Search This Blog

வியாழன், 22 நவம்பர், 2012

மோசடியில் சிக்கும் மக்கள்




கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக பண விஷயத்தில் படித்தவர், படிக்காதவர் என்று பலரும் ஏமாந்து கொண்டேதான் இருக்கிறார்கள். இதில் பணத்தாசையை அதிகமாக காட்டும் விளம்பரங்களை பார்த்து 20 ஆண்டுகளுக்கு முன்பு ஏமாந்தது சரி. இப்போதும் பெரிய அளவில் ஊடகங்களில் விளம்பரம் செய்தால் அவர்கள் மோசடி செய்ய வாய்ப்பிருக்காது என்று முழுவதுமாக தங்கள் பணத்தை அர்ப்பணித்துவிட பெரும்பாலான மக்கள் தயாராக இருக்கிறார்களோ என்று எனக்கு சந்தேகம் இருந்துகொண்டே இருக்கிறது.

1ரூபா விதைச்சா 1 கோடிரூபாய் அறுக்கலாம் என்ற ரீதியிலான விளம்பரங்களுக்கு பஞ்சமே இல்லை.  பணப்பட்டுவாடாவில் சிக்கல் வந்து முதலீட்டாளர்கள் தங்கள் பணத்திற்கு அலைந்து கொண்டிருக்கிறார்கள் என்று கலைமகள் சபா, அனுபவ், ரமேஷ்கார்ஸ், என்று ஆரம்பித்து ஈமு கோழிகள் வரை எவ்வளவோ உதாரணங்களை பேப்பரில் படித்திருக்கிறேன்.

ஆனாலும் சினிமாக்களில் ஒரே பாட்டில் கதா நாயகன் கோடீஸ்வரனாவது போல் திருவாளர் பொது ஜனமும் ஆசைப்படுவதும் இது மாதிரியான சிக்கல்களுக்கு ஒரு காரணமாக இருக்குமோ.

நிதி நிறுவன மோசடிகள் குறித்த தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றை பார்த்துவிட்டு 2010ஆம் ஆண்டு நான் எழுதிய பதிவு இப்போது மீண்டும் உங்கள் பார்வைக்கு.


மிகப்பெரிய கோடீஸ்வரர் சென்னை சிட்டி பஸ்சில் செல்லும்போது மூன்று ரூபாய் கொடுத்து டிக்கட் எடுக்க காசு இல்லை என்றால் நடத்துனர்,"யோவ்...சாவுகிராக்கி, எறங்குயா முதல்ல..."என்று நல்ல வார்த்தை(?!) சொல்லி அவரை இறக்கிவிடுவார் அல்லது செக்கிங் இன்ஸ்பெக்டரிடம் பிடித்துக்கொடுப்பார்.அந்த நேரத்தில் அந்த பணக்காரரின் சொத்துக்கள் எதுவும் உதவிக்கு வராது.

ஒரு நிதி நிறுவனத்திடம் எல்லாரும் ஒரே நேரத்தில் போட்ட பணத்தை திருப்பிக்கேட்டால் ஏற்படுவதும் இதே நிலமைதான். ஏமாற்றும் நோக்கத்துடன் செயல்படும் நிறுவனங்கள் தவிர்த்து நல்ல நிலையில் இயங்கிக்கொண்டிருக்கும் சில நிறுவனங்களும் திடீரென மூடப்படுவதற்கும் இதுதான் காரணம்.நான் கல்லூரியில் படிக்கும்போது ஒரு பேராசிரியர் கொடுத்த விளக்கம்தான் இது.

10.01.2010 அன்று கலைஞர் தொலைக்காட்சியில் கருத்து யுத்தம் நிகழ்ச்சியில் இது தொடர்பான விவாதம் நடந்தது.அதில் புதியதாக சில விஷயங்களைத் தெரிந்துகொள்ள முடிந்தாலும் பல விஷயங்களைப் பூசி மெழுகிவிட்டார்கள்.

அதுசரி...நிகழ்ச்சியில் கலந்துகொண்டிருந்ததில் சில அரசு அதிகாரிகளும் இருந்தார்கள்.பல விதிகளுக்கு உட்பட்டுதானே அவர்களாலும் பேச முடியும்.

இதில் என்னை நெருடிய விஷயம் என்னவென்றால் பதிவு செய்யப்படாத நிறுவனம் பற்றிய தகவல்களை சாதாரண குடிமக்கள்தான் கண்டறிய வேண்டும் என்று சொல்கிறார்கள். அந்த அளவுக்கு அவர்களுக்கு திறமை இருந்தால் இவ்வளவு நாளும் தொடர்ந்து ஏமாந்து கொண்டே இருக்க மாட்டார்களே.

மக்கள் பேராசையால் அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு ஏமாறுவது பெரும்பாலும் முறையாக பதிவு செய்யப்படாத நிறுவனங்களில்தான். இதற்கு ஓரளவு எளிமையான தீர்வு என்னவென்றால் அரசின் இணையதளத்தில் முறையான பதிவு பெற்ற எல்லா தனியார் நிறுவனங்களின் பட்டியலையும் துறை வாரியாக வெளியிட்டுவிடலாம்.

கல்வி நிறுவனங்கள், நிதி நிறுவனங்கள் இவைதான் மக்களுக்கு அதிக நன்மையும் பாதிப்பையும் ஏற்படுத்தக்கூடியவை. அதனால் அவை பதிவு பெற்றால் மட்டும் போதாது. அவர்களின் எல்லை எதுவரை என்பதையும் தெளிவாக வரையறுத்து அதையும் அரசின் இணையதளம் மூலமாக மக்களின் பார்வைக்கு அளிக்கலாம்.

அதுமட்டுமின்றி கல்வி நிறுவனங்களில் சேர்க்கைக்கான காலக்கெடு முடிந்ததும் உரிய துறையில் முழுமையாக மாணவர் பட்டியலையும் அந்த இணையதளத்தில் வெளிப்படையாக்கிவிட்டால் ஒவ்வொரு ஆண்டும் அனுமதி பெறாமலேயே மாணவர்களை சேர்த்துவிட்டு அவர்களைத் தேர்வு எழுதவிடாமல் நடுத்தெருவில் நிறுத்தும் அவலம் காணாமலேயே போய்விடும்.

ஆனால் இன்னொரு முக்கியமான விஷயத்தையும் மனதில் கொள்ள வேண்டும். அரசாங்கத்தின் சில இணையதளங்களில் உடனுக்குடன் புதிய தகவல்கள் பதிவுசெய்யப்படுவதில்லை என்றும் கூறப்படுகிறது.

இந்தியாவின் பிரதமர் இந்திராகாந்தி என்று இணைய தளத்தில் இருந்தால் அது பழைய தகவல் என்று நமக்கு புரிந்துவிடும்.ஆனால் பல தனியார் நிறுவனங்களின் அங்கீகாரம் தொடர்பான தகவல்களை அப்டேட் செய்யாமல் விட்டுவிட்டால் அது மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்.

நிதிநிறுவனத்தில் ஆரம்பித்து கல்விநிறுவனத்துக்கு போய்விட்டேன்.பரவாயில்லை...கல்வி பெற நிதி தேவை. நிதியைப் பெறவும் கல்வி ஒரு கருவியாக இருக்கிறது.

போலிகளை ஒழிக்க மேலே நான் சொன்ன சில வழிமுறைகள் நிச்சயமாக நல்ல பலன் தரும். ஆனால் நல்ல முறையில் நடைபெறும் சில நிதிநிறுவனங்களும் திடீரென மூடப்படுகின்றனவே. இதற்கு என்ன காரணமாக இருக்கும்.

ஆப்பு எதுவும் வெளியில் இல்லை. அதற்கும் மக்கள்தான் காரணம். கடன் வாங்கியவர்கள் திரும்ப கட்டவில்லை என்றால் அது முதலீட்டாளர்கள் தலையில்தான் துண்டாக விழும். இதிலும் யோசிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் வங்கியிலும் சரி, சிட்பண்ட்டுகளிலும் சரி சிறு தொகை வாங்கியவர்களில் 95 சதவீதம் பேர் ஒழுங்காக திரும்ப செலுத்துவதாகத்தான் சொல்கிறார்கள். இது உண்மையாகத்தான் இருக்கும்.

அப்போது வில்லங்கம் எங்கே இருக்கிறது. எல்லாம் சில பணக்கார முதலைகளால்தான்.அவர்கள் அப்படி பணத்தை திரும்ப செலுத்தாமல் தப்பிக்க யார் காரணம்? நிதி நிறுவனம் என்றால் நிர்வாக இயக்குனர்கள், அரசுடமை வங்கி என்றால் உயரதிகாரிகளிடமிருந்து பல மக்கள் பிரதிநிதிகள் வரை எல்லா மட்டத்திலும் தவறு செய்கிறார்கள்.

அமெரிக்காவில் இரட்டைக்கோபுரத்தை கட்ட எத்தனை ஆயிரம் மூளைகளும் கரங்களும் கால்களும் உழைத்தனவோ? ஆனால் அதை தரைமட்டமாக்கியது மூளை இல்லாத ஒரு சிலர்தானே.

அதேபோல் ஊழலுக்கு முக்கியக் காரணம் சிலரின் பேராசைதான்.

நாலுபேர் நல்லா இருக்கணும்னா எதுவுமேதப்பு இல்லை.- இது நாயகன் படத்தில் வரும் வசனம். இதை ரொம்ப தப்பா புரிஞ்சுகிட்டு தப்பாவே செயல்படுத்துறதுக்கு கொஞ்சபேர்தான் இருக்காங்க. ஆனா இதையே நாடு தாங்காது போலிருக்கே.