Search This Blog

வியாழன், 25 மார்ச், 2010

சாரி ஃபார் த டிஸ்டபன்ஸ்...(ஒரு குரூப்பாத்தான் அலையுறாய்ங்களோ?)

கையெழுத்து போட்டு சம்பளம் வாங்கும் அப்பாவி நடுத்தர வர்க்கத்தின் ஜனவரி, பிப்ரவரி சம்பளங்கள் வருமான வரிக்காகவே பெரும்பாலும் பிடிக்கப்பட்டு விடுவதால் மார்ச்சுவரிக்கே செல்லும் அளவுக்கு பொருளாதார நெருக்கடி இருக்கும் என்று சொல்வார்கள்.
இது பல ஆண்டுகளுக்கு முன்பே எனக்குத் தெரியும்.இப்போது என் கவனத்துக்கு வந்த விஷயமே வேறு.சில தினங்களுக்கு முன்பு நான் வீட்டில் இல்லாத நேரத்தில் என்னுடன் பள்ளியில் படித்த நண்பன் வந்து என்னுடைய புதிய செல்போன் நம்பர் அவனிடம் இல்லாததால் அம்மாவிடம் பேசியிருக்கிறான்."எனக்குத் தெரிஞ்ச கவர்மெண்ட் ஆபீஸ்ல தமிழ்-ஆங்கிலம் டைப் அடிக்கிற திறமையோட கம்ப்யூட்டரும் இயக்கத்தெரிஞ்ச ஆள் வேலைக்கு வேணும். உடனடியா இந்த ஆபீசுக்கு வர சொல்லுங்க."அப்படின்னு வேப்பிலை அடிச்சுட்டு போயிருக்கான்.

எங்க அம்மாவுக்கா, புள்ளைக்கு கவர்மெண்ட் வேலை கிடைக்கப்போகுதுன்னு சந்தோஷம். வீட்டுக்கு வந்ததும் என்கிட்ட சொன்னாங்க. எனக்கு மட்டும் இதுல எதோ ஒரு வில்லங்கம் இருக்குன்னு புரிஞ்சுடுச்சு.

போட்டித்தேர்வுல பாஸ் பண்ணினவங்களுக்கு கூட ஒழுங்கா வேலை கிடைக்குதான்னு தெரியலை. நான் பத்தாம் வகுப்பு, பனிரெண்டாம் வகுப்பு மதிப்பெண் பட்டியலை வேலை ஏய்ப்பு அலுவலகத்துல பதிவு பண்ணினதோட சரி. அதை புதுப்பிக்க கூட இல்லை. இப்படி எதாவது போஸ்டிங் போடுறதுன்னா கட்சிக்காரன்லேர்ந்து மேலதிகாரி வரைக்கும் பல லட்சம் பார்க்காம தண்ணியடிக்க மாட்டாங்கன்னு எனக்கு தெளிவா புரிஞ்சது.

அப்துல்கலாம் ஐயா சொன்னது இந்த மாதிரி கனவு இல்ல அப்படின்னு சொல்லி என் அம்மாவோட கனவை கலைச்சுட்டு மறு நாள் அந்த நண்பனை பார்க்கப்போனேன். எந்த ஒரு விஷயத்தையும் சுத்தமா தெரிஞ்சுக்காம நிராகரிக்கிற பழக்கம் எனக்கு கிடையாதே.

அந்த அரசு அலுவலகத்துல இருந்த ஆபீசரில் பலர் ஒரு விஷயத்தை சபிச்சுகிட்டுதான் இருந்தாங்க.

"ஒழுங்கா கையால எழுதி வேலையை முடிச்சுகிட்டு இருந்தோம். இந்த சனியனை (கம்ப்யூட்டர்) கொண்டு வந்து வெச்சு எங்க உயிரை எடுக்குறாங்க. இதுல சில ஆவணங்களை தமிழ்ல டைப் பண்ணி இந்த பைனான்சியல் இயருக்குள்ள மேலிடத்துக்கு அனுப்பியாகணும்."அப்படின்னு சொன்னார்.

அவ்வளவு வேலை பாக்கி இருந்தது. என்னுடைய திறமையை வெச்சு கணக்கு பண்ணி பார்த்தேன்.ஆறு மணி நேரம் ஒதுக்கி டைப் செய்தா  முப்பது வேலை நாள் தேவைப்படும்.

"எவ்வளவு சார் தருவீங்க.வேலையோட உறுதித் தன்மை எப்படி"ன்னு கேட்டேன்.

"இங்க வேலை பார்க்குற ஆபிசருங்க எல்லாரும் கொஞ்ச பணம் போட்டுதான் உங்களுக்கு சம்பளம் கொடுக்கணும். எங்களால வேலை செய்ய நேரம் இல்லாததால சேர்ந்து கிடக்குற வேலையைத்தான் உங்களை செய்ய சொல்லப் போறோம். இதுக்கு அட்டனன்ஸ் எதுவும் கிடையாது. உங்க வேலை திருப்திகரமா இருந்தா எங்க ஹெட் ஆபீசுல சொல்லி எதாவது வேலை வாங்கித்தர முயற்சி செய்வோம்." அப்படின்னு ரொம்ப அழகா பேசினார் அந்த ஆபிசர்.

எனக்கு விஷயம் புரிஞ்சுடுச்சு. அட்டனன்ஸ் இல்லாம போய் இவங்க இயர் எண்ட் பணிச்சுமையை நான் முடிச்சு கொடுத்தா அத்தோட கழட்டி விட்டுடுவாங்க. அடுத்த வருஷம் அடுத்த அடிமை சிக்காமயா போயிடும்னுங்குறது அவங்க எண்ணம்.

நான் ஒரு நாளைக்கு நூற்றைம்பது ரூபா கேட்டேன். ஆனா அவங்க ஐம்பது ரூபாய்க்கு மேல தரத் தயாரா இல்லை. நானும் அந்த அரசு அலுவலகத்துக்கு வேலைக்குப் போறதா இல்லை. அந்த துறை மட்டுமில்ல. எனக்கு தமிழ்-ஆங்கிலம் டைப், டேலி அக்கவுண்ட்ஸ் எல்லாம் தெரியும்னுங்குறதால வேற சில அரசு அலுவலகங்கள்லயும் கூப்பிட்டாங்க. எல்லாம் மார்ச்சு ஜூரம்தான்.

எனக்கு அவங்க மேல கோபம் இல்லை. வேலை பார்க்க வேண்டிய நாள்ல வேலை பார்க்க மனசில்லாம இருந்துட்டு வருஷக்கடைசி ஆனதும் தவிக்கிறதை புரிஞ்சுகிட்டேன். ஆனா கம்ப்யூட்டரை திட்டுன ஒரு அரசு ஊழியரை தேசியமயமாக்கப்பட்ட வங்கியிலயும் பார்த்திருக்கேன்.

சில பழமைவாதிங்க  புதுசா வந்துருக்குறதை கத்துக்கிட்டா கவுரவக் குறைச்சலா நினைக்கிறது உண்டு. வயசாயிட்டதால இயல்பா இருக்குற சில தயக்கம் காரணமா, இந்த இழவெல்லாம் இப்ப எதுக்கு. நாம இது நாள் வரை ஒழுங்காதான வேலை பார்த்துகிட்டு இருந்தோம்னு நினைச்சே சில மொள்ளமாறித்தனமெல்லாம் செய்துகிட்டு இருப்பாங்க.

இப்ப இரண்டு மாசத்துக்கு முன்னால நான் ஒரு இடத்துல பகுதிநேரப்பணிக்கு சேர்ந்துருக்கேன். அந்த நிறுவனத்துல பத்து வருஷமா பொழுதை ஓட்டிகிட்டு இருக்குற ஆளுங்க ரெண்டு பேர், அடிமட்ட வேலையா நினைக்குற போஸ்டிங்குக்கு வர்ற ஆளுங்களை எதுவும் சொல்றது இல்லை. கொஞ்சம் படிச்சுட்டு கம்ப்யூட்டர் அறிவோட வர்ற ஆளுங்களை சம்பளம் எதுவும் ஒழுங்கா கிடைக்காதுன்னு சொல்லி பயமுறுத்தி நாலே நாள்ல விரட்டிகிட்டே இருந்தாங்க.

அலுவலகத்தை எப்படியோ டெவலப் செய்திருக்கலாம். நானும் வளரணும், நிறுவனமும் வளரணும்னுங்குற கொள்கை என்னுடையது. ஆனா பலருக்கு அந்த எண்ணம் இல்லை. முதலாளி அல்லது மேலதிகாரியோட நான் நெருங்கிடுவேனோனுன்னு பயத்துல என்னைப் பத்தி நிறையவே வத்தி வெச்சுடலாம்னு முயற்சி நடந்துருக்கு. ஆனா நான் வேலைக்கு சேர்ந்த ரெண்டே நாள்ல வேட்டு வெக்கிற ஆளுங்களை கவனிச்சதுல அவங்க எந்த எந்த விஷயத்துல பிரச்சனை பண்ணுவாங்கன்னு புரிஞ்சுகிட்டு என்னோட நடவடிக்கைகளை அமைச்சுகிட்டதால  ஒண்ணும் பண்ண முடியாம தவிக்கிறாங்க.

ஆனா ஒரு விஷயம். இந்த மாதிரி ஆளுங்க வேலை செய்யுற இடத்தையும் உருப்புட விட மாட்டாங்க. கூட வேலை செய்யுறவனையும் காலி பண்றதுலயே கவனமா இருப்பாங்க.

வேலை பார்த்து செட்டிலாகணும்னு நான் இலக்கு நிர்ணயம் பண்ணியிருக்குறது சென்னை அல்லது கோவைதான்.பார்ப்போம். எந்த ஊர் கொடுத்துவெச்சிருக்குன்னு.

எல்லா ஊர்லயும் அரசு அலுவலகங்கள்ல இப்படி மார்ச் மாசம் வந்தா இளைய சமுதாயத்துக்கு ஆசை காட்டி ஒரு மாசம் புழிஞ்சு எடுத்து வேலை வாங்கிகிட்டு சொற்ப தொகையை கொடுத்து கழட்டி விட்டுடுறதுலயே குறியா இருக்காங்க.

பலருக்கு இந்த அனுபவம் இருக்கும். நான் எஸ்கேப். மறு வருஷம் என்ன செய்வாங்க.

"சாரி பார்த டிஸ்டபன்ஸ்...உங்களுக்கு தமிழ்ல டைப் அடிக்கத்தெரியுமா?...கவர்மெண்ட் வேலை கிடைக்க நான் ஏற்பாடு பண்றேன். அப்படின்னு அடுத்த ஆளைத் தேடுவாங்க. அவசரப்பட்டு ஏமாந்துடாதீங்கப்பா. அதுக்குன்னு எல்லாத்தையும் சந்தேகப்பட்டு ஒதுக்கிடாதீங்க. பார்த்து பக்குவமா நடந்துக்க வேண்டியது உங்க பொறுப்பு.

புதன், 24 மார்ச், 2010

விண்ணைத்தாண்டி வருவாயா, அங்காடித்தெரு - என் பார்வையில்...

என்ன இது ஒருத்தனையே காட்டி அறுத்துகிட்டு இருக்கானுங்க? விண்ணைத்தாண்டி வருவாயா படத்தைப் பார்த்து இப்படி கேட்டது வயதான பெண்மணி ஒருவர். நம்மில் பலருக்கு படம் என்றால் பழைய படங்கள் போல பெரிய குடும்பம் அல்லது இப்போதைய கே.எஸ்.ரவிக்குமார் படம் போல இருக்க வேண்டும் என்று மனதில் ஒரு பிம்பம் வைத்திருக்கிறோம்.
இப்போது காதலித்துக்கொண்டிருப்பவர்களும் காதலிக்க முடியவில்லையே என்று யோசிப்பவர்களும் பார்த்து ஃபீல் பண்ண வைத்தது வி.தா.வ படம். என்ன தொழில் செய்வது அல்லது என்ன வேலைக்குப் போவது (வேலையே கிடைக்காதவர்களுக்கு அது மட்டும்தான் பெரிய பிரச்சனை.) என்று நிறைய ஆண்கள் இன்று வரை தீர்மானமான முடிவு எடுக்காமல்தான் எதிலோ ஒட்டிக்கொண்டு இருக்கிறார்கள்.

பெண்களுக்கு திருமணம் அல்லது காதல் விஷயத்தில்தான் இந்த தடுமாற்றம் அதிகமாக இருக்கும் என்று நினைக்கிறேன்.(பெண்ணின் மற்ற விஷயங்களில் மட்டுமே கவனம் செலுத்தும் ...............................களைப் பற்றி நான் சொல்வதற்கில்லை.)

எங்க அப்பா உங்களைத்தான் கல்யாணம் பண்ணிக்கணும்னு சொன்னா நான் ரெடி. ஆனா நான் உங்களை விரும்புறதா சொல்ல மாட்டேன். என்று சொன்ன ஒரு பெண்ணை நான் பார்த்திருப்பதால் படத்தில் ஜெஸ்ஸியைப் பார்த்ததும் அதில் த்ரிஷா தெரியவில்லை. நிறைய பெண்களின் பிம்பமாகத்தான் பார்க்க முடிந்தது.

என்ன செய்யுறது...பத்து வயசுல இருந்து வேலை நேரம் போக கொஞ்சம் கொஞ்சம் படிப்புன்னு இருந்ததால ஊருல எவ்வளவோ பொண்ணுங்க இருந்தும் நான் ஏன் ..................யை லவ் பண்ணினேன்னு கேட்க மனசு ரெடியாகலை.

இந்த மாதிரி ஒரு பொண்ணு லவ் பண்றதுக்கு கூட கொடுப்பினை வேணும்.அப்படின்னு பலரையும் புலம்ப வெச்சதுதான் இந்த படத்தோட வெற்றி.

ஆனா அந்த பொண்ணு ஜெஸ்ஸியோட கேரக்டர்...சான்சே இல்லை.

இந்தப் படம் வசதியான மற்றும் மிடில் கிளாஸ் இளைஞர்கள் ஒரு வித ஆர்வத்தோடயும் வறுமைக்கோட்டு லெவல்லயும் அதுக்கு கீழயும் இருக்குற இளைஞர்கள் ஐம்பது வருஷத்துக்கு முன்னால காரைப் பார்த்தமாதிரியும்தான் இந்தப் படத்தைப் பார்த்திருப்பாங்க.

ஏன்னா இவங்க வாழ்க்கையில வர்ற காதல் மோதல் மாதிரியான விஷயங்களை நிறைய தமிழ்ப்படங்கள் மித மிஞ்சிய மேக்கப்போடதான் காட்டியிருக்கு.

அடுத்து ரிலீசாகப்போற அங்காடித்தெரு - ரங்கநாதன் தெருவுல இருக்குற பளபளப்பான கடைகளில் இருக்குற ஊழியர்களின் வலி நிறைஞ்ச வாழ்க்கையை சொல்லும்னு நினைக்கிறேன். பார்ப்போம்.
ஒண்ணு படம் வந்து பல நாளைக்கப்புறம் விமர்சனம் எழுதுற...இல்ல படம் ரிலீசாகுறதுக்கு முன்னால டிரெய்லர் விட்டுப் பார்க்குறன்னு சொல்லி திட்டாதீங்க. நாம நினைக்கிறத நினைச்ச நேரத்துல எழுதி இம்சை கொடுக்குறதுக்குதானே பிளாக் இருக்கு?

திங்கள், 22 மார்ச், 2010

நீண்...........ட இடைவேளைக்கப்புறம் பாக்யாவில் நான் எழுதிய கதை!

எத்தனையோ கதை எழுதி அனுப்பியிருந்தாலும் இந்தக் கதையை ஏன் சார் அவங்க பிரசுரம் செஞ்சாங்க?...கதையைப்படிச்சு முடிச்சதும் உங்களுக்கு எதாவது காரணம் தெரியுதான்னு பாருங்க.

கொடை வள்ளல் - ஒரு பக்க கதை

அழைப்பு மணியோசை கேட்டதுமே என் மனதில் குழப்பம்.

"இங்க குடி வந்து ரெண்டு நாள்தானே ஆகுது. வேண்டியவங்களுக்கு எல்லாம் இனிமேதான் முகவரியை தெரியப்படுத்தணும். அதுக்குள்ள யாரா இருக்கும்"என்று நினைத்துக் கொண்டே கதவைத்திறந்தேன்.

ஆறு நடுத்தர வயது ஆண்கள் காவியுடை, நெற்றியில் விபூதி குங்குமம், நோட்டீஸ், மஞ்சள் பை என்று நின்றதுமே, "இந்த மாதிரி ஆளுங்களோட தொல்லை தாங்காதே..."என்று மனதுக்குள்ளேயே முணுமுணுத்தபடி "என்ன விஷயம்?" என்றேன்.

ஒருவர் தன் பற்களை எல்லாம் என்னிடம் காட்டியே தீருவது என்ற முடிவுடன் ஒரு சிரிப்பையும் உதிர்த்துவிட்டு, "சார்...பத்து நாள்ல நம்ம தெரு அம்மன் கோயில் திருவிழா..."என்றவாறு நோட்டீசை என் கையில் திணித்தார். மற்றொருவர் ரசீதுப் புத்தகத்தில் எழுதத் தயாரானார்.

'என் மனைவிக்கு பக்தி அதிகம்னு இவங்களுக்கும் தெரிஞ்சிடுச்சா...பர்சை விட்டு பறந்துடுச்சுடா பெரிய தொகை' என்று நான் மனதுக்குள் அதிர்ந்த  நேரத்தில்தான் அந்த திருப்பம்.
"என்னங்க...நான் பேசிக்குறேன்..." என்று அருகே வந்த என் மனைவி,

"அய்யா...இந்த மாதிரி கோயிலுக்கெல்லாம் பணம் கொடுக்குறது என் வீட்டுக் காரருக்கு சுத்தமா பிடிக்காது. இருந்தாலும் வீடு தேடி வந்த உங்களை வெறும் கையோட அனுப்ப எனக்கு மனசில்லை. இந்தாங்க...இருபது ரூபாய்..."என்று அவர்களிடம் கொடுத்தாள்.

வந்தவர்கள் எதுவும் பேசாமல் பணத்தைப் பெற்றுக்கொண்டு ரசீது தந்துவிட்டுச் சென்றார்கள்.

'புது வீட்டுக்கு வந்ததும் என் மனைவி இப்படி மாறிட்டாளே' என்ற சந்தோஷம் எனக்கு. அவளிடமே என் சந்தேகத்தைக் கேட்டுவிட்டேன்.

"நீங்க ஏதேதோ கற்பனை பண்ணீக்காதீங்க. நான் அவங்களை இருபது ரூபாயோட அனுப்பக் காரணமே வேற. நேற்றே அந்தக் கோயிலைப் பற்றி விசாரிச்சுட்டேன். இங்க ரெகுலரா பூஜை செய்ய ஆள் கிடையாதாம். வருஷம் ஒரு முறை திருவிழாவுக்கும், தீபாவளி, பொங்கல் போன்ற நாட்களுக்கு மட்டும் ஒரு குருக்களை வெச்சு பூஜை செய்யுறாங்களாம். மற்ற நாட்களில் சரியா  விளக்கு கூட எரியுறது இல்லைன்னு சொன்னாங்க.

ஆனா இந்த ஆட்கள் ஒவ்வொரு வருடமும் வசூல் பண்ணி பட்டிமன்றம், இன்னிசை நிகழ்ச்சின்னு செலவழிக்கிறாங்களாம். இந்த மாதிரி வசூல் செய்த பணத்தை வெச்சு தினமும் ஒருகால வழிபாடு நடக்க ஏற்பாடு பண்ணின பிறகு பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் நடத்தினா பரவாயில்லை.

வருஷம் பூராவும் பட்டினி போட்டுட்டு ஒரே ஒரு நாள் விருந்து வைக்கிற செயலுக்கு நாம் ஏன் அதிகமா கொடுக்கணும்னு நினைச்சுதான் இருபது ரூபாயோட அனுப்பினேன். இந்த திருவிழா முடிஞ்ச பிறகு தினமும் வழிபாடு நடக்க கண்டிப்பா நான் ஏற்பாடு செய்வேன்...

அப்ப ஒரு பெரிய தொகையை நீங்கதான் தரணும்..." என்று என் மனைவி சொல்லி முடிப்பதற்குள் 'தடால்' என்று ஒரு சத்தம்...

என்னவோ ஏதோன்னு பயந்துடாதீங்க...நான் தான்  மயக்கம் போட்டு விழுந்துட்டேன்.
******
இந்தக்கதையை வழிபாடுன்னு தலைப்பு கொடுத்து அனுப்பியிருந்தேன். மார்ச் 25 ஏப்ரல் 1, 2010 பாக்யா வார இதழ்ல பிரசுரம் ஆகியிருக்கு. ஆனா வேற ஒரு புனைப்பெயர்ல.

ராட்டினத்தை சுத்துனா(கொசுவர்த்தியை ரொம்ப பேர் சுத்திட்டாங்க...இன்னும் சுத்திகிட்டே இருக்காங்க.நம்ம சித்ரா டீச்சரும் கிரைண்டரை சுத்திட்டாங்க.அதனால நான் ராட்டினத்தை சுத்துறேன்.) 2004 ஏப்ரல். பாக்யாவுல ஒரு கதை பிரசுரம் ஆகியிருந்துச்சு. அப்புறம் சில கதைகள் அனுப்பியிருந்தேன்.அவங்க கவனிக்கலை.அப்புறம் நான் வேற பத்திரிகைகள்ல அனுப்புன கதைகளுக்கு பரிசு கிடைக்க ஆரம்பிச்ச உடனே இந்த மாதிரி பத்திரிகைகளை நான் கண்டுக்கலை. ராட்டினத்தை நிறுத்தியாச்சுங்க. அவ்ளோதான் இப்ப இருக்குற மேட்டரு.