொன்னார்.நாங்க எல்லாரும் சட்டுன்னு சிரிச்சுட்டோம்.

"நான் பார்க்கசொன்னது அந்த அம்மாவோட ஆங்கிலத்துக்காக. போட்டுருக்குற டிரஸ்சுக்காக இல்லை." அப்படின்னார்.

நான் கொஞ்சம் ஆர்வமா, சார்..அந்தம்மா தப்புத்தப்பால்ல கிரிக்கெட்டைப்பத்தி பேசுது. அப்போ அந்த இங்கிலீஷ் எந்த கதியில இருக்குமோன்னு கேட்டேன்.

எதுவுமே தெரியாத உங்க மாதிரி புத்திசாலிங்களுக்கு அந்த இங்கிலீஷ் போதும் 
அப்படின்னு சொல்லி, கோ எஜுகேஷன் வகுப்புல மானத்தை வாங்கிட்டார்.

இந்த கேலி கிண்டலை எல்லாம் பொருட்படுத்தாம முயற்சி பண்ணினா நிச்சயமா ஆங்கிலத்தை கண்டிப்பா கத்துக்க முடியும்.

ஜெர்மனி, ரஷ்யா, ஜப்பான், சீனா இங்க எல்லாம் ஆங்கிலத்தை நம்பியா இருக்காங்கன்னுதானே நீங்க கேட்குறீங்க. அங்க எல்லாம் நாடு பூராவும் ஒரே மொழிதான். ஆனா நம்ம நாட்டுல சிவில் சர்வீஸ் நேர்முகத்தேர்வுல கலந்துக்க தலைநகர் போனா வழியில குறைந்தது ஆறு மொழியாவது கத்துக்க வேண்டிய நிலை. எத்தனை மொழி கத்துக்குறோமோ அத்தனை மனிதனுக்கு சமம்னு சொல்லுவாங்க.

அதுக்கு நேரம் ஒதுக்க எல்லாராலயும் முடியாது.அதனால நம்ம நாட்டுல எல்லாரும் ஆங்கிலத்தை இணைப்புப்பாலம் மாதிரி பயன்படுத்துற அளவுக்கு கத்துக்குறது அவசியம். அதாவது ஒவ்வொருவருக்கும் தன்னுடைய தாய்மொழி, ஆங்கிலம் இரண்டும் கட்டாயம். அதுக்கு மேல அவங்கவங்க திறமையைப் பொறுத்து கத்துக்கலாம்.

******

தமிழ்ப்புத்தாண்டு - சில தகவல்கள்...


அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துக்கள். நான் தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துக்கள் சொல்ல மாட்டேன். கண்மூடித்தனமா ஒரு விஷயத்தை ஆதரிக்கிற வழக்கமோ எதிர்க்குற உணர்வோ எனக்கு கிடையாது.

மனிதனுடைய உடம்புல தேவையில்லாத உறுப்புன்னு எது? ஒவ்வொன்றுமே எதாவது ஒரு காரணத்துக்காகதான் உருவாகியிருக்கணும். சில பயன்கள் நமக்குப் புரியிறது இல்லை. அவ்வளவுதான் விஷயமே.

அமாவாசை, பவுர்ணமி கிரகணங்கள் உட்பட சில விஷயங்களை பஞ்சாங்கத்தில் இருப்பதை இவை, வானசாஸ்திரம். அவ்வளவுதான் என்று ஒதுக்கிவிடுகிறார்கள். சிலர் இதை மறுத்துப்பேச காரணமாக சொல்வது, பஞ்சாங்க கணக்கீடு பூமியை மையமாக கொண்டு கணிக்கப்பட்டிருக்கிறது. உண்மையில் சூரியனைத்தான் பூமி உட்பட பல கிரகங்கள் சுற்றி வ்ருகின்றன.என்பதைத்தான்.

அறிவியல் அளவுக்கு துல்லியமாக ஜாதகம் கணிக்க முடியாததற்கு காரணம் இந்த சாஸ்திரத்தில் குறை இருப்பதாக நான் நினைக்கவில்லை.

12 ராசிகள், 12 கட்டங்கள் 9 கிரகங்கள் என்று வைத்துப் பார்க்கும்போது அந்நியன் படத்தில் வரும் கணக்கைப் போல் 12 X 12 X  9 X 8 X 7 X 6 X 5 X 4 X 3 X 2 X 1 என்று பெருக்கிக்கொண்டே சென்றால் எத்தனை வருகிறதோ அதைத்தாண்டிய எண்ணிக்கையில் ஒருவருடைய ஜாதகத்தை வைத்துப் பலன் சொல்லலாம்.

இதை கணித்து முடிப்பதற்குள் பலரது ஆயுள் காலமே முடிந்துவிடுமே.

எனக்கு ஏற்பட்ட அனுபவங்களில் இருந்து ஒருவரது பிறந்த நட்சத்திரத்துக்கும் அவரது குணாதிசயத்திற்கும் மிக நெருங்கிய தொடர்பு இருப்பதைப் புரிந்து கொள்ள முடிந்தது.

அப்போது ஒரே நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ஒரே மாதிரியான குணத்துடன்தானே இருக்கவேண்டும் என்று கேட்கலாம். இரட்டைப்பிள்ளைகளிடம் கூட தாயாரால் நூறு வித்தியாசம் சொல்ல முடியும். ஒருத்தர் போல ஒருத்தர் இருக்க முடியாது. எல்லாம் ஒரு கணக்குதான். ஒரு புதிருக்கு விடை என்பது 6 என்று வைத்துக் கொள்வோம். அது 4+2 ஆ அல்லது 1+5 ஆ அல்லது வேறு எண்களின் சேர்க்கையா என்பதை தீர்மானிக்கும் காரணிகள் வேறுபடலாம். ஆனால் விடை 6 என்பதில் மாற்றம் இல்லை. இதுதான் ஜோதிடம்.

காரணியான எண்கள் மாறுவதால் எவ்வளவோ வித்தியாசங்கள் ஏற்படலாம்.ஒரு நூலிழை அளவு பாதையை விட்டு விலகும் வாகனம் விபத்துக்குள்ளாவதைப் போல்தான் இதுவும்.

இன்னொரு விஷயம், நாடி ஜோதிடம் பற்றி.

உலகத்தில் தினம் தினம் பிறக்கும் எத்தனையோ பேருக்கு அத்தனை கோடி ஓலைகளா இருக்கின்றன என்ற சந்தேகம் எனக்கும் இருந்தது.

இதில் யோசிக்க எதுவும் இல்லை. இதுவும் ஒரு சிம்பிள் கணக்குதான். ஜோதிடக்கலை வரையறுத்துள்ள 27 நட்சத்திரங்களுக்கும் 4 பாகங்கள் வீதம் மொத்தம் 108. நிச்சயமாக எல்லா மனிதனின் கைரேகையும் இந்த 108 வகைகளில் ஒன்றாகத்தான் இருக்கும்.

ஆனால் ஒரே மாதிரியாக இருக்காது. அதாவது பூஜ்யத்துடன் ஒன்றிலிருந்து ஒன்பது எண்கள் வரை மொத்தம் பத்து எண்கள்தான். ஆனால் எத்தனை மதிப்புகளில் எழுதுகிறோம். 1ம் 11ம் ஒன்றா? இல்லையே.

கம்ப்யூட்டர் புரோகிராம்களும் 0,1 இந்த இரண்டு எண்களை வைத்து மட்டுமேதான் எழுதப்படுகின்றன. இப்படித்தான் இதுவும்.

ஜோதிடக்கலை பற்றி போகிறபோக்கில் எனக்குத்தெரிந்த சில தகவல்களே என்னை மலைப்படையச்செய்து விட்டன. பீச் ரோட்டில் காத்து வாங்கப் போனதற்கே இவ்வளவு பிரமிப்பு. கடலில் இறங்கினால் அவ்வளவுதான் என்ற எண்ணத்தில் இதைப் பற்றி அதிகமாக அறிய முயற்சிக்கவில்லை.

அதனால போதும். இத்தோட நிறுத்திக்குவோம்.

******

வெற்றிகரமான மூன்றாவது வாரம்

அது என்னமோங்க, கொஞ்ச நாள்தான் நான் திரையரங்கத்துல வேலை பார்த்தேன். நடுவுல அந்த எண்ணமே இல்லாம இருந்தாலும் இப்போ பிளாக்ல எழுத ஆரம்பிச்ச உடனே பழைய காதலியோட நினைவு மாதிரி, புரொஜக்டர், போஸ்டர்தான் அதிகமா நினைவுக்கு வருது.

படம் வெளிவந்து எட்டாவது நாளே வெற்றிகரமான ரெண்டாவது வாரம்னு போஸ்டர் ஒட்டுற பழக்கம் யார் ஆரம்பிச்சதுன்னு தெரியலை.

நாங்களும் டிசைன் பண்ணுவோம்ல...


புதன், 13 ஜனவரி, 2010

இயக்குனர் ஷங்கரின் இணையதளத்தில் என்னுடைய கடிதம் பிரசுரம்



கடந்த ஞாயிறு அன்று இயக்குனர் ஷங்கரின் இணைய தளத்துக்கு ஒரு நீ......ண்ட கடிதம் அனுப்பினேன். திங்கள் கிழமை மாலை வரை கமெண்ட் டூ மாடரேஷன் என்றுதான் இருந்தது. பிறகு இரவில் பார்த்தேன். கமெண்ட் வெளியிடப்படவில்லை. அதனால் நேற்று செவ்வாய்க்கிழமை அது குறித்து ஒரு பதிவு வெளியிட்டேன். அதை இயக்குனர் ஷங்கரின் இணைய தளத்து நிர்வாகிகள் பார்த்திருப்பார்களா அல்லது வேறு எதுவும் காரணமா என்று தெரியவில்லை. 12.01.2010 இரவு நான் எழுதிய கடிதம் வெளியிடப்பட்டிருந்தது.



கீழ்த்தரமான வார்த்தைகள் கொண்ட விமர்சனங்களை வேண்டுமானால் ஒதுக்கிவிடலாம்.மற்றபடி நியாயமான முறையில் சுட்டிக்காட்டப்படும் விஷயங்களைக் கவனத்தில் கொள்வது நிச்சயம் நன்மைதான் தரும்.இது எல்லாருக்குமே பொருந்தக்கூடிய விஷயம்.