Search This Blog

சனி, 19 ஜனவரி, 2013

உங்கள் வாடிக்கையாளரை உங்களை விட்டு விட்டு ஓடச்செய்வது எப்படி?

நாம் அம்பானி, டாடா மாதிரி சரித்திரம் படைக்கும் தொழிலதிபர்களாக ஆக வேண்டாம். மாதத்திற்கு குறைந்தது 4 லட்ச ரூபாய்க்கு வியாபாரம் செய்து 20 ஆயிரம் ரூபாயாவது லாபம் பார்க்கும் வகையில் வெற்றிகரமான தொழில்முனைவோராக பிரகாசிக்க வேண்டும் என்ற எண்ணம் பலருக்கு இருக்கலாம். நம் நாட்டைப் பொறுத்தவரையில் அரசாங்க விதிமுறை உள்ளிட்ட பல்வேறு நடைமுறை சிக்கல்கள் காரணமாக தொழில் நடத்துவதை விட யாரிடமாவது அடிமையாக இருந்துவிடலாம் என்று நினைப்பவர்கள் ஏராளம். அவ்வளவு இம்சைகளையும் தாண்டி பலர் வெற்றிகரமான தொழில்முனைவோர்களாக வலம் வருவது பெருமைப்படத்தக்க தனிக்கதை.

ஆனாலும் இதுபோன்று சுயதொழில் முயற்சியில் முன்னேறிக்கொண்டிருப்பவர்களில் பெரும்பாலானவர்களை கூலிக்காரர்கள் (அ) பிச்சைக்காரர்களாக்காமல் விட மாட்டோம் என்ற கொள்கை உறுதியுடன் உயிரில்லாத மின்சாரம் உயிருள்ள மனிதர்களை வதைக்கிறது.

எல்லாரும் தொழிலதிபர்களாக மாற ஆசைப்பட்டாலும், அனைவரும் பணியாளர்களாக மாற நினைத்தாலும் சிக்கல்தான். இக்கரைக்கு அக்கறை பச்சை என்று நினைக்க முக்கிய காரணம், திறமையான பணியாளர்களுக்கு நியாயமான ஊதியம் கிடைப்பதில்லை. நல்ல மனம் படைத்த தொழில்முனைவோர்களுக்கு திறமையான பணியாளர்கள் கிடைப்பதில்லை. இந்த முரண்பாடுகளை எல்லா ஊர்களிலும் காணலாம்.

இந்த சிக்கலுக்கு பயந்துதான் தொழிலை நிலைநிறுத்தும் வரை நான் வேறு பணியாளர்களை வைத்துக்கொள்ளும் யோசனையே இல்லாமல் நான் மட்டும் உழைத்து வருகிறேன்.

சென்னையில் இருக்கும் ஒரு திருமண தாம்பூலப்பை தயாரிப்பாளர்களால் ஏற்பட்ட மோசமான அனுபவம்தான் இந்த பதிவை நான் எழுதக் காரணம். ஆயிரம் திருமண தாம்பூலப்பைகளுக்கு ஒரு ஆர்டர் கிடைத்தது. உள்ளூரில் உள்ள பை தயாரிப்பாளர்களிடம் பேசிப்பார்த்ததில் சென்னை விலைக்கும் உள்ளூர் விலைக்கும் அதிக வித்தியாசம் இருந்தது. மேலும் மெசின் தையல் பைகளுக்கு மிக அதிக நாட்கள் அவகாசம் கேட்டார்கள். இடையில் பொங்கல் விடுமுறை ஒரு வாரத்தை விழுங்கி விடும் என்பதால் யோசித்து சென்னையில் உள்ள ஒருவரிடம் ஆர்டரை ஒப்படைத்தேன்.

எங்கள் ஊரிலும், பரமக்குடி, இராமநாதபுரம் பகுதியிலும் பலருக்கு இவர்கள் தாம்பூலப்பை சப்ளை செய்திருக்கிறார்கள். அந்த நம்பிக்கையில்தான் ஆர்டர் கொடுக்க முயற்சித்தேன். முதலில் சாம்பிள் பைகள் அனுப்ப சொல்லி கேட்டபோது நிறைய முறை போன் செய்த பிறகுதான் அனுப்பினார்கள். அப்போதே நான் கவனமாக இருந்திருக்க வேண்டும். நாங்கள் தேர்வு செய்த மாடலை சொல்லி எத்தனை நாளில் கிடைக்கும் என்று கேட்டபோது ஜனவரி 11க்குள் அனுப்பிவிடுவோம் என்றார்கள். நானும் நம்பினேன். ஆனால் பையில் பிரிண்ட் செய்ய வேண்டிய டிசைனை நான் அனுப்பி வைக்க அவருடைய இமெயில் ஐடி கேட்டபோதும், முன்பணம் செலுத்த நான் வங்கி விவரம் கேட்டபோதும் அநியாயத்துக்கு தாமதம் செய்தார்கள். அப்போதும் நான் கோட்டை விட்டேன்.

என்னால் அப்போது சென்னைக்கு நேரடியாக செல்ல முடியாத சூழ்நிலை. நானும் நண்பர்கள் மூலம் வேறு சில இடங்களில் விசாரித்து விட்டு வேறு வழியில்லாமல் மேற்படி நபரிடமே ஆர்டர் கொடுத்தேன். 15 நாளில் உற்பத்தி தொடங்கிடும்னு ஒருத்தர் பேட்டியா கொடுத்து தள்ற மாதிரி நாளைக்கு மதியம் பார்சல் புக் பண்ணிடுவேன்று ஒரு வாரமா சொல்றார் அந்த நபர்.

பொங்கல் விடுமுறைக்காக 10 ஆம் தேதியே சொந்த ஊருக்கு சென்ற பணியாளர்கள் 18ஆம் தேதிதான் பணிக்கு திரும்பியதாக சொல்கிறார். இது மாதிரியான சிக்கல் வருமே என்று நான் 1ஆம் தேதி வாக்கிலேயே கேட்டதற்கு அதெல்லாம் பிரச்சனை இல்லை. 12ஆம் தேதியே உங்களுக்கு 1000 பையும் கிடைச்சுடும் என்று சொன்ன பார்ட்டி இன்று 19 ஆம் தேதி வரை 500 தான் ரெடி, 600 தான் ரெடி என்று மழுப்புகிறார். அது தவிர 18ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) உள்ளூர் கேட்டரிங் ஆர்டர் அவசரப்படுத்துனாங்க. அதனால அந்த வேலை குறுக்கே வந்துடுச்சு என்கிறார். இவர்கிட்ட நாணயம், நேர்மை பற்றி எதாவது கேட்டா புரியுமா?

நல்ல தொழில்முனைவோருக்கு அழகு, பொங்கல் விடுமுறையில் வேலை பாதிப்பு என்றதும் அவரே போன் செய்து, சார்...23 ஆம் தேதி கல்யாணம், 20ஆம் தேதி வேலை முடிச்சு பார்சல் புக் பண்ணிடுவோம். 21ஆம் தேதி நீங்கள் எடுத்து கொடுத்துடலாம் அப்படின்னு நம்பிக்கையோட சொல்லி அதன்படி முன்னால் ஒப்புக்கொண்ட வேலையை முடிச்சு கொடுக்க முழு மூச்சா இறங்கணும். அதை விட்டுட்டு 12ஆம் தேதியிலிருந்தே நாளைக்கு, நாளைக்கு என்று மழுப்புபவரைப்பார்த்தால் வாக்கு முக்கியம் என்பதையே குறிக்கோளாக கொண்டு தொழில் செய்யும் என்னைப்போன்றவர்கள் முட்டாளாகிவிடுகிறோம்.

குறித்த நேரத்தில் ஆர்டரை முடிக்க முடியாத அளவுக்கு எந்த ஒரு தொழிலிலும் ஆயிரம் இடர்ப்பாடுகள் வரலாம். அதை சமாளிக்கத் தெரிவதுடன் வாடிக்கையாளர் நம்பிக்கையுடன் காத்திருப்பதற்கு உரிய பதிலை தெளிவாக கூற வேண்டும். இப்படி இருந்தால்தான் தொழிலை வளர்க்கலாம் என்று நான் நினைத்துக்கொண்டிருக்கிறேன். ஆனால் உங்களை மாதிரி மாசத்துக்கு ஒரு வேலை கொடுக்குறவர் முக்கியமில்லை. அடிக்கடி கேட்டரிங் ஆர்டர் கொடுப்பவர்தான் எங்களுக்கு தேவை என்று நினைத்தால் வெளி ஆட்களின் வேலையை ஒப்புக்கொள்ளவே கூடாது.

வாடிக்கையாளரே தெய்வம் என்று மகாத்மா காந்தியின் வார்த்தைகளை பல கடைகளில் ஒட்டி வைத்திருப்பார்கள். ஆனால் நடைமுறையில் எவ்வளவு பேர் அப்படி மதிக்கிறார்கள் என்றால் சொற்பமே.

இந்த ஒருவரைப்பற்றி குறை சொல்லும் நேரத்தில் இவ்வளவு மின்வெட்டுப்பிரச்சனையிலும் குறித்த நேரத்தில் ஒப்புக்கொண்ட அச்சு வேலைகளை சரியாக டெலிவரி செய்யும் நிறுவனங்கள் கோயம்புத்தூரிலும், சிவகாசியிலும் இருக்கின்றன. அவர்களின் சேவையில் இதுநாள் வரை எனக்கு எந்த பிரச்சனையும் வந்ததில்லை. ஒரு சில முறை ஓரிரு நாட்கள் தாமதமாக எனக்கு பொருட்கள் வந்து சேரும். ஆனால் அவர்கள் அதையும் போன் செய்து நிலவரம் இப்படி இருக்கிறது. இந்த தேதியில் எதிர்பாருங்கள் என்று கூறி விடுவார்கள்.

நான் சென்னையில் உள்ள தாம்பூலப்பை தயாரிப்பாரைப் பற்றி இப்படி பதிவு எழுதக்காரணமே உண்மைக்காரணத்தை மட்டுமின்றி, சரியான பதில் எதுவும் சொல்லாமல் அவர் மழுப்புவதால்தான். வியாபார நிறுவனத்துக்குரிய ஆர்டர்கள் என்றால் ஒருசில தினங்கள் தாமதம் பெரிய பாதிப்பை ஏற்படுத்தப்போவதில்லை. ஆனால் திருமணம் போன்ற விழாக்களுக்குரிய பொருட்கள் தாமதமானால் அவ்வளவுதான். இது எல்லாம் ஒரு தொழில் செய்பவர்களுக்கு நான் சொல்லியா தெரியணும்?

2011 ஜூன் மாதம் நான் தொழில் தொடங்கினாலும், 7 மாதங்களுக்குள் ஊருக்கு ஒதுக்குப்புறத்தில் இருந்த என்னுடைய அலுவலகத்தை நகரின் மையப்பகுதியில் இடமாற்றம் செய்தது 19.01.2012 அன்றுதான். படிப்பு முடித்த பிறகு சம்பளம் ஒழுங்காக கிடைக்காத ஒரே காரணத்தால் நான் வேலை செய்ய எந்த இடத்திலும் ஒரு ஆண்டினை நிறைவு செய்ய முடிந்ததில்லை.

புதிதாக தொழில் தொடங்கிய பிறகு புறநகர் பகுதியிலிருந்து நகரின் மையப்பகுதிக்கு இடமாற்றம் நிகழ்ந்தாலும் 7 மாதத்தில் இப்படி ஆகிவிட்டதே என்று மனதின் ஓரத்தில் உறுத்தல் இருந்தது. புதிய இடத்தில் இன்று தேதி கணக்குப்படி இரண்டாம் ஆண்டு இன்று தொடங்கும் நேரத்தில், வியாபாரத்தில் நேரம், நாணயம் மிக முக்கியம். ஒருவேளை குறித்த காலத்தில் ஒப்புக்கொண்ட வேலையை முடிக்க முடியாதபடி சூழ்நிலை அமைந்தால் வாடிக்கையாளரிடம் உண்மையை சொல்லிவிடுவது நல்லது என்ற உண்மையை ஏற்கனவே அறிந்திருந்தாலும் அனுபவப்பூர்வமாக ஒருவன் என்னை புலம்ப விட்ட பிறகு அழுத்தம் திருத்தமாக உணர்ந்துகொண்டேன்.

கடந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் தமிழ் மின்னூல் பணிக்காக சுமார் 500 பக்கங்கள் தமிழில் டைப் செய்ய ஒப்புக்கொண்டேன். சென்னை தவிர தமிழகம் முழுவதையும் மின்வேட்டு மிக மோசமாக புரட்டிப்போடத்தொடங்கிய நாட்கள் அவை. அதனால் ரெகுலர் வேலைகளையும் செய்து கொண்டு, நள்ளிரவு 1 மணிக்கும், இரண்டு மணிக்கும் எழுந்து ஒரு மணி நேரம் விட்டு ஒரு மணி நேரம் மட்டுமே இருக்கும் மின்சார நேரத்துக்கு மத்தியில் குறித்த நேரத்துக்கு இரண்டு நாட்கள் முன்னதாக வேலையை முடித்துக்கொடுத்தேன்.

அதேபோல் 2012 ஜுன் மாதத்தில் பள்ளிக்குழந்தைகளின் அடையாள அட்டை தயாரிப்பாளர்களிடம் இருந்து சுமார் 10ஆயிரம் குழந்தைகளின் பெயர், ரத்தவகை, தந்தை பெயர், பிறந்த தேதி, முகவரி உள்ளிட்ட தகவல்களை இதே போல் இரவில் மாலை  6 மணி முதல் காலை 6 மணி வரை மொத்தம் 12 மணி நேரத்தில் 4 மணி நேரம் மட்டுமே மின்சாரம் இருக்கும் நேரத்தில் கண் விழித்து பதிவேற்றி கொடுத்ததை நினைத்துப்பார்க்கிறேன்.

இப்போது சென்னையில் தாம்பூலப்பை தயாரிப்பாளர் செய்வதைப் பார்க்கும்போது நான் கண் விழித்து குறித்த நேரத்தில் வேலையை முடித்துக்கொடுத்தது முட்டாள்தனமா அல்லது அவர் செய்வது முட்டாள்தனமா என்ற குழப்பம்தான் என் மனதில் மிஞ்சியிருக்கிறது.

ஆனால் ஒன்று மட்டும் உறுதி. இனிமேல் ஜென்மத்துக்கும் இப்போது ஆர்டர் கொடுத்த நபர் இருக்கும் பக்கம் கூட போகமாட்டேன். இப்படி நாலு வாடிக்கையாளர்களை அலைக்கழித்தால் நாம் இருக்கும் திசை பக்கம் அவர்கள் தலை வைத்துப்படுப்பார்களா? அது சரி...நான்தான் இப்படி புலம்புறேன். சம்மந்தப்பட்ட நபர் இதைப்பத்தி அலட்டிக்கிறதுக்கு வாய்ப்பே இல்லை. ஏன்னா, இப்போ எனக்கு பை கையில் கிடைக்கணும். அதனால ஒரு வார்த்தை கூட அவர்கிட்ட தவறா பேசலை. திட்டி என்ன ஆகப்போகுது?...

வாக்குல சுத்தம் இல்லாம அலட்சியமா இருந்தபடியே பணம் சம்பாதிக்க கூட அதிர்ஷ்டம் வேணுமோ?

சனி, 12 ஜனவரி, 2013

போன 12க்கும் இந்த 12க்கும் என்ன வித்தியாசம்

12-12-12 என்று அபூர்வ தேதி ஆயிரம் ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் வருகிறது என்று கடந்த மாதம் அச்சு ஊடகங்கள் மிக அதிகமாகவே சிறப்பிதழ் அது இது என்று தீயாக வேலை செய்தன.

2001 ஆம் வருசம் 1-1-1, 2002ஆம் வருசம் 2-2-2, இப்படி 2009 வரைக்கும் வரிசையா அப்படித்தான். இதுல 12-12-12 க்கும் மட்டும் அந்த பிரபலத்துக்காக இவ்வளவு விளம்பரம் தேவையான்னு ஒரு எண்ணம் என் நினைவுக்கு வந்து தொலைச்சது. அதை சொல்லிட்டு நான் தப்பிச்சுட முடியுமா? அதனால வாயைத் திறக்கலை.

டிசம்பர் 12 என்ற மந்திர சுழலில் டிசம்பர் 11 பாரதியார் பிறந்ததினம் ஊடகங்களால் அவ்வளவாக கண்டுகொள்ளப்படவில்லை. அவ்வளவு ஏன், நான் வசிக்கும் ஊரிலும் எந்த பள்ளியிலும் பெரிதாக பாரதியார் பிறந்த நாளை யாரும் கொண்டாடியதாக தெரியவில்லை.

ஆனால் விவேகானந்தரின் 150வது பிறந்ததினம் பரவலாக கவனம் பெற்றிருக்கிறது. வரும் 21 ஆம் தேதி வரை திருவாரூர் தெற்குவீதியில் விவேகானந்தர் தொடர்புடைய புத்தக கண்காட்சி நடைபெறுகிறது. 2013 ஜனவரி 23 அன்று திருவாரூர் வாசுநிவாஸ் திருமண மண்டபத்தில் தமிழருவிமணியன், சாலமன்பாப்பையா உள்ளிட்ட பலர் கலந்து கொள்ளும் கருத்தரங்கம் நடைபெறுகிறது. இன்று 12-01-2013-ல் சில இடங்களில் ரத்ததான முகாமும் நடைபெற்றது.

கல்லூரியில் என்னுடன் படித்த இரண்டு வகுப்புத்தோழிகளுக்கு இன்று பிறந்த தினம். கரண்ட் பிரச்சனையால நமக்குதான் ஒரு நாளைக்கு ஆறு தடவை லஞ்ச்பிரேக் கிடைக்குது. அந்தப்புள்ளைங்க காலையில அவசரமாக அலுவலகத்துக்கு கிளம்புற நேரத்துல ஏன் போன் பேசி இடையூறு செய்யணும்னு ஒரு எண்ணம். அதனால  அவர்களுக்கு காலையில் ஒரு எஸ்.எம்.எஸ் அனுப்பி வாழ்த்து சொன்னதோடு சரி.

போன ஆண்டு 12-01-2012 அன்று ரொம்ப நாளா எங்களுக்கு தலைவலி கொடுத்த கோயில் ஆக்கிரமிப்பு அந்த ஆக்கிரமிப்பாளராலேயே காலிசெய்யப்பட்டது. ஆக்கிரமிப்பு இல்லாததால சுமார் 6 ஆண்டுகளுக்கு பின்னால நிம்மதியா அந்த கோவில்ல சுவாமி தரிசனம் செய்தோம்.

ஆக்கிரமிப்பை சுத்தமாக காலி செஞ்ச அந்த ஆசாமி மின்சார மெயின்சுவிட்ச், சுவிட்ச் போர்டு ஆகியவற்றை பெயர்த்து உடைத்து ஒன்றுக்கும் உதவாமல் செய்துவிட்டார். அது ஒரு பிள்ளையார் கோவில். அந்த நாள் சங்கடஹர சதுர்த்தி. சாயங்கால பூஜைக்காக மாலை 5.30 மணிக்கு தான் வந்து திறக்குறோம். சாமிகும்பிட வந்தவங்க, கோவில்ல விசேசம் நடக்குற நாள்ல போய் இப்படி செஞ்சுட்டு போயிருக்காரேன்னு புலம்புனாங்க. அவங்களுக்கு அது அதிர்ச்சியா இருக்கலாம். ஆனா ஆக்கிரமிப்பு செஞ்ச பார்ட்டி இப்படி எதையாவது உடைக்காம போயிருந்தாதான் நான் ஷாக் ஆகியிருப்பேன். அவரோட நடவடிக்கைகளை பார்த்து கோயிலுக்குள்ளாற இருக்குற சுவிட்ச் போர்டுல ரொம்ப எளிமையா கனெக்சன் கொடுக்குற மாதிரிதான் தயார் செய்து வெச்சிருந்தேன். அதனால மத்தவங்க மாதிரி புலம்பாம தயாரா நான் உள்ளே வெச்சிருந்த ரெண்டு வயரை பக்கத்துவீட்டுல கொடுத்து 5 நிமிசத்துல மின்விளக்கை எரிய வெச்சுட்டேன். அப்புறம் அன்னைக்கு ராத்திரி 9 மணி வரை, ஆக்கிரமிப்பு பார்ட்டி மட்டுமின்றி அவரது குடும்பமே லைட் எரிஞ்சதைப் பார்த்து வயிறு எரிய இங்கும் அங்கும் அலைஞ்சது தனிக்கதை.

அந்த கோவில் ஆக்கிரமிப்பு பற்றி ஒரு கட்டுரையை நான் கல்கி வார இதழின் போட்டிக்காக அனுப்பியிருந்தேன். அது பிரசுரத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டு எனக்கு சைக்கிள் பரிசு கிடைத்தது. அந்த கட்டுரை அச்சான கல்கி இதழ் தேதி 22.01.2012. அந்த இதழ் கடைகளில் விற்பனைக்கு வந்த தேதி 14.01.2012. ஆனால் ஆக்கிரமிப்பு 12.01.2012 அன்றே அகற்றிக்கொள்ளப்பட்டது.

என்னவோ சொல்லப்போற மாதிரி ஆரம்பிச்சு இப்படியா மொக்க பதிவு போடுறதுன்னு கோபப்படாதீங்க. இந்த 12ஆம் தேதி வந்ததும் இப்படி ஒருசில சம்பவங்கள் நினைவுக்கு வந்துடுச்சு.

வெள்ளி, 11 ஜனவரி, 2013

டெல்லி மாணவிக்காக குரல் கொடுத்தவர்கள் கவனிக்க...

டெல்லி மாணவிக்கு நேர்ந்த கொடூரத்துக்கு முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு மக்களிடையே விழிப்புணர்வு ஏற்பட்டது உண்மை. அதுபோன்ற கொடூரச்செயலுக்கு கொஞ்சமும் சளைக்காத மற்றொரு செயல் ஆசிட் வீச்சு. விருப்பமில்லாத பெண்ணுக்கு தொந்தரவு கொடுத்து நாடு முழுவதும் அவ்வப்போது இது போன்று ஆசிட் வீச்சு சம்பவம் நடந்து கொண்டே இருக்கிறது.

கொலை, கற்பழிப்பு போன்ற குற்றங்களுக்கு கொடுக்கும் தண்டனையைப் போலவே இதற்கும் கொடுக்கலாம்.

இந்த பதிவில் நான் சொல்ல வந்தது பொருளாதார உதவியை எதிர்நோக்கியிருக்கும் ஒரு சகோதரியைப்பற்றி.

கடந்த தீபாவளிக்கு சொந்த ஊருக்கு வந்துவிட்டு சென்னைக்கு திரும்பிய வினோதினி என்ற பெண்ணின் மீது ஒரு கொடூர மனம் கொண்ட மிருகம் ஆசிட் வீசியது பெரும்பாலானவர்கள் அறிந்த செய்திதான்.

16-01-2013 தேதியிட்ட விகடனில் இது குறித்த கட்டுரை வெளிவந்திருக்கிறது. சந்தாதாரகள் மட்டுமின்றி அனைவரும் படிக்கக்கூடிய வகையில் இந்த கட்டுரையை பிரசுரம் செய்திருக்கிறார்கள். அதைப் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்.

மிகவும் கஷ்டப்பட்ட குடும்பத்தில் இருந்து கடன் வாங்கி பி.டெக் படித்து பணியில் சேர்ந்த அந்த பெண் இப்போது உயிருக்குப் போராடுகிறார். அந்த பெண்ணுக்கு மருத்துவ உதவி செய்ய நினைக்கும் நபர்கள் நேரில் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தை அணுக முடியவில்லை என்றால் விகடனை தொடர்பு கொள்ளலாம்.

இது குறித்து கட்டுரையின் இறுதியில் வந்த பகுதி

////////////////
காதலை மறுத்த ஒரே காரணத்துக்காக கயவன் ஒருவனால் ஆசிட் வீசப்பட்டு உடல் கருகி உயிருக்குப் போராடும் வினோதினிக்கு உதவ வேண்டும் என்ற நல்லெண்ண பரிதவிப்புடன் பல வாசகர்கள் விகடனை தொடர்புகொண்டு வருகிறீர்கள். வாசகர்களின் இந்த உதவிகளை ஒருங்கிணைக்கும் நோக்கத்துடன் readers@vikatan.com என்ற புதிய மின்னஞ்சல் முகவரி உருவாக்கப்பட்டிருக்கிறது. வாசகர்கள், தங்கள் உதவிகள் மற்றும் ஆலோசனைகளை இந்த புதிய மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம். இப்போதும், இனிமேலும் விகடனில் வெளிவரும் கட்டுரைகளின் அடிப்படையில், இதுபோன்ற மனிதாபிமான உதவிகளை செய்திட வாசகர்கள் இந்த மின்னஞ்சல் முகவரியையே தொடர்பு கொள்ளலாம். நன்றி!
///////////