Search This Blog

வெள்ளி, 21 அக்டோபர், 2016

தீபாவளி - மாறிப்போன கொண்டாட்ட முகம்...


இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு வரை தீபாவளி
என்றால் அதற்கு ஒரு மாதம் முன்பிருந்தே வீட்டில் பலகாரம் சுடுவதற்கான ஏற்பாடுகள், ஆயத்த
ஆடைகளை நாடுபவர்கள் குறைவு என்பதால் ஒன்றரை அல்லது இரண்டு மாதங்களுக்கு முன்பே டைலரிடம்
கொடுத்து அவர் தீபாவளிக்கு முதல்நாள் டெலிவரி தேதி குறித்துக் கொடுத்த அட்டையுடன் அந்த
நாளை எதிர்பார்த்து காத்திருப்பது, அப்பா, அம்மா, மாமா என்று பலரிடமும் போராடி சிறு
சிறு அளவில் வெடிகள் வாங்கி அதை காய வைத்து காப்பாற்றி வைத்திருப்பது என்று இன்னும்
என்னென்னவோ சம்பவங்கள், நினைவுகளை கண் முன் நிறுத்தும்.




இளையபாரதம் மின்னிதழ் (16-31 அக்டோபர் 2016) பி.டி.எஃப் பைல் இலவசமாக தரவிறக்கம் செய்ய....





செயற்கைக்கோள் தொலைக்காட்சி ஒளிபரப்புகள்
கால கட்டம் தொடங்கிய உடனேயே தீபாவளியின் முகம் மாறிவிட்டது என்று கூறலாம். தீபாவளி
அன்று அதிகாலையில் எண்ணை தேய்த்து குளித்து விட்டு பேருக்கு எதாவது வெடியை கொளுத்தி
விட்டு பிறகு கடையில் ஆர்டர் கொடுத்து வாங்கிய இனிப்பு, கார வகைகளை பேருக்கு டேஸ்ட்
பார்த்துவிட்டு தொ(ல்)லைக்காட்சியின் தீபாவளி சிறப்பு நிகழ்ச்சிகளில் மூழ்கத்தொடங்கிவிட்டோம்.





பல ஆண்டுகளாக இருந்த பண்டிகை கொண்டாட்ட முறை
மாறிய பிறகு அந்த வடிவமாவது பல ஆண்டுகளுக்கு நீடிக்கும் என்றால் இணையம், ஸ்மார்ட் போன்
ஆகியவை அதற்கு வேலையே வைக்கவில்லை. தினமும் காலை (?!) 4 மணி அல்லது 5 மணிக்கு எழுந்து,
ஆறரை அல்லது ஏழு மணிக்குள் ஷேர் ஆட்டோ, பேருந்து, வேலைசெய்யும் நிறுவன பேருந்து, மின்சார
ரயில் என்று பிடித்து மேற்பார்வையாளர் அல்லது மேலாளரிடம் திட்டு வாங்காமல் ஆபீசுக்குள்
நுழைந்து அரைகுறை சாப்பாட்டுடன் வேலையை பார்த்து, மாலை பணி முடித்து அதே போல் திருவிழா
கூட்டத்திற்குள் சிக்கி இரவு 11 மணிக்கு வீடு வந்து சேரும் பாவப்பட்ட வாழ்க்கையை கோடிக்கணக்கான
நபர்கள் பெரும் நகரங்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.  அவர்களுக்கு தீபாவளி என்றால் பொழுது விடிந்த பிறகு
எழுந்திருப்பது மட்டும்தான் தீபாவளி.





இதில் இன்னொரு வேதனை என்னவென்றால் பெரு நகரங்கள்
என்றில்லை, சின்ன சின்ன கிராமங்களில் கூட அருகிலுள்ள நகரத்திற்கு கடைகளில் விற்பனை,
அல்லது உற்பத்தி சார்ந்த வேலைகளுக்கு செல்லும் அனைத்து வயதினருக்கும் இதுதான் நிலை.
சிவகாசியில் பட்டாசு தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் போன்று ஆபத்தான தொழிலில் இருப்பவர்கள்
நிலை இன்னும் சோகம். இது போன்றவர்களும், இருக்க இடம் இன்றி பிளாட்பாரங்களில் வாழ்பவர்களும்
தீபாவளி போன்ற பண்டிகையை கொண்டாடுவார்களா? அந்த மன நிலை அவர்களுக்கு இருக்குமா? அவர்கள்
அப்படி கொண்டாட ஆசைப்பட்டாலும் பொருளாதாரம் இடம் தருமா என்றெல்லாம் யோசித்தால் மவுனம்தான்
பதிலாக இருக்க முடியும்.





பொருளாதார ரீதியில் சிரமப்படுபவர்களை விட்டுவிடுவோம்.
பண்டிகை கொண்டாடக்கூடிய அளவில் வசதியுள்ள நடுத்தர வர்க்கத்தின் நிலை வேறு வகையில் சிதைந்து
இருக்கிறது. அதாவது ப்ரீகேஜி, எல்.கே.ஜி படிக்கும் குழந்தைகளுக்கு கூட காலை 4 மணி முதல்
இரவு 11 மணி வரை ஷெட்யூல் இருக்கிறது. அவர்கள் சாதாரண நாட்களில் வீட்டுக்கு வெளியே
விளையாடவே நேரம் கொடுப்பதில்லை. அத்தகைய குழந்தைகளும் தீபாவளி அன்று தொலைக்காட்சி,
இணையம், ஸ்மார்ட் போன் என்று மூழ்கி விடுகிறார்கள்.





இன்னும் ஒரே ஒரு வழக்கம் மட்டும் ஓரளவு தமிழ்
மக்களிடம் இருக்கிறது. பள்ளி, கல்லூரி மாணவர்கள் தீபாவளி அல்லது அதற்கு அடுத்த நாள்
சினிமாவுக்கு செல்லும் வழக்கம்தான் அது.





முன்பெல்லாம் ஏழு அல்லது எட்டு படங்கள் கூட
தீபாவளியில் ரிலீஸ் ஆகும். மொத்தத்தில் தமிழகம் முழுவதும் 60 முதல் 80 தியேட்டர்களில்
ரிலீஸ் ஆனாலே அதிகம். வீடியோ பைரசி அபாயம் இல்லாமல் இருந்த காலத்தில் பெயிலியரான மொக்க
படம் கூட குறைந்த பட்சம் தியேட்டர்களில் இரண்டு வாரங்கள் ஓடி லாபம் சம்பாதித்து கொடுத்ததுண்டு.
ஆனால் தற்போது முதல் காட்சி ஓடும்போதே படம் ஹிட் அல்லது பிளாப் என்று ரசிகர்கள் இணையத்தில்
உளறிக்கொட்டி விடுகிறார்கள். அதனால் தீபாவளிக்கு இரண்டு படங்கள் அல்லது மூன்று படங்கள்
மட்டுமே ரிலீஸ் ஆகி எல்லா தியேட்டர்களிலும் தங்களைத்தான் பார்க்க வேண்டும் என்று மறைமுகமாக
கட்டாயப்படுத்திவிடுகின்றன.





இது ஒருபுறமிருக்க, இன்னமும் சினிமாவில்
கதை நாயகன் செய்யும் சாகசங்களில் எல்லாவற்றையும் செய்ய முடியவில்லை என்றாலும், படங்களில்
பார்க்கும் சில விசயங்கள் தப்பு. அதை நாம் செய்தால் சக மனிதன் பாதிக்கப்படுவான் என்ற
எண்ணமே இல்லாமல் செயல்படும் இளைய தலைமுறையினர் நிறையவே இருக்கிறார்கள். அவர்கள் ஒரு
வேலைக்கு சென்று பக்குவப்பட்ட பிறகு தப்பு செய்வதில்லை என்றாலும் இடைப்பட்ட காலத்தில்
தடம் மாறும் இளைய தலைமுறையால் சமூகத்தில் பல மனிதர்கள் வெவ்வேறு வகைகளில் பாதிப்பை
சந்திக்கிறார்கள்.





உதாரணமாக நாம் ஆசைப்பட்ட பெண் கிடைக்க வில்லை
என்றால் காலம் கூடி வரும்போது கண்டிப்பாக திருமணம் நடக்கும், நம் மீதும் நம் குடும்பத்தின்
மீதும் அன்பு செலுத்த ஒருத்தி கிடைப்பாள். அவளை நல்லபடியாக வைத்து வாழ வேண்டும் என்ற
எண்ணம் இன்றைய இளைஞர்களில் குறிப்பிட்ட சதவீதத்தினருக்கு இருப்பதில்லை. கொஞ்சம்பேர்தானே
அப்படி இருக்கிறார்கள். அதனால் என்ன என்று விட்டுவிட முடியாது. இந்த சொற்ப சதவீதத்தினர்தான்
தன்னை விரும்பாத பெண்ணை கொலை செய்வது, திராவகம் வீசுவது போன்று கீழ்த்தரமான செயல்களில்
ஈடுபடுகின்றனர். இதைப்பற்றி எழுதும் எனக்கே மனம் கலங்குகிறது என்றால் நேரடியாக பாதிக்கப்படும்
பெண்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தாரின் நிலையையும் மன நிலையையும் பற்றி எழுத வார்த்தைகளே
வரவில்லை.





1996ஆம் ஆண்டு வெளிவந்த பூவே உனக்காக திரைப்படத்தில்
ஒருதலையாக காதலித்த பெண், வேறு ஒருவரை விரும்புவது தெரிந்ததும் பகையாகி கிடக்கும் இரு
குடும்பத்தை சேர்த்து வைத்து அந்த காதலர்களையும் இந்த ஒருதலைக்காதலனே சேர்த்து வைப்பதாக
கதை இருக்கும். ஆனால் அந்த படத்தில் நடித்த விஜய், 2003ல் திருமலை படத்தில் விருப்பம்
இல்லாத ஜோதிகாவை விரட்டி விரட்டி காதலிப்பதாக கதை போகும். படத்தில் ஜோதிகா மீது விஜய்
வன்முறையில் இறங்குவதாக காட்சி இல்லை என்றாலும், சில அரைவேக்காட்டு இளைஞர்கள் மனதில்,
பெண்ணுக்கு விருப்பம் இல்லை என்றாலும் பந்தாவாக, தைரியமாக ஒருத்தியை விரட்டினால் நாளடைவில்
தனக்கு மயங்கிவிடுவாள் என்று முட்டாள்தனமான சிந்தனை விதை விழுந்திருக்கும் என்பதை மறுக்க
முடியாது.





1997ஆம் ஆண்டு மிகப்பெரிய வெற்றி பெற்ற சூர்ய
வம்சம் படத்திலும் படிப்பை காரணம் காட்டி திருமணம் செய்ய மறுத்த பெண்ணை, நீ என் அப்பாவுக்கு
எப்பவுமே பிடிச்ச பெண்ணாயிரு. நான் பிடிக்காத பிள்ளையாவே இருந்துடுறேன் என்று பெருந்தன்மையுடன்
ஒதுங்கிவிடும் வகையில் சரத்குமார் கேரக்டர் இருக்கும். இது போல் எத்தனையோ நல்ல சினிமாக்களை
மேற்கோள் காட்ட முடியும்.





நான் கூறுவது, இந்த மாதிரி தெய்வீகத்தன்மையுடன்
இளைஞர்கள் இருக்க வேண்டாம். தன்னை பிடிக்கவில்லை என்று கூறும் பெண்ணை விட்டு ஒதுங்கி
இவன் வாழ்க்கையை நல்ல முறையில் வாழச்சென்றால் போதுமே.





இந்த தீபாவளிக்கு ரிலீசாகும் படங்களில் நிச்சயம்
ஆன பெண்ணை லவ் பண்ணி தான் கல்யாணம் பண்றது தப்பில்லைன்னு கதையமைப்போட எத்தனை படம் இருக்கோ?


************************************


சோழா தியேட்டருக்கு 32வது பிறந்த நாள்





சோழா தியேட்டர் 25-10-1985 ஆம் தேதி திறப்புவிழா
செய்யப்பட்டது என்று தியேட்டர் கல்வெட்டில் பார்த்த நினைவு. தற்போது வீடுகளில் உள்ள
தொலைக்காட்சி திரைகள் பெரிதாகிக் கொண்டே செல்கின்றன. ஆனால் தியேட்டர் திரைகள் சிறிதாகிக்கொண்டே
வருகின்றன. ஆயிரம் பேர், இரண்டாயிரம் பேர் அமர்ந்து பார்க்கக்கூடிய அளவில் திரையரங்குகள்
கட்டப்பட்ட காலம் சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பாகவே போய்விட்டது என்று சொல்லலாம். திருவாரூரில்
நகரத்திற்குள் 5 தியேட்டர்கள் இருந்தன.





அவற்றில் பேபி டாக்கீஸ், செங்கம் டாக்கீஸ்
ஆகியவை இடிக்கப்பட்டுவிட்டன. இவற்றில் பேபி டாக்கீஸ் மிகச் சிறிய திரையரங்கம். அது
நாடக மன்றமாக இருந்து தியேட்டராக உருமாறியதாக கூறுவார்கள். திரைப்பட தயாரிப்பாளர் ஜீ.வெங்கடேஸ்வரனுக்கும்
விநியோகஸ்தர்களுக்கும் பிரச்சனையான காலகட்டத்தில் எந்த ஊராக இருந்தாலும் எவ்வளவு பாடாவதி
தியேட்டராக இருந்தாலும் லீசுக்கு எடுத்து சிலகாலம் நடத்தினார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.
ரஜினியின் பணக்காரன் உள்ளிட்ட சில பெரிய படங்கள் அந்த தியேட்டரில் ஓடியது என் நினைவில்
இருக்கிறது. இதை வைத்துப் பார்க்கும்போது மேற்கண்ட தகவல் உண்மையாக இருந்திருக்கலாம்.





செங்கம் டாக்கீசைப் பொறுத்தவரை, சிறப்பான
சிற்ப வேலைப்பாடுகளுடன் நல்ல ஒளி, ஒலி அமைப்புடன் 1965 - 70 காலகட்டத்திற்குள் கட்டப்பட்ட
தியேட்டர் என்று நினைக்கிறேன். திருவாரூரில் இது மிகப்பெரிய திரையரங்கம். பின் பாதி
அளவில் தனி இருக்கை. அடுத்து கால்வாசி அளவுக்கு பெஞ்சுகள். முன்னால் சுமார் இருபது
முதல் முப்பது அடி நீளம் வரை காலி தரை. மொத்தமாக ஆயிரம் பேருக்கு மேல் படம் பார்க்கக்கூடிய
அளவுக்கு இருந்த தியேட்டர். 1990களிலேயே செங்கம் தியேட்டர் மளையாளப்படங்கள், ஆங்கிலப்படங்கள்
என்று திசை தடுமாறி தத்தளித்து 1999ஆம் ஆண்டுடன் படம் திரையிடலை நிறுத்திக் கொண்டு
அடுத்த சில ஆண்டுகளில் இடிக்கப்பட்டுவிட்டது. கடைசியாக 1999 ஏப்ரல் மாதத்தில் ஆனந்தப்பூங்காற்றே
என்ற படம் 48 நாட்கள் ஓடியது. ஆனால் நஷ்டம்தான்.





பொன்னி என்ற பெயரில் கட்டப்பட்டு வந்த தியேட்டர்,
வேறு ஒருவர் வாங்கியதால் தைலம்மை தியேட்டர் என்ற பெயருடன் 1979ஆம் ஆண்டு ஜனவரி 19ஆம்
தேதி திறக்கப்பட்டது. இதில் சுமார் 730 இருக்கைகள் இருக்கும். எக்ஸ்ட்ரா இருக்கைகள்
போடுவது தனி. (ரஜினி படம், தீபாவளி அன்று இதற்கு வாய்ப்பு இருக்கும்.)





நடேஷ் தியேட்டர் 05-03-1990ல் குளிரூட்டப்பட்ட
வசதியுடன் கூடியதாக திறக்கப்பட்டு விஜயகாந்த் ராதா நடித்த மீனாட்சி திருவிளையாடல் படம்
திரையிடப்பட்டது. திருவாரூரில் இப்போது இருக்கும் 3 தியேட்டர்களில் 559 இருக்கைகளுடன்
கூடிய மிகச் சிறிய தியேட்டர்.





சோழா தியேட்டர் 25-10-1985ல் திறக்கப்பட்டது.
இதில் 770 இருக்கைகள் இருந்த நினைவு. அந்த ஆண்டு ஆகஸ்ட் 15ல் ரிலீசான முதல் மரியாதை
சுமார் இரண்டரை மாதங்களுக்கு பின்னர் முதல் படமாக திரையிடப்பட்டது. விக்ரம், பூவிழிவாசலிலே
போன்ற படங்கள் சோழாவில்தான் திரையிடப்பட்டது என்று நினைக்கிறேன். திருவாரூர் போன்ற
சிறிய நகரங்களில் தியேட்டர்கள் தாக்குப்பிடித்து நிற்பது மாபெரும் சாதனை என்றுதான்
சொல்ல வேண்டும். 





பெரிய நகரங்களில் மல்டிபிளக்ஸ் தியேட்டர்கள் இருக்கும் இடங்களில் ஷாப்பிங்
காம்ப்ளக்ஸ் உள்ளிட்ட பல வர்த்தகம் நடக்கும்போது அவர்களால் தியேட்டர் நடத்துவது கடினமான
ஒன்றாக இருக்காது. ஆனால் திருவாரூரில் நடேஷ், தைலம்மை ஆகிய இரண்டு தியேட்டர்களின் முன்பும்
காம்ப்ளக்ஸ் உண்டு. ஆனால் சோழாவைப் பொறுத்தவரை மூன்று நான்கு கடைகளில் 1 கடையோ இரண்டு
கடையோதான் இயங்குவதாக நினைக்கிறேன். இப்படிப்பட்ட சூழலில் தொடர்ந்து படம் திரையிடல்
வருமானத்தை மட்டும் வைத்து இயங்கி வருகிறது இந்த சோழா தியேட்டர். (உரிமையாளருக்கு வேறு
பல தொழில்கள் இருக்கலாம். கோடிக்கணக்கில் வருமானம் இருக்கலாம். நான் குறிப்பிட்டிருப்பது
தியேட்டர் இருக்கும் இடத்தை வைத்து கூறியுள்ள மதிப்பீடு)





25-10-2016 அன்று 32ஆம் ஆண்டு தொடக்கவிழா
காணும் சோழா தியேட்டருக்கு வாழ்த்துக்கள்!


****************************************************





































சினிமா தியேட்டர்கள் மூடப்படுவதற்கு யார்
காரணம்?


2010 ம் ஆண்டு எழுதப்பட்டது.





1996ம் ஆண்டு நான் சினிமா தியேட்டரில் வேலை,பள்ளிக்கூடத்தில்
படிப்பு என்று இரட்டைக்குதிரையில் சவாரி செய்துகொண்டிருந்த காலகட்டம்.(ஒரு குதிரை சவாரியும்
இன்று வரை எனக்கு கைகூடலைன்னுங்குறதெல்லாம் இப்ப நமக்கு தேவையில்லை.)





அப்போது திருவாரூர் நகரத்தில் நான்கு, புற
நகர்ப்பகுதியில் ஒன்று என்று ஐந்து தியேட்டர்கள் இருந்தன.இப்போது புற நகர்ப்பகுதியில்
இருந்த தியேட்டர்(தியேட்டர் மாதிரி) நெல் கோடவுனா மாறிட்டதா சொன்னாங்க.





திருவாரூர் நகரப்பகுதியில் இருந்த ரெண்டு
தியேட்டர்களை இடித்து அப்புறப்படுத்தியாச்சு.மிச்சமிருக்குற மூணு தியேட்டர்கள் எப்படியோ
சமாளிச்சு உசுரோட இருக்கு.





இந்த மூணு தியேட்டர்களும் 1996ல சிறப்பா
இயங்கிகிட்டு இருந்த சமயம். பரம்பரை,உள்ளத்தை அள்ளித்தா, நாட்டுப்புறப்பாட்டு, பூவே
உனக்காக, காலம்மாறிப்போச்சு,பாஞ்சாலங்குறிச்சி,சிவசக்தி போன்ற படங்கள் குறைந்தபட்சம்
முப்பதுநாள், அதிகபட்சம் அறுபதுநாள் என்ற கணக்குல ஒரு தியேட்டர்ல நல்லா வசூல் செய்துகிட்டு
இருந்துச்சு.





இன்னொரு தியேட்டர்ல தாயகம், செங்கோட்டை,
இந்தியன், காதல்கோட்டை, அவ்வைசண்முகி அப்படின்னு சூப்பர் டூப்பர் ஹிட் படங்களின் அணிவரிசை.





இப்படி ரெண்டு தியேட்டர்களும் பிரமாதமான
படங்களைத் திரையிட்டு டிக்கட் விலைகளை பதினைந்து, இருபதுன்னு வசூலிச்சுகிட்டு இருந்தாங்க.(1996ம்
ஆண்டில்)





இவை தவிர இன்னொரு தியேட்டர்ல ஆறு ரூபாய்,
பத்து ரூபாய் என்று டிக்கட்டில் உள்ள விலையையே வசூலித்தபடி சுமாரான படங்களைத் திரையிட்டாங்க.
ஆர்ப்பாட்டமில்லாமல் அமைதியாக நல்ல வசூலைதான் அந்த படங்கள் தந்துச்சு. நீதிக்கு தலைவணங்குற
மாதிரி மனுநீதி சோழனை நினைவு படுத்தக்கூடிய சோழா என்ற பெயர் கொண்ட திரையரங்கம்தான்
அது.





அந்த மாதிரி சின்ன விலையில டிக்கட் விற்பனை
செய்ததுக்கு காரணம்,சின்ன பட்ஜெட் படங்களா அவை இருந்ததுதான்.





ஆனா இப்போ, மாஸ் ஓப்பனிங் இருக்குன்னு நம்புற
ஹீரோவுக்கு பத்துப் பதினைஞ்சு கோடியை சம்பளமா கொடுத்து, சத்யம், ஐனாக்ஸ் மாதிரியான
தியேட்டர்கள்ல திரையிட்டு ஒரே வாரத்துல கோடிகளை அள்ளிடணும்னு நினைக்கிறாங்க. இந்த ஐடியா
பல நேரங்கள்ல தப்புக்கணக்காயிடுது.





காயலான் கடைக்குப் போற நிலையில இருக்குற
பஸ்சுலயும் ஏ/சி வால்வோ பஸ்சுலயும் ஒரே டிக்கட் வசூல் செய்தா அது எப்படி சரியா வரும்?
இது கூட தீபாவளி, பொங்கல் சமயமா இருந்தா வேற வழி இல்லாம சொந்த ஊருக்குப் போறவங்க புலம்பிகிட்டே
ஏறுவாங்க. அதுவும் ஒருநாள் கூத்துதான்.





பாழடைஞ்ச நிலையில இருக்குற தியேட்டர்களிலயும்
ஐம்பது நூறுன்னு டிக்கட் விலை வெச்சா யாரால தாங்க முடியும்?. அவனவன் முப்பது ரூபாய்
கொடுத்து குடும்பத்தோட ...........யில பார்த்துடுறான்.





செல்போன் உபயோகம் இப்படி அதிரடியா வெற்றி
அடைஞ்சதுக்கு முக்கிய காரணம் என்ன? ஆயிரம் ரூபாயில இருந்து லட்ச ரூபாய் வரை மொபைல்
கிடைக்குது. எல்லோருக்கும் தாங்கக்கூடிய விலையில சேவைக்கட்டணமும் இருக்கு.





வெளி செல்லும் ஒரு நிமிட அழைப்புக்கு பத்து
ரூபாய், உள் வரும் ஒரு நிமிட அழைப்புக்கு ஐந்து ரூபாய் என்று கட்டணம் இருந்தால் இந்த
துறையின் வளர்ச்சி எப்படி இருந்திருக்கும்னு சொல்ல பள்ளிக்கூட பையனே போதும்.பி.ஹெச்.டி
படிச்ச நிபுணர் தேவையில்லை.





எந்த தொழிலா இருந்தாலும் நிறைய எண்ணிக்கையில்
வாடிக்கையாளர் இருந்தால் அவர்களுக்கு பொருளை கொண்டு சென்று சேர்ப்பது சற்று கூடுதல்
செலவு பிடிப்பதோடு, பணிச்சுமையும் அதிகரிக்கத்தான் செய்யும். இதற்குப் பயந்து பெரிய
விலைப்பொருட்கள் அல்லது பெரிய அளவு வாங்கும் வாடிக்கையாளர்களை மட்டும் நம்பியிருந்தால்
ஒரே ஒரு வாடிக்கையாளர் எடுக்கும் சின்ன முடிவு கூட பெரிய அளவில் கவிழ்த்துவிடும்.





இப்போது சினிமா தொழிலிலும் இந்த
.............. தனத்தைதான் சில தயாரிப்பாளர்கள் செய்துகொண்டிருக்கிறார்கள்.





என்னைப் பொறுத்தவரை அவர்கள் சினிமாவை தொழிலாக
நினைக்காமல் சூதாட்டமாக மட்டுமே கருதி பேராசைப்பட்டதுதான் நல்ல படங்களுக்கு கூட சரியான
தியேட்டர் கிடைப்பதில்லை. கிடைத்தாலும் அதிக விலை காரணமாக அதிக நாட்கள் படம் ஓடுவதில்லை.





புகைப்பிடிக்கும் பழக்கத்தை குறைக்க சூப்பர்
ஐடியா


பல தியேட்டர்களை மூட வைத்த இதே டெக்னிக்கை
பயன்படுத்தினால் புகைப்பிடிக்கும் வழக்கத்தையும் குறைத்துவிட முடியும் என்று எனக்குத்
தோன்றுகிறது.





ஒரு சிகரெட் விலை மூணு ரூபாய் நாலு ரூபாயிலிருந்து
கிடைப்பதால்தானே நிறையபேர் ஈஸியா அதுக்கு அடிமையாயிடுறாங்க? ஒரு சிகரெட் விலை நானூறு
ரூபாய் ஐநூறு ரூபாய் என்று வைத்துவிட்டால் அதைப் பயன்படுத்தி உடல்நலத்தை கெடுத்துக்கொள்வதோடு,
அடுத்தவர் நலனுக்கும் வேட்டு வைப்பது குறையும்.





இப்படித்தானே டிக்கட்,பார்க்கிங்,கேண்டீன்
கட்டண விலையேற்றம் ஆகிய விஷயங்களை மட்டுமே வைத்து தியேட்டருக்கு செல்லும் நடுத்தர மக்களை
அலற விடும்போது சிகரெட் விலையை ஏற்றி புகைப் 
பிடிக்கும் வழக்கத்தை குறைக்க முடியாதா என்ன?





*********************************************************


திருவாரூர் டூ குற்றாலம்


2010ம் ஆண்டில் எழுதப்பட்ட பயணக்கட்டுரை


சிங்கம் தனியா போய்தான் அதிரவைக்கும்னு சொல்றாங்க.
ஆனா நிஜ வாழ்க்கையில சிங்கிளா இருந்தா பல இம்சைதாங்க வருது.எல்லாத்தையும் சொல்ல நேரம்
இல்லை.அதனால சில வில்லங்கத்தை மட்டும் தட்டச்சிருக்கேன்.





ஜூன் முதல்வாரம் குற்றாலத்துல நெருங்கிய
உறவினர் கிரஹப்பிரவேச விழா வெச்சிருந்தார். பாட்டி காலமானதும் ஏப்ரல் இறுதியில இருந்து
மே மாசம் முழுவதும் திருவாரூர்-பரமக்குடி பயணமாவே இருந்ததால அம்மாவை விட்டுட்டு நான்
மட்டும்தான் குற்றாலம் போனேன்.





விசேஷகாலமா இருந்ததால இரவு நேரத்துல தஞ்சாவூர்ல
இருந்து மதுரை போறவரை இடம் கிடைக்கிறது கஷ்டம். அங்கிருந்து செங்கோட்டை போற பஸ்சுலயும்
சூழ்நிலை எப்படி இருக்குன்னு தெரியாம ரிஸ்க் எடுக்க விரும்பலை.





அரசு விரைவுப் பேருந்தில் முன்பதிவு பண்ண
போனேன். ஆறாம் நம்பர் இருக்கையே கிடைச்சது. பதினோரு மணி நேர டிராவல்ல குறைஞ்சது ரெண்டு
மணி நேரமாச்சும் தூங்கலாம்னு நம்பிதாங்க பஸ்சுல ஏறுனேன்.





நைட் டின்னருக்காக(?!) தஞ்சாவூர்லயே கிட்டத்தட்ட
ஒருமணி நேரம் வெயிட்டிங்.





தஞ்சை நகரைக் கடந்ததும் ஓரமா வண்டி நின்னுச்சு.
என்னன்னு பார்த்தா கண்டக்டர், டிரைவர் சீட்டுல உட்கார்ந்து ஓட்ட ஆரம்பிச்சுட்டார்.
சிக்கன நடவடிக்கையால ஹெவி டிரைவிங் தெரிஞ்ச ஆளைத்தான் கண்டக்டரா போட்டுருக்காங்கன்னு
அறிவுக்கு தெரிஞ்சாலும் மனசு அந்த இளைஞரை கண்டக்டராவே பார்த்துச்சு.





அப்புறம் எங்க தூங்குறது?





ஆனா கண்டக்டர் ரொம்ப சரியா கிளட்சை யூஸ்
பண்ணி கியர் மாத்தி பஸ்சை இயக்குனார்.‘சரி...இவர், வேலைக்கு சேர்ந்து ரொம்ப நாள் ஆகலை
போலிருக்கு. எக்ஸ்பீரியன்ஸ் ஆட்கள்ல பலர், கியர் பாக்ஸ் எக்கேடு கெட்டுப்போனா என்னன்னு
கிளட்சை ஒழுங்கா பயன்படுத்தாமயே கியர் மாத்துவாங்க.’அப்படின்னு நினைச்சுகிட்டேன்.





மதுரை வரைக்கும் எனக்கு தூக்கமே வரலை. மாட்டுத்தாவணி
பஸ்ஸ்டாண்டுலேருந்து கிளம்பினதுமே தூங்கலாம்னு நினைச்சேன். ஆனா பஸ் ரிங் ரோடு போகாம
யானைக்கல், வடக்குமாரட்வீதி வழியா பழ மார்க்கெட் போகுதேன்னு பார்த்தேன். கண்டக்டர்
கீழே இறங்கிப் போய் பழங்கள் வாங்கிட்டு வந்தார்.(அவங்களுக்குதான்.)





அப்படியே பெரியார் பேருந்து நிலைய பகுதி,
பழங்காநத்தம், திருப்பரங்குன்றம் சாலை வழியா போய் திருமங்கலத்தை நெருங்குனுச்சு. சரி...இனிமே
வேடிக்கை பார்க்க எதுவும் இல்லைன்னு நினைச்சு கண்களை மூடி தூங்க முயற்சி செஞ்சேன்.





சில நிமிஷங்கள்தான்.ஒரு அவலக்குரல். வேற
ஒண்ணுமில்லைங்க. அஞ்சு வரிசைக்குப் பின்னால உட்கார்ந்துருந்த ஒருத்தர் மூணு வரிசை ஆளுங்க
மேல வாந்தி எடுத்துட்டார். சாதாரணமாவே எனக்கு பேருந்துப் பயணத்தின்போது வாந்தி வர முயற்சிக்கும்.
நான் வாயை வயித்தைக் காயப்போட்டு சமாளிச்சுடுவேன்.





ஆனா அந்த ஆள் ஃபுல் மப்புல சைடு டிஷ்ஷா என்ன
எழவைத்தின்னாரோ? அது எதுக்குமே அவரோட வயித்தைப் புடிக்கலை.(பஸ் மேல என்ன பாசமோ) எல்லாம்
வெளியில வந்துடுச்சு.





ஆறு பேர் சட்டையை கழட்டிட்டாங்க. வாந்தி
எடுத்தவரை அடிக்க இல்லைங்க...இந்த நாத்தம் தாங்காமதான். அப்புறம் சாலையோர டீக்கடையில
பஸ்சை நிறுத்தி காசு கொடுத்து நாலு குடம் தண்ணி வாங்கி பஸ்சை அலசி விட்டார் கண்டக்டர்.
நடக்குறது,பறக்குறது, நீந்துறதுன்னு என்னென்ன அவரு வயித்துக்குள்ள இருந்துச்சோ? அவ்வளவு
சீக்கிரம் நாத்தம் போயிடுமா?





கண்டக்டரோட கைக்காசுல சாய்பஜன் ஊதுபத்தி,
கம்ப்யூட்டர் சாம்பிராணி எல்லாம் வாங்கி கொளுத்தி வெச்சார். அப்புறம் கொஞ்சம் பரவாயில்லை.
ஒரு முக்கால் மணி நேரம் அவுட்.





பஸ் கிளம்புனதும் அப்பாடா, இனி இல்லை தொல்லைன்னு
நினைச்சா மறுபடி ஒரு நாத்தம்.





எனக்கு பக்கத்துல உட்கார்ந்துருந்தவர், செண்ட்
அடிச்சார். அடப்பாவி...இதுக்கு அந்த வாந்தி நாத்தமே பரவாயில்லையேன்னு மனசுக்குள்ளயே
புலம்புனேன். வேற என்ன பண்றது?





நானூறு கிலோமீட்டர் தொலைவா இருந்தாலும் இரவு
நேரப் பயணத்துல சில சவுகர்யங்கள் இருக்கு. வெயில் தெரியாது. சராசரியா பகல் நேரத்தை
விட இரவு நேரத்துல பத்து கிலோ மீட்டர் வேகம் அதிகமாவே இருக்கும்.தென்காசி பகுதியில
ரயில்வே மேம்பாலம் கட்டுறதால செங்கோட்டை போற பஸ் எல்லாமே இலஞ்சி சந்திப்போட வேற வழியா
போயிடுச்சு.





அதனால குற்றாலம் போக வேண்டிய நான் இலஞ்சியிலேயே
இறங்கினேன். நிறைய தமிழ் சினிமாவுல வர்ற மாதிரியே நான் இறங்கின இடத்துலயும் ஒரே ஒரு
டீக்கடை மட்டும் இருந்துச்சு.





அதிகாலை நாலு மணியா இருந்தாலும் பங்காளி
ஒருத்தர் டூவீலரை எடுத்துகிட்டு வந்துட்டார்.அவரோட போய் கிரஹப்பிரவேச வீட்டுக்குப்போய்
குளிச்சி மேக்கப் போட்டு, விழாவுல கலந்துகிட்டு, வயித்தை நிரப்பின பிறகு பார்த்தா மணி
ஆறே முக்கால்தான் ஆனது.





தம்பி...அதான் அருவி...பார்த்து நல்லா கும்பிட்டுக்க...


அண்ணே...அப்படியே எல்லா அருவிக்கும் போய்
ஒரு குளியல் போட்டுட்டு வந்துடுறேன்னு சொன்னேன். இன்னொரு பங்காளியும் வண்டியில என்னைய
அழைச்சுட்டு போனாரு.





பிரதான அருவி தெரியுற தூரத்துலயே நிறுத்திட்டு,தம்பி...அதான்
அருவி...பார்த்து நல்லா கும்பிட்டுக்க..."அப்படின்னு சொன்னார்.





நான் ஷாக்காகி அவரைப் பார்த்தேன்.





ஏண்டா டேய்...சீசன் ஆரம்பிக்கிறதுக்கு முன்னால
வந்தா இப்படி நின்னு கும்பிட்டுட்டுதான் போகணும். அடுத்து ஐந்தருவிக்குப்போவோம்...இப்ப
வீட்டுல குருக்கள், கோமியம் தெளிச்சாரே...அந்த மாதிரி முடியுதான்னு பார்க்கலாம்னு சொன்னார்.





நீங்க தண்ணியே தெளிக்க வேணாம்னு வீட்டுக்கு
வண்டியை திருப்ப சொல்லிட்டேன்.





குற்றாலம் வரைக்கும் போயிட்டு அருவியிலயே
குளிக்க முடியலையேன்னு நொந்து போய் வந்தா பாபநாசம் அணைக்குள்ள இருக்குற பாணதீர்த்த
அருவியில எப்படி தண்ணீர் கொட்டுறதை இணையதள செய்தியைப் பார்த்து என் வயித்து ஹீட் அதிகமானதுதான்
மிச்சம்.





சிங்கம் சிங்கிளா போனா எவ்வளவு அக்கப்போர்?





சிங்கம் சிங்கிளாத்தான் வரும்...ஓங்கி அடிச்சா
ஒண்ணரை டன் வெயிட்...இப்படி எல்லாம் டயலாக்கை ஹீரோ பேசும்போது கேட்க நல்லாத்தான் இருக்கு.





ஆனா தனியா பஸ்சுல பயணம் பண்ணும் போது எவ்வளவு
இம்சையா இருக்கு தெரியுமா? நாற்பது ஐம்பது கிலோமீட்டர் தூரம் பயணம் செய்யும்போது கஷ்டம்
தெரியாது.





இப்ப நான் போன மாதிரி நானூறு கிலோமீட்டர்
வேணாம், நம்ம நாட்டுல பல சாலைகளில் இருநூறு கிலோ மீட்டர் தூரம் பயணம் போறதுக்குள்ளயே
நாக்கு வெளியில வந்துடுது.(திருவாரூர் - தஞ்சாவூர் தூரம் 65 கிலோ மீட்டர்தான். ஆனா
இந்த தூரம் போறதுக்குள்ளயே ஸ் ஸ் சப்பா...இப்பவே கண்ணைக்கட்டுதேன்னு புலம்ப வேண்டியதுதான்.)





காத்தோட்டமா ஜன்னல் ஓரமா அப்படான்னு போய்
உட்கார்ந்துருப்போம். ரெண்டு லேடீஸ் வந்து,சார் அங்க மாறி உட்காருங்களேன்."அப்படின்னு
ஆரம்பிப்பாங்க.ரெண்டு பேரா போனா இந்த இம்சை இல்லை.





இப்படித்தான் ஒரு தடவை நான் தஞ்சாவூர்லேருந்து
திருவாரூர் வரும்போது மாறி உட்கார சொன்ன ஒரு பொண்ணுகிட்ட கோபப்பட்டேன்.





இப்ப மாறி உட்கார சொன்னீங்கன்னா பின் பக்க
கண்ணாடியை உடைச்சுகிட்டு கீழே குதிக்க வேண்டியதுதான்.மாறி உட்கார சொல்லியே டிரைவருக்கு
எதிர்ல இருந்த என்னைய பின்பக்க வாசல் வரைக்கும் கொண்டுவந்துட்டீங்க. இப்படியே அடுத்த
பஸ்சுக்கு அனுப்பிடலாம்னு பார்க்குறீங்களா?"ன்னு விட்ட சவுண்டுல அந்தப் பொண்ணோட
சேர்ந்து கண்டக்டரும் சிரிக்கிறாரு.





இந்தப் பிரச்சனைக்கு தீர்வு, நண்பர்கள் யாரையாவது
கூட அழைச்சுட்டுப்போனாத்தான் கிடைக்கும். இன்னும் பெட்டர் ஐடியான்னா அது மனைவியோட பயணம்
பண்றதுதான்னு நான் சொல்லுவேன். (சீக்கிரம் அம்மாகிட்ட சொல்லி பொண்ணு பார்க்க சொல்லணும்.)





இந்த கட்டுரை 2010ஆம் ஆண்டில் எழுதியது.
இப்போது எனக்கு திருமணமாகி ஆண் குழந்தை உள்ளது.





******


சிங்கிளா இருந்து சாதிக்கிறது எல்லாம் சினிமா
வசனத்துக்குதான் சரியா வரும். குறைந்த பட்சம் இன்னொருத்தர் உதவி இல்லாம பெரும்பாலான
காரியங்கள் பெரிய வெற்றி அடையுறது இல்லை.





வில்லன் நடிகர் சொதப்பியிருந்தா கில்லியின்
அபார வெற்றியும், சிங்கம் படம் இப்படி பேசப்படுறதும் அவ்வளவா சாத்தியம் இல்லை.





******************************************************************


23-10-2010


......ஒவ்வொருத்தருக்கும் கம்ப்யூட்டர் இலவசம்.





இதுதான் அடுத்த அறிவிப்பா இருக்கும். தமிழக
சட்டமேலவைக்கு தேர்தல் நடத்தியே தீருவதுன்னு பட்டதாரி, ஆசிரியர் தொகுதி வாக்காளர் பட்டியல்
தயாரிக்கிறதுக்கான வேலைகள் தொடங்கிடுச்சு.


 


கொஞ்ச நாள் வரைக்கும், ‘நம்ம ஆளுங்கதான்
ஃப்ரீயா கொடுத்தா பினாயிலைக்கூட குடிப்பாங்க’ன்னு ஒரு சினிமாவுல கவுண்டமணி சொல்ற டயலாக்கை
நானும் பேசிக்கிட்டுதான் இருந்தேன்.





இந்த மாதிரி ஒரு தொகுதிக்கு வாக்காளர் பட்டியல்
தயாரிக்கிறாங்கன்னு தெரிஞ்சதும் சரி பேர் சேர்த்து அடையாள அட்டையை வாங்கித்தான் வெச்சுப்போமே
ஒரு ஆசை. ஏற்கனவே எழுத்துப்பிழையோட வாக்காளர் அடையாள அட்டை, அட்ரசுல எழுத்துப்பிழையோட
பான் கார்டு, எப்படியோ ஓட்டிக்காட்டி வாங்கின லைசென்ஸ் அப்படின்னு பல கார்டுகளோட இதுவும்
இருந்துட்டு போகட்டுமேன்னு முடிவு பண்ணினேன்.





வேலை பார்க்குற இடத்துல ஒரு நண்பர் ஆர்.டி.ஓ
அலுவலகத்துக்கு அடிக்கடி போவார். அவர்கிட்ட,‘ எனக்கு இது பற்றி முழு விவரங்கள் தெரியலை.
உங்களுக்கு தெரிஞ்ச ஆளுங்க இருந்தா விவரம் கேட்டு அப்ளிகேஷன் வாங்கிட்டு வாங்களேன்.
அப்படின்னு சொன்னேன்.





அடப்போய்யா...ஏற்கனவே சாதாரண வாக்காளர் அடையாள
அட்டையை வெச்சு ரொம்ப அதிகமா கிழிச்சுட்டியாக்கும். போய் வேற வேலையைப் பாருப்பா."அப்படின்னு
அலுத்துகிட்டார். (நண்பேன்டா) அவரு அந்த அட்டையை வெச்சு எங்கெங்க மூக்குடைபட்டாரோ...பாவம்.





இதுக்கு மேல அடுத்தவங்களை நம்பி சரிவராதுன்னு
நெட்டுல விவரங்களை டவுன்லோடு செஞ்சேன்.





முதல் பட்டதாரின்னு ஒரு சான்றிதழ் வாங்குறதுக்காக
தாசில்தார் அலுவலகத்துக்கு 2000வது வருஷம் போனது. அதுக்கப்புறம் என் வேலையா அங்கே போனதே
இல்லை. வாக்காளர் அடையாள அட்டைக்கு விண்ணப்பம் கொடுத்தது, போட்டோ எடுத்தது எல்லாமே
எங்க வீட்டுக்கு அடுத்த தெருவுல இருந்த வாக்குச்சாவடியிலேயே முடிஞ்சுடுச்சு.





இந்த பத்து ஆண்டுகள்ல அடுத்தவங்க வேலைக்காக
ஒண்ணு ரெண்டு தடவை போயிருக்கேன். பொதுவாவே இந்த மாதிரி அரசு அலுவலகத்துக்குப் போனா
பெரும்பாலான ஊழியர்கள் ‘நான் கடவுள்’ தோரணையிலேயே நடந்துக்குறது எல்லாருக்கும் தெரிஞ்ச
விஷயம்தான்.





இந்த தடவை நமக்கு அப்படி எதாவது இன்சல்ட்
நடந்தா அதை அப்படியே சுடச்சுட நியூசாக்கிடலாம்னு ஒரு ஐடியாவோடத்தான் போனேன். (இப்போ
ஒரு தமிழ் நாளிதழோட கிளை அலுவலகத்துல வேலை பார்க்குற துணிச்சல்தான். இல்லன்னாலும் இருக்கவே
இருக்கு இளைய பாரதம்.)





நிச்சயம் ஒரே நாள்ல வேலை நடக்காது. எத்தனை
நாள் அலையணுமோன்னு நினைச்சுகிட்டுதான் 22.10.2010 அன்று ஆர்.டி.ஓ அலுவலகத்துக்கு போனேன்.
என்ன ஒரேடியா மட்டம் தட்டுறன்னு கேட்காதீங்க. என் ராசி அப்படி. அவசரமா தீப்பெட்டி வாங்கணும்னு
பஸ்ஸ்டாண்ட்ல இருக்குற கடைகளுக்கு போனா கூட அங்க ஸ்டாக் இல்லாம பத்து கடைகள்ல அலைஞ்சுதான்
வாங்கணும்.





சுருக்கமா சொன்னா எல்லாரும் ஹாயா லிப்ட்டுல
ஏறி மாடிக்குப் போவாங்க. எனக்கு அப்படி போக கொடுப்பினை இருக்காது. மாடிப்படியில ஏறித்தான்
போகணும். உடம்புக்கு நல்லதுதானேன்னு கேட்பீங்க. ரெண்டு மூணு மாடின்னா பரவாயில்லை. பத்து
மாடிக்கு தினம் பத்து தடவை ஏறி இறங்குறதுன்னா...என்ன ஷாக் ஆகிட்டீங்கிளா. இதுதாங்க
என் அதிர்ஷ்டம். எனக்கு பழகிடுச்சு.





22.10.2010 அன்று தமிழ்நாடு கிழக்கு மத்தியம்
பட்டதாரி தொகுதி வாக்காளர் பட்டியல்ல என் பெயரை சேர்க்க விண்ணப்பம் கொடுக்க போனேனா...அப்படியே
ஷாக் ஆயிட்டேன்.





நான் எல்லா ஆவணங்கள், ஜெராக்ஸ் அப்படின்னு
ரொம்ப தயாராத்தான் போயிருந்தேன். ஒரு ஊழியர்கிட்ட விபரம் கேட்டதும் கோபப்படாம டக்குன்னு
விபரம் சொன்னார்.





அது ஏன்னு எனக்கு தெரியலை.





பொதுவான வாக்காளர் பட்டியல்ல பேர் சேர்க்கணும்னு
சிறப்பு முகாம் நாட்கள்ல வாக்குச்சாவடிக்கு போனா தப்பிச்சோம். இந்த மாதிரி அலுவலகத்துக்கு
போனா சரியான பதில் கிடைக்காது. ஏன்னா அவங்களுக்கே எப்ப விண்ணப்பம் வாங்கணும்னு தெரியாம
இருக்கலாம். அது சரி, கதவைப் பூட்டிட்டு இழுத்துப்பார்க்க கூட மேலதிகாரிகிட்ட அனுமதி
வாங்கணும்குற மாதிரி பல விதிகள் காலத்துக்கு பொருந்தாம இன்னும் இருக்குதே.





என்கிட்ட அவர் மரியாதையா பேசினதுக்கு காரணம்,
நான் பட்டதாரின்னுங்குறதுனாலயா,


இல்ல...ஆசிரியர் தொகுதிக்கு ஒருத்தர் கூட
விண்ணப்பம் கொடுக்க வரலை. வேற வேலை வெட்டி இல்லாததால பட்டதாரி தொகுதிக்கு பேர் கொடுக்க
இந்த மாதிரி வர்ற யூத்துகளையும் பயமுறுத்தி விரட்டி விட்டுட்டா ஆளில்லா கடையில எப்படி
டீ ஆத்துறதுன்னு பயமா.





எனக்கு எதுவும் தெரியலையே.





அஞ்சு நிமிஷத்துல என் விண்ணப்பத்தைக் கொடுத்து
துணை தாசில்தார்கிட்ட ஒப்புகை ரசீது வாங்கிட்டு வந்துட்டேன். இப்ப தெரியுதா நான் ஏன்
ஷாக் ஆனேன்னு.





இந்த மாதிரி அப்ளிகேஷன் போட்டதை வெளியில
சொன்னதும் உன் வேலையை ஒழுங்கா பார்த்தா என்ன...அவனுங்க சம்பாதிக்க நீ உன் நேரத்தை வேஸ்ட்
பண்ணி இப்படி அலையுறியான்னு கேட்டாங்க.





பட்டதாரி, ஆசிரியர் தொகுதிகள்ல இருக்குற
வாக்காளர் எல்லாருக்கும் கம்ப்யூட்டர் இலவசம். அப்படின்னு அறிவிப்பு வந்தாலும் ஆச்சர்யப்பட
ஒண்ணும் இல்லை. ஏன்னா தமிழ்நாட்டோட நிலைமை அப்படின்னு நான் சொன்னதும் அவங்களும் யோசிக்கத்
தொடங்கிட்டாங்க.





அப்புறம் ஏதாவது ஒருத்தர் 3ஜி அல்லது 4ஜி
வயர்லெஸ் இண்டர்நெட் சேவை நிறுவனம் ஆரம்பிப்பார். இலவச கம்ப்யூட்டர் வாங்கின எல்லாரும்
சும்மாவா வெச்சிருப்பாங்க...இணைய இணைப்பு வாங்கி வருஷத்துக்கு பத்து பதினஞ்சாயிரமாவது
பில் கட்ட மாட்டாங்களா?





இந்தியன் படத்துல ஒரு வசனம். மற்ற நாடுகள்லயும்
லஞ்சம் இருக்கு. ஆனா அங்க கடமையை மீறத்தான் லஞ்சம். இங்கதான் கடமையை செய்யவே லஞ்சம்.





ஒட்டுப்போட பணம் ஏன் கொடுக்கலைன்னு கேட்குற
அளவுக்கு பப்ளிக்கே அப்படி இருக்கும்போது சில அரசியல்வியாதிங்களை எப்படி முதல் குற்றவாளியாக்குறது.





*****************


பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு இலவச லேப்டாப்
கொடுக்கப்போவதாக தேர்தல் வாக்குறுதி 2011ல்தான் வந்தது. ஆனால் நான் 23-10-2010ம் தேதியே
இலவச கம்ப்யூட்டர், 3ஜி, 4ஜி இன்டர்நெட் என்று விசயங்களை புகுத்தி கட்டுரை எழுதியிருக்கேன்.
இது என்னோட தீர்க்க தரிசன பார்வையா அல்லது என்ன மாதிரி ஆள் எல்லாம் எளிதா கெஸ் பண்ணக்கூடிய
அளவுல நாட்டு நடப்பு கெட்டுப்போயிருக்கா?





***************


ஒரு கல்வி நிலையத்தின் தரத்திற்கும் அங்கு
வசூலிக்கப்படும் கட்டணத்துக்கும் நேரடித் தொடர்பே கிடையாது.


நீங்கள் நல்லது சொன்னால் நடக்கவும் செய்யலாம்,
நடக்காமலும் போகலாம். கெட்டது சொன்னால் கண்டிப்பாக நடந்தே தீரும்.




மக்களை ஒரு விசயத்தை நம்ப வைக்க வேண்டுமானால்
அதை கிசுகிசுப்பாக சொன்னால் போதும்.


வெள்ளி, 7 அக்டோபர், 2016

இளைய பாரதம் மின்னிதழுக்கு இப்போது என்ன அவசியம்?



சொந்தமாக கணினி வாங்குவதற்கு (2009 பிப்ரவரி வரை) முன்பு நிறைய எழுதினேன். ஒரு முறை தப்பாகி விட்டால் அந்த பக்கம் முழுவதையும் திரும்ப எழுதியாக வேண்டும். அப்போது கற்பனை வளம் நன்றாக இருந்தது. அந்த காலகட்டம் வரை எழுதிய நிறைய கதைகள், துணுக்குகள், கட்டுரைகள் பல பரிசுகளையும் பெற்றுத்தந்தன.





இப்போது கணினியின் உதவியுடன் எழுதி முடித்த பிறகு கூட பலமுறை திருத்தம் செய்யும் வாய்ப்பு இருக்கிறது. ஆனாலும் எழுத்தில் மனம் லயிப்பதில்லை. என்னிடம் இருந்த இன்னொரு குறைபாடு என்னவென்றால் சில இதழ்கள் அறிவிக்கும் சிறுகதைப்போட்டிக்காக மட்டும் அவ்வப்போது கதை எழுதவேண்டும் என்று உட்காருவேன். அதுவும் அறிவிப்பை பார்த்த உடன் செய்தாலாவது பரவாயில்லை. கடைசி தேதிக்கு இரண்டு தினம் முன்பு முயற்சி செய்தால் எப்படி சிறக்கும்?





படம் இயக்க ஒப்புக்கொண்டுவிட்டு, நாயகன், நாயகியை ஒப்பந்தம் செய்து விட்டு திரைக்கதை எழுத ஹோட்டலில் ரூம் போடும் செயலுக்கு கொஞ்சமும் குறைந்ததில்லை இந்த செயல்.





கடந்த ஐந்தாண்டு காலத்திற்கும் மேலாக ஒரு ஆண்டு ஒரு பத்திரிகைக்கு அனுப்பிய கதையை மறு ஆண்டு ட்ச்சப் கூட செய்யாமல் வேறு பத்திரிகை போட்டிக்கு அனுப்புவது என்ற அளவில் சோம்பேறித்தனமாக இருந்திருக்கிறேன்.





மீண்டும் ஒரு கதைகள் கூட பிரசுரம் ஆகாததிலிருந்து என்னை நான் செம்மைப்படுத்திக்கொள்ள முயற்சித்திருக்க வேண்டும். ஆனால் அப்படி செய்யாமல், ஏற்கனவே எழுதிய கதைகளை மீண்டும் மீண்டும் அனுப்பும் முயற்சியிலேயே காலம் கடத்தி வந்திருக்கிறேன்.





விளைவு, மனதில் ஒரே நெருடல். அதை எழுத வேண்டுமே, இதை எழுத வேண்டுமே எந்த தவிப்பு. ஒரு படைப்பை உருவாக்கிவிட்டு அது பிரசுரமாகும் வரை மற்றதை எழுத முயற்சிக்காமல் இருப்பது மிகப்பெரிய தவறு என்று என் மனதுக்கு தோன்றியதால் இந்த மின்னிதழை உருவாக்கியுள்ளேன். 





முதல் இதழில் இடம்பெற்றுள்ள கல்லூரிச்சாலை சிறுகதை கடந்த மூன்று ஆண்டுகளாக எந்த பத்திரிகையிலும் பிரசுரம் ஆகாமல் இருந்தது. அது தவிர நான் முன்பு வலைப்பூவில் எழுதிய ஒரு சில மேட்டர்களையும், நான் பகிர்ந்து கொள்ள நினைத்த துணுக்குகளையும், ஆயுத பூஜை தொடர்பான கட்டுரை ஒன்றையும் தெளித்து முதல் இதழை உருவாக்கியுள்ளேன்.





இனி பரிசு கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு இருக்காது. இன்னும் எதையும் எழுதாமல் இருக்கிறோமே என்ற தவிப்பு இருக்காது. எழுதிய கதை பிரசுரத்துக்கு தேர்வாகுமோ ஆகாதோ என்ற கவலை இருக்காது. அவ்வப்போது இணைய இதழில் எழுதி விடுவதால் எழுத்தை மனதிலேயே தேக்கி வைத்திருக்கும்போது ஏற்படும் பிரசவ வேதனை இருக்காது. எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் எழுதினால் இறைவன் கொடுத்த வரமான கற்பனை வளம் இன்னும் மேம்படும் என்ற மன மகிழ்ச்சியில் இளையபாரதம் மின்னிதழ் (1-15 அக்டோபர், 2016)





(இதை நடத்துவதற்கு எங்கே அனுமதி பெற வேண்டும், சட்ட திட்ட நடைமுறைகள் என்ன என்று ஒன்றும் தெரியாது. ஆனாலும் இலவசம், விற்பனைக்கு அல்ல, தனிச்சுற்றுக்கு மட்டும் என்பதால் துணிந்து செயலில் இறங்கி விட்டேன். கொஞ்சம் கொஞ்சமாக கற்றுக்கொள்வோம்.!)









************************************************************************


ஆயுத பூஜை கொண்டாட்டத்தை பத்தி அப்புனு என்ன சொல்றாரு?





பொங்கல் பண்டிகை, தமிழ் புத்தாண்டு, ஆயுதபூஜை போன்ற விழாக்கள் கொண்டாடும் மரபு இல்லை என்றால் பெரும்பாலான வீடுகள், தொழிலகங்கள் எங்கேயும் எப்போதும் குப்பைக்கூளங்களாகவும் தூய்மையின்றியுமே காட்சியளிக்கக்கூடும். வசிக்கும் வீட்டையும் தொழில் செய்யும் இடத்தையும் தினசரி சுத்தப்படுத்தி தூய்மையாகவே வைத்திருப்பவர்களுக்கு இது போன்ற பண்டிகைகள் வந்தால் ''அடடா... எல்லாத்தையும் சுத்தம் செய்யணுமே'' என்ற பெருமூச்சு எழாது.





ஆயுத பூஜை பற்றி இணையத்தில் என்னதான் பதிவேற்றி வைத்திருக்கிறார்கள் என்று தேடினால் பெரும்பாலான தளங்களில் பொதுவாக காணப்பட்ட தகவல்கள் இதுதான்:





ஆயுதம் என்பதன் உண்மையான பயனை உணர்த்தத்தான் ஆயுத பூஜை கொண்டாடப்படுகிறது. வாழ்வில் நம் உயர்வுக்கு உதவும் ஆயுதங்களை போற்றும் விதம் அவற்றையும் இறை பொருளாகப் பாவித்து வணங்குவதே ஆயுதபூஜை. ஆயுத பூஜையன்று சிறிய கரண்டி முதல் தொழில் இயந்திரங்கள் வரை எல்லா வகை தொழில் உபகரணங்களையும் கழுவி சுத்தமாகத் துடைத்து தேவையெனில் வண்ணம் தீட்டி, எண்ணைப்  பொட்டு வைத்து பூஜைகள் செய்து அவற்றுக்கு ஓய்வு கொடுப்பதும், பிறகு எடுத்து தொழிலுக்குப் பயன்படுத்துவதும் ஆயுதபூஜையின் சிறப்பம்சமாகும். ஆயுத பூஜையன்று எல்லா ஆக்கப்பூர்வமான காரியங்களுக்கு மட்டுமே இந்த உபகரணங்கள், ஆயுதங்களை பயன்படுத்துவோம், மற்ற அழிவு செய்கைகளுக்கு பயபடுத்தமாட்டோம் என்று உறுதி எடுத்துக் கொள்வோமே. விஜய தசமியன்று புதிதாகத் தொழில் தொடங்குவோர், கல்வி பயில ஆரம்பிப்போர் தங்கள் பணிகளை ஆரம்பித்தல் மேன்மை தரும்.


இது போல் பல விதமாகவும் ஆயுத பூஜை பற்றி தகவல்கள் இருக்கின்றன. இவை தவிர கடவுள் மறுப்பு கொள்கை உடையவர்கள் இது தேவையற்ற வழிபாடு என்ற கோணத்தில் சில வாதங்களை முன்வைக்கிறார்கள்.


பெரும்பாலானவர்கள் ஆன்மிகம் என்ற கோணத்தில் ஆயுதபூஜையை ஒரு வழிபாடு என்ற அளவில் மட்டும் நினைத்துக் கொண்டு கொண்டாடுகிறார்கள். சிலர் கடவுள் மறுப்பு என்ற கோணத்தில் ஆயுதபூஜை பழித்துப் பேசி எதுவும் செய்யாமல் இருக்கக்கூடும்.





ஆயுத பூஜையை பொறுத்தவரை இந்தியா முழுவதும் ஒவ்வொரு விதமாக கொண்டாடுகிறார்கள். நவராத்திரியை முன்னிறுத்தி வடமாநிலங்களில் துர்க்காபூஜை, கர்நாடகத்தை பொறுத்தவரை தசரா கொண்டாட்டம், தமிழ கத்தில் நவராத்திரி வழிபாடு ஒருபுறம், ஆயுதபூஜை என்று தொழிலகங்களில் மற்றொரு புறம், விஜயதசமி அன்று கல்வி, கணக்கு என்று அறிவு, புத்தி கொள்முதல் தொடர்பான முயற்சிகள் என்று கொண்டாட்டங்களுக்கு பஞ்சமில்லை.


மற்ற மாநிலங்களை விட்டுவிடுவோம். தமிழகத்தை பொறுத்தவரை ஆயுதபூஜை மழைக்காலத்தின் ஆரம்பம். பொங்கல் பண்டிகை என்பது மழை, பனி நீங்கி வெயில் சுட்டெரிக்கும் பணியை தீவிரமாக்கும் நேரம். ஆக இந்த இரண்டு பண்டிகைகளின்போதும் வீடு, தொழிலகங்களை சுத்தம் செய்தால் சுகாதாரத்துடன், பொருட்கள் வீணாவதும் தவிர்க்கப்படும் என்ற கோணம்தான் அப்புனுவுக்கு தோன்றுகிறது.





ஆன்மிகம், கடவுள் மறுப்பு என்றெல்லாம் பேசிக்கொண்டிருக்காமல் நம் இடத்தையும் பொருட்களையும் சுத்தமாகவும் சுகாதாரமாகவும் பாதுகாக்கவாவது இந்த பண்டிகைகளை நல்லவிதமாக கொண்டாடுங்களேன்.


தம்பி, இந்த சுத்தம் செய்யுற வேலையை நாங்க அப்பப்போ செய்து எப்பவுமே தூய்மையாத்தான் வெச்சிருக்கோம்னு சொல்றீங்களா? 





எதுக்கு சம்பாதிக்கிறோம்... ஆடம்பரம், அநாவசியம் என்று இல்லாமல் அவரவர்கள் தங்கள் சக்திக்கு உட்பட்ட வகையில் அளவோடு செலவழித்து குடும்பத்தினருடன், ஊழியர்களுடன், ஆதரவற்ற இல்லங்களில் இருப்பவர்களுடன் கொண்டாடுங்களேன். 





மனதுக்கு மகிழ்ச்சியும் நாட்டில் பணப்புழக்கமும், சமூகத்தில் பல பிரிவினருக்கு வருவாயும் கிடைக்கும். இதுதான் அப்புனுவோட தீர்ப்பு. என்ன நாஞ்சொல்றது?





***************************************************************************





நண்பர்களே! வணக்கம்...





காலம் காலமாக பத்திரிகை நடத்துபவர்களே விளம்பரம், விற்பனை என்று பல வகையிலும் நிலை நிறுத்த போராடிக்கொண்டிருக்கும் காலகட்டத்தில் புதுசா இது என்ன மின்னிதழ் என்று நீங்கள் யோசிக்கலாம்.


கரகாட்டக்காரன் திரைப்படத்தில், நாட்டுல எண்பது கோடி பேர் இருக்கானுங்க... அவங்களை திருத்துறது என் வேலையில்லை... என்னை நான் முதல்ல திருத்திக்கிறேன்... கவுண்டமணியின் வசனம் இன்றும் முகநூல் மீம்ஸ்களில் அவ்வப்போது பகிரப்பட்டு வருகிறது. அதே சிந்தனைதான் எனக்கும்.





நான் படிப்பது, பார்ப்பது, கவனிப்பது என்று பலவற்றிலும் இருந்து நிறைய கற்றுக்கொண்டே இருக்கிறேன். அதன்படி பெரும்பாலானவற்றை நான் செயல்படுத்தியும் வருகிறேன். அதன் தாக்கத்தில் எல்லாரும் இப்படி இருந்தா எவ்வளவு நல்லாயிருக்கும் என்ற பார்வையில் நிறைய யோசனைகள் என் மனதில் இப்போதும் உதித்துக்கொண்டே இருக்கின்றது.  





சிறு வயதில் நான் படித்த பள்ளிக்கு அருகில் இருந்த நூலகம் செல்லும்போது ஒருசில கையெழுத்து பிரதி இதழ்களை படித்திருக்கிறேன். ஒரு ஏ4 தாளில் இரண்டு பக்கமும் எழுதி, நான்கு பக்க கையெழுத்து பிரதியை நாமும் கொண்டு வர வேண்டும் என்ற ஆசை அப்போதே எனக்கு இருந்தது. அதை செயல்படுத்த கொஞ்சம் தாமதமானதால் இப்போது கணிணியில் வடிவமைத்தே வெளியிடுகிறேன். 





சில எழுத்தாளர்கள் பேட்டியில், குறிப்பிட்ட படைப்பை எழுதி முடிப்பதற்குள் பிரசவ வேதனையை அனுபவித்ததாக சொல்லுவார்கள். இது என்ன எல்லாரும் இந்த உதாரணத்தையே சொல்றாங்க என்று நினைத்திருக்கிறேன். ஆனால் என் மனதில் எழும் எண்ணங்களை எழுத்தாக்கும்போது அந்த உதாரணத்தின் அர்த்தம் புரிந்தது.





எழுத்தாக்கியாயிற்று. அதை பிரசுரம் செய்ய வேண்டும். வெகுஜன இதழ்களில் நம் படைப்பை அவர்களால் வெளியிட முடியாமல் போவதற்கு பல காரணங்கள் இருக்கலாம். அது தவிர நான் கடந்த ஏழெட்டு ஆண்டுகளாக ஒரு சில கதைகளை மட்டுமே எழுதியிருக்கிறேன். அவற்றையும் சில வார இதழ்களில் போட்டிகள் அறிவிக்கும்போது மட்டும் ஒவ்வொரு ஆண்டும் இந்த பத்திரிகை, அந்த பத்திரிகை என்று மாற்றி மாற்றி அனுப்ப வேண்டியது. எழுதுபவர்கள் ஒரே கதையைத்தான் திரும்ப திரும்ப எழுதுகிறார்கள் என்று எழுத்தாளர் சுஜாதா ஏதோ ஒரு பத்திரிகை நேர்காணலில் சொல்லியிருந்ததை படித்ததாக நினைவு. 





நானும் அந்த பட்டியலில் சேர்ந்து விடக்கூடாது என்று தோன்றியது. அதனால் ஒரு முறை ஏதாவது ஒரு பத்திரிகைக்கு அனுப்பி பிரசுரமாகாவிட்டால் மீண்டும் அதை வேறு பத்திரிகைக்கு அனுப்பாமல் இளைய பாரதத்தில் பிரசுரம் செய்து விடலாம் என்ற முடிவுக்கு வந்து விட்டேன்.





கற்பனைக்கு எல்லை ஏது? இப்படி செய்யும்போது புதிது புதிதாக நிறைய எழுதும் எண்ணம் வரும். அதற்காகத்தான் இந்த முயற்சி.





இளையபாரதம் தலைப்பில் இரண்டு படங்கள் இடம்பெற்றிருக்கிறது. நடுவில் உள்ளது மனுநீதி சோழனிடம் பசு தன் கன்று இறந்ததற்காக நீதி கேட்ட படம். இது கற்பனையா, வரலாறா என்ற ஆராய்ச்சிக்குள் நான் செல்லவில்லை. ஒரு தப்பை சுட்டிக்காட்டினால், அவங்க செய்யலையா, அந்த தலைவர் செய்யலையா என்று சப்பைக்கட்டு கட்டும் பழக்கம் திருவாளர் பொதுஜனத்திடமே இருக்கிறது. தாயானாலும், தந்தையானாலும், தன் மகனானாலும் நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே என்ற மன நிலை அனைவருக்கும் வேண்டும். முக்கியமாக இளைய சமுதாயத்துக்கு வேண்டும். அதற்காக மனுநீதி சோழன் போல் உயிரை எடுக்க சொல்லவில்லை. குற்றம் என்று உணர்ந்தால்தான் மீண்டும் அந்த தப்பு தப்பே இல்லை என்ற மன நிலை வராது. 





தனக்கு பாதிப்பில்லாமல், உதவி செய்கிறேன் என்று ஏமாந்து விடாமல், இரக்கத்தினால் சிக்கலில் மாட்டிக்கொள்ளாமல் ஒவ்வொருவரும் தன்னால் முடிந்த அளவு அடுத்தவருக்கு உதவ வேண்டும். இதை குறிப்பிடும்விதமாகத்தான் புள்ளி இருக்கும் இடத்தில் அந்த படம் இருக்கிறது. 


***************************************************************************





யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால்


சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு.





ஒருவன் தன் நாக்கை அடக்காவிட்டால் அதுவே அவனுக்குத் தீராதப் பழியை உண்டாக்கி விடும்.


அதிகாரம் : அடக்கம் உடைமை





குறள் எண் : 127





முகநூல் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் பொதுமக்கள் பகிரவில்லை என்றால் பல நல்ல விசயங்களும், சமூகத்தினை சுரண்டும் சில மனிதர்களின் தவறுகளும், மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகளும் வெளிச்சத்திற்கே வராமல் போயிருக்கும். ஏனென்றால் ஊடகங்களின் தற்போதைய சூழ்நிலை அப்படி. 





அதற்காக கருத்து சுதந்திரம் என்ற பெயரில் அவதூறு, பொய்யான தகவல்களை பகிர்தல், மோசமான வார்த்தைப் பிரயோகங்களை உபயோகித்தல் மிகவும் தவறு. நம் முன்னோர்கள், அரிசியை கொட்டுனா அள்ளிறலாம். வார்த்தையை கொட்டுனா அள்ள முடியாது என்று சொல்லி வைத்தார்கள். 





அப்போதெல்லாம் சமூக ஊடகங்களும் இணையமும் புழக்கத்தில் இல்லை. சொன்னவருக்கும் கேட்டவருக்கும்தான் தெரியும். அந்த காலகட்டத்திலேயே சொன்ன வார்த்தைகள் காலத்துக்கும் பாதிப்பை தரும் வகையில் ஒருவர் இன்னொருவரிடம் சொல்வது, சம்மந்தப்பட்ட நபரிடமே சொல்வது என்று தவறான வார்த்தைகள் சாகாவரம் பெற்றுவிடும்.





தாய், தந்தை, மனைவி, கணவர், குழந்தைகள், உறவினர்கள், பணியாளர்கள், சக ஊழியர்கள், ஆசிரியர், மாணவர்கள், அக்கம்பக்கத்து வீட்டினர் என்று யாரைப் பற்றியும் தவறான வார்த்தைகளை உதிர்க்காமல் இருப்பது எப்போதும் நல்லது. ஜாலியாகத்தானே சொல்கிறோம் என்று நினைத்துக் கொண்டு உறவுகளை, ஆசிரியர்களை, நண்பர்களை மனம் புண்படும் வகையில் சமூக வலைத்தளங்களில் எதையும் எழுதுவது நல்லதல்ல.





இன்றைய காலகட்டத்தில் நாம் பகிரும் ஒரு செய்தி இணையத்தில் எத்தனை இடத்தில் பதிவாக தங்கிவிடும் என்பது இணையதளங்களை நிர்வகிப்பவர் களாலேயே கணக்கிட்டு சொல்ல முடியுமா என்றால் சந்தேகம்தான்.


***************************************************************************





சமச்சீர்கல்விக்கும் ஆங்கிலத்திரைப்படத்துக்கும் தொடர்பு  இருக்கா?...





இருக்கே. பள்ளிக்கூடங்கள்ல இருக்குற பாடத்திட்டத்துக்கும் தமிழ் பேசுற ஆங்கிலப்படங்களுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கே. ஒரு பட்டிமன்றத்துல கு.ஞானசம்மந்தன் அவர்கள், வரவர ஜாக்கிசான் ரொம்ப அழகா தமிழ் பேசுறார். போற போக்கைப் பார்த்தா பட்டிமன்றத்துக்கு நடுவரா அவர் வந்து உட்கார்ந்துடுவார் போலிருக்கே."ன்னார். அதைக் கேட்கும் போது காமெடியாத்தான் இருந்துச்சு.





ஆனா இப்போ அதனால நமக்கு சில சங்கடங்கள் நமக்குத்தெரியாமலேயே இருக்குறது கொஞ்சம் அதிர்ச்சி அளிக்கிற செய்திதான். புதியதலைமுறை வாரஇதழில் 2010 ஆண்டு எப்படி இருக்கும் என்று ஒவ்வொரு துறையில் உள்ளவர்களிடமும் நேர்காணல் செய்திருந்தார்கள்.





தமிழ்த்திரைப்படத்துறையில் இருக்கும் வி.சி.குகநாதன்,ஹாலிவுட் படங்களை அந்த மொழியிலேயே வெளியிடுங்கள். அதன் மூலம் அடிமட்ட ரசிகனும் தன் ரசனையை வளர்த்துக்கொள்ளட்டும். அதைவிட்டுவிட்டு யாரோ ஒரு ஆங்கிலேயனின் வாயசைப்பில் தமிழைத்திணித்து தமிழ் மொழிக்கு களங்கம் ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். 2010ம் வருடத்தில் அதைக் கட்டுப்படுத்தவேண்டிய கட்டாயம், தமிழ் சினிமாவிற்கும் தமிழ் சினிமா இளைஞர்களுக்கும் ஏற் பட்டிருக்கிறது." என்று கூறியிருந்தார்.





இதை வெறும் சினிமா தொடர்பான விஷயமாக மட்டும் பார்க்கக்கூடாது. சமச்சீர்கல்வி பிரமாதம். கலக்கப் போகுதுன்னு ஆளுங்கட்சியும் அதனுடைய ஆதரவாளர்களும் சொல்றாங்க. எதிர்க்கட்சியும் அவங்களைச்சேர்ந்தவங் களும் இது சரியில்லைன்னு வசை பாடுறாங்க. இவங்க எது சூப்பர்னும் விளக்கலை. அவங்க எது சரியில்லைன்னும் சொல்லலை.


நடுவுல பொதுமக்களுக்கே வழக்கம் போல் குழப்பம்.





இப்போது சமச்சீர்க்கல்வித்திட்டத்தின் நிறைகுறையை அலசி ஆராயும் அளவுக்கு நான் பெரிய படிப்பாளி இல்லை. ஆனால் சிறப்பிடம் பெறும் மாணவர்கள் அளவுக்கு அரசுப்பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் திறனையும் மேம்படுத்தும் வகையில்தான் பாடத்திட்டம் இருக்க வேண்டுமே தவிர நன்றாகப் படிக்கும் மாணவர்களை நிறைய அரசுப்பள்ளி மாணவர்களைப் போல் எழுபது சதவீதம் எடுத்தால் போதும் என்று கீழே பிடித்து இழுக்கும் வகையில் சமச்சீர் கல்வி அமையக்கூடாது என்று மட்டும் என்னால் உறுதியாக சொல்ல முடியும்.





இலவசமும் இப்படித்தான். ஒரு பொருளை காசு கொடுத்து வாங்குற அளவுக்கு ஒருத்தனை பொருளாதார வலு உள்ளவனா மாத்துறதை விட்டுட்டு இலவசம் கொடுத்து ஒரு அடிமையாவே வெச்சிருக்குறதுக்கு உதாரணம் சொல்றேன். இது வண்ணத்துப்பூச்சி புழு உருவமா இருக்கும்போது அதுக்கு உதவி செய்யுறதா நினைச்சு கூட்டை  உடைக்கிறதும்  இலவசம் கொடுக்குறதும் ஒண்ணுதான்.





தன்னால கூட்டை விட்டு வெளியில வர்ற வண்ணத்துப்பூச்சியாலதான் பறக்க முடியும். நாமே கூட்டை உடைச்சு அதை வெளியில விட்டா எதுக்கும் பிரயோசனமில்லாம உயிரிழக்க வேண்டியதுதான்.


(2010ல் வலைப்பூவில் எழுதியது)


***************************************************************************


ஆங்கிலப் படம் பார்த்தால் அதிகரிக்கும் ஆங்கில அறிவு...





நான் பணியாற்றிய ஒரு தியேட்டரில் The Rock, Broken Arrow, Independence day, Golden Eye, Tommorow never dies, Air Force One, Universal Soldire, Jumanji, Evil Dead, Anaconda, The Lost World(jurassic park 3) உட்பட பல படங்களைத் திரையிட்டாங்க.


அந்தப் படங்கள்ல வர்ற வசனங்களோட உச்சரிப்பு பாதி புரியாது. ஆனா ஓரளவுக்கு வசனங்களுக்கு அர்த்தம் விளங்கிடுச்சு. 





அடுத்து 2000வது ஆண்டு வாக்கில் கேபிள் டிவி கண்ட்ரோல் ரூம்ல வேலை செய்த நாட்கள்ல Star Plus சேனலில் அமிதாப் தொகுத்து வழங்கிய குரோர்பதி நிகழ்ச்சியை நான் தொடர்ந்து பார்த்தேன்.அப்போதும் எனக்கு ஓரளவு ஆங்கில அறிவு மேம்பட்டதை உணரமுடிஞ்சது.





நான் கல்லூரி இறுதியாண்டு படிக்கும்போது 2003ல உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்ற சமயம். எனக்கு கிரிக்கெட் மேல ஆர்வமே இல்லன்னாலும் அப்போ நான் போட்டிகளைப் பார்க்க ரெண்டு காரணம் இருந்தது.இந்தியா ஆஸ்திரேலியாகிட்ட தவிர வேறு யார்கிட்டயும் தோற்காம இறுதிப்போட்டிக்கு முன்னேறினது முதலாவது காரணம்.


அடுத்தது வேற என்ன...மந்த்ராபேடிதான். அந்தம்மா(?!) கிரிக்கெட் பத்தி அரைகுறையா புரிஞ்சுகிட்டு ஆர்வக்கோளாறுல தப்புதப்பாதான் கேள்வி கேட்கும். ரொம்ப பேர் அதைக் கேட்டாங்களோ இல்லையோ...அம்மணியோட தரிசனத்தை நல்லாவே பார்த்தாங்க.





எங்க கல்லூரி ஆசிரியர் ஒருத்தர்தான் மந்த்ராபேடி பேசுறதை டிவியில பாருங்கன்னு சொன்னார்.நாங்க எல்லாரும் சட்டுன்னு சிரிச்சுட்டோம்.





நான் பார்க்கசொன்னது அந்த அம்மாவோட ஆங்கிலத்துக்காக. போட்டுருக்குற டிரஸ்சுக்காக இல்லை." அப்படின்னார்.


நான் கொஞ்சம் ஆர்வமா, சார்..அந்தம்மா தப்புத்தப்பால்ல கிரிக்கெட்டைப்பத்தி பேசுது. அப்போ அந்த இங்கிலீஷ் எந்த கதியில இருக்குமோன்னு கேட்டேன். எதுவுமே தெரியாத உங்க மாதிரி புத்திசாலிங்களுக்கு அந்த இங்கிலீஷ் போதும் அப்படின்னு சொல்லிட்டார்.





இந்த கேலி கிண்டலை எல்லாம் பொருட்படுத்தாம முயற்சி பண்ணினா நிச்சயமா ஆங்கிலத்தை கண்டிப்பா கத்துக்க முடியும்.





ஜெர்மனி, ரஷ்யா, ஜப்பான், சீனா இங்க எல்லாம் ஆங்கிலத்தை நம்பியா இருக்காங்கன்னுதானே நீங்க கேட்குறீங்க. அங்க எல்லாம் நாடு பூராவும் ஒரே மொழிதான். ஆனா நம்ம நாட்டுல சிவில் சர்வீஸ் நேர்முகத்தேர்வுல கலந்துக்க தலைநகர் போனா வழியில குறைந்தது ஆறு மொழியாவது கத்துக்க வேண்டிய நிலை. எத்தனை மொழி கத்துக்குறோமோ அத்தனை மனிதனுக்கு சமம்னு சொல்லுவாங்க.





அதுக்கு நேரம் ஒதுக்க எல்லாராலயும் முடியாது.அதனால நம்ம நாட்டுல எல்லாரும் ஆங்கிலத்தை இணைப்புப்பாலம் மாதிரி பயன்படுத்துற அளவுக்கு கத்துக்குறது அவசியம். அதாவது ஒவ்வொருவருக்கும் தன்னுடைய தாய்மொழி, ஆங்கிலம் இரண்டும் கட்டாயம். அதுக்கு மேல அவங்கவங்க திறமையைப் பொறுத்து கத்துக்கலாம்.


***************************************************************************


மோசடியில் சிக்கும் மக்கள்





கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக பண விஷயத்தில் படித்தவர், படிக்காதவர் என்று பலரும் மிக அதிகமாக ஏமாந்து கொண்டேதான் இருக்கிறார்கள். இதில் பணத்தாசையை அதிகமாக காட்டும் விளம்பரங்களை பார்த்து 20 ஆண்டுகளுக்கு முன்பு ஏமாந்தது சரி. இப்போதும் பெரிய அளவில் ஊடகங்களில் விளம்பரம் செய்தால் அவர்கள் மோசடி செய்ய வாய்ப்பிருக்காது என்று முழுவதுமாக தங்கள் பணத்தை அர்ப்பணித்துவிட பெரும்பாலான மக்கள் தயாராக இருக்கிறார்களோ என்று எனக்கு சந்தேகம் இருந்துகொண்டே இருக்கிறது.





1 ரூபா விதைச்சா 1 கோடிரூபாய் அறுக்கலாம் என்ற ரீதியிலான விளம்பரங்களுக்கு பஞ்சமே இல்லை.  பணப்பட்டுவாடாவில் சிக்கல் வந்து முதலீட்டாளர்கள் தங்கள் பணத்திற்கு அலைந்து கொண்டிருக்கிறார்கள் என்று பல உதாரணங்களை பேப்பரில் படித்திருக்கிறேன்.





ஆனாலும் சினிமாக்களில் ஒரே பாட்டில் கதா நாயகன் கோடீஸ்வரனாவது போல் திருவாளர் பொது ஜனமும் ஆசைப்படுவதும் இது மாதிரியான சிக்கல்களுக்கு ஒரு காரணமாக இருக்கலாம் அல்லது செலவினங்கள் எல்லா குடும்பத்தாரையும் கழுத்தை நெரிக்க, செலவுகளில் கால்வாசி அளவுக்கு கூட சம்பாதிக்க முடியாத விரக்தியும் ஒரு காரணமாக இருக்கும்.





மிகப்பெரிய கோடீஸ்வரர் சென்னை சிட்டி பஸ்சில் செல்லும்போது மூன்று ரூபாய் கொடுத்து டிக்கட் எடுக்க காசு இல்லை என்றால் நடத்துனர், யோவ்...சாவுகிராக்கி, எறங்குயா முதல்ல..."என்று நல்ல வார்த்தை(?!) சொல்லி அவரை இறக்கிவிடுவார் அல்லது செக்கிங் இன்ஸ்பெக்டரிடம் பிடித்துக்கொடுப்பார்.அந்த நேரத்தில் அந்த பணக்காரரின் சொத்துக்கள் எதுவும் உதவிக்கு வராது.





ஒரு நிதி நிறுவனத்திடம் எல்லாரும் ஒரே நேரத்தில் போட்ட பணத்தை திருப்பிக்கேட்டால் ஏற்படுவதும் இதே நிலமைதான். ஏமாற்றும் நோக்கத்துடன் செயல்படும் நிறுவனங்கள் தவிர்த்து நல்ல நிலையில் இயங்கிக்கொண்டிருக்கும் சில நிறுவனங்களும் திடீரென மூடப்படுவதற்கும் இதுதான் காரணம். நான் கல்லூரியில் படிக்கும்போது ஒரு பேராசிரியர் கொடுத்த விளக்கம்தான் இது.





ஒரு தனியார் தொலைக்காட்சியில் விவாத நிகழ்ச்சியில் புதியதாக சில விஷயங்களைத் தெரிந்துகொள்ள முடிந்தாலும் பல விஷயங்களைப் பூசி மெழுகிவிட்டார்கள்.





அதுசரி...நிகழ்ச்சியில் கலந்துகொண்டிருந்ததில் சில அரசு அதிகாரிகளும் இருந்தார்கள்.பல விதிகளுக்கு உட்பட்டுதானே அவர்களாலும் பேச முடியும்.





இதில் என்னை நெருடிய விஷயம் என்னவென்றால் பதிவு செய்யப்படாத நிறுவனம் பற்றிய தகவல்களை சாதாரண குடிமக்கள்தான் கண்டறிய வேண்டும் என்று சொல்கிறார்கள். அந்த அளவுக்கு அவர்களுக்கு திறமை இருந்தால் இவ்வளவு நாளும் தொடர்ந்து ஏமாந்து கொண்டே இருக்க மாட்டார்களே.





மக்கள் பேராசையால் அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு ஏமாறுவது பெரும்பாலும் முறையாக பதிவு செய்யப்படாத நிறுவனங்களில்தான். இதற்கு ஓரளவு எளிமையான தீர்வு என்னவென்றால் அரசின் இணையதளத்தில் முறையான பதிவு பெற்ற எல்லா தனியார் நிறுவனங்களின் பட்டியலையும் துறை வாரியாக வெளியிட்டுவிடலாம்.





கல்வி நிறுவனங்கள், நிதி நிறுவனங்கள் இவைதான் மக்களுக்கு அதிக நன்மையும் பாதிப்பையும் ஏற்படுத்தக்கூடியவை. அதனால் அவை பதிவு பெற்றால் மட்டும் போதாது. அவர்களின் எல்லை எதுவரை என்பதையும் தெளிவாக வரையறுத்து அதையும் அரசின் இணையதளம் மூலமாக மக்களின் பார்வைக்கு அளிக்கலாம்.





அதுமட்டுமின்றி கல்வி நிறுவனங்களில் சேர்க்கைக்கான காலக்கெடு முடிந்ததும் உரிய துறையில் முழுமையாக மாணவர் பட்டியலையும் அந்த இணையதளத்தில் வெளிப்படையாக்கிவிட்டால் ஒவ்வொரு ஆண்டும் அனுமதி பெறாமலேயே மாணவர்களை சேர்த்துவிட்டு அவர்களைத் தேர்வு எழுதவிடாமல் நடுத்தெருவில் நிறுத்தும் அவலம் காணாமலேயே போய்விடும்.





ஆனால் இன்னொரு முக்கியமான விஷயத்தையும் மனதில் கொள்ள வேண்டும். அரசாங்கத்தின் சில இணையதளங்களில் உடனுக்குடன் புதிய தகவல்கள் பதிவுசெய்யப்படுவதில்லை என்றும் கூறப்படுகிறது.


இந்தியாவின் பிரதமர் மாண்புமிகு இந்திராகாந்தி என்று இணைய தளத்தில் இருந்தால் அது பழைய தகவல் என்று நமக்கு புரிந்துவிடும். ஆனால் பல தனியார் நிறுவனங்களின் அங்கீகாரம் தொடர்பான தகவல்களை அப்டேட் செய்யாமல் விட்டுவிட்டால் அது மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்.





நிதிநிறுவனத்தில் ஆரம்பித்து கல்விநிறுவனத்துக்கு போய்விட்டேன்.பரவாயில்லை...கல்வி பெற நிதி தேவை. நிதியைப் பெறவும் கல்வி ஒரு கருவியாக இருக்கிறது.





போலிகளை ஒழிக்க மேலே நான் சொன்ன சில வழிமுறைகள் நிச்சயமாக நல்ல பலன் தரும். ஆனால் நல்ல முறையில் நடைபெறும் சில நிதிநிறுவனங்களும் திடீரென மூடப்படுகின்றனவே. இதற்கு என்ன காரணமாக இருக்கும்.





ஆப்பு எதுவும் வெளியில் இல்லை. அதற்கும் மக்கள்தான் காரணம். கடன் வாங்கியவர்கள் திரும்ப கட்டவில்லை என்றால் அது முதலீட்டாளர்கள் தலையில்தான் துண்டாக விழும். இதிலும் யோசிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் வங்கியிலும் சரி, சிட்பண்ட்டுகளிலும் சரி சிறு தொகை வாங்கியவர்களில் 95 சதவீதம் பேர் ஒழுங்காக திரும்ப செலுத்துவதாகத்தான் சொல்கிறார்கள். இது உண்மையாகத்தான் இருக்கும்.





அப்போது வில்லங்கம் எங்கே இருக்கிறது. எல்லாம் மிகச் சில பணக்கார முதலைகளால்தான்.அவர்கள் அப்படி பணத்தை திரும்ப செலுத்தாமல் தப்பிக்க யார் காரணம்? நிதி நிறுவனம் என்றால் நிர்வாக இயக்குனர்கள், அரசுடமை வங்கி என்றால் உயரதிகாரிகளிடமிருந்து பல மக்கள் பிரதிநிதிகள் வரை எல்லா மட்டத்திலும் தவறு செய்கிறார்கள்.


அமெரிக்காவில் இரட்டைக்கோபுரத்தை கட்ட எத்தனை ஆயிரம் மூளைகளும் கரங்களும் கால்களும் உழைத்தனவோ? ஆனால் அதை தரைமட்டமாக்கியது நல்லதை யோசிக்காத மூளை இல்லாத ஒரு சிலர்தானே.


அதேபோல் ஊழலுக்கு முக்கியக் காரணம் சிலரின் பேராசைதான்.





நாலுபேர் நல்லா இருக்கணும்னா எதுவுமேதப்பு இல்லை.- இது நாயகன் படத்தில் வரும் வசனம். இதை ரொம்ப தப்பா புரிஞ்சுகிட்டு தப்பாவே செயல்படுத்துறதுக்கு கொஞ்சபேர்தான் இருக்காங்க. ஆனா இதையே நாடு தாங்காது போலிருக்கே.


2010 வலைப்பூவில் எழுதியது


***************************************************************************


கல்லூரிச்சாலை


சிறுகதை





வர்ற ஒண்ணாம் தேதிலேர்ந்து ஹெல்மெட் போடுறதை கட்டாயமாக்கி யிருக்கறதால இனிமே நம்ம முகத்தை பிகருங்களோ... பிகருங்க முகத்தை நாமளோ பார்க்க முடியாது. என்னடா பண்றது?"என்று நாட்டின் மிக முக்கிய பிரச்சனையைப் பற்றி கவலைப்பட்டான் அந்த கல்லூரி மாணவன்.





சென்னை மாதிரி பெரிய நகரங்கள்ல வெயில் பட்டு தோல் கருத்துடக்கூடாதுன்னு உடம்புல எந்த பாகமும் வெளில தெரியாத மாதிரி பொண்ணுங்க கவர் பண்ணிட்டு போறது மாதிரி நம்ம ஊர்லயும் ஒரு சில டிக்கட்டுங்க இப்படி கிளம்பியிருக்குதுங்கடா... நாலஞ்சு நாளா ஒரு பொண்ணு ஹெல்மட், கிளவுஸ் அப்படின்னு ஃபுல் கவரேஜோட ராயல் என்பீல்டு பைக்ல ரைடு வருது. அது மூடிகிட்டு இருக்குறதோட பின்னால உட்கார வெச்சிருக்குற பொண்ணையும் முழுசா மூடி அழைச்சிட்டு வருது. என்ன கொடுமை சரவணன் இது..." என்றான் மற்றொருவன். 





இப்படி பேசிக்கொண்டிருந்த நாளைய இந்தியாவினர் நின்ற இடம், அந்த சிறு நகரத்தில் பிரபல பெண்கள் கல்லூரியும் பள்ளியும் அமைந்திருந்த வீதியின் பெட்டிக்கடை வாசல்.


தம்பிங்களா... சவுண்டை குறைங்கப்பா... முதலுக்கே மோசமாயிடப் போகுது." என்று கடைக்காரர் இவர்களிடம் கெஞ்சிக்கொண்டிருந்தார்.





டேய்... அதோ, தெரு முனையில வர்றது அந்த புல்லட்காரிங்கதான்னு நினைக்கிறேன்..." என்று ஒருவன் டூவீலரில் அமர்ந்திருந்தவனிடம் பரபரப் புடன் சொன்னான். 





"அவளுங்களை இப்ப என்ன பண்றேன்னு பார்..." என்றவாறு வண்டியை செல்ஃப் ஸ்டார்ட் செய்த அவன் சாகசம் நிகழ்த்துவதாக நினைத்துக் கொண்டு முன்வீலை தூக்கி மீண்டும் தரையில் குதிக்க வைத்து சாலையைக் கடந்து சீறியவாறு மறுபுறம் சென்றான். 





இந்த ஓரிரு வினாடிகளுக்குள் புல்லட் அவர்கள் அருகே வருவதற்கும் இவன் சாலையின் மறுபுறம் சீறிக்கொண்டு செல்வதற்கும் சரியாக இருந்ததால், புல்லட் நிலைதடுமாறி அருகில் கட்டிடப்பணிக்காக சாலையில் கொட்டப்பட்டிருந்த ஆற்றுமணலில் போய் சொருகிக் கொண்டது. அதில் இருந்த இரண்டு பெண்களும் ஆளுக்கு ஒரு பக்கமாக உருண்டு விழுந்தனர்.





இவர்களை கீழே விழ வைத்த அவன், இதைப் பார்த்ததும் அதிர்ந்துபோய் வண்டியை விரட்ட நினைத்து எதையோ செய்யப்போக அது ஆஃப் ஆகி நின்றுவிட்டது. மீண்டும் அவன் ஸ்டார்ட் செய்ய முயற்சிப்பதற்குள் புல்லட்டில் இருந்து கீழே விழுந்த பெண்களில் ஒருத்தி தாவிச் சென்று அவன் சட்டையை கொத்தாக பிடித்துக்கொண்டாள். இப்போது பெட்டிக்கடை வாசலில் நின்ற மற்ற இளைஞர்கள் எஸ்கேப்.





இப்போது சாலையில் கூட்டம் கூடிவிட்டது. பெண்ணிடம் சிக்கிய இளைஞன்,சாரி மேடம்... தெரியாம நடந்துடுச்சு... விட்டுடுங்க..." என்று கெஞ்சியவாறே தன்னை விடுவித்துக்கொள்ள முயற்சித்தான். ஆனால் அவள் விடுவதாயில்லை. ஒரு கையால் அவனைப் பிடித்துக் கொண்டே ஹெல்மெட்டை கழற்றினாள். 





இவ்வளவு அழகான பெண்ணை பார்த்து ரசிக்க முடியாம இப்படியொரு வில்லங்கத்தில் மாட்டிக்கொண்டுவிட்டோமே என்ற அவஸ்தை அவன் முகத்தில் தெரிந்தது. 





கவிதா... நூறுக்கு போன் போட்டு இங்க உடனே போலீசை கூப்பிடு..."என்று தன்னுடன் வந்தவளுக்கு உத்தரவு பிறப்பித்தவளின் குரலில் உறுதி தெரிந்தது.





கூட்டத்தினர் அவர்களுக்குள் ஏதேதோ பேசிக் கொண்டு ஒதுங்கி நின்றார்களே தவிர யாரும் இவர்களிடம் நெருங்கி வரவில்லை.





சிக்கியவனை பிடித்து இழுத்து வந்து ஆற்று மணலில் உட்கார வைத்து, அழுத்திப் பிடித்துக் கொண்டாள்.


பதினைந்து நிமிடங்களுக்குப் பிறகு போலீசார் வந்தனர். வந்த ஐந்து போலீசாரில் இரண்டு பேர் கூட்டத்தை கலைப்பதில் கவனம் செலுத்த, மற்றவர்கள் அந்த பெண்ணிடம் வந்தனர்.





"என்னம்மா பிரச்சனை..." என்று அலட்சியமாக ஒரு கேள்வியை கேட்டார் உதவி ஆய்வாளர்.


"சார்... என் பேர்  ஜான்சிராணி..." என்று கம்பீரத்துடன் அந்த பெண் தன் பெயரைச் சொல்லி அறிமுகப்படுத்திக்கொள்ள ஆரம்பித்தவுடன், உதவி ஆய்வாளரிடம் தென்பட்ட அலட்சியம் காணாமல் போனது.





ஜான்சிராணி சொன்னதை கேட்டுக்கொண்ட பிறகு "காயம் எதுவும் இருக்காம்மா?" என்றார்.





"இல்ல சார்... மணல்லதான் விழுந்தோம்..."





"அதுக்குத்தான் இந்த ஆர்ப்பாட்டமா?" என்று உதவி ஆய்வாளர் கேட்டதும், ஜான்சிராணியின் பார்வையில் பொறி பறந்தது. அதைக் கண்டதும் அவருக்கு என்ன தோன்றியதோ தெரியவில்லை, சரிம்மா... நீங்க ரெண்டுபேரும் ஸ்டேஷனுக்கு வந்து புகார் கொடுங்க." என்று சொன்னதுடன், அந்த இளைஞனின் மோட்டார் சைக்கிளை காவலர் ஒருவரை எடுத்துக்கொண்டு போலீஸ் ஸ்டேஷன் வர சொல்லிவிட்டு அவனை ஜீப்பில் ஏற்றிக்கொண்டு சென்றனர்.


காவல் நிலையம்.





புகார் கொடுக்குறதுல உறுதியா இருக்கீங்களாம்மா... ஹெல்மெட் போட்டிருந்ததோட மணல்லதான் விழுந்திருக்கீங்க. அடிதான் எதுவும் படலியே... மன்னிச்சு விட்டுடலாம்ல... பாவம் இவன் படிக்கிற பையன். அது மட்டுமில்லாம, நான் வேணும்னு செய்யல... ஜஸ்ட் ரோட்டை கிராஸ் பண்ணி நான் வண்டியை மூவ் பண்ணும்போது சின்ன ஆக்சிடெண்ட் அப்படின்னு கேசை ஒண்ணுமில்லாம பண்ணிடுவாங்க." என்று இழுத்தார் ஆய்வாளர்.





ஏன் சார்... எங்களுக்கு ரத்தக்காயம் எதுவும் இல்லைன்னா புகார் எடுத்துக்க மாட்டீங்களா... 


நான் நாலஞ்சு நாளாத்தான் இந்தப் பக்கம் போய் வந்துகிட்டு இருக்கேன். இவனும் இவன் நண்பர்களும் பண்ணு சேட்டையை கவனிச்சுகிட்டுதான் இருக்கேன். 





பெண்கள் கல்லூரி, பள்ளி இருக்குற ஒரு வீதியில இப்படி ஈவ்டீசிங் பண்றதை கவனிச்சு தடுக்காம இருந்த உங்க டிபார்ட்மெண்ட்டுக்கும் நோட்டீஸ் அனுப்பினா என்னன்னு தோணுது.





இப்ப நாங்க மணல்ல விழுந்ததால ரத்தக்காயம் இல்லாம தப்பிச்சுட்டோம். இல்லைன்னா, ஈவ்டீசிங் காரணமா பலியான பெண்கள் பட்டியல்ல எங்க பேரும் சேர்ந்திருக்கும். மீடியாவுக்கு ஒரு நாள் செய்தி கிடைச்சிருக்கும். அவ்வளவுதான். 


நானே கோடீஸ்வரன் வீட்டுப் பொண்ணா இருக்குறதால என்னை உட்கார வெச்சு பேசிகிட்டு இருக்கீங்க. 





இதுவே ஏழைப் பெண் ஒருத்தி பாதிக்கப்பட்டிருந்தா அவளுக்கு ஸ்டேஷன்ல கிடைக்கிற மரியாதையே வேறயாத்தானே இருந்திருக்கும்." என்று ஜான்சிராணி கேட்டதும் அந்த ஆய்வாளருக்கு வார்த்தைகள் எதுவும் கிடைக்காமல் தடுமாறினார்.





ஆனாலும் நீங்க சொன்ன விஷயத்தையும் ஒரு செகண்ட் யோசிச்சேன். என்னோட உயிருக்கோ, உடமைக்கோ பாதிப்பு ஏற்படாத நிலையில அவன் பண்ணின தப்புக்காக கடுமையா தண்டிச்சா அவன் திருந்துறதுக்கும் வாய்ப்பு இல்லை. 


ஏன்னா, சிறைக்குப் போறவங்க திருந்தி வெளியில வர்றது மாதிரி தெரியலை. பிரிட்ஜ்ல வச்ச பொருள் மாதிரி ஃப்ரெஷ்ஷா அதே மனநிலையோடதான் தண்டிக்கப்பட்டவன் வெளியில வர்றான்னு ஒரு சினிமா வசனம்தான் நினைவுக்கு வருது.





அதனால, இவன் நண்பர்களையும் எல்லாரோட குடும்பத்தினரையும் வரவழைங்க. அவங்க முன்னிலையில இவனும் இவன் நண்பர்களும் மன்னிப்பு கேட்கட்டும். நான் புகார் எதுவும் கொடுக்கலை." என்றாள் அவள்.





***


எல்லாவற்றையும் முடித்துக் கொண்டு வீட்டுக்குள் நுழைந்த ஜான்சிராணி, ஹாலில் அமர்ந்து, அன்றைய நாளிதழை புரட்டினாள்.





இதற்குள் விபரம் தெரிந்த அவள் தந்தை, "ஏம்மா... என்கிட்ட ஒரு வார்த்தை சொல்லியிருந்தா, அவன் மேல ஒரு கம்ப்ளைண்ட் கொடுக்க நீ ஸ்டேஷக்கு போக அவசியம் இல்லாம, இன்ஸ்பெக்டரையே வீடு தேடி வரவெச்சிருப்பேன். உனக்கு ஏம்மா இந்த வீண் அலைச்சல்..." என்றார்.





"அப்பா... அந்த பையன் செய்த தப்புக்கு அவன் காரணமே இல்லை... அவன் பெற்றோர்களும், இந்த சமுதாயமும்தான். 


சக மனுசனை எப்படி மதிக்கணும், ஒரு பெண்ணை எப்படி பார்க்கணும், அடுத்தவங்களுக்கு இடைஞ்சல் இல்லாம எப்படி வாழணும்... இப்படி எதையுமே நம்ம நாட்டு பள்ளிக்கூடத்துலயோ, கல்லூரிகள்லயோ சொல்லிக்கொடுக்குறதுல்ல... இந்த விசயங்களை எல்லாம் நானே பாடத்திட்டம் தாண்டின வாசிப்பு பழக்கம் இருந்ததாலதான் தெரிஞ்சுக்க முடிஞ்சது. 





தப்பு செஞ்சதும் தண்டனை கொடுக்குறதும் முக்கியம்தான். அதுக்கும் முன்னால தப்பு செய்யறதுக்கு காரணமான விஷயங்களை புரிய வெச்சு அதை மனசுல இருந்து ஒதுக்க நம்ம சமுதாயத்துல என்ன ஏற்பாடு இருக்குன்னு எனக்கு புரியலை." என்ற ஜான்சிராணி, அந்த நாளிதழின் கடைசி பக்கத்தில் அரைப்பக்க வண்ண விளம்பரமாக வெளிவந்திருந்த அவர்கள் கல்லூரியின் விளம்பரத்தைப் பார்த்து அதிர்ச்சியடைந்தாள்.





அதை தந்தையிடம் காட்டி, "என்னப்பா இது...?" என்றவள் முகத்திலும் கேள்விக்குறி.





"ஓ... நீ படிப்பை முடிச்சுட்டு வந்து ஒரு வாரம்தான் ஆகுது. நம்ம பிசினஸ் சம்மந்தப்பட்ட விசயம் எதுவும் முழுசா உனக்கு தெரியாதுல்ல... இதுவரை கோஎஜுகேசனா இருந்த நம்ம ஆர்ட்ஸ் காலேஜை இந்த வருசத்துல இருந்து மகளிர் கல்லூரியா மாத்திட்டேன்." என்றார்.





"ஏன்?"





"உனக்கே தெரியும்மா... நமக்கு ஏகப்பட்ட பிசினஸ், எல்லாத்தையும் கவனிச்சாகணும். இந்த ஆர்ட்ஸ் காலேஜுல நல்ல வருமானம்தான். இல்லைன்னு சொல்லலை. ஆனா பசங்களால ஏகப்பட்ட தொந்தரவு. அடிக்கடி பஞ்சாயத்து. எதாவது நடவடிக்கை எடுத்தா, வார்டு செயலாளர்கிட்ட இருந்து வட்டம், மாவட்டம்னு எல்லா வகை அரசியல்வாதிகிட்ட இருந்தும் இம்சை. 





அது தவிர, இப்போ உன்னைய ஈவ்டீசிங் பண்ணினானே ஒரு பையன், இந்த மாதிரி பிரச்சனை அடிக்கடி வருது. இதுல காதல், கல்யாணம் வேற... அதான் பார்த்தேன். மகளிர் கல்லூரியா மாத்திட்டா எந்த பிரச்சனையும் இல்லாம வருமானம் பார்க்கலாம். அதான் செஞ்சேன்." என்று அலட்சியமாக பதில் சொன்னார்.





"என்னப்பா... நீங்களும் இப்படி இருக்கீங்க... இப்ப நானே தப்பு பண்ணினா, அதை திருத்த வழி பார்க்காம எக்கேடும் கெட்டுப்போன்னு வீட்டை விட்டு விரட்டிடுவீங்களா?"என்ற ஜான்சிராணியின் கேள்வியில் அவர் தந்தை அதிர்ந்ததை அவரின் முகமே காட்டிக்கொடுத்தது.





"நம்ம ஊர் தமிழ்நாட்டுலேயே மிகவும் பின்தங்கிய மாவட்டத்துல இருக்குன்னு நீங்கதானே அடிக்கடி சொல்லுவீங்க. ஆனா இந்த மாதிரி பின்தங்கிய ஊர் மக்கள்கிட்ட வியாபாரம் செஞ்சுதான் நீங்க இவ்வளவு பெரிய பணக்காரரா இருக்கீங்க.





இந்த ஊர் பின்தங்கிய மக்களுக்காக, அரசுக் கல்லூரி ஒண்ணு கூட இல்லாத நிலையில, ஓரளவு நியாயமான கட்டணத்துல நீங்க கலைக்கல்லூரி நடத்துனதை நினைச்சு நான் பெருமைப்பட்ட காலம் உண்டு. 


பள்ளி, கல்லூரிகள்ல பாடம் படிச்ச பையனே வீண் வம்பு செய்யுறது, ஊர் சுத்துறது, பெண்கள் மேல வன்முறை பிரயோகம்னு தப்பான வழிகள்ல போறான்.



































அந்த மாதிரி பசங்களை நல்ல வழிக்கு கொண்டு வர நம்ம கல்லூரியில பாடத்திட்டம் தவிர வேற என்ன மாற்றம் கொண்டு வரலாம்... நம்ம கல்லூரி மாணவன் படிச்சவனா வெளியில போறதைக் காட்டிலும் பண்புள்ளவனா வெளியேற என்ன செய்யலாம்னு யோசிக்கிறதை விட்டுட்டு நமக்கு தொல்லை ஒழிஞ்சா சரின்னு இந்த ஊர் பசங்களை திக்குத்தெரியாத காட்டுல தொலைச்சிட்டு வர்ற மாதிரி கோஎஜுகேஷன் காலேஜை மகளிர் கல்லூரியா மாத்திட்டீங்களேப்பா... 





தொழில்முறை குற்றவாளிகளா இல்லாம, எதிர்பாராம தப்பு செஞ்சவங்க திருந்த எந்த வாய்ப்பும் கொடுக்காம அவங்களை கொடூர மனம் படைச்ச குற்றவாளிகளாவேத்தான் சிறைச்சாலைகள் வெளியே அனுப்புதுன்னு ஒரு வாசகம் படிச்சேன். அதுக்கும் இதுக்கும் எந்த வித்தியாசமும் தெரியலைப்பா." என்று ஆவேசப்பட்டாள் ஜான்சிராணி.





"நீ ஏதோ ஒரு முடிவோட பேசுற... என்கிட்ட சொல்லு. முடியும்னா அதை செஞ்சிடுறேன்." என்றார் அவர்.





"முடியும்னா இல்லை... கண்டிப்பா செய்யணும். ரொம்ப சிம்பிள். மறுபடி கோஎஜுகேசனா மாத்துங்க. மனுசனுக்கு அவசியம் இருக்க வேண்டிய ஒழுக்கத்தை பத்தி கதை, கவிதை, கட்டுரை, களப்பணி போன்ற விசயங்கள்ல போட்டி வையுங்க. இங்க படிக்கிற பசங்க பொருளாதார நிலையில பின்தங்கிய நிலையில இருக்குறதால வெற்றியாளர்களுக்கு ரொக்கப்பரிசு தர்றது நல்லாயிருக்கும்.





அது மட்டுமில்லாம, எல்லா மாணவ, மாணவிகளின் பெற்றோரும் மாசம் ஒருநாள் கட்டாயம் நம்ம கல்லூரிக்கு வந்து ஆசிரியர்கள்கிட்ட தங்கள் பிள்ளைகளின் நிலை குறித்து பேசிட்டு போகணும். வேலை நேரத்துல இங்க வர்றது அவங்க வருமானத்தை பாதிக்கும்னா, மாதம் ஒரு ஞாயிற்றுக்கிழமை காலை ஆறு மணியில இருந்து எட்டு அல்லது ஒன்பது மணி வரை இந்த சந்திப்பை வெச்சுக்கலாம்னு அறிவிப்போம். ஆசிரியர்கள் முகம் சுளிப்பாங்கன்னு நினைச்சா, ஒரு நாள் சம்பளம் கூடுதலா கொடுத்துடலாம்.





இது மாதிரி என்னென்ன விசயம் செஞ்சா சமுதாயத்துக்கு நன்மையோ, அதை எல்லாம் செய்வோம். நிச்சயம் இதுக்கு நல்ல பலன் கிடைக்கும்." என்றாள் ஜான்சிராணி.





அவள் சொன்ன அனைத்து விஷயங்களும் மனிதன் மனம் வைத்தால் சாத்தியமான ஒன்றுதான் என்ற உண்மையை புரியவைத்தது. 





"ஜான்சி... புது வழி காட்டியிருக்க... ஒவ்வொண்ணா நிச்சயம் செய்வோம்." என்று சொல்லி புன்னகைத்தார் அவள் தந்தை.


***********************************************************************


பள்ளி மற்றும் கல்லூரிகளில் குளிரூட்டப்பட்ட அறை தேவையா?





இன்று ஒரு சில தனியார் பள்ளிகளில், வகுப்பறை மற்றும் விடுதி அறைகள், ஏசி வசதி செய்யப்பட்டுள்ளன.


பொதுவாகவே, பள்ளி மற்றும் கல்லூரிகளில், போதுமான அளவு காற்றோட்டம் மற்றும் வெளிச்சம் இருக்குமாறு தான் கட்டடங்கள் கட்டப்படுகின்றன. அவற்றில் ஏன் குளிர்சாதன வசதி... கட்டடங்களே வெளியில் தெரியாத அளவுக்கு மரங்களை வளர்ப்பதுடன், கொசு உள்ளிட்ட பிரச்னைகள் வராமல் இருக்க, மூலிகைச் செடிகளையும் வளர்க்கலாமே!


மேலும், மின் விசிறி கூட தேவைப்படாத அளவுக்கு சுற்றுச்சூழலுக்கு உகந்த வகுப்பறைகள் மற்றும் விடுதி அறைகளை உருவாக்குவது, கல்வி நிறுவனங்களுக்கு, சாதாரண விஷயம்!





படிப்பு பாதிக்காத அளவு, குறிப்பிட்ட நேரம் செலவழித்து, மரம், செடி, கொடிகளை வளர்க்க மாணவ - மாணவியரை ஊக்கப்படுத்தினால், அது, அவர்களுக்கு உடற்பயிற்சி செய்தது போன்றும், மீண்டும் வகுப்பறைக்கு வரும் போது, புத்துணர்வுடன் படிக்கவும் தூண்டும். படித்து முடித்து, வேலைக்கு செல்லும் காலத்தில், தங்கள் வீட்டிலும் இதை கடைப்பிடிக்க முயற்சிப்பர். 





பல லட்ச ரூபாய் சம்பாதிக்கும் கல்வியை கற்று தருவதுடன், பூமியை பத்திரமாக பார்த்துக் கொள்வது எப்படி என்பதையும், பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் கற்றுத் தருமா?





- ஜி.சிவராஜ், திருவாரூர்





18.09.2016 தினமலர்-வாரமலர் இது உங்கள் இடம் பகுதியில் பிரசுரமான கடிதம் (சென்னை - கோவை - புதுச்சேரி- மதுரை பதிப்புகள்)


***********************************************************************


ஆங்கில டப்பிங் படங்களால் நன்மையா ? தீமையா?





ஈரமான ரோஜாவே பட புகழ் இயக்குனர் கேயார் எழுதிய இதுதான் சினிமா" என்ற புத்தகத்தில் சினிமா உலகத்தில் இருக்கின்ற படத்தயாரிப்பு மற்றும் மார்க்கெட்டிங் சிக்கல்களை தெளிவாக விளக்கியிருக்கிறார்கள். 





இன்னும் எவ்வளவோ பிரச்சனைகள் இருக்கலாம். அதைப் பற்றி நான் இப்போது பேசவில்லை. நான் சொல்ல வந்த விஷயம் வேறு. அதில் டப்பிங் படங்கள் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்களுக்கு மறைமுகமாக சில சங்கடங்கள் தருவதை பற்றி எழுதியிருந்தார். 





அதை அப்படியே நான் தட்டச்சினால், யாராவது என் மனம் புண்பட்டுவிட்டது என்று வழக்கு தொடர வாய்ப்பு இருக்கிறதா என்ற அச்சம் இருக்கிறது. அதனால் இத்தோடு நிறுத்திக்குவோம். அது என்ன என்று யோசிப்பவர்கள் அந்த புத்தகம் கிடைத்தால் படித்து தெரிந்து கொள்ளவும்.





இந்த புத்தகத்தை 2010ல் படித்தேன். அதில் சொல்லப்பட்டுள்ள பிரச்சனைகளின் காலகட்டம் மலையேறி விட்டது. தற்போது கேபிள் சங்கர் என்பவர் சினிமா வியாபாரம் என்ற தலைப்பில் இரண்டு புத்தகங்கள் எழுதி இருக்கிறார். அவற்றில் சமகால சினிமா உலக மார்க்கெட்டிங் பிரச்சனைகளை அலசி இருப்பார்.





***********************************************************************


படித்ததில் கவனித்தது...





பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது- இது ஒரு சூட்சுமமான பழமொழி. ஒருவர் ஜாதகத்தில் புதன் என்றும் கிரகம் நல்ல நிலையில் இருக்க வேண்டும். அப்போதுதான் அவர் கல்வி, கேள்விகளில் சிறந்து விளங்க முடியும். 





பொன் என்பது இங்கே பொன்னன் என்றாகி குரு கிரகத்தைக் குறிக்கும். கல்வி, கேள்விகளை நமக்கு அளிப்பவர் குருதானே... அவர் நமக்கு நல்லவிதமாக கிடைத்திட அவர் எவ்வளவுதான் சொல்லித்தந்தாலும் புதன் கிடைக்காத நிலையில், நன்றாக இல்லாத பட்சத்தில் நம்மால் கல்வி, கேள்விகளில் சிறந்து விளங்க முடியாது. அப்படி அது கிடைத்துவிட்டால் அது பொன்னை விடப் பெரியது என்பதை உணர்த்தும் பொருளில்தான் அப்படி ஒரு சொலவடையைச் சொல்லிச்சென்றார்கள்.





இந்திரா சௌந்தர்ராசன் எழுதிய என் இனிய இந்துமதம் என்ற நூலில் படித்தது.


-------------------------------------------


உலகம் எப்பவுமே இப்படித்தான்...





ஏம்ப்பா நேக்கு இந்த பேர் வெச்சேள் என்று சேது திரைப்பட நாயகி தன் தந்தையிடம் கேட்கும் அதே மாடுலேஷனில் நம் ஒவ்வொருவர் மனதிலும் ஒரு அடிக்கடி ஒரு கேள்வி எழும். எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்குது?





இதுல எனக்கு மட்டும் அப்படிங்குற வார்த்தையை தூக்கிடுங்க. ஏன்னா இங்க ஒவ்வொருத்தர் நிலையும் இதுதான். அப்படி நமக்கு மட்டும் நடப்பதாக நினைத்துக் கொண்டிருப்பவை உலக மக்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நேரத்தில் ஏதாவது ஒரு வகையில் ஆப்பு வைத்துக் கொண்டுதான் இருக்கிறது.





அப்படி பட்டியலிடப்பட்ட விஷயங்களை ஒரு புண்ணியவான் தொகுத்து இணையத்தில் உலவவிட்டிருக்கிறார். அவை கொஞ்சம் கொஞ்சமாக உங்கள் பார்வைக்கு...





நீங்கள் ஒரு வரிசையில் நின்று கொண்டிருந்தால் அடுத்த வரிசைதான் வேகமாக நகர ஆரம்பிக்கும்.


நீங்கள் எந்த விளையாட்டில் நன்றாக விளையாடினாலும் அது தனியாக விளையாடும்போது மட்டுமே நிகழும்.


உங்கள் நகத்தை வெட்டிய ஒரு மணி நேரத்தில் அதை வைத்து செய்ய வேண்டிய வேலை உங்களுக்கு வந்து சேரும்.


***********************************************************************


இதையும் கொஞ்சம் கத்துக்குங்களேன்...





இருசக்கர வாகனங்களை வாங்கியோ இரவல் பெற்றோ ஓட்டுபவர்கள் சாலைவிதிகளை கட்டாயம் அறிந்து கொண்டு பின்பற்றுங்கள். முக்கியமாக இண்டிகேட்டர் போட்டுவிட்டு அல்லது சைகை காண்பித்து விட்டு திரும்புங்கள்... ஆண், பெண் பேதமின்றி தானும் சாலையும் மட்டுமே இருப்பதாக நினைத்துக் கொண்டு திரும்புபவர்கள் இம்சை தாங்க முடியலை...


***********************************************************************


திருவாரூர் பெருமை அடைவதில் முக்கிய விஷயம் ஆழித்தேர். ஐந்தாண்டுகளுக்கு பிறகு 2016ம் ஆண்டு தேர் நிலையடியை விட்டு புறப்பட்டு சிறிது தூரம் கடந்த போதே அலங்கரிக்கப்பட்டிருந்த தொம்பைகள் தூவாய்நாதர் கோவில் கோபுரத்தில் சிக்கி கழன்று விட்டன. அலங்கரித்த துணி பிய்ந்து விட்டதே என்று வருத்தம் இல்லாமல், நம்ம ஊர் தேர் எவ்வளவு பெருசுடா என்று மனம் மகிழ்ந்தது.