Search This Blog

வெள்ளி, 5 பிப்ரவரி, 2010

திருவாரூரில் திருவிழா - காதலர்தின ஸ்பெஷல் தொடர்கதைக்கு முன்னுரை-1

ஆரம்பிச்சுட்டாண்டா! ஏற்கனவே தமிழ்ப்படத்துல (நான் சொல்றது தமிழ்ப்படங்களை) காதலை அடிச்சு துவைச்சு நம்மளைப் புழிஞ்சது போதாதுன்னு இது வேறயா?அப்படின்னு நீங்க சலிச்சுக்குறது எனக்கும் புரியுது.இனி பிப்ரவரி 14ந் தேதி முடியுறவரைக்கும் அவனவன் காதலுக்கு மரியாதை செய்யுறதைப் படிக்கிறதுக்கு பதில் 'அவருக்கு' கவிதை வாசிக்கிறதை பார்க்கவே போயிடலாமோன்னு நீங்க கொடூரமான முடிவு எடுத்துடாதீங்க...
நான் ஏற்கனவே மூணு தம்பதியரோட சஷ்டியப்த பூர்த்தி விழாவுல கலந்துகிட்டு இருக்கேன்.எல்லா நிகழ்ச்சியும் முடிஞ்ச பிறகு அவங்க கால்ல விழுந்து ஆசிபெற்றதோட சரி.அது வரைக்கும் என்ன செஞ்சன்னு கேட்காதீங்க.விழா ஏற்பாட்டுல ஈடுபட்டதால இந்த சஷ்டியப்த பூர்த்தி திருவிழாவை பார்க்குற பாக்கியம் இல்லாமலேயே போயிடுச்சு.

04.02.2010 அன்னைக்கு உறவினரோட 60 வயது பூர்த்தி. திருக்கடையூர்ல விசேஷம்.ஏற்கனவே பல முறை அந்த ஊருக்கு வேற வேலையா போயிருந்தாலும் கோயிலுக்குள்ள போனதில்லை. பொதுவாவே ஒரு விழாவுக்கு ஏற்பாட்டாளரா இல்லாம பார்வையாளரா போய் கலந்துக்குறது தனி அனுபவம்.திறமையான ஓட்டுநர் போக்குவரத்து நெரிசல்ல வாகனத்தை இயக்கும்போது நாம ஜாலியா பின்னால உட்கார்ந்து பயணம் செய்யுற மாதிரின்னு வெச்சுக்குங்களேன்.
ஒரு குடும்பத்து திருவிழான்னாலே அங்கே சந்தோஷத்துக்கு குறைவிருக்காது.(ஆட்டுக்கறியில எலும்புதான் மிச்சமிருந்ததுன்னு போர் நடத்துற குடும்பங்களைப் பத்தி அப்புறம் பேசுவோம்.)திருக்கடையூர்ல தினம் தினம் குறைந்தது இருபத்தைந்து திருமணங்களாவது நடைபெற்று வர்றதால அங்க கொண்டாட்டத்துக்கு கேட்கவா வேணும்.
என்ன மாதிரி யூத்துங்களுக்கு (ஹேய்...கல்லை எல்லாம் எடுக்கப்பிடாது) திருமணத்தின்போது வெட்கம் வர்றது பெரிய விஷயம் இல்லை.வரவர பசங்களுக்கு வெட்கம் வர்றது சாதாரணமாவும் பொண்ணுங்களுக்கு வெட்கம் வர்றது கஷ்டமான காரியமாவும்தான் இருக்கு.எதாவது ஒரு இடத்துல வெட்கம் இருந்தாலே அந்த இடம் களை கட்டும்.

ஆனா குழந்தைகள் பெற்றோர்களுக்கு தந்தையின் அறுபது வயசுல சஷ்டியப்த பூர்த்தி திருமணத்தை செய்து வைக்கும்போது அந்த இடத்துல கிடைக்குற சந்தோஷத்தை வார்த்தைகளால சொல்ல எனக்குத் தெரியலைங்க. இரண்டாவது முறையா மாங்கல்ய தாரணம் ஆகும்போது அவங்க முகத்துல வர்ற வெட்கம் இருக்கே.அடடா...

இன்னும் இரண்டு நாளைக்கு மட்டும் இந்த முன்னுரை தொடரும்...