Search This Blog

வெள்ளி, 1 ஜனவரி, 2010

அமைதிப்படையும் மதுக்கடையும்


இந்தப் பழக்கத்திற்கு அடிமையானவர்கள் அதிக அளவில் செலவு செய்வதே மதுவுக்காகதான். குடும்பத்தில் தாம்பத்ய பிரச்சனைக்கும் மதுவுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு.

மேலும், அரசுக்கு வருமானம் பற்றாக்குறையாகிவிடும் என்ற காரணம் சொல்லியே  மதுவிலக்கு என்ற விஷயத்தை எல்லாரும் தட்டிக்கழித்துவிருகிறார்கள்.ஆனால் என் மனதுக்குத் தோன்றிய உண்மைக்காரணம் என்ன தெரியுமா?

அரசியல் பகை காரணமாகத்தான் பெரும்பாலான வன்முறைகள் அரங்கேறுகின்றன. இதில் நடக்கும் படுகொலைகளை செய்பவர்கள் மது அருந்திதான் செய்வார்கள்.மது என்னும் அரக்கன்தான் அவர்களை மிருகத்தைவிட கேவலமாக்கிவிடுகிறது.

மது அருந்துவதே மிகப்பெரிய சிக்கலாகிவிட்டால் இது போன்ற குற்றங்களை
செய்ய ஆள் வேண்டுமே.உண்மை இப்படி இருக்க மதுவிலக்கை அவர்கள் எப்படி கொண்டுவருவார்கள்?

சத்யராஜ் இரு வேடங்களில் நடித்த அமைதிப்படை திரைப்படம் நான் ஏழாம் வகுப்பு படிக்கும்போது வெளிவந்தது என்று நினைக்கிறேன்.அமாவாசை (எ)

நாகராஜசோழன் கதாபாத்திரம்  பெரும்பாலான அரசியல்வாதிகளைப் பிரதிபலிக்கும்விதமாக அமைந்திருந்ததால் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

ஒரு காட்சியில் மணிவண்ணன்,"இந்த சாதி கருமத்தை யாரு கண்டுபிடிச்சா?" என்று சத்யராஜிடம் கேட்பார்.

"மந்திரம் சொன்னவங்க கண்டுபிடிச்சதை மந்திரிமாருங்க கெட்டியா புடிச்சுகிட்டாங்க." என்பது சத்யராஜின் பதில்

"ஏங்னா...இந்த சாதியை ஒழிக்கப்போறதா மேடைக்கு மேடை பேசுறீங்கிளே...நிசமாலுமா?"

"உனக்கு வேற எதுவும் தொழில் செய்யத் தெரியுமா?"

"அய்யய்யோ...என்னங்க கெட்ட வார்த்தை எல்லாம்.?"

"தெரியாதுல்ல... எனக்கும்தான். நாம சாதியை ஒழிச்சுட்டோம்னா அப்புறம் நீயும் நானும் மட்டுமில்ல, நம்மளை மாதிரி பொழைப்பு நடத்துற எல்லாருமே சோத்துக்கு பிச்சைதான் எடுக்கணும்."

இதுவும் சத்யராஜ், மணிவண்ணன் இடையே நடக்கும் உரையாடல்தான்.

மதுவிலக்குக்கும் இந்த வசனம் பொருந்தும்.

மது அருந்தும் வழக்கமுடையவர்கள் உடனே என்னைத் துவைத்துக் காயப்போடும் எண்ணத்துடன், "இந்தப்பழக்கம் இல்லாத நீ மட்டும் ஆயிரம் வருஷம் தாண்டி தஞ்சாவூர் பெரிய கோயில் மாதிரி அப்படியே இருக்கப் போறியா?" இப்படி பின்னூட்டம் இட வாய்ப்பு நிறையவே உண்டு.

நீங்கள் என்னதான் சமாதானம் சொன்னாலும் மதுவால் சில தீமைகள் பலரது வாழ்வைப் புரட்டிப் போடும் அளவுக்கு இருக்கின்றன என்பதை நான் உறுதியாக சொல்வேன்.

பொருளாதாரதீமை: மதுவுக்காக ஆயிரம் ரூபாய் செலவழிப்பவனின் வருமானம் பத்தாயிரம் ரூபாயாக இருந்தால் பாதிப்பு உடனடியாக வெளியே தெரிவதில்லை. ஆனால் மூவாயிரம் ரூபாய் சம்பாதிப்பவன் குடும்பத்தை உடனடியாக சீர்குலைத்துவிடும்.

உடல்நலம் தொடர்பான தீமை: சர்க்கரைநோய், இரத்தஅழுத்தம், தாம்பத்ய குறைபாடு உள்ளிட்ட பல வியாதிகள் மதுவால் அதிக பாதிப்பை ஏற்படுத்துவதும் உண்மை.

உறவுசீர்குலைவு: தாம்பத்யத்தில் ஏற்படுத்தும் சிக்கல்களில் தொடங்கி எவ்வளவோ சொல்லிக்கொண்டே போகலாம். முக்கியமாக உங்கள் குழந்தைகள் கூட உங்களை வெறுக்கும் வாய்ப்பு உண்டு.

இந்த தீமைகள் எல்லாம் குடிக்காதவர்கள் குடும்பத்தில் இல்லையா என்று கேட்பார்கள். இது சரியான பதில் இல்லை என்று அனைவருக்குமே தெரியும். ஆனால் ஒப்புக்கொள்ளமாட்டார்கள்.

இதைவிட ஒரு பெரிய கொடுமை என்னவென்றால், மது அருந்தி வாகனம் ஓட்டுவதால் விபத்து ஏற்பட்டு பலரை பரலோகம் அனுப்புவதுதான் அது.

மது - நாட்டுக்கு, வீட்டுக்கு, உயிருக்கு கேடு.

வாழ்வு கொடுத்த உண்மை! - வரலாறு ரொம்ப முக்கியம் நண்பர்களே...


சில தரகர்கள் தங்களின் கமிஷனுக்காக வாயில் வந்த பொய்களை எல்லாம் அள்ளி விடுவது வழக்கம். சில ஆண்டுகளுக்காக நான் வேலை விஷயமாக மதுரையில் தங்கியிருந்த போது அந்தப் பகுதி இளைஞனுக்கு பெண் பார்த்தனர்.

சொந்தமாக லோடு வேன் இருக்கிறது, பிளஸ்டூ வரை படித்திருக்கிறான்...என்றெல்லாம் பெண் வீட்டாரிடம் பொய் சொல்லியிருக்கிறார் தரகர்.

இந்தப் பொய்களை அப்படியே, மெயின்டெயின்  செய்ய மாப்பிள்ளையின் பெற்றோரும் முடிவு செய்து விட்டார்கள். ஏற்பாடுகளும் நிச்சயதார்த்தம் வரை போய் விட்டது.

தரகர் சொன்ன பொய்கள் மாப்பிள்ளைக்குத் தெரிந்ததும் நேராக பெண்ணின் வீட்டிற்கே போய், நான் பத்தாவது பெயில். சம்பளத்திற்குதான் லோடு வேன் ஓட்டுகிறேன். என் உழைப்பின் மேல் நம்பிக்கை இருக்கிறது. சில ஆண்டுகளில் சொந்தமாக வண்டி வாங்கிவிடுவேன். உங்களுக்கு விருப்பம் இருந்தால் திருமணம் செய்து கொடுங்கள்!...என்று சொல்லிவிட்டு வந்திருக்கிறான்.

மாப்பிள்ளை உண்மையை சொன்னதால் பெண் வீட்டில் அனைவருக்கும் மனப்பூர்வ சம்மதம். திருமணம் நல்லபடியாக நடந்தது. சமீபத்தில்தான் அந்த இளைஞர் பழைய சின்னயானை ஒன்றை சிறிது தொகை கடனுடன் வாங்கியிருக்கிறார்.

ஆனால் உலக வரலாறு மிகவும் முக்கியம்.பெண் வீட்டார் சம்மதமும் சரி, மாப்பிள்ளை மினி லோடு வேன் வாங்கியதும் சரி.இது விதிவிலக்குதான் நண்பர்களே...

உண்மையில் பொருளாதார பாதுகாப்பை மிகப் பெரிய அளவில் எதிர்பார்க்கிறார்கள். இதை முழுவதும் தவறு என்று சொல்ல முடியாது.

ஆனால் ஒரு குடும்பத்தின் பொருளாதார நிலை என்பது பிறந்த குழந்தையிலிருந்து இருபத்தைந்து வயது வாலிபன் என்ற அளவில் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். குடும்ப சொத்து, பார்க்கும் பணி என்ற பல காரணங்கள் இருக்கும்.

பொருளாதார நிலை எப்படி இருந்தாலும் அந்த அளவில் இருந்து படிப்படியான வளர்ச்சிதான் பெரும்பாலும் சாத்தியமாகும். இதைப் புரிந்து கொள்ளாமல் மிகப்பெரிய ஆடம்பரத்துக்கு உடனடியாக ஆசைப்படுவதால்தான் தொண்ணூறு சதவீதப் பிரச்சனை.

ஒரு வயதுக் குழந்தை திடீரென இருபத்தைந்து வயது வாலிபனாவது சாத்தியமா. முடியாது. ஆனால் உரிய காலகட்டத்தில் அது சாத்தியம்.

இந்த உண்மையைப் புரிந்து கொண்டால் குடும்பம் மகிழ்ச்சியாக இருக்கும்.

பொருளாதார சிக்கல் காரணமாகத்தான் குடும்பத்தில் 95 சதவீத பிரச்சனைகள் ஏற்படுகின்றன. - இதை நான் சொல்லவில்லை. முருக பக்தரான கிருபானந்த வாரியார் அவர்கள் கூறிய பொன்மொழி.

...............போட்டியாக பாஸ்போர்ட் அலுவலக வாசலிலும் பிடுங்கப்பட்ட வேட்டி...



காவலாளிகள் லஞ்சம் வாங்குவது அவர்கள் கடமையாம். நீங்கள் அதிர்ச்சி அடையாதீர்கள். இதை தட்டிக் கேட்ட பொதுமக்கள் மீது  தடியடி நடத்தினால் அப்படித்தானே அர்த்தம்.அரசு ஊழியர் பணி செய்வதை தடுத்தால் அவர்களை தண்டிக்க சட்டம் இருக்கிறது...இதைக் கேடயமாக பயன்படுத்திதான் பல அரசு ஊழியர்கள் தவறு செய்கிறார்கள்.
******

விண்ணப்பம் கொடுப்பதற்காக திருச்சிமண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தில் 31.12.2009 அதிகாலைமுதல் நூற்றுக்கணக்கானோர் காத்திருந்திருக்கிறார்கள். காவலாளிகள், சிலரிடம் லஞ்சம் பெற்றுக்கொண்டு வரிசையை மீறி அவர்களை உள்ளே அனுப்பியதால்
குழப்பம் ஏற்பட்டிருக்கிறது. போலீசார் வந்து தள்ளு முல்லு செய்த பொதுமக்கள் மீது தடியடி செய்திருக்கிறார்கள்.

இந்த சம்பவத்தில்  திருவாரூர் பகுதி இளைஞர் ஒருவரின் வேட்டி உருவப்பட்டிருக்கிறது.

இது இன்றைய காலைக்கதிர் நாளிதழில் வெளிவந்த செய்தி.(01.01.2010)

மக்கள் இப்படி அவமானப்பட முக்கிய காரணம் அதிகாரிகள்தான்.

காவலாளிகளின் கடமையை செய்ய விடாமல் பொதுமக்கள் வம்பு செய்ததாக வழக்குப் பதிவார்கள்.

இல்லையா பின்ன...விண்ணப்பம் கொடுக்க பொதுமக்கள் அங்கே சென்றது சமூக விரோதம், மணிக்கணக்கில் காத்திருந்தவர்களைப் புறம் தள்ளி விட்டு அந்த நேரத்தில் வந்தவர்களை உள்ளே அனுப்ப காவலாளிகள் லஞ்சம் வாங்குவது தேச சேவை. இது புரியாத மக்கள் எதற்கு வெளி நாடு போக வேண்டும்.?

தகவல்தொழில்நுட்பஉலகம் அடைந்த முன்னேற்றத்தில் இப்போதும் அதிகாலை முதல் மணிக்கணக்கில் வரிசையில் நின்று டோக்கன் வாங்கி விண்ணப்பம் கொடுக்கவேண்டுமாம்... என்ன கொடுமை சரவணன்?

நிச்சயமாக செல்போன் இல்லாத ஆள் யாரும் அவ்வளவு எளிதில் பாஸ்போர்ட் பெற விண்ணப்பிக்கப் போவதில்லை. அதனால் குறுஞ்செய்தி மூலமாக விண்ணப்பித்தால்

குறிப்பிட்ட ரகசிய எண்ணை அனுப்பி ஒரு குறிப்பிட்ட நாளில் இந்த நேரத்தில் உரிய சான்றிதழ்களுடனும் இந்த ரகசிய எண்ணுடனும் அலுவலகம் வரவேண்டும் என்று எளிதாக நிர்ணயம் செய்துவிடலாமே.

கண்டவர்களும் ரயிலில் இடம்பிடிப்பதைப் போல் இதிலும் செய்துவிடாமல் இருக்கவேண்டும் என்றால் குடும்ப அட்டை எண்ணையோ வாக்காளர் அடையாள அட்டை எண்ணையோ சேர்த்துப் பதிவு செய்யும் முறையை ஏற்படுத்தினால் பிரச்சனை இருக்காது.

அரசு அலுவலகங்களில் தினமும் எவ்வளவு மனுக்கள் பெறப்பட்டன. உரிய காலகட்டத்தில் ஒரு பணியை முடிக்கவில்லை என்றால் ஏன் என்ற காரணத்தை அந்த அலுவலர் பதிவு செய்து பதிவேடு பராமரிப்பதை கட்டாயமாக்கினால் நிச்சயம் தீர்வு கிடைக்கும்.

எந்த முடிவும் தெரியாமல் மாதக்கணக்கில் வருடக்கணக்கில் காத்திருப்பதைக் காட்டிலும் ஒரு காரணம் தெரிந்தால் நல்லதுதானே. அலுவலர் சொல்லும் காரணம் நியாயமானதாக இருந்தால் திருவாளர் பொது ஜனத்துக்கு ஆப்பு. தவறாக இருந்தால் அதிகாரிக்கு வேட்டு.

எப்பூடி...