Search This Blog

ஞாயிறு, 1 ஆகஸ்ட், 2010

இரண்டரை லட்ச ரூபாய் போச்சே!...இந்திய ரூபாய்க்கான புதிய குறியீடு வடிவமைப்பு

ஊரோட ஒத்துப்போகாம எப்ப பார்த்தாலும் நீதி,நேர்மை,நடுநிலைமை அப்படின்னு பேசி வாய்ப்புக்களை இழக்குறதே அவனுக்கு வழக்கமாப் போச்சு.(அவன் வேற யாரு...நாந்தேன்.)
எல்லா விஷயத்துலயும் அயல்நாட்டு ஐடியாவைத்தான் சுடணுமான்னு ரொம்பவே யோசிச்சு நானே ஒரு குறியீட்டை வடிவமைச்சு போட்டிக்கு அனுப்புனேன்.

நான் வடிவமைத்து அனுப்பிய புதிய குறியீடு - விளக்கம் 1
நான் வடிவமைத்து அனுப்பிய புதிய குறியீடு - விளக்கம் 2
நான் வடிவமைத்து அனுப்பிய புதிய குறியீடு - விளக்கம் 3
நான் வடிவமைத்து அனுப்பிய புதிய குறியீடு - விளக்கம் 4
நான் வடிவமைத்து அனுப்பிய புதிய குறியீடு - விளக்கம் 5

தமிழகத்தைச்சேர்ந்த ஒருத்தர் வடிவமைச்ச குறியீடு தேர்வு செய்யப்பட்ட விஷயம் தெரிஞ்சதும் முதல்ல பெருமையாத்தான் இருந்துச்சு.ஆனா தொடர்ந்து வந்த தகவல்கள்,நான் எந்த அளவுக்கு விஷயம் தெரியாம இருந்துருக்கேன்னு வேதனைப்பட வெச்சது.

என்னோட வடிவமைப்பு எழுதுறதுக்கு கடினமா இருந்ததாலயோ, வேற காரணங்களாலயோ நிராகரிக்கப்பட்டிருந்தா பெருமையா இருந்துருக்கும்.ஹிந்தி தேசிய மொழியா அங்கீகரிக்கப்பட்ட ஒரே காரணத்தால அதை அடிப்படையா வெச்சி உருவாக்கப்பட்ட குறியீடு ஏக மனதா தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கு.

இது உதயக்குமாருக்கு சாத்தியமாகக் காரணம் அவருக்கு ஹிந்தி தெரிஞ்சதாலதான்.

என்னுடைய வருத்தம் என்னன்னா, தமிழ்-ஆங்கிலம் ஆகிய மொழிகள்ல நான் கொடுத்த விளக்கம் யாருடைய கவனத்துக்கும் போகாமலேயே நிராகரிக்கப்பட்டிருக்கலாமோன்னுதான்.

ஹிந்தியை எதிர்க்குறோம்னு சொல்லி பல மத்திய அரசுப்பணிக்குரிய வாய்ப்பை நமக்கு கடினமாக்கி வெச்சிட்டாங்க. இப்போ இது மாதிரியான சாதனை முயற்சிகள் ஹிந்தி தெரியாத காரணத்தால வெளி உலகத்துக்கு தெரியாமலேயே போகுது. இந்த அவல நிலையை நினைச்சு பெருமூச்சு விடத்தான் முடியும். வேற என்ன செய்யுறது?

பத்திரிகையாளர் 'ஞாநி' ஓ பக்கங்களை குமுதத்தில் படிச்சதும் எனக்கு கொஞ்சம் நம்பிக்கை வந்தது. நான் வடிவமைச்ச குறியீட்டுக்கு  தேர்ந்தெடுக்கப்பட தகுதியில்லாம இருக்கலாம்.ஆனா நான் அதுல என்னென்ன விஷயங்கள் இருக்கணும்னு நினைச்சு உருவாக்குனேனோ அந்த கொள்கைகள் நடுநிலையானவைன்னு புரிஞ்சுடுச்சு.

நீங்களும் இந்த பக்கங்களைப் படிச்சுட்டு அமைதியா யோசிச்சுப் பாருங்க. உண்மை புரியும்.

ஆனா ஒண்ணுங்க...ரூபாய் நோட்டுல பதினெட்டு மொழிகள் இருக்கேன்னு பெருமையா நினைச்சு தமிழ்,ஆங்கிலத்துல மட்டும் விளக்கம் அனுப்பினது எவ்வளவு முட்டாள்தனம்னு நல்லாவே புரிஞ்சுகிட்டேன்.
வெட்டி நியாயம் பேசாம ஹிந்தி கத்துகிட்டா பல விஷயங்களுக்கு நல்லது.இல்லன்னா நம்மை இந்த நிலையில வெச்சிருக்குற அரசியல்வாதிகளோட புள்ளைங்க ஹிந்தியைக் கத்துக்கிட்டு வெளுத்து வாங்கிகிட்டு இருக்குறதை கட்டியிருக்குற கோவணத்தையும் இழந்துட்டு நாம வேடிக்கை பார்த்துகிட்டே இருக்க வேண்டியதுதான்.

ஓ பக்கங்கள் 1
ஓ பக்கங்கள் 2
ஓ பக்கங்கள் 3
ஓ பக்கங்கள் 4
ஓ பக்கங்கள் 5

வியாழன், 15 ஜூலை, 2010

திருவாரூரில் திருவிழா

வீட்டுக்கும் நாட்டுக்கும் திருவிழா என்பது அவசியம்.சில துறைகளில் பணி புரிபவர்கள் வேலை முடிந்தால் உறக்கம், பாதி உறக்கத்தில் சிரமப்பட்டு எழுந்து மீண்டும் வேலை என்ற இயந்திரத்தனமான வாழ்க்கை சூழலில் சிக்கிக்கொண்டிருக்கிறார்கள்.இதனால் உறவுச் சிக்கலில் இருந்து உடல்நலம் வரை எவ்வளவு பாதிப்பு என்று பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம்.
உறவினர் வீட்டில் விசேஷம் அல்லது அவர்கள் இருக்கும் ஊரில் திருவிழா என்ற ஒரு சில காரணங்களால்தான் நாம் மற்றவர் வீட்டுக்குச் சென்று சில மணி நேரங்களாவது இருந்துவிட்டு வருகிறோம்.(அடுத்தவர் வீட்டில் முகாமிட்டே வாழ்க்கையைக் கழிப்பவர்களைப் பற்றி சொல்வதற்கு ஒன்றுமில்லை.)

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கு மக்கள் அடிமையானபிறகு யார் வீட்டுக்காவது செல்லலாம் என்று யோசிப்பதற்கே தயக்கமாக இருக்கிறது.நிழல் கதாபாத்திரங்களின் மேல் உள்ள ஆர்வத்தில் நிஜ வாழ்க்கையின் உறவுகளை உதாசீனப்படுத்தும் போக்கு பலரிடம் இருப்பதை மறுக்கமுடியாது.
மனிதர்கள் தனித்தீவாகி விட்ட இன்றைய காலகட்டத்தில் ஓரளவாவது சக மனிதர்களிடம் சற்று ரிலாக்சாக பழக முடிகிறது என்றால் அது மிக நெருங்கிய உறவுகள் மற்றும் நண்பர்கள் இல்ல விழாக்களில் மட்டும்தான்.

அதிலும் பல விசேஷங்களுக்கு மிகச் சரியாக விழா நேரத்தில் சென்றுவிட்டு யாரும் கவனிக்கவில்லை என்று புலம்புவது பலருக்கும் வாடிக்கையாகிவிட்டது.ஒரு விழா என்றால் குறைந்தது ஆறுமணி நேரம் முன்பாகவாவது சென்று அங்குள்ள பணிகளை கொஞ்சமாவது பகிர்ந்து கொண்டால் அனைவருக்கும் கொண்டாட்டமாக இருக்கும்.

எல்லாரும் இப்படி வருவது சாத்தியமில்லைதான்.விழாவுக்கு அழைத்தவர்களில் ஒரு சதவீதம் பேர் அந்த பொறுப்புகளை பகிர்ந்துகொள்ள வந்தாலே போதும்.விழா நடத்தும் வீட்டில் உள்ளவர் மற்ற அனைவரையும் ஒரு புன்னகையுடனாவது எதிர்கொண்டு அழைக்க முடியும்.

(இந்த அவசர யுகத்துல இதுக்கெல்லாம் சாத்தியமில்லை அப்படின்னு நிறைய பேர் கண்டிப்பா சொல்லத்தான் போறாங்க.)
ஒவ்வொரு நாளும் மற்றுமொரு நாளே அப்படின்னு போய்கிட்டு இருந்தா அதுல எந்த சுவாரஸ்யமும் இல்லை.பண்டிகை, திருவிழா இதெல்லாம் ஊருக்கும் நாட்டுக்கும்னா, பிறந்தநாள், திருமணநாள் கொண்டாட்டங்கள் வீட்டுக்கு.இதெல்லாம் என்ன தெண்ட செலவுன்னு உங்கள்ல பலர் நினைக்கலாம்.
அதுக்கு ஆகுற செலவை ஆதரவற்றோர்,முதியோர் இல்லங்களுக்குப் போய் செலவழிக்கலாம்னு நினைக்கிறீங்கன்னா இன்னும் சந்தோஷம்.நம்மள்ல நிறையபேர் இப்படி போய் உதவி செய்யணும்னு நினைச்சுகிட்டே இருப்போம். ஆனா இப்ப போவோம்னு நினைக்கிறவங்க ரொம்ப குறைவு.நாளைக்குப் போவோம், அடுத்த வாரம் போவோம்னு ஆயுள் பூராவும் நினைச்சுகிட்டே இருக்குறவங்கதான் நிறைய பேர்.



இதுவே பிறந்தநாள்,திருமணநாளில் போய் அவங்களுக்கு உதவி செய்யணும்னு நினைச்சா கண்டிப்பா செய்வோம்.அது அந்த நாளின் சந்தோஷத்தை இன்னும் அதிகமாக்கும்.இது மாதிரியான ஒரு நாளில் நம்மைச் சுற்றி இருக்குறவங்ககிட்ட இருந்து வாழ்த்து கிடைச்சாலே அது எவ்வளவு சந்தோஷம் தரும்னு நான் சொல்லத் தேவை இல்லை. நம்மளுக்கு அறிமுகமில்லாத ஒருத்தர்கிட்ட இருந்து நமக்கு வாழ்த்து கிடைக்கிறது எந்த மாதிரியான மகிழ்ச்சியைத் தரும்னு நீங்களே முடிவு பண்ணிக்குங்க.

திருவாரூர் பற்றி ரெண்டு விஷயம் நிறைய பேருக்கு தெரிஞ்சிருக்கலாம்.தேர்த் திருவிழான்னா  திருவாரூர்தான் நினைவுக்கு வரும்.தேரோடும் நாலு வீதிகளிலும் இப்போ கிட்டத்தட்ட ரெண்டு அடி உயரத்துக்குமேல கான்கிரீட் தளம் அமைச்சிருக்காங்க. முன்னால தார்ச்சாலையில அங்கங்க மேடு பள்ளம் இருக்கும்போதே தேரை சரியான திசையில செலுத்த முட்டுக்கட்டை கொடுத்து திசை திருப்புறவங்க மிகவும் சிரமப்பட்டுதான் வேலை செய்வாங்க.அந்த பணிகள்ல தேர்ச்சி பெற்ற பழைய ஆளுங்க பல்வேறு காரணங்களால இப்போ இந்தப் பணிகள்ல ஈடுபடுறது இல்லை.(இந்த அரசியலைப் பற்றி எழுதுனா என் வீட்டுக்கு ஆட்டோ கன்பார்மா வரும்.)

புது ஆளுங்கதான் சில ஆண்டுகளா தேர் கட்டுமானப்பணிகள் செய்து திருவிழாவை நடத்தி முடிக்க உதவியா இருக்காங்க.அதனால கடந்த சில வருஷமா சின்ன சின்ன பாதிப்புகள் வந்தது உண்மைதான்.ஆனால் இந்த வருஷம் இதுமாதிரியான எந்த பாதிப்பும் இல்லாம நல்லபடியா திருவிழா நடந்து முடியணும்னு நான் கடவுள்கிட்ட வேண்டிக்குறேன்.(எனக்கு கடவுள் நம்பிக்கை உண்டு.)

2001ம் ஆண்டுக்குப் பிறகு மீண்டும் கும்பாபிஷேகம் நடத்த ஏற்பாடு செய்யப்போறாங்க. இந்த காரணத்தால அடுத்த ஒரு சில ஆண்டுகளுக்கு தேர்த்திருவிழா நடக்க வாய்ப்பில்லை.அதனால நீங்க 16.07.2010 (வெள்ளிக்கிழமை) நடக்க இருக்குற தேர்த் திருவிழாவுக்கு வாங்க.

வர்றவங்களை உபசரிக்க திருவாரூர் மக்கள் நிறையபேர் இருக்கோம்.

திருவாரூர் என்றால் சட்டுன்னு நினைவுக்கு வர்ற தேர் திருவிழா பற்றி சொல்லியாச்சு.

அடுத்த விஷயம், மனுநீதிச்சோழன்.தேர் ஓட்டும்போது தவறுதலா கன்றுக்குட்டியை சாகடிச்ச மகனை அதே மாதிரி சாகடிச்ச மன்னனின் கதையும் உங்கள்ல பலருக்கு தெரிஞ்சிருக்கும்.

மனித உரிமை பற்றி பேசுற பலர், இது என்ன காட்டுமிராண்டித்தனம்! வண்டி போகும்போது யாராச்சும் அடிபட்டு சாகுறது சகஜம்தான்.(சண்டையில கிழியாத சட்டை எங்க இருக்கு?) அப்படின்னு வம்புக்கு வருவீங்க.

இப்படி நினைச்சு அலட்சியமா விட்டதாலதான் சாலைவிதிகளை மதிக்காம வாகனம் இயக்கி தினமும் ஆயிரக்கணக்கான மக்களை கொன்னு குவிச்சுகிட்டு இருக்குறவங்க திருந்துறதா இல்லை.

கண்ணுக்கு கண், பல்லுக்கு பல் அப்படின்னு தண்டனை இருந்தா நிச்சயமா பயம் இருக்கும்.ஆனா அப்பாவிகளைப் பழிவாங்க இந்த சட்டத்தைப் பயன்படுத்திக்கிற தேசத்துரோகிங்க நிறையவே உண்டு.
அதாவது அப்பாவிகள் மேல இருக்குற அக்கறையாலதான் குற்றவாளிகள் தப்பிக்கக்கூடிய ஓட்டைகள் இருக்குன்னு நினைக்கிறேன்.

எங்கயோ ஆரம்பிச்ச விஷயம் இங்க வந்துடுச்சு. 16.7.10 திருவாரூர்ல திருவிழா...எல்லாரும் வந்துடுங்க.

புதன், 7 ஜூலை, 2010

தயாராகுங்கள் 1947க்கு...மதராசப்பட்டினம்


வசீகரம் என்றால் அது பெண்ணின் குரலில்தான் என்று சிலர் சொல்லக்கூடும்.ஆனால் ஒரு விளம்பரத்தில் வந்த ஆணின் குரல் என்னை மிக அதிகமாகவே ஈர்த்துவிட்டது.

"தயாராகுங்கள்...1947க்கு...ரெட் ஜெயண்ட் மூவீஸ் உதயநிதி ஸ்டாலின் ஏஜிஎஸ் எண்டர்டெய்ன்மெண்ட் கல்பாத்தி எஸ் அகோரம் இணைந்து வழங்கும் மதராசபட்டினம்" என்று டிரெய்லர்களில் ஒலிக்கும் குரல்தான் அது.
சில ஆண்டுகளுக்கு முன்பு தொ(ல்)லைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் சினிமாப்பட டிரெய்லர்கள் ஆறு மாதமானாலும் ஒரே மாதிரியாகத்தான் இருக்கும்.அவை ஒளிபரப்பாகத் தொடங்கிய சில நாட்களிலேயே அந்த டிரெய்லர் ஆரம்பமான உடனேயே வேறு சேனலுக்குத் தாவி விடுவோம்.

நாக்கமுக்க புகழ் சேர்த்த படத்துக்கு எல்லாப் பாடல்களையும் வைத்து நாலைந்து வகையாக டிரெய்லர்கள் உருவாக்கி மாற்றி மாற்றி ஒளிபரப்பத்தொடங்கியவுடன் மற்றவர்களும் இந்த முறையை அதிகமாக பின்பற்றினார்கள்.ரசிகர்களுக்கு சலிப்புத்தட்டிவிடக்கூடாதே என்ற பயம்தான் இதற்குக் காரணம்.
1.இளம்பெண் ஐ பேடில் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் பாடலைக் கேட்டுக்கொண்டிருக்கும்போது வீதியில் வெள்ளையனே வெளியேறு கோஷத்துடன் பேரணி.

2.டீக்கடையில் ஹோம்தியேட்டர் சிஸ்டம் பாடிக்கொண்டிருக்கும்.அதில் இந்தியா சுதந்திரம் அடைந்த காலகட்டத்தில் உள்ள செய்தியை வாசித்துக்கொண்டிருப்பார்கள்.

3.ஐ.டி துறையில் உள்ள நபர் இன்றைய மாடர்ன் ஹவுசில் இருந்து அலுவலகத்திற்கு கிளம்பும்போது பேப்பரில் 1947ம் ஆண்டு செய்திகள் முதல்பக்கத்தில் இடம்பெற்றிருக்கும்.

4.லேட்டஸ்ட் மாடல் காரில் ஏறும் பெண்மணியின் ஹேண்ட் பேக்கை ஒருவன் பிடுங்கிக்கொண்டு ஓடுவான்.அவர் உதவி என்று கத்தும்போது "வாட் ஹேப்பன்?"என்று கேட்டவாறு ஆங்கிலேய போலீசார் ஓடி வருவார்கள்.
இப்படி விதவிதமான ஐடியாக்களோடு படத்தின் கதை நடக்கும் காலகட்டமான 1947க்கு நம்மை அழைத்துச் செல்ல முயற்சி செய்து படத்துக்கான டிரெய்லரை உருவாக்கியிருக்கிறார்கள்.

நிச்சயம் இது நல்ல முயற்சி.இது போன்ற படங்கள் வெற்றி அடைந்தால் அது ரசிகர்களுக்கு மேலும் நல்ல படங்கள் கிடைக்க வழி வகுக்கும். ஆனால் இதற்கு படத்தின் திரைக்கதையும் உதவ வேண்டும்.

சமகாலக் கதைக்களனைக் கொண்ட குறும்படம் ஒன்றில் நான் பணியாற்றினேன்.அதையே எங்களால் நினைத்தபடி எடுக்கமுடியவில்லை.படப்பிடிப்பு முடியும் வரை எதோ ஒரு விஷயத்துக்காக காம்ப்ரமைஸ் ஆகிக்கொண்டேதான் இருந்தோம்.யதார்த்த சூழ் நிலை இப்படி இருக்கும்போது கடந்த கால வரலாற்றைப் படமாக்குவது எவ்வளவு கஷ்டம் என்பது எனக்கு நன்றாகவே தெரிந்தது. ஹேராம், சிறைச்சாலை ஆகிய படங்கள் நான் விரும்பிப்பார்த்தவை.அந்த காலகட்ட கதைக்களத்தை காட்சிப்படுத்த படக்குழுவினர் மேற்கொண்ட சிரமங்கள் எனக்கு நன்றாகவே புரிந்தன.
ஆனால் சிறைச்சாலை படம் என் மனதில் ஏற்படுத்திய வலியை ஹேராம் ஏற்படுத்தவில்லை.சிறைச்சாலை இந்திய சுதந்திரப்போராட்டத்தில் ஈடுபட்ட அனைவருக்கும் இழைக்கப்பட்ட கொடுமைகளை பார்வையாளனுக்கு உணர்த்துவதில் ஓரளவு வெற்றி பெற்றதாகவே கருதுகிறேன்.ஹேராம் படத்தைப் பொறுத்தவரை அது கலவரத்தைப் படம்பிடித்துக் காட்டியிருந்தாலும் தனி மனிதனுக்கு ஏற்பட்ட பாதிப்பை கூறுவதாக அமைந்திருந்தது.

எவ்வளவுதான் நீங்கள் படம்பிடிக்க கஷ்டப்பட்டிருந்தாலும் அதெல்லாம் எங்களுக்குத் தேவையில்லை.எங்களுக்குத் தேவை சந்தோஷம் என்பதுதான் மக்களின் மனநிலையோ என்ற எண்ணம் எனக்கு எழுகிறது.இதற்குக் காரணம், ஹேராம், சிறைச்சாலை படங்களுக்கு வர்த்தகரீதியான வெற்றி கிடைக்காததும் இம்சை அரசன் 23ம் புலிகேசியின் அதிரடி வெற்றியும்.
சேது, நந்தா, காதல்,அங்காடித்தெரு, வெயில் போன்று சோகத்தை மையமாகக் கொண்ட படங்களைக் கொண்டாடியவர்கள்தான் நம் ரசிகர்கள்.

பிறகு ஏன், ஐம்பது ஆண்டுகளுக்கு முந்தைய காலகட்டத்தைக் கொண்டு எடுக்கப்பட்ட படங்கள் சாமானியர்களிடம் போதிய வரவேற்பைப் பெறுவதில்லை?
மதராசப்பட்டினம் இப்படிப்பட்ட படங்களின் வரிசையில் சேர்ந்துவிடாமல், புதிய பாதையை ஏற்படுத்துகிறதா என்று பார்ப்போம்.