Search This Blog

ஒரு செய்தி... லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஒரு செய்தி... லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 31 மே, 2013

1 மார்க்கில் மாநில அளவிலான சிறப்பிடத்தை தவற விட்ட திருவாரூர் மாவட்ட பள்ளிகள்



இந்த ஆண்டு 10 ஆம் வகுப்பு தேர்வெழுதியவர்களில் 9 பேர் 498 மதிப்பெண் பெற்று மாநிலத்தில் முதலிடம் பெற்றுள்ளார்களாம். அது தவிர 52 பேர் 497 மதிப்பெண்ணுடன் மாநிலத்தில் இரண்டாமிடம் என்பதும் சாதனையே.



திருவாரூர் மாவட்டத்தில் இரண்டு மாணவர்கல் 495 மதிப்பெண் பெற்றிருக்கின்றனர். இந்த ஆண்டு மாநில அளவில் 496 மதிப்பெண் பெற்றால் 3ஆம் இடம் கிடைத்திருக்கும். 494 மார்க் ஏழு மாணவ மாணவிகளும், 493 மார்க் ஏழு மாணவ மாணவிகளும் பெற்றிருக்கின்றனர்.



செய்தி மக்கள் தொடர்பு அலுவலகத்தில் இருந்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் திருவாரூர் மாவட்ட அளவில் சிறப்பிடம் பெற்ற மாணவ மாணவிகள் பட்டியலைப்பார்த்தால் மெட்ரிக் பள்ளியில் மாணவர்கள் பெயர்தான் அதிகம் இருக்கிறது. ஒரே பாடத்திட்டம் என்று ஆன பிறகு திரும்ப திரும்ப தேர்வெழுத வைப்பதுதான் இவர்கள் சிறப்பிடம் பெற காரணமாக இருக்கும் என்று ஒரு ஐயம் எனக்கு இருக்கிறது. அப்படி எல்லாம் இல்லை. மாணவர்கள் புரிந்துகொண்டு தன் திறனை வெளிப்படுத்திதான் இந்த மார்க் வாங்கியிருக்கிறார்கள். வெறும் மனப்பாடம் மட்டும் இல்லை என்று அவர்கள் உறுதியாக கூறினால் சந்தோஷமே.



---------------------------------------

1995ஆம் ஆண்டு என்று நினைக்கிறேன். அந்த ஆண்டு பத்தாம் வகுப்பில் மாநில முதல் மதிப்பெண் என்பது சாரதா என்ற மாணவி பெற்ற 475 மார்க் என்று நினைக்கிறேன். (விவரம் தவறாக இருந்தால் மன்னித்து சரியானதை அளிக்கவும். பதிவில் திருத்திவிடுகிறேன்.) அப்போது நான் ஒன்பதாம் வகுப்பில் நுழைந்திருந்த சமயம். அந்த காலகட்டத்தில் ஜூன் 3ஆம் வாரத்தில்தான் 10ஆம் வகுப்பு தேர்வுமுடிவுகள் வெளிவரும். இந்த மாநில முதல் மதிப்பெண்ணைப் பார்த்துவிட்டு நான் 5ஆம் வகுப்பு படிக்கும்போதே 483 மார்க் வாங்கியிருக்கேன். என்னை விட அந்த அக்கா குறைச்சலாத்தான் வாங்கியிருக்காங்க என்று காமெடி செய்தது நினைவுக்கு வருகிறது.



கடந்த சில ஆண்டுகளாகவே பத்தாம்வகுப்பில் 495 மதிப்பெண்களைத்தாண்டி எடுத்து மாநிலத்தில் முதலிடம் பிடித்து வருகிறார்கள். இது 500ல் போய்தான் நிற்கும் (வேறு வழியில்லாததால்) என்று நினைக்கிறேன்.



எனக்கு முந்தைய தலைமுறையினருக்கு கிடைக்காத பல வாய்ப்புகளும் வசதிகளும் என் தலைமுறையில் கிடைத்தது. இப்போது என் தலைமுறையில் எங்களுக்கு கிடைக்காத பல வாய்ப்புகள் இப்போதைய தலைமுறைக்கு கிடைப்பது ஆரோக்கியமான விசயமே. உதாரணமாக நான் 1999ல் 12ஆம் வகுப்பு தனித்தேர்வராக எழுத முயற்சித்தபோது கருவூலத்தில் தேர்வுக்கட்டணம் செலுத்தியவரின் அலட்சியத்தால் தாமதமாகி ஒரு ஆண்டு வீணாகிப்போனது. அப்போது வேறு வழியின்றி நான் 1999 செப்டம்பரில்தான் தேர்வு எழுதினேன். ஆனால் இப்போது அப்படி தவறு நடந்தால் தட்கல் முறையில் ஒரு வாரத்துக்கு முன்பு கூட விண்ணப்பிக்கும் வசதி வந்துவிட்டது. இது வரவேற்கத்தக்க மாற்றமே.



இப்படி மாநில முதல் மதிப்பெண் 498ல் போய் நிற்பது மாணவர்களின் எல்லா திறனையும் உயர்த்தியிருந்தால் சந்தோசம்தான். ஆனால் உண்டு உறைவிடப்பள்ளிகளால் வெறும் மனப்பாடத்திறனை மையமாக்கி எடுத்த மதிப்பெண் என்றால் அது அந்த மாணவனுக்கும் சமுதாயத்துக்கும் அவ்வளவாக நன்மை பயக்காது. ஆனால் பணம் சம்பாதிக்க மார்க் மட்டும் போதும் என்பது பெற்றோரின் மனநிலையாகிவிட்டதால் இதில் யாரைக் குற்றம் சொல்வது என்று தெரியவில்லை.

--------------------------

இந்த தேர்வில் போதிய மதிப்பெண் கிடைக்கவில்லை என்று சில மாணவ மாணவிகள் உயிரை இழக்கும் தவறானமுடிவுக்கு சென்றுவிடுகிறார்கள். உயிர் இருந்தால் வானத்தையே வசப்படுத்தலாம். சரித்திரம் படைக்கலாம். உயிரை மாய்த்துக்கொண்டால் சம்மந்தப்பட்ட வீட்டில் கூட சில நாள் அல்லது சில மாத துக்கத்துடன் மறக்கப்பட்டுவிடுவார்கள். இதை பெற்றோரும் மாணவர், மாணவியர் புரிந்துகொள்ள வேண்டும்.










சனி, 25 மே, 2013

பழைய வீட்டை இடிக்காதது நல்லது!





திருவாரூர் நகர்பகுதியில் இருப்பவர்களுக்கு ஒரு தகவல். ஆன்மிகத்தில் நம்பிக்கை இல்லாதவர்கள் இதே பதிவில் இருக்கும் அடுத்த செய்திக்கு போய்விடலாம். திருவாரூர் நகரின் மையப்பகுதியில் உள்ளது பெருநாட்டுப்பிள்ளையார் ஆலயம். இந்த ஆலயத்தின் கும்பாபிசேகம் வரும் 14-07-2013 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற உள்ளது. மீதமிருக்கும் வேலைகளில் பெயிண்டிங் வேலைகள் மட்டுமே பெரிய அளவில் பக்தர்களின் பங்களிப்பு தேவைப்படும் ஒன்றாக இருக்கிறது.



பெயிண்டிங் செய்ய என்னென்ன பொருட்கள் தேவை என்ற பட்டியல் எஸ்.பி.கண்ணா என்ற ஓவியரிடம் இருந்து பெறப்பட்டு இங்கே உங்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கிறது. விருப்பமிருப்பவர்கள் (எங்கிருந்தாலும்) தொடர்புகொள்ளுங்கள். அனைவரும் கும்பாபிசேகத்துக்கு வருகை தந்து தரிசனம் செய்ய அன்புடன் அழைக்கிறோம்.



---------------

பழைய வீட்டை இடிக்காமல் அப்படியே நகர்த்தி புதிய இடத்தில் பொருத்தும் தொழில்நுட்பம் தமிழகத்திற்கும் வந்துவிட்டது என்பது குறித்த கட்டுரை 30.05.2013 புதிய தலைமுறை இதழில் பிரசுரமாகியுள்ளது. அந்த கட்டுரையின் இறுதியில் சாலைவிரிவாக்கத்திற்காக லட்சக்கணக்கான வீடுகள் இடிக்கப்படுகின்றன. இந்த நகர்த்தும் முறையை பரிசீலித்தால் மக்களுக்கும் பிரச்சனையில்லை. அரசுக்கும் சங்கடமில்லை என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அவற்றுடன் இன்னும் கூடுதலாக சில வரிகளை சேர்த்துக்கொள்ளலாம். இடிப்பதற்கு அவசியமில்லாத வகையில் வலுவாக இருக்கும் கட்டிடங்களை கூடுதலாக பல ஆண்டுகள் பயன்படுத்த முடியுமானால் மணல், ஜல்லி, மரங்கள் உள்ளிட்ட இயற்கை வளங்களும், சிமெண்ட் போன்ற செயற்கை வளங்களும் கூடுதலாக வீணாவதை தடுக்க முடியும். அது சுற்றுச்சூழலுக்கும் உகந்ததாக இருக்கும்.


வெள்ளி, 26 ஏப்ரல், 2013

கோவை தீ விபத்திற்கு யார் காரணம்



இப்படி ஒரு கேள்வியை எழுப்பினால் வாழ்க்கை ஒரு வட்டம் என்ற அடிப்படையில் ஒருவர் விரல் மற்றொருவரையே சுட்டிக்காட்டும்.  இந்த விபத்து நேரத்தில் மீட்பு பணியில் ஈடுபட்ட தீயணைப்புத்துறை, காவலர்கள், பொதுமக்கள், பஸ் டிரைவர்கள், கண்டக்டர்கள் ஆகியோருக்கு பாராட்டுக்கள். மனிதனின் திறமை அளவிடமுடியாதது. அது ஆக்கப்பூர்வமான காரியங்களுக்காகவும், பூகம்பம், வெள்ளம் போன்று எதிர்பாரா இயற்கை பேரிடர் காலங்களிலும் பயன்படுத்தப்படவேண்டும். உரிய பாதுகாப்பு வழிமுறைகளுடன் கட்டப்பட்ட கட்டிடமாக இருந்தால் அங்கிருக்கும் மக்கள் தாங்களாகவே மிக சுலபமாக தப்பியிருக்க முடியும்.




ஆனால் எதார்த்தத்தில் என்ன நடக்கிறது? ரொம்ப அடிமட்டத்துல வாழ்றவன்தான் அவனுக்கு கிடைச்ச 6 அடி அகலமுள்ள இடத்தைக்கூட வீடா மாற்றி வாழ்ற சூழ்நிலைக்கு தள்ளப்படுறான்னா, வசதிபடைத்தவர்கள் கூட தீப்பெட்டியை அடுக்கியதுபோல பக்கத்து கட்டிடத்து சுவரின் மீது இவர்கள் சுவரையும் வைத்து பசைபோட்டு ஒட்டுனது மாதிரி கட்டுறாங்க.



அதோட நிறுத்துறாங்களா? இயற்கை காற்றோட்ட பாதையை தடுத்து நிறுத்திட்டு ஏசி மெசினை மாட்டி குளோபல் வார்மிங், மின் பற்றாக்குறை இப்படி பல்வேறு சிக்கல்களுக்கும் காரணமாயிடுறாங்க. உண்மையில் சில இயந்திரங்களை பாலைவனத்திலும், பனிப்பொழிவு பிரதேசத்திலும் நார்மலான வெப்பநிலையில் வைத்திருக்கவே ஏசி இயந்திரம் கண்டுபிடிக்கப்பட்டதாம். ஆனால் உண்மையில் நடப்பது என்ன? மனித உடம்பில் உள்ள உறுப்புக்கள் 34 டிகிரி என்ற வெப்பநிலையில் இருக்க வேண்டும் என்பதற்காக அதிகமாக உழைக்குமாம். ஆனால் நாம் குளிர் அறையில் சுகமாக தூங்குவதாக நினைத்து நாட்டையும் நம் உடம்பையும் கெடுத்துவைத்துக்கொண்டிருக்கிறோம். இதுபற்றி விளக்கமாக எழுதினால் ஆயிரம் பக்கங்களை தாண்டிச்செல்லும்.



சுருக்கமாக சொன்னால் ஒரு ............ அலுவலகத்தில் கிளர்க் வேலை பார்க்கும் நபர் அந்த இருக்கையில் அமராமல் மேலதிகாரியின் மனைவிக்கு .............. வாங்கிக்கொடுக்கவோ அல்லது அந்த அதிகாரியின் மச்சானை ஊர்சுற்றிப்பார்க்க அழைத்துச்சென்றாலோ என்ன ஆகும்? அந்த அலுவலகத்தில் அந்த நபர் பார்க்க வேண்டிய வேலை தேங்கி விடும். (இதனால்தான் பல .......... அலுவலகங்களில் இன்று போய் அடுத்த வாரம் வாங்க என்ற வாசகம் பிரபலம்) நம் உடலிலும் நமக்கு தெரியாமலே இதுதான் நடந்து கொண்டிருக்கிறது. முக்கியமாக கிட்னி இரவு நேரங்களில் தன்னுடைய வேலையை அவ்வளவாக செய்வதில்லையாம். அப்போ அது எந்த ஆபிசர் வீட்டு வேலையை பார்க்க போகுதுன்னு ஒரு சந்தேகம் வரலாம்.



நாம் கொசுக்கடி மற்றும் வெப்பத்துக்கு பயந்து அறையின் ஜன்னல் மற்றும் கதவு அனைத்தையும் சாத்தி விட்டு தூங்கும்போது அறையின் காற்றில் உள்ள ஆக்சிஜன் நாம் 10 நிமிடம் உயிர்வாழத்தேவையான அளவுக்குதான் இருக்குமாம். அதாவது அறைக்கு வெளியில் உள்ள காற்று உள்ளே வந்து உள்ளே உள்ள உஷ்ணக்காற்று (கார்பன்டை ஆக்சைடு கலந்தது) வெளியில் போவது தொடர்ச்சியாக நடந்தால்தான் நம் உடல் உறுப்புகளுக்கு பிரச்சனை பிரச்சனை இருக்காது. அதாவது ஒரு பணியாளர் அவரது இருக்கையில் அமர்ந்து அவருக்குரிய வேலையை செய்வார்.



அப்போ 10 நிமிசத்துல ஆக்சிஜன் தீர்ந்துட்டா நாம செத்தா போயிட்டோம். காலையில நல்லாத்தானே எழுந்திரிக்கிறோம்னு ஒரு சந்தேகம் வரலாம். மனித உடம்பு ஒரு அற்புதமான கூகிள். ஆக்சிஜன் காத்துல இல்லையா, அப்போ உடம்புல எங்க இருக்குன்னு தேடும்போது அது கண்ணுல கிட்னியில இருக்குற தண்ணியோட மூலக்கூறு H2O வை கவனிக்கும். உடனே மூளை கிட்னிக்கு ஒரு ஆர்டர் போட்டு, டேய் நீ சிறுநீர்ல உப்பை பிரிச்சது போதும். உடனே H2O-வுல ஆக்சிஜனை மட்டும் பிரிச்சு அனுப்பிவை அப்படின்னு ஆர்டர் போடும். அப்போ அது நீர்ல உப்பை பிரிச்சு சிறுநீர் வழியா அனுப்புற வேலை என்னாகும். உப்பு சேர்ந்து கட்டியாகும். கிட்னியில கல் சேர்றது எப்படின்னு புரியுதா?



கிட்னியில கல் சேர்றதுக்கு காரணம் கிட்னி ஒழுங்கா வேலை செய்யாம இல்லை. அது என்ன மனுசனா, அது செய்ய வேண்டிய வேலையை நிறுத்திட்டு ஆபிசருக்கும், அரசியல் வியாதிகளுக்கும் ஜால்ரா போடுறதுக்கு. கிட்னியை வேலை செய்ய விடாம தடுக்குறது மனுசன்தான். இப்படி உடம்போட ஒவ்வொரு உறுப்புக்கும் உரிய வேலையை செய்ய விடாம கெடுத்து குட்டிச்சுவராக்கிட்டு நாம யார்யாரையோ குற்றம் சொல்லிகிட்டு இருக்கோம்.



நூற்றாண்டு கண்ட வங்கி கட்டிடம் பிரமாண்டமா இருக்கும். கட்டிடத்தை சுற்றி சுமாரா 20 அடி காலியிடம் அந்தப்பகுதியில் மரங்கள். கட்டிடத்தின்  ஒவ்வொரு தளமும் சுமார் 14 அடி இருக்கலாம். பக்கவாட்டுல 6 அடி உயர ஜன்னல். லிண்டல் மட்டத்தை தாண்டி மேல்தள சீலிங்கை ஒட்டியும் பக்கவாட்டு சுவற்றில் சுமார் 2 அடி உயரம், 2 அடி அகலம் என்ற அளவில் வெண்டிலேட்டர். கட்டிடத்தை சுற்றி எல்லா பக்கமும் வெளியேற பாதை. இப்படி மின்விசிறிக்கு கூட அவ்வளவா தேவை இல்லாம, பகல்ல மின் விளக்கு தேவையே இல்லாம இருந்த இடம் இன்னைக்கு சுற்றிலும் கண்ணாடியை ஒட்டிகிட்டு சூரிய வெளிச்சம் மட்டுமல்ல வெளி காற்று கூட உள்ளே நுழைய முடியாம ஏசி இயந்திரத்தோட தன் தனித்தன்மையை இழந்துட்டு நிக்கிது.



வெளிநாட்டுக்காரங்க அவங்க நாட்டு சீதோஷ்ண நிலையினால் குளிர் தாங்காம வடிவமைச்ச கட்டிடங்களைப் பார்த்து நாம சூடுபோட்டுகிட்டே இருக்கோம். ஏப்ரல், மே மாதங்கள்ல நம்ம நாட்டுல சாதாரணமா ரோட்டுல நடந்துபோனா கூட நம்ம உடம்பு தீப்பிடிக்கும்போல இருக்கு. இந்த லட்சணத்துல அரசு அலுவலகங்கள் கூட காற்றோட்டமான சூழ்நிலையை விட்டுட்டு இப்படி ஏசி இயந்திரத்தோட மக்கள் உடல் நலத்தையும் கெடுத்துட்டு, ஒரு ஆபத்துன்னா தப்பிக்க வழி இல்லாத அளவுக்கு கேவலமான முறையில வடிவமைக்கப்படுது.



சட்டம் ஒரு வலை மாதிரி. அதுல சுறா, திமிங்கிலங்கள் மாட்டுவதே இல்லை. அப்பாவி சின்ன மீன்கள் மட்டுமே மாட்டுகின்றன என்று ஒரு வாக்கியம் உண்டு. இப்போது கட்டப்பட்டு வரும் வீடுகள், வணிக வளாகங்களை பார்க்கும்போது அப்படித்தான் தோன்றுகிறது. இடிந்து விழக் காத்திருக்கும் எங்கள் வீடு இருக்கும் மனையின் அகலம் 18 அடி இருக்கும். அதில் இரண்டு பக்கமும் தலா மூணரை அடி இடம் விட்டு 11 அடி அகலத்தில் கட்டிடம் கட்டலாம் என்று திட்டமிட்டோம். இதுக்கே ஆயிரத்தெட்டு சிக்கல்கள். மலைமுழுங்கி அதிகாரிகள் பிரச்சனையால் எதுவும் செய்யாமல் நிறுத்திவைத்திருக்கிறோம். ஆனால் பல மோசமான நபர்கள் 18 அடி அகலமுள்ள மனையில் 19 அடிக்கு கட்டிடம் கட்டுவார்கள் போலிருக்கிறது. அந்த அளவுக்கு அதிகாரிகள் லஞ்சத்தில் திளைக்கிறார்கள் என்று நினைக்கிறேன்.



எனக்குத் தெரிந்து ஒரு அரசு ஊழியர் (அவரது மனைவியும் அரசு ஊழியர்தான்) பக்கத்துவீட்டுக்காரர் காற்றோட்டத்துக்கு இடம் விடாமல் கட்டினார் என்று புகார்வாசித்தார். நீங்கள் எவ்வளவு இடம் விட்டு கட்டினீர்கள் என்று கேட்டேன். அதற்குள் அவர் எஸ்கேப். கணவனும் மனைவியும் மாதசம்பளமாக சுமார் 1 லட்சம் பெறுகிறார்கள். அவர்கள் மனம் வைத்தால் இரண்டு மனைகள் வாங்கி சுற்றிலும் இடம் விட்டு பசுமையான சூழ்நிலையில் வீட்டை அமைத்துக்கொண்டிருக்கலாம். ஆனால் இவர்கள் பிசிறு தட்டாமல் இவர்கள் இடத்தில் லஞ்சம் கொடுத்து வீடு கட்டிவிட்டு வெப்பத்தை சமாளிக்க ஏசி போட்டுவிட்டார்கள். இவரைப்போன்றவர்கள் வீட்டை குளுமையாக்கி நாட்டை நெருப்புக்கோளமாக்குகிறார்கள்.



வசதியும் வாய்ப்பும் இருப்பவர்கள் இயன்றவரை காற்றோட்டமுள்ள வீடாக கட்டிக்கொள்வது நாட்டுக்கும் அவர்களுக்கும் நன்மை அளிக்கும். அதுபோல பெரிய வணிக வளாகங்கள் கட்டுபவர்கள் ஆபத்து காலத்தில் மக்கள் சிரமமின்றி வெளியேறும் வகையில் கட்டினால் நன்றாக இருக்கும் என்று எவ்வளவோ சமூக ஆர்வலர்கள் சொல்கிறார்கள். ஆனால் அது யார் காதிலும் விழுவதாக தெரியவில்லை.

-----------------------------

2013-2014 கல்வியாண்டில் இருந்து மிகவும் சிரம நிலையில் இருக்கும் அரசுப்பள்ளி குழந்தைகளின் படிப்புக்கு உதவுவது என்று போன ஆண்டு தீர்மானித்திருந்தோம். அதன்படி இருபது பேர் ஆளுக்கு சுமார் ஐநூறு ரூபாய் பங்களிப்பு செய்தால் கிடைக்கக்கூடிய 10ஆயிரம் ரூபாயை வைத்து எங்களால் முடிந்த அளவு உதவலாம் என்று தீர்மானித்து இப்போது செயலில் இறங்கியிருக்கிறோம்.



ஓரளவு வாய்ப்பு இருக்கக்கூடிய அனைவரும் அவர்களால் முடிந்த அளவு உதவி செய்யலாம். இப்படி நான்கு பேர் ஒன்றாக சேர்வதற்கு வாய்ப்பில்லை என்றால் உங்கள் வீட்டில் வேலைபார்க்கும் பெண்மணியின் குழந்தைக்கு உதவுவது கூட சேவைதான். (பலர் இப்படி வெளியில் தெரியாமல் உதவி செய்துகொண்டுதான் இருக்கிறார்கள்.) செய்து கொண்டிருப்பவர்களுக்கு வாழ்த்துக்கள். இது வரை செய்யாதவர்கள் முயற்சித்துப் பாருங்களேன்.

--------------------------------------

கடவுள் நம்பிக்கை, இறைவழிபாடு, ஆலயத்திருப்பணிகள் ஆகியவற்றின் மீது நம்பிக்கை இருப்பவர்களுக்காக...



இளையபாரதம் தளத்தின் முகப்பில் இருக்கும் கும்பாபிசேக அறிவிப்பை பார்த்திருப்பீர்கள். இந்த ஆலயம் இருக்கும் தெருவில்தான் எங்கள் வீடு உள்ளது. சில சூழ்நிலைகளின் காரணமாக சிதிலமடைந்திருந்த இந்த ஆலயத்தை 2009ஆம் ஆண்டு பாலஸ்தாபனம் செய்து முழுவதுமாக இடித்துவிட்டு மீண்டும் புதியதாக கட்டியுள்ள இந்த ஆலயத்தின் கும்பாபிசேக விழா வரும் 14.07.2013 அன்று நடத்துவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆலயத்தின் முன் மண்டபத்தில் தட்டு ஓடு போடும் பணியும் ஆலயம் முழுவதும் வர்ணப்பூச்சு செய்ய வேண்டிய பணியும் யாகசாலை செலவுகளும் காத்திருக்கின்றன. உள்ளூர்வாசிகள் நேரடியாக கோயிலுக்கே வந்து விபரம் பெற்றுக்கொள்ளலாம். மற்றவர்கள் writersaran@gmail.com க்கு மெயில் அனுப்பினால் தகவல் தெரிவிக்கிறோம்.


புதன், 13 மார்ச், 2013

அணு குண்டுல இருந்து கர்ணன் கவச குண்டலம் காப்பாத்துமா?







18.03.2013 தேதியிட்ட குங்குமம் வார இதழ்ல கே.என்.சிவராமனின் கர்ணனின் கவசம் தொடர்கதையின் முதல் அத்தியாயத்தை படிச்சதும் என்னை மாதிரி சாதாரணர்களுக்கு இந்த சந்தேகம்தான் வரும். அதாவது அணுகுண்டோட பாதிப்புல இருந்து கர்ணனின் கவச குண்டலம் காப்பாத்துமா என்ற கேள்விதான் இது.



பத்து ஆண்டுகளுக்கு முன்பு இந்திரா செளந்தர்ராஜன் ஒரு நாளிதழின் ஞாயிறு இணைப்பு வாரஇதழ்ல தினம் ஒரு உயிர், சிவம் அப்படின்னு ரெண்டு தொடர்கதை எழுதினாரு. அதை விடாம படிச்சிடுவேன். ஒவ்வொண்ணும் ஒரு வருடம் (சுமார் 50 வாரங்கள்) வெளிவந்தது. நான் இதுமாதிரியான அமானுஷ்ய மர்மத்தொடர்களின் ரசிகன். இப்பவும் இந்த கதைகளை நூலகத்துல இருந்து இரண்டு மூன்று முறை படித்திருக்கிறேன். முப்பது நாற்பது ஆண்டுகளுக்கு முன்னால எல்லாவிதமான தொடர்கதைகளுக்கும் தனி வாசகர் வட்டம் இருந்தது. சென்னை தொலைக்காட்சி வந்ததும் பத்திரிகைகளில் கதை படிக்கிறவங்க எண்ணிக்கையில கேன்சர் மாதிரியான ஒரு பாதிப்பு ஏற்படத்தொடங்கி செயற்கைக்கோள் தொ(ல்)லைக்காட்சிகள் வந்ததும் கிட்டத்தட்ட கோமா ஸ்டேஜுக்கே போயிடுச்சு.



புத்தகம் படிக்கிறதுக்கு நாம செலவழிக்கிற நேரத்தைப்போல குறைந்தது 4 மணி நேரத்தை நமக்கு தெரியாம தொல்லைக்காட்சிகள் எடுத்துக்குது. அதை யாரும் உணர்றது இல்லை. அதை இப்போ பேசி என்ன ஆகப்போகுது.



சாதாரணமான திகில் கதைகளை விட அமானுஷ்யங்கள் கலந்த மர்மக்கதைகள் எப்போதுமே வாசகர்களின் ஆதரவைப் பெறக்கூடிய சூழ்நிலை இன்னும் தொடருதுன்னு நினைக்குறேன். அவர்கள் அதற்கு தேர்ந்தெடுக்கும் கதைக்களனும் கருவும் அழுத்தமானதா இருக்கணும். பத்து ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் இதுமாதிரியான அமானுஷ்ய கதைகளுக்கு கோவில் சிலைகள், அதன் புராணபழமை காரணமாக பலகோடி மதிப்பு, நவபாஷான சிலை மாதிரி சக்தி அது இதுன்னு பல கதைக்கருவை கையாண்டாங்க.



அதெல்லாம் ரொம்ப பழைய பஞ்சாங்கம். அந்த மாதிரி பழைய புராணத்துல உள்ள விசயத்தை கையில் எடுத்துகிட்டு இப்போ உலகையே மிரட்டிகிட்டு இருக்குற அணுஉலை, அணுகுண்டு பிரச்சனையிலிருந்து தப்பிப்பது எப்படின்னு ஒரு டிராக்கை பிடிச்சு இந்த கதையை தொடங்கியிருக்காங்க.



எனக்கு தெரிந்த டாக்டர் நண்பர் ஒருவர் பேசிக்கொண்டிருக்கும்போது அணுகுண்டு கதிர்வீச்சால கரப்பான்பூச்சி சாகாது. அதன் இறக்கையில சுரக்குற ஒரு திரவம் அணுக்கதிர்வீச்சை தடுக்கும் அதை நசுக்கிதான் கொல்லணும்னு சொன்னார். இது உண்மையா, பொய்யான்னு எனக்கு தெரியலை. நான் இந்த கருவை மையமா வெச்சு ஒருத்தர் சயின்ஸ் பிக்சன் கதை எழுதுனா எப்படி இருக்கும்னு நினைச்சேன்.



அதையெல்லாம் தாண்டி கர்ணனின் கவசகுண்டலம் சூரிய வெப்பம் மட்டுமில்ல, அணு வெப்பத்தை கூட எதிர்க்கும்னு ஒரு வரியை யோசிச்சு அந்த கவச குண்டலங்களை தேடி வர்றவங்க மதுரை மீனாட்சி அம்மன் கோயிலை குறிவெச்சு கிளம்புறாங்கன்னு முதல் அத்தியாயத்திலேயே பீதியை கிளப்பியிருக்கார் கே.என்.சிவராமன்.



குங்குமம் சன்குழும பத்திரிகைன்னு எல்லாருக்கும் தெரியும். கர்ணனின் கவசகுண்டலம் தலைப்புலேயே மூணு சூரியன் படம் (தலைப்புள்ளியா). கதையோ அணு வெப்பத்தை தாங்கக்கூடிய கனிமம் குறித்து பேசப்போற மாதிரி தெரியுது. (அது வெப்பத்தை மட்டும் தடுக்குமா, அணுக்கதிர்வீச்சையே தடுக்குமான்னு யாருகிட்ட கேட்டு தெரிஞ்சுக்குறது?) எது எப்படியோ, 25 வாரத்துக்காவது இந்த தொடர் வெளிவந்தா ரொம்ப நாளைக்கப்புறம் நல்ல அமானுஷ்ய தொடர்கதை படிச்ச ஃபீலிங் கிடைக்கும்.



பார்ப்போம்...ஏன்னா, கலைஞர் டிவியில ராஜேஷ்குமார் நாவல் ஒண்ணு உயிரின்நிறம் ஊதா அப்படின்னு சனிக்கிழமை தொடரா வெளிவந்துச்சு. மால்குடி சுபா அழுத்தமான குரல்ல சொல்லவா சொல்லவா உயிரின்நிறம் ஊதா அப்படின்னு சூப்பரா பாடின டைட்டில் பாடல் கூட அனைவரையும் கவரும்படியா இருந்துச்சு. ஆனா 10 வாரம் கூட வெளிவரலைன்னு நினைக்குறேன். (பத்திரிகையில இந்த மாதிரி ஸ்பான்சர் பிரச்சனை இருக்காது)


செவ்வாய், 20 நவம்பர், 2012

ஆங்கில டப்பிங் படங்களால் நன்மையா ? தீமையா?







இப்போது சில மாதங்களாக மீண்டும் நூலகத்தில் இருந்து அதிகமாக புத்தகங்கள் எடுத்து படிக்கத்தொடங்கியிருக்கிறேன். (நேர உபயம் : மின்வெட்டு)





ஈரமான ரோஜாவே பட புகழ் இயக்குனர் கேயார் எழுதிய "இதுதான் சினிமா" என்ற புத்தகத்தை இப்போது மீண்டும் படித்தேன். சினிமா உலகத்தில் இருக்கின்ற படத்தயாரிப்பு மற்றும் மார்க்கெட்டிங் சிக்கல்களை தெளிவாக விளக்கும் புத்தகம் அது. இன்னும் எவ்வளவோ பிரச்சனைகள் இருக்கலாம். அதைப் பற்றி நான் இப்போது பேசவில்லை. நான் சொல்ல வந்த விஷயம் வேறு. அதில் டப்பிங் படங்கள் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்களுக்கு மறைமுகமாக சில சங்கடங்கள் தருவதை பற்றி எழுதியிருந்தார். அதை அப்படியே நான் தட்டச்சினால், யாராவது என் மனம் புண்பட்டுவிட்டது என்று வழக்கு தொடர வாய்ப்பு இருக்கிறதா என்ற அச்சம் இருக்கிறது. அதனால் இத்தோடு நிறுத்திக்குவோம். அது என்ன என்று யோசிப்பவர்கள் அந்த புத்தகம் கிடைத்தால் படித்து தெரிந்து கொள்ளவும்.





இப்போது இந்த புத்ததமிழ் பேசும் ஜாக்கிசான் என்ற தலைப்பில் 2010ஆம் ஆண்டு நான் எழுதிய பதிவை மீண்டும் தூசு தட்டியிருக்கிறேன். இப்போது புதிய பதிவுகள் போடுவதை நான் மிகவும் குறைத்துக்கொள்ள காரணம், இப்போது உள்ள சமுதாய சூழ் நிலைகள் காரணமாக மிகவும் பாதிக்கப்பட்டு திணறும் கோடிக்கணக்கானவர்களில் நானும் ஒருவன். அந்த கோபங்கள் நாகரிகமான வார்த்தைகளாக வெளிப்பட்டால் கூட எந்த பக்கம் வழக்கு பாயுமோ என்ற சந்தேகத்துடன் பொழுதைக்கழிக்க வேண்டியிருக்கிறது. ஏன் இந்த வம்பு. இந்த நந்தன தமிழ் வருடம் முடியும் வரை அமைதி காப்போம். அதன் பிறகு இணையத்தில் எழுதுபவர்களின் கழுத்தை நெறிக்கும் சட்டப்பிரிவில் உரிய நியாயமான மாற்றம் உரிய சட்டப்படி உருவாகும் என்று நம்புவோம்.





இப்போது 2010ஆம் ஆண்டு நான் எழுதிய பதிவின் மீள்பிரசுரம்.



********************************************************





சமச்சீர்கல்விக்கும் ஆங்கிலத்திரைப்படத்துக்கும் தொடர்பு  இருக்கா?...






இருக்கே. பள்ளிக்கூடங்கள்ல இருக்குற பாடத்திட்டத்துக்கும் தமிழ் பேசுற ஆங்கிலப்படங்களுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கே.


நீ எந்த பதிவு போட்டாலும் சினிமாவைத்தொடாம எழுதமாட்ட போலிருக்கேன்னு வீட்டுக்கு ஆட்டோவை அனுப்பிடாதீங்கப்பா.


ஒரு பட்டிமன்றத்துல கு.ஞானசம்மந்தன் அவர்கள், "வரவர ஜாக்கிசான் ரொம்ப அழகா தமிழ் பேசுறார். போற போக்கைப் பார்த்தா பட்டிமன்றத்துக்கு நடுவரா அவர் வந்து உட்கார்ந்துடுவார் போலிருக்கே."ன்னார். அதைக் கேட்கும் போது காமெடியாத்தான் இருந்துச்சு.


ஆனா இப்போ அதனால நமக்கு சில சங்கடங்கள் நமக்குத்தெரியாமலேயே இருக்குறது கொஞ்சம் அதிர்ச்சி அளிக்கிற செய்திதான்.


சில தினங்களுக்கு முன்பு புதியதலைமுறை வாரஇதழில் 2010 ஆண்டு எப்படி இருக்கும் என்று ஒவ்வொரு துறையில் உள்ளவர்களிடமும் நேர்காணல் செய்திருந்தார்கள்.


தமிழ்த்திரைப்படத்துறையில் FEFSI தலைவர் வி.சி.குகநாதன்,"ஹாலிவுட் படங்களை அந்த மொழியிலேயே வெளியிடுங்கள். அதன் மூலம் அடிமட்ட ரசிகனும் தன் ரசனையை வளர்த்துக்கொள்ளட்டும். அதைவிட்டுவிட்டு யாரோ ஒரு ஆங்கிலேயனின் வாயசைப்பில் தமிழைத்திணித்து தமிழ் மொழிக்கு களங்கம் ஏற்படுத்திக்கொண்டிருக்கிறார்கள். 2010ம் வருடத்தில் அதைக் கட்டுப்படுத்தவேண்டிய கட்டாயம், தமிழ் சினிமாவிற்கும் தமிழ் சினிமா இளைஞர்களுக்கும் ஏற்பட்டிருக்கிறது."என்று கூறியிருந்தார்.


இதை வெறும் சினிமா தொடர்பான விஷயமாக மட்டும் பார்க்கக்கூடாது.


சமச்சீர்கல்வி பிரமாதம். கலக்கப்போகுதுன்னு ஆளுங்கட்சியும் அதனுடைய ஆதரவாளர்களும் சொல்றாங்க. எதிர்க்கட்சியும் அவங்களைச்சேர்ந்தவங்களும் இது சரியில்லைன்னு வசை பாடுறாங்க. இவங்க எது சூப்பர்னும் விளக்கலை. அவங்க எது சரியில்லைன்னும் சொல்லலை.


நடுவுல என்னை மாதிரியான அப்பாவிகள் மண்டைதான் காயுது.


இப்போது சமச்சீர்க்கல்வித்திட்டத்தின் நிறைகுறையை அலசி ஆராயும் அளவுக்கு நான் பெரிய படிப்பாளி இல்லை. ஆனால் சிறப்பிடம் பெறும் மாணவர்கள் அளவுக்கு அரசுப்பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் திறனையும் மேம்படுத்தும் வ்கையில்தான் பாடத்திட்டம் இருக்க வேண்டுமே தவிர நன்றாகப் படிக்கும் மாணவர்களை நீ, நிறைய அரசுப்பள்ளி மாணவர்களைப் போல் எழுபது சதவீதம் எடுத்தால் போதும் என்று கீழே பிடித்து இழுக்கும் வகையில் சமச்சீர் கல்வி அமையக்கூடாது என்று மட்டும் என்னால் உறுதியாக சொல்ல முடியும்.


இலவசமும் இப்படித்தான். ஒரு பொருளை காசு கொடுத்து வாங்குற அளவுக்கு 



ஒருத்தனை பொருளாதார வலு உள்ளவனா மாத்துறதை விட்டுட்டு இலவசம் கொடுத்து ஒரு அடிமையாவே வெச்சிருக்குறதுக்கு உதாரணம் சொல்றேன்.இது வண்ணத்துப்பூச்சி புழு உருவமா இருக்கும்போது அதுக்கு உதவி செய்யுறதா நினைச்சு கூட்டை  உடைக்கிறதும்  இலவசம் கொடுக்குறதும் ஒண்ணுதான்.


தன்னால கூட்டை விட்டு வெளியில வர்ற வண்ணத்துப்பூச்சியாலதான் பறக்க முடியும். நாமே கூட்டை உடைச்சு அதை வெளியில விட்டா எதுக்கும் பிரயோசனமில்லாம உயிரிழக்க வேண்டியதுதான்.


******


நான் 1996க்குப் பிறகு சில ஆண்டுகள் பத்தாம் வகுப்பு முதல் கல்லூரி செல்லும் வரை அவ்வப்போது பகுதிநேரமாக திரையரங்குகளில் பணியாற்றி வந்தேன்.(பார்த்ததே பகுதி நேரம். இதுல என்ன அவ்வப்போது?...அதையும் தொடர்ந்து பார்க்கலைன்னு அர்த்தம்.)


அதில் ஒரு தியேட்டரில் The Rock, Broken Arrow, Independence day, Golden Eye, Tommorow never dies, Air Force One, Universal Soldire, Jumanji, Evil Dead, Anaconda, The Lost World(jurassic park 3) உட்பட பல படங்களைத் திரையிட்டாங்க.


அந்தப் படங்கள்ல வர்ற வசனங்களோட உச்சரிப்பு பாதி புரியாது. ஆனா ஓரளவுக்கு வசனங்களுக்கு அர்த்தம் விளங்கிடுச்சு. அடுத்து 2000வது ஆண்டு



வாக்கில் கேபிள் டிவி கண்ட்ரோல் ரூம்ல வேலை செய்த நாட்கள்ல Star Plus சேனலில் அமிதாப் தொகுத்து வழங்கிய குரோர்பதி நிகழ்ச்சியை நான் தொடர்ந்து பார்ப்பேன்.அப்போதும் எனக்கு ஓரளவு ஆங்கில அறிவு மேம்பட்டதை உணரமுடிஞ்சது.


நான் கல்லூரி இறுதியாண்டு படிக்கும்போது 2003ல உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்ற சமயம். எனக்கு கிரிக்கெட் மேல ஆர்வமே இல்லன்னாலும் அப்போ நான் போட்டிகளைப் பார்க்க ரெண்டு காரணம் இருந்தது.இந்தியா ஆஸ்திரேலியாகிட்ட தவிர வேறு யார்கிட்டயும் தோற்காம இறுதிப்போட்டிக்கு முன்னேறினது முதலாவது காரணம்.





அடுத்தது வேற என்ன...மந்த்ராபேடிதான். அந்தம்மா(?!) கிரிக்கெட் பத்தி அரைகுறையா புரிஞ்சுகிட்டு ஆர்வக்கோளாறுல தப்புதப்பாதான் கேள்வி கேட்கும். ரொம்ப பேர் அதைக் கேட்டாங்களோ இல்லையோ...அம்மணியோட தரிசனத்தை நல்லாவே பார்த்தாங்க.


எங்க கல்லூரி ஆசிரியர் ஒருத்தர்தான் மந்த்ராபேடி பேசுறதை டிவியில பாருங்கன்னு சொன்னார்.நாங்க எல்லாரும் சட்டுன்னு சிரிச்சுட்டோம்.


"நான் பார்க்கசொன்னது அந்த அம்மாவோட ஆங்கிலத்துக்காக. போட்டுருக்குற டிரஸ்சுக்காக இல்லை." அப்படின்னார்.


நான் கொஞ்சம் ஆர்வமா, சார்..அந்தம்மா தப்புத்தப்பால்ல கிரிக்கெட்டைப்பத்தி பேசுது. அப்போ அந்த இங்கிலீஷ் எந்த கதியில இருக்குமோன்னு கேட்டேன்.


எதுவுமே தெரியாத உங்க மாதிரி புத்திசாலிங்களுக்கு அந்த இங்கிலீஷ் போதும்  



அப்படின்னு சொல்லி, கோ எஜுகேஷன் வகுப்புல மானத்தை வாங்கிட்டார்.


இந்த கேலி கிண்டலை எல்லாம் பொருட்படுத்தாம முயற்சி பண்ணினா நிச்சயமா ஆங்கிலத்தை கண்டிப்பா கத்துக்க முடியும்.


ஜெர்மனி, ரஷ்யா, ஜப்பான், சீனா இங்க எல்லாம் ஆங்கிலத்தை நம்பியா இருக்காங்கன்னுதானே நீங்க கேட்குறீங்க. அங்க எல்லாம் நாடு பூராவும் ஒரே மொழிதான். ஆனா நம்ம நாட்டுல சிவில் சர்வீஸ் நேர்முகத்தேர்வுல கலந்துக்க தலைநகர் போனா வழியில குறைந்தது ஆறு மொழியாவது கத்துக்க வேண்டிய நிலை. எத்தனை மொழி கத்துக்குறோமோ அத்தனை மனிதனுக்கு சமம்னு சொல்லுவாங்க.


அதுக்கு நேரம் ஒதுக்க எல்லாராலயும் முடியாது.அதனால நம்ம நாட்டுல எல்லாரும் ஆங்கிலத்தை இணைப்புப்பாலம் மாதிரி பயன்படுத்துற அளவுக்கு கத்துக்குறது அவசியம். அதாவது ஒவ்வொருவருக்கும் தன்னுடைய தாய்மொழி, ஆங்கிலம் இரண்டும் கட்டாயம். அதுக்கு மேல அவங்கவங்க திறமையைப் பொறுத்து கத்துக்கலாம்.



******


வெள்ளி, 30 செப்டம்பர், 2011

யாரைத்தான் நம்புவதோ...





எதோ ஒரு பத்திரிகையில் தேமுதிக-கம்யூனிஸ்ட் நீங்கலாக மற்ற அனைவரும் கூட்டணி இல்லாமல் போட்டியிடுவது குறித்து கார்ட்டூன் வெளியிட்டிருந்தார்கள்.



சிங்கம்னா சிங்கிளாத்தான் வரும் என்ற ரஜினியின் சிவாஜி படத்தில் வரும் வசனத்தை வைத்து தமிழக கட்சிகள் எல்லாம் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவது குறித்த அந்த கார்ட்டூன் ரசிக்கத்தக்கதாக இருந்தது.



எம்.எல்.ஏ , எம்.பி தேர்தல் எல்லாம் எப்படியோ...இந்த உள்ளாட்சி தேர்தலில் மட்டும் சாமானிய மக்கள் நெருங்க முடியாத தொலைவில் இருப்பவர்கள் வெற்றி பெறுவது ரொம்பவும் கஷ்டம்.



பொதுப்பிரச்சனைகளைத் தீர்க்க தொடர்ந்து ஏதாவது செய்துகொண்டிருப்பவர்களைத் தவிர மற்றவர்களை மக்கள் சுலபமாக ஒதுக்கிவிடுவார்கள்.



நாங்கள் குடியிருக்கும் வார்டில் முக்கியமாக 4 கட்சியினர் போட்டியிடுகிறார்கள். அதில் இரண்டு பேர் இளைஞர்கள். ஒருவர் என் பள்ளித்தோழன், மற்றொருவர் அருகில் குடியிருப்பவர். ஒவ்வொருவருமே என்னை பிரச்சாரத்துக்கு அழைத்தார்கள்.



நான் என்னுடைய வேலைப்பளுவை காரணம் காட்டி மறுத்துவிட்டேன். நான் வாக்களிக்கப்போவது யாருக்கு என்பது யாருக்கும் தெரியாது. ஆனால் நான் யாருடனாவது பிரச்சாரத்துக்கு சென்றால் நான் அவருக்குத்தான் வாக்களித்தேன் என்று (அவருக்கு வோட்டு போடவில்லை என்றாலும் ) மற்றவர்கள் நம்பி விடுவார்கள்.



ஏன் இந்தவம்பு?



புதிய உறுப்பினர்கள் பதவியேற்றவுடன் மூன்று ஆண்டுகளாக பாதாள சாக்கடைக்காக எங்கள் தெருவில் மட்டும் தோண்டிக்கொண்டே இருக்கும் வேலையை அடுத்த 5 வருஷத்துக்குள்ளாவது முடியுங்கள் என்று மனு கொடுப்பேன். வேற என்ன செய்யுறது.


சனி, 10 செப்டம்பர், 2011

கேபிள் குழப்பங்கள்






மீண்டும் அரசு கேபிள் கார்ப்பொரேஷன் என்று தொடங்கிய நாள் முதல் சில கட்டண சேனல்கள் தெரியவில்லையாம்.






அது என்ன "யாம்?"...உனக்கு தெரியாதா என்று நீங்கள் கேட்கலாம். ஆமாங்க...எனக்கு நேரடியா இந்த செய்தி தெரியாது. ஏன்னா...எங்க வீட்டுல கேபிள் கனெக்சனை துண்டித்து மூன்று ஆண்டுகள் இருக்கும்.



மாதத்திற்கு நூற்று ஐம்பது ரூபாய் என்பது மிகவும் அதிகமாக எங்களுக்கு தோன்றியது. அதனால் DTH வைத்துவிட்டோம். நாங்கள் வைத்திருப்பதற்கு மாத சந்தா கிடையாது. கருவிகள் வாங்கியது மற்றும் பொருத்துதல் செலவு மட்டுமே.



ஆனால் தெரிந்த தமிழ் சேனல்கள் என்றால் கலைஞர், பொதிகை, ஜீ தமிழ், மெகா ஆகியவைதான். (மக்கள் தொலைக்காட்சி சில காலம் இந்த இணைப்பில் தெரிந்தது. பிறகு கிடையாது.)



இந்த மூன்றாண்டுகளில் பிரபல சில சேனல்களைப் பார்க்காமல் நாங்கள் உயிருடன் தான் இருக்கிறோம். அது தான் ஏன் என்று புரியவில்லை. ஒரு சில நாளிதழ்களில் சில பே(ய்) சேனல்கள் தெரியாததால் மக்கள் மிகவும் சிரமப்பட்டார்கள் என்று எழுதுகிறார்கள்.



5 கோடி செலவு செய்து போட்ட ரோட்டுக்கு ஐநூறு கோடியைத்தாண்டியும் வசூல் செய்துகொண்டிருப்பதை எதிர்த்துக் கேள்வி கேட்க யாருக்கும் வாய் வருவதில்லை. தன்னுடைய ...........த்தில் யாராவது சூடு வைத்தால்தான் மக்களுக்கு கோபம் வருமோ என்னவோ...



சில சேனல்களில் ஒளிபரப்பாகும் கேடுகெட்ட சீரியல்களைப் பார்த்த ஒரு தாய், மகனுக்கு பெண் பார்க்கும் முன்பே, வரும் மருமகள் எப்படி எல்லாம் சண்டை வளர்ப்பாள், அதை நான் எப்படி சமாளிக்கப்போகிறேன் என்று ஒத்திகை பார்த்துக்கொண்டிருக்கிற நிஜக் கதையும் நடந்து கொண்டுதான் இருக்கிறது.



சீரியல் வரும் காலத்துக்கு முன்பு மாமியார், மருமகள் சண்டை இல்லையா என்று கேட்கலாம். துணியை கொடியில் இருந்து இழுத்ததுமே வரவில்லை என்பது போன்ற அற்பக்காரணங்களுக்காக எல்லாம் விவாகரத்து, பொய் வரதட்சணைக்கொடுமை புகார் என்ற அளவுக்கு பிரச்சனைகளை வீதிக்கு இழுத்து வர முக்கிய காரணகர்த்தா இந்த சீரியல்கள்தான்.



அந்த கொடுமைகள் இருக்கட்டும். என்னுடைய கேள்வி எல்லாம் ஒன்றுதான். கேபிள் தொழிலில் ஏகபோகத்தை ஒழிக்கிறோம் என்று இவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதே புரியவில்லை.



ரயிலில் ஏ/சி கோச்சும் உண்டு. 64 பேர் அமரக்கூடிய பெட்டியில் 600 பேரை திணிக்கும் பொது பெட்டியும் உண்டு.



ஒரு காப்பிக்கு 1000 ரூபாய் விலை சொல்லும் 5 நட்சத்திர ஹோட்டலும் உண்டு, 5 இட்லியை 15 ரூபாய்க்கு தரும் கையேந்திபவனும் உண்டு.



1000 ரூபாயிலும் செல்போன் உண்டு. லட்ச ரூபாயிலும் உண்டு. கேபிளில் மட்டும் ஏன் இந்த முற்றுரிமை?...



கட்டண சேனல்களை இணைத்து 150 ரூபாய் கட்டணத்தில் ஒரு விதமாகவும், இலவச சேனல்களை மட்டும் வைத்து 70 ரூபாயில் மற்றொரு முறை என்று இரண்டு வித இணைப்புக்களையும் கொடுத்தால் பாதி பிரச்சனை தீர்ந்து விடும்.



சென்னையில் செட் ஆப் பாக்ஸ் இருந்தால் தான் கட்டண சேனல்கள் என்ற நிலை வந்ததும் பலர் 100 ரூபாய்க்கு கிடைக்கும் இலவச சேனல்கள் போதும் என்ற முடிவுக்கு வந்து விட்டனர். விளம்பர வருவாயில் பெரிய துண்டு விழுந்தது. இதை எதிர்பார்க்காத ஒரு கட்டண சேனல் குழுமம் (ஒரு இணைப்புக்கு நாலு கட்டணசேனலுக்கு மட்டும் தற்போது 46 ரூபாய் கேட்பதாக சொல்லுகிறார்கள்.) சென்னையில் மட்டும் அந்த சேனல்களை இலவசமாக வழங்கியது.



மூன்று மாதங்களுக்கு அந்த சேனல்களை பார்க்கவில்லை என்றால் மக்கள் அந்த சேனல் நிகழ்ச்சிகளை மறந்து விடுவார்கள். அதே சமயம் விளம்பரங்கள் கிடைக்கவில்லை என்றால் அவற்றை மிக குறைந்த விலைக்கோ, அல்லது இலவசமாகவோ அந்த நிறுவனமே வழங்க வாய்ப்பு உண்டு.



அப்படியும் இல்லை என்றால் கட்டண சேனல்களில் விளம்பரமே இருக்கக்கூடாது என்று கிடுக்கிப்பிடி போட்டால் எல்லாரும் வழிக்கு வருவார்கள்.



என்னைப்போன்ற எவ்வளவோ பேர்கள் 24 மணி நேரத்தில் 18 மணி நேரம் விளம்பரம் போடும் சேனலுக்கெல்லாம் பணம் கொடுத்து பார்க்கத்தேவையில்லை என்று நினைப்பார்கள். நாங்கள் பார்க்க இலவச சேனல்கள் மட்டும் கொண்ட 70 ரூபாய் இணைப்பையும் எவ்வளவு ரூபாய் வேண்டுமானாலும் செலவு செய்ய தயாராக இருப்பவர்களுக்கு 150 ரூபாயில் கட்டண சேனல்களையும் கொண்டு தனி இணைப்பும் வழங்கினால் நல்லது.





கேபிள் ஆப்ரேட்டர்களும், சேனல் உரிமையாளர்களுக்கும் ஒத்துப்போகாததற்கு ஒரு முக்கிய காரணம், எத்தனை இணைப்பு என்பதை யாரும் உறுதியாக சொல்லமுடிவதில்லை என்பதும்தான்.



மின் கட்டணத்தைப்போல் கேபிள் கட்டணத்தையும் ஆன்-லைனில் செலுத்தும் வசதி கொண்டுவந்துவிட்டால் கறுப்பு இணைப்புக்கு வேலை இருக்காது. ஆனால் இப்படி வசூல் செய்யும்போது அரசின் பங்கும், கேபிள் ஆப்ரேட்டர்கள் பங்கும் அவரவர் வங்கிக்கணக்கில் சேருமாறு புரோகிராம் செட் செய்துவிட்டால் பிறகு அந்த தொகைக்காக கேபிள் ஆப்ரேட்டர்கள் பொதுமக்களிடமோ, அதிகாரிகளிடமோ அலைய வேலை இருக்காது.



மின் கட்டணம் போன்று கேபிள் கட்டணமும் குறிப்பிட்ட தேதியில் கட்டப்படவில்லை என்றால் இணைப்பு துண்டிக்கப்படும் என்ற நிலை இருந்தால் எல்லாரும் பணத்தை ஒழுங்காக கட்டுவார்கள்.



எல்லா இணைப்பும் கணக்கில் வந்துவிட்டால் சேனல் உரிமையாளர்கள் அநியாய வசூல் வேட்டை நடத்த நினைப்பதும் குறையும். பணம் வசூல் செய்ய அலையும் நேரம் மிச்சமானால் சேனல்கள் சரியாக தெரியவில்லை என்ற புகாரை கேபிள் ஆப்ரேட்டர்கள் சரியாக கவனிக்காமல் விடும் அபாயமும் உண்டு.



இதையும் ஒரு முறையில் கட்டுப்படுத்தலாம்.



சேனல்களுக்கான சிக்னல்கள் சரியாக வருகிற பட்சத்தில் கேபிள் ஆப்ரேட்டர் தன் பொறுப்பில் ஒரு நல்ல டிவியை வாடிக்கையாளர் வீட்டில் போட்டுக் காண்பித்து சேனல்கள் சரியாக தெரிவதை உறுதிப்படுத்தலாம். இந்த முறையில் வாடிக்கையாளரின் தொலைக்காட்சியில் கோளாறா...கேபிள் இணைப்பில் கோளாறா என்பதும் தெரிந்து விடும்.



பிரச்சனைகளை சரிசெய்ய வேண்டும் என்றால் ஆயிரம் வழி உண்டு. அதை வேண்டுமென்றே சிலர் புகைய விடுவதாகத்தான் எனக்கு தோன்றுகிறது.


சனி, 23 ஏப்ரல், 2011

மின் வெட்டு - சில தீர்வுகள்





கடந்த சில ஆண்டுகளாகவே தமிழகத்தில் மின்தட்டுப்பாடு நிலவி வந்தாலும் கோடை காலங்களில் இந்த பற்றாக்குறை உச்சத்தை தொட்டுவிடுகிறது. இந்த ஆண்டு ஏப்ரல் மாதமே சென்னை தவிர்த்த பிற நகரங்களில் ஒரு நாளைக்கு ஆறு முதல் எட்டுமணி நேரம் வரை மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.



தினமும் மின்வெட்டு கட்டாயமாக்கப்பட்டதால் நடுத்தரக் குடும்பங்களில் கூட இன்வெர்ட்டர்களை மிக அதிகமாகப் பயன்படுத்த தொடங்கியுள்ளனர். இதனால் சுமார் 20 சதவீதம் வரை மின் நுகர்வு கூடுதலாகும் என்று கூறப்படுகிறது.



ஏப்ரல் மாதமே இந்த அளவு மின் பற்றாக்குறை ஏற்பட இது கூட  முக்கியக் காரணமாக இருக்கலாம். பொதுவாகவே புதிய மின்திட்டங்கள் பலன் தர குறைந்தது 5 வருடங்களாவது ஆகும் என்பது அனைவரும் அறிந்ததே.



அதனால் ஆட்சியாளர்கள் எதிர் அணியினரை குறை கூறுவதை நிறுத்தி விட்டு நீண்டகால நோக்கில் பல முடிவுகளை எடுக்க வேண்டியது அவசியம்.

முதல் காரியமாக வீடுகளில் முற்றிலுமாக குண்டு பல்ப் உபயோகத்தை தடுத்து நிறுத்துவது அவசியம். வசதியானவர்களும், நடுத்தர வருவாய் பிரிவினரும் குண்டு பல்ப் பயன்படுத்துவதை தவிர்த்து விட்டு குழல்விளக்கு, சி.எஃப்.எல் போன்றவற்றை பயன்படுத்தத் தொடங்கி விட்டனர்.



ஆனால் இன்னமும் கிராமங்களிலும், வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவர்களும் நிறையவே குண்டு பல்ப் பயன்படுத்தி வருகிறார்கள். இந்த நிலையை மாற்றுவது அரசுக்கு மிகவும் சுலபமான ஒன்றுதான்.



சி.எஃப்.எல் பல்ப்புகள் குறைவான மின்சக்தியைப் பெற்று குறைவான வெப்பத்துடன் அதிக ஒளியைத் தருவதாக சொல்லப்படுகிறது. அந்த பல்ப்புகள் செயலிழந்த பிறகு பாதுகாப்பான முறையில் அழிக்கப்படவில்லை என்றால் அவற்றிலிருக்கும் பாதரசத்தால் கதிர்வீச்சு அபாயம் ஏற்படும்.



ஆனால் எல்.இ.டி வகை விளக்குகளில் இத்தகைய அபாயங்கள் குறைவுதான் என்று சொல்கிறார்கள். மேலும் அவற்றின் ஆயுளும் சி.எஃப்.எல் பல்ப்புகளை விட அதிகம். எனவே இவற்றை முழு அளவில் உற்பத்தி செய்து ஒரு குடும்பத்துக்கு ஒரு ஆண்டுக்கு இத்தனை என்று மானிய விலையில் விற்பனை செய்யலாம்.



ஒரு வேளை அவை முன்பே பழுதாகி விட்டால் அவற்றை அந்த விற்பனை நிலையத்தில் திரும்பக் கொடுத்துவிட்டு மீண்டும் மானிய விலையிலேயே புதிய எல்.இ.டி பல்ப் வாங்கிக் கொள்ளும் வகையில் வழிசெய்தால் அது மிகப்பெரிய அளவில் பலன் தரும்.



சிறு துளி பெரு வெள்ளம் என்ற பழமொழி இதற்கும் பொருந்தும். நம் நாட்டில் உள்ள மக்கள் தொகைக்கு இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டால் மிகப் பெரிய அளவில் நாட்டின் பொருளாதாரத்திற்கும், சுற்றுச்சூழலுக்கும் பெரிய நன்மை தரும்.



இது தவிர அரசு அலுவலகங்கள், தெரு விளக்குகள் போன்றவற்றில் முழு அளவில் சூரியஒளி மின்சாரத்தின் உதவியுடன் சாத்தியப்படும் இடங்களில் எல்லாம் எல்.இ.டி விளக்குகளைப் பயன்படுத்தினால் மின் பற்றாக்குறைப் பிரச்சனையின் வேகத்தைக் கட்டுப்படுத்தலாம்.



என் வீட்டிலேயே முன்பெல்லாம் இரண்டு மாதங்களுக்கு மின் நுகர்வு 120 முதல் 140 யூனிட் வரை இருந்தது. நான் கம்ப்யூட்டர் வாங்கிய நேரத்தில் வீட்டில் இருந்த குண்டு பல்ப்புகளை சுத்தமாக ஒழித்து விட்டு, சி.எஃஎல் பல்ப் உபயோகத்தை அதிகப்படுத்தினேன். இதற்கு நல்ல பலன் கிடைத்துள்ளது.



இப்போது கம்ப்யூட்டர் உபயோகம் அதிகமான பிறகும் மின்சார நுகர்வின் அளவு இரண்டு மாதங்களுக்கு 150 என்ற அளவுக்குள்தான் பெரும்பாலும் இருக்கிறது. எல்.இ.டி பல்ப்புகள் பயன்படுத்தினால் இன்னமும் மின்சாரம் சிக்கனமாக செலவாகும் என்பது கண்கூடு.



என்னுடைய ஒரு வீட்டுக்கே இப்படி என்றால் நாடு முழுவதும் இப்படி முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டால் எத்தனையோ சதவீதம் மின்சார தேவை குறையும். முக்கியமாக மின்வெட்டே இல்லை என்ற நிலை வந்தால் இன்வெர்ட்டர் பயன்பாடு மிகவும் அத்தியாவசிய தேவையுள்ள இடங்கள் தவிர மற்ற இடங்களில் குறைந்து விடும். இதனாலும் 20 சதவீத அளவுக்கு மின்சாரம் விரயமாவது தடுக்கப்படும்.



இதில் தனிமனிதர்கள் ஆர்வம் காட்டினாலும் செய்து முடிக்க வேண்டிய திறன் அரசுக்குதான் உள்ளது.



அரசு இயந்திரம் செவி சாய்க்குமா?





மின் திருட்டைப் பற்றி இந்தப் பதிவில் எழுதவில்லை. ஏனெனில் அது பெரிய தொடர்கதை.