Search This Blog

வெள்ளி, 12 பிப்ரவரி, 2010

திருவாரூரில் திருவிழா - தொடர்கதை - 5

"அட லூசு..."என்று சந்தியா பேச ஆரம்பித்ததும் "இவ என்ன அரசாங்க ரகசியத்தை எல்லாம் வெளியில சொல்லுறா?"என்ற சிந்தனை வெற்றியின் மனதில் ஓடியது.

"நான் உன்னைய 'அத்தான்' அப்படின்னு கூப்பிட்டு வழியணும்னு நீ ஆசைப்படுறது நல்லாவே தெரியுது.அந்த ஆசையை எல்லாம் ஓரங்கட்டிடு.நியாயமா பார்த்தா உன்னைய பொறுக்கி, அதிகப்பிரசங்கி அப்படின்னுதான் கூப்பிடணும்.மாமா, அத்தான் அதான் உன் அப்பா, அண்ணன் - இவங்களுக்காக உனக்கு கொஞ்சமா மரியாதை கொடுக்கலாம்னு நினைக்குறேன். நீயா அந்த மரியாதையைக் கெடுத்துக்காத.
அக்காவோட கல்யாணத்துக்கு வரப்போற என் பிரெண்ட்சையே எப்படி சமாளிக்கிறதுன்னு நானே குழம்பி இருக்கேன்.ச்சீ போ..."என்று சந்தியா  தன் தோழியின் வீடு இருந்த தெருவுக்குள் நுழைந்துவிட்டாள்.



'ச்சீ...போன்னு சொல்லிட்டுப்போறா...இப்படித்தானா அசிங்கப்படுறது...ம்...சரி...எங்க போயிடப்போறா...இப்படி கோபப்படுறவளை சுலபமா வழிக்கு கொண்டுவந்துடலாம்.அப்பாதான் கவுத்துவிடாம இருக்கணும்.

எங்க...நான் ஊதுற பலூனை எல்லாம் ஒரே அடியில உடைக்கிறதுதான் அவரு பிழைப்பா இருக்கு.நம்மளைப் பொறுத்த வரை வீட்டுக்குள்ளதான் வில்லன். எதுவா இருந்தாலும் சமாளிச்சுதானே ஆகணும்' என்று நினைத்துக்கொண்ட வெற்றி வீட்டுக்குச் சென்றான்.

இரண்டு மாதங்களுக்குள் திருமணத்தை முடித்துவிடுவது என்று சுந்தர்ராஜனும், ராமலிங்கமும் தீவிரமாக இயங்கினார்கள்.

ராமலிங்கத்தின் பொருளாதார நிலை சற்று சிரமநிலையில் இருந்ததால் சுந்தர்ராஜனே திருமண செலவுகளை ஏற்றுக்கொண்டு நடத்திக்கொள்வதாக சொல்லிவிட்டார்.

கல்லூரியில் ஆண்டு விழா நடத்துவதற்காக சிறப்புவிருந்தினர்கள் இரண்டு பேரை அழைத்திருந்தார்கள்.ஒருவர் தமிழ்த்திரைப்பட இயக்குனர், மற்றொருவர் மாவட்டக்காவல்துறைக்கண்காணிப்பாளர்.

ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத துறையாக இருக்கிறதே என்று நீங்கள் நினைக்கலாம். அந்த இரண்டு பேரும் இந்தக் கல்லூரியில் படித்தவர்கள் என்ற காரணம்தான் அவர்களை இந்தக் கல்லூரி விழாவின் மேடையில் ஏற்றியிருந்தது.

மாணவர் பேரவை தலைவரும், செயலாளரும் சிறப்புவிருந்தினர்களை அழைத்துவர சென்றபோது வெற்றியும் ஒரு காரை ஏற்பாடு செய்து ஐந்து மாணவர்களுடன் ஏறிக்கொண்டான்.

எஸ்.பியும் இயக்குனரும் காரில் வந்தபோது முன்னால் வந்த பைலட் கார் கண்ணாடியில் ஒட்டியிருந்த போஸ்டரைப்பார்த்து கல்லூரி முதல்வர்தான் முதலில் அதிர்ந்தார்.

விருந்தினர்கள் முன்னால் வெற்றியை என்ன சொல்வது என்ற தயக்கத்தில் அவர்களை முதல்வரும் பேராசிரியரும் வரவேற்றார்கள். அவர்கள் முகத்தில் தெரிந்த அதிர்ச்சிக்கு காரணமான போஸ்டரை முன்னாள் மாணவர்களும் பார்த்தார்கள்.

விழா நல்ல முறையில் நிறைவடையும் நேரம், எஸ்.பி, இயக்குனர் இருவரும் சேர்ந்து எழுந்து நின்றார்கள்.

இயக்குனர்,"எங்களுக்கு முன்னால வந்த கார்ல 'பேட் பாய்ஸ்'அப்படின்னு போஸ்டர் ஒட்டி இருந்ததே...அந்த ஐடியாவுக்கு சொந்தக்காரர் கொஞ்சம் மேடைக்கு வர்றீங்களா.?"என்றார்.

"ஏன் சார்...போலீஸ்கிட்ட புடிச்சுக்கொடுக்கப்போறீங்களா?இந்த வெற்றி அவ்வளவு சீக்கிரத்துல சிக்க மாட்டான். ரொம்ப கஷ்டப்படணும்."என்று முன் வரிசையில் நின்று குரல் கொடுத்தான்.

அருகில் நின்ற மாணவர்கள் எல்லாம் பெரியதாக 'ஓ' போடவும் கல்லூரி அரங்கமே அதிர்ந்தது.

"இதெல்லாம் என்ன பெரிய சத்தம்...நாங்க விட்ட சவுண்டுல பத்து சதவீதம் கூட இல்லை.நீங்க எல்லாம் வேஸ்டுப்பா..."என்று எஸ்.பி சொன்னதும் மாணவர், மாணவிகள் கூட்டத்தில் மீண்டும் உற்சாக கூச்சல்.

"மாணவர்கள்னா மனசாட்சியைத் தவிர எதுக்கும் அஞ்சக்கூடாது.வெற்றி உன்னைப் பத்தி உங்க ஹெச்.ஓ.டி கிட்ட கேட்டுட்டேன்.மேடையில ஏறு. உன்னை வெச்சு சில செய்திகளை மற்ற எல்லாருக்கும் சொல்லணும்."என்று இயக்குனர் சொன்னார்.

"அப்பாவுல இருந்து அதிகாரிங்க வரைக்கும் என்னைய காட்சிப்பொருளாக்குறதுலயே குறியா இருக்காங்களே.என்ன கொடுமைடா இது...சரி...எதிர்மறையாவது பப்ளிசிட்டி கிடைக்குதேன்னு பெருமைப்பட்டுக்க வேண்டியதுதான்."என்று வெற்றி மேடையேறினான்.

மாணவர்களின் உற்சாக கூச்சலைக்கேட்டதும் பெரிய தலைவராக தன்னைக்கற்பனை செய்துகொண்ட வெற்றி, கூட்டத்தைப் பார்த்து கையசைத்தான்.

எஸ்.பி."எங்களோட ஜூனியர் மாணவ சமுதாயத்துக்கு மறுபடியும் வணக்கம்.சேட்டை செய்தாதான் அது குழந்தை. இப்படி அட்டகாசம் பண்றியேன்னு குழந்தையை அம்மா அடிக்கிறது சகஜம்.ஆனா அதே குழந்தைக்கு உடம்பு சரியில்லாம படுத்துட்டா அதிகமா தவிச்சுப்போறது தாயாத்தான் இருக்கும்.

மாணவர்களும் ஆசிரியர்களும் கூட தாய் சேய் மாதிரிதான் இருக்கணும்னு நினைக்கிறோம்.மாணவர் பருவம் குறும்பு நிறைஞ்சதா இருக்குறது தப்பே இல்லை.ஆனா அதனால அடுத்தவங்களுக்கு துன்பம் வரக்கூடாது.யாரோட மனசும் புண்படக்கூடாது.முக்கியப்பாடங்களில் வெற்றிதான் தொடர்ந்து நல்ல மார்க் எடுத்துட்டு வர்றதா சொன்னாங்க.

கார்ல ஒட்டுன போஸ்டர்ல பேட் பாய்ஸ் அப்படின்னு போட்டதால யாருக்கும் நேரடியா கஷ்டம் இல்லை. ஆனா அது ஒரு படத்துல இருக்குற காட்சின்னுங்குறதால சினிமா உங்களுக்குள்ள ஏற்படுத்திருக்குற தாக்கம் புரியுது.இந்த மாதிரி யாருக்கும் உதவாத விஷயங்களை செய்து கெட்ட பேர் எடுக்குறதை விட, சொந்தமா யோசிச்சு ஒரு கோமாளித்தனமான போஸ்டர் ஒட்டிருந்தா கூட நகைச்சுவைன்னு நினைச்சு பாராட்டியிருப்பேன்.

கல்லூரி அனுபவம்னுங்குறது  உங்க ஒவ்வொருத்தருக்கும் கிடைச்ச அற்புதமான வாய்ப்பு.பல வருஷம் கடந்து போனாலும் இதைப் பத்தி நினைக்கும்போது உங்க முகத்துல லேசா ஒரு புன்னகையாவது வரும்.அது எந்த வயசா இருந்தாலும்.

இப்ப நான் வெற்றியை மேடையில ஏத்துனதுக்கு வேற ஒரு காரணமும் உண்டு.இவன் செய்யுற செயல்கள் பல ஆசிரியருக்கே பிடிக்கலைன்னு கேள்விப்பட்டேன்.இதெல்லாம் எனக்கு எப்படி தெரியும்னுதானே நினைக்குறீங்க...அவனும் அவனைச் சுத்தி இருக்குறவங்களும் பெருமைப்படுற ஒரு விஷயத்தை வெற்றி விளையாட்டாவே செய்துகிட்டு வர்றான்.ஆனா அது தந்துகிட்டு இருக்குற நல்ல பலன் ஏராளம்.

இது உங்களுக்கு ஊக்கம் கொடுக்குற வகையில இருக்கணும்னு வர்ற குடியரசுதினத்து அன்னைக்கு அந்த விஷயங்களை கொஞ்சம் பப்ளிசிட்டி பண்ணனும்னு முடிவுபண்ணியிருக்கோம்.
வெற்றி, இனி நீ இந்த மாதிரி குறும்புகளை இன்னும் ஆக்கப்பூர்வமா செய்.உன் கிட்ட நாங்க இன்னும் எதிர்பார்க்குறோம்."என்று பேசியதும் பேராசிரியர்களில் சிலரே அவர்கள் கைகள் வலிக்கும் அளவுக்கு கரகோஷம் எழுப்பினார்கள்.
******
அன்று இரவு ஏழு மணி இருக்கும்.வாசலில் வந்து நின்ற காரைப்பார்த்ததும் சுந்தர்ராஜனுக்கு எதுவும் புரியவில்லை.சற்று வயதான இரண்டு தம்பதியர் காரிலிருந்து இறங்கினார்கள்.

அவர்கள் கைகளில் பழங்கள் உள்ளிட்ட சில பொருட்கள் அடங்கிய பைகள் இருந்தன.

அவர்களில் ஒருவர்,"சார்...நான் ....................காலேஜ் பிரின்சிபால்.வெற்றியைத் தேடிதான் வந்திருக்கோம்.உள்ள வரலாமா?"என்று கேட்டார்.

பத்திரிகை எழுதுவது தொடர்பாக ராமலிங்கமும் அவர் மனைவியும் வந்திருந்தார்கள். சுந்தர்ராஜனின் குடும்பம் மட்டுமின்றி இவர்களுக்கும் திகைப்பு. ஆனால் எதுவும் கெட்ட விஷயம் இல்லை என்பதே அவர்களுக்கு மிகப்பெரிய ஆறுதலாக இருந்தது.

5 - தொடரும்.
******
திருவாரூரில் திருவிழா - தொடர்கதை - அத்தியாயம் 1
திருவாரூரில் திருவிழா - தொடர்கதை - அத்தியாயம் 2
திருவாரூரில் திருவிழா - தொடர்கதை - அத்தியாயம் 3
திருவாரூரில் திருவிழா - தொடர்கதை - அத்தியாயம் 4
******
ஐந்தாவது அத்தியாயத்தின் விளம்பரத்தில் அஜீத்குமார், த்ரிஷா ஆகியோருக்கு பின்னணியில் இருப்பது திருவாரூர் நகரில் நாகை புறவழிச்சாலையில் உள்ள ரயில்வே மேம்பாலம்.
இது கட்டப்பட்டு இருபது ஆண்டுகளுக்கும் மேலாகி விட்டது.முன்பு எல்லாம் கனரக வாகனங்கள் தவிர மற்ற வாகனங்கள் குறைவாகத்தான் இந்தப் பாதையில் செல்லும். ஆனால் கடந்த பத்து ஆண்டு காலத்தில் திருவாரூர் நகரம் சதை போட்டுக்கொண்டே போவதால் சைக்கிள் முதல் இருசக்கர வாகனப்போக்குவரத்தும் மிக அதிகமாகி விட்டது.மாவட்ட மைய நூலகம் செல்லவேண்டியதும் இந்த வழியாகத்தான்.

ஆனால் பாலமும் இந்தப் பாதையும் பெரியவர்களையே அச்சுறுத்துகிறது. இந்த அழகில் நூலகத்தில் குழந்தைகள் பிரிவுக்கு கூட்டம் வருவதே இல்லை என்று கவலைப்படுகிறார்கள்.

பாலத்தில் சரியாக இரண்டு கனரக வாகனங்கள்தான் செல்ல முடியும். ஆனால் அதன் இணைப்பில் ஆள் விழுகும் பள்ளம், இரண்டு பக்கமும் மணல் குவிப்பு என்று இருப்பதால் இருசக்கர வாகனங்கள் சறுக்கியோ, பள்ளத்தில் சிக்கியோ விழவேண்டியிருக்கிறது. ஒன்றிரண்டு முறை உயிரிழப்புகளும் ஏற்பட்டிருக்கின்றன.

மேம்பாலத்தில் ஏறும் பாதை கூட இருவழிப்பாதைதான் என்பதால் கனரக வாகனங்கள் முந்திச் செல்லக்கூடாது என்பது அடிப்படை விதி.ஆனா எல்லா தனியார் பேருந்து ஓட்டுனர்களும் சில அரசுப்பேருந்து ஓட்டுனர்களும் இதை மதிப்பதே இல்லை.

சக்திவிலாஸ் என்ற ஒரு தனியார் பேருந்து அரசுப்பேருந்தை இந்த இடத்தில் முந்திச்சென்றதால் எதிரில் மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவர் தன் மனைவியுடன் இருபதடி பள்ளத்தில் விழ வேண்டிய அபாயத்தில் இருந்து மயிரிழையில் தப்பினார்.

இப்படி மனித உயிரை மதிக்காத ஓட்டுனர்களுக்குதான் மிகக்கடுமையான (கொடூரமான) தண்டனை கொடுக்கவேண்டும் என்று சொல்கிறேன்.
குறைந்தது பதினைந்து ஆண்டுகளுக்கு சிறைத்தண்டனையும் அங்கே வேலை செய்து பெறும் ஊதியத்தில் தவறு செய்த ஓட்டுனரின் செலவு போக மீதி தொகை எல்லாவற்றையும் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கே கொடுக்கவேண்டும் என்ற வகையில் தண்டனை இருந்தால் மட்டுமே பொறுக்கி ஓட்டுனர்கள் தவறு செய்ய அஞ்சுவார்கள்.
நான் சொல்வது விதிகளை மதிக்காத ஓட்டுனர்களுக்கு மட்டுமே.

நான் ஆரம்பித்த விஷயத்தை விட்டு எங்கேயோ சென்று விட்டேன்.

இந்த பாதையில் சாலை ஓரமாக சைக்கிள்களும் இரு சக்கர வாகனங்களும் பாதுகாப்பாக செல்ல வழி ஏற்படுத்திக்கொடுப்பார்களா என்ற ஏக்கம்தான் எங்களுக்கு.வேறு எதையும் எதிர்பார்க்கவில்லை.

மிக மிக மிக குறுகிய காலத்தில் பிரமாண்டமான சட்டசபை வளாகத்தையே கட்டுபவர்களுக்கு இதெல்லாம் பெரிய விஷயமா என்ன?

******