Search This Blog

வியாழன், 18 மார்ச், 2010

தோட்டா - விலை என்ன? ...........துறையின் சட்டையைப்பிடித்து ஒரு கேள்வி.

தொலைக்காட்சியில் நான் நிகழ்ச்சிகள் பார்க்கும் நேரம் மிகவு........ம் குறைவு. அப்படி நான் பார்த்த கலைஞர் தொலைக்காட்சியின்  நாளைய இயக்குனர் நிகழ்ச்சியில் என் கண்களில் சிக்கிய படம், என்னை அதிகமாக யோசிக்க வைத்த படம் "தோட்டா - விலை என்ன?" (தலைப்பில் வார்த்தைகள் இடம் மாறி இருக்கலாம். பொறுத்துக்கொள்ளவும். அல்லது சரியான வரிசையை தெரிவிக்கவும்.)
சாகும்போது ஒருவரின் கதறலைக் கேட்க விரும்பி பத்துப்பேரைக் கொன்று புதைத்திருக்கிறேன். என்று ஒரு இளைஞன் அந்த சத்தம் பதிவுசெய்யப்பட்ட டேப் ரெக்கார்டருடன் போலீசாரிடம் சரணடைகிறான்.அவனுடைய பேச்சு, நடவடிக்கை எல்லாமே ஒரு சைக்கோ கொலைகாரனைப்போல்தான் இருக்கிறது.

இதற்கிடையில் இந்த வழக்கை விசாரிக்கும் இன்ஸ்பெக்டரின் மகளும் பாட்டு கற்றுக்கொள்ள செல்லும்போது அப்பாவிடம் செய்யும் சிறு குறும்பால் பார்வையாளரின் மனதிலும் இடம்பிடிக்கிறாள்.

கொலை செய்த குற்றவாளியை நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லும்போது அந்த இளைஞன், "நீங்க கேட்குறதெல்லாம் ஒரு இசையா?...உயிர் போகும்போது ஒருத்தன் கத்துற கத்தல் இருக்கே...அதுக்கு எந்த இசையும் ஈடாகாது.அதனாலதான் பாட்டு பாடுறவங்களா பார்த்து கொலைசெஞ்சு புதைச்சேன்." என்று சொல்கிறான். இந்தக் காட்சியின் போது எனக்கும் அவன் மீது எரிச்சல்தான் வந்தது.

அவன் தொடர்ந்து,"இன்ஸ்பெக்டர்...உங்க வீட்டுல யாராவது பாட்டு கத்துக்குறவங்க இருக்காங்களா?"அப்படின்னு கேட்பான்.உடனே அவருக்கு பாட்டு கத்துக்கப் போறப்ப எக்ஸ்கியூஸ்மீ மிஸ்டர் கந்தசாமி பாடுன மகளோட நினைப்பு வந்துடும்.(நமக்கும்தான்.)இனிமே இவனை விட்டு வைக்க கூடாதுன்னு நினைச்சு அவனை ஜீப்புல இருந்து கீழ இறக்கி சுட்டுக்கொன்னுடுவார்.

இந்த மாதிரி ஆளுங்களை இப்படித்தான் போட்டுத்தள்ளணும். அப்படின்னு ஒரு எண்ணம்தான் இது வரை படம் பார்த்தவங்களுக்கு தோணும். எனக்கும் அப்படித்தான்.

ஆனா படத்துல முக்கிய திருப்பமே இனிமேதான்.என்கவுண்ட்டர் செய்த இன்ஸ்பெக்டருக்கு போன் வருது. அதுல பேசுறது, அந்த பத்து பிணங்களை பரிசோதனை செய்த டாக்டர்.

"கேன்சர் உட்பட பல காரணங்களால இயற்கையா மரணமடைஞ்ச பத்துபேரோட உடல்கள்தான் அவை. இவங்க கொலை செய்யப்பட்டிருக்க சான்சே இல்லை. அவன் ஏன் இப்படி கொலை செய்ததா பொய் சொல்லி சரணடைஞ்சான்னு தெரியலை. நல்லா விசாரிங்க சார். அவசரப்பட்டு அவனுக்கு தண்டனை வாங்கித்தந்துடாதீங்க.டீடெய்ல்டு ரிப்போர்ட் சீக்கிரம் தந்துடுறேன்."

இதுதான் அந்த டாக்டர் பேசின விஷயம்.இப்போ அதிர்ச்சி அடையுறது இன்ஸ்பெக்டர் மட்டுமில்ல...நாமும்தான்.

இந்தக் காட்சிக்குப்பிறகு போலி என்கவுண்ட்டரில் கொலைசெய்யப்பட்ட இளைஞனின் வாக்குமூலமாக அடுத்த காட்சி வீடியோவில் வருகிறது.

"இந்த வீடியோவை நீங்க பார்க்குறீங்கன்னா என்னைய போலி என்கவுண்ட்டர்ல என்னைய போட்டுத்தள்ளிட்டாங்கன்னு அர்த்தம்.ஏற்கனவே இது மாதிரி போலியான என்கவுண்ட்டர்ல என் அண்ணனை இழந்தேன். அதனால மனித உரிமைகளுக்காக உயிரைக்குடுத்துப் போராடுற போராளிதான் நான்.

இதுக்காகவே ரொம்ப சிரமப்பட்டு நான் குற்றவாளின்னு நம்பவைக்கிற மாதிரி போலி ஆதாரங்களை உருவாக்கியிருக்கேன். இந்த வழக்கை போலீஸ் உணர்ச்சிவசப்படாம நேர்மையா விசாரிச்சா நான் குற்றவாளி இல்லைன்னு சுலபமா கண்டுபிடிச்சுருக்கலாம். ஆனா அதுக்கெல்லாம் போலீஸ்காரங்க தயாரா இல்லைன்னுங்குறதை  என் உயிரைக் கொடுத்து உங்களுக்குப் புரிய வெச்சிருக்கேன்." இது தவிர இன்னும் சில விஷயங்களை அந்த இளைஞன் பேசுவதுடன் அந்த வாக்குமூலம் முடியும்.

இதைப் பேசி முடித்ததும் அந்த இளைஞனின் முக பாவம் இன்னும் என் மனதை விட்டு அகலவில்லை.எதையோ இழந்தது போன்ற உணர்வு.அந்த இயக்குனர் ஐந்து நிமிடத்தில் இப்படி ஒரு அழுத்தமான படம் கொடுத்தது நான் எதிர்பார்க்காத ஒன்று.
******
இந்த நிகழ்ச்சி இன்று 18 மார்ச் 2009 இந்திய நேரப்படி இரவு 10.30 மணிக்கு மறு ஒளிபரப்பாகும்.
******
இப்போது என் மனதில் தோன்றிய எண்ணங்கள்.கொலை, தற்கொலை போலவே மிகவும் மடத்தனமான ஒன்றுதான் இந்த என்கவுண்ட்டரும்.
சட்டத்தில் கடுமையான விதிகள் குற்றவாளிகளை இறுக்கிப்பிடிக்கவும் நியாயமான பார்வை அப்பாவிகளைக் காப்பாற்றவும் என்று நினைத்தே உருவாக்கப்பட்டன. ஆனால் நடப்பது என்ன? சட்டத்தில் உள்ள ஓட்டைகள் தொழில்முறை குற்றவாளிகள் தப்பிக்கவும், சட்டத்தில் உள்ள கடுமையான விதிமுறைகள் அப்பாவிகளை செய்யாத குற்றங்களை சுமத்தி சிக்கவைக்கவும் மட்டுமே அதிகமாகப் பயன்படுகின்றன.

கடுமையான குற்றம் செய்பவர்களை இப்படி தண்டித்தால்தானே பயம் இருக்கும் என்று நீங்கள் சொல்லலாம்.அந்த ரவுடிகள் இப்படி வளர முக்கியக் காரணமாக இருப்பதே சில அரசியல்வாதிகளும் சில காவல்துறை அதிகாரிகளும்தானே. அதிலும் பல என்கவுண்ட்டர்கள், இந்த ரவுடிகளை கோர்ட்டில் நிறுத்தினால் தாங்கள் சிக்கிக்கொள்வோமே என்ற பயத்தில் அரசியல்வாதிகள் செய்யச்சொல்வதால்தான் அரங்கேற்றப்படுகின்றன.

வல்லரசு படத்தில் ஒரு வசனம் வரும். மன்சூர்அலிகான் பேரணிக்கு அனுமதி கேட்கச் செல்லும் போது அத்தனை பேரை வெட்டுனேன். இத்தனை பஸ்சைக் கொளுத்தினேன்னு சொல்லிகிட்டே போவார்.  அவரை அடிச்சு துவைக்கும் விஜயகாந்த்,"நீ ஜாதி பேரை சொல்லி ஒரு பஸ் மேல கல்லை வீசுனப்பவே லோக்கல் ஸ்டேஷன்ல இருந்த கான்ஸ்டபிள் உன் கையை உடைச்சுருந்தா நீ இந்த அளவுக்கு ரவுடியா மாறி இருக்க மாட்ட." என்று பேசும் வசனம் நூறு சதவீதம் உண்மை என்பது என் கருத்து.

பல நாடுகளிலும் மரண தண்டனையை முற்றிலும் நீக்கியிருக்கும்போது, அரசியல் ஆதாயத்துக்காக மட்டுமே இங்கே என்கவுண்டர் என்ற பெயரில் போலி முகமூடிக்குப்பின்னால் படுகொலைகள் அரங்கேறிக்கொண்டிருக்கின்றன. அந்தக்காலத்தில் கூட பல கைதிகளை வைத்து கோயில்கள், அணைகள், குளங்கள், ஏரிகள், கண்மாய்கள் ஆகியவற்றை உருவாக்கியிருக்கிறார்கள்.

இப்போதும் இப்படி கடுமையான தண்டனை கொடுக்கப்படவேண்டிய குற்றவாளிகளை ஏன் இப்படி ஆக்கப்பூர்வ பணிகளுக்கு பயன்படுத்திக்கொள்ளக்கூடாது?...அவர்கள் தண்டனைக்காலம் முடிந்து மீண்டும் குடும்பத்துடன் சேர்ந்து வாழவே முடியாது. ஆயுளுக்கும் இப்படி பொதுப்பணியில் இருந்தே காலம் கழிக்கவேண்டும் என்று ஒரு நிலை இருந்தால் தொடர்ச்சியாக குற்றம் செய்ய ரவுடிகளுக்கு மனம் வருமா? சிறையில் முதல்வகுப்பு,....................ர் வகுப்பு என்று இருப்பதையே நீக்க வேண்டும்.
காலத்தை இழந்தால் கூட நாம் பெற வேண்டிய எதோ ஒன்று தள்ளிப்போகும். ஆனால் உயிரை எடுத்துவிட்டால் பிறகு எந்த சூழ்நிலையிலும் அதற்கு மாற்று என்பது கிடையவே கிடையாது.

இது என்னுடைய கருத்து.இதில் உடன்பாடு இல்லாதவர்கள் என்னைத் திட்டாமல் அவர்களின் கருத்தை அவரவர் வலைப்பூவில் பதிவாக வெளியிடக்கோருகிறேன்.

வெள்ளி, 12 மார்ச், 2010

மழை நீர் சேகரிப்பு - சில வழிமுறைகள்

 மழை நீர் சேகரிப்பு முறையை வெற்றிகரமாக செய்து தரும் பொறியாளர் ஒருவர் திருவாரூரில் இருக்கிறார். நான் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படிக்கும்போது கல்லூரி ஆண்டு மலரில் அவரது பேட்டியை இடம்பெறச் செய்தோம்.
  அவரை நேர்காணல் செய்வதற்கு என்னால் செல்ல இயலவில்லை. ஆனால் பேட்டி எடுக்கச் சென்று வந்தவர்கள் கிறுக்கிக்கொண்டு வந்ததை தொகுத்து அச்சுக்கு அனுப்பினேன்.

அந்தப் பக்கங்கள் உங்களுக்காக.

படங்களின் மீது கிளிக் செய்து பெரியதாக்கி படிக்கவும்.
******

இந்த ஒளிப்படத்தில் இருப்பது 2002-2003ம் வருஷம் கல்லூரி ஆண்டு மலரின் ஆசிரியர் குழுவினர். தமிழ்ப்பேராசிரியரும் நானும் மட்டுமே 95 சதவீத வேலைகளைக் கவனித்தது வேறு விஷயம்.


புதன், 10 மார்ச், 2010

நித்தியானந்தா நீலப்படமும் ஷோலே திரைக்காவியமும்

'ஏய்யா பையை வெச்சிட்டு வந்துட்டியே அது தனியா மெட்ராஸ் வருமா?' இந்த வசனத்தைப் பற்றி சொல்லும்முன் ஷோலே படம் பற்றி பேசி விடுகிறேன்.

வாடகை கொடுத்து தினசரி ஒரு காட்சிகாளாக ஒரு படத்தை ஆளில்லா தியேட்டரில் காட்டிவிட்டு திரையுலக வரலாற்றுச் சாதனை என்று சொல்பவர்கள் "பணம் கொடுத்து படம் பார்க்க வர்றவனுங்க தப்பிச்சாச்சு.சம்பளம் வாங்குறதால நான்தான் மாட்டிகிட்டேன்."அப்படின்னு கதறுற ஆப்ரேட்டர்களோட குரலையும் கொஞ்சம் கேட்டால் தேவலை.

இப்படி எல்லாம் இல்லாம மெய்யாலுமே சாதனை பண்ணின ஹிந்திப்படம்தான் ஷோலே. திருவள்ளுவரே கதறுற மாதிரியெல்லாம் அவங்க தமிழ் பேசலை. நேரடி ஹிந்திப்படமாவே ரிலீஸ் ஆனாலும் பள்ளிக்கூடத்தின் பக்கமே ஒதுங்காதவங்க கூட அவ்வளவு ஆர்வமா பார்த்தாங்க.

ஆனா எனக்கு இந்தப்  படத்தைப் பார்க்குற வாய்ப்பு 1997ல தான் கிடைச்சுது.(வழக்கம்போல நான் தியேட்டர்ல வேலை பார்த்தது பத்தின புராணம்தான் இது. கொஞ்சம் பொறுத்துக்குங்க.) இருபத்துமூணு ரீல் கொண்ட படம்.ஒரே டிக்கட்டில் இரண்டு படங்கள் அப்படின்னு விளம்பரம் பண்ணலாம். அந்த அளவுக்கு நீ.............ளமானது.

புரொஜக்டர் அறையிலதான் எனக்கு வேலைன்னுங்குறதால சென்சார் சர்ட்டிபிகேட்ல இருந்து முழுப்படத்தையும் பார்த்துடுறது வழக்கம்.1975 ம் வருஷம் ஆகஸ்ட் 22ம் தேதி ரிலீசானதுன்னு நினைக்கிறேன். தேதி தவறா இருக்கலாம்.ஆனா வருஷம் இதுதான்.

இப்ப எதுக்கு இந்த புள்ளி விவரம்னுதானே கேட்குறீங்க.இப்ப எவ்வளவோ நாகரீகம் வளர்ந்துருக்குன்னு சொல்றோமே...இந்தப் படத்துல நான் ரொம்பவும் பிரமிப்போட கவனிச்ச ஒரு காட்சி இப்ப நினைவுக்கு வரக்காரணம் நித்தியானந்தா வீடியோ விவகாரத்துல சில ஊடகங்களின்  கேவலமான அணுகுமுறைதான்.
ஷோலே படத்தில் ஒரு போலீஸ் அதிகாரியின் குடும்பத்தையே வில்லன் அம்ஜத்கான் அழிப்பதாக காட்சி வரும்.பெரியவர்கள் சிலரை அவர் சுட்டுக்கொன்றதும் சிறுவன் ஒருவன் அங்கே ஓடி வருவான். அப்போது துப்பாக்கியை வைத்து அம்ஜத்கான் குறி பார்ப்பார். விசையை அழுத்து நொடி, நீராவி ரயில் எஞ்சினின் சக்கரம் சுழலுவதும்  இரைச்சலான சத்தத்துடன் நீராவி வெளியேறுவதும்தான் காண்பிக்கப்படும்.

இந்தப் படத்தை நான் திரையிட்டும் பதினாலு ஆண்டுகள் ஆகின்றன.இவ்வளவு நாட்கள் கழித்தும் இந்தக் காட்சி என் மனதில் நிற்கிறது. ஆனால் எவ்வளவோ படங்களில் மிக மோசமான ரத்தக் காட்சிகளைப் பார்த்தும் அவை அந்த நேரம் கூட ஒழுங்காக பதற வைக்கவில்லை.
இயக்குனர் மகேந்திரன், நானும் சினிமாவும் என்ற புத்தகத்தில் "எதார்த்தத்தைக் காட்டுகிறேன் என்று சில இயக்குனர்கள் அருவருக்கத்தக்க காட்சிகளைப் படமாக்குகிறார்கள் என்று வருத்தப்பட்டிருந்தார். கிராமங்களில் புதர் மறைவில் மக்கள் ஒதுங்குவதும் இயற்கைதான். அந்த இயக்குனரின் தாய்-தந்தை கூடுவதும் இயற்கைதான். அதற்காக அவற்றை அப்படியே படமாக்க முடியுமா?" என்ற கேள்வியை எழுப்பியிருந்தார்.இதையேதான் நானும் கேட்கிறேன்.
கிழக்கே போகும் ரயில் படத்தில் மகன் அவமானப்படுத்தப்பட்டதால் பாதிக்கப்பட்ட தந்தை, கத்தியுடன் தண்ணீரில் மூழ்குவார். வெளியே அவரது உடல் வராது. தண்ணீரில் ரத்தம் மட்டும் கொப்பளிக்கும். இந்தக் காட்சியும் நம்மை பதற வைத்ததுதான்.

என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு படத்திலும் தண்ணீரில் மூழ்கி இறந்த  குழந்தையை காட்டாமல் பொம்மை மிதப்பதைதான் காட்டுவார்கள்.இது போல் எவ்வளவோ உதாரணங்கள் சொல்லலாம்.

சுனாமியில் லட்சக்கணக்கான மக்கள் மடிந்திருந்தாலும் மும்பை இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையில் பணியாற்றிய ஒரு புகைப்படக்கலைஞருக்கு விலை உயர்ந்த கேமராவையும் கிட்டத்தட்ட ஐந்தரை லட்ச ரூபாய் பரிசையும் பெற்றுத்தந்த ஒளிப்படம் எது தெரியுமா?
வேறு யாருமில்லாத கடற்கரையில் மண்டியிட்டுக் குனிந்து கதறும் பெண்மணி. அவரின் அருகில் பிரேமின் ஓரத்தில் ஒரு சடலத்தின் கை மட்டும். ஒட்டு மொத்த சுனாமியின் அவலத்தை செய்தி சேனல்களில் வந்த லட்சக்கணக்கான சடலங்களைக்காட்டிலும் இந்த ஒரு ஒளிப்படம் சொன்னது.

மக்களுக்கு துயரத்தையோ ஒரு விஷயத்தையோ உணர்த்த வேண்டும் என்று அவ்வளவு அசிங்கங்களையும் அள்ளித் தெளித்தால் அது வெறும் வியாபார உத்திதான் என்பது அனைவருக்கும் தெரியும்.

படங்களில் மோசமான காட்சிகள் இடம்பெற்றாலும் அவற்றை தியேட்டருக்குச் சென்றுதான் பார்ப்போம்.அருவருக்கத்தக்க காட்சிகள் தொலைக்காட்சியில் வந்தாலும் வேறு சேனல் மாறி விடுவோம். ஆனால் எல்லாரும் பரிந்துரைக்கும் சேனல் என்றால் டிஸ்கவரி, நியூஸ் சேனல் பாருங்கள் என்பதுதான். தமிழகத்தைப் பொறுத்த வரையில் அதிக அளவில் அனைவரும் பார்க்கும் செய்தி சேனல் ஒன்றில் சாமியாரின் லீலைகளை அம்பலப்படுத்துகிறேன் என்ற போர்வையைப்போர்த்திக்கொண்டு கண்ணியமான பெற்றோர்களை இப்படி அலற விட வேண்டுமா என்பதுதான் என் கேள்வி.

பொங்கல் அன்று குருவி படத்தை திரையிட்ட கலைஞர் தொலைக்காட்சியில் நான் ஒரு விஷயத்தைக் கண்டு ஆச்சர்யப்பட்டேன். சண்டைக் காட்சிகளில், அரிவாள் வெட்டு வரும்போது எல்லாம் காட்சிகள் கருப்பு வெள்ளையாகிவிடும்.படத்திலேயே இப்படியா அல்லது சேனலில் செய்த நல்ல காரியமா என்பது தெரியவில்லை.

விஜய் நடித்த கில்லி படத்தில் அவர் த்ரிஷாவுடன் மதுரையில் இருந்து முதலில் தப்பிக்கும் காட்சியில் டாடா சுமோ சேசிங் எடுக்கும்போது ஒரு வாகனம் மோதி படத்தின் கேமராமேன் கோபிநாத் படுகாயமடைந்ததாக எல்லாம் செய்திகள் வெளியானது. அந்தக் காட்சிகளில் என் கவனத்தைக் கவர்ந்தது இரண்டு ஷாட்டுகள்.

ராஜா என்ற ஸ்டண்ட் நடிகர் (மக்கள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சந்தனக்காடு தொடரில் வீரப்பனின் கேரக்கடரில் நடித்தவர். அந்த வேடத்திற்கு மிகவும் கச்சிதமாகப் பொருந்தினார்.இதைப்பார்க்கவில்லையா நீங்கள். போக்கிரி படத்தில் வடிவேலுவின் 'வட போச்சே' காமெடியில் காதலி கெ ளரி எழுதிய கடிதத்தை இழப்பாரே அவர்தான்.) ஏற்கனவே சுமோ ஓட்டிச் செல்லும் ஒருவரை எட்டி கீழே உதைத்துத் தள்ளிவிட்டு இவர் ஓட்டுனர் இருக்கையில் அமர்ந்து கதவை சாத்திக்கொண்டு தொடர்ந்து வாகனத்தை இயக்கும் ஷாட் ஒன்று.

அந்த சுமோவை ஆட்டு மந்தைக்குள் விடும் காட்சியில் ஆட்டின் மீது கார் ஏறும் காட்சியைக் காட்டாமல் முன் பக்க கண்ணாடி முழுவதிலும் ரத்தத்தைக் காட்டுவதோடு, அதை வைப்பர் துடைப்பதாக காட்டுவார்கள்.

சன் தொலைக்காட்சியில் முன்பு கில்லி படத்தை ஒளிபரப்பும்போது ரத்தத்தை வைப்பர் சுத்தம் செய்யும் ஷாட்டை நீக்கியிருந்தார்கள். அவ்வளவு கவனமாக இருந்தவர்கள் நித்தியானதா தொடர்பான காட்சிகளை அருவருக்கத்தக்க வகையில் காட்டியதாக சிலர் கூறும் குற்றச்சாட்டுகளுக்கு என்ன பதில் சொல்லப்போகிறார்கள்.(நாலு ஆட்டோவுல இருபது பேர் உருட்டுக்கட்டையோட வந்து பதில் சொல்லாம இருந்தா சரிதான்.)

எங்க வீட்டுல கேபிள் இணைப்பை துண்டிச்சு ஒரு வருஷமாச்சு.இப்ப சாதாரண டி.டி.ஹெச் இணைப்பு மட்டும்தான். பொதிகை, மக்கள், மெகா, கலைஞர் - இவை மட்டுமே தமிழ் சேனல்கள்.நம்புங்கப்பா.

*******
அடுத்து வெட்டித் தனமா ஒரு தகவல்.

மௌன கீதங்கள் படத்தில் முதல் காட்சியில் பஸ் வந்து நிற்கும். பாக்யராஜ் சூட்கேசுடன் பஸ்சில் ஏறுவார்.அவருடைய லெதர் பேக் கீழே இருக்கும். டைரக்டர் பேக்கை மறந்து விட்டார் என்பது புத்திசாலி ரசிகரின் புளகாங்கிதம். ஆனால் படத்தில் கண்டக்டர் பாக்யராஜிடம்,'ஏய்யா பையை வெச்சிட்டு வந்துட்டியே அது தனியா மெட்ராஸ் வருமா?'  என்று கேட்பார். அசடு வழிய அதை எடுத்துக்கொள்வார் பாக்யராஜ். அசடு ஹீரோதானே தவிர டைரக்டர் அல்ல என்று உணர்த்தி ரசிகர்களை அமைதியாக படம் பார்க்கச் செய்துவிடுவார். ரசிகர்களுடன் கண்ணாமூச்சு ஆடும் இந்த டெக்னிக்கை அடிக்கடி பயன்படுத்துவார், பாக்யராஜ்.

******
ஷோலே படத்தை 1997ல் நாங்கள் மீண்டும் திரையிட்டபோது இருபத்து மூன்று ரீல் ரொம்ப அதிகம்னு நினைச்சு சில காட்சிகளை தவிர்த்து திரையிட்டோம்.படம் பார்க்க வந்திருந்த ஆளுங்க,"என்னப்பா, ஹேம மாலினி மாங்கா தோப்புக்குள்ள மாங்கா பறிக்க போன காட்சியை காணோம்...நீ சாப்பிட்டு ஏப்பம் விட்டுட்டியா?"அப்படின்னு நீக்கிய காட்சிகளை ரொம்ப ஞாபகமா கேட்டாங்க.அதுக்கு இருபத்தி ரெண்டு வருஷத்துக்கு முன்னால திரையிட்ட படம். இந்த அளவுக்கு காட்சிகள் படம் பார்த்தவங்க மனசுல பதிஞ்சது.ஆனா இப்ப ஒரு படம் பார்த்தா அது எந்தப் படம்னு நினைவுக்கு கொண்டுவரவே வல்லாரை கீரை சாப்பிட வேண்டியிருக்கு. அது சரி...ஒரு படத்துல இருந்து சுட்டா நம்மால கண்டுபிடிக்க முடியும்.டைரக்டருங்க சின்ன வயசுல இருந்து பார்த்த எல்லா படத்துல இருந்தும் சுட்டு சுட்டு படம் எடுத்தா இப்படித்தான்.