Search This Blog

திங்கள், 5 ஜூலை, 2010

செல்போன் பேசியபடி வாகனம் ஓட்டச் சொல்லும் போலீஸ்

சில தினங்களுக்கு முன்பு என் நண்பன் ஒருத்தன் இரவு பதினோரு மணிக்கு மாநில நெடுஞ்சாலையில் போய்க்கிட்டு இருந்தான். இடையில செல்போன் அழைப்பு வந்துருக்கு. உடனே டூவீலரை சாலையை விட்டு இறக்கி மணல் பகுதியில் நிறுத்திட்டுதான் செல்போன்ல பேசியிருக்கான்.அப்போ அவன்கிட்ட ரெண்டு போலீஸ்காரங்க ஓடி வந்துருக்காங்க.
அவங்களைப் பார்த்ததும் ஷாக்காகி செல்போன் பேசுறதை நிறுத்திட்டு என்னன்னு கேட்டுருக்கான்.ஓடி வந்தவங்கள்ல ஒரு போலீஸ்காரர் இவனுக்கு தெரிஞ்சவராம்.

"என்ன தம்பி...நீங்கதானா?"ன்னு அவர் கேட்டிருக்கிறார்.இதைப் பார்த்ததும் கூட வந்த இன்னொரு போலீஸ்காரர்,"உங்களுக்கு தெரிஞ்ச பையனா, சரி...சரி...இங்கெல்லாம் நிக்க கூடாது. உடனே கிளம்பு."ன்னு சொன்னாராம்.

"இல்ல சார்...போன்ல பேசுறதுக்காகதான்..."அப்படின்னு இவன் இழுத்துருக்கான்.

"அதெல்லாம் வண்டியை ஓட்டிகிட்டு போகும்போதே பேசிக்க...கிளம்பு...கிளம்பு..."அப்படின்னு அந்த இன்னொரு போலீஸ்காரர் விரட்டியிருக்கார்.

நண்பனுக்கு தெரிஞ்ச போலீஸ்காரரும், "நீங்க கிளம்புங்க தம்பி..."அப்படின்னு சொல்லி கண்ணைக்காட்டியிருக்கார்.

இவனும் போன்ல அப்புறம் பேசுறேன்னு சொல்லி போனைக் கட்பண்ணிட்டு டூவீலரை எடுத்துட்டு கிளம்பிட்டானாம். ரொம்ப பக்கத்துலேயே பேட்ரோல் வாகனமும் இன்னொரு சொகுசுக்காரும் லைட்டைக்கூட எரிய விடாம நின்னுருக்கு.

சொகுசுக்கார்ல வந்தவங்ககிட்ட ரெண்டு போலீஸ்காரங்க தீவிரமான வசூல்வேட்டையில இருந்துருக்காங்க. நண்பனுக்கு விஷயம் தெரிஞ்சதும் அவனுக்குள்ள சிரிச்சுகிட்டு வந்துருக்கான். அந்த வண்டிகளைத் தாண்டுனதும் கொஞ்ச தூரத்துலேயே இன்னும் ரெண்டு போலீஸ்காரங்க, அந்தப் பக்கம் காவலுக்கு.

வண்டி ஓட்டும்போதே செல்போன் பேசுங்கன்னு சொல்லி இவங்க யாரைக்காப்பாத்துறாங்க, யாருக்கு குழி வெட்டுறாங்கன்னு புரியுதா?

இந்த சம்பவம் எந்தப் பகுதியில நடந்தது, நண்பன் பெயர் என்னன்னு சொல்லாம பதிவு எழுதுறேன். நம்ம நாட்டுல கருத்து சுதந்திரம் எந்த அளவுக்கு இருக்குன்னு தெரியுதா? என்னைப் பொறுத்த வரை முழு சுதந்திரம் இல்லை. நீங்க உடனே இந்த ஊர்ல பெட்ரோல் இந்த விலை. அந்த ஊர்ல பிஸ்கட் அந்த விலைன்னு பட்டியல் வாசிக்காதீங்க நண்பர்களே.

தப்பு பண்றவன் அதிகாரத்துல இருக்குறவங்ககிட்ட கூடிக் குலாவுறான். நேர்மையா நடக்குறவங்க போலீசைப் பார்த்து பயப்படுறாங்க.இதுக்கு காரணம் என்ன? நல்ல பேர் எடுக்குறது ரொம்ப கஷ்டம். கெட்டபேர் வாங்க ஒரு நொடி போதும்னு சொல்லுவாங்க.

அதே மாதிரி, தப்பு பண்றவன் மேல வழக்கு பதிவு பண்ணி ஒரு நாளாவது ரிமாண்டுல வெக்கிறதுதான் கஷ்டம். யோக்கியன் மேல ஒரே ஒரு பொய் வழக்கு போட்டு ஒன்பது வருஷம் கூட விசாரணையே பண்ணாம உள்ள வைக்கலாம். இதுதான் நம்ம நாடு.
இதுலயும் ஒரு ஆறுதல் என்னன்னா...நமக்கே ஷாக் கொடுக்குற அளவுக்கு ஒண்ணு ரெண்டு ரொம்ப நல்ல போலீஸ்காரங்களும் இருக்கத்தான் செய்யுறாங்க.சென்னை சிட்டிபஸ்சுக்குள்ள பயணிகள் கூட்டத்துக்குள்ள இருக்காரா இல்லையான்னே கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு கண்டக்டர் இருப்பாரே... அந்த மாதிரியான சொற்ப எண்ணிக்கையில்.