அரசுத்துறைகளில் உள்ள காலிப்பணியிடங்களில் ஓய்வு பெற்றவர்களை மீண்டும் தமிழக அரசு நியமித்துள்ளது. அவர்களின் அனுபவத்தை பயன்படுத்திக்கொள்ளும் தற்காலிக ஏற்பாடுதான் இது என்று சமாதானம் சொன்னாலும் இப்படி சொல்லியே ஒவ்வொரு முறையும் அவர்களின் பணிக்காலத்தை நீட்டிப்பது ஒன்றும் அரசுக்கு கடினமான காரியம் இல்லை.
இதனால் அதிர்ந்து போய் இருப்பது படித்து முடித்து பல ஆண்டுகளாக வேலை வாய்ப்பு அலுவலகத்தை நம்பியிருக்கும் அப்பாவி இளைஞர்கள்தான்.
இந்தியா மாதிரி மக்கள்தொகை அதிகம் உள்ள ஒரு நாட்டில் அனைவருக்கும் ஓரளவாவது சமமான வாய்ப்பு கொடுக்கும் வகையில் ராணுவத்தைப் போல் இருபது ஆண்டுகள் மட்டும் பணிபுரிய வாய்ப்பு வழங்கலாம். பிறகு அவர்கள் திறனைப் பொறுத்து பணியை நீட்டிக்கலாம்.
ஆனால் ஓய்வு பெற்றவர்களை மீண்டும் மீண்டும் நியமித்து வாழவேண்டிய இளைஞர்களின் வாழ்க்கையோடு விளையாடுவதை யாரிடம் போய் முறையிடுவது என்றுதான் தெரியவில்லை.
ஒரு தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் மிக மெதுவாக கணிணியை இயக்குகிறாரே என்று வரிசையில் இருந்தவர்கள் சத்தம் போட்டனர். அதைக் கேட்ட அந்த அலுவலர், நாங்க எல்லாம் இந்த வசதியைக் கேட்டோமா...ஓய்வு பெற வேண்டிய வயசுல எங்க நாங்க கணிணியை கத்துக்குறது? எப்பவும் போல எங்களை பதிவேடுகளோடயே வேலை பார்க்க விட மாட்டெங்குறாங்களே... என்று சலித்துக்கொண்டார். விதிவிலக்குகள் வேண்டுமானால் மிகச்சிறிய அளவில் இருக்கலாம். ஆனால் பெரும்பாலான அரசு ஊழியர்களின் மனோபாவம் இதுதான். இதில் எந்த அனுபவத்தை அரசு மறுபடி பயன்படுத்தப்போகிறதோ தெரியவில்லை. இந்த முடிவை அரசு மறுபரிசீலனை செய்யுமா?

