தூரம் அதிகமில்லை - குறுநாவல்
அத்தியாயம் 6
பதினைந்து நிமிடங்களிலேயே கல்லூரிக்குச் சென்றுவிட்டார் ராஜேஷ்குமார். சண்டிகர் நகரில் வேளாண்மைப் பல்கலைக்கழகம் உள்ளது. அந்த மாடலில் கட்டப்பட்டது இந்தக் கல்லூரி என்று ராஜேஷ் கேள்விப்பட்டிருக்கிறார்.
நாலரை மணிக்குதான் வகுப்புகள் முடியும் என்பதால் ஓரளவு நிசப்தமாகவே கல்லூரி இருந்தது.
தேசிய நெடுஞ்சாலையின் ஓரத்திலேயே அமைந்திருந்தாலும், கல்லூரியின் முன்புறம் நிறைய மரங்கள் இருந்ததால் வாகனங்களில் இரைச்சல் அவ்வளவாக இல்லை.
கட்டடத்தில் முதல் மாடியில் இருந்த முதல்வரை முதலில் சந்தித்தார்.
சுருக்கமாக விஷயத்தைச் சொல்லிவிட்டு, "சார்...இப்போ நான் சொன்னது உங்க மனசோட இருக்கட்டும். நாளைக்கு விஷயத்தை வெளியே சொல்லலாம். இப்போ இது சம்மந்தமா ஒருசிலரை விசாரிக்கவேண்டியிருக்கு." என்றார்.
"ஓ.கே. சார்...பியூனை நான் உங்ககூட அனுப்புறேன்..."என்றவர், பெல் அடித்து ஒருவனைக் கூப்பிட்டார். அவன் வந்தவுடன்,
"ராஜேந்திரன்...சார் எந்த கிளாசுக்குப் போகணும்னு சொல்றாங்களோ...அங்க அழைச்சுட்டுப்போ..."
ராஜேஷ்குமார், பிரின்ஸ்பாலுக்கு நன்றிசொல்லிவிட்டு வெளியே வந்தார்.
ராஜேந்திரன்,"சார்...எந்த கிளாசுக்குப் போகணும்?" என்றான்.
"பி.எஸ்.சி. கெமிஸ்ட்ரி செகண்ட் இயர்ல கார்த்தியைப் பார்க்கணும்."
இருவரும் அந்த கிளாசுக்குச் சென்று விசாரித்ததில் கார்த்தி வகுப்புக்கு வரவில்லை என்பது தெரிந்தது.
"இதே கிளாஸ்ல வேற யார் இன்னைக்கு வரலை?"
பேராசிரியர், ரிஜிஸ்டரைப் பார்த்துவிட்டு, "ஷைலான்னு ஒரு பொண்ணு, கார்த்தி...இந்த ரெண்டு பேரும்தான் வரலை..."என்றார்.
"அந்தப் பையனை வேற எங்க பார்க்கலாம்.?"
"ஏன் சார்...அவன் ஏதாவது தப்புப் பண்ணிட்டானா?" -பேராசிரியர் கேட்டார்.
"உங்களைக் கேட்ட கேள்விக்கு மட்டும் பதில் சொல்லுங்க..."என்று குரலை சற்று கடுமையாக்கினார் ராஜேஷ்.
அப்போது வகுப்பிலிருந்த மாணவன் எழுந்து,"சார், அவன் திருவாரூர்ல உள்ள குமரகோயில் தெருவுல ஒரு சார்கிட்ட டியூஷன் படிக்கிறான்.
காலை நேரத்துல அங்க போவான். நேதாஜி காலேஜ்ல படிக்கிற ஒருத்தன், அங்கேயே டியூஷன் படிக்கிறான்...பேர் சதீஷ்.
அவன் அந்த சார் வீட்டுக்குப் பக்கத்துலேயேதான் இருக்கான். நீங்க அவன் வீட்டுக்குப் போய் கேட்டுப்பாருங்க சார்."என்றான்.
ராஜேஷ் அவர்களுக்கு நன்றி சொல்லிவிட்டு, மீண்டும் திருவாரூருக்கு கிளம்பி வந்தார்.
குமரகோயில் தெருவுக்குச் சென்று சதீஷ் வீட்டைக் கண்டுபிடிப்பதில் எதுவும் சிரமம் இல்லை.
அப்போதுதான் அவன் கல்லூரியில் இருந்து திரும்பியிருந்தான். அவனிடம், கார்த்தி இன்று கல்லூரிக்குச் செல்லாததைப் பற்றி சொல்லி விசாரித்தார்.
"சார்...அவன் காலேஜுக்குப் போகலியா?...ஆனா, காலையில டியூஷனுக்கு வந்தான் சார்...திரும்பிக் கிளம்பும்போது, பீட்டர் வந்து வாசல்ல நின்னு அவன்கிட்ட ஏதோ பேசினான். அப்புறம் கார்த்தியோட அவனும் சேர்ந்து வண்டியில போனான்." என்றான் சதீஷ்.
"பீட்டரா...யார் அது?" ஆர்வத்துடன் கேட்டார் ராஜேஷ்.
******
தூரம் அதிகமில்லை - குறுநாவல்
அத்தியாயம் 7
பிக்னிக் சென்று வந்து ஒரு வாரம் ஆகியிருக்கும்.ஒருநாள் வகுப்பில் இருக்கும்போது மெதுவாக தன் சுயரூபத்தைக் காட்டினான் கார்த்தி.
"ஷைலா...அன்னைக்கு உன்னைய வேளாங்கண்ணியில அரைகுறையாப் பார்த்ததுல என் மனசு என்கிட்ட இல்லை.ஒரே ஒரு நாள் சந்தோஷமா இருப்போம்.
என்னைக்குன்னு நீயே சொல்லு...நான் மத்த ஏற்பாடு பண்ணிடுறேன்."என்று கார்த்தி சொன்னதைக் கேட்டவுடனே ஷைலா அதிர்ந்தாள்.
"அடப்பாவி...என்கூட நீ இந்த எண்ணத்தோடதான் பழகுனியா? நீயும் ஒரு சராசரின்னு நிரூபிச்சுட்டியே?"
"சும்மா சத்தம் போடாதே.அன்னைக்கு நாம எல்லாரும் எடுத்த போட்டோக்கள்ல நீயும் நானும் நெருக்கமா இருக்குறது ரொம்பத் தெளிவா விழுந்துருக்கு.
அந்தப் போட்டோ ஏழும், நெகட்டிவ் ஏழும் என்கிட்ட பத்திரமா இருக்கு நீ ஏதாவது முரணு பிடிச்ச...அதையெல்லாம் பப்ளிஷ் பண்ற மாதிரி இருக்கும்.?ரெண்டு நாள் அவகாசம். நல்லா யோசிச்சு சொல்லு."என்றவன் சென்றுவிட்டான்.
ஆனால், இத்தகைய பெரிய இடியைப்போன்ற தாக்குதலில் நிலைகுலைந்து போய் உட்கார்ந்திருந்தாள் ஷைலா.
தான் செய்தது எவ்வளவு பெரிய தவறு என்பது இப்போதுதான் அவளுக்குப் புரிந்தது.
"என்னடி...வீட்டுக்குக் கிளம்பாம இருக்க?"
குரலைக்கேட்டு நிமிர்ந்தாள் ஷைலா. எதிரில் சுபா. ஒரு நிமிடம் தயங்கினாள் ஷைலா...பிறகு ஒரு முடிவுக்கு வந்தவளாய், சுபாவிடம் எல்லா விஷயங்களையும் சொல்லிவிட்டாள்.
"நான் அப்பவே சொன்னேன், இதெல்லாம் தேவையில்லாத வேலைன்னு...இப்போ பார்த்தியா...எவ்வளவு பெரிய பிரச்சனையா மாறியிருக்கு.
அது சரி...கம்ப்யூட்டர் சயின்ஸ் படிக்கிற நித்யா, அவ ஃப்ரெண்ட்ஸ் எல்லாரும் வந்தாங்களே...அவங்களோட லவ்வர்ஸ் என்ன சொல்றாங்க?...என்று சுபா கேட்டாள்.
"அதெல்லாம் எனக்குத் தெரியலைடி...ஏதாவது ஐடியா கொடு..."என்றவளின் குரல் மிகவும் உடைந்து போயிருந்தது.
"ஆமா...இப்பக் கேளு...அவ்வளவு புத்தி சொன்னப்ப உன் காதுல ஏறவே இல்லை.
பேசாம உன் அப்பாகிட்ட விஷயத்தை சொல்லிடு." என்று சுபா சொன்னதும் ஷைலா அவசரமாக மறுத்தாள்.
"அய்யய்யோ...என்னடி இவ்வளவு சாதாரணமா சொல்லிட்ட...என் அப்பாவுக்கு விஷயம் தெரிஞ்சா என்னையக் கொன்னே போட்டுடுவார்."
"அதுக்காக இப்போ கார்த்தி சொன்ன மாதிரியே நீ நடந்துகிட்டா உடனே அவன் போட்டோவையும் நெகட்டிவையும் கொடுத்துடுவான்னு என்ன நிச்சயம்?... ஒரு தடவை ருசி கண்ட பூனை சும்மா இருக்குமா...இவன்கிட்ட மாட்டிகிட்டு ஒவ்வொரு தடவையும் சாகுறதுக்குப் பதில் உன் அப்பாகிட்ட சொல்லிடுறது எவ்வளவோ பெட்டர்... இதுக்கு மேல வேற எந்த வழியும் எனக்குத் தெரியலை...சரி...சரி...வா...நேரமாயிடுச்சு. கிளம்புவோம்."
******
தூரம் அதிகமில்லை - குறுநாவல்
அத்தியாயம் 8
"பீட்டர், இங்க பக்கத்துல ஐயனார் கோயில் தெருவுல இருக்கான் சார். அவன் அப்பா பேர் ஆரோக்கியசாமி. அவர் கூட கீழவீதி எம்.எஸ்.அபார்ட்மெண்ட்ல வாட்ச்மேனா இருக்குறார்." என்றான் சதீஷ்.
அதைக் கேட்ட எஸ்.ஐ.ராஜேஷ்குமார், "பீட்டர் எங்க வேலை பார்க்குறான்?" என்றார்.
"அவன் கார்த்தியோட ஊர் வண்டாம்பாளையில ஒரு மில்லுலதான் சார் வேலை பார்க்குறான்...நீங்க முதல்ல அவன் அப்பாவைப் போய் பாருங்க சார்."
"சரி தம்பி...உனக்கு ரொம்ப நன்றி..."என்ற ராஜேஷ், கீழவீதியில் உள்ள எம்.எஸ் அபார்ட்மெண்ட்டுக்குச் சென்றார்.
அங்கு இருந்த ஒருவர்,
"சார்...அந்த ஆளு நேத்து ராத்திரி ரோட்டுல தண்ணி போட்டுக்கிட்டு அலம்பல் பண்ணியிருக்காரு.
அதோட நிறுத்திக்காம, எஸ்.ஐ.கிட்ட ஏதோ திமிராப் பேசினதால டவுன் ஸ்டேஷன்ல கொண்டுபோய் வெச்சுட்டாங்க. வெளியில விட்டாங்களா என்னன்னே தெரியலை சார்." என்றார்.
அங்கிருந்து கிளம்பிய ராஜேஷ், நேரே நகர காவல் நிலையத்துக்குச் சென்றார்.
ஆரோக்கியசாமியை அதுவரை வெளியில் அனுப்பவில்லை.அந்த ஸ்டேஷன் எஸ்.ஐ.பிரபாகரிடம், ஆரோக்கியசாமியைப் பற்றி விசாரித்தார்.
"சார்...நேத்து ராத்திரி ரவுண்ட்ஸ் போய்கிட்டு இருந்தோம். அப்ப இந்த ஆள் தண்ணியைப் போட்டுகிட்டு ஒரே சத்தம். சரி...வயசான ஆளா இருக்குறாரே, போனா போகட்டும்னு கிளம்புய்யான்னு சொன்னா, என்னையே திட்ட ஆரம்பிச்சுட்டான் இந்த ஆளு.
அதான் இங்க தள்ளிகிட்டு வந்துட்டேன். காலையில அந்த ஏரியா கவுன்சிலர் வந்து இவரை விட்டுடச் சொன்னார். நான்தான் சாயந்திரம் வரை இங்கேயே இருக்கட்டும்னு உட்கார வெச்சிருக்கேன்.
ஆறுமணியானதும் அனுப்பிட வேண்டியதுதான். ஏன் சார்...என்ன விஷயம்?" என்றார் பிரபாகர்.
"அதற்கு ராஜேஷ்," சார்...எனக்காக நீங்க ஒரு காரியம் செய்யணுமே?" என்றார்.
"ம்...தாராளமா..."என்ற பிரபாகரின் காதில், ராஜேஷ் ஏதோ சொன்னார். அதைக் கேட்டுக் கொண்டவுடன்,
"சரி...நீங்க உங்க ஸ்டேஷன்ல இருங்க...நான் நல்ல செய்தியா சொல்றேன்."என்று ராஜேஷை அனுப்பிவிட்டு, ஆரோக்கியசாமியிடம் வந்தார் பிரபாகர்.
"ஆரோக்கியம்...உன் பையன் எங்க இருப்பான்னு சொல்லு...அவன்கிட்டயும் எழுதி வாங்கிட்டுதான் உன்னைய அனுப்பணும்."
"சார்...ஐயனார் கோயில் தெருவுல, குமரேசன் மளிகைக் கடைக்குப் பக்கத்துலதான் என் வீடு...அங்கதான் இருப்பான்...இப்போ சீசன் இல்லாததால மில் வேலைக்குப் போயிருக்க மாட்டான்..."
"அவன் அங்க இல்லைன்னா வேற எங்கய்யா போய் தேடுறது?"
"பவித்திரமாணிக்கத்துல, என் தங்கை வீடு இருக்கு சார். அங்க இருப்பான். இந்த ரெண்டு இடத்தைத் தவிர வேற இடத்துல அவன் இருக்குறதுக்கு வாய்ப்பு ரொம்ப கம்மி சார்..."
ஐயனார் கோயில் தெருவில் பீட்டர் இல்லாததை உறுதி செய்துகொண்டவுடன், பவித்திரமாணிக்கத்துக்குத் தேடிச் சென்றனர்.
ஆரோக்கியசாமியின் தங்கை வீட்டில்தான் அவன் இருந்தான்.
அவனைப் போலீசார் பிடித்துக்கொண்டு வந்தனர்.
******
தூரம் அதிகமில்லை - குறுநாவல்
அத்தியாயம் 9
ஷைலாபானு மெல்லத் தயங்கித்தயங்கிதான் விஷயத்தைச் சொன்னாள். அதைக்கேட்ட அவளின் அம்மா,"அடிப்பாவி, ஒரே பொண்ணா இருக்கியேன்னு உனக்கு இவ்வளவு செல்லம் கொடுத்து வளர்த்தது தப்பாப் போச்சேடி...
நான் ஆரம்பத்துலேயே உன் வாப்பாகிட்ட சொன்னேன். பள்ளிக்கூட படிப்போட நிறுத்திடுங்கன்னு...அவர் கேட்டாரா...இப்ப நீ எங்க தலையில இப்படி ஒரு கல்லைத் தூக்கிப் போட்டுட்டியே?" என்றவள், அழுதுகொண்டே தன் கணவனிடம் விஷயத்தைச் சொன்னாள்.
அக்பரும் ஒரு கணம் நிலைகுலைந்து போனார்.
அவருக்கு இப்போது என்ன செய்வது என்றே புரியவில்லை. போலீஸ் ஸ்டேஷனை நாடினால், தன் மகளுடைய மானம் பத்திரிகைகளில் ஏறிவிடும் என்பது அவருக்கு நன்கு தெரிந்திருந்தது.
உள்ளூரில் அல்லது திருவாரூரில் உள்ள அரசியல் புள்ளிகளை நாடினாலும் விஷயம் வெளியில் தெரியாமல் அவ்வளவு உத்திரவாதம் இல்லை.
எனவே, பல வருடங்களாகத் தன்னிடம் வேலை பார்த்த ஒருவனிடமே இந்த பொறுப்பை ஒப்படைக்கலாம் என்று முடிவு செய்தார்.
---
ராஜேஷ்குமார், அரசு மருத்துவமனைக்குச் சென்றார். இன்னும் போஸ்ட்மார்ட்டம் முடிந்திருக்கவில்லை.
உடலை வாங்குவதற்காக நின்றிருந்தவர்களிடம் கேட்டதில் ஏழு மணி ஆகும் என்பது தெரியவந்தது.
அங்கிருந்து கிளம்பிய அவர், ஸ்டேஷனுக்குச் சென்று, நான்கு காவலர்களை அழைத்துக்கொண்டார்.
ஜீப்பில் அவர்கள் அனைவரும் வண்டாம்பாளைக்குச் சென்றபோது, ஊரே சந்திரமோகனின் வீடு இருந்த தெருவில்தான் நின்றிருந்தது. அனைவரது முகமும் சோகத்தில் கரைந்திருந்தது.
கூட்டத்தில், இறந்தவனைப் பற்றி ஆஹா, ஓஹோ என்று பேசிக் கொண்டிருந்தது ராஜேஷ்குமாரின் காதில் விழுந்தது.
அதைக் கேட்ட அவருக்குச் சிரிப்பு வந்தது. ஆனால் அதை வெளியில் காட்டிக்கொள்ளாமல், சந்திரமோகனின் வீட்டுக்குள் வீட்டுக்குள் சென்றார்.
இறந்தவனின் தாயும், மற்ற சில பெண்களும் அழுது அழுது ஓய்ந்துபோய் இருந்தனர்.
ராஜேஷ்குமார், சந்திரமோகனிடம் சென்றார்.
"சார்...உங்களைத் தொந்தரவு செய்யுறேன்னு நினைக்காதீங்க...உங்க மகனோட ரூமை நாங்க சோதனை போடணும்."
"சார்...செத்தவனோட உடம்பு இன்னும் வீட்டுக்கே வரலை...கொலையாளியை எப்போ கண்டுபிடிப்பீங்கிளோ? இப்ப சோதனை போட்டு என்ன செய்யப்போறீங்க?...நாளைக்கு செஞ்சாத்தான் என்ன?..." என்று ஆதங்கப்பட்டார் ஒருவர்.
உடனே ராஜேஷ்,"சார்...நீங்க உங்க இஷ்டத்துக்குப் பேசாதீங்க. ஏதோ மரியாதைக்காகக் கேட்டா...ரொம்பதான் பேசுறீங்க?...நேரம் ஆக ஆக எங்களுக்குதான் தொல்லை..."என்றார்.
அதைக்கேட்ட சந்திரமோகன், "அண்ணே!...அவங்க கடமையைச் செய்யட்டும்.நீங்க தடுக்காதீங்க...இவங்க கூட போய் என் புள்ளையோட அறையைக் காட்டுங்க."என்றார்.
"கொலை நடந்தது சோழபுரத்துல. இங்க தடயத்தைத் தேடி என்ன செய்யப்போறாங்களோ...சரி. நீங்க வாங்க...என்று போலீசை அழைத்துச் சென்றார் அவர்.
******
தூரம் அதிகமில்லை - குறுநாவல்
அத்தியாயம் 10
மேசையில் உள்ள டிராயர், அலமாரி, சிறு பீரோ, புத்தகங்கள், அலமாரியில் வைக்கப்பட்டிருந்த பேப்பருக்கு அடியில் என்று சகல இடத்தையும் அலசிப் பார்த்தனர்.
உருப்படியாக ஒரு தடயமும் சிக்கவில்லை. அந்த ஊர் ஆளை அறைக்கு வெளியே அனுப்பிவிட்டு, மீண்டும் ஒருமுறை தேடினார்கள். அலமாரித் தட்டில் போடப்பட்டிருந்த பேப்பரை எடுத்துவிட்டுப் பார்க்கும்போது ராஜேஷுக்கு ஏதோ உறுத்தியது.
ஒரு தட்டில் இருந்த பேப்பரை மீண்டும் நன்றாகப் பார்த்தார். ஓரங்களில் பின் போடப்பட்டு ஒரு கவரைப் போல் இருந்தது.
அதைக் கிழித்துப் பார்த்தார். உள்ளே சில போட்டோக்களும், நெகட்டிவ் பிலிமும் இருந்தன. அவற்றை மற்ற காவலர்களிடம் காட்டிய பிறகு, ஒரு பேப்பருக்குள் வைத்து பத்திரப்படுத்திக்கொண்டார்.
அறையை விட்டு வெளியே வந்ததும், வழிகாட்டிய நபர்," என்ன சார்...ஏதாச்சும் தடயம் கிடைச்சுதா?" என்றார்.
ராஜேஷ் அதற்கு பதில் சொல்லவில்லை.
"எனக்குத் தெரியும்...குற்றவாளி வீட்டுல தேடினா ஏதாச்சும் கிடைக்கலாம். இல்லை...கொலை நடந்த இடத்துலயாவது தேடணும். ரெண்டுமில்லாம இங்க வந்து தேடுனா என்ன கிடைக்கும்?" என்று அலுத்துக்கொண்டார்.
"கொஞ்ச நேரம் பேசாம இருக்குறீங்கிளா?" என்ற ராஜேஷ், வெளியில் சென்று, ஜீப்பில் இருந்த வயர்லெஸ் கருவியை எடுத்தார். அதன் மூலம் எஸ்.பியைத் தொடர்பு கொண்டு பேசினார்.
"சார்...நான் திருவாரூர் தாலுக்கா எஸ்.ஐ.ராஜேஷ்குமார்...ஓவர்."
"இது போலீஸ் கண்ட்ரோல் ரூம். ஓவர்."
"நான் எஸ்.பி.கிட்ட பேசணும்...ஓவர்."
சில வினாடிகளில் எஸ்.பி லைனில் வந்தார்.
"மிஸ்டர் ராஜேஷ்குமார்....அந்த மர்டர் கேஸ் எந்த நிலையில இருக்கு...ஏதாவது தடயம் கிடைச்சதா...ஓவர்."
"சார்...கொலையாளியை அரெஸ்ட் பண்ணியாச்சு. அதுக்கு முழுவதும் காரணமான ஆளை அடுத்து அரெஸ்ட் பண்ணப் போறேன்."என்றவர் எல்லா விவரங்களையும் சுருக்கமாக சொன்னார்.
அதைக் கேட்ட எஸ்.பி, "வெரிகுட் மிஸ்டர் ராஜேஷ்குமார்...எந்தப் பிரச்சனையும் இல்லாம ஆறு மணி நேரத்துக்குள்ள கொலையாளியைக் கண்டுபிடிச்சுட்டீங்க...நான் இன்னும் கொஞ்ச நேரத்துக்குள்ள ஸ்டேஷனுக்கு வர்றேன்...ஓவர்."
"இல்ல சார்...இனிமேதான் பிரச்சனையே ஆரம்பம். தென் மாவட்டங்கள்ல ரெண்டு சாதிக்காரங்க அடிச்சுக்கிட்டாலே அது பெரிய கலவரத்துல போய் முடியும்.
ஆனா, இங்க செத்தது ஒரு இந்து. கொலை செஞ்சது கிறிஸ்தவன். அதுக்கு காரணம் ஒரு முஸ்லிம். என்ன ஆகப்போகுதோ...
ஏன்னா, இன்னும் கொலையில சம்மந்தப்பட்டது யாருன்னு ஊர் மக்களுக்குத் தெரியாது...நீங்க எதுக்கும் அதிரடிப்படையை தயார் நிலையில இருக்க சொல்லுங்க. கலெக்டருக்கும் இன்ஃபார்ம் பண்ணிடுங்க சார். ஷூட்டிங் ஆர்டர் வாங்குற சூழ்நிலை வரலாம்னு தோணுது. நான் இன்னும் கொஞ்ச நேரத்துல உங்களுக்கு தகவல் சொல்றேன்...ஓவர்."
"மிஸ்டர் ராஜேஷ்...இதுவரைக்கும் அந்த வண்டாம்பாளையில மூணு மதத்துக்காரங்களுக்குள்ள எந்த பிரச்சனையும் வந்தது கிடையாது. இப்பவும் வராதுன்னு நம்பிக்கையோட இருப்போம். நீங்க எதுக்கும் ஜாக்கிரதையா இருங்க...ஓவர்."
வயர்லெஸ் இணைப்பைத் துண்டித்துவிட்டு, மீண்டும் சந்திரமோகனிடம் வந்தார்.
"சார்...நான் உங்ககிட்ட கொஞ்சம் தனியாப் பேசணும்."
"சரி...வாங்க..."என்று அவரும் தனியே வந்தார்.
அவரிடம் கார்த்தியின் அறையில் இருந்து எடுத்த போட்டோக்களைக் காட்டினார்.
அதில் கார்த்தி-ஷைலா இருந்த கோலத்தைப் பார்த்து அதிர்ந்தார்.
"சார்...இந்த போட்டோக்களை வெச்சு உங்க மகன் அந்த பொண்ணை ஏதோ மிரட்டியிருக்கான். அந்தப் பொண்ணு பயந்து போய் அதை அவங்க அப்பா அக்பர்கிட்ட போய் சொல்லியிருக்கு.
அவர் விஷயம் வெளியில தெரிஞ்சா தன்னுடைய பொண்ணுக்குதானே அசிங்கம்னு நினைச்சு முதல்ல பயந்துருக்கார்.
அப்புறம், அவரோட மில்லுல வேலை செய்த பீட்டர்கிட்ட விஷயத்தைச் சொல்லி போட்டோ நெகட்டிவ் எல்லாத்தையும் வாங்கிட்டு வரச் சொல்லியிருக்கார்.
அவனும் சும்மா மிரட்டித்தான் பார்த்துருக்கான். ஆனா திடீர்னு வாய்வார்த்தை, கைகலப்பா மாறி, கத்தியால உங்க மகனைக் குத்திட்டான்.
இது திட்டம் போட்டு செய்த கொலை கிடையாது. அதனாலதான் பீட்டர் ரொம்ப சுலபமா மாட்டிக்கிட்டான்.
அவனை ஒரு மணி நேரத்துக்கு முன்னாடியே அரெஸ்ட் பண்ணியாச்சு. இப்போ அதுக்கு காரணமான அக்பரையும் அரெஸ்ட் பண்ணப்போறோம். இந்த நேரத்துல என் கவலை என்னன்னா, உங்க ஆளுங்களால எதுவும் பிரச்சனை வருமோன்னுதான்.
இதுவரை நீங்க எல்லாரும் ஒற்றுமையா இருந்துருக்கீங்க. இனிமேலும் நியாயத்துக்கு கட்டுப்பட்டு விரோதம் இல்லாம வாழ்வோம்னு மும்மதத்தைச் சேர்ந்தவங்களும் உறுதி கொடுத்தா எல்லா மக்களுக்குமே நன்மை." என்றார்.
முக்கியப் பிரமுகர்கள் சிறு சிறு குழுவாக மக்களுடன் பேசினார்கள்.
இருபது நிமிடம் சென்றிருக்கும். இஸ்லாமியப் பெரியவரான அன்வர், ராஜேஷ்குமாரிடம் வந்தார்.
"அந்த கார்த்தி செஞ்சது ரொம்ப பெரிய தப்பு. ஆனா அக்பர் செய்தது தப்பான்னு எங்களுக்கு சொல்லத் தெரியலை. சட்டம் தன்னோட கடமையைச் செய்யட்டும். ரெண்டு வீடு சம்மந்தப் பட்ட பிரச்சனையை ஊர்ப் பிரச்சனையா மாத்த நாங்க சுயநல அரசியல்வாதிகள் கிடையாது.
மனுஷங்க.
நீங்க போய் அக்பரை அரெஸ்ட் பண்ணுங்க...கார்த்தியோட இறுதி ஊர்வலம் அமைதியா நடக்கும். எங்களுக்குள்ள எந்த சண்டையும் வராது."
இதைக் கேட்ட ராஜேஷ்குமார், திருப்தியுடன் ஜீப்பில் சென்று ஏறினார்.
"ஜின்னா தெருவுல இருக்குற அக்பர் வீட்டுக்குப் போங்க..."என்று உத்தரவைப் பிறப்பித்துவிட்டு வயர்லெஸ் கருவியை எடுத்து ஆன் செய்தார். எஸ்.பியிடம் இந்த விஷயத்தைச் சொல்வதற்காக.
முற்றும்.******
செல்போன் மிக குறைவான கட்டணத்தில் புழக்கத்தில் வராத காலத்தில் இந்தக் கதையை எழுதினேன். அதனால்தான் எஸ்.பி-எஸ்.ஐ உரையாடலில் அவ்வளவு "ஓவர்" போடவேண்டியதாயிற்று.
இந்த குறுநாவலைப் படித்த நண்பன் ஒருவன் "இது ரொம்ப ஓவர்" என்று விமர்சனம் செய்தான். நான் எழுதிய சஸ்பென்ஸ் நாவல் அவனுக்கு சிரிப்பை வரவழைத்தது என்பது புரியவும் எனக்கும் அசட்டுச் சிரிப்புதான் வந்தது.
******
ஏப்ரல் 25ந் தேதி பாட்டி இறந்ததால் திருவாரூருக்கும் பரமக்குடிக்கும் அடிக்கடி பயணிக்கவேண்டியதாயிற்று. இந்த பயணங்களால் இலவச இணைப்பாக முதுகு வலி.
வேலை செய்யும் இடத்திலும் கம்ப்யூட்டர் முன்னால் அமர வேண்டியிருந்ததால் சரியாக பதிவு எழுதவில்லை.
******
எங்கள் ஊர் இயக்குனர் திருவாரூர் பாபு இந்த கதைக்கருவை எழுதி முடித்தபோது நெகட்டிவ், போட்டோக்களை பெண்களின் பெற்றோரிடம் ஒப்படைக்க போலீசார் எக்கச்சக்க பணம் கேட்பதாக முடித்திருப்பார்.(எதார்த்தம் அதுதான்.)
நான் கொஞ்சம் மாத்தி யோசிச்சேன். இது போலீசார் எல்லாரும் இப்படி இருக்கணும்னு ஆசைப்படுறது பேராசைதான். என்ன பண்றது...நம்ம அப்துல்கலாம் ஐயாவே கனவு காணுங்கள்னு சொல்லியிருக்காரே.
******
தூரம் அதிகமில்லை- முதல் ஐந்து அத்தியாயங்களைப் படிக்க இங்கே க்ளிக்கவும்