Search This Blog

திங்கள், 23 ஏப்ரல், 2012

ஓஹோ ப்ரொடக்சன்ஸ் ஆக ஓடும் ஓ.கே. ஓ.கே


15 ஆண்டுகளுக்கு முன்பு மாப்பிள்ளை கவுண்டர் படத்தில் வடிவேலு, ஒரு லெட்டரைப் பார்த்து பிரபு மற்றும் வினுச்சக்கரவர்த்தியிடம் ''ஒவ்வொரு எழுத்தையும் முத்து முத்தா, அச்சடித்த மாதிரி, கண்ணுல ஒத்திக்கலாம் போல எழுதியிருக்கான்யா...ஆனா என்ன எழுதியிருக்கான்னுதான்யா தெரியல.'' அப்படின்னு சொல்லுவார். அப்படித்தான்யா நானும் ஓ.கே.ஓ.கே படத்துல என்னதான் இருக்குன்னு தேடிப்பார்த்தேன். ஒண்ணுமே தெரியலய்யா...அடுத்தவனை வம்புல மாட்டி விட்டாத்தான் காமெடின்னு சொல்லி படத்தை தேத்திட்டாங்கய்யா.

கோடை விடுமுறை நேரம். இந்த நேரத்துல ரிலீசான மற்ற படங்களும் தேறலை. 3 படம் பட்டை நாமம் போட்டுடுச்சு. பிரண்ட்ஸ், லவ்வர், மனைவி இப்படி யாரோடயாச்சும் போகும்போது சீரியசா ஒரு கதை சொல்லி நெத்தியில ஆணி அடிச்சா படம் கோவிந்தாதான். தமிழன்னு இல்லை. பொதுவாவே எல்லாருக்கும் மத்தவங்களை கலாய்க்குறது ரொம்ப பிடிக்கும். அதை வெச்சு ராஜேஷ் ஹாட்ரிக் அடிச்சுட்டார். பலரும் பாஸ் என்ற பாஸ்கரன் படத்தோட அளவுக்கு இதுல விஷயம் இல்லைன்னு சொல்றாங்க. அதுல ஆர்யா பழைய முகம். இதுல உதயநிதி புதுமுகம். ஆகவே இந்த குறைகள் அடுத்தடுத்த படங்கள்ல சரிசெய்யப்படும்னு நம்பலாம்.

திருவாரூரில் ஓ.கே.ஓ.கே படம் ஓடிக்கொண்டிருக்கும் நடேஷ் தியேட்டருக்கு எதிரில்தான் என்னுடைய அலுவலகம் நடத்தி வர்றேன். இந்த பதிவில் இருக்கும் தியேட்டரின் முகப்புத்தோற்றம் இந்த பொங்கல் சமயத்தில் வேட்டை படம் ஓடிக்கொண்டிருக்கும்போது என் அலுவலகத்தில் இருந்து எடுத்தது. 14 வருஷத்துக்கு முன்னால முரளி நடிச்ச பொற்காலம் படம் வரை இந்த தியேட்டர்ல வேலை பார்த்திருக்கேன். பெரும்பாலும் பகுதி நேரப் பணிதான். அந்த காலகட்டத்துல  உள்ளத்தை அள்ளித்தா, நாட்டுப்புறப்பாட்டு, பூவே உனக்காக, காலம் மாறிப்போச்சு, பாஞ்சாலங்குறிச்சி, லவ்டுடே, பொற்காலம் போன்ற படங்கள் இந்த திரையரங்கில் சூப்பர் ஹிட்டாகவும் பரம்பரை, சிவசக்தி, சுபாஷ், கல்கி போன்ற படங்கள் ஆவரேஜாகவும் நடேஷ் தியேட்டரில் ஓடின.

15 ஆண்டுகளுக்கு முன்பு சூப்பர் ஹிட் என்று எப்படிப்பட்ட படங்களை சொல்வோம் என்றால், பொற்காலம் சுமார் 80 நாட்கள் ஓடியது. பூவே உனக்காக 50 நாட்களும், நாட்டுப்புறப்பாட்டு, உள்ளத்தை அள்ளித்தா போன்ற படங்கள் 35 முதல் 40 நாட்களும் ஓடின. சிவசக்தி, சுபாஷ், கல்கி போன்ற படங்கள் மூன்று வாரங்கள் ஓடினாலும் தியேட்டருக்கு லாபம் சம்பாதித்து கொடுத்த படங்களாகவே இருந்தன.

பிறகு நான் படிப்பு, கல்லூரி, வேறு பணி என்று வந்த பிறகு படம் பார்ப்பதில் அவ்வளவாக நாட்டமில்லாமல் போய்விட்டது. தீபாவளி, பொங்கல் போன்ற விசேச தினங்கள் தவிர்த்து ஒரு புதிய முகத்துக்கு (கலைஞர் குடும்பம் என்ற பெயரே சூப்பர் வேல்யூதான் - தியேட்டர் கிடைப்பதற்கு) இவ்வளவு பெரிய ஓப்பனிங் கிடைத்திருப்பது திரைத்துறையிலேயே பலரது காதுவழியாக புகைவரச்செய்திருக்கும்.

ஆளானப்பட்ட விஜய்க்கே வேட்டைக்காரன், சுறா போன்று ஓவர் பில்ட் அப் கொடுத்து மொக்கை போட வைத்து ரசிகர்களுக்கு வெறுப்பேற்றி காலி செய்தது சன் பிக்சர்ஸ். தனுஷ் கூட சுள்ளான் படத்தில் ரசிகர்களை கொலை வெறி ஏற்படச்செய்திருப்பார். ஆனால் அரசியல் வாதி குடும்பத்தில் இருந்து வந்த உதயநிதி மிகத் தெளிவாக வெற்றி ஒன்றையே குறிக்கோளாக கொண்டு சந்தானத்தையும், திம்சுகட்டையையும் முன்வைத்து எந்த பில்ட்அப்பும் இல்லாமல் படம் கொடுத்து படத்தை ஹிட் லிஸ்ட்டில் சேர்த்துவிட்டார்.

கே.எஸ்.ரவிக்குமாரா அல்லது விக்ரமனா என்று தெரியவில்லை. படம் முடிந்து வெளியே வந்த ரசிகன் படத்தைப் பற்றி ஆயிரம் கேள்வி கேட்கலாம். கிண்டல் அடிக்கலாம். ஆனால் படத்தில் முதல் சீனைப் பற்றி இரண்டாவது சீனிலேயே கிண்டல் செய்தால் படத்திற்கு சீன் முடிந்தது என்று சொல்லியிருந்தார். படத்தின் முதல் சீனில் உதயநிதி 10 பேரை பந்தாடினால் நிச்சயம் ரசிகர்கள் வெறுத்துப்போயிருப்பார்கள். (அவருக்கு இருக்கும் அரசியல், பணபலத்திற்கு 100 பேரை கூட பந்தாடலாம். அது வேறு விஷயம்.) ரசிகர்களை தொடர்ந்து சிரித்துக்கொண்டே இருக்க வைத்து கதையை காணோம்னு படம் முடிந்து தியேட்டருக்கு வெளியே வந்து கேட்க வெச்சாங்க பாருங்க. அங்கதான் படம் பிழைச்சுடுச்சு. எனக்குத் தெரிஞ்சு நான் பணிபுரிந்த காலகட்டம் தவிர்த்து ரொம்ப நாளைக்கு அப்புறம் தியேட்டர்ல டிக்கட் இல்ல. அப்படின்னு சொல்லி நிறைய பேரை திருப்பி அனுப்புறாங்க.

அதுலயும் வழக்கமா மாலைக்காட்சி ஆறரை மணிக்குதான் போடுவாங்கன்னு நினைச்சு நிறையபேர் ஆறு மணிக்கு வந்தும் டிக்கட் இல்லை. காவலர்களை வைத்து மக்களை திருப்பி அனுப்பும் நிலை ஏற்பட்டது. சில புதுமணத் தம்பதியர் கூட பத்துப் பதினைந்து நிமிடம் வரை தியேட்டர் வாசலை விட்டு கிளம்ப மனமில்லாமல் நின்று கொண்டே இருந்தார்கள். நான் தியேட்டரில் பணிபுரிந்த 1990களின் பிற்பகுதியில் இது மிகவும் சாதாரணம். ஆனால் இப்போது அது எனக்குள் பல கேள்விகளை ஏற்படுத்தியது.

பலருக்கு சினிமா பார்க்க கிளம்பி வந்து விட்டு டிக்கட் இல்லாமல் திரும்பி போவது என்பது கவுரப்பிரச்சனையாகி விடுகிறது என்று நினைக்கிறேன். நானும் அப்படித்தான் இருந்தேன். என்னுடைய பத்து பன்னண்டு வயதில். அப்புறம் பதினாலு பதினஞ்சு வயசுக்கெல்லாம் தியேட்டர்ல வேலைக்கு வந்துட்டேனே. ஆனால் இப்போது படித்து ஆயிரக்கணக்கில் சம்பாதிக்கும் மனிதர்களும் இப்படி இருப்பது ஆச்சர்யமாகத்தான் இருக்கிறது. மனித மனம் சில விஷயங்களில் எப்போதும் ஒரு குழந்தைத்தனத்துடன்தான் இருக்கும்போல் இருக்கிறது. இது போன்ற சந்தர்ப்பங்களில் அது வெளிப்படுகிறது. அவ்வளவுதான்.

பாட்டி சொல்லைத் தட்டாதே, உள்ளத்தை அள்ளித்தா, மேட்டுக்குடி இது மாதிரி பெயருக்காவது கதையுடன் வந்த (சுட்ட கதையோ, சுடாத கதையோ) முழு நீள காமெடிப்படங்கள் பெரும்பாலும் சோடை போவதில்லை. எஸ்.எம்.எஸ், பாஸ், ஓ.கே.ஓ.கே அப்படின்னு கதை தயார்பண்ற கேப்புல மூணு படம் பண்ணிட்டார் ராஜேஷ். விருந்தும் மருந்தும் 3 நாள் என்பது அனைவருக்கும் தெரியும். ரொம்ப நாளக்கு ஒண்ணுமில்லாத படத்தை ஓஹோன்னு ஓட வைக்க மாட்டாங்க. அதுக்காக படுதோல்வி அடையும்னு சொல்லலை. 10 கோடி லாபம் சம்பாதிச்சு கொடுக்க வேண்டிய படம் 5 கோடியோட நிறுத்திக்கலாம். அதைச் சொன்னேன்.

அப்புறம், எனக்கு தெரிஞ்சு தோற்றத்துல ரொம்ப சுமாரா இருக்குறவங்களாட (விதிவிலக்கும் உண்டு) குணம் பல அழகான பொண்ணுங்களுக்கு இல்லை. அழகான ராட்சசி...இல்ல...இல்ல...அழகான அரக்கியாத்தான் இருக்காங்க. மூஞ்சைப் பார்த்தா வாந்தி வருது. தப்பித்தவறி பார்த்தா அவன் சாக வேண்டியதுதான் இந்த மாதிரி நெகட்டிவ் வசனங்கள் இல்லாம நல்ல காமெடிப்படம் குடுக்க முடியும். அதுக்கு முயற்சி பண்ணுங்க. இப்ப கொஞ்ச நாளாத்தான் மாற்றுத்திறனாளிகள கிண்டல் பண்ணி வர்ற படங்கள் குறைஞ்சுகிட்டு இருக்கு. தெனாவட்டு, காஞ்சனா மாதிரி படங்கள்ல திருநங்கைகளுக்கும் உரிய மரியாதை தர்ற கேரக்டர்களயும் உருவாக்க ஆரம்பிச்சிருக்காங்க.

இந்த படத்துல சொல்ற மாதிரி எல்லாரும் ஹன்சிகா மாதிரியான ஆளுங்கள லவ் பண்றதெல்லாம் முடியுமா? உதயநிதி அப்பா, தாத்தா பெரிய புள்ளிகள். அவர் ஹீரோவாகுறது ரொம்ப சுலபமா நடந்தது மாதிரி படத்துல ஹன்சிகா லவ்வும் ஓகே ஆயிடுச்சு. எல்லாத்துக்கும் மச்சம் வேணும்பா.

என்னென்னமோ சொல்ற...படத்தைப்பத்தியும் ஒண்ணும் சொல்லலை. ஒரு கல் ஒரு கண்ணாடின்னு முழு டைட்டிலையும் சொல்லலைன்னு தானே கேட்குறீங்க. இந்த படத்துல கொஞ்சம் ஓவராவே ஆங்கில வசனம் இருக்கு. அதனால வரிவிலக்கு தர முடியாதுன்னு சொல்லிட்டதா ஏதோ ஒரு பத்திரிகையில படிச்சதா நினைவு. வரிவிலக்குக்கு பயன்படும்னுதான் ஒரு கல், ஒரு கண்ணாடின்னு தலைப்பு வெச்சோம். அதுவே கிடைக்கலைன்னா அந்த கண்ணாடி எதுக்கு அப்படின்னுதான் சும்மா ஓ.கே. ஓ.கேன்னு மட்டும் இந்த பதிவில் எழுதியிருக்கேன்.

சந்திரமுகியில் ரஜினி, சரவணாவில் சிம்பு, புதுக்கோட்டையிலிருந்து சரவணன், சீடன் படங்களில் தனுஷ் என்று பலரும் இந்த சரவணன் என்ற பெயரில் நடித்து விட்டார்கள். ஏற்கனவே திரைத்துறையில் சரவணன் நடிகர் இருந்ததால் சரவணன் என்ற ஒரிஜினல் பெயரில் இருந்து சூர்யாவாகி விட்டார். (எனக்கு என்னவோ சரவணன்-இந்த பேர் எனக்கு இருக்குறது புடிக்கலை.) ஓகே.ஓகே படத்துல உதயநிதியின் கேரக்டர் பெயர் சரவணன். ரெண்டு தடவை பின்னால போனதும் ஹன்சிகா உதயநிதியை ரசிக்கத்தொடங்கி விட்டதுதான் இந்த படத்தில் ஹீரோயிசம் என்று சொல்லலாம். மற்றபடி என்னை மாதிரி சாதாரண பிரஜையாக இருக்கும் எத்தனையோ சரவணன்களில் ஒருவராகவே உதயநிதி நடித்திருப்பதும் படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணம் என்று நினைக்கிறேன்.

நாற்பது பேரை அடிச்சு பந்தாடிட்டு, ரகசியாவோட ஒரு ஓப்பனிங் சாங் இருந்துச்சுன்னா ரிசல்ட் வேற மாதிரி ஆகியிருக்கும்னு ஒருத்தர் சொன்னார். உண்மையாங்க?

ஒரு நேரத்துல நான் கோர்வையா பதிவு எழுதுன மாதிரி இது இருக்குறதா தெரியலை. கதையே இல்லாத கே.ஓகே படம் ஏற்படுத்துன பாதிப்போ?

வெள்ளி, 13 ஏப்ரல், 2012

என்ன புலம்பி என்ன ஆகப்போகுது?



  • கடந்த 3 மாசமா தமிழ் நாட்டுல மிகப்பெரிய மாஸ் ஹீரோவா ஆகியிருக்குறது மின்வெட்டுதான். ஊரெங்கும் இதேபேச்சு. கடந்த ஆட்சிக்காலத்துல ஆற்காட்டாரை எல்லாரும் கரிச்சு கொட்டுனோம். ஆனா இப்போ எல்லா ஆட்சியாளர்களும் கொள்கை முடிவுல ஒரே அணியிலதான் இருக்காங்கன்னு தெரிஞ்சு போச்சு.

    அது என்ன கொள்கை?
    ஏழைகளை மேலும் ஏழைகளாவே வெச்சிருப்பது. மிடில் கிளாஸ் தோலை உரிச்சு ஜூஸ் போட்டு சாப்பிடுறது. கோடீஸ்வர முதலாளிகளுக்காக ஆட்சி நடத்தி தேர்தல் நிதிக்கு எந்த பங்கமும் இல்லாம பார்த்துக்குறது.

    சேவல் கூவுனாத்தான் பொழுது விடியுமான்னு சிலர் சொல்லுவாங்க. அந்த மாதிரி நாம புலம்புறதுக்கு கொஞ்சம் இடைவேளை விட்டுட்டு சில விஷயங்களை மாத்திகிட்டுதான் ஆகணும்.

    முக்கியமா நிறைய வீடுகள்ல குண்டு பல்ப் உபயோகத்தை குறைச்சுட்டு குழல் விளக்கு அல்லது சிஎப்எல் விளக்குதான் பயன்படுத்துறாங்க. அவங்களுக்கெல்லாம் இன்னொரு சிக்கல் உண்டு. பெரும்பாலும் சிஎப்எல் விளக்குக்கு 1 வருஷம் உத்திரவாதம் இருக்கும். ஆனா உத்திரவாதம் முடிஞ்ச மறு நாள்தான் பல்ப் ரிப்பேராயிடுது. அதுக்கு நாமும் ஒரு காரணம். பாத்ரூம், டாய்லெட் போன்ற சில நிமிட உபயோகம் இருக்கும் இடங்களில் சிஎப்எல் விளக்கு போடாம குண்டு பல்ப் பயன்படுத்துறது நல்லது. ஏன்னா அடிக்கடி ஸ்விட்ச் போட்டு ஒத்தையா ரெட்டையா விளையாட சிஎப்எல் விளக்கு லாயக்கில்லை. இந்த வகை விளக்குகளை எரியவிட்டா குறைந்தது 20 நிமிடமாவது தொடர்ந்து எரியணும்னு சொல்றாங்க. சிஎப்எல் விளக்கின் மெக்கானிசம் அப்படி.

    இரவுல முக்கால் மணி நேரம் சரிசமமா மின்சாரமும் மின்சார வெட்டும் (சென்னை நீங்கலாக) இருக்கு. இந்த முக்கால் மணி நேரம் தொடர்ந்து எரிஞ்சா மின் கட்டணமும் பெரிய அளவுல அதிகரிக்காது. சிஎப்எல் விளக்கும் அவ்வளவு எளிதில் ரிப்பேராகாது. பதினஞ்சு நிமிஷத்துக்கு குறைவா விளக்கு எரியுற சூழ் நிலை இருந்தா குழல் விளக்கோ, குண்டு பல்ப்போ தேவலாம்.

    எங்க வீட்டுல நைட் லேம்ப்- உபயோகத்துக்கு 5W சிஎப்எல் விளக்குதான் பயன்படுத்துறோம். கிட்டத்தட்ட 4 வருஷமா எரியுது. ஆனா மற்ற இடத்துல உள்ளது அதிக பட்சம் 2 வருஷத்துக்குள்ள போயிடுதுன்னு நினைக்குறேன். முடிந்தவர்கள் முயற்சி செய்து பார்க்கலாம்.

    அடுத்து மின் விசிறிக்கான ரெகுலேட்டர். பழைய மாடல் இல்லாம எலக்ட்ரானிக் மாடல் ரெகுலேட்டர்தான் எல்லாரும் போட்டுருப்பாங்க. அதுலயும் பழைய ரேடியோ வால்யூம் கண்ட் ரோல் மாதிரி இல்லாம 5 step இருக்குற ரெகுலேட்டர் கூடுதல் காலம் உழைக்குது. கரண்ட் பில்லும் மின்விசிறி ஓடுற வேகத்துக்கு தகுந்த மாதிரிதான் இருக்கும். ஆனா பழைய மாடல் ரெகுலேட்டர்ல ஃபேன் எவ்வளவு வேகத்துல ஓடுனாலும் அதற்கு செலவாகுற மின்சாரம் ஒரே அளவுதான். என்ன பழைய மாடல் 60 ரூபா. Step Type எலக்ட் ரானிக் ரெகுலேட்டர் நல்ல கம்பெனி என்றால் 200 ரூபாயைத் தாண்டும்.

    எதுக்கு இதெல்லாம் சொல்றேன்னா, ஜென்ரேட்டர், யுபிஎஸ் வெச்சிருந்தா வரி போடுற மாதிரி அடுத்து வீட்டை விட்டு வாசல்ல இறங்கி பால் வாங்க வந்தா கூட Walking Tax, காற்றுல இருக்குற ஆக்சிஜனை சுவாசிச்சு உயிர் வாழ்றதால Air Tax இன்னும் என்னென்னவோ வாங்கப்போறாங்க. அப்ப அதெல்லாம் கட்டுறதுக்கு இந்த மாதிரி சிக்கனமா இருந்தாதான முடியும்? நாம என்ன அரசியல் வியாதியா, இல்ல பொது ஜன ரத்தத்தை உறிஞ்சுற கோடீஸ்வர ரத்த காட்டேரியா வரி கொடுக்காம ஏமாத்த?

    நந்தன வருஷத்துல நந்தவனமே இல்லாம இருக்குற பகுதிகள்ல அட்லீஸ்ட் ஒரே ஒரு மரக்கன்றாவது நட்டு வளர்க்கணும்னு முடிவு பண்ணுங்கப்பா. வீட்டை சுத்தி இயற்கை காற்று வர்ற மாதிரி இருந்தா கூட அதுக்கும் வரி உண்டு. இன்னும் சில ஆண்டுகள்ல சூரிய ஒளி பயன்படுத்தி நாம விளக்கெரிக்கவாவது மின்சாரம் தயாரிச்சுகிட்டாலும் அதுக்கும் வரி உண்டு.-ஆமா, இதெல்லாம் யாருக்கு. வேற யாருக்கு, ரொம்ப நல்லவேன்னு ஒரு வார்த்தை சொல்லிட்டாலே எவ்வளவு அடிச்சாலும் தாங்குற லோயர் மிடில் கிளாசுக்குதான்.

வியாழன், 12 ஏப்ரல், 2012

ஏனுங்க...இது உண்மையா?

............................போற இடத்துக்கு கூட ஏ/சி பண்ணி வெச்சிருக்குற பகாசுர கம்பெனிகளுக்கும், அரசியல் வியாதிகளையும் அதிகாரிகளையும் கைக்குள்ள போட்டுக்கிட்டு மக்களை மொட்டை அடிக்கிற கோடீஸ்வர கம்பெனிகளுக்கும் தடையில்லா மின்சாரம் கொடுக்குறதுக்கு பல காரணம் இருந்தாலும் முக்கியமா ஒரு காரணம் சொல்றாரு நண்பர் ஒருத்தரு. சில கோடீஸ்வர கம்பெனிகளும் முதலாளிகளும் மட்டும்தான் தேர்தல் நிதி தர்றாங்க. சாதாரண பொது ஜனங்க நம்மகிட்ட நிதி வாங்கிட்டுதான் ஓட்டு போடுறாங்க. அதனால நம்ம மின்சார ஓட்டு சில பணக்கார முதலைகளுக்கே அப்படின்னு எல்லா கட்சியிலயும் தீர்மானம் போட்டுட்டாங்களாமே?

கணிசமான மக்கள் சிறுதொழில் தொடங்கியும், வேறு பலர் கிடைக்குற வேலையை பார்த்துகிட்டும் ஓரளவு உசுரோட இருக்காங்க. இவங்க எல்லாம் இலவசம் எதுவும் தேவையில்லை, ஒழுங்கா நம்மளோட  பிழைப்பை நடத்த விட்டா போதும் அப்படின்னு யோசிக்க ஆரம்பிச்சுட்டாங்களாம். இந்த எண்ணிக்கை இப்போ ரொம்ப ரொம்ப குறைச்சலா இருந்தாலும் நாளடைவில் அதிகரிச்சா அரசியல் வியாதிகளுக்கு (கவனிக்கவும்: அரசியல் வாதிகளுக்கு பிரச்சனை இல்லை) பெரிய வில்லங்கம் வந்துடும். காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரைக்கும் பன்னண்டு மணி நேரத்துல ஆறு மணி நேரம்தான் இப்போ மின்சாரம் இருக்குது. மீதி 12 மணி நேரம் அதாவது மாலை 6 முதல் காலை 6 மணி வரை மின்சாரத்தை நிறுத்தாம கொடுத்துட்டா பலபேரு நிம்மதியா தூங்குவாங்க. கடுமையான உழைப்பாளிகள் இரவிலும் தங்கள் தொழில் பட்டறைகளை திறந்து வேலை பார்க்க ஆரம்பிச்சுடுவாங்க. இந்த ரெண்டும் நடந்துட்டா அரசியல் வியாதிகளைப் பத்தி யாரும் நினைக்க மாட்டங்க. அதனால எவனும் தூங்கவும் கூடாது. வேலை பார்க்கவும் கூடாது. தூக்கம் கெட்டா புத்தி மழுங்கிடும். டாஸ்மாக் சரக்கு அடிக்கிற பழக்கம் இல்லாதவங்களுக்கு இந்த தண்டனை. சுயசம்பாத்தியம் காரணமா இலவசம் தேவையில்லைன்னு பேச நினைக்கிற ஆளுங்களுக்கு பிழைப்பை முடக்கி போட்டு தண்டனை. (டாஸ்மாக்ல சரக்கு அடிக்கிறவன் கம்பெனிக்கு மட்டும் ஸ்பெஷல் கரண்ட் வருதான்னு கேட்க கூடாது)

எப்படியோ, பிரைவேட் கம்பெனியில ஒரு யூனிட் 15 ரூபாய்க்கு வாங்கி ஐ.டி, சர்க்கரை ஆலை மாதிரி பணக்கார முதலாளிகளுக்கு 3 ரூபாய்க்கு கரண்ட் கொடுத்தாச்சு.(கிட்டத்தட்ட 40 சதவீதம் அப்படின்னு சொல்றாங்க) ஆனா வயிறு வளர்க்குற வேளாண்மைக்கு சுமாரா 20 சதவீதமோ என்னவோன்னுதான் சொல்றாங்க. இந்த புள்ளி விபரத்தை நான் சரியா பதிவுல எழுதலை. .................க்கு கூட ஏசி வெச்சிருக்குற ஆளுங்களும், பகாசுர கம்பெனிகளும், சுரண்டுற மின்சாரத்துல மூணுல ஒரு பங்கு அப்படின்னு ங்குற அளவுலதன் விவசாயத்துக்கு மின்சாரம் செலவாகுது. ஆனா விவசாய இலவச மின்சாரத்தாலதான் மின்சாரவாரியம் திவாலான மாதிரி நம்பவெச்சுட்டாங்க.

இப்படி சராமாரியான கொடூர மின்வெட்டை அமல் படுத்திட்டு யுபிஎஸ் வெச்சிருக்குறவங்களுக்கு எக்ஸ்ட்ரா வரியாம். ஜெனரேட்டர் வெச்சிருந்தா வரியாம். அது சரி, ரோடு டேக்ஸ் வசூல் பண்ணிட்டு அங்கங்க டோல்கேட் போட்டு சுங்க வரி புடுங்குறதையே சகிச்சுகிட்டோம். இந்த மாதிரி சுங்கம் வசூலிக்கிறதை தப்புன்னு சொல்லலை. எத்தனை வருஷத்துக்கு அந்த காண்ட்ராக்ட்,  ஒரு நாள்ல எவ்வளவு வசூல், அரசியல் வியாதிகளுக்கு எத்தனை லட்சம் கோடி அப்படின்னு செய்தி தெரியவே மாட்டெங்குது. ஆனா ராணுவ ரகசியம் கூட வெளில வந்துடுதுப்பா.

அடுத்து ஆக்சிஜனை கெக்கரான் மெக்கரான் கம்பெனிக்கு காண்ட்ராக்ட் விட்டாச்சு. நீங்க மூச்சு விடுறதுக்கு பணத்தை கட்டு. இல்லன்னா செத்துப்போன்னு சொல்றப்பதான் நம்ம நாட்டுல புரட்சி வெடிக்கும்னு நான் சொன்னேன். ஆனா அவரு சொல்றாரு, ''நம்ம மக்கள் பணம் கொடுக்க முடியலையேன்னு சாவாங்களே தவிர இயற்கை வளத்துக்கு எங்கிட்ட ஏன் காசு கேட்குறன்னு பொங்கவும் மாட்டாங்க. சும்மா கிடைக்கிற இயற்கை வளத்தை மாசுபடாம சிக்கனமா பயன்படுத்தவும் மாட்டாங்க. இலவசத்தை வேணாம்னு சொல்லவும் மாட்டாங்க. அப்படின்னு சொன்னார். அது உண்மையாங்க?