Search This Blog

புதன், 6 ஜனவரி, 2010

மின் தடையால் ஒரு நன்மை


தினமும் இரண்டு மணி நேரம் மின்தடை  என்பது சிறுநகரங்களில் உள்ள பலருக்கும் இப்போது பழகி விட்டது. எந்த அளவுக்கு என்றால் அந்த மின்தடையால் நமக்கு ஏதாவது நன்மை உண்டா என்ற கோணத்தில் சிந்திக்க வைக்கும் அளவுக்கு.

நமக்கு கொஞ்சூண்டாவது மின் கட்டணம் குறையும் என்பது ஒரு புறமிருக்க, இந்த மின் தடை தினமும் காலை ஆறு மணிமுதல் எட்டு மணிவரை இருந்தபோதுதான் நகராட்சிக்குழாயில் போதுமான அளவு குடிநீர் கிடைத்தது.

காரணம் அனைவரும் அறிந்ததுதான். பலரும் மின்சார மோட்டார் மூலம் நகராட்சிக் குடிநீரை வேகமாக உறிஞ்சி விடுவார்கள். என்னை மாதிரி இன்னும் காந்திய வழியை நம்பிக்கொண்டிருப்பவர்கள் பற்றாக்குறையான குடிநீரை மட்டும் வைத்து எப்படியாவது சமாளிப்போம். வசதி படைத்தவர்கள் இந்த நீரை வைத்து வாகனங்கள் கூட கழுவுவார்கள். அவர்கள் வீட்டில் உள்ள ஆழ்துளைக் கிணற்றுநீரைப் பாதுகாக்கிறார்களாம்.

பல ஊர்களிலும் காலை ஆறு மணிமுதல் எட்டு மணிவரைதான் பெரும்பாலும் குடிநீர் விநியோகம் இருக்கும். அந்த நேரத்தில் மின்சாரம் தடைபட்டதால் எங்களுக்கெல்லாம் போதுமான அளவு தண்ணீர் கிடைத்தது.

இப்போது மீண்டும் காலை எட்டு மணிமுதல் பத்துமணிவரை என்று மின்தடை. திருடர்கள் பாடு ஜாலி. என்னை மாதிரியான காந்தியவாதிகளுக்கு மறுபடியும் ஒரு சோதனை. இப்படித்தான் மனதைத் தேற்றிக்கொள்ள வேண்டும். வேறு வழி?