Search This Blog

திங்கள், 21 டிசம்பர், 2009

தொலைக்காட்சியும் புத்தகமும்...


தொலைக்காட்சியில் சில சமயம் எதாவது விறுவிறுப்பு இல்லாத நிகழ்ச்சியோ, போரடிக்கும் திரைப்படமோ ஓடிக் கொண்டிருந்தால் சட்டென்று டி.வி.யை நிறுத்தத் தோணாது. ரிமோட் மூலம் சேனல்களை மாற்றிக்கொண்டே இருப்போம். நம் உற்சாகம் வடிந்து போய் வேறு எதுவும் செய்ய மனசே இல்லாம தூக்கத்தையும் விட்டுடுவோம்.

ஆனால் புத்தகம் மட்டும், விறுவிறுப்பான விஷயம் என்றால் கண்டிப்பாக நம் புத்தியைக் கூர்மைப் படுத்தும்.

மொக்கைன்னா மூடி வெச்சுட்டு தூங்குவோம். இல்லன்னா வேற வேலையை பார்க்கப் போயிடுவோம்.

ஞாயிறு, 20 டிசம்பர், 2009

ஜெமினியும் - சிறைச்சாலையும்


அரசியல்ல இருக்குற சிலர் மைக் கிடைச்சாலே எதிர்ல ஆள் இருக்காங்களா இல்லையான்னு பார்க்காம பேசுற மாதிரி நீயும் எதாவது சினிமா ஸ்டில்ல பார்த்த உடனே கட்டுரை எழுத ஆரம்பிச்சுடுறியான்னு கோபப்படாதீங்க.

ஓ போட்ட ஜெமினி படம் சாதாரண மசாலாதான். அந்தப் படத்துலயும் நல்ல மெசேஜ் நிறையவே இருக்குங்க. வெறும் பாடல்களால மட்டும் அந்தப்படம் நல்லா ஓடலை. கலாபவன்மணியோட மிருகக்குரல் மிமிக்ரியும் படத்தோட அதிரடி வெற்றிக்கு முக்கியக் காரணம்னு விக்ரமே ஒத்துக்குவார். இந்தப் படத்தின் இயக்குநர் பெயரும் "சரண்" (அவரோட முழுப்பெயர் சரவணன்னு சொல்றாங்க.) - தயாரிப்பாளர் ஏ.வி.எம் சரவணன்  அப்படிங்குறதுல சின்ன சந்தோஷம்.

அவங்க பேரை நீ கெடுத்துடாதன்னு உங்க அலறல் எனக்கும் கேட்குதுங்க.

முதலில் சில நகைச்சுவைக் காட்சிகளைப் பற்றி சொல்லிவிடுகிறேன்.

ஜெமினியில் தேஜாவின் கையாள் ஒருவர், "இந்த சரக்கை மட்டும் அப்படியே கை மாத்தி விட்டா கோடி ரூபாய் ஓடி வரும்." என்பார்.

உடனே தேஜா அந்த ஆளிடம்,"நீ எவ்வளவு படிச்சிருக்க?" என்று கேட்பார்.


"ரெண்டாங்கிளாஸ்" என்று சொல்லும் ஆளின் முகத்தில் தெரியும் பூரிப்பை பார்க்க வேண்டுமே.அடா...அடா... வில்லன் சம்மந்தப்பட்ட காட்சி என்பதை மறந்து காமெடிக்காட்சியைப் போல் படமாக்கியிருப்பார்கள்.

அதற்கு தேஜா கொஞ்சம் கூட சிரிக்காமல், "நம்ம கேங்லயே அதிகமா படிச்சுட்டோம்னு திமிர்ல பேசுறியா"ன்னும்பார். பெரிய நகைச்சுவை நடிகர்களின் காட்சிக்கு சவால் விடும் வகையில் சிரிப்பை ஏற்படுத்தும்.

கமிஷனர், ஜெமினி, தேஜா இருவரையும் ஒரு செல்லில் அடைத்து வைத்திருப்பார்கள். ரொம்பவும் வெறுத்துப் போன ஜெமினி,"திருந்தித் தொலையேண்டா"என்று தேஜாவைப் பார்த்து சொல்வார்.

அதற்கு தேஜா,அவர் இடுப்பின் இரு புறமும் கைகளை ஊன்றிக் கொண்டு,"நான் என்ன தப்பு பண்ணினேன்...இப்ப திருந்த சொல்ற..."என்று கேட்கும்போது ஒரு அப்பாவித் தனம் தெரியும்.

இது மாதிரி வில்லன் வரும் காட்சிகள் அனைத்தையும் நகைச்சுவையுடனேயே படமாக்கியதற்கு சேர்த்து ஒரு ஆப்பு வெச்சாங்க பாருங்க...வெறுத்துப் போயிட்டேன். எதை சொல்றேன்னு புரியலை?

படத்துல காமெடி நடிகர்கள் நடிச்ச காட்சிகள்தான். அந்த மாதிரி மொக்கையை நான் எதிர்பார்க்கவே இல்லை.

அது கிடக்கட்டும்.

நான் சொல்ல வந்த விஷயம் வேற. நல்ல கமிஷனரா வர்ற மலையாள நடிகர் முரளி,"குற்றவாளிகளைத் திருத்துறதுக்குதான்  சிறைச்சாலைன்னா தண்டனை முடிஞ்சு வர்ற நபர்கள் தவறு செய்யக்கூடாது...

ஆனா நிஜத்துல அப்படி நடக்குறது இல்லையே. ஏன் அப்படி?

சட்டம்னுங்குறது ஃப்ரிட்ஜ் மாதிரி ஆயிடுச்சு. தண்டனை அனுபவிக்க உள்ள போறவங்க
வெளியில வரும்போது entha மாற்றமும் இல்லாம அப்படியே  ஃப்ரெஷ்ஷா வந்து கிரைம் பண்றாங்க.சமூகமும் சில அதிகாரப் பொறுப்புகளும் அவங்க திருந்தி வாழ்றதை அனுமதிக்கிறது இல்லை.  இந்த நிலைமையை மாற்ற எதோ என்னாலான முயற்சி. அவங்க திருந்த வாய்ப்பு ஏற்படுத்தி தர்றேன்."அப்படின்னு சொல்வார்.

எல்லாரும் ரொம்ப யோசிக்க வேண்டிய விஷயங்க இது.


நான் இந்தப் படத்தைப் பார்க்கும்போது கிரணைப் பார்த்து ஜொள் விடாம சமர்த்துப்பிள்ளையா இருக்கேன்னு இப்பவாச்சும் நம்புறீங்கிளா?

வேலூர் சிறைச்சாலையும் குற்றவாளிகளை மாற்ற, தொழிற்சாலையாக மாறி வரும் விஷயம் தினமலரில் வெளிவந்துள்ளது.

அந்த செய்தி கீழே...

வேலூர்: வேலூர் ஆண்கள் சிறையில் குற்றவாளிகளுக்கு தொழில் பயிற்சி அளிக்கப்பட்டு, தொழிற்சாலையாக மாறி வருகிறது.வேலூர் தொரப்பாடியில் பிரிட்டிஷ்காரர்கள் காலத்தில் 1867ம் ஆண்டு அமைக்கப்பட்ட மத்திய சிறை, தமிழகத்தில் முதல் சிறை என்ற பெருமை உடையது. இந்த சிறையில் 2,130 கைதிகள் நிரப்பும் வசதிகள் உள்ளன.


சென்னையில் புழல் சிறை துவங்கப்பட்டதால், தற்போது, இங்கு 935 கைதிகள் உள்ளனர். ஆயுள் தண்டனை கைதிகள் 215 பேரும், ஐந்து முதல் பத்து ஆண்டு தண்டனை பெற்ற கைதிகள் 230 பேரும் உள்ளனர்.தண்டனை அனுபவிக்கும் இடமாக இருந்த சிறைச்சாலை தற்போது, தொழிற்சாலையாக மாறி வருகிறது. இங்கு ஷூ, அட்டை ஃபைல், மெழுகுவர்த்தி, பாண்டேஜ் துணி, டெய்லரிங் போன்ற தொழிற்பயிற்சிகள் ஆயுள் தண்டனை கைதிகளுக்கு அளிக்கப்பட்டு வருகிறது.தொழிற்பயிற்ச்சி பெற்ற கைதிகள் மூலம் ஷூ, அட்டை ஃபைல், மெழுகுவர்த்தி, பாண்டேஜ் துணி ஆகியவை தயார் செய்யப்படுகிறது. கைதிகள் தயாரிக்கும் பொருட்களுக்கு ஏற்ப சம்பளம் வழங்கப்படுகிறது.


* ஷூ தொழிற்சாலை: தமிழகத்தில் வேறு எந்த சிறையிலும் ஷூதயாரிக்கும் தொழிற்சாலை இல்லை. பிரிட்டிஷ்காரர்கள் காலத்தில் துவங்கப்பட்ட ஷூ தயாரிக்கும் தொழிற்சாலையில் இது வரை 10 லட்சம் ஷூக்கள் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்தாண்டு 50 லட்சம் மதிப்புள்ள 20 ஆயிரம் ஜோடி ஷூக்கள் தயாரிக்க ஆர்டர் பெறப்பட்டு அனைத்தும் மூன்று மாதத்தில் செய்து முடிக்கப்பட்டது.இந்த ஷூக்கள் போலீஸ், தீயணைப்பு துறை, சிறைத்துறையில் மூலம் ஆர்டர் பெறப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. ஷூ தயாரிப்பு பணியில் 100 கைதிகள் வேலை பார்க்கின்றனர். ஒரு நாளைக்கு 300 ஷூக்கள் தயாரிக்கப்படுகிறது.இதற்காக 60 லட்ச ரூபாய் மதிப்பில் வெளி நாட்டில் இருந்து இரு இயந்திரங்கள் வாங்கப்பட்டுள்ளது. மூன்று நிலைகளில் ( நன்றாக வேலை செய்பவர், கொஞ்சம் வேலை செய்பவர், புதியதாக வேலை செய்பவர் ) என்று தரம் பிரிக்கப்பட்டு மாதம் 600 ரூபாய், 800 ரூபாய், 1,500 ரூபாய் வரை கூலி வழங்கப்படுகின்றது.இதில், 40 சதம் இயந்திரத்தின் மூலமும், 60 சதம் கையாலும் தயாரிக்கின்றனர். காலை 7.30 மணி முதல் பகல் 11.30 வரை, மதியம் 1.30 முதல் மாலை 4. 30 வரையில் பணி நடக்கிறது.பணி நேரத்தில் இரு முறை சிறைத்துறை நிர்வாகம் சார்பில் கைதிகளுக்கு டீ கொடுக்கின்றனர்.


* டெய்லரிங் யூனிட்: இங்கு 26 தையல் மிஷின்கள் உள்ளது. 33 பேர் வேலை செய்கின்றனர். ஜாக்கெட், சுடிதார் தைக்கின்றனர். நல்ல லாபம் தரும் இந்த தொழிலை செய்து வந்த பத்து பேர் விடுதலையாகியதும் சொந்தமாக கடை வைத்துள்ளனர்.


* ஃபைலிங் பேட் யூனிட்: இங்கு 75 பேர் வேலை செய்கின்றனர். ஒரு நாளைக்கு 3,000 வீதம் ஒரு மாதத்திற்கு ஒரு லட்சம் ஃபைல் பேடு செய்கின்றனர். அரசு அலுவலகங்களுக்கு மட்டும் விற்பனை செய்யப்படுகிறது.இந்தாண்டு 5 லட்சம் ஃபைல் பேடுகள் சப்ளை செய்ய ஆர்டர் பெற்றுள்ளனர். மாதம் 750 ரூபாய் வரை சம்பாதிக்கின்றனர்.


* மெழுகு வர்த்தி யூனிட்: மூன்று பேர் வேலை செய்கின்றனர். இங்கு தயார் செய்யப்படும் மெழுகு வர்த்திகள் வேலூர் ரோட்டரி சங்கம் மூலம் விற்பனை செய்யப்படுகிறது.


* பவர் லூம்: நான்கு பவர் லூம்கள் உள்ளன. பத்து பேர் வேலை செய்கின்றனர். அரசு மருத்துவமனைகளுக்கு பாண்டேஜ் துணி தயாரித்து சப்ளை செய்கின்றனர். மாதம் 8,000 மீட்டர் பாண்டேஜ் துணி தயாரிக்கின்றனர். ஒரு மீட்டர் விலை 12 ரூபாய். இங்கு பணிபுரியும் கைதிகள் மாதம் 1,500 வரை சம்பளம் பெறுகின்றனர்.


வேலூர் மத்திய ஆண்கள் சிறை கண்காணிப்பாளர் சேகர் கூறியதாவது:இங்குள்ள மினி தொழிற்சாலையில் வேலை பார்ப்பவர்கள் பெரும் பாலும் ஆயுள் தண்டனை மற்றும் நீண்ட காலகைதிகள். ஒரு கமிட்டி மூலம் தேர்வு செய்து பயிற்சிகள் கொடுத்து வேலைக்கு அனுப்புகின்றோம்.நிறைய ஆர்டர்கள் வருகிறது. இவர்கள் சம்பாதிக்கும் பணம் இவர்கள் கணக்கில் வரவு வைக்கப்படும், இவர்கள் குடும்பத்தினருக்கும், குழந்தை படிப்பு செலவுக்கும் மாதா, மாதம் அனுப்பப்படுகிறது. ஆர்வத்துடன் கைதிகள் வேலை பார்க்கின்றனர்.வேலூர் மத்திய சிறையில் அமைக்கப்பட்டுள்ள தொழிற்சாலைகள் மூலம் வேலை வாய்ப்பு, கல்வி, தோட்டம் பராமரிப்பு போன்றவை அளிக்கப்படுகிறது. விடுலையாகி வெளியே செல்லும் கைதிகள், இந்த பயிற்சி மூலம் யாரையும் எதிர் பார்க்காமல் சுய தொழில் செய்ய அவர்களுக்கு வசதியாக அமையும்.இவ்வாறு அவர் கூறினார்.


நன்றி: தினமலர்

ஒருநாள் போலீஸ் - தேர்தல் அனுபவ ரீமேக்

மினி குவார்ட்டருக்கும் உள்ளாட்சித் தேர்தலுக்கும் சம்மந்தமே இல்லைன்னு சொன்னா நீங்க நம்பவா போறீங்க?

வாழ்க்கைக்கும் வீடியோ பிளேயர் மாதிரி ஒரு ரீவைண்ட் பட்டன் இருந்தா எவ்வளவு நல்லா இருக்கும்? - இப்படி ஒரு வசனம் முதல்வன் படத்துல வரும். வாழ்க்கையில இல்லன்னா என்னங்க...நம்ம மனசுக்கு ரீவைண்ட், ஃபார்வேர்ட் மட்டுமில்லாம எவ்வளவோ இருக்கு. நாமதான் பயன்படுத்துறது இல்லை.

விடுங்க கழுதைய...(உன்னைய யாருய்யா இப்ப புடிச்சுகிட்டு நிக்கிறதுன்னு ஒரு குரல் வருதே...யாருப்பா இப்படி மானத்தை வாங்குறது.) நாம இப்ப அப்படியே ஒரு யு டர்ன் அடிச்சு நூறு மாசத்துக்கு மேல பின்னால போவோம்.

வெட்டுனா...ச்சீ...கட் பண்ணினா உள்ளாட்சி தேர்தல் நடக்குற சமயம். கல்லூரிகளில் இருக்கும் நாட்டுநலப்பணித்திட்ட மாணவர்களை பாதுகாப்பு (?!) பணியில ஈடுபடுத்துறதா சொன்னதும் நானும் போய் வரிசையில நின்னுட்டேன்.

ராணுவத்துக்கு கூட ஆள் எடுக்கும்போது இவ்வளவு நேரம் செலவழிச்சிருப்பாங்களான்னு தெரியல. முக்கா நாள் (காலை, மதியம் ரெண்டு வேளை சாப்பாடு கிடைக்கலைன்னா முக்கா நாள் பட்டினின்னுதானே அர்த்தம்.?) வயிறு காஞ்சு, சில போலீசாரோட ஒரு லாரியில ஏறிப் போனோம்.( கவனிக்க: நாங்களாதான் "ஏறிப்" போனோம். ஒரு 'ற்' நடுவுல சேர்ந்தா வேற அர்த்தம்.)

முப்பது கிலோ மீட்டர் தூரத்துல உள்ள ஒரு தாலுக்கா தலை நகரத்துல ராத்திரி பதினோரு மணிக்குப் போய் இறங்குனா, கடைத்தெருவுல எந்தக் கடையிலயும் லைட் எரியலை. அட, பவர் கட் எல்லாம் இல்லைங்க. முப்பத்து ஆறு மணி நேரத்துல உள்ளாட்சித் தேர்தல் நடக்கப்போறதால சீக்கிரமே கடையை சாத்த சொல்லிட்டாங்களாம்.

இப்பவே...இல்ல...இல்ல...ரொம்ப நேரமாவே பசி கண்ணைக் கட்டுதேன்னு நிக்கிறோம். அப்ப என் நம்ம தோஸ்த் ஒருத்தன், கடைக்காரரிடம்"இங்க பாருப்பா...நாங்களும் தேர்தல் பாதுகாப்பு பணிக்குதான் வந்திருக்கோம். ஸ்பெஷல் அப்பாயின்மெண்ட்.

லோக்கல் ஸ்டேஷன்லேர்ந்து வந்தா நாங்க பேசிக்குறோம். இப்ப பசிக்கு எதாவது இருக்குறத தயார் பண்ணிக் கொடு." அப்படின்னு கம்பீரமா பேசிட்டான். வாயுள்ள பிள்ளை பிழைச்சுக்கும்னு சரியாத்தான் சொல்லியிருக்காங்க.

அவன் பிழைச்சதோட எங்க அம்பது பேருக்குல்ல சாப்பாடு கிடைக்க வழி செஞ்சான். ஆனா கடைக்காரரும் பாவங்க. இத்தனை பேருக்கு தோசை இட்லின்னு ஊத்திக் கொடுக்க மாவு இருந்தாலும் சைடு டிஷ் (சட்னி சாம்பாருதான்) ரெடி பண்ண அவருகிட்ட போதுமான பொருள் இல்ல... பாதிப்பேர் வெறும் டிபனைத் தின்னும்போது தொண்டையை அடைச்சு தண்ணீர் குடிச்ச வேகத்தைப் பார்த்து கடைக்காரர், "சார்...நீங்க இட்லி, தோசைக்கு குடுக்குறத விட நாலுமடங்கு தண்ணீருக்காக தர்ற மாதிரி இருக்கும்"னு சொன்னார்.

இதை எல்லாம் காதுல வாங்குற கண்டிஷன்ல நாங்க இல்ல...பசிக்கொடுமைதாங்க...நீங்க வேற எதுவும் நினைச்சுக்காதீங்க. இதுல களேபரத்துலயும் எங்க சகா ஒருத்தனைப் பார்த்து "காவிரியில ஏன் தண்ணி விட மாட்டெங்குறாங்கன்னு இப்பதான் புரியுது. எவ்வளவு திறந்து விட்டாலும் இவன் ஒருத்தனுக்கே போதாது...அதனால நாம போதும்னு சொல்லவே மாட்டோம். - இப்படியெல்லாம் ஜாலி கமெண்ட்.

அரை வயிறுதான் நிறைஞ்சுது. ஆனாலும் ரொம்பச் சரியா காசு கொடுத்துட்டுதாங்க கிளம்புனோம். (அப்ப கடைசி வரைக்கும் பதவி உயர்வே கிடையாதுன்னு சவுண்டு விடுறது  யாருப்பா)

எங்களுக்குத் தலைமையா இருந்த சில போலீசார் எங்கேயோ போய் திருப்தியா சாப்பிட்டுட்டு முகாம் அலுவலகத்துல உட்கார்ந்திருந்தாங்க. கொசுக்கடியில அவதிப்பட்டு பொழுதை ஓட்டிட்டு மறுநாள் எல்லாரும் ஆத்துல போய் குளிச்சோம்.(உண்மையாதாங்க...)

அன்னைக்கு சாயந்திரம் எல்லாரையும் வாக்குச்சாவடிக்கு அனுப்பி வெச்சாங்க. ஒரு ஏட்டு கூட எனக்கு பணியிடம் ஒதுக்கியிருந்தாங்க. மத்த பசங்க எல்லாம் லாரியில போய் இறங்க, நானும் அந்த ஏட்டும் வாக்குச்சாவடி அலுவலர்களோட ஜீப்புல போனோம். ஆமாங்க...லாரி போக முடியாத அளவுக்கு குறுகிய பாலம் நடுவுல இருந்து என் கவுரவத்தைக் காப்பாத்துனுச்சு.

காசிக்குப் போனாலும் சிலருக்கு கர்மா விடாதுன்னு சொல்லுவாங்க. நாங்க அந்த கிராமத்துக்குப் போனாலும் கொசு எங்களைத் தூங்க விடலைங்க. தொடர்ந்து ரெண்டாவது நாளா சிவராத்திரி (உங்களுக்குப் பிடிக்கலைன்னா ஏகாதசி, ஆங்கிலப் புத்தாண்டுன்னு எப்படி வேணுன்னாலும் முடிவு பண்ணிக்குங்க.)

மறுநாள் காலைக்கடமை எல்லாம் திறந்தவெளி புல்வெளிக் கழகம்தான்.

காலை ஏழு மணியிலேர்ந்து நல்ல கூட்டம். வரிசையை ஒழுங்குபடுத்தி உள்ள அனுப்பிகிட்டு இருந்தேன். வாக்குச் சாவடி அலுவலர்கள் கூட்டத்துக்கு நடுவுல சிக்கி அவதிப்படுற தொல்லை இல்லாம வேலையைக் கவனிச்சாங்க. 'ஸ்பெஷல் போலீஸ் ஆபிசர்' அப்படின்னு ஒரு ஒரு பேட்ஜ் குத்தியிருந்ததால வாக்காளர்கள் எல்லாம் மரியாதையோடதான் பார்த்தாங்க.

என்னுடன் இருந்த ஏட்டு,"தம்பி...இப்ப நீங்களும் ஒரு போலீஸ்தான். அந்த கம்பீரத்தோட நடந்துக்குங்க...பார்வையில ஒரு அலட்சியம் இருக்கணும். இல்லன்னா நம்மளை அலட்சியமா நினைச்சுடுவாங்க"ன்னு சொன்னார்.

அந்த வாக்குச் சாவடியை ஆண்கள், பெண்கள்னு பிரிக்கலை. பொதுச்சாவடியா இருந்ததால பந்தா பந்தான்னு சொல்லுவாங்களே... அப்படிதான் இருந்தேன். இப்பதான் டிரெய்னிங் முடிச்சுட்டு வந்திருப்பாங்க போலிருக்கு...ஆரம்பத்துல இல்லாத தொப்பை சில வருஷங்கள்ல எங்கேருந்துதான் வருதோன்னு பெண்கள் பேசிகிட்டு இருந்தாங்க.

இதுல என்ன கொடுமைன்னா அப்படி பேசின பெண்கள் யாருக்கும் சிம்ரன் இடுப்பு மாதிரி ஒண்ணும் இல்லை. (அந்த வருஷங்கள்ல சிம்ரன் ஜூரம்தான்) அவங்களே அவ்வளவு பெரிய தொப்பையை வெச்சுகிட்டு பேசினா கோபம் வருமா வராதா? அந்தப் பக்கம் பார்த்து முறைச்சேன்.
சில நொடிகள்தான். அப்புறம்  கோபம் மலையிறங்கிடுச்சு. ஏன்னுதானே கேட்குறீங்க... ஸ்லிம்மா இருந்த சில இளசுங்க "அய்யய்யோ... சார்(?!) முறைக்கிறாங்க...கொஞ்ச நேரம் பேசாம இருக்கீங்கிளா" அப்படின்னு பதறிடுச்சுங்க. அதுக்கப்புறமும் முறைக்குற அளவுக்கு நாம என்ன உண்மையான ......................காரங்களா?

தேர்தலின் போது ஒரு வாக்குச் சாவடியிலேயே முதல் நாளிலேயே தொடங்கி, வாக்குப்பதிவு செய்யப்பட்ட சீட்டுக்கள் அடங்கிய பெட்டியை உரிய இடத்தில் ஒப்படைப்பது வரை இவ்வளவு வேலைகள் இருந்தால் தேர்தல் ஆணையத்துக்கு எவ்வளவு பணிச்சுமை இருக்கும் என்று நான் வியப்படைந்தது உண்மை. நான் கல்லூரியில் படிக்கவில்லை என்றால் இந்த அனுபவம் கிடைத்திருக்கப் போவதே இல்லை.

இப்போது கணிணித் துறை மாணவர்கள் தேர்தல் பணியில் ஈடுபடுவதற்கான வாய்ப்புகள் அதிகரித்துவிட்டன. ஆனால் எனக்கு இது ஒரு மறக்க முடியாத அனுபவம் என்பதில் மாற்றுக்கருத்துக்கே இடமில்லை.

அந்த ஊரில் அக்காவும், தங்கையும்தான் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி வேட்பாளர்கள். இருவரின் கணவர்களும் அப்போது பிரபலமாக இருந்த மினி குவார்ட்டர்களை பதினைந்துநாளைக்கு முன்பே வாங்கி ஸ்டாக் வைத்துவிட்டார்கள். அதற்கும் இந்த உள்ளாட்சித் தேர்தலுக்கும் எந்த சம்மந்தமும் இல்லைன்னு நான் நீங்க சொன்னா நீங்க நம்பவாப் போறீங்க?

என்னுடன் இருந்த ஏட்டுகிட்ட "சார்...நீங்க நேர்மையானவரா...இல்ல..."அப்படின்னு கேள்வியை பாதியிலேயே நிறுத்திட்டேன்.

அவர் கோபப்படலை. " தம்பி...கூடுதல் தகுதி இருந்தும் இருபது வருஷமா ஏட்டாத்தான் இருக்கேன். நீயே முடிவு பண்ணிக்க."ன்னு சொன்னார்.

ஒரே ஒரு நாள் தேர்தல் பாதுகாப்பு பணியில (?!) ஈடுபட்டாலும், நல்ல மனுஷனோட இருந்தேன்னு ஒரு திருப்தி இருக்குங்க.



































பல வருஷத்துக்கு முன்னால நடந்த உள்ளாட்சித் தேர்தல் பற்றிய கட்டுரைக்கு 2009ல நடந்த வந்தவாசி, திருச்செந்தூர் தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தல் தொடர்பான போட்டோக்களை ஏன் பதிவு பண்ணியிருக்கன்னுதானே கேட்குறீங்க?

வாடிப்பட்டியில நடக்குற கதையிலயே பாட்டுக்காக வாஷிங்டன் போய் பாடலுக்கு நடனமாடுவோம். இதுதான் தமிழ்நாட்டோட கலாச்சாரம். இப்ப சொல்லுங்க. நான் இந்தப் படங்களை வெச்சது தப்பா?

மச்சான் நீ சொல்லேன்...ண்ணா நீங்க சொல்லுங்களேன்...ம்மா...நீங்க சொல்லுங்களேன்.

நன்றி: ஓளிப்படங்கள் - தினமலர்