Search This Blog

வெள்ளி, 14 மே, 2010

வராத படிப்பை வா...வான்னு சொன்னா எப்படி வரும்?

திருவாரூர் ஜி.ஆர்.எம். பெண்கள் மேல் நிலைப்பள்ளியில் படித்த திருவாரூரைச்  சேர்ந்த மாணவியான  கீர்த்திப்ரியா சிறப்புத்தமிழ்ப் பாடத்தில் மாநிலத்திலேயே முதலிடம் பிடித்திருக்கிறார். இவரது மொத்த மதிப்பெண்கள் 1045. சிறப்புத்தமிழில் 191 எடுத்து மாநிலத்தில் முதலிடம்.
தந்தையை இழந்த அவருக்கு இரண்டு சகோதரிகள் இருக்கிறார்கள். உலகத்தமிழ் செம்மொழி மாநாடு நடைபெறப்போகும் இந்த நேரத்தில் ஏழ்மை நிலையில் இருக்கும் இம்மாணவி மேற்படிப்பை சிரமமின்றி தொடர தமிழக முதல்வர் உதவுவார் என்று நாங்கள் நம்புகிறோம்.

******

திருவாரூர் மாவட்டத்தில் இரண்டாம் இடம் பெற்ற மாணவன் ரமேஷ் படித்தது பூந்தோட்டம் அரசு மேல்நிலைப்பள்ளியில்.

தமிழ்-190,ஆங்-176,இயற்-198,வேதி-200,உயிரி-189,கணித-200,மொத்தம்-1153

கேள்வித்தாள் கடினமாக இருந்தும் இரண்டு பாடங்களில் இருநூறு எடுத்திருப்பது மிகப்பெரிய விஷயம். பூந்தோட்டம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நான் அறிந்த வரை தொடர்ந்து பிரமாதமான ரிசல்ட் கிடைத்து வருகிறது. கிராமப்பகுதியாக இருந்தாலும் ஆசிரியர்களின் ஒத்துழைப்பும் மாணவர்களின் அர்ப்பணிப்பும் பொருத்தமாக அமைந்தால் வெற்றிகள் தேடி வரும் என்பது இதன் மூலம் நிரூபணமாகி உள்ளது.

இங்கிருந்து மூன்று கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் பேரளம் அரசுமேல்நிலைப்பள்ளியும் சிறப்பாகவே செயல்பட்டு வருகிறது. இது மிகச்சிறிய உதாரணம் மட்டுமே. தமிழகம் முழுவதிலுமே இந்தப் பள்ளிகளை விடவும் சிறப்பாக செயல்பட்டு பெருமை சேர்க்கும் அரசு கல்விக்கூடங்கள் நிறையவே உள்ளன.
ஆனால் சிலரது அலட்சியத்தாலும் பல கல்வித்தந்தைகளின் சுயலாபத்துக்காகவுமே நிறைய அரசுப்பள்ளிகள் முடமாக்கப்பட்டிருக்கின்றன.

மேலும் அரசுப்பள்ளிகளில் ஆசிரியர் பணியில் சேருவதற்கு லட்சக்கணக்கில் செலவழிக்கவேண்டிய அவல நிலையும் அதிகரித்து வருகிறது. கல்வி, சேவை என்ற நிலையை விட்டு வணிகம் என்ற குழிக்குள் விழுந்ததுமே அரசுப்பள்ளிகளின் வீழ்ச்சி திட்டமிட்டு உருவாக்கப்பட்டுவிட்டது என்று உறுதியாக சொல்லலாம்.

அரசுப்பள்ளிகள் தடுமாற பல காரணங்கள் இருக்கின்றன. அவற்றைப்பற்றி எழுதத் தொடங்கினால் நெடுங்கதையாக நீளும்.

******

இந்த வாரிசுகள் தொல்லை தாங்க முடியலைப்பா. சினிமாவுலயாச்சும் பிடிக்காத முகம்னு தெரிஞ்சா தியேட்டர் இருக்குற ஏரியா பக்கமே போகாம ஒதுங்கிடலாம். வாரிசு அரசியல்வாதின்னா எதுவும் பண்ண முடியலையேன்னு புலம்பிகிட்டே ஒதுங்கிடலாம்.

ஆனா வாரிசு டாக்டருங்களால மக்களுக்கு நேரடி ஆப்பு உச்சி மண்டையிலதான் இறங்கும். அதுக்காக நாம எந்த டாக்டர்கிட்டயாவது சிக்காமயும் இருக்க முடியாது.
வராத படிப்பை வா...வான்னு சொன்னா எப்படி வரும் என்று சில சினிமாக்களில் வசனம் வருவதுண்டு. பல டாக்டர்கள் கொள்ளை அடிச்சு சம்பாதிச்ச பணத்துல பத்துமாடியில ஆஸ்பத்திரியைக் கட்டிடுறாங்க.எனக்கு பழக்கமான ஒரு டாக்டரோட பையன் மேனேஜ்மெண்ட் துறையில சாதிக்கணும்னு ஆசைப்பட்டான். அவன் பிளஸ் ஒன் சேரும்போதும் எவ்வளவோ கத்தினான் கதறுனான். ஆனா அவனோட அப்பா விடலையே. இருபது லட்ச ரூபாய் டொனேஷன் கொடுத்து ஒரு தனியார் கல்லூரியில அவனை மருத்துவப்படிப்புல சேர்த்துவிட்டார்.

இவனாச்சும் ஏதோ படிச்சுகிட்டு இருக்கான்னு நினைக்குறேன். எங்க ஊருலேயே இன்னொரு டாக்டர். அவரோட பையனோட கெப்பாசிட்டி என்னன்னு எனக்கு இது நாள் வரை தெரியாது. ஆனா அவரோட பையன் மருத்துவக்கல்லூரியில நாலு பாடத்துல அரியர் வெச்சதால அவனை பாஸ் போட சொல்லி லட்சக்கணக்குல லஞ்சம் கொடுக்கும்போது மாட்டிக்கிட்டாருன்னு பேப்பர்ல படிச்சதும் அவனோட லட்சணம் புரிஞ்சுடுச்சு.

என்ன கொடுமை சார் இது.

நாளிதழில் வெளிவந்த விடைத்தாள் மோசடி பற்றிய செய்தியைப் படிக்க இங்கே கிளிக்கவும்.

பிளஸ் டூ தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவர்கள்.

இன்று தமிழ் நாட்டில் பிளஸ் டூ ரிசல்ட் வெளிவந்திருக்கிறது. சிறப்புத் தமிழ்  பாடத்தில் திருவாரூர் மாணவி முதலிடம் பெற்றிருக்கிறார். பூந்தோட்டம் அரசு மேல் நிலைப் பள்ளியில் படித்த மாணவன் மாவட்ட அளவில் சிறப்பிடம் பெற்றதும் நாங்கள் பெருமைப் படத்தக்க விஷயமாகும்.


வெள்ளி, 23 ஏப்ரல், 2010

உலக புத்தக தினம்-ஏப்ரல் 23-கரணின் கந்தாவுக்கும் எனக்கும் என்ன சம்மந்தம்?

இந்தப் படத்தின் இயக்குனரான பாபு.K.விஸ்வநாத் திருவாரூரைச் சேர்ந்தவர். அவரது இயற்பெயர் பாபுகாமராஜ். அவரது தந்தை இரா.விஸ்வநாதன் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர். எழுத்தாளர்.பதினேழு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு சில வாரப்பத்திரிகைகளில் திருவாரூர்பாபு என்ற பெயரில் பாபுகாமராஜ் எழுதிய கதைகளைப் படித்தபோது இவரை யார் என்றே தெரியாது.(இப்போதும் அவருக்கு என்னைத் தெரியாது.) ஆனால் அப்போதே எனக்கு கதைகள் எழுத வேண்டும் என்ற ஆர்வம் வந்துவிட்டது.
திருவாரூர்பாபு எழுதிய "காத்திருக்கிறார்கள்" என்ற சிறுகதைத் தொகுப்பைப் படித்தேன். 15.08.1947க்கு முன்பு மழைபெய்யும் இரவில் சுதந்திரப்போராட்ட கலகம் நடந்துகொண்டிருக்கும் நேரத்தில் ஒரு கிராமத்துப் பெண்மணி பிரசவ வலியால் நடுவழியில் அவதிப்படுவாள். அப்போது அந்த வழியாக வரும் ஆங்கிலேய அதிகாரி, தான் காரை விட்டு இறங்கிக்கொண்டு கர்ப்பிணியை தன்னுடைய காரில் மருத்துவமனைக்கு ஏற்றி அனுப்புவார். நல்லபடியாக மருத்துவமனையில் அந்த கர்ப்பிணிக்கு குழந்தை பிறக்கும்.

கதையில் அடுத்த பகுதி, அந்த கர்ப்பிணியின் பேரனுக்கு திருமணமாகி அவன் மனைவியும் நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும்போது இதே மாதிரியான ஒரு சிக்கல். இது 15.08.1947க்குப் பிந்தைய காலமாயிற்றே.(முழு சுதந்திரம் கிடைத்திருக்கிறதா என்ற சந்தேகம் எனக்கு இருக்கிறது.) மதக்கலவரம் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பதால் இந்த கர்ப்பிணியால் மருத்துவமனைக்குச் செல்ல முடியாத நிலை.

அப்போது அந்த வழியாக வந்த போலீசார், நிலைமையைக் கேட்டுவிட்டு, "சரி...எதாவது வண்டி வந்தா போங்க." என்று சொல்லிவிட்டு நாகரிகமாக(?!) சென்றுவிடுவார்கள்.

அந்த கர்ப்பிணிப்பெண்ணும் அவள் குடும்பத்தாரும் எதாவது வாகனம் வருகிறதா என்று காத்திருக்கிறார்கள் என்று கதை முடியும்.

அந்த சிறுகதைத் தொகுப்பில் மற்றொரு கதையும் என்னை மிகவும் கவர்ந்தது. அதற்குக் காரணம், அந்தக் கதை எங்கள் ஊரில் 1995ம் ஆண்டு நடைபெற்ற உண்மைச்சம்பவம் ஒன்றை மையமாக வைத்து எழுதப்பட்டிருந்தது. திருவாரூர் பாபு எழுதிய இந்தக் கதையின் முடிவு மிகவும் எதார்த்தமாக இருந்தது. இந்த கதைக் கருவை இன்னும் சிறப்பாக கையாண்டிருக்கலாமே என்று யோசித்தேன். கதாபாத்திரங்கள், சம்பவங்கள் என்று அனைத்திலும் நான் வேறு பல மாற்றங்களுடன் என் மனதுக்குத் தோன்றிய நடையில் குறுநாவலாக எழுதி மாலைமதிக்கு அனுப்பினேன்.

அதுவும் பிரசுரமானது. ஆனால் தூரம் அதிகமில்லை வெளிவந்த இதழை மட்டும் நான் படிக்கவில்லை. கிட்டத்தட்ட மூன்று மாதங்களுக்குப் பிறகு குமுதத்தில் இருந்து 300 ரூபாய்க்கான காசோலை வந்த பிறகுதான் அந்த மாலைமதி இதழைத் தேடி அலைந்தேன். திருவாரூரில் உள்ள பத்திரிகை நிருபர்கள், முகவர்கள் ஆகியோரில் பலர் எனக்கு நண்பர்கள்தான். குமுதம் குழும பத்திரிகைகளின் முகவரிடம் தேடியும் இந்த இதழ் கிடைக்கவில்லை. பிறகு வாடகை நூல் நிலையம் நடத்தும் ஒரு நண்பரிடம் தேடி இந்தப் புத்தகத்தைக் கண்டுபிடித்தேன்.

அந்த காசோலையை வசூலிப்பதற்காகத்தான் வங்கிக்கணக்கையும் ஆரம்பித்தேன்.

கந்தா படத்தின் இயக்குனர் படித்த கல்லூரியின் வணிகவியல் துறையில்தான் நானும் படித்தேன்.(திரு.வி.க கல்லூரியின் வணிகவியல் துறையில் படித்த எனக்குத்தெரிந்த மற்றொரு பத்திரிகை ஆசிரியர் 'குமுதம்' ப்ரியா கல்யாணராமன்.)சுதந்திரப்போராட்ட தியாகியான திருவாரூர் பாபுவின் தந்தை இரா.விஸ்வநாதன் என் தந்தையின் டீக்கடையில் நான் இருக்கும்போது அடிக்கடி வருவார். சாத்வீகமான அவரது தோற்றமே எழுந்து நின்று மரியாதை செலுத்தத் தோன்றும். அப்படி நான் எழுந்து நிற்கும்போது "கல்லாவுல இருக்குற நீ இப்படியெல்லாம் எழுந்து நிற்கத்தேவையிலைப்பா."என்று அன்போடு கூறுவார்.அப்போது எனக்கு ஏழு வயதுதான் இருக்கும்.

பாபுவின் தந்தை திருவாரூரில் தட்டச்சுப் பயிலகம் நடத்தி வந்ததால் ஆரம்ப கால கட்டத்திலேயே பாபு, கதைகளை தட்டச்சுதான் செய்து அனுப்பியிருக்கிறார். பிறகு தமிழன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையில் வேலை செய்த அவர் இயக்குனர் சரணிடம் (சரவணன்) உதவி இயக்குனராக வசூல்ராஜா எம்.பி.பி.எஸ், ஜே.ஜே, இதயத்திருடன் (பட்டியலில் சில படங்கள் விடுபட்டிருக்கலாம்.) ஆகிய படங்களில் உதவி இயக்குனராக இருந்திருக்கிறார்.

ஆசிரியர், மாணவனுக்கு இடையே உள்ள உறவை மையமாகக் கொண்டு கந்தா படத்தை இயக்கியிருக்கும் அவர் தஞ்சாவூரைத்தான் கதைக்களமாக தேர்ந்தெடுத்திருக்கிறார். முதலில் காமெடிப் பகுதிக்கு வடிவேலுவை நடிக்கவைக்க முயற்ச்சித்திருக்கிறார்கள். கால்ஷீட் பிரச்சனையால் விவேக் நடித்திருக்கிறார்.

ஆனால் பாபு இயக்கிய படத்தைப் பார்ப்பதற்குள் அவரது தந்தை இரா.விஸ்வநாதன் அமரராகிவிட்டார்.

பாபு.K.விஸ்வநாத் அவர்களுடன் நேரில் பேசியது இல்லை. அப்புறம் ஏன் அவரைப் பத்தியும் படத்தைப் பத்தியும் மாங்குமாங்குன்னு எழுதி பப்ளிசிட்டி கொடுக்குறன்னுதானே கேட்குறீங்க? எல்லாம் ஒரே ஊர்க்காரருன்னு பாசந்தான். தசாவதாரம் படத்தில் பல்ராம்நாயுடுவிடம் ஒரு பையன் தன் பெயர் நரசிம்மராவ் என்று அறிமுகப்படுத்திக்கொண்டவுடன் ஆந்திராவா என்று வாஞ்சையாக கேட்பாரே அப்படித்தான் இதுவும்.
தூரம் அதிகமில்லை கதையின் அடுத்த ஐந்து அத்தியாயங்களை நான் பதிவேற்றம் செய்ய சற்று தாமதமாகும்போல் தெரிகிறது. வரும் ஞாயிறு, திங்கள் இரண்டு நாட்களும் சென்னையில் இருப்பேன். அதனால் ஏப்ரல் இறுதியில் மீதமுள்ள ஐந்து அத்தியாயங்களையும் பதிவேற்றுகிறேன்.
இன்று உலகபுத்தகதினம். வாசிக்கும் பழக்கம் என்னை மேம்படுத்தியுள்ளது என்று உறுதியாக சொல்ல முடியும். ஆனால் பாடப்புத்தகம் தவிர மற்றவற்றைப் படிக்கிறேன் என்று சொல்லும்போது அதனால் என்ன பிரயோஜனம் என்று கேட்கும் மக்கள் இன்னும் அதிகமாகவே இருக்கிறார்கள். பாடப்புத்தகத்தை கஷ்டப்பட்டு படிப்பவர்கள்தான் அதிகம். ஆனால் மற்ற நூல்களை இஷ்டப்பட்டு படித்தால் அவை நிச்சயமாக நம் முன்னேற்றத்துக்கு உறுதுணையாக இருக்கும் என்பது என்னுடைய கருத்து.

தூரம் அதிகமில்லை-குறுநாவல்