Search This Blog

வெள்ளி, 21 செப்டம்பர், 2012

ஆண்களுக்கு குழந்தை பிறக்கும்?

உடல் கோளாறுகளால் அதிகம் பாதிக்கப்பட்டு உள்ளவர்கள் சென்னை பள்ளிக்குழந்தைகள் என்று வேறு ஓர் ஆய்வில் தெரியவந்துள்ளது. இதற்கு முக்கிய காரணமாக அந்த ஆய்வு கூறியிருப்பது வளிமண்டலக்காற்று மாசு. உடலின் இயல்பான செயல்பாட்டிற்கு ஹார்மோன்கள் மிக அவசியம். தொடர்ந்து இது போல ரசாயன மாசடைந்த காற்றை சுவாசிக்கும்பொழுது, உடலுக்குள் செல்லும் இந்த ரசாயனங்கள் நாளடைவில் ஹார்மோன்களைப் போல செயலாற்ற ஆரம்பிக்கின்றன. இதனால், நெற்றியில் ஒற்றைக்கண்ணுடன் ஆடு பிறந்ததைப்போல உடல் உறுப்புகளில் தாறுமாறான வளர்ச்சி ஏற்படுகிறது.

தற்போது பரவலாக பயன்பாட்டில் உள்ள களைக் கொல்லிகள், ஆண் விலங்குகளிடம் (தொடர்ந்து களைக்கொல்லி பயன்படுத்திய பயிரைச் சாப்பிடும்) பெண் தன்மையை ஏற்படுத்துவதாக தெரியவந்துள்ளது. புளோரிடாவில் உள்ள ஒரு ஏரியில் பிறக்கும் அலிகேட்டர் முதலைக்குட்டிகளின் உடலில் இது போன்ற மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. வேறு சில ஏரிகளில் ஆண் மீன்கள் முட்டையிடத் துவங்கியதற்கு நீரில் கலக்கும் ரசாயனங்களே காரணம் என்று தெரியவந்துள்ளது. இத்தகைய மாற்றங்கள் தற்போது மனிதர்களிடமும் வர ஆரம்பித்துள்ளன. மார்பகப் புற்றுநோய், மலட்டுத்தன்மை, 10 வயதிற்கு முன்பே பெண் குழந்தைகள் வயதுக்கு வருவது போன்ற பல்வேறு பிரச்சினைகளுக்கு இந்த ரசாயனப் பொருட்களே காரணம் என்று அமெரிக்க குழந்தை நல மருத்துவர் பிலிப் லான்ட்ரிகன் செய்த ஆய்வில் உறுதி செய்துள்ளார்.

மேலே உள்ள இரண்டு பாராக்களும் 27.09.2012 தேதியிட்ட புதிய தலைமுறை இதழில் ஒரு கட்டுரையில் உள்ளவை.

நாம ரொம்ப நாளாவே பூச்சிமருந்து கலந்துதானே !? காய்கறி, அரிசி எல்லாம் சாப்பிடுறோம். அப்போ ரொம்ப சீக்கிரமே ஆண்களுக்கு கருப்பை கூட வளருமோ? இதெல்லாம் நடக்குதோ இல்லையோ உரம், பூச்சிமருந்து கலந்த காய்கறிகளாலே ஒரு நாளைக்கு ஆயிரம் ரூபாய் சாப்பாட்டுக்கு செலவு செஞ்சுட்டு, அடுத்த 5 நிமிசத்துல நம்ம உடம்புல வர்ற கோளாறுக்கு 50 ஆயிரம் ரூபாயை ஆரம்ப கட்ட வைத்திய செலவா செய்யப்போறாம்னு தோணுது.

இதுக்கு போய் யாராச்சும் கவலைப்படுவாங்களா? அரசாங்கத்துல இலவச காப்பீடு இருக்கு. மிக்சி, கிரைண்டர், டி.வி, மின்விசிறி உள்பட என்னென்னவோ தர்றாங்க. இன்னும் எதெதுக்கோ அரசாங்கத்துல பணம் தரலாம். அப்புறம் ஏன் கவலைப்படணும்?

வியாழன், 20 செப்டம்பர், 2012

புதிய டொமைனில் இளையபாரதம்

தேடினால் நிச்சயம் கிடைக்கும் என்று சொல்வார்கள். அது மற்ற இடங்களுக்கு பொருந்துகிறதோ இல்லையோ, இணையத்திற்கு நிச்சயம் பொருந்தும்.

கடந்த 15.04.2012ல் கூகிள் மூலமாக டொமைன் நேம் வாங்க முயற்சித்தேன். அதற்கு கிரெடிட் கார்டு தேவைப்பட்டதால் இயலவில்லை. ஆனால் அன்று ஏதாவது ஒரு டொமைன் நேம் வாங்கியே தீருவது என்ற உறுதியுடன் நான் இணையத்தில் நுழைந்ததால் BigRock சென்று www.writersaran.com என்ற டொமைனை ஒரு வருடத்திற்கு 499 ரூபாய்க்கு ரிஜிஸ்டர் செய்து விட்டேன். ஆனால் வெப் ஹோஸ்டிங் செய்ய வேண்டும் என்றால் அதற்கு தனியாக பணம் கொடுக்கவேண்டும் என்ற தகவலை மேலோட்டமாக படித்துவிட்டு, 500 ரூபாய் அம்பேல், நம்முடைய காசு இப்படியெல்லாம் போகவேண்டும் என்று விதி போலிருக்கிறது என்ற நினைப்பில் அலட்சியமாக விட்டுவிட்டேன்.

நேற்று (வினாயகர் சதுர்த்தி) கற்போம் தளத்தில் பழைய பதிவுகளில் ஏதாவது நமக்கு உபயோகமான தகவல் இருக்கிறதா என்று மேய்ந்தபோது பிளாக் ஸ்பாட் தளத்தை BigRock ல் பதிவு செய்வது எப்படி என்ற பதிவை படித்ததும் ஆஹா, www.writersaran.com என்ற டொமைன் பெயரை 5 மாதங்களாக பயன்படுத்தாமல் அலட்சியமாக விட்டுவிட்டோமே என்ற நினைப்பில் அந்த பதிவில் சொல்லியிருந்த வழிமுறைகளின்படி முதல்முறையாக முயற்சித்தேன்.

ஆனாலும் Error செய்தி தான் தொடர்ந்து கிடைத்தது. கற்போம் தளத்தை நடத்தி வரும் நண்பர் கிருஷ்ண பிரபுவிடம் மின்னஞ்சலில் சந்தேகம் கேட்டேன். அவர் சில குறிப்புகள் கொடுத்தார்.

அந்த விஷயங்களையும் செய்து முடித்தேன். அவை தவிர மேலும் சில தகவல்கள் தேவைப்படுவது புரிந்தாலும் அது என்னவென்று விளங்காமல் மீண்டும் google instruction முழுவதையும் தெளிவாக படித்தேன். விஷயம் தெளிவாகிவிட்டது. BigRock ல் நான் இன்னும் மேற்கொள்ள வேண்டிய 2 ஸ்டெப் செயல்கள் மீதம் இருந்தது. அவற்றை செய்தேன். அடுத்த 5 நிமிடங்களில் இளையபாரதம் www.writersaran.com என்ற முகவரியில் செயல்படத்தொடங்கிவிட்டது.

டாட்காம் டொமைன் நேம் ஆக்டிவேஷன் ஆன கதையை சொல்லி இப்போது 3வது இன்னிங்ஸ் பதிவுகளை இளையபாரதம் தொடங்கியுள்ளது.

பழைய பதிவுகளை வேறு ஒரு வலைப்பூவில் வைத்திருக்கிறேன். இன்னும் ஒரு சில தினங்களில் மீதமிருக்கும் பணிகள் முடிந்ததும் அந்த முகவரி அறிவிக்கப்படும்.

சனி, 18 ஆகஸ்ட், 2012

ரா.கி.ரங்கராஜனுக்கு அஞ்சலி

ரா.கி.ரங்கராஜனுக்கு அஞ்சலி என்று இட்லிவடையில் ஒரு மணி நேரத்துக்கு முன்னால் இடப்பட்ட பதிவைப்பார்த்துதான் எனக்கு விஷயம் தெரியும்.

அவர் எப்போது இறந்தார் என்பது போன்ற தகவல்கள் எதுவும் எனக்கு தெரியவில்லை. இப்போது இவ்வளவு அவசரமாக ஒரு அஞ்சலி பதிவை எழுதக்காரணம், என்னைச்சுற்றி உள்ள நட்பு வட்டங்கள் ''கதா'' என்று என்னை அழைக்கும் அளவுக்கு சில சிறுகதைகள், ஒரு குறு நாவல், ஒரு கவிதை, கோவில்கள் பற்றிய தகவல் கட்டுரை என்று நான் எழுத அவர்தான் குரு.

ரா.கி.ரங்கராஜனின் எப்படி கதை எழுதுவது என்ற புத்தகத்தைப் படிதத பின்புதான் எனக்கு கதை எழுதுவதற்கு டெக்னிக்கலாக அதாவது கதையை எப்படி தொடங்கி எப்படி முடிக்க வேண்டும். எவை எல்லாம் இருக்க வேண்டும். எது கூடாது என்று எளிமையாக சொல்லித்தரும் கையேடு என்று கூறலாம்.

நான் 1995 வாக்கிலேயே 9ஆம் வகுப்பு படிக்கும்போதிலிருந்தே கதை எழுத முயற்சித்தாலும் 2001ல் இவரது "எப்படி கதை எழுதுவது?" என்ற புத்தகம் படித்த பின்புதான் பத்திரிகைகளில் பிரசுரமாகும் அளவுக்கு நான் எழுத கற்றுக்கொண்டேன்.

கல்லூரி ஆண்டு மலரில் எழுதியதை தவிர்த்து, வெளி பத்திரிகைகளில் ஓரிரு கதைகள் பிரசுரமான சில மாதங்களுக்குள்ளேயே தினமலர் நடத்திய சிறுகதைப்போட்டியில் ஆறுதல் பரிசு, அமுதசுரபியில் முத்திரைக்கதை, தமிழக அரசின் குழந்தைத்தொழிலாளர் மறுவாழ்வு மையமும், ராணி வார இதழும் இணைந்து நடத்திய போட்டியில் முதல் பரிசு ரூ.2500, இப்போது இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தினமலரில் 5 ஆயிரம் ரூபாய் பரிசு, 2003ல் திருச்சி மாலைமுரசு தீபாவளி மலரில் கவிதைக்கு வெள்ளி குங்குமச்சிமிழ் பரிசு, என்று வரிசை கட்டி நான் எழுதிய கதைகள், படைப்புகள் உருவாவதற்கு முக்கியமான மானசீககுரு ரா.கி.என்று சொல்லலாம்.

அவருக்கு என் அஞ்சலி.