Search This Blog

ஞாயிறு, 6 டிசம்பர், 2009

ரூ.1000.00 பரிசு பெற்ற விமர்சனக்கடிதம் - நன்றி : புதிய தலைமுறை வார இதழ் (19.11.2009)



இந்தியாவில் சாதனைகளுக்கு பஞ்சமே இல்லை. ஆனால் இங்கே பரவியிருக்கும் ஊழல், ஒழுங்கீனம், அலட்சியம் உள்ளிட்ட சில காரணிகள் நமது சாதனைகளின் பலனை முழுமையாக அனைவரையும் அனுபவிக்க விடாமல் செய்துவிடுகின்றன.

முக்கியமாக, லஞ்சத்தை எதிர்பார்த்து மக்களுக்குத் தேவையான ஆவணங்கள், சேவைகள் ஆகியவற்றை கிடைக்க விடாமலோ, தாமதப்படுத்துவதையோ பல அலுவலர்கள் வழக்கமாக வைத்திருக்கிறார்கள். இதனால் ஏற்படும் காலதாமதம், விரயங்களுக்கு அஞ்சியே பலரும் லஞ்சம் கொடுத்துவருவது ஊரறிந்த ரகசியம்.

லஞ்சம் கொடுப்பதும், வாங்குவதும் குற்றம் என்று அவ்வப்போது பலரும் சொல்கிறார்கள். புதிய தலைமுறையும் இதே அறிவுரையைச் சொன்னது...ஆனால் சொன்னதே தெரியாமல் சொல்லியிருக்கிறது.

நேர்மையாகச் செயல்படும்போது வரும் தடைகளையும், இன்னல்களையும் தகர்க்கச் சிறந்த வழி, தங்கள் நிறுவனத்திலேயே திறமையான வழக்கறிஞர்களை கொண்டு சட்டப்பிரிவை ஏற்படுத்திக்கொள்வதுதான் என சி.கே. ரங்கநாதன் கூறியிருப்பது மிகவும் சிறப்பான யோசனை.

நேரடியாக அறிவுரையைக் கேட்பதை விட அறிவுரையைப் பின்பற்றி சாதித்தவர்களின் அனுபவங்களைப் படிக்கும்போது என்னைப் போன்ற இளைய தலைமுறையின் நம்பிக்கை பல மடங்கு அதிகமாகும்.

- இதுதான் ஆயிரம் ரூபாய் பரிசு பெற்ற விமர்சனக்கடிதம்.

நிறுவனம் வைத்திருப்பவர்கள் வழக்கறிஞர்களை  வைத்து சட்டப்பிரிவை ஏற்படுத்திக் கொள்ளலாம். தனி மனிதர்கள், சாதிசான்று, வருமானசான்று பெற முயற்சிக்கும் சாமானியர்கள் எல்லாம் என்ன செய்வது என்று கேட்கிறீர்களா?

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் பலம் என்ன என்று தவறு செய்யும் அதிகாரிகளுக்கு காட்டி விட வேண்டியதுதான். இதைப் பயன்படுத்தும் போது

நாம் கவனமாக இல்லை என்றால் அவ்வளவுதான். இந்த தகவலை வழங்க இத்தனை லட்ச ரூபாய் செலவாகும் என்று நாம் தெறித்து ஓடும்படி செய்துவிடுவார்கள்.



அவர்கள் நம்மை மிரள வைக்காத வகையில் இந்த சட்டத்தைப் பற்றி முழுவதுமாக தெரிந்து கொண்டால் பிரச்சனையில்லை. கடலில் சிறு மீனாக இருந்தால் பெரியமீன் களுக்கு இரையாக வேண்டியதுதான். அவற்றிடமிருந்து தப்பிக்க திமிங்கிலமாக மாறுவதே சிறந்த வழி.

சனி, 5 டிசம்பர், 2009

முகங்கள் - எழுதத் தொடங்கிய காலத்தில் பரிசு பெற்றுத் தந்த சிறுகதை.



முதன் முதலாக எனக்கு பரிசு பெற்றுத்தந்த சிறுகதை 'முகங்கள்'.தினமலர் வாரமலர்  நடத்திய டி.வி.ஆர் நினைவு சிறுகதைப் போட்டியில் ஆறுதல் பரிசு பெற்றது. ஆண்டு 2003. 


 வரதட்சணை காரணமாக மருமகள்கள் பற்றவைக்கும் ஸ்டவ் மட்டும் வெடிக்கும் அவலம் இன்னும் நம் நாட்டில் உண்டு. பல ஏழைப்பெண்கள் முதிர்கன்னிகளாகவே இருக்கும் அவலத்துக்கும் வரதட்சணை முக்கிய காரணம்.
 
ஆனால் வரதட்சணை வேண்டாம் என்று ஒரு ஆண் முன்வந்தால் அவனை சந்தேகத்துடன்தான் பார்க்கிறார்கள். திருமணம் செய்துகொள்ள வேண்டிய பெண்களே இப்படிப்பட்ட ஆண்களை வேண்டாம் என்று சொல்கிறார்கள்.


அவர்கள் அச்சத்துக்கும் காரணம் இருக்கிறது. நினைவில் வைத்துக் கொள்ள முடியாத எண்ணிக்கையில் திருமணம் செய்து கொள்ளும் நபர்கள் கூட வரதட்சணை வேண்டாம் என்று வலை வீசித்தான் மொத்தமாக சுருட்டிக்கொண்டு சென்றுவிடுகிறார்கள்.

சாலை விபத்து அதிகம் என்பதற்காக பயணம் செய்யாமல் இருக்கிறோமா? நல்ல குணத்துடன் ஒருவர் வரதட்சணை வாங்காமல் திருமணம் செய்ய வரும்போது சரியான முறையில் அவர் பின்னணியை தெளிவாக விசாரித்து திருமணத்துக்கு சம்மதிக்க பெண்கள் முன் வரவேண்டும்.

அவர்கள் மீது சந்தேகம் இருக்கும்வரை வரதட்சணை பெருக்கத்துக்கு ஆண்களை மட்டும் குற்றம் சொல்வது தவறு என்பதுதான் என் கருத்து.

வரதட்சணை வேண்டாம் என்று இருக்கும் ஒருவன் சந்திக்கும் பிரச்சனை, அவனுக்கு சாதாரணமாக வரும் நோய் ஒன்று எப்படி திருமணத்தையே நிறுத்துகிறது, பெண்களை மட்டும் குற்றம் சொல்லிக்கொண்டே இருக்காமல் அவர்களில் சிலரும் நமக்கு வியப்பூட்டும்படி  இருப்பதும் உண்டு - இந்த விஷயங்கள் அனைத்தையும் சேர்த்து எழுதிய சிறுகதை - 'முகங்கள்'

வெள்ளி, 4 டிசம்பர், 2009

கண்ணீர் சிந்த வைத்த கட்டுரை - (நன்றி : தேவதை மாதமிருமுறை இதழ்)


தேவதை டிசம்பர் 1-15, 2009 இதழில் "பிரசவம் ...நடந்தது என்ன? என்ற ஒரு கட்டுரை சேனல் பஃபே பகுதியில் பிரசுரமாகியிருந்தது. நான் ஒரு சில திரைப்படங்கள் பார்த்து கண் கலங்கியது உண்டு. பிறகு திரையரங்கத்தில் திரைப்படம் திரையிடும் வேலை செய்ததுடன் படங்கள் மனதைப் பாதிப்பதும் நின்று போனது.

கண் முன்னால் எங்கள் கல்லூரி மாணவி லாரியில் சிக்கி படுகாயமடைந்த போது கலங்கி இருக்கிறேன். வேறு எந்த நிகழ்வும் கண்ணீரை வரவழைத்தது இல்லை.


2004 ல் ஆழிப்பேரலை வந்தபோது நான் வேலை செய்த தனியார் நிறுவன உரிமையாளரும், பிரபல தொண்டு நிறுவனமும் நாகப்பட்டணத்தில் செய்த நிவாரணப்பணிகளில் ஈடுபட்டபோது கூட கண்ணீர் சிந்த நேரம் இல்லை. சிறு வயதில் இருந்து இப்போது வரை போராட்டங்களே வாழ்க்கையானதாலோ என்னவோ, எந்த சம்பவமும் என்னைப் பரிதாபப்பட வைத்ததுடன் சரி...பல மணி நேரம் மனதைப் பாதித்தது இல்லை.

ஆனால் ஒரு கட்டுரையில் இருந்த சாதாரண எழுத்து என்று நான் நினைத்துப் படித்தது... ஒரு தாயின் வேதனையை அருகில் இருந்து உணர்ந்தது போலவே....இல்லை,இல்லை...நானே அனுபவித்தது போல் ஒரு அதிர்ச்சி.

பிரசவம் என்பது ஒரு பெண்ணுக்கு மறுபிறவி என்று சொல்வார்கள். இந்த வார்த்தை இதுநாள் வரை என் மனதில் எந்த சலனமும் ஏற்படுத்தியதில்லை. ஆனால் என்னைப் பெற்றெடுத்த தாயும் மறுபிறவி எடுத்துதானே உலகில் நடமாடிக்கொண்டிருக்கிறார்...அவருக்கு நன்றி செலுத்த இவ்வுலகில் ஈடாக எதுவுமே இல்லையே...நாம் என்ன செய்தாலும் அது அந்தக் கடனுக்கு வட்டியில் ஒரு பகுதியைக்கூட  செலுத்துவதாக அமையாதே...என்றெல்லாம் சிந்தித்து மனம் முழுவதும் தவிப்புடன் இரண்டு நாட்கள் சரியான தூக்கமே இல்லை.

மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவரும் தாயின் மனம் புண்படாமல் நடந்து கொள்வதுதான் உயர்ந்த விஷயமாக இருக்க முடியும். என்பதை உணர வைத்தது இந்தக் கட்டுரை.

மேலே உள்ள வரிகள் உணர்ச்சி வசப்பட்ட நிலையில் எழுதியது. அதற்காக இது அனைத்தையும் மறுக்கப் போகிறேன் என்று நினைக்காதீர்கள்.


மனத் தெளிவுடன் சிந்தித்துப் பார்த்தேன். உண்ர்ச்சிவசப்பட்ட நிலையில் எடுக்கும் எந்த முடிவும் தவறாக முடிவதற்கு வாய்ப்பு அதிகம் என்பது அனைவரும் அறிந்த ஒன்றுதான். தாயை மதிக்கிறேன் என்று ரொம்பவும் அதிகமாக உணர்ச்சிவசப்படும் ஆண்கள்தான் அடுத்த தாயான மனைவியை புரிந்துகொள்ளத் தவறி விடுகிறார்கள்.

இந்த தவறை ஒருபோதும் செய்யக்கூடாது என்பதை நான் புரிந்துகொண்டேன்.

இருவர் மனதும் புண்படக்கூடாது என்பது ஒவ்வொரு ஆணுக்கும் உள்ள மிகப் பெரிய சவால்தான். இதை விட பெரிய அளவில் பெண்கள் எவ்வளவோ பிரச்ச்னைகளை சந்திக்கிறார்கள். ஆண்கள் இந்த ஒரு சவாலில் வென்றால் குடும்பமே சொர்க்கமாகுமே...

தாய்மையின் பெருமையை உணரச் செய்த தேவதைக்கு நன்றி.